இங்கே, ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை குடும்பம்  
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 17,852 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

சேரி…

உலகாளும் ஆத்தா அங்காளம்மன் கோவில் திமிலோகப் படுகிறது. ஆடும் பம்பரமாக. ஆடாமல் சுழன்றார் சாம்பான் பூசாரி . மஞ்சள் கொத்துக்கள், ஒரு புறம். மறுபக்கத்திலே. செங்கரும்புக் கட்டுகள். ஈசான்யமுடுக்கில், வாரிப் பின்னப்பட்ட தென்னை ஓலைக் கூந்தல்கள்.

நட்ட நடுவிலே, மாவிலைத் தோரணங்கள் சுருண்டு கிடந்தன.

இதற்கிடையில் –

அந்திசந்தியின் ரம்யமான ஆர்ப்பாட்டம் வேறு.

விடிந்தால், சங்கராந்திப் பொங்கல் ஆயிற்றே!

அதற்காக

எழில் சேர்த்து ஒயில் சேர்ந்த இந்தப் பொன் அந்தி மாலைப் பொழுதிலே, சேரியிலே மாத்திரம் தைப் பண்டிகை எட்டிப் பார்க்கக் கூடாதென்று சட்டமா . என்ன? சட்டத்துக்குச் சாதி சம்பிரதாயம் ஏது?

சாம்பான் பூசாரி நயமாகவும் விநயமாகவும் சிரித்துக் கொண்டார். மண்ணில் பிறந்த நாள் முதல் அதுவரை வாழ்ந்த – வாழ்ந்து காண்பித்த வாழ்க்கையின் ஐந்தொகைக் கணக்கைப் பார்த்ததால் – எண்ணிப் பார்த்த தால் விளைந்திட்ட சிரிப்பு அது. ஆதாயமான சிரிப்பு அல்லவா?

மெய்யாகவே, ஆதாயமான – சிரிப்புத்தான் ! ஆவணத் தான் கோட்டைத் தேவர் குடியிருப்பிலிருந்து கண்டிச் சீமைக்கங்காணி ரேக்ளாவிலே வந்திருந்தார். தாம்பூலம் தரித்துக் கொண்டார். நாளைக்குத் தம்முடைய மாடி வீட்டிலே நடைபெறவிருந்த சம்பந்தி விருந்துக்கு அழைத் தார். கும்பிடு கொடுத்தவர் , கும்பிடு வாங்கிக் கொண்டார்; புறப்பட்டார்.

இப்படிப்பட்ட சமூகமாற்றம் ஆதாயம் இல்லையா, பின்னே?

காந்தி மகாத்மா செத்துப்போய் விட்டாரென்று நாக்கிலே நரம்பில்லாமல் யாரால் தான் பல்மேல் பல் போட்டு நெஞ்சு துணிந்து சொல்லிவிட முடியுமாம்?

ஆரோக்கியமான எண்ணங்களிலும் நினைவுகளிலும் சாம்பானுக்கு நெஞ்சு வலிகூட லேசாகக் குறைந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது.

“மச்சான்காரவுகளே! ஆத்தாளோட சந்நதி வாசல் நெடுக நறுவிசாக் கூட்டிப் பெருக்கிப்புட்டேனுங்க; சாணி தெளிச்ச கட்டாந்தரையும் பொட்டுப் பொழுதுக் குள்ளாகவே துப்புரவாய்க் காய்ஞ்சும் போயிடுச்சுங்க. சரிபார்த்துக்கிடுங்களேன்!”

உயிருக்கு துணை நிற்கப்பழகிய மங்கத்தா சத்தியத் துக்கும் துணை நிற்கப் பழகியிருந்தாள்.

“சரி, புள்ளே! நீ சொன்னாச் சரிதாண்டி!”

மங்கத்தாளுக்கு வாய்முச்சூடும் பல் ஆயிற்று. பொக்கை வாயென்றால், சிரிப்புக்குத் தடை விதிக்க முடியாதுதான்.

சாம்பான் சுற்றுமுற்றும் விழிகளை உன்னிப்பாகவே விரித்தார். “பலே சபாசு!” என்றார். அவருக்கு மட்டிலும் பொக்கை வாயிலே புன்னகைப்பூ மலராதா, என்ன ?

கன்னிப் பொங்கல் திடல் நாணயமான கண்ணியத் தோடு பளிச்சிடுகிறது.

என்ன அதிசயக்கூத்து இது!

அந்திக்கட்டிலேயே, நாலைந்து கன்னிமார்கள் சேரிக் கம்மாயில் குளித்து முழுகிப் பூவும் பொட்டும் மணக்க ஈரப்புடவையும் ரவிக்கையுமாக ராத்திரிப் பூராவிலும் கண்விழித்துக் கன்னி நோன்பு மேற்கொள்ளக்கூடி விட் டனரே? – செண்பகம், கண்ணாத்தா, பூங்காவனம், செல்லாயி மற்றும் தில்லைக்கண்! – பெயர் வரிசை நீண்டது! ஒவ்வொருத்தியும் பாசமும் நேசமாகவும், அன்பும், பண்புமாகவும் என்னென்ன பிரார்த்திக்கப் போகிறாளோ? ஒவ்வொருத்தியும் கைப்பிடியாக பற்றி யிருந்த வேப்பிலைக் கொத்து என்னென்ன தீர்ப்பை படிக்கப் போகிறதோ?

சாம்பானின் இடுக்கு விழுந்த கண்கள் தளும்பின – ‘கன்னி நோன்பு இருக்கிற கன்னிக்கழியா பொண்டுங்க மனச்சுத்தத்தோட நாயப்படி நேர்ந்துக்கிட்டா, அவங் களோட வேண்டுதலையை நியாயப்படியே தீர்த்து வைக் கிறதில ஆத்தா அங்காளம்மை ரொம்ப, ரொம்ப கெட்டிக்காரி! உதாரணத்துக்கு அந்நியம் அசலுக்குப் பறிவானேன் ! எங்க தங்கம் அது ஆசைப்பட்ட நேச

மச்சான் வீரமுத்துவுக்கே வாழ்க்கைப்பட்டு முந்தானை விரிக்கிறதுக்கு ஆயி எழுதிப் போடலையா? ஈரம் நன்றியின் உணர்வில் சிலிர்த்தது; கசிந்தது.

சுகமான ராகமும் வேப்பங்காற்றும் ஒன்று! காக்கையும் குருவியும் அம்மன் பிரசாதம் வேண்டிக்கூட்டம் சேர்க்க தலைப்படுகின்றன.

சாம்பான் பெருமைப்பட்டார். அவரது மனிதாபி மானம் பெருமிதம் அடைந்தது. அவர் சாமான்யமான புள்ளியா. என்ன? வாழ்க்கைதடத்தில் கிட்டத்தட்ட எழுபத்தேழு தொலைக் கற்களை மதிப்போடும் மரியாதை யோடும் நிமிர்ந்த தலையை நிமிர்த்தியபடியே தாண்டி விட்ட ‘மானி’ ஆயிற்றே!

கைநொடிப் பொழுது கழிந்தது.

தலைவாசலிலே, இரையாமல் இறைந்து கிடந்த அத்தனை பொருட்களும் இப்போது உட்பிரகாரத்தில் மடப்பள்ளியை அடுத்திருந்த கிட்டங்கி’ யில் இடம் பெற்றன ; இடம் கண்டன.

சாம்பான் கிழவருக்கு மூச்சு வாங்கியது.

மங்கத்தாக் கிழவிக்கும் மூச்சு இறைத்தது.

பெரியவர் அம்மன் சந்நதிக்கு மடங்கினார். மடங் கியதும், தீயை மிதித்துவிட்ட பாவனையில் திடுக்கிட்டார்; மலைத்தார் ; திகைத்தார் ; தவித்தார் ! – ‘மூத்தவளே! நான் கனா – கினா காணுறேனங்காட்டி ‘உள்மனம் ஓல மிட்டது; ஓட்டமாக ஓடி வந்து ஒட்டி நின்ற ஆசைக் கண்ணாட்டியின் இதயக் குமுறலும் அவரது உள்ளத்தில் எதிரொலித்திருக்கலாம்!

அங்கே –

எரிந்து கொண்டிருந்த அம்மன் தீபங்களுக்கு எதிரே –

எரியாத தீபமாகவும் பாதாதிகேசம் வரையிலும் ஈரம் சொட்டச் சொட்டவும் மூடிய விழிகளோடும், மூடாத நெஞ்சோடும் கூப்பிய கரங்கள் கூப்பியபடியே, அங்காளம் மனைப் போலவே, கற்சிலையாக நின்று கொண்டிருக் கிறாள் தெய்வானை! – காலடியில் நனைந்த பூக்கள் நனையாமலே கிடந்தன!

கன்னங்கள் இரண்டிலும் ஊசி குத்த இடம் வைக்காமல் பட்டை தீட்டின கணக்கிலே நகக் கீறல்களும் ரத்தத் தழும்புகளும் பளிச்சிடுகின்றன.

நெற்றிக் குங்குமம் கசிந்து உருகி வழிந்து, கண்களின் கண்ணீரிலே சங்கமமாகி, மார்பில் இழைந்து கிடந்த மங்கலத் தாலிப் பொட்டிலே சிந்தி சிதறிக் கொண்டே யிருக்கிறது தாலிப் பொட்டுக்கு ரத்தப் பொட்டு வைத் திருக்குமோ?

“ஆத்தாடியோ! தெய்வானைப் பெண்ணே!” சாம்பான் அழைத்தார்.

மங்கத்தா கூப்பிட்டாள்; “தெவ்வி!”

ஊகூம்!

பேச்சு மூச்சு இல்லை!

“மச்சான்காரவுகளே! அந்தி மசங்கிப் பூடுச்சுங்க: மணி அடிங்க; அப்பாலே, ஆத்தா நம்ம மேலேயும் சடனைப்பட்டுக்கிடப் போறா!” என்று நினைவூட்டினாள், கொண்டவள் மங்கத்தா.

உயிர் கொண்டவர் சுயப் பிரக்கினை அடைந்தார். சாயரட்சைப் பூஜை நடக்கிறது.

ஆத்தா சிரிக்கிறாள்; சிரித்துக் கொண்டே இருக்கிறாள்!

2

எட்டிக்குச்சு

கொள்ளை, கொள்ளையாகப் பணம் இருந்தும் கூட மனம் கொள்ளை கொள்ளத் தக்க கருணை இல்லாத மேட்டுக்குடிச் சமூகத் துரோகியை ஞாபகப்படுத்தும் போக் கில், மிகமிகப் போலித்தனமான பெரிய மனிதத் தனத் தோடு எரிந்து கொண்டிருந்தது சிம்மினி விளக்கு.

பூசாரிச் சாம்பான் , கம்மாய்த் தண்ணீரின் அடியில் பதுங்கிப் பதுங்கிச் சுழித்திடும் சுழல் மாதிரி, உள்ளுக் குள்ளேயே மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறார். இன்னமும் ! உலகத்துக்கே மூல முதற்பொருளாக விளங்கிய – விளங்குகிற ஆத்தாளை நினைத்த நெஞ்சாலேயே, அம்மன் சந்நிதானத்தில் கண்ணீரும் கம்பலையுமாக அபலைக் கோலத்தில் காட்சியளித்த தெய்வானையையும் நினைத்தார், நினைத்த நெஞ்சம் மட்டுமல்லாமல், நினைக்காத உடம்பும் நடுங்கத் தொடங்கியது! –

ஆத்தாளே ! இம்மாம் காலமாய் நான் அனுபவிச்சறியாத ஒரு கவுரப் பிரச்சினை இப்ப எனக்கு ஏற்பட்டிருக்குதே? இந்த இடுசாமத்துப்பு ஊருக்கு ஓசந்த ஒனக்கா தெரியாது? பின்னே, ஏன், இப்படி அந்த அப்பாவிப் பொண்ணு தெய்வானையை அலங்கோலமான நிலைமைக்கு ஆளாக் கிட்டே? போன ஆவணிக் கெடுவிலே, உன்னைச் சாட்சி வச்சுத்தானே, இந்தப் பறச்சேரியே வாயைப் பிளந்து அதிசயப் படும்படியான விதத்திலே , தெய்வானை – வேலாயுதம் கண்ணாலத்தை தெய்வத்துக்குச் சம்மதமான ஒரு நல்ல தீர்ப்பு சொல்லி நானே முன்னே நின்னு நடத்தி வச்சேன்! மறுதக்கமும், அத்தக் குடிகார வேதாயம் முருங்கைப் போத்திலே ஏறிக் குந்திக்கிடுச்சுப் போலே?”

அதான் , தெவ்விக்குட்டி இப்படியான அவல நிலைக்கு ஆளாக்கிப் போயிருக்குதுபோலே ! தாய்க்குத் தாயான ஆத்தாளே, எனக்கு ஒரு நல்ல பாதையைக் காட்டிப்பிடு ; அப்பத்தான், என்னாலே தெய்வானைப் பொண்ணுக்கு ஒரு நல்ல பாதையைக் காட்ட ஏலுமாக்கும்!” – மூக்கைச் சிந்தி வீசினார் ; புகையிலை எச்சிலைக் காறித்துப்பினார். பொழுது பட்டு ஆறு, ஆறரை நாழிகைப் பொழுது ஆகியிருக்கும் ; போனதும் வந்ததுமாகத் திரும்பமாட்டாளா இந்த மங்கத்தாக்குட்டி!

பாறையொலி கர்ணகடூரமாகக் காற்றிலே மிதந்து வந்தது .

சாம்பான் செவிகளைப் பொத்திக் கொண்டார் அக்கரை சீமையிலே படுபாவி சிங்களவன் கிட்டேயிருந்து தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் அப்படின்னு உயிர் தப்பிக் கள்ளத்தோணி ஏறி ஓடியாந்து இப்பைக்கு மேலத் தெருவிலே குந்தியிருக்கிற சின்னத்துரை தான் இப்படித் தப்புத் தப்பாய்த் தப்புக் கொட்டிக்கிட்டு இருக்க வேணும் ! சே ! இடுப்பின் அடிமடியில் செருகப்பட்டிருந்த சுருக்குப் பையைத் துழாவி எடுத்தார் அவர் ; அதற்குள், கிழவருக்குக் கிழவியைப் பற்றின கிலேசம் மிஞ்சவே. எச்சரிக்கையாகக் குனிந்து வெளியே வந்தார்.

ஜாதி முல்லைப் பூக்களைக் கொட்டி விட்டாற்போன்று படர்ந்திருந்த பிறை ஒளியில் அங்கும் இங்குமாக முளைத் திருந்த குடிரைகள் கூட அழகாகவே தெரிந்தன.

சொறி நாய் தென் திசையினின்றும் ஊளை இடுகிறது. சாம்பானுக்குத் திகீரென்றது இப்போது அவருக்குத் தெய்வானையின் சோக நினைவு மீண்டும் திரும்பி விட்டது. தெவ்விப் பொண்ணு எனக்குச் சொந்தம் கிடையாது ; ஆனாலும், நல்ல பொண்ணு. எங்க தங்கம்மான்னா அதுக்கு உசிரும் பிராணனும் தெய்வானை மனசு விட்டுச் சிரிச்சாத்தானே நானும் சிரிக்க வாய்க்கும்? அப்பத்தானே, சேரியிலே ஒண்ணடி மண்ணடியாக் குடியிருக்கிற நாப்பத்தெட்டுக் குடிபடைங்களுக்கும் தலைக் கட்டுக் கொண்ட தலைப் புள்ளி என்று நான் சூட்டப்பட்டிருக்கிற பட்டத்துக்கும் மரியாதைக்கும் ஒரு சத்தியமான, தருமமான அர்த்தமும் கிடைக்க முடியும்? மனிதாபிமானத்தின் மேன்மையில் அவர் தலைநிமிர்ந்தார். ‘எப்படியும் இந்தச் சாம்பன் நாட்டாண்மை அம்பலம் ஏறியாகணும்!’ வைராக்கியம் சிலிர்க்கிறது.

கீழத்தெரு அங்கப்பன் தன் பட்டாளத்தோடு கொம்பும் தப்பும் சுமந்து, சாராய வெறியையும் சுமந்து, சுடுகாட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார், “பெரியவுகளுக்குத் தண்டமிடுறோங்க!” என்று கும்பிட்டபடி நடந்தார்

“சரி, சரி!” என்றார் சாம்பான். சாக்குருவி கத்தியது.

மயிர் பிளந்து நியாயம் வழங்குவதில் மன்னரெனப் பேர் பெற்ற சாம்பானுக்கு உரிய மரியாதையை வழங்குவதில் சேரிக்குடி படைகள் என்றைக்குமே சோடை போக மாட்டார்கள்; சோடை போகவும் முடியாது! ஏன் தெரியு மா? – இங்கே சாம்பான் வாக்குத்தான் வேதவாக்கு! – அன்றைக்கு வேலாயுதத்துக்கும் தெய்வானைக்கும் ஊடே ஊடாடிய சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்லி நல்ல பேரைச் சம்பாதித்துக் கொண்ட சாம்பானைப் பற்றிச் சேரியிலும் சரி, அக்கம் பக்கத்து ஊர்களிலும் சரி எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொண்டார்கள்.

மாட்டுக் கொட்டகையில் பசுவும் கன்றும் குரல் கொடுத்தன. பரணிலிருந்து ‘வைக்கோல் பிறி’ உதிர்ந்தது.

கால் மிஞ்சிகள் கெஞ்சுகின்றன.

மங்கத்தா, “நானுதானுங்க”, என்று தன் வருகைக் கான அச்சாரம் கொடுத்தாள். “வயிறு பசிக்குமே, மூத்தவுகளே?” என்றாள்.

“வயிறு பசிக்கல்லே, புள்ளே; மானம்தான் பசிக்கு தாக்கும்!”

சாம்பானின் மானம் தெய்வானையின் மானாபிமானச் சிரிப்பில் தான் ஊசலாடிக் கொண்டிருக்க வேண்டும்! – “நம்ம தெய்வயானைப் பொண்ணைப் பத்தின காரண காரியச் சங்கதி ஏதாச்சும் காதுக்கு விழுந்திச்சா?” என்று வினவினார்.

ஊம்’ கொட்டினாள் உடையவள். தேள் கொட்டின பாங்கிலே, தவித்தார் உடையவர்.

“மச்சானே! நீங்க கொஞ்சம் முந்தி அம்மன் கோயிலைப் பூட்டிக்கிணுதிரும் பையிலே நின்ன மாதிரியேதான் தெய் வானைப் பொண்ணு ஆத்தா சந்நதியிலே கல்லு சிலைக் கொப்ப இன்னுமும் நின்னுக்கிணு இருக்குதாமுங்க!”

“என்னவாம் சங்கதி, மங்கத்தா?”

“போன கடுத்தம் கன்னி விரதம் இருந்தப்ப என்னமோ தப்பு கிப்பு ஏற்பட்டதாலேதான் தன்னோட கண்ணால வாழ்க்கை தன் மனசுக்கு ஒப்பினாப்பிலே நல்ல தனமாக வாய்க்கலைன்னு நெஞ்சு ஒடுஞ்சி போன தெவ்வி இப்ப….. இப்ப….” என்று தொடர்ந்த பேச்சைத் தொடரமுடியாமல் தயங்கினாள்.

“ஊம், ஆரம்பிச்சதை முடிச்சுப் போடு”, என்று ஆசை மனைவியைத் தூண்டினார் ஆசைக் கணவர்.

“தெவ்விப் பொண்ணு இந்த வாட்டி ரெண்டாந் தடவை யாகவும் கன்னி நோம்பு இருக்கத் துணிஞ்சிருக்குதாமுங்க மச்சான்!”

“மெய்யாமா?”

“மெய்யாலுமே தானுங்க!”

“அப்படின்னா?”

“தெய்வானை தனக்கு வேலாயுதம் கட்டின தாலியை அவன் கையிலேயே கழற்றி வீசிப் போட்டுப்புட்டு , இப்ப தன் மனசுக்கு ஒப்புற ஒரு நல்லவனை – மெய்யாலுமே நல்ல வனாக இருக்கிற ஒரு நல்ல மனுசனைத் தேடுறத்துக்காகத் தான் இப்ப மறுதக்கமும் கன்னி விரதம் இருக்கத் துணிஞ்சிருக்குதாம்!”

சாம்பான் மனம் அதிர்ந்தார். “அநியாயம் இல்லையா இந்த நடப்பு?” என்று வேதனைப்படலானார்.

“அந்த வேலாயுதம் குடி குடிச்சுப் போட்டு, ஒரு பாவமும் அறியாத – வேலாயுதத்துக்கு வாழ்க்கைப்பட்டதைத் தவிர வேறே ஒரு பாவத்தையும் அறிஞ்சிராத இந்த அபலைப் பொண்ணு தெவ்வியைக் கண்ணும் மண்ணும் புரி யாமல் அடியோ தண்டம்னு புளியம் மிலாறினாலே அடிச் சுப் போட்டது பத்தாதின்னு . அதோட கன்னம் ரெண்டி லேயும் நகத்தாலே கீறிக் கிழிச்சது மட்டும் அநியாயம் இல்லையாங்காட்டி?” – ஆத்திரம் தாங்காமல் கொதித் தாள் மங்கத்தா.

தலைக்குடுமி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் வாய டைத்தார் சாம்பான் பூசாரி “கட்டாயமா அநியாயந்தான்; இந்தப்பாவம் ஆத்தாளுக்கே அடுக்காதுதான்!” என்றார். மயிர்பிளந்து ‘நாயம் படிக்கும் அவருடைய மன இயல்பு கட்டி சொன்ன சத்தியத்துக்கு ஓர் ஆமோதிப்பாகவே அமைந்தது அவரது பேச்சு.

“அதனாலே தான், ஆத்தா தூண்டியோ என்னமோ நம்ம தெய்வானை அவளோட மச்சானையே – மஞ்சள் தாலி பூட்டின புருசனையே பதிலுக்குப் பதில் கை நீட்டவும் செஞ்சிடுச்சு! இப்ப வேலாயுதத்தை ரத்துப் பண்ணீட்டு வேறொரு நல்லபடியான நிழலிலே அண்டவும் மனசு துணிஞ்சிருக்காக்கும்! – மங்கத்தாவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிற்று.

வரும் விதி வழித்தங்குவது கிடையாது!

ராத்திரியானாலும், பகலானாலும் அதுவேதான் விதியின் விதியாக இருக்கலாமோ?

ஆகவேதான் –

தெய்வானை ரோசமும் வைராக்கியமும் முட்டி முயங் கிட, இரவு முழுவதும் அம்மனைச் சாட்சி வைத்து மறு படியும் கன்னி நோன்பு மேற்கொள்ள திட்டமிட்டு விட்டாளோ?

சாம்பான் மிடறு விழுங்கினார் …… தன்னோட உசிருக்கு நேசமான தெய்வப் பொண்ணை ஆயுள் பரியந்தம் தன் கூடவே வச்சிருக்கிற பொறுப்பும் குடிக்காரப்பயமவன் வேலாயுதத்துக்கு ஆயி மகமாயி எழுதிப் போடல்லே போலே! அதான், விதி கூட்டத்திலே கோவிந்தா போட்டுக் கூத்தடிக்குது!’ – மனிதத்தன்மையின் ஈரம் நினைவுகளை புல்லரிக்கச் செய்திருக்கலாம்.

‘கவுச்சி சேராத’ அழுகின குழம்பின் வாசனை எட்டு ஊருக்கு வீசத் தொடங்கியது.

“சோறு ஆறிடப் போவு துங்க, மச்சானே!”

“ஊம்”

தெய்வானை மனம் ஆறமாட்டாளா?

3

விடிந்தால், சங்கராந்திப் பண்டிகை!

வழக்கமாக வெற்றிலை போட்டுக் கொள்ளும் சமயங்களில் எல்லாம் சாம்பான் மனச் சந்துஷ்டியோடு இருப்பது பழக்கம். ஆனால், இப்போது, அவர் உள்மனம் வெகுவாகவே சலனம் கண்டிருந்தது. ‘இனிமே , பொளுது பளார்னு விடிஞ்சதும் தான் தெவ்விப் பொண்ணைக் கண்டு தண்டிப் பேச வாய்க்கும்! – கற்றாழை நார்க்கட்டில் உடலுக்கு இதம்பதமாகத்தான் இருந்தது! பனங்குளம் மாப்பிள்ளைக்காரன் வீரமுத்து, பெண்ணைக் கொடுத்த இந்த மாமனுக்காக நாலு நாழிகைப் பொழுது கை கடுக்கப் பின்னிக் கொடுத்தது அல்லவா அது? – மகள் தங்கம்மா கருக்கலிலேயே வளமைப் பிரகாரம் குடும்பத் தோடு விருந்துக்கு வந்து விடுவாள்! – பாசத்தில் கூடும் பாய்ந்த நெஞ்சுக்குருத்து என்பியது ; தணிந்தது. நிமிர்ந்து குந்தினார் அவர்.

மங்கத்தா புகையிலைக் காம்பை கிள்ளி நீட்டுகிறாள்.

பூசாரிக்கு உணக்கை வந்தது.

“ஒங்களைத்தானே! ஒரு சங்கதி ரோசிச்சுப் பார்த்தீகளா?”

“என்னடி புள்ளே?”

உங்களோட ஆகி வந்த கைராசிக் கையாலே தான் நீங்க தெய்வானை – வேலாயுதம் சோடிக்குக் கண்ணா லத்தை நடத்தி வச்சீங்க!

“அதுமட்டுமல்ல ; ஒரே நேரத்திலே, இன்னொரு சோடியான வள்ளி முத்தையனுக்கும் தான் கண்ணாலம் நடந்திச்சு!

“ஆனா”

“ஆனாவும் ஆச்சு; ஆவன்னாவும் ஆச்சு, விசயத்தைப் புட்டுச் சொல்லு!”

இப்பைக்குப் புருசன் பொண்டாட்டியாக இருக்கிற தெய்வானை – வேலாயதம் வீம் போட போட்டுக்கிட்டு இருக்கக் கூடிய வம்புச் சண்டையினாலே இந்தச் சேரி நம்ம பேரிலே வீண் பழி பாவத்தை நாளைக்குப் போட்டி டுமோ, என்னமோ?”

“ஓகோ ! அப்பிடியா?”

“ஊர் வாயை நாம் எப்பிடிங்க மூட ஏலும்?”

“ஊரும் ஆச்சு; தேரும் ஆச்சு. ஊருக்காக நாம வாழல்லே ; நமக்காகவும் நம்மளோட மனசுக்காகவும் தான் வாழ்ந்தோம் ; வாழுறோம் ; இனி, வாழவும் செய்வோம்! தெவ்வானை – வேலாயுதம் தவசல் என்னை மாதிரியே, ஒன்னையும் உறுத்த ஆரம்பிச்சிருக்குது! ஆனா, ஒரு காரண காரியத்தை நீயும் மறந்து போயிடப் படாதாக்கும் ! செவ்வானை – வேலாயுதம் தம்பதியோட இந்த இடுசாமச் சிக்கல் அவங்களோட சொந்தப் பிரச்சனை; பந்தப் பிரச்சனையாக்கும்?”

“நூத்திலே ஒரு சேதிங்க, மச்சான் காரவுளே!”

“அப்பாலே, ஆத்தா விட்டவழி!”

“அதுவும் சாத்தியம் தாங்க!”

மங்கத்தா கொட்டாவி விட்டாள்.

நிலவு பூச்சொரிந்தது.

சாம்பான் எச்சிலை ஒழுங்கையில் உமிழ்ந்தபின், திரும்பி வந்து குந்தினார் அவருக்குத் தூக்கம் – போய் விட்டது. எதை நினைப்பார் அவர்? அவர் எதை மறப்பார்? – நினைவும் மறதியும் தான் வாழ்க்கையா?

வாழ்க்கை வேடிக்கையாகத்தான் விளையாடுகிறது. விளையாட்டுக் காட்டுகிறது!

இந்த விதியை விலக்கி வைத்து விட்டு, தெய்வானை யோ அல்லது, வேலாயுதமோ வேடிக்கை பார்க்கவோ, இல்லை. வேடிக்கை காட்டவோ முடியுமோ?

நடந்த கதை நடந்து காட்டியது :

சேரியில், கீழத் தொங்கலில் இருந்த தெய்வானையும் வள்ளியும் உயிருக்கு உயிரான தோழிமார்கள் , அதற்கு சமதையாகவே, மேலக்கோடியிலிருந்த வேலாயுதமும் முத்தையனும் உயிரும் பிராணனுமான சேக்காளிகள்.

ஆதியிலிருந்தே, தெய்வானைக்கு முத்தையன் என்றால் ஒரு கண் ; நேசக்கண் அது. அவனுடைய நேசக்கண்ணாடி யாக ஆகிவிட வேண்டுமென்று சொப்பனம் கண்டாள் அவள்.

அதுபோலவே –

வள்ளியின்மையல் வேலாயுதத்தின் பேரிலே நிலைத்தது,

இருதரப்பு ஆண்பிள்ளைச் சிங்கங்களும் கரும்பு தின்னக் கூலி கேட்க வில்லைதான்!

இப்படிப்பட்ட நிலையில் – சூழ்நிலையில் தான், எதிர் பாராத சோதனையொன்று பேயாட்டம் போட்டது.

“ஒரு கமுக்கமான துப்பு தெரியுமாங்காட்டி? நம்ம தெய்வானைக் கன்னிக்கு இஷ்டப்பட்ட முத்தையன் குடிகாரனாமே? கூத்திக் கள்ளனாமே?”

கேணியடியிலும் ஊருணிக்கரையிலும் சந்தைக் கூட்டத் திலும் ஊர்வாய் முணமுணத்தது.

ஜாதி ரோஜா அனலில் கால் இடறியும் கால் தவறியும் விழுந்து விட்டால், அது வாடாதா? வதங்காதா? தெய்வானை ஏங்கினாள்; தவித்தாள்!

சேதி அறிந்த கூட்டுக்காரி வள்ளிக்கும் ஒரு புதுப்பயம் ஈரல் குலையைத் துளைத்துக் குலைய வைத்தது. “நான் நேசம் வச்சிருக்கிற வேலாயுதம் மச்சான் இதுமட்டும் நல்ல ஆளுன்னுதான் பேரெடுத்திருக்குது ; ஆனாலும் அதோட சுயரூபத்தை யார் கண்டது? எந்தப் புற்றிலே எம்மாங்கொத்த பாம்பு ஒளிஞ்சிருக்குமோ?” – வேதனையில் நெட்டுயிர்த்தாள்; ஏமாற்றத்தில் குமைந்தாள்.

அன்றைக்கு பூராவும் சிநேகிதிகள் இருவரும் சோறு தண்ணீர் சாப்பிடவில்லை; அவர்களுக்கு இரவு சிவராத்திரி ஆனதுதான் மிச்சம். மறுநாள் விடியல் வேளையிலே, இருவரும் கள்ளுக்கடை நாவல்பழ மரத்தடியில் சந்தித் தனர். கூப்பிடு தொலைவில் கூப்பிடாமலே தெரிந்த தாராடி சாமியை நேந்து கொண்டனர்.

“அடியே வள்ளி! மனசுக்கு மனசுதான் சாட்சி; மற்றதுக்குச் சாமிதான் காட்சின்னு ஒரு பேச்சு எங்க அப்பத்தா சொல்லும் அதொத்து, நாம்பளும் நமக்கு உண்டான வாழ்க்கையை நேசத்தோடவும் பாசத்தோடவும் சீராக்கிட வேணும், நம்ப விதி , நாம தாழ்ந்த சாதியிலே பொறந்து பூட்டோம்; ஆனாலும் ஒசந்த சாதியிலே ஆண் – பெண் காதலுக்குக் கொடுக்கற மரியாதையைக் காட்டிலும், நாம் நம்புற மனச்சுத்தமான ஆண் பெண் நேசத்துக்கு நாம் ரொம்பவும் உண்டனவே முதல் மரியாதை செலுத்துகிறோம். மனசுக்கும் மனசுக்கும் ஊடாலே பிறக்கிற நேசம் பூர்வ ஜென்ம விளையாட்டுக் கணக்குத்தான். இது, கரணம் தப்பினால் மரணம் மாதிரியான விளையாட்டாக்கும்!” என்று பேச்சைத் தொடங்கினாள் காட்டு ரோஜாத்தி தெய்வானை.

“ஆமாம்டி தெவ்விக்குட்டி! நீ ஊர் நாட்டிலே அழகிலே மட்டும் ஒசத்தி இல்லே; புத்திசத்தியிலேயும் நீ ஒசந்த வளாச்சே? நீதான் நமக்குள்ள சிக்கில் தீர ஒரு நல்ல வழியைக் காண்பிக்கோணும்படி”, என்று கெஞ்சிக் கொஞ்சினாள், வள்ளி.

வள்ளி, எம்மச்சான் முத்தையனுக்கு நான் மூணாம் பேருக்குத் தெரியாம ஒரு பரீட்சை வைக்கிறேன். அதிலே அவர் தேறி, இனிமேயாச்சும் அந்த ஆம்பளை திருந்திடு வாரா என்கிறதுக்கு உண்டான துப்புக் கொடுத்தால் சரி; இல்லாட்டி, அந்த ஆளைக் கைகழுவிப்புடுவேனாக்கும்! சரி, உன் கதை காரணத்துக்கு வாரேன். நீ அன்பு பாராட்டுற வேலாயுதத்தைப் பத்தித்தான் அக்கம்பக்கத்திலே இன்னிக்கு வரைக்கும் அடாவடிப் பேச்சு ஒண்ணுமே மூச்சுப் பறியலையே! அந்த மட்டுலும் நீ கொடுத்துவச்ச குட்டி தான். உன் மச்சான் வேலாயுதம் இப்பவும் மனசும் புத்தியும் தடுமாறாம, நல்ல ஆம்பளையாவேதான் இருக்குது என்கிற சங்கதியை நீ புரிஞ்சுக்கிட்டு, நல்ல முடிவு கிடைச்சிட்டால், நீ உன் நேசக்காரன் வேலாயுதத்தை உன்கனாப்படி நீ கண்ணலாம் கட்டிக்கிடலாமே? என்றாள் தெய்வானை.

காதலுக்குத் தேர்வு நடந்தது.

தெய்வானை மோகினி அவதாரம் எடுத்தாள்; முத்தையனைச் சோதித்தாள்.

முத்தையன் நயமாகவே சிரித்தான். தெய்வானைப் புள்ளே! நீ ஆளான மாசி மாசத்திலே. உம்மேலே ஆசை வச்சேன் நான்! ஆனா, நல்லவனான என்னோட கண்ணை விதி நடுவிலே மறைச்சிடுச்சு; எனக்குக் கெட்ட புத்தி வந்துடுச்சு. நான் கெட்டுப்போனது பொய் இல்லே!”ஆனா, இப்ப நான் மிருகம் இல்லே; மனுஷன் ! நல்ல வனாகத் திருந்தியதுக்கு, நீ எம்பேர்லே வச்சிருந்த நம் பிக்கெதான் காரணம்! என்னை மனப்பூர்வமா நீ நம்பலாம்; தெய்வானைக் கண்ணே!” என்று கூறிக் கண்ணீர் வடித்தான்.

தெய்வானை ஆத்தாளை நன்றியோடு நினைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.

அது போலவே –

வள்ளி, தனக்கு உரியதான நேசப்பரீட்சையைத் தன் பங்கிற்காகவும் நடத்தினாள். திரை மறைவில் நின்று ஒரு நாடகத்தைப் போட்டாள்.

“ஏ புள்ளே வள்ளி! நான் நல்லவன். நல்லவன்தான்; குடி, கூத்தி எதுவுமே இப்பிறப்பிலே என்னைக் கெட்ட வனாக ஆக்கிப்புடவே முடியாது!” என்று சவால் விட்டான்; வேலாயுதம்.

வள்ளி ஆனந்தக் கூத்து ஆடினாள்.

தோழிமார்கள் தெய்வானை, வள்ளியின் திருமணங் கள் சேரியிலேயே நிச்சயிக்கப்பட்டன

தெய்வானை – முத்தையன், வள்ளி – வேலாயுதம் கலியாணங்களுக்கான பரிசமும் நடந்து, தேதியும் வைக்கப் பட்ட து.

அந்நேரத்திலே தான், எதிர்பாராத அச்சம்பவம் நடந் தது. சேரியையே உலுக்கிக் குலுக்கிய நடப்பு ஆயிற்றே அது?

விதி யாரை விட்டதாம்?

ஒருநாள், பொன் அந்தி வேளையில், அழகே உரு வான கன்னிப் பூஞ்சிட்டு தெய்வானை அம்மான் கம் மாயில் நீராடி அழகே உருவாகச் செவ்வந்திப் பூப் போலப் புன்னகை செய்த வண்ணம், வண்ணக்கலாப மயில் போல் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவளுக்குப் பின்புறத்திலே ஓடி வந்த வேலாயுதம் போதை வெறியில் அவளைக் கட்டியணைத்துப் பலாத்காரம் செய் யவே, அவனிடமிருந்து தன்னையும் தன் பெண்மையையும் கற்பையும் தற்காத்துக் கொண்டு வீரிட்டாள். அம்மன் சந்நதியிலே நெடுஞ்சாண் கிடையாகப் போய் விழுந்து கதறிக் கதறி அழுதாள் ! கெட்டவன், நல்லவனாக ஆவ தற்கும், நல்லவன் கெட்டவனாக உருமாறுவதற்கும் கைந் நொடிப்பொழுது போதும் போலும்!

“ஆத்தாளே மூத்தவளே! இம்மாம் பெரிய சோதனையை எனக்கு வச்சுப் பூட்டியே! நான் மனசறிஞ்சி ஒரு பாவத் தையம் செஞ்சதில்லையே? – ஆமா; என்னைக் கை நீட்டித் தொட்ட அந்தப் புதுப்பாவி வேலாயுதம் தான் இப்ப கை தொட்டு எனக்குத் தாலிகட்ட வேணுமாக்கும்! இதுக்கு நீயேதான் பொறுப்பு!” என்று விம்மி வெடித்தாள்.

காதலின் பாதை பிரிந்து விட்டதே!

சேதி சேரியெங்கும் காட்டுத் தீ ஆயிற்று.

வள்ளி தீச்சூடுபட்டுத் துடித்தாள். எந்தப் புற்றில் எந்த பாம்பு குடியிருந்ததென்ற ரகசியம் அவளுக்குப் புரிந்திருக்காதா!

வள்ளியைத் தேடி ஓடிவந்தாள் தெய்வானை . “வள்ளி, விதிகிட்டே நாம ரெண்டு பேருமே தோத்துப் போயிட்டோம்! இன்னும், உன் மச்சான் வேலாயுதம் எனக்குப் புருசனாக்கும்!…எம்மச்சான் முத்தயனை நீ மனசு தேறிக் கொண்டு கிட்டு நல்லா இரு!” என்று புலம்பினாள்.

தெய்வானையின் வாக்குதான் முத்தையனுக்கு வேத வாக்கு!

ஆனால், வேலாயுதம் மனித மிருகமாகி, “நானு அந்தத் தெவ்விக் குட்டியைக் கட்டிக்க ஒப்ப மாட்டேன்!” என்று அழும்பு பேசினான்; ‘முரண்டு’ பிடித்தான்!

தெய்வானை வழக்கைச் சேரிப் பஞ்சாயத்திற்குக் கொண்டு வந்தாள். சாம்பான் பூசாரி தீர்ப்புச் சொன்னார் கன்னிகழியாப் பொண்ணு தெய்வானையைத் தொட்ட வேலாயுதம் தான் அவளுக்கு கழுத்திலே மஞ்சள் தாலியைக் கட்டித் தீரவேணும்!’

வேலாயுதத்திற்கு வாழ்க்கைப்பட்டாள் தெய்வானை. “நான் தெவ்விக் குட்டியாக்கும்! புதுசாக் கெட்ட சவகாசத்தினால் குடிக்க பழகியிருக்கிற எம்புட்டு வேலாயுதம் மச்சானை மறுபடி நல்ல புள்ளியாகவே ஆக்கிப்பிடு வேனாக்கும்!” என்று அவள் கண்ட ஆசைக்கனவு அவள் வரை பொய்கனவாகவே ஆகிவிட்டது, பாவம். அவள் அழுதாள்! – அழுது கொண்டேருந்தாள்! – பாவம்!

வள்ளி – முத்தையன் தாம்பத்தியம் ஓச்சம் இல்லாமே நடந்தது.

ஆனால், தெய்வானை – வேலாயுதம் தம்பதியிடையே புயல் விசியது தான் மிச்சம்! – வள்ளியை வேலாயுதத்தால் மறக்க முடியவில்லையாம்! – தீயாக எரிந்த வள்ளியை அவனால் எப்படி அண்டி ஒண்ட முடியும்? ஆகவே அவன், வேலாயுதம், தன் ஆத்திரம் பூராவையும் அபலை தெய்வானையின் பேரில் கொட்டிக் கொட்டி அளந்தான். கொண்டவன் படி அளந்த லட்சணம் இது!

நினைவுப் பூக்கள் சிதறி முடித்தன!

சாம்பான் பூசாரி சுயப்பிரக்கினை ‘ அடையலானார். ‘ஆத்தாளே! நாளைக்கு உனக்குப் பொங்கல் பண்டிகை; எங்க தெவ்விப் பொண்ணுக்கு, ஒன்னோட தெய்வானைக் குட்டிக்கும் சாத்தியமான , நாயமான, தர்மமான ஒரு நல்ல பொங்கல் வைபோகத்தை உண்டாக்கிக் கொடுத்துப்புடு. மூத்தவளே!?- ஈரவிழிகளிலே ஈரம் கசிகிறது; கசிந்து கொண்டேயிருக்கிறது!

4

பூந்தேறலுக்கு மேம்பட்டதாகவும், பூப் போன்ற புலரிப்பொழுது பூவாகவே மணக்கிறது!

ஊராண்டு உலகாளும் திரிசூலி அங்காளம்மன் பூப் போலச் சிரிக்கிறாள்; சிரித்துக் கொண்டே இருக்கிறாள்!

தீபங்கள் எரிந்தன.

பள்ளயம் படைத்த படையலிலே ஊதுவத்தி எரிகிறது.

பறைகள் கொட்டுகின்றன.

கொம்புகள் முழங்குகின்றன.

சேகண்டி ஒலிக்கிறது.

மணி ஓசை மிஞ்சுகிறது.

பூஜை நடக்கிறது.

தீபாராதனை முடிகிறது!

சுற்றிலும் தமிழ் பொங்கற்பண்டிகை கொண்டாட்டம் போட்டது. கும்மி கொட்டியது ; கோலாட்டம் ஆடியது.

கரக ஆட்டம் உச்சாடனம் பெறுகிறது.

மறு கணத்தில் –

எதிர் அணியிலே, அணி வகுத்து அணிசேர்ந்திருந்த கன்னிப் பெண்கள் அத்தனைப் பேரும் வேப்பிலையும் கையுமாக உருவேறி, உருக் கொண்டு, உச்சாடனம் பெறத் தொடங்கினர்! -“ஆத்தாளே” என்ற குரல்கள் ஒலித்தன; எதிரொலித்தன

வேப்பிலைக்காரிக்குச் சிரிக்கத்தானா தெரியாது? – அவரவர்களின் விதிப்படியும் வினைப் பிரசாரமும் வாக் குகளை விதித்திட அவளுக்குத் தெரியாதா, என்ன?

தலைக்குடுமி அவிழ்ந்து விழவும், விபூதி பட்டைகள் மேனிநெடுக்கிலும் துலாம்பரமாய்ப் பளிச்சிடவும் ருத்தி ராட்ச மாலை புரளவும் சிலை என நின்ற சாம்பன் பூசாரி இன்னமும் கூட சிலையாகவே நின்றார். அவர் நீக்கமறச் சுழன்றாள்; சுழல்கிறாள்!…கண்ணீர் துளிகளிலே அவர் சுழல, அவரைச் சூழ்ந்து கண்ணீர்த் துளி களும் சூழல்கின்றன!

“ஆத்தாளே, மூத்தவளே! ஆதி பராசக்தியே! அங்கா ளம்மைத்தாயே! எங்க சேரித்தங்கம் தெய்வானைப் பொண்ணுக்கு நம்மோட தமிழ்ச் சாதிப் பண்புக்கு அணு சரணையான நல்லதொரு பாதையத் திறந்து விட்டுப்புடு; அப்பத்தான் , எங்க தெய்வானைக் குட்டிக்கு அதோட மாங்கல்யம் நல்லதனமாவும். நிரந்தரமாவும் நாயமாவும், சத்தியமாவும் நிலைச்சிருக்க ஏலும்? தெய்வானைப் பொண்ணுக்கு அதோட ஆத்திரத்தையும் கோபத்தையும் கலைச்சு, நல்ல புத்தியைக் கொடு; அப்பத்தான் அவள் நல்வாக்கைப் பாவிமகன் வேலாயுதத்துக்கு – அவளோட மச்சான் வேலாயுதத்துக்கு – அவள் முந்தானை விரிச்ச குடிக்காரப் புருஷன் வேலாயுதத்துக்குத் தாரைவார்க்கவும் முடியுமாக்கும்!”

வெயில் பளிச்சிடுகிறது.

உணர்ச்சி சுழிப்பில் நீந்திச் சுழன்ற பெரியவர் மனம் விட்டுப் பேசி, வாய்விட்டுக் கதறினார்!

கூட்டத்தில் புண்ணிய பூமியின் நல்லமைதி நிலவுகிறது. மனிதர்கள் விம்முகின்றனர்!

5

“ஆத்தா!”

வீரிட்டு அலறிக் கதறிக் கொண்டே , தலைவிரி கோல மாக ஈரம் சொட்டச் சொட்ட ஒரு புனிதமான நியாய வெறியோடு ஓடிவந்தாள் தெய்வானை ; ஓடிவந்தவள், அப்படியே அம்மன் சந்நதியிலே அடித்து விழுந்தாள். விம்மினாள் ; வெடித்தாள் ; வேப்பிலைக்கொத்துக்கள் மாத்திரமல்ல, பூங்கொத்துக்களும் சிந்திச் சிதறுகின்றன!

வள்ளி கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள். உடன் அவள் புருஷன் முத்தையனும் தான் நின்றான்.

“ஆத்தாளே”

மீண்டும் வீறிட்டாள் தெய்வானை.

ஆனால் –

ஆத்தா அங்காளம்மன் இப்பொழுதும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறாள்! சிலையிலே ஜீவனாகிச் சிரித்துக் கொண்டே இருக்கிறாள் ஆத்தா.

உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே, தலையைத் தூக்கி எழுந்தாள் தெய்வானை; நெற்றித் திலகத்தில் ரத்தத்துளிகள் கலந்து கரைத்தன. கன்னங்களின் தழும் புகள் கரையாமல் கரைந்தன.

“ஆத்தாளே! நீதான் வெறும் செம்பாரங் கல்லாகிப் பூட்டியே? அதனரலேதான் நானும் கல்லாகிப் போயிட் டேன் ! ஒனக்குத் தெரியாத கதையா , காரணமா? மறு தக்கமும் நினைப்பூட்டுறேன். கேட்டுக்க ; என்னோட மனசான மனசை தொடுறதுக்கு . லாயக்கு இல்லாமபோன மேலத் தெரு வேலாயுதம் நல்லவனாட்டம் நடிக்க குடி வெறியிலே என்னோட மேனியைத் தொட்டதாலே தான், நான் அந்த ஆம்பளைச் சிங்கத்துக்கு எந்தலையைக் கொடுத்து, அந்த மிருகத்தையும் ஒரு நல்ல மனுசனாக ஆக்கிப்பிடலாம்னு கனாக்கண்டு, அந்தப் புறம்போக்கு ஆளுக்கு வாழ்க்கைப்படவும் துணிஞ்சேன் ஆனா எனக்கு நல்ல தாலிப் பொசிப்பு நல்லபடியாகவும் நல்லதனமாகவும் வாய்க்கலே. வாய்க்கவே இல்லே! ஊர் உலகத்தையெல்லாம் கல்லாக இருந்துக்கிட்டே ஆளுற ஆத்தாளான ஒனக்கு , ஒன்னோட அருமைக்குஞ்சான என் பேரிலே ஈவிரக்கம் ஏற்படாமலேயே பூடுச்சு. எனக்கு மச்சானாகப் புதுப் பெருமையை வலுக்கட்டாயத்தின் பேரிலே சூட்டிக்கிட்ட அந்த வேட்டி கட்டின ஆம்பளைக்கு தன் தப்புப் புரி யாமலே பூடுச்சு. என் அருமையும் விளங்காமல் பூடுச்சு. இதுதான் என்னோட விதின்னு சொல்லுறியாக்கும் ? அப்படின்னா சரி! என் விதியை நான் பார்த்துக்கிடுவேன்! சவால் விட்டு சமாளிச்சுக்குடுவேன். ஆமா, சொல்லிப் புட்டேன். நல்லா கேட்டுக்கிட்டியா, ஆத்தாளே?”

வெறிபிடித்தவளாக ஓடினாள் தெய்வானை.

அம்மன் சந்நிதானத்தைக் குறி வைத்து, வீறு கொண்டு ஓடினாள் தெய்வானை!

பூசாரி சாம்பான் திடுக்கிட்டார்: “தெய்வானைப் பொண்ணே! நில்லு! நில்லு!” என்று ஓலம்பரம்பினார்

தெய்வானை நிற்கவில்லை; நிலைக்கவும் இல்லை.

அம்மன் இப்போதும் சிரித்தாள்; சிரித்துக் கொண்டே இருந்தாள்! “ஆத்தாளே!’

மறுபடியும் ஓலமிட்டாள் தெய்வானை. உள்ளம் அதிரவும், உடல் அதிரவும் கதறினாள். தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு கதறினாள், – மங்கலத்தாலியும் அலறிக் கதறியது! மறு இமைப்பில் ஆத்தாளின் பாதார விந்தங்களில் சரண் அடைந்தாள். திருமாங்கல்யம் புடை சூழ, நித்திய சுமங்கலியாகவே தரிசனம் தந்த ஆத்தாவின் காலடியில் படீர் படீ’ரென்று முட்டிக் கொண்டாள். மோதிக் கொண்டாள்.

பீறிட்டது ரத்தம்.

வீறிட்டது ரத்தம்.

“ஆத்தாடி, தெய்வானைப் பொண்ணே!”

அலறிப் புடைத்துக் கொண்டே பாய்ந்தார் சாம்பான் பூசாரி, தெய்வானையை கையைப் பிடித்துத் தடுத்தார்.

தெய்வானை கேட்டால் தானே? அவள் தெய்வானைதானா? இல்லை….

எல்லைக் காளியாக ஆகி விட்டாளா இந்த தெய்வானை?

ரத்தம் பீறிட்டுக் கொண்டே இருந்தது.

மறுகணம்…

‘ஆத்தாளே, தெவ்விக்குட்டியா” என்று மண்ணும் விண்ணும் முட்ட ஓங்காரமாக ஓலமிட்டவராகத் தெய்வானையின் பாதங்களிலே விழுந்தார் சாம்பான் பூசாரி.

“ஐயையோ — பெரியவுகளே!”

தெய்வானை பதறித் துடித்தவளாகப் பெரியவரின் கைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி விட்டுக் கையெடுத்துக் கும்பிட்டாள். “உதவாக்கரைச் சின்னப் பொண்ணுங்க நான் அய்யா! நீங்க இந்தப் பாவியோட காலிலே விளுந்திட்டீங்களே? இந்தப் பொல்லாப் பாவம் ஆத்தாளுக்குக்கே கூட அடுக்காதுங்களே”, என்று வெடித்தாள். ரத்தத்துளிகள் விழி முனைகளினின்றும் வெட்டிப் பாய்ந்தன.

சாம்பான் சிரித்தார்; வேதனை தாளாமல் சிரித்தார் சிரித்து விட்டு விம்மத் தொடங்கினார்.

“ஐயா…ஐயா! நீங்க அழப்படாதுங்க. நான் ஒருத்தி அழுவுறது போறாதுங்களா.

மூத்தவரின் விழி வெள்ளத்தைத் துடைத்து விடுகிறாள் தெய்வானை.

தெய்வானையின் தங்கக் கரங்களை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டார் பூசாரி. “தெவ்விப் பொண்ணே! நீ எம்புட்டுக் கண்ணீரைத்துச் சடுதியிலே துடைச்சுப்புட்டே! ஆனா, என்னாலே தான் உன் கண்ணீரைத் துடைக்க முடியாமலே போயிடுச்சு! நான் பாவி! நான் முன்னே நின்னு தீர்ப்புச் சொல்லி, அந்தப் படுபாவி மிருகம் வேலாயுதத்துக்கு உன்னைக் கட்ட வச்சேனே? இப்ப, நானும் தானே உன் பாவத்துக்கு ஆளாகிப் புட்டேன், தெய்வானைப் பொண்ணே!” – புலம்பினார்.

தெய்வானை ஏறிட்டு விழித்தாள். திடீரென்று வாய் விட்டுச் சிரித்தாள் ; மறுநொடியில் மீண்டும் செருமத் தொடங்கினாள்.

“ஐயாவே! ஆத்தா கல்லு ; ஆனதாலே, அவளுக்குப் பேசத் தெரியாது; பேசவும் வராது! அதனாலே, நான் இப்ப ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கேன்; அந்த முடிவைச் சொல்லிப்பிடறேன். ஆத்தா கேட்டாலும் சரி, கேட்காமல் போனாலும் சரி; அதைப்பத்தி எனக்கு ரவையத்தனை அக்கறையோ, கவலையோ கிடையவே கிடையாது! நீங்க கேட்டுக்கிடுங்க! கன்னிப் பொண்ணுங்கதான் கண்ணாலம் கட்டிக்கிறதுக்கோசரம் கன்னி விரதம் இருக்கிறது நாட்டிலே வழக்கம். ஆனா. நானும் ராத்திரி முச்சூடும் முழிச்சிருந்து கன்னி நோம்பு இருந்தேன். ஏன், தெரியுங்களா? ஊர் என்ன நினைச்சிருக்குமோ? – தெரியாதுங் நான் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கிறதுக்கத்தான் – இந்தக் குடிகாரப் புருஷன் வேலாயுதத்தோட தாலியை அந்த ஆள் கையிலே கழற்றிக் கொடுத்துப்புட்டு, வேறொரு ஆளைத் தேடிக்கட்டிக்கிடுறதுக்காகத்தான் நான் இப்படி! கன்னி நோம்பு பிடிச்சேன்னுகூட ஊர் நாட்டிலே நாக்கிலே நரம்பில்லாமல் கூட பேசிக்கிட்டிருப்பாங்க! ஆன, நான் கண்ணியமான ரத்தத்துக்குப் பொறந்த பொண்ணாக்கும்! எனக்கும் சூடு , சுரணை, ரோசம், வைராக்கியம் எல்லாம் சாதி சம்பிரதாயம் பார்க்கிற ஒசந்த குடிக்காரங்க மாதிரியே எனக்கும் உண்டுங்க, மூத்தவுகளே! கண்ணாலத்துக்கு முந்தித்தான். நாயப்படி நான் கன்னி விரதம் இருந் திருக்க வேணும். ஆனா, அதுக்கு வாய்க்காமல் பூடுச்சு ; என்னோட கண்ணாலம் திடுதிப்னு நடந்து முடிஞ்சிருக்குதுங் களே? அதாலேதான், அந்த விரதத்தை இப்ப நடத்தினேன். ஏன், தெரியுங்களா? என்னோட கழுத்திலே ஊசலாடிக் கிடக்கிற இந்தத் தாலி எப்பவுமே என் கழுத் திலே, பூவும், மஞ்சளும், பொட்டும் குலுங்க எப்பவுமே ஊஞ்சலாடிக்கிணு கிடக்க வேணும்னு தானுங்க நான் கன்னி நோம்பு இருந்தேன்! ஆனா, ஒண்னுங்க; மிச்சம் மீதம் இருக்கிற என்னோட ஆயுள்கால வாழ்க்கைக்கு இனிமே இந்தத் தாலி மட்டும் தான் எனக்குச் சதம்! இந்தத் தாலி மாத்திரம்தான் இனி எனக்குத் துணை! ஆமா , சொல்லிப்பூட்டேனுங்க, பெரிய ஐயாவே!”

தெய்வானை பேச்சை நிறுத்தினாள். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.

பெரியவர் சாம்பான் வாய் அடைத்துக் கதிகலங்கிய நிலையில் மலைத்து நின்றார், ஆத்தா அங்காளம்மையை ஆற்றாமையோடு பரிதாபமாகப் பார்த்தார். “ஆத்தா, இதுதான் உன்னோட முடிவா, என்ன? நீ காண்பிக்க வேண்டிய நல்ல பாதை இதுவே தானாடி, ஆத்தாளே?” உச்சாடனம் பெற்றவராகக் கூச்சலிட்டார், பூசாரி.

தெய்வானை விழிகளை நெற்றிக்கு உயர்த்தினாள். நெற்றிக் கண்ணைத் திறக்கப் போகிறாளா ?

“ஐயாவே! ஆத்தா நல்ல புண்ணியவதி! நான் செஞ்ச பாவத்துக்கு அவளை – ஆத்தாளை ஏசப்புடாதுங்க: அது தர்மமும் ஆகாதுங்க!” கெஞ்சுகிறாள் தெய்வானை.

பூஜாரி சாம்பான் சிலையானார்.

வள்ளி தவித்தாள்.

வள்ளியின் அன்பு மச்சான் முத்தையன் திகைத்தான்.

சேரி மக்கள் ஏங்கினர்.

அடுத்த நொடியிலே –

“எந்தெய்வமே!”

அலறிப் புடைத்துக் கதறித் துடித்தவனாக, ‘சடுகுடு’ ஓட்டமாக ஓடிவந்த வேலாயுதம். அப்படியே ஆத்தா . மூத்தவள் அங்காளம்மையின் காலடியிலே அடித்து வீழ்ந் தான். எழுந்தான். பின்பு, எந்தேவதையே! தெய்வித் தங்கமே” என்று ஓலம்பரப்பிக் கூப்பாடு போட்டவாறு, தெய்வானையின் பாதங்களிலே அடைக்கலம் அடைந்தான்

தெய்வானை காட்டேரி ஆகிவிட்டாளா? காலடியிலே கிடந்த வேலாயுதத்தை – தாலி கட்டி மச்சான் ஆன வேலாயுதத்தை எட்டித் தள்ளிவிட்டாள், அவள்.

வேலாயுதம் தரை மீனாகத் துடித்தான். மேனியில் ஒட்டிக்கிடந்த மணலைத் தட்டக்கூட நினைவிழந்து எழுந்தான். அவனுடைய முகத்தில் பதித்துக் கிடந்த நகக்கீறல்களின் தழும்புகளும் இப்போது கதிர்களின் ஒளி வீச்சில் பளிச்சிடுகின்றனவே!

தெய்வானை ஓங்காரச் சிரிப்பைக் கக்கத் தொடங்கினாள்.

“தெவ்விப்புள்ளே!”

விம்மினான் வேலாயுதம்.

“சீ!…. இன்னொரு கடுத்தம் என்னைப் பேர் சொல்லி அழைக்காதே! நீ மிருகம்!”

“நான் இப்ப மிருகம் இல்லே, தெய்வானை! நான் இப்ப மனுசனாத் திருந்திப் பூட்டேன் புள்ளே”

மறுதக்கமும் நாடகமா ஆடுறே நீ? உம்புட்டுக்கூத்தும், சம்பமும் சவடாலும் இனிமே எங்கிட்டே ஒருக்காலும் பலிக்காது; பலிக்கவே பலிக்காது!…மிருகமான ஒன்னை மனுசனாக மாத்த நான் திரிக்ரண சுத்தியோட பாடு பட்டதுக்காக, நீ என்னைச் செத்த சாரைப்பாம்பை அடிக்கிறதாட்டம் அடுச்சு நொறுக்கிப் போட்டியே? – அதை நான் மறந்தாலும், என்னோட கன்னத் தழும்புங்க மறக்கவே மறக்காதே? . ஐயையோ, பாவி நீ! பாழாய்ப் போன மிருகம் நீ!”

தெய்வானை, கட்டுமீறின வெஞ்சினத்தைத் தாள மாட்டாமல் பற்களை நறநற வென்று. கடித்துக் கொண்டாள். பற்களுக்கு இடையிலே நசுங்கின ஆத்திரம் பேய்ச் சிரிப்பாக மாறியது.

வேலாயுதம் உயிர்க்குலை நடுங்கத் துடிதுடிக்கலானான் “ஏ, புள்ளே! நான் இனிமே ஒருநாளும் மிருகமாக ஆகிப் புடவே மாட்டேன்! என்னை நம்பு. தெவ்வி, நம்பு!” தொண்டை அடைக்கச் செருமினான், ஆண்பிள்ளைச் சிங்கம்.

பாய்ந்து வந்த தெய்வானை, முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்க வேலாயுதத்தின் சட்டையைப் பற்றியவளாக, “நீ இனிமே மிருகமாக ஆக மாட்டேங்கிறதுக்கு நான் மன சொப்பி நம்புறதுக்கு என்னா சாட்சி வச்சிருக்கியாம்?” என்று கேட்டாள்.

விதிக்குக் கேள்வியையும் கேட்கத் தெரியுமோ ;

வேலாயுதம் விழித்தான்; ஆடு திருடிய கள்ளனாக விழித்தான்!

தெய்வானை தீப்பொறி பறந்திட, விழிகளை ஏறிட்டு உருட்டினாள்.

“நீ எப்பவுமே வெறும் மிருகந்தானாக்கும்! இப்பைக்கு என்னமோ துளியத்தனை மனுசத்தனம் சிலுப்பிக்கிட்டு உம்மனசிலே எழும்பியிருக்குது. அதனாலேதான் நீ இனிமே மிருகமாக ஆகமாட்டேன்னு வாயடி அடிக்கிறே! ஆனாலும் உம் பேச்சை நம்புறதுக்கு உண்டான ஆதாரத்தை உன்னாலே எனக்கு மெய்ப்பிச்சுக் காட்ட முடியல்லே!” போன சனிச் சந்தைக் கெடுவிலே நீ நூறாவது வாட்டி குடிச்சுப் புட்டு என்னை நதக்கிப் போட்டே ; நானும் தொண்ணூத்து ஒம்பது தரம் பொறுமையா இருந்துப்புட்டு , நூறாவது வாட்டியிலே பத்ரகாளி ஆகி, உன்னை – எனக்கு மஞ்சள் தாலி பூட்டின உன்னைப் பதிலுக்குக் கைநீட்டியும் அடிச் சிப் போட்டுப் பூட்டேன். அப்பவும் ஒனக்கு சூடு சுரணை உறுத்தல்லே! – இப்ப, நொடிக்கு நூறு தடவை நீ , நீ’ன்னு உன்னை , கொண்ட புருசனான உன்னை ஏச்சுப் பேச்சுமா அழைக்கிறதையும், நல்ல பிள்ளை கணக்கிலே கேட்டுக் கிட்டு , ரோசப்படாம குத்துக்கல்லாட்டம் நிற்கிறீயே! – நீயெல்லாம் நாளைக்குப் பொழுது விடிஞ்சப்புமே, மறு படியும் வேதாளம் முருங்கைப் போத்திலே மறுபடி ஏறின தாட்டம் மிருகமாக ஆகமாட்டே என்கிறது என்னா நிச் சயம்? நான் உன்னை ரத்துப் பண்ணி ஒதுக்கி வச்சுப் பூட்டு, வேறொருத்தனுக்கு வாழ்க்கைப்படப் போறதாக ஊர் நாட்டிலே கிளம்பின வதந்தியைக் கேட்டுக்கிட்டு அந்த அவமானத்தைத் தாங்க மாட்டாமே, இப்ப ஏங் காலடியிலே தண்டம் போட குடுகுடுன்னு ஓடியாந்து, சும்மா கூத்து காட்டி நல்லவன் மாதிரி நடிக்சுப் பாவனை பண்ணுறே! ஆமா; நான் பொய் பேசவே மாட்டேன். ஒன்னை மாதிரி! ஆமா!”

தெய்வானைக்குக் கோபவேசம் தூள் மறந்தது; அவள் கண்களிலே ஈரம் கட்டித் தீயை உமிழ்ந்த ஆத்திரம் லவ லேசமும் குறையவில்லையே? மேல் மூச்சு. கீழ் மூச்சு வாங்கவே, சற்றே ஓய்ந்தாள்.

சுடுநீர் சிலிர்த்திட அப்படியே கதிகலங்கி – பொறி கலங்கி நின்ற வேலாயுதம், சீண்டி விடப்பட்ட கட்டு விரியனாகப் பொறுமை இழந்து எழுந்து தலையை நிமிர்த்தியவனாக அவளை – தெய்வானையை – அவன் தாலி கட்டின அழகுப் பதுமை தெய்வானையை நெருங்கினான். நேருக்கு நேராக அவள் எதிரிலே வந்து நின்றான். கண்களை மறைத்த சுடுநீரைக் கைவிரல்களால் வழித்துவிட்டுக் கொண்டே அவளை விழுங்கி விடுபவனைப் போல ஏறிட்டு ஊடுருவினான். அவன் முகம் ஏன் அப்படி மாறி வருகிறது? – ‘தெய்வப்புள்ளே! இனிமே என்னை ஏசிப் பேசறதுக்கு ஒனக்கு வாய் வார்த்தை தட்டுப்படலையங் காட்டி? அதாலேதான் உன்னோட வாய் ஓய்ஞ்சிருக்கா?’ பேசியவன், பேச்சை நிறுத்தி விட்டு, மூச்சையும் நிறுத்தி விடாமல் மீண்டும் அவளைக் கோபம் கொந்தளிக்க நோக்கினான்.

பூசாரி சாம்பன் தவித்தார். ‘ஆத்தாளே! வெள்ளம் தலைக்கு மேலே போயிடாமல், ஒரு நல்ல திருப்பத்தைத் தந்திடு!’

வள்ளி என்ன நடக்கப் போகிறதோ , ஏது நடக்கப் போகிறதோ என்கிற துப்புப் புரியாமல் கிலேசம் கொண்டு தடுமாறினாள். ‘ஊர் நாட்டிலே இருக்கிற நாலுபேர் மாதிரி நல்ல புள்ளியாகத்தானே வேலாயுதம் மச்சான்காரரும் இருந்துச்சு? என்னமோ போதாத காலம் ஏழரைச் சனி பிடிச்சுக்கிணு ஆட்டிப்படைச்சி, இப்ப அலங்கோலம் ஆகிப்புடுச்சு, பாவம் ! – இல்லாட்டி அந்த நாளையிலே எம்பேரிலே கொண்டிருந்த மசக்கத்தை மறக்காமலும், என்னையும் மறந்திடாமலும், என்னையே சுத்திச் சுத்தி வந்து தன்னோட அருமைப் பொஞ்சாதி தெய்வானைப் பொண்ணை ஏமாற்றம் தாளாமல் சதா அடிச்சு நொறுக்கிக்கிட்டே நேத்து வரைக்கும் கூட, பித்துப் புடிச்சு அலைஞ்சு திரிஞ்சுக்கிட்டு இருந்திருக்குமா?’ நெஞ்சின் ஈரத்திலே சிலிர்த்தவளாகி, நிலைகுலைந்தாள்.

வள்ளியின் நேசமச்சான் முத்தையன் தீயை மிதித்த பாங்கிலே. துடித்தான். கட்டின பொண்டாட்டிக்கு உடம்பாலேயும் உள்ளத்தாலேயும் துரோகம் நினைக்கிறது பாவத்திலேயும் பாவம் பெரும் பாவமாக்கும்னு நானும் எம்புட்டு வள்ளியும் இந்த ஆள் வேலாயதத்துக்கு ஒரு நல்ல பாடத்தைப் புடிச்சுக் கொடுத்ததாலே, இந்த மனுசன் என்னமோ மனசு திருந்தி நல்ல புள்ளியா மாறி இப்ப வந்திருக்கான்! பாவம், வேலாயுதம் ! இவனுக்கு இம்மாங் கொத்த சோதிப்பு ஏற்பட்டிருக்கப் புடாதுதான்!’ – நல்ல வழியைக் காட்டும்படி அங்காளம்மையை வேண்டிக் கொள்கிறான்.

செங்கதிர்கள் சூடேறின.

மனிதச்சபை மௌனம் காத்தது!

வைத்த விழி வாங்காமலே, அழகுத் தெய்வானையை – தன்னுடைய அருமைப் பொண்டாட்டி தெய்வானையை இன்னமும் பார்த்துக் கொண்கட நின்றான் வேலாயுதம்.

தெய்வானையா, கொக்கா? – அவளும் வேலாயுதத்தை தான் முந்தானை விரித்த தன்னுடைய அருமை மச்சான் வேலாயுதத்தை முறைத்தும் விறைத்தும் பார்த்துக் கொண்டே நின்றாள்!

சேரி நாய் ஊளையிடத் தொடங்கியது. பற்களை ‘நற நற’ வென்று கடித்த வேலாயுதம், “ஏ தெவ்விப் பொண்ணே!” என்று விளித்து விட்டு, உலர்ந்து கிடந்த உதடுகளை நாக்கை நீட்டி ஈரப்படுத்திக் கொண்டே வாய் திறந்தான்.

“ஏலே, தெய்விப்புள்ளே !….. பொல்லாத இந்த மண்ணையும் பாழாய்ப்போன இந்த மண் வாழ்க்கையையும் என்னை விடவும் ரொம்ப நல்லாத் துப்பு கண்டு புரிஞ்சிக் கிட்ட சொக்கப்பச்சை நீ என்கிற துப்பு எனக்கும் புரிஞ்சிது. அதாலேதான் நீ உனக்கு மஞ்சள் தாலி பூட்டின என்னை உதறிப் போட்டு புட்டு, அந்நியம் அசலார் வேறே ஒருத்தனை நீ மறு கண்ணாலம் கட்டிக்கிடத் துணிஞ்சிட்டேன்னு சேரி முச்சூடும் தமுக்குக் கொட்டி பேசிக்கிட்ட பொல்லாப் பேச்சு எம்மானம் மரியாதையைச் சோதிக்க, அந்தக் கேடு கெட்ட அவமானத்தை பொறுக்க மாட்டாமல் ஓட்டமா ஓடியாந்து இப்ப உம் முன்னே நிக்கறதும் மெய்தான். ஆனாலும் அதே நோத்திலே உன்னோட வாய்ப் பேச்சையும் நான் கேட்டுக்கிடவும் வாய்ச்சிடுச்சு. இந்த தாலி மட்டுந்தான் இனிமே எனக்குச் சதம். எனக்குத் துணை. அப்படின்னு நீ கொஞ்ச முந்தி நெஞ்சை ஒளிச்ச வஞ்சனை இல்லாம நீ பேசின சத்தியம் என்னையும் ஒரு மனுசனாகவே மாத்த, அந்த நம்பிக்கை யிலேயும் தைரியத்திலேயும் தான் நான் உன்னைத்தேடி இப்ப ஆத்தா சந்நிதியிலேயே ஓடியாந்து நிற்கிறேன் என்கிறது தான் மெய்தானாக்கும். ஆனாலும் இம்மாம் பெரிய கூட்டத்துக்கு நடுவிலேயும் நீ என்னையோ எம் பேச்சையோ நம்ப மறுத்து, மிருகமாக இருந்த நான் மனுசனாக மாறினதுக்கு உண்டான சாட்சியையும், அதுக்கு உண்டான ஆதாரத்தையும் நீ கேட்கிறே! நீ மனப்பூர்வமா நம்பிக்கிட்டு இருக்கிற உம்புட்டு நெஞ்சு தாலிக்கே ஒரு அருத்தத்தை கொடுத்துக்கிட்டு இருக்கிற நான் மெய்யாலுமே நல்ல புத்தியை மீட்டுக்கிட்ட ஒரு அசலான மனுசனேதான் என்கிற சத்தியத்துக்கு உண்டான சாட்சியை மெய்ப்பிச்சு காட்டினாத்தான், நீ எனக்கு மாப்புத் தருவியா ? அப்படின்னா சரி; இப்பவே நான் சத்தியமாவே ஒரு நல்ல புள்ளிதான் என்கிற சாத்தி யத்தை மெய்ப்பிச்சிக் காட்டுகிறேன்!

வேலாயுதம் தட்டித் தடுமாறியவனாகப் பேச்சை முடிக்கமாட்டாமல், சடக்கென்று நிறுத்தினான்!

அதற்குள் –

“ஐயையோ, தெய்வமே!…. நான் நம்பி மதிக்கிற எம்புட்டு நெஞ்சுத் தாலிக்கு புண்ணியமான – சுத்தமான ஒரு அர்த்தத்தைக் குடுக்கிற என்னோட பூவும் பொட்டும் மஞ்சளும் கலைஞ்சிப்புடுறதுக்குள்ளாறவே, நீ உங்கிட்டே அழைச்சிக்கிடுடி, ஆத்தாளே!’

அலறிக் கதறினாள் தெய்வானை, மறு இமைப்பில், அவள் – தெய்வானை மண்ணிலே வேர் அறுந்த சந்தன மரமாகச் சாய்ந்து விட்டாள் ! வாயில் நுரை கக்கியது. அவள் தலைமாட்டிலே, சிவப்புக் குன்றிமணிகள் சிதறிக் கிடக்கின்றன. இப்போது !

அதே நேரத்தில்:

“ஐயோ, எந்தெய்வமே ! சத்தியமாகவும் தருமமாவும் மெய்யாலுமே ஒரு மனுசனாகத் திருந்திப் பூட்ட என்னை ஒரு மனுசனாகவே நம்பியும் மதிச்சும் ஏத்துக்கிடாமலே, நீ இப்படி என்னையும் முந்திக்கிணு மண்ணிலே சாஞ்சுப் பூடுவேன்னு நான் சொப்பனத்திலே கூட நினைக்கலையே? ஐயோ, எந்தெய்வமே ! எந் தெய்விப்புள்ளே!”

வேலாயுதம் ஓலம் பரப்பியவனாகத் தரையிலே வீழ்ந் தான் – அவன் காலடியிலும் அதே சிவப்புக் குன்றுமணி கள் சிந்திச் சிதறின! வாயில் பீறிட்ட நுரைத்துளிகளும் சிந்தின; சிதறின.

‘ஆத்தாளே ! என்னா புதுசான சோதனை இது!”

சாம்பான் பூசாரி கூக்குரல் எழுப்பினார்.

வள்ளியும் முத்தையனும் ஜோடி சேர்ந்து அலறினார்கள்; கதறினார்கள்.

நாய்க்கூட்டம் ஊளையிட்டது. மனிதக் கூட்டம் தவித்தது.

வேலாயுதத்தின் நெஞ்சைத் தடவிக் கொடுக்கிறாள் வள்ளி .

தெய்வானையின் நெற்றியில் தடவி விடுகிறான் முத்தையன்.

ஆத்தா அங்காளம்மை இப்பொழுதும் சிரிக்கிறாள்! சிரித்துக் கொண்டிருக்கிறாள்!

6

சத்தியத்தின் தரிசனமாகவே. செங்கதிர்கள் மின்னிப் பளிச்சிட்டன, இப்போது.

நாட்டு வைத்தியர் நல்லதம்பிச் சேர்வை நயமாகவும், விநயமாகவும் புன்ைைக செய்கிறார். “ஆத்தாளே, மூத்தவளே! புருஷனும் பொஞ்சாதியுமான வேலாயுதம் – தெய்வானை ஜோடியோட கண்ணுகளை திறந்துவிட்டுப்புடு ஆத்தாளே, மூத்தவளே!” என்று விம்மி வெடித்த வண்ணம், உலகத்தாயின் சந்நிதியை நோக்கி கரங்களைக் குவித்தார். கணங்கள், தெய்வக்கணங்களாகவே ஊர்கின்றன.

தெய்வானை கண் திறந்தாள்.

வேலாயுதத்தின் கண்கள் திறந்தன.

சுடு வெள்ளத்திரை விரித்த கண்களிலே தாலியை – மஞ்சள் தாலியை ஒற்றிக் கொண்டே விம்மினாள். “நேசமச்சாக்காரவுகளே! எனக்கு மாப்பு கொடுத்துச் சமிச்சுப்புடுங்க. எம்புட்டு தாலியையும் பூ- மஞ்சள் – பொட்டையும் உயிர் கழுவிலே ஊசலாடி செஞ்சுசோதிச்சு அந்த சோதனையையே சாட்சி வச்சி நீங்க மெய்யாலுமே மனுஷன் தான் என்கின்ற சத்தியத் தருமத்துக்குச் சாட்சி சொல்லிப்பட்ட நீங்க மெய்யாலுமே எனக்குத் தெய்வம் ஆகிப்பூட்டீங்க, ஆசை மச்சானே?” வீரத் தமிழச்சியாகச் செருமுகிறாள் தெய்வானை. அன்பு மச்சானை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்!

வேலாயுதம் ஆனந்தப் பரவசத்திலே மெய்மறந்து அழுகிறான். அருமை பெருமையான தெய்விப்புள்ளே! நான் எப்பவுமே நன்றிக் கொண்ட மனுசனாகவே இருந்துப் புடறேன் மிருகமா இருந்தவனை மனுசனாக மாத்தின நீ தெய்வமாக ஆத்தாளாக எனக்கு ஆத்தாளாக இருக்க வேண்டியது தான் நாயம்! அதாலே தான், இங்கே ஒரு ராமனும் தீக்குளிச்சுட்டேன் ஆனாலும் நான்…

தெய்வானை நீங்க என் வரையிலே எப்பவுமே ராமர் தான் என்றும் விம்முகிறாள்.

மனிதர்கள் மகிழ்கிறார்கள்.

சாம்பான் பூசாரி ஆனந்தக்கூத்து ஆடுகிறார். ஆத்தாளே அங்காளம்மை! இந்த வேலாயுதம் தெய்வானையை ஜோடி பிரியாமல் ஜோடி சேர்த்து வச்சு. என்னோட நல்ல கவுரவத்தை நல்லபடியாவே கட்டிக் காப்பாத்தி தந்திட்ட மகராசி நீ ஆச்சே, ஆத்தாளே! விம்மினார் பெரியவர்.

விதிக்கும் விதியான உலகாளும் தாய் அங்காளம்மன் இப்போதும் சிரிக்கிறாள், சிரிக்கிறாள் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்!

(முற்றும்)

– இங்கே, ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்!, முதற் பதிப்பு: டிசம்பர் 1991, துரை இராமு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *