இரும்புப் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 12,866 
 

நன்றாக யோசித்து எடுத்து முடிவல்ல. நன்றாக யோசிக்க முடியாத மனநிலை ஒன்றில் உள்ள சுகத்தின்பால்…வந்த தடுமாற்றத்தின் விளைவு தான்… இந்த சூனியத்தின் முக்கில் நிற்பது.

வாகனங்களின் இரைச்சல் மரண அவஸ்தையைத் தந்து கொண்டிருந்தது. அந்த தோஷம் இந்த தோஷம் என்று ஜாதகம் பார்த்தே வீணா போனவர்களில் சந்திரனும் ஒருவன். சாலையில் அடிக்கடி வந்து போகும் ஆம்புலன்சின் சைரன் கண்ணை மூடிக் கொண்டு மண்டைக்குள் அவனையே திருகிக் கொண்டிருந்தது.

ஜாதகம் பார்த்தே 38 வயசு வரை சாவடிச்ச வீட்டை நினைத்த போது காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. சாலையில் துப்புவது சரியல்ல என்ற தன் நிலை அவனை அவனுள்ளேயே துப்ப வைத்தது. மிக கடுமையான தீவிரம் தான் அவனை மேட்டுப்பாளைய சாலையில் நிற்க வைத்திருக்கிறது. உள்ளும் புறமும் உருளும் காமத்தின் தகிப்பை அவன் யாரோவாக இருந்து உணர்ந்த போது இந்த முடிவுக்கு வர வேண்டியதாகிப் போனது

தாங்கொணா துயரத்தின் வாயில் அவன் அறை கொண்டிகளோடு குலுங்கிக் கொண்டே இருப்பதை அவன் தன்னளவில் தானே அசை போட்டுக் கொண்டே இருத்ததை முழுதாக சொல்ல இயலாது. முள் காட்டில் மனம் உடைத்து வேடிக்கை பார்த்த முன்னிரவுங்களை தூக்கிக் கொண்டு வீடு வந்து, விடியும்வரை இரவெல்லாம் தன்னோடு தானே கலவி செய்தததை நினைக்க நினைக்க சொல்லில்லா குறியீடுகளால் தாகத்தின் விளிம்புகளில் தொடர்ந்து அழுகை வந்தது.

ஜாதகம் பார்த்த ஜோசியனை செருப்பால் அடித்து விட்டு ஓடி வந்த போது தீராத துக்கம் தீர்க்கவல்ல தரிசனத்துக்கு காத்திருந்தது.

“பெண் சுகம் எப்படி இருக்குமென்று மனதுக்குள் கற்பனை வருவதுண்டு….” பாடல் வரிகளில் ஒடுங்கி நடுங்கி சுவரோரம் நிர்வாணமாய் அமர்ந்து சிகரட்டை ஊதி தள்ளுகையில்….. சீயென இருக்கும். சரியான வயதில் ஒரு சரியான ஜோடியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்கிறது பைபிள். கூர்கெட்ட முட்டாள்களுக்கு ஒரு வெங்காயமும் தெரிவதில்லை. பத்து பொருத்தமும் சரியா இருந்தா தான் அந்த கல்யாணம் விளங்குமாம். விட்டா ஆண்குறியையும் பெண் குறியையும் அளந்து பார்த்துவானுங்க போல…தவளைப்பசங்க. ஜாதகம்.. தோஷம்னு போட்டு சாவடிக்கறாங்க.. அரிப்பெடுத்து அலையறவனுக்குத்தான தெரியும்… அல்குல் தேடும்… அவஸ்தை.

வாய் முணுமுணுக்க கண்கள் அலைபாய்ந்தது.

கண்களில் மீன் நீந்த நெற்றியில் நட்சத்திரம் ஜொலிக்க….ரோஸ்பவுடரில்…சந்தனம் மணக்க… சிலுக்கு புடவையில்.. ஜிவ்வென்று ஒருத்தி வந்து நின்றாள். நேராக சொர்க்கத்தில் இருந்து ஆடையின்றி தலைகீழாய் வந்தவள் போல படக் படக்கென்று கண்கள் சிமிட்டினாள்.

உள்ளுக்குள் பட்டாம் பூச்சி நிமிர என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்.. என்ன பதிலை எதிர்பார்ப்பது என்றும் தெரியாமல் சந்திரன் தடுமாறினான்.

” பொல்லாமா…” என்றாள்.

நாக்கு வாயோரம் ஒருமுறை வெளிவந்து வலக்கண் சிமிட்டி உள்ளிழுத்த போது…” போலாமா…” சொல்லில் தேன் சொட்டியது. வெற்றிடம் இசைக்க உள்ளே வேகம் இம்சிக்க மெல்ல தலை ஆட்டினான். கண்கள் அனிச்சையாக நாலாபுறமும் ஒரு முறை பார்த்துக் கொண்டன. சாலையில் நகரும் ட்ராபிக், எவன் செத்தாலும் கவலை இல்லை என்பதாக இயங்கிக் கொண்டிருந்தது. மனதுக்குள் மிக வேகமாய் இதயம் துடிப்பதை நடுக்கத்தோடு அசையும் கால்களால் உணர்ந்தான்.

அவள் கண்கள் எங்கெல்லாமோ சுழன்று என்னவெல்லாமோ செய்தன. அவள் சாலையில் எதோ கணக்கு போட்டுக் கொண்டே சந்திரனின் அருகே இன்னும் கிட்ட வந்து.. “த்தவுசண்ட் டூ ஹண்ட்ரேட்….” என்று சொல்லி ஒரு முறை கண்கள் வேகமாய் சிமிட்டி….” பிளேஸ் இருக்கு” என்றாள். அப்போது இடது கை வலது மாராப்பை சரி செய்தது. பபுள்கம் மெல்லுவது போல மனதிலிருந்து வந்தன வார்த்தைகள். திக்கென்று தூக்கி வாரி போட்டது. “ஆயிரத்து ஐநூறா…!!!???” சந்திரனின் இடது கை தானாக பாக்கெட்டைத் தடவியது.

“எப்படி சேர்த்தாலும் எட்நூறுதான தேறும்…..” தொண்டை அடைக்க… ஒரு வித குறுக்கு வெட்டு அவமானம் அவனுள் சூழ்ந்தது. முகத்தை எதுவோ கோணியது.

“ஹல்லோ.. சொல்லுங்க… டைம் ஆச்சு…. போலாமா இல்லையா…” நெற்றி தொடும் நெளிந்த கூந்தலை நேராக்கிக் கொண்டாள்.

என்ன சொல்வது என்று தெரியாத மாதிரி சந்திரனின் முகம் கனத்தது.

“பணம் கம்…..மியா…..”

“என்னங்க……?”

“இல்ல… அமௌன்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு……..”

அவன் முடிப்பதற்குள் அவள் இடத்தை காலி செய்திருந்தாள்…..பபுள்கம்மை துப்பியபடி.

அம்மணமாய் நிற்கையில் யாரோ செருப்பால் அடித்து போல இருந்தது.

“இது தேவையா… பணம் இல்லாதவனெல்லாம் எதுக்கு உவக்க ஆசைப்படனும்… வாழ்க்கை முழுக்க உவக்க தகுதியில்லாதவனாகவே வாழ்வதில் ஒரு வகை சுய பச்சாதாப பெருமிதம் இருக்கும். அதை கட்டிபிடித்துக் கொண்டு ஜாதகத்தைக் காப்பாற்றிய பெருமையோடு வாழ்ந்து முடித்திட வேண்டியது தான். வீட்டிலிருக்கும் பெரிய நாய்களுக்கு இதெல்லாம் ஒரு மண்ணும் புரியாது. பையன் இன்னும் செட்டில் ஆகல.. ஆன பின்னால தான் கல்யாணத்த பத்தி பேச்செடுக்க முடியும்னு பெருமை வேற. செட்டுல்னா….என்னங்கடா….

அறிவுகெட்ட கூமுட்டைங்களா…? உடல் தேவை பூர்த்தியாகாத போது அவனால் எதிலும் கவனத்தோடு ஈடுபட முடியாது என்ற உடல் அறிவியலை எப்போதுதான் புரிந்து கொள்வார்கள்…”

சந்திரன் தலை கவிழ்ந்து நின்றிருந்தான்.

“என்ன்ன்னங்க… போலாமா…” என்ற குரலில் திடுக்கிட்டு தானாக நகர்ந்தான். கண்களில் மிரட்சி படர… தலையை காற்றில் பின்னோக்கி இழுத்துக் கொண்டு அந்த சதுர முகத்தை நன்றாக பார்த்தான்.

கண்ணடித்து சிரித்தாள் இன்னொருத்தி.

பட்டென்று ஏதோ புரிந்த நொடியில்……இன்னொருத்தி… இல்லை…. இன்னொருத்தன். இல்லை இல்லை இன்னொருத்தன் இல்லை.. இன்னொருத்தி தான். அதே ரோஸ் பவுடரில் மின்னிய முகத்தில்.. உற்று நோக்கினால் தான் சொரசொரப்பு தெரியும். பார்த்த தோராயத்தில்…. பத்தடி தூரத்தில் பசுமை பூக்கும் பெண் தான் அவளும்.

என்ன கணக்கு இது… காலத்தின் மீதும்… காலத்தில் தன்னை கழித்த விளிம்பின் மீதும் தீராத கோபத்தில் கண்கள் சிவக்க பார்த்தவனிடம….’ ஒன்லி சிஸ் ஹண்ட்ரேட்” என்றாள்.

கண்களில் ஒரு வகை ஆர்வம் மேலோங்க பார்த்தான் சந்திரன்.

“வீடு இருக்கு. சேஃப் தான்…..” என்றபோது கழுத்து ஒரு முறை வலப்பக்கமும் ஒரு முறை இடப்பக்கமும் போய் வந்தது. அதுவே ஒரு மலையுச்சி மந்தார பூ வாசத்தை மூளைக்குள் உணர வைத்தது. சட்டென்று தேவதையாய் மாறிப் போனவளைப் பார்த்து…..மெல்ல புன்னகைத்தான். அது அவளை மெல்லும் புன்னகைதான்.

வண்டியில் போகும் போதே பேர் ஊர் எல்லாம் கேட்டான்.

“மாலினி ஃ பிரம் தேவகோட்டை…”

காதருகே அவள் இமைகள் அசைந்து கூச்சம் சிமிட்டியது. அவள் “தேவகோட்டை”யில் இருந்து தான் வந்திருப்பாள் என்று நம்பலாம். அப்படியொரு இனம் புரியாத வாசம் அவளெங்கும் வீசியது. ஒரு கை ஹேண்டில் பாரில் இருக்க இடக்கையை அவள் தொடை மீது வைத்து தடவினான்.

“என்ன அவ்ளோ அவரசமா…. பொறுங்க… கொஞ்ச தூரம் தான்.. எல்லாரும் பார்க்கறாங்கள்ல…..!” என்று கை மீது செல்லமாய் கிள்ளி வைத்தாள். காதோரம் ஊதினாள். கிறக்கம் நரம்பெல்லாம் ஊறியது.

தெரிந்த ஏரியா தான். ஆனால் இத்தனை குறுக்கு சந்துகளை இப்போது தான் தெரிகிறது. அவள் வழிகாட்ட விழிகாட்ட நிலவு நெளியும் சந்துகளில்.. அவன் பைக்கும் நெளிந்து வளைந்து சென்றது. குறுக்கு சந்தில் வண்டி தடுமாறும் போதெல்லாம் அவன் முதுகில் நிலவுகள் முகம் நசுங்கின. மல்லிகை பூவின் கிறக்கம் ….மானுட சதையின் நுட்பம் என்று தானாக நகர்ந்தது ஆசை. ஏதோ பேச முனைந்த போது நடுவிரலை வாய் குறுக்காக வைத்து “ஸ்ஸ்ஸ்ஸ்….’ என ஜாடை செய்தாள். சுற்றும் வீடுகள் இருக்கின்றன. எந்த ஜன்னலில் இருந்தும் எந்த வெண்ணையும் புகைப்படம் எடுக்கலாம். வீடியோ எடுக்கலாம்…..கவனத்தோடு என்னை பின் தொடர் என்பது ஜாடையின் சந்தம்.

அவள் ராஜகுமாரியைப் போல முன்னே நடந்தாள். அவன்….பாட்டு பாடி யாசகம் பெரும் ஒரு புலவனைப் போல பின்னே நடந்தான். அந்த வாசலில் அத்தனை செருப்புகள் கிடந்தன. அதனதன் அதனதன் ஜோடி மாறாமல் அடுக்கி வைத்தது போல இருந்தன. கால்கள் கிறுக்கிய கவிதைகள் அவைகள்.

உள்ளூர கள்ளூறினாலும்… உதறல் பாதி.. உறுத்தல் பாதி என திரு திரு பார்வையில் ஒரு அறிமுகத் திருடனாய் சென்றான். ஹாலில் நிறைய திருநங்கைகள்…. சோபாவில் அமர்ந்தபடி… நின்று கொண்டு அலைபேசியபடி.. போருக்கு தயாராகி மினுங்கும் தோரணையோடு இருந்தார்கள். ஹாலைத் தொட்டது போல சுற்றிலும் இருந்த கதவுகள் உள்ளே நடப்பவற்றை வாய் மூடி பேசின.

மாலினி சற்று உள்ளே ஒதுங்கி இருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல….சந்திரன் தடுமாறி நின்றான். வெவ்வேறு வடிவத்தில் சோபாவில் அமர்ந்திருந்த திருநங்கைகள் சட்டென எழுந்து அவன் முன்னால் தலை வணங்கி நின்றார்கள். அலைபேசிக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கணம் அப்படித்தான் நின்றார்கள்.

ஒரு சீனப்படத்தில் கூட அப்படித்தான் நிற்பார்கள். ஒரு மாதிரியான ஆசுவாசம் நொடியில் பூத்தது. எல்லாருக்கும் பொதுவான ஒரு புன்னகையை கொடுத்து விட்டு திறந்திருந்த கதவுக்குள் வேகமாய் நடந்து நுழைந்தான்.

அடுத்த கணம் கதவடைக்கப் பட்டது.

மாலினி சிரித்துக் கொண்டே….” புதுசா…?” என்றாள்.

“ரெம்ப புதுசு” என்று முனகினான். அவள் டியூப் லைட்டை அணைத்து விட்டு மெழுகு வர்த்தியை ஏற்றினாள்.

“அய்யோ லைட் போடுங்க” என்றான் அவரசமாக.

“ம்ஹும்… எனக்கு வெக்கம்” என்று ஒரு சொல்லிக் கொண்டே ஒரு டிக் டிக் கடிகாரத்தில் நேரம் செட் பண்ணினாள்.

அவன் என்ன என்று பார்க்க… “உங்க டைம் ஸ்டார்ட்ஸ்… ”

“!!!!!!!!!!!”

“என்ன பாக்கறீங்க.. இப்போ இருந்து சரியா ஒரு மணி நேரம் தான் உங்க டைம் “என்றவள் முகத்தில் இருளும் ஒளியும் கலந்து ஒரு அலுவலக குறிப்பு தெரிந்தது.

“பணம் குடுக்கறீங்களா… சாமிகிட்ட வெச்சு எடுக்கணும்..” என்றபோது அவள் உடல் உரச உள்ளே தீ பற்றியது சந்திரனுக்கு. எண்ணி எண்ணி கொடுத்தான். நிறைய ஐம்பது ரூபாய் நோட்டுகள் இரண்டு முறை எண்ண வைத்தது. வாங்கியவள் சாமி அறைக்கு சென்று விட்டு சில நொடிகளில் வந்தாள். வந்ததும் பட படவென ஆடைகளை அவிழ்த்து விட்டு உரிந்த கோழியாக நின்றாள். சந்திரனுக்கு வேர்த்து குறுகுறுத்து திக்கு முக்காடிப் போனது. எதைப்பார்க்க…எதை விட என்று உடல் தடுமாறிய இசையுடன் கூடிய நடுக்கத்தில் வேகமாய் அவனை ஆட்கொண்டது காமம். அவன் அதி வேகமாய் அவளை அணைத்தான். எதை முதலில் செய்வது எதை பிறகு செய்வது என்று தெரியாத தடுமாற்றத்தில் கீழே சரிந்து அவள் வயிற்றில் முத்தமிட்டான். கைகள் மேல் நோக்கிய மார்பில் இருந்தன.

பட்டென தள்ளி விட்டு… “சீக்கிரம் வந்த வேலையை மட்டும் பாருங்க… டைம் ஆகுது” என்றாள் மாலினி.

“வந்த வேலைன்னா….!?” உள்ளுக்குள் புரளும் கேள்வியோடு… திரும்பி நின்றவளை முதுகோடு சேர்த்து மீண்டும் அணைத்தான் சந்திரன்.

“ஹல்லோ எனக்கு கூசும்ங்க.. இதெல்லாம் பண்ணாதீங்க…” அணைத்தலில் இருந்து வேகமாய் விடுபட்டாள்.

“இதெல்லாம் பண்ணாதீங்கன்னா……வேற என்ன பண்ண…?” முனங்கினான்.

தலையணைக்கடியில் இருந்து நீள்வட்ட உறை ஒன்றை எடுத்து நீட்டினாள்.

வாங்கி பார்த்து விட்டு…”ஓஹ்.. என புருவம் உயர்த்தியவனாய் தலையை முன்னோக்கி அவள் முகம் அருகே சென்று மீண்டும் நெற்றியில் கன்னத்தில் வேக வேகமாய் நாலைந்து முத்தமிட்டான்.

அவனிடமிருந்து சற்று நகர்ந்து, “ஹால்லோ…… சொன்னா புரியாதா…. எச்சில் படுத்துற வேலையெல்லாம் வேண்டாம். வந்தமா மேட்டர் முடிச்சிட்டு போயிட்டே இருக்கனும்” அவள் உயர்த்திய குரலில் ஆண்மை மிளிர்ந்தது.

அது எப்டி… கட்டி பிடிக்காம….. முத்தமிடாம……. ஒட்டாம முட்டாம உவத்தல் மட்டும் செய்யறது….?” வாய்க்குள்ளாகவே கேட்டான். அவளருகே தன் தலையை கோதிக் கொண்டே செய்வதறியாமல் அமர்ந்திருந்தான். அந்த டிக் டிக் கடிகாரத்தின் வாய் இப்போது திக் திக் என்று அடித்துக் கொண்டிருந்தது.

“ஹெல்லோ டைம் ஆகிட்டுருக்கு.. வேண்டானா கிளம்புங்க…. அடுத்த கஸ்டமர் வெயிட்டிங்…….” என்றவள் கையிலிருந்த அலைபேசியில் சாட் செய்து கொண்டே கால்கள் அகட்டி படுத்திருந்தாள்.

என்னவோ போல் இருந்தது… கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை கால விரிச்சு படுத்திருந்துச்சாம்…. இப்போ என்ன தான் பண்ண…? அறுநூறு ரூபாய் வேற குடுத்ருக்கு. ஆனா… இவ்ளோ கண்டிஷன் போடறா…!”

“மாலினி நீங்க இதை முதல்லயே சொல்லி இருக்கனும்…” நிறைய முழுங்கிக் கொண்டு கொஞ்சமாக பேசினான்.

“எதை…..?”

“இப்டி…..இந்த மாதிரி…. தொடாம தான்…….”

“இதெல்லாமா சொல்வாங்க….”பட்டென்று பதில் வந்தது. அவள் கை அலைபேசியில் எதையோ வாட்சப்பிக் கொண்டிருந்தது.

மூர்க்கம் உள்ளே திணற படக்கென அவள் மேல் சரிந்து முயங்கத் தொடங்கினான். கைகள் அங்கும் இங்கும் பிசைய அவள் பிடித்து தள்ளி உதறி எழுந்தமருந்தாள். ஒரு பிசாசைப் போல இருந்தது இருவரின் வேகமும்.

டே… கூமுட்டை….சொன்னா புரியாதா… கையெல்லாம் வெச்ச மரியாதை கெட்றும்..

முகத்தில் அடித்த அவமானத்தில் சட்டென சுருங்கினான். மேல்மூச்சில் வாங்கிய கோபத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.

“என்னடி மரியாதை இல்லாம பேசற… பணம் வாங்கினீல்ல….சர்வீஸ் குடு…” கையைப் பற்றி இழுத்தான்.

பட்டென்று எழுந்து நின்றவள் சந்திரனின் வயிற்றோடு சேர்த்து உதைத்துத் தள்ளினாள்.

“ங்கோத்தா…. கை வைக்கறயா….” மீண்டும்… உதைத்தாள்.

சந்திரன் நிலை தடுமாறி எழுந்து நின்று அவளை இழுத்து கசகசவென முத்தமிட்டான். கழுத்து கன்னம் உதடு என்று கிட்டத்தட்ட ஒரு ரேப்புக்கான ஆரம்ப நிலையில் இருந்தன பிராண்டல்கள். கைகள் பிருஷ்டம் பிசைய…….நெளிந்து வளைந்து வழுக்கிக் கொண்டு விடுவித்த அவள் தூவென துப்பினாள்.

அதற்குள் மாயமோ மந்திரமோ கதவு திறக்கப்பட்டது.

மூன்று திருநங்கைகள் உள்ளே வந்து, ‘என்னாச்சு…?’ என்று கேட்டார்கள். அதில் முதலில் தலை வணங்கி வணக்கம் சொன்னவள் குரல் தான் முதலில் வந்தது.

“அதான் கூசுதுன்னு சொல்றாங்க….அப்புறம் என்ன கேனக்….” என்று இடக் கன்னம் அதிர ஒரு அறை விட்டாள்.

அடித்த அடி சந்திரனை ஸ்தம்பிக்க வைத்தது. தடுமாறி சுவரில் சரிந்தவன் உக்கார்ந்தபடியே மூளையை துரிதப்படுத்தி எதிரே நின்ற கால்களில் ஒன்றில் முட்டியோடு சேர்த்து உதைத்தான். உதைபட்ட நொடியில் முன்பக்கம் ஆஹ்.. என்று குரலோடு பக்கவாட்டில் சாய்ந்தது காலுக்கு சொந்தகார உடல்.

“உதைக்காரன் பாரு” என்று முனகியபடியே மாலினி எகிறி வந்து சந்திரன் முகத்தில் ஓங்கி ஓங்கி மிதித்தாள்.

“மரியாதையா என் காசை குடுங்கடி…. தே** முண்டைங்களா…..”

மாலினியின் கெண்டைக்கால் கைக்கு லாவகமாக மாட்ட…..பிடியை இறுக்கி திருப்பி மடக்கி இழுத்து கீழே தள்ளினான். நின்றிருந்த நல்ல உயரமான செந்தோல் ஒருத்தி சந்திரனின் தலைமயிரைப் பற்றி கழுத்தை குனிய வைத்து முதில் சளீர் சளீர் சளீர் என்று மூன்று முறை அறைந்தாள். வலி தாங்காமல் நெஞ்சை நிமிர்த்தி முதுகின் இரு சப்பைகளையும் இணைத்து குப்புற விழுந்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டே அசையாமல் கிடந்தான். உடல் வேகமாய் நடுங்கியபடி இருந்தது.

அதற்குள் ஹாலில் இருந்து சமிக்கை வர.. உயர்ந்த செந்தோல்…நெற்றியை ஒதுக்கி தலைமுடியை சரி செய்தபடியே “பார்த்துக்கோங்க சத்தம் வந்தறக்கூடாது” என்று வெண்கலக் குரலில் சொல்லி விட்டு ஆடையை சரி செய்து கொண்டே குப்புறக் கிடந்தவன் இடுப்பில் நங்கென்று ஒரு மிதி வைத்து சென்றாள். “கஸ்டமருக்கு தெரிஞ்சிறப் போகுது. கதவை சாத்து” என்று கிசுகிசுத்தபடியே வெளியே இருந்து இன்னொருத்தி உள்ளே வந்தாள்.

“குடுக்கற அறுநூறு ரூபாய்க்கு இங்கிலீஸ்காரன் மாதிரி முத்தம் குடுக்காறாண்டி…. ஒழுங்கா பண்ணிட்டு போன்னு சொன்னா நொட்ட நியாயம் பேசி… பொண்டாட்டி மாதிரி அடிக்கிறான் சொட்டைத்தலையன்….” என்று சொல்லிக் கொண்டே அவன் கையை பிடித்து வெறித்தனமாக திருகினாள் மாலினி. தரையோடு திமிரிய சந்திரன் பட்டென்று எழுந்து மாலினியின் ஒரு முலையை பற்றி இழுத்து நசுக்கத் தொடங்கினான். எதிர்பாராத பிடியில் தடுமாறிப் போனாள். வலியால் வாய் பொத்தி கத்த, கருப்பு நங்கை அவன் இடது காலைப் பற்றி கடிக்கத் தொடங்கினாள். வலி பொறுக்காத சந்திரன் இடப்பக்கம் கழுத்தை வளைத்துப் பிடித்திருந்த இன்னொருத்தியின் வயிற்றில் இடக் கையை ஊன்றி சுவற்றோடு சேர்த்து அழுத்தினான். இதற்கிடையில் சத்தம் கேட்டு வெளியே இருந்து இன்னும் இரண்டு திருநங்கைகள் உள் வந்து சந்திரன் மேல் விழுந்து பிராண்டினார்கள்.

ரத்தம் வழிய பேச்சும் வழிய உடல் சூடு நிலை அடைந்து “புதுப்பேட்டை” படத்தில் “தனுஷ்” சொல்வது போல “வலிக்கல…. அட்ட்டி….” என்பதாக அறைக்குள் கரப்பான் பூச்சியைப் போல நகர்ந்து கொண்டே இருந்தான். சுற்றி நின்று மூச்சு வாங்க பார்த்துக் கொண்டிருந்த மூவருக்கும்.. தலை களைந்து மேக்கப் வழிந்து அலங்கோலமாய் இருந்தது. அந்த அறையிலிருந்த பொருட்களின் சரிதலும்.. இடம் மாற்றலும்.. விழுதலும்….சத்ருக்கள் நிறைந்த ஒரு போர்க்களத்தை உருவாக்கி இருந்தது. மூச்சு திணற அமைதியாய் சரிந்து கிடந்த ஓய்வில் கிடைத்த பலத்தில்…… திரட்டிய மூச்சைக் கொண்டு நுரையீரல் உப்பிய போது…… கைக்கு கொஞ்சம் பலம் கிடைத்தது. கால்களின் பலத்தையும் கைக்கு மாற்றி…… மாலினியின் மூக்கில் பலமாக ஒரு குத்து விட குத்திய வேகத்தில் சில்லு மூக்கு தெறித்து ரத்தம் குபுகுபுவென ஒழுகியது. பின் மண்டையில் பளீரென விழுந்த அறைக்கு விசைத்த வேகத்தோடு சுவற்றில் மோதி சரிந்தான் சந்திரன். பின்மண்டையில் அடித்த வேகத்தோடு மீண்டும் கருப்பு நங்கை மிதிக்கத் துவங்கினாள். கழுத்து, சுவரில் சாய்ந்திருக்க மீதி வளைந்த கழுத்தொட்டிய பின் முதுகு தரையில் சரிந்திருக்க கையை ஊன்றி ஒருமாதிரி சமநிலைப்படுத்திய சந்திரன், கருப்பு மங்கையின் காலை பற்றி இழுத்து கீழே சரித்தான். போட்ட வேகத்தில் அவள் மீது ஏறி அமர்ந்து கன்னத்தில் புறங்கை கொண்டு விசிற விசிற……..அடி, பட்டும் படாமலும் அடிக்க முடியாமலும் அடிக்க தடுமாறி தவித்தபடி அவள் மீது அவனையும் அறியாமல் மூத்திரம் போயிருந்தான். அதற்குள் இன்னொருத்தி அவனை முதுகோடு மிதித்து தள்ளி விட… எகிறி முன்னால் தலை குப்புற விழுந்த சந்திரன் கையில், கட்டிலுக்கடியில் எரிந்து கொண்டிருந்த கொத்து பத்தி கிடைத்தது. அனிச்சையாக எடுத்த மாத்திரத்தில் கீழே கிடந்தவளின் கழுத்தில் சொருகினான். பத்திகள் உடைய… கீழே கிடந்தவள் வாய் மூடி அலறினாள்.

எல்லாமே சத்தம் இல்லாமல் தொண்டைக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருந்தது.

மின்விசிறியின் சப்தம் கடுமையாக கேட்டது. எதையோ குத்தி கிழிக்கும் கொடூரம் அதனிடம். ஆளாளுக்கு ஒரு மூலையில் கிடந்தார்கள். அனைவரின் மூச்சு சப்தமும் சீராக தாறுமாறாக கேட்டது.

ஒரு மணி நேரம் முடிந்ததற்கான அலாரம் அடித்தது.

திக் டிக் திக் டிக் திக் டிக்….

வெளியே இருந்து கதவைத் திறந்து கொண்டு இன்னும் இரு நங்கைகள் உள்ளே வந்தார்கள். உடல் கிழிந்து மண்டை உடைந்து…. கைகால் வளைந்து….சதை குதறி…அடுத்த ஐந்து நிமிடத்தில் சந்திரன் சாலையோரம் கிடந்தான்.

இரவும் சுடும் என்று உணர்ந்த போது உடம்பில் எங்கிருந்தெல்லாமோ ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. ஆசையின் வேகம்…. அவன் ஆடை கிழித்திருந்தது. காமத்தின் சாபம் அவன் உடலை துவைத்திருந்தது. பேச்சு தானாக முணங்கியது. நிலவொலியில் அவன் ஒரு சிவப்பு சித்திரத்தை சுமந்தபடி, பலியான ஒரு முதலையைப் போல கிடந்தான். யாராவது கழுத்தில் மிதித்து கொன்று விட மாட்டார்களா என்று தோன்றியது. அவன் உடல் முழுக்க அவமானத்தின் புழுக்களை உணர்ந்தான்.

வெகு நேரம் அங்கும் இங்கும் அசைந்தபடி கிடந்தான். அப்படிக் கிடப்பது கூட ஆழ் மனதில் யாழ் மீட்டியது போல இருந்தது. கண்களில் நீர் கொட்டியது. மனதுக்குள் தேள் கொட்டியது. அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்ற தத்துவம் அவன் கழுத்தில் எறும்புகளாய் ஊர்ந்தன.

நாளை காலையில் ஜோசியரிடம் செல்ல வேண்டும் என்று சொன்ன பாட்டி முகத்தில் காரி உமிழத் தோன்றியது. செவ்வாய் சுக்கிரன் வியாழன் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் அப்பா மீது ஆசிட் ஊத்த தோன்றியது. அந்தஸ்து… கெளரவம்…ஊர் மரியாதை உறவு மரியாதை சொந்த பந்த மரியாதை என்று 50 சவரனுக்கு குறையாமல் எதிர்பார்க்கும் அம்மா கழுத்தில் சூரி கத்தியால் குத்தத் தோன்றியது.

தன் அனுபவத்திலிருந்து, ஊரார் அனுபவத்திலிருந்து, முன்னோர் அனுபவத்திலிருந்து கிடைத்த முடிவுகளின் பெரும்பகுதியைக் கொண்டு ஒரு மாதிரி ப்ராக்டிகல் கலவை அளவுகளின் வழியாக ஜாதகம் கணிக்கப்படுகிறது. கணிப்பு சில நேரத்தில் ஒத்துப் போகலாம். சில நேரத்தில் ஒத்துப் போகாமல் போகலாம். ஜாதகப் பொருத்தம் ஒரு நம்பிக்கைக்குத்தானே தவிர கண்ணை மூடிக் கொண்டு நம்பும் மூட நம்பிக்கைக்கு இல்லை. அது ஒரு வசதிக்குத்தானே தவிர வாழ்வின் அடித்தளத்தின் ஆதாரமாகாது. அதுவும் பெற்றோர்கள் தன் நம்பிக்கையை செயல்படுத்திப் பார்க்கும் ட்ரையல் வண்டியாக பிள்ளைகளை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறது 40ஐ நெருங்கியும் பெண் கிடைக்காதவனின் சாபம்

“நாள் நட்சத்திரம்.. நேரம்.. காலம் பார்த்து தானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சாந்தி முகூர்த்தம் நடந்துச்சு.. அப்புறம் ஏன் என் வாழ்க்கை இப்டி இருக்கு” என்று அவன் முணங்கியது அவனுக்கே கேட்கவில்லை.

நகர்ந்து நகர்ந்து தெரு விளக்குக்கு கீழே வந்திருந்தான். வீதியில் இரவு புழுக்கம் அலைந்து கொண்டிருந்தது.

தெரு விளக்குக்கு எதிரே இருந்த கடை திண்ணையில் படுத்திருந்த ஒரு உருவம் அவனையே பார்த்தது. பார்க்க பார்க்க கண்கள் சொருக கடினப் பட்டு நெற்றி தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காலம் சுருக்கி காணுதல் அது என வெற்றிடம் புரிந்தது. சந்திரன், இருக்கும் மிச்ச உயிரைக் கொண்டு தன்னையே திரட்டி கூர்ந்து பார்த்தான். அந்த உருவமும் பார்த்துக் கொண்டே இருந்தது. அது ஒரு பிச்சைக்காரியின் உடலைப் போர்த்தியிருந்தது. அழுக்கு படிந்த முகத்தில் பிறழ்ந்த பாவனை. பற்கள் கரிந்து தெரிய…. தலையை மட்டும் தூக்கி நிலை குத்திய பார்வையில் கஷ்டப்பட்டு தலையை தூக்கவும் இறக்கவுமாக பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்கு ஏதோ புரிந்திருந்தது அல்லது எல்லாமே தெரிந்திருந்தது. பிண்டத்தின் முடிச்சுக்கள் அவிழ்வதில் இருக்கும் நப்பாசை அறிந்த பார்வை அது.

சந்திரன் பார்த்தான். பிச்சைக்காரியும் பார்த்தாள். சந்திரன் கண்களில் நீர் வழிந்து கன்னம் கிழிந்திருந்தது. உடல் நகர முடியாத வேதனையில் துடித்தது. ரத்தம் சொட்டும் ராத்திரிக்கு நிறம் மாறி இருந்தது.

பார்த்துக் கொண்டே இருந்த பிச்சைக்காரி தலையை ஆட்டி “கிட்ட வா” என்று அழைத்தாள். அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். பாதி வானம் சிவந்திருந்தது.

“வ்வா…..”என்று வாய் திறந்து ஈனக்குரகுரலில் கூப்பிட்டாள். அவள் கண்களில் அன்பின் திரவம் நிலை குத்தியிருந்தது.

மீண்டும் தலை ஆட்டி, “……வா” என்றாள்.

சந்திரன் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து நகர்ந்து அவளருகே சென்றான். அவளை நெருங்கி மனம் வலிக்க அவளுக்கருகே சரிந்தான்.

அவள் ஒரு கையால் மேலே போர்த்தியிருந்த அந்த சாக்குப் பையை தூக்கி அவனை உள்ளே இழுத்து அணைத்துக் கொண்டாள். அவன் அவளை இறுக கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

அந்த தெரு விளக்கு கம்பத்தில் உட்கார்ந்து குறுகுறுவென அத்தனை நேரம், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த இரவுக் காக்கை ஒன்று அப்பாடா என்று ஆசுவாசமாக பறக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *