இறுதியாக ஒரு உறுதி

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 14,233 
 

இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் தான் என்ன? ஏன் இப்படி அவசர அவசரமாக என்னை நெருக்குகிறாய்? இன்னும் உன் பசி அடங்கவில்லையா? அவ்வளவு பசியா உனக்கு? என் தொண்டையில் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியை நொடியில் பிடித்துத் தின்றுவிட்டாய். சரி போகட்டும், பசியாறிவிட்டுப் போ என்று என் உடலுக்கு மகரந்தத்தைச் சேமித்து விநியோகிக்கும் வேலையை மருந்திடம் ஒப்படைத்துவிட்டேன்.

ஆனால் அசந்த நேரத்தில் என் மார்புகளிரண்டையும் மிச்சம் இல்லாமல் ருசித்துவிட்டு அறுத்தெறிந்து விட்டாயே. வலி தாள வில்லை எனக்கு, உடலின் வலியா, இல்லை மனதின் வலியா என்று பிரித்தெடுக்க தெரியாமல் தவித்துத் திணறுகையிலே குள்ளநரியாய் வந்து என் கருப்பையையும் களவாடி விட்டாயே. இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறாய்? எதற்காகக் காத்திருக்கிறாய்? ஒ! ஒரு வேலை என் ரத்தம் குடிக்க காத்திருக்கிறாயா இல்லை என் எலும்புகளை நொறுக்கக் காத்திருக்கிறாயா? தயவு செய்து இன்னும் ஒரு பத்து வருடம் எனக்காகக் காத்திருக்கிறாயா? அதிகமாகப் படுகிறதா உனக்கு? ஆனால் எனக்கது குறைந்தபட்சம் தானே.

பனிரெண்டாவது படிக்கும் என் மகள் அதற்குள் கல்லூரி முடித்து, தனித்து இயங்க ஆரம்பித்துவிடுவாள், ஏழாவது படிக்கும் என் இளைய மகளும் கல்லூரி படிப்பை முடித்துவிடுவாள். அதற்கு முன்னென்றால் என் கணவன் பார்த்திபனால் குடும்ப சுமையைத் தனித்து தாங்க முடியுமா? இப்பொழுது மட்டும் அப்படியென்ன குடும்ப சுமையை நீ தாங்குகிறாய் என்கிறாயா? சரி தான்…பெரியவள் மித்ரா ரொட்டியைக் கூட நான் சுட்டுத் தந்தால் தான் நன்றாக இருக்கும் என்று முன்பு போல் எனக்காகக் காத்திருப்பதில்லை. அவளே அவளுக்குத் தேவையானதை செய்து சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடுகிறாள். முன்னெப்பொழுதும் நான் தான் காலையில் அவளுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நேரத்தை ஞாபகப் படுத்தி பள்ளிக்குக் கிளப்ப வேண்டியதாக இருக்கும். ஆனால் இப்பொழுது நேரத்தைச் சரியாகப் பகுக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள். புத்தகமும், ஓவியமும் மட்டுமே சந்தோஷ வாழ்வுக்கு போதுமானவை என்று கூறுபவளின் கனவு விலங்கியலாளராக வேண்டுமென்பது.

இளையவள் காவ்யா எப்பொழுதும் அதீத செல்லம் தான், காலையில் எழுந்து பால் குடிப்பது முதல் இரவு படுக்கப் போகும் வரை நானின்றி ஒரு அணுவும் அவளுக்கு அசையாது. ஆனால் இப்பொழுது திடீரென்று பெரிய பெண்ணாகிவிட்டாள், குளிக்கப் போகும்போது கையோடு துண்டையும், மாற்றுத்துணியையும் எடுத்துச் சென்று விடுகிறாள். பார்த்திபன் சமைத்து தருவதை வம்பு பண்ணாமல் சாப்பிட்டு விடுகிறாள். சில சமயங்களில் வீட்டுப்பாடம் செய்யவும், பாடப் புத்தகத்தை எடுத்துச் செல்ல மறந்து விட்டாலும் அவள் அக்காவின் உதவியோடு அடுத்த நாள் எப்படியோ சமாளித்து விடுகிறாள்.

ஏன், என் கணவன் பார்த்திபன் மட்டுமென்ன உடம்பெல்லாம் கண்ணாக நாள்தோறும், சிறுபொழுதும் இடையூறின்றி கணினிக்குள் ஊடுருவி இருப்பவன் இன்று, மித்ரா, காவ்யாவின் தேர்வு அட்டவணைகள், அவர்கள் ஆசிரியர்களின் பெயர்கள், எங்களுக்குப் பிடித்த உணவுகள், என்னுடைய மருத்துவ அட்டவணைகள் இப்படி அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறான். உட்கார்ந்து யோசிக்கவும் நேரம் இல்லாமல் வீட்டையும், அலுவலகத்தையும் ஒரே தேரில் பூட்டி உற்சாகமாக அல்லது உற்சாகமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு பறந்து கொண்டிருக்கிறான்.

பத்து வருடம் தேவையில்லையோ? கொள்ளுப்பேத்தியை பார்த்துவிட்டுத் தான் கண் மூட வேண்டும் என்று ஆசைப்படும் கிழவியைப் போலத் தான் நானும் இன்னும் கொஞ்சம் காலம் வேண்டுமென்று ஆசைப்படுகிறேனா? மரணத்தின் நேரக் கணக்கின் பிடியில் மாட்டிக்கொண்டிருக்கும் சிறுவன் அடுத்த வருட தீபாவளி கொண்டாட்டத்தைத் திட்டமிடுவதைப் போல, அடுத்த பத்து வருடத்திற்கான அட்டவணையைத் திட்டமிடுகிறேனா? எப்படி இருந்தாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும் தான்.

அடிக்கடி கீமோதெரபி சிகிச்சையால் நான் தனிமை சிறையில் இருக்கும்போது, பூட்டியிருக்கும் கதவின் கீழ் இடைவெளியில் என்னோடு விளையாடப் புதிது புதிதாக ஏதாவது வழி கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் காவ்யாவிற்கும், பக்கத்து அறையில் இருந்தாலும், அலுவலாக வெளியே இருந்தாலும் அடிக்கடி பறந்துவரும் ஈமெயில்களும், புகைப் படங்களும், இதயமும், பூக்களும் சுற்றியிருக்கும் சுவற்றையும், கதவையும், ஜன்னல்களையும் கைபேசியால் கரைத்துக் காணாமல் செய்துவிடும் மித்ராவிற்கும், பார்த்திபனுக்கும் எப்படி சொல்வேன் என் உடல் நிலையை மறக்கச் செய்யும் இவையே அதை நினைக்கவும் செய்கிறதென்று, எனக்கு விருப்பமாக இருப்பவையே எனக்கு வெறுப்பாகவும் இருக்கிறதென்று, எனக்காக விரும்பியும் சில சமயம் வருந்தியும், செய்யும் செயல்கள் எல்லாம் என் இயலாமையை சுட்டுகிறதென்று. எனக்காகவென்று இதையெல்லாம் இவர்கள் செய்யாமல் போனால், இத்தனை அன்பும் இல்லாமல் போனால் ஒரு நொடியில் நான் இறந்து போய்விடுவேன். ஆனால் இப்பொழுது நொடி நொடியாக இறந்துகொண்டிருக்கிறேன். இருந்தும்கூட நான் அந்த நொடிகளை நீட்டிக்கவே ஆசைப்படுகிறேன்.

இட்லி பொடி அரைத்துவைக்கவோ, பிரியாணி செயல் முறை எழுதி வைக்கவோ, என் மகள்களின் திருமணத்திற்கு நகை, உடை எடுத்து வைக்கவோ, வீட்டில் வேலைகளைக் கவனித்துக் கொள்ள நல்ல வேலைக்காரியைத் தேடுவதற்கோ அல்ல நான் இன்னும் கொஞ்ச காலம் அவகாசத்தை வேண்டுவது.

இன்றும் கூடக் காலையில் என் இதழொற்றலின் ஈரம் படாமல் தூக்கம் களைய மாட்டாளே காவ்யா அதற்காகக் கொஞ்சம். “ம்மா…இன்னைக்கு நான் தான் இந்த நாளின் சிறந்த மாணவி, நான் தான் வரிசையில் முதலில் நின்று எல்லோரையும் வழி நடத்தினேன், அறிவியல் வகுப்பில நான் குறிப்பெடுத்து முடிக்கிறதுக்குள்ளே நேரமாயிடுச்சி, இன்னைக்கு கூடை பந்து விளையாட்டில் பசங்களை நாங்க தோற்கடித்துவிட்டோம்,” இப்படி எண்ணற்ற கதைகளைப் பல்லிடுக்குகளில் தப்பியோடாமல் இறுக்கமாக இறுக்கிக்கொண்டு, தினந்தோறும் பள்ளிவிட்டதும் பறந்து வந்து என் செவியை நிறைக்கத் தேடுவாளே காவ்யா அதற்காகவும்.

சில நாட்களில் நடு இரவில் சிணுங்கும்போதும், ஆழ்ந்து உறங்காமல் உருளும்போதும், அவளுக்குப் பசியென்று அறிவானா பார்த்திபன்?

தந்தை கோபத்தில் திட்டும்போது, கண்களில் நீர் தளும்ப நொடிக்கொரு தரும் விழி திருப்பி நான் வரும் வழி பார்த்து, இரு கை விரல்களையும் இறுக்க மூடி என் இடை அணைக்க, உடல் முழுவதும் செவியாய் என் ஆறுதல் மொழி கேட்க, அம்மா என்று உதடு துடிக்கக் காத்திருப்பாளே காவ்யா…அதற்காக மட்டுமேவாவது…

மாதவிடாய் சமயத்தில் மித்ரா சொல்லாமலே அவள் வலி அறிந்து, தேவையுணர்ந்து நான் தயாரித்து தரும் இதமான உணவால் அழுத்தமான இதழொற்றலில் என்னை அங்கீகரித்துச் செல்வாளே அதற்காக. நண்பர்களோடு சண்டையிட்டு பிரியும் போதும், தோல்வியிலும், குழப்பமான மன நிலையிலும் அவள் மனமறிந்த, விவாதமில்லாத என் ஒற்றை அணைப்பில் மீண்டு எழுவாளே அதற்காகவும், உதிர தொடங்கிய முடியையும், கண்ணிற்கு கீழ் பரவ தொடங்கியிருந்த கருவளையமும், வறண்டு சுருங்க தொடங்கிய தோல்களையும் பியூட்டி பார்லர்களின் உதவியோடு என்னை அறியவிடாமல் செய்துவிட்டதாக நினைத்து திருப்தி பட்டுக் கொண்டிருக்கும் மித்ராவுக்காக…வீட்டு வாசல் கதவைத் திறக்கும்போதே “அம்மா, ம்மா, மதி” என்று என்னைத் தேடி அலையும் குரல்களுக்காகவும் கண்களுக்காகவும் கொஞ்சம்.

நான் ஊட்டி விட்டால் போதும் அது நான் சமைத்த சாப்பாடாகிவிடும் காவ்யாவிற்கு. அதுவும் மித்ராவும், பார்த்திபனும் எங்களுக்கும் ஊட்ட வேண்டும் என்று போட்டிக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான் என்ன சாப்பாடு, என்ன காய்கறி என்று எந்தக் கேள்வியும் இல்லாமல், ருசியறியாமல் வேக வேகமாகக் காலியாகிக் கொண்டிருக்கும்.

“சாக்ஸ் காணோம்பா, எனக்குப் பிரட்ல க்ரஸ்ட் வேண்டாம், ஓட்ஸ் கஞ்சி ரொம்ப தண்ணியா இருக்கு, அப்பா…இன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு, அப்பா உங்களுக்கு இதோட பதினைந்து மெயில் வந்திடுச்சி அலுவலகத்திலிருந்து,” இப்படி கடமையில் திளைத்து, திணறிக்கொண்டே அடிக்கடி என் விழி தீண்டி மொழி பகிரவே அவன் பார்வை படும் தூரத்திலேயே இருக்கையில் அமர்ந்திருப்பதற்காகவேண்டி கொஞ்சம்.

அலுவலகத்திலிருந்து வந்தவுடனே நேராகச் சமையலறை சென்று இரண்டு கோப்பை தேநீரோடு வந்து என் அருகில் அமர்ந்து, காலையில் காவ்யாவை பள்ளியில் இறக்கி விடும்போது அவள் செய்த குறும்புகள், அவள் கேட்ட கேள்விகள், மித்ராவின் முதிர்ச்சியான பதில்கள், அலுவலக நகைச்சுவைகள், பிரச்சனைகள் என்று அரை மணியில் முழுநாளின் இறுக்கம் தளர்ந்து, என் முழு நாளின் வெறுமையைப் போக்கி புத்துணர்வோடு எழுவோமே, எங்களுக்கு மட்டுமேயான அந்த அரை மணிநேர பொழுதிற்காகவாவது கட்டாயமாக வேண்டும் இன்னும் கொஞ்சம் நேரம்.

“இதுவரை நீளமளக்காமல் கைகோர்த்து கடந்து வந்த நம் பயணத்தின் பாதை கிளைத்து உனக்காக மட்டும் நீண்டு பிரிகிறதோ…!” கடக்கக் கடினமான நீண்ட இரவுகளின் வெம்மையில் அவன் கரம் கோர்த்து இலகுவாகக் கடக்க வைப்பதற்காகவாவது இன்னும்….

“இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே”

இன்னும் பேசக் கூடத் தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே……” “ம்ப்ச்…ஏன் மித்ரா பாட்டை இப்படி பாதியிலேயே நிறுத்தின?”

“என்னது பாதியிலே நிறுத்தினேனா? எத்தனையாவது பாதியில்?”

“நான் சொல்றேன்…நான் சொல்றேன்…நூத்தி ஒண்ணு” வலது கை ஆள்காட்டி விரலை உயர்த்திக்கொண்டே வந்து என்னோடு சாய்விருக்கையில் அமர்ந்தாள் காவ்யா.

“இல்ல இல்ல…நான் சொல்றேன் பாரு சரியா, தொள்ளாயிரத்து தொண்ணூத்தெட்டு” அசரீரியாய் குரல் மட்டும் ஒலிக்க, விழித்த என் அருகில் தொப்பென்றமர்ந்து மகள்களின் கைகளை ஒரு சேர உயர்த்தி தட்டிவிட்டு என்னை நோக்கிக் கண் சிமிட்டி சிரித்தான் பார்த்திபன்.

“ஒரு ரெண்டு மூணு தடவை அந்தப் பாட்டைக் கேட்டதுக்கா எல்லாரும் சேர்ந்துக்கிட்டு என்னைக் கிண்டல் பண்றீங்க…”

“ரெண்டு மூணு தடவையா சரியா போச்சு…அப்பாவும், காவ்யாவும் சொன்ன எண்ணிக்கை கம்மியோன்னு தோணுது. இதெல்லாம் ரொம்ப அதிகம்மா, ரெண்டு மூணு சின்ன சின்னக் கட்டிக்காக அறுவைசிகிச்சை செய்ததுக்கா இப்படி வயலின் வாசிக்கிறீங்க…” எதிரிலிருந்த மேஜையில் அமர்ந்து விழிகளை உருட்டி, புன்னகையை அடக்கி என்னைக் குழந்தையாக்கி என் குறும்புகளைக் கண்டித்தாள் மித்ரா.

“அதுவும் ஒரு நல்ல காதல் பாட்டை இப்படி சோக பாட்டா மாத்திட்டியே மது அந்தக் கொடுமையைத் தான் என்னால தாங்கவே முடியலை.” எப்படியும் ‘செவாலியே’ வாங்கிவிட வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தான் பார்த்திபன்.

உண்மையில் வாங்கி விடுவாரோ…! பயமே வந்துவிட்டது எனக்கு, அப்படி மித்ராவும், காவ்யாவும் பார்த்திபனை பார்த்து ரசித்துச் சிரித்து கொண்டிருந்தார்கள்

“கிண்டலா பண்றீங்க, பாருங்க உங்களால காவ்யா குட்டி கூடக் கெக்கபெக்கேன்னு சிரிக்கிது.”

“என்னால இல்லடா மது. உன்னால” என்று கைகளில் வயலின் வாசிப்பது போல நடித்துக் காட்டிவிட்டு வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தான் பார்த்திபன் தன் மகள்களோடு.

“சிரிங்க சிரிங்க அடுத்து ஒரு நல்ல பாட்டா எடுத்துப் போட்டு ஒரு நாள் முழுக்க வயலின் வாசிச்சா தான் சரிப்படுவீங்க…” கூறி முடிப்பதற்குள்ளேயே என் காது செவிடாகி விட்டதா என்று சந்தேகிக்கும்படி நிசப்தமாகி விட்டது வீடு.

“அம்மா, நீங்க வயலினும் வாசிக்க வேண்டாம். அப்பா, நீங்க நடிகர் திலகமும் ஆக வேண்டாம்.” பெருமூச்சோடு கண்களைச் சுழட்டி, ”முடியல…முதல்ல கிளம்புங்க ரெண்டு பேரும்”

“எங்க மித்ரா கிளம்பணும்?” சலிப்பாக எழுந்தது என் குரல்.

“ஓவிய கண்காட்சிக்கு District Art Exhibition” குதித்து வந்தது துள்ளலாக அவள் சொற்கள்.

“நான் வரலை மித்ரா, நீங்க ரெண்டுபேரும் அப்பா கூடப் போயிட்டு வாங்க…”

சட்டென்று மேஜையிலிருந்து எழுந்தவள், இரு கைகளையும் இடுப்பில் அலட்சியமாக வைத்துக்கொண்டு, “எங்க பள்ளியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களில் ஒன்றாய் என்னுடைய ஓவியமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கு என்று சொன்னால் கூட வரமாட்டீங்களா,” பெருமையாகப் புருவம் உயர்த்தினாள் மித்ரா.

ஜிவ்வென்று ஏறிய பரவசம் மினு மினுவென்று உடலில் ஊடுருவிச் சிலிர்க்க வைக்கத் தாவி அவளை அனைத்து, உதடுகளுக்கு முன் வாழ்த்தத் துடித்து இரு சொட்டு கண்ணீரை கண்டித்து விட்டு அவளின் இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தமிட்டேன்.

“ஏண்டி இவ்வளவு மெதுவா சொல்ற? உங்களுக்குத் தெரியுமாங்க?” அமைதியான புன்னகையோடு அமர்ந்திருந்த பார்த்திபனை என் விழிகள் சந்தேகத்தோடு தழுவியது.

தொண்டையை கனைத்து பேச ஆரம்பித்தவனை குற்றம் சாற்றும் பார்வையோடு முறைக்க ஆரம்பித்திருந்தேன். கண்காட்சியே ஆரம்பமாகிடுச்சி ஆனா இவங்க இந்த விஷயத்தை எனக்குக் கடைசியில் வந்து தான் சொல்றாங்க. அவ்வளவு முக்கியமானவளா இல்லாம போயிட்டேனா இல்லை இந்த விஷயம் தான் அவ்வளவு முக்கியமானது இல்லையா? இந்தத் தாமதமும், அலட்சியமும் எதனால்…என் இயலாமை என் மூளையை கலங்கடித்துக் கொண்டிருந்தது.

“இல்ல மது நேத்து நைட் தான் பள்ளியிலிருந்து மெயில் வந்திருந்தது, நீ தூங்கிட்டமா, அதான் காலைல சொல்லலாம்னு இருந்தேன் ஆனா ஏதோ வேளையில் மறந்துட்டேன். அதை உன்கிட்ட சொல்லத்தான் இப்ப வந்தேன்” ஒரு நொடியில் என் விழித்திரையில் படர்ந்து மறைந்துவிட்ட நீர்த்திரையை கண்டுவிட்ட சோர்வோடு பெருமூச்செறிந்தான் பார்த்திபன்.

மித்ராவை ஏறிட்ட என் பார்வையில், தோளைக் குலுக்கியவள்…”எனக்குத் தெரியாதும்மா, அப்பா உங்க கிட்ட சொல்லிருப்பாங்கன்னு நினைச்சேன். காலைல தூங்கி எழுந்தவுடனே வெண்ணை உருக்கிற வாசனை, கேசரி செய்யறீங்களோன்னு நேரா கிட்சனில் வந்து எட்டி பார்த்தேன் தெரியுமா ஆனா அப்பா டோஸ்ட் பண்ணிட்டிருந்தாங்க.” எதிர்பார்ப்பின் தோல்வி அவள் முகத்தில், என் இதயத்தை யாரோ இறுக்கி பிசைவது போல் இருந்தது. அவள் கையை என் கையால் இறுக்கி பிடித்துக்கொண்டேன், அவள் மற்றொரு கையை என் கையின் மேல் வைத்து, என் கையை அவள் கைகளுக்குள் பொத்திக்கொண்டாள்.

நேற்று இரவு மாத்திரையைப் போட்டுவிட்டு சீக்கிரமாகப் படுத்துவிட்டேன் தான், காலையிலிருந்து பார்த்திபனும் வேலையாகத் தான் இருந்தார்கள். ஆனால், பெருமூச்சு எழுந்தது என்னுள்…அடிக்கடி எழும் தனிமை படுத்தப்படும் உணர்வை எதைக் கொண்டு விரட்டுவது!

ஒரு பக்கம் என்னை உரசிக்கொண்டு காவியாவும், மறுபக்கம் கண்களில் எதிர்பார்ப்போடு மித்ராவும், எதிரில் என் முக மாற்றத்தை அணுவணுவாக அளந்தபடி பார்த்திபனும்…இந்த நொடியில் வாழ்க்கை முழுமை அடைந்ததை போலிருந்தது…

மனதினில் தோன்றிய நிறைவு முகத்தைப் புன்னகையால் நிறைக்க…”நாம போறோம் தானே மா…எக்சிபிஷன்க்கு நாம போறோம் தானே” என்று ஆவலாக என்னைப் பார்த்து கொண்டு உலுக்கிய காவ்யாவை நோக்கி முகத்தைத் திருப்பினேன்.

கண்களும், உதடுகளும் ப்ளீஸ் எனக் கெஞ்ச என்னைப் பார்த்திருந்தவள் என் தலையசைப்பில் வேகமாகத் துள்ளி குதித்து என் தோள் பற்றிக் கழுத்தை இழுத்து இறுக்கி “தேங்க் யு மா” என்று கன்னம் அழுந்த முத்தமிட்டாள்… சட்டென்று மற்றொரு கன்னமும் அழுந்திச் சிலிர்த்தது மித்ராவால். அதை நான் உணர்ந்து அவளை அணைப்பதற்குள்ளாகவே இருவரும் பறந்து விட்டார்கள் தயாராவதற்கு…

கண்கள் விரிய, கன்னத்தில் படிந்த ஈரத்தோடு முகம் விகசிக்க, காவ்யாவும், மித்ராவும் விட்டுச்சென்ற இரு கைகளும் அந்தரத்தில் நிற்க நின்றிருந்தவளை, இடையில் கைக்கொடுத்து இழுத்து அணைத்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் பார்த்திபன்.

“ரொம்ப அழகா இருக்க மது,” என் விழிகளை ஊடுருவிய பார்த்திபனின் விழி வீச்சை ஏற்று, அவன் தோள்களை வளைத்து “தெரியும்” என்றேன். உதட்டில் இருந்த புன்னகை மேலும் பரவப் புருவத்தை உயர்த்தி, “ம்ம்ம்…” என்றவனிடம், “புரியுது…இப்படி இருக்கத்தான் நானும் முயற்சி செய்கிறேன்…ஆனா…” “ம்மா…என்னோட பர்பில் ஸ்கார்ப் குடுக்க சொல்லுங்கம்மா காவ்யாவை. நான் தரமாட்டேன் அது எனக்குத் தான் வேணும். உனக்கு எப்படி சரியா இருக்கும் காவ்யா. இப்படி ரெண்டா மடிச்சி போடாத அது என்னோடது குடு… நோ… காவ்யா… ம்மா… ம்மா…” சத்தமும், வீல் வீல் என்ற அலறல்களும், தட தட ஓட்டமும் வீடே குலுங்க ஆரம்பித்தது.

“ம்ப்ச்…ஆரம்பிச்சிட்டாங்க,” விலகி இரண்டடி எடுத்து வைப்பதற்குள் என் கையை இறுக பற்றினான் பார்த்திபன்.

“இன்னும் நீ முடிக்கவேயில்லையே மது…ஆனா…”

“ம்ம்ம்…கண்டிப்பா தினமும் உன்னைப் பாட வைக்கிறேன்.”

“என்னன்னு…?”

“ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே…ரொம்ப ரொம்ப அழகா இருக்கேன்னு…”

“இப்பவே ஆரம்பிக்கட்டுமா மதி” கையைப் பற்றி இழுத்த பார்த்திபன், “ம்ம்ம்மா…கடிக்கிறா மா,” மித்ராவின் ஹை டெசிபல் அலறலில் கையை உருவி கொண்டு எனக்கு முன்னால் அவர்கள் அறையை நோக்கி ஓடினான்.

அறைக்குள், முறைத்துக்கொண்டு நின்றிருந்த அவர்கள் அப்பாவிற்கு முன்னால் வழக்கம்போல் கண்களில் நீர் தளும்ப, இரு கை விரல்களையும் இறுக்க மூடி, அறைவாசலில் கண்களை வைத்து நின்றிருந்தாள் காவ்யா, மித்ராவோ தலை குனிந்து கையில் ஸ்கார்ப்போடு நின்றிருந்தாள். அமைதி…அமைதி…அப்படியொரு அமைதி.

காட்சியில் கரைய துடித்த மனதை இழுத்து நிறுத்தினேன், மூவரையும் அணைத்து முத்தமிட வேண்டும் போல் இருந்தது. எனக்காகவே காத்திருந்த அமைதியை குலைத்து, இருவருக்கும் சண்டையில் கிடைத்த விழுப்புண்களில் எல்லாம் முத்தமிட்டுவிட்டு, இன்னைக்கு இந்த ஸ்கார்ப் யாருக்கும் கிடையாது என்று தீர்ப்பெழுதி, மூவரையும் கிளம்ப அனுப்பிவிட்டு, அவசர அவசரமாக நானும் கிளம்பினேன்… என் நோயைப் பலவீனமாகக் காட்டி என் கடந்தகால மன நிலையை நிகழ்காலத்தில் கட்டி இழுக்க அதீத முயற்சி செய்துகொண்டிருக்கும், என் புற்றுநோய் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை ரத்த அணுக்களான என் பார்த்திபனுக்காகவும், என் மித்ராக்காகவும், என் காவ்யாவிற்காகவும், இனி ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும் என்ற உறுதியை இம்முறையாவது இறுதியாக்கிட வேண்டும் என்கிற உறுதியோடு…

Print Friendly, PDF & Email

4 thoughts on “இறுதியாக ஒரு உறுதி

  1. அருமையான கதை ,அவர் நீண்ட நாட்கள் உயிரோடு இருந்தால் அந்த குடும்பம் சந்தோஷமாக இருக்கும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *