கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 10,259 
 

ஷிவானி இப்படியொரு கள்ளத்தனத்தை தனக்குள்ளே பதுக்கி வைத்திருப்பாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் எங்கள் வீட்டுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் என்னிடம் உரையாடுவதைக் காட்டிலும் அப்பாவுடன் சிரித்து பேசி அரட்டையடிக்கின்ற பொழுதுகள் தான் மிக நீண்டதாக இருக்கும்.

சில நாட்கள் கல்லூரி விட்டதும் என்னுடனே வருவாள். விடுமுறை நாட்களிலும் வருவாள். நான் இல்லாத நேரங்களிலும் அவள் அடிக்கடி வந்து போயிருக்கிறாள் என்பது பின்னாளில் எனக்கு தெரியவந்தது.

அவளுடன் பேசுகின்ற தருணங்களில் அப்பாவின் முகம் பிரகாசமடைவதை நான் கவனித்து இருக்கிறேன். முக்கியமான மீட்டிங்க் என்று அவர் அவசரமாக புறப்படும் போது ஷிவானி வந்து விட்டால் அந்த மீட்டிங்க் ரத்தாகிப் போகும். இதுவரை நேரமாகி விட்டது என்று பறந்து கொண்டிருந்த மனுஷன் தனக்கு எந்தவித வேலையும் இல்லை என்கிற மாதிரி மிக சாந்தமாக அவளுடன் பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் காணும் போது அதிசயமடையவே தோன்றும்.

இரவு உணவின் போது பல முறை அவள் எங்களுடன் இருந்திருக்கிறாள். அவளுக்கு என்னென்ன பதார்த்தங்கள் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு மனப்பாடம். வேலைக்காரம்மா எமிலிக்கு முன்னதாகவே அவற்றை அள்ளி ஷிவானியின் தட்டில் நிரப்புவார். அவள் வேண்டாம் என்று மறுத்தவாறே ஒரு கை பார்ப்பாள்.

சாப்பிட்ட பிறகும் அவர்களுடைய சம்பாஷனைகள் தொடரும். அதன் பிறகு தன்னுடைய காரிலேயே அவளை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வருவார். அவர்களின் நெருக்கத்தைப் பார்க்கும் போது எனக்கு எந்தவித தப்பான கண்ணோட்டமும் உண்டானதில்லை. என் அப்பாவை எந்தளவுக்கு நான் தெரிந்து வைத்திருந்தேனோ அது போல ஷிவானியைப் பற்றியும் நன்கு புரிந்து கொண்டிருந்தேன்.

கல்லூரியில் அவள் நெருப்பாக இருந்தாள். தேவையின்றி எந்த ஆண்மகனுடனும் ஒருபோதும் பேசியதில்லை. செக்ஸியாக சில தோழிகள் கிண்டலடிக்கும் போது அவள் அங்கிருந்து நகர்ந்து விடுவதை பார்த்திருக்கிறேன்.

லிசி என்கிற தோழி உங்கப்பாவுடன் போனில் இவள் கடலைப் போடுகிறாள் என்று சொன்னப்போது ஆத்திரப்பட்டு அவளை அறைந்திருக்கிறேன். ஆனால் எனது நம்பிக்கை பொய்யான போது அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை.

ஒரு முறை புத்தகங்களோடு செல்பேசியை வைத்து விட்டு ஷிவானி கழிவறைக்கு சென்ற நெரம் அவளது போன் அலறியது. அதை எடுத்து பார்த்த போது அதில் அப்பாவின் நம்பரைக் கண்டதும் துவண்டுப் போனேன். திரும்பி வந்தவள் போனில் வந்த அழைப்பை கவனித்து விட்டு தனியே சென்று உவகையுடன் பேசியதும் முத்தங்களைப் பறிமாறிக் கொண்டதும் முகம் சுளிக்க வைத்தது.

விளக்க முடியாத உணர்ச்சிகளால் பின்னப்பட்டு இருதயத் துடிப்பு தாறுமாறானது. அவளுடன் இணைந்து நடந்த போது இரண்டடி இடைவெளியை மனசு விரும்பியது. வரும் நாட்களில் என்னுடைய விலகல் அவளுக்கு உறைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அவளுடைய சிந்தனைகள் தந்தையைச்சுற்றியே வட்டமிட்டிருந்ததால் வெளியில் நிகழ்வதை கவனிக்க மறந்து விட்டிருந்தாள் போலும்.

நிலமையின் தீவிரத்தைக் கண்டு குழப்பத்தில் மிதப்பதைத் தவிர வேறு வழியொன்றும் எனக்கு தென்படவில்லை. அப்பா ஒரு அப்பாவாக மட்டுமல்லாமல் அம்மாவாகவும் இருந்திருக்கிறார். அம்மாவின் பிம்பம் தூசிப்படிந்த ஒரு சித்திரமாகவே பிரக்ஷையில் நெளிகிறது.

என் விபரம் தெரிந்த வயதில் நோயில் பறந்து போன அந்த ஆத்மாவை எப்பொழுதாவது நினைத்துப் பார்ப்பேன். அவளில்லாத குறையை நினைத்து நான் வருந்தியதோ கண்ணீர் விட்டதோ இல்லை. தேவையுணர்ந்து வாரி வழங்கும் வள்ளளாக தகப்பன் இருக்கும் போது அறுந்து விட்ட உறவை நினைத்து அழுதிடத் தோணுமோ.

இப்பொழுது பொத்தி வைத்த பாசத்தில் பங்கு போட ஒருத்தி துடிக்கிறாள். இது எதுவரை செல்லும் என்று புரிந்து கொள்ள முடியாமல் புலன்கள் பேயாட்டம் போடுகின்றன. அறிவுரை சொல்ல எவரேனும் இருக்கிறார்களா என ஆழ்ந்து யோசித்த போது எட்வின் அங்கிளின் முகம் நினைவுக்கு வந்தது. அவர் அப்பாவின் ஆத்ம சினேகிதர். என் மீது அளவில்லாத பிரியம் கொண்டவர். ஸ்வீட்டி ஸ்வீட்டி என்று அவர் அழைக்கும் போது அக்குரலில் தேன் வழிவதைப் போல அன்பு தழும்பும்.

தாமதிக்காமல் உடனே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு நாலாவது தெருவில் இருக்கும் அவரது இல்லத்து சென்றேன். அவர்,மகன்,மருமகள் என்று இனிய குடும்பம் அது. அப்பொழுது வீட்டில் எல்லோரும் இருந்தார்கள். நேசத்துடன் வரவேற்று உபசரிக்கவும் செய்தார்கள்.

அங்கிளிடம் தனிமையில் பேசவேண்டும் என்று எப்படி சொல்வது … மணித்துளிகள் கரைந்தன. என் முகக் குறிப்பை உள்வாங்கிக் கொண்டு அவர் அறைக்கு அழைத்து போனார். சொல்லிக் கொள்ளாமல் சடாரென வெளிப்பட்டு விட்டது என் கண்ணிர் துளிகள் அக்கணத்தில் பதட்டம் பீடித்தவராக என்னருகே வந்து என்னம்மா ஆச்சு என்று பரிவோடு விசாரித்தார். நான் பார்த்திடாத அவர் மனசு கசிந்துருகி துயரத்தின் விளிம்பு நிலைக்கு வந்து விட்டுருந்ததை அவரது விழிகளின் மூலம் அடையாளம் காணமுடிந்தது.

என் தந்தைக்கும் ஷிவானிக்கும் இடையில் நிலவி வருகின்ற விசித்திரமான உறவைப் பற்றிய கதையை விரிவாக அவரிடம் எடுத்துரைத்தேன். அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவரின் முகத்தில் மெல்ல மெல்ல சுருக்கங்களும் கோடுகளுமாக நெளிந்தோடின. நம்பமுடியாத பார்வையோடு என்னை தீவிரமாக நோக்கியவர் என்னில் குடிக்கொண்டிருக்கும் பெரும் சோகத்தின் சாயலில் தாக்குண்டு நிலை தடுமாறி சரிந்து இருக்கையில் உட்கார்ந்தார்.

சடசடவென்று மழையாகக் கொட்டிகிற அவரது பேச்சின் தோரணை இப்பொழுது அடைங்கிப் போயிருக்க என்னை எவ்விதம் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அவர் திண்டாடுகிறார் என்று விளங்கியது.

நீண்ட மௌனத்திலிருந்து விடுப்பட்டவர் லேசாக புன்னனைக்கவும் செய்தார். கவலைப் படாம போம்மா…ஸ்வீட்டி நா வந்து உங்கப்பன பார்கிறேன்… எல்லாம் சரியாகிவிடும் என்று என் தோள்தட்டி சொல்லிவிட்டு எனக்கு விடை கொடுத்தார்.

அன்கிள் எப்பொழுது வருவார் என்ற எனது தவிப்பை அதிகப்படுத்தி விடாமல் அன்றிரவு எட்டு மணி வாக்கில் அவர் என் தந்தையை வந்து சந்தித்தார். நண்பர்கள் இருவரும் தனியறையில் நிறைய நேரம் செலவிடார்கள். எட்வீன் அங்கிள் திரும்பி வந்த போது அவர் முகத்திலிருந்து வெளிப்பட்ட உண்ர்ச்சிகளை என்னால் அவதானிக்க முடியாமல் போனது.

ஸ்வீட்டி… பொறுமையாக இரு என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் கிளம்பி போய்விட்டார்.

அதன் பிறகு அப்பா அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அப்படி வந்திருந்தாலும் அவரை எதிர்க் கொள்ளும் திராணியை நான் முழுமையாக இழந்து விட்டிருந்தேன். காத்திருந்ததினால் உண்டான அச்சத்தை உதறித்தள்ளி விட முடியாமல் என்னறைக்கு சென்று படுக்கையில் விழுந்து என்னை சுருட்டிக் கொண்டேன்.

அடுத்து ஒரு வாரம் ஷிவானி எங்கள் வீட்டுக்கு வரவில்லை. கல்லூரியிலும் அவள் என்னுடன் சகஜமாக பேசவில்லை. பிரச்சனைத் தீர்ந்தது இனி என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்திருந்த சமயம் ஒரு நாள் மாலையில் அப்பாவின் கார் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அப்பாவும் ஷிவானியும் ஜோடியாக கீழிறங்கினார்கள். ஷிவானி மெருன் கலரில் பட்டுப் புடவைக் கட்டியிருந்தாள். அப்பா புல் சூட்டில் இருந்தார்.

கார் டிரைவர் காரின் பின் ஸீட்டில் இருந்து கனமான இரண்டு ரோஜா மாலைகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு பின்னே வருவதைப் பார்த்ததும் எனக்கு விசயம் விளங்கி விட்டது. அப்பா என்னை பார்த்ததும் பார்க்காதது மாதிரி உள்ளே போய்விட்டார். ஷிவானியின் பார்வை என்னை ஆழமாகத் தைத்தது. அதில் அவள் என்னை வென்று விட்ட பெருமிதமும் கர்வமும் அடைங்கியிருந்தது.

இப்படியொரு பேரீடியை தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தளர்ந்து போனேன். என்னறைக்கு செல்கின்ற வழியில் ஹாலில் மாட்டியிருந்த அம்மாவின் படத்தை முதன் முறையாக வேதனையோடு ஏறிட்டுப் பார்த்தேன். ஓங்கி குரலெடுத்து அழ வேண்டும் போலிருந்தது. அரூபமாக தோன்றும் அத்தாயின் மடியில் விழுந்து புரளவேண்டும் என மனசு பதைபதைத்தது. இனி வரும் நாட்கள் உனக்கு நரகம்தானென ஏதோவொரு அசிரிரீ எக்காளமிடுவது போல் இருந்தது.

மறு நாள் முதற் கொண்டு கல்லூரிக்கு முழுக்கு போட்டு விட்டு ஒரு எஜமானியாக ஷிவானி வீட்டில் வளைய வந்தாள். அவளுக்காக பிரத்யேகமாக தருவிக்கப் பட்ட புத்தம் புதிய விலையுயர்ந்த காரில் ஏறி ஊரை சுற்றினாள். தானொரு கோடீஸ்வரி என்ற தோற்றத்தை அவள் வெகு சுலபமாக வரவழைத்துக் கொண்டிருந்தாள். இதற்குத் தான் ஆசைப்பட்டாளோ என்ற சந்தேகம் எனக்குள் வலுத்தது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஷிவானியின் பிறந்த நாள் வந்தது. அப்பா அளவிடமுடியாத பெரும் மகிழ்சியில் திளைத்துப் போயிருந்தார். நம்முடைய திருமணத்தை இரகசியமாக முடித்துக் கொண்டோம். அந்த குறையை நிவர்த்தி செய்திட இப்பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவர் ஷிவானியிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேரிட்டது.

பிறந்த நாளின் போது எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டிருந்தது. நகரத்தில் இருக்கின்ற பெரிய மனிதர்கள் எல்லோரும் வருகைத் தந்திருந்தார்கள். இந்த நேரத்தில் எனக்குள்ளிருந்து ஷிவானியை ஒதுக்கி வைத்திருப்பதை என் மனம் ஏனோ விரும்பிடவில்லை. அவளுக்கு வாழ்த்து சொல்வதே நட்புக்கான மரியாதையென அது மேலும் மேலும் உணர்த்தியவாறு இருந்தது,

ஆகவே அவளுக்கு பிடித்தமான கவிஞரின் சில தொகுப்புகளை வாங்கி பார்சல் செய்து எடுத்து சென்று அவளிடம் கொடுத்தேன். அவளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அடி கள்ளி… இப்ப நீ ரொம்ப அழகா இருக்கடி என்று என்னை மறந்து அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளி விட்டேன்.

அப்பாவின் முகம் சிறுத்துப் போனது. ஷிவானி உன்னோட பிரண்டா இருக்கலாம், அதற்காக இப்படி நடந்திக்கிறது அநாகரீகம்… காட்டுமிராண்டித்தனம். அவர் விரல் நீட்டி என்னை எச்சரித்தார்.

கூட்டத்திலிருந்து சிலர் சிரித்தார்கள். கூனிக்குறுகிப் போனவளாக விருட்டென்று கண்ணிரோடு அங்கிருந்து வெளியேறினேன்.

தேர்வு முடிந்து கல்லூரியில் விடுமுறை விட்டிருந்தார்கள். வெளியில் எங்கும் செல்ல அறவே பிடித்திடவில்லை. அறைக்குள்ளே முடங்கி கிடந்தேன். சாப்பாட்டை அங்கேயே வரவழைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஒப்புக்காவது நீ எப்படி இருக்கே என்று அப்பா கேட்காதது வலியை கொடுத்தது. தண்ணிரைப் போல கண்ணீரை செலவழித்ததால் அழுகைக் கூட மறந்து போயிருந்தது.

மேஜை மீது பிரிக்கப்படாத தபால்கள் கிடப்பதைக் கவனித்தேன். அதில் சில இலக்கிய இதழ்களும் இருந்தன. புத்தகத்தை வாசித்தால் சற்று ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றவே ஒன்றை எடுத்து அதன் மீதிருக்கும் பிளாஸ்டிக் உறையை நீக்கினேன். உள்ளடக்கத்தில் சிறுகதைப் பகுதியில் என் ஆதர்ச எழுத்தாளரின் பெயர் இருக்கவே ஆவலுடன் பக்கங்களைப் புரட்டிச்சென்று அச்சிறுகதைக்கு வந்தேன். ஏறத்தாழ அது பனிரெண்டு பக்கங்கள் வரை நீண்டிருந்தது.

படிக்கத் தொடங்கியதும் அந்த உலகத்துக்குள் முழுதாய் அமிழ்ந்து போனேன். கதை முடிந்ததும் புத்தகத்தை அப்படியே கிடத்தி விட்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். அக்கதையின் தாக்கமும் எழுத்தாளரின் மொழி நடை லாவகமும் என்னை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டு போய் விட்டிருந்தன.

வேலைக்காரி சாப்பாட்டை கொண்டு வந்து வைத்து விட்டு சென்று நெடு நேரம் ஆனபோதிலும் சாப்பிடத்தோன்றவே இல்லை. எழுந்து அலமாரியைக் குடைந்து அவ்வருடத்தின் நாட்குறிப்பேட்டை எடுத்து எழுதத்துவங்கினேன். என்ன எழுதுகிறோம் எதை எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுத்துக்கள் திமிறிக்கொண்டு ஓடின. அந்த நாள் அடுத்த நாள் அதற்கு அடுத்த நாள் என்று பக்கங்கள் நழுவிக்கொண்டே இருந்தன.

ஏதோ ஆவேசத்தில் பீடிக்கப்பட்டது போல இடைவிடாமல் எழுதி களைத்துப் போனபிறகு நிறுத்தினேன். அவை மிக அழகான நடையோடு வந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எழுது எழுது என்று உள்ளுக்குள்ளிருந்து உத்தரவு வந்து கொண்டிருக்கவே மேலும் எழுதினேன். எவ்வளவு நேரம் எழுதினேன் என்று தெரியவில்லை. அப்படியே நாட்குறிப்பேட்டின் மீது தலை சாய்த்து நித்திரையில் கலந்து விட்டேன். காலையில் எழுந்து படித்து பார்த்தபோது வியப்பும் மகிழ்ச்சியுமாக மனசு கூத்தாடத் தொடங்கி விட்டது. இதையெல்லாம் எழுதியது நான் தானா என்ற பெரும் சந்தேகம் உருவானது.

என் கதையின் மொழி நடை நான் இது வரை படித்திருந்த கதைகளில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. இத்தனித்துவம் திரட்டித்தந்த அளவிடமுடியாத புத்துணர்ச்சியில் இரவு பகல் பாராமல் எழுதித்தள்ளினேன். இருபது நாட்களுக்குள் நாட்குறிப்பேட்டின் கடைசிப்பக்கம் வரை எழுதி கதையை நிறைவு செய்தேன். அப்பொழுதுதான் அது சிறுகதையல்ல நாவல் என்ற உண்மை புலப்பட்டது.

இன்னும் ஒரு வாரம் அவகாசம் எடுத்து கொண்டு நாவலில் சின்ன சின்ன திருத்தங்கள் செய்தேன். அதன் பிறகு நேர்தியாக படியெடுத்தேன். கையெழுத்தில் முன்னூறு பக்கங்கள் வந்திருந்தது.

இதுவரை பாரமாக கனத்துக் கிடந்த ஏதோவொரு சுமையை இறக்கி வைத்து விட்டோம் என்ற நிம்மதி உண்டானது. நான் அனுபவித்திடாத இன்பகரமான உணர்ச்சிகள் பொங்கி வழிந்தோடி என் காயங்களையும் சிராய்புகளையும் இருந்த இடம் தெரியாமல் செய்து விட்டிருந்தன.

என் நாவலே எனக்கு பாதுகாவலனாகவும் உற்ற தோழனாகவும் எப்பொழுதும் என் மடியிலும் மார்பிலும் தலைமாட்டிலும் என்னுடனே வாசம் செய்தது. தவமிருந்து பெற்ற பிள்ளையாக இருந்தாலும் அதை எத்தனை நாளுக்குத்தான் தனியறையில் வைத்து அழகு பார்ப்பது… அதன் பெருமையை ஊரறிய செய்திட வேண்டாமா என்ற ஏக்கம் பிறந்தது.

தீவிர யோசனையோடு கைபேசியை எடுத்து முகநூலில் நுழைந்தேன். நண்பர்களின் பட்டியலில் தேடிக்கொண்டே வரும் போது அவர் கண்ணில் பட்டார். அவர் வேறு யாருமல்ல.. என் ரசனைக்குரிய சிற்றிதழின் ஆசிரியர் அவர். அந்த இதழின் பேரில் பதிப்பகமும் நடத்தி வருபவர். அவரது உள்பெட்டியில் சென்று என் நாவலைக் குறித்து சொல்லலாமா என்று நினைத்தேன். அது மரியாதை இல்லை என்றே தோன்றியது.

அன்றிரவு எப்பொழுது விடியும் என்று பெரும் இச்சையோடு காத்திருந்தேன். மறு நாள் அவரது அலுவலகம் சென்று அவரை சந்தித்தேன். நடுக்கத்துடன் எனது பிரதியைக் கொடுத்து விசயத்தை சொன்னேன். முன்னும் பின்னுமாக புரட்டிப் பார்த்தபோது அவர் முகம் மலர்ச்சியடைவதை வெகு அவசரமாக நான் குதித்துக் கொண்டேன்.

முழுவதும் படித்து விட்டு சொல்கிறேன்..ஏற்புடையதாக இருந்தால் தாராளமாக போட்டு விடலாம் என்று அவர் கூரியது நிறைய நம்பிக்கையைக் கொடுத்தது. கோயிலிருந்து புறப்படும் போது ஏற்படும் மன நிறைவோடு அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பினேன்.

என் வாழ் நாளில் இப்படியொரு மகிழ்சியான தருணத்தை இது வரை கடந்து வந்ததே இல்லை. இந்த நாள் எனக்கானது என்ற நினைப்பில் றெக்கை இல்லாமல் பறந்தேன். மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகே இருக்கும் பிரபலமான திரையரங்கத்தின் மாடியில் அமைந்திருந்த இந்த அரங்கம் நிரம்பியிருந்தது. நான் நூல் வெளியிட்டு விழாக்களுக்கும், விமர்சனக் கூட்டங்களுக்கும் எப்பொழுதாவது செல்லக் கூடியவள். இந்த அரங்கத்துக்கும் சில முறைகள் வந்திருக்கிறேன்.

ஆனால் இவ்வளவு பேர் முன்னிலையில் என்னுடைய நூல் அரங்கேறும் என்று கற்பனை செய்தும் பார்த்ததில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களில் மூன்று பேர் என்னுடைய நாவலைப் பற்றி பேசப்போகின்றார்கள் என்ற உண்மையை என்னால் நம்பவே முடியவில்லை.

மேடையில் போடப்பட்டிருந்த இறுக்கைகளில் அந்த ஆளுமைகளோடு உட்கார்ந்திருப்பதை எனது பிறவி பயனாகவே நினைத்துக் கொண்டேன். இவ்விதம் சந்தோசமான சூழ்நிலையிலும் மனசு நெருடலாகவே இருந்தது. அப்பாவுக்காகவும், ஷிவானிக்காகவும் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த இறுக்கைகள் காலியாக இருப்பது கவலைக் கொள்ளவே செய்தது.

இதோ… விழா துவங்கப் போகிறது. பத்திரிக்கை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக எழுந்து விட்டார். என் கண்கள் கலங்கின. மேலும் என்னை துயரத்தின் குழியில் தள்ளி விடாமல் அரங்கத்தின் வாயிலை திறந்துக் கொண்டு அப்பாவும் ஷிவானியும் உள்ளே நுழைந்தார்கள். எட்வீன் அங்கிள் விரைந்து சென்று அவர்களை அழைத்து வந்து உரிய இடத்தில் அமர செய்த பின்னரே நான் நிம்மதியாக சாய்ந்து இட்கார்ந்தேன்.

எங்கே அவர்கள் வராமல் போய்விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அவ்விதம் நடக்காமல் போனது ஆறுதலாக இருந்தது. நான் அப்பாவின் முகத்தை பார்த்தேன். அவர் சமீப நாட்களில் சிடுசிடுவென்று இருந்ததைப் போல் இல்லாமல் வெகு இயல்பாகவே இருந்தார். ஷிவானியும் சிநேகிதமாக என்னை பார்த்து சிரிக்கவும் செய்தாள்.

பத்திரிக்கை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் மரியாதை நிமிர்த்தம் வரவேற்று பேசிவிட்டு நான் அவரை சந்தித்த முதல் நாளினைப் பற்றியும் அதன் பிறகு எங்களுக்குள் நடந்த உரையாடல்களைப் பற்றியும் மிகவும் சிலாகித்து பேசிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து ஒரு எழுத்தாளர் பேச வந்தார். அவரது பேச்சு அவரது எழுத்தைப் போலவே சுவாரசியமாகவே இருந்தது. நான் நாவலில் தொட்டிருக்கும் சிகரங்களைக் கண்டு தான் வியப்படைவதாக அவர் கூறினார். எனக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக புகழ்தார். ஒரு புதிய எழுத்தாளரைப் பற்றி பாராட்டி பேசுவதற்கு மனசு வேண்டும். அந்த நல்ல மனசு அவரிடம் இருந்தது. நான் குளிர்ந்து போனேன். நன்னிச்சையாக கைகளைக் கூப்பி அவரை வணங்கவும் செய்தேன். அவர் புன்முறுவலோடு பேசி முடித்ததும் அரங்கம் அதிர ஆரவாரம் ஒலித்தது.

இன்னொரு எழுத்தாளர் பேச வந்தார். தன் மகளின் வயதையே ஒத்த அவளுடைய தோழியை கல்யாணம் செய்து கொண்ட அப்பனை அர்க்கன் என்றே நான் சொல்லுவேன் என்று தடாலடியாக தன் பேச்சை ஆரம்பித்தார். பகீரென்று இருந்தது எனக்கு. நான் அப்பாவை பார்த்தேன். அவர் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்ததைக் காண் முடிந்தது.

முதலில் அத்தோழி அவரை அப்பா என்றுதானே அழைத்திருக்கிறாள். அப்படிப்பட்டவளிடம் அவர் எப்படி காதல் கொண்டார். இது காதலே இல்லை… காமம். இப்படி வெறுப்பை உமிழும் பாத்திரங்களோடும், அன்பை சொறியும் பாத்திரங்களோடும் விளையாடியிருக்கும் நாவலாசிரியை இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் பேசிக்கொண்டே போக அப்பா சடாரென்று எழுந்தார். அதே வேகத்தோடு அரங்கத்திலிருந்து வெளியேறினார். அவர் செல்வதைக் கண்டதும் ஷிவானியும் எழுந்து அவருக்கு பின்னால் சென்றாள்.

நான் துடித்து போனேன். எழுத்தாளர் பேசிக்கொண்டே இருந்தார். செய்வதறியாமல் மெதுவாக எழுந்து எனக்கு பின்புறமாக இருக்கும் ஜன்னலின் பக்கம் சென்றேன். கீழ் தளத்தைக் கவனித்தேன். அப்பா காரில் ஏறுவது தெரிந்தது. ஷிவானி கையை நீட்டிக் கொண்டு ஓடிவருவதற்குள் கார் புறப்பட்டு போய்விட்டது.

குழப்பத்துடன் அவள் அங்கேயே நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். பிறகு சப்தமின்றி என்னுடைய இறுக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன்.

[ கதை சொல்லி, அக்டோபர் 2017 ]

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆயுதம்

  1. ஹாய் டியர்

    கதை நல்ல இருக்கு தொடரவும் வெற்றி நிச்சசாயம் ….

    இப்படிக்கு
    பிரிதிவி.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *