கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 11,205 
 

அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்து கொண்டிருக்கிறது. கண் நிலைகுத்தி வானத்தை நோக்குகிறது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதெல்லாம் எனது ஆச்சியை(பாட்டி) ஞாபகப்படுத்துகிறாள். நான் பிறந்த பிறகு பார்த்த ஒரே ஆச்சி- மூக்கம்மாள் ஆச்சி. அப்பா வழி பாட்டி மற்றும் தாத்தா கல்யாணத்திற்கு முன்பே கிடையாது. தாத்தா வின் ஒரே ஒரு போட்டோ பல குழந்தைகள் சூழ ஒரு பெஞ்சியில் அமர்ந்து எடுத்த போட்டோ.கிளாசிக். அதை தவிர அந்த தலைமுறையை எடுத்து சொல்ல வேறு எதுவும் பாதுகாக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. அம்மா வழியில் தாத்தா கல்யாணத்திற்கு ஒரு வருடம் முன்பே இறந்துவிட்டார். தாத்தாவின் பல போட்டோக்கள் உண்டு. அதிலும் ஒரு போட்டோவில் அதிகமாக தலைமுடி தாடி எல்லாம் வளர்த்து ஒரு வெள்ளை துண்டை சால்வையாக சுற்றி ஒரு போஸ். பார்பதற்க்கு சந்நியாசம் வாங்கியது போல.தன்னிலை தெரிந்தவர்களுக்கு தன் நிலை விட்டு போகும் நாளும் தெரியும் என்பர். அது போல ஒரு நாள் வயலுக்கு சென்றவர் அங்கேயே மாரடைப்பில் இறந்தார். அம்மா அடிக்கடி சொல்லுவாள்.‘உங்க தாத்தா கடைசி காலத்துல சாமியாரா வாழ்ந்தவர்டா. இன்னைக்கு நான் போய்டுவன்னு சொல்லிட்டு போனவர். வரலை. சித்தர்டா’ என்று.

எந்த ஒரு பெண்ணுக்கும் தன் தந்தை சித்தனாகத்தான் தெரிவான். எந்த ஒரு மகனுக்கும் தன் தாய் தெய்வமாகத்தான் தெரிவாள். இல்லையெனில் ‘தெய்வங்களெல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே’ என்றும் ‘நேரில் நின்று பேசும் தெய்வம்’ என்றும் கவிபாடி ஆலாபித்திருக்க முடியாது.

மூக்கம்மாள் ஆச்சி. ஒடிசலான தேகம். அந்த வயதில் கிட்டதட்ட அனைவருமே ஓடிசாலகத்தான் தெரிகிறார்கள். காதில் தொங்கும் நீண்ட பாம்படம். அதை பார்க்கும்பொழுதே அவ்வளவு கனமாகத்தெரியும்.

‘வலிக்காதா ஆச்சி?’

‘போல கிறுக்கு பய புள்ள’ என்பாள்.

ரவிக்கை இல்லாது சேலை கட்டியிருப்பாள். அந்த வயதில் அந்த காலத்தில் ரவிக்கை போட்ட பாட்டிகளெல்லாம் வெக்கப்படும். நன்றாக ஞாபகமிருக்கிறது. ஊருக்கு போகும் நாட்களெல்லாம் கொண்டாட்டம் தான். தன் சேலையின் முந்தியில் சில காசுகளை முடிந்து வைத்திருப்பாள். அது தான் அவளுடைய பர்ஸ். ஊருக்கு வந்த பிற்பாடு பஸ்சிலிருந்து இறங்கி ஆச்சி வீட்டிற்கு ஓடி சென்று உள் நுழையும் போது தூணில் சாய்ந்து கால் நீட்டி உட்காந்துகொண்டு ‘வந்துட்டீயால, என்ன பெத்த அப்பாரே’ என்று அவள் அள்ளி முத்தமிட்டது இன்றும் ஒரு மேகமூட்டமாக நினைவில் தேங்கி நிற்கிறது.

வந்தது வராதும் உடனே,

‘ஆச்சி என்ன வச்சிருக்கிற?’ என்பேன். ஐந்து வயது.

முந்தியில் முடிந்திருக்கும் சில்லரை காசுகளை கையில் அள்ளி கொடுப்பாள்.

‘போய் ராமசாமி கடைல மிட்டாய் வாங்கிக்கல. ஆச்சி சொன்னேன்னு சொல்லு, என்பாள்.

அந்த ஆச்சி சொன்னேனு சொல்லுவில் பல அர்த்தம் தொணிந்திருக்கும். காசு குறைவாயிருந்தாலும் நான் கேட்கும் மிட்டாய்களை கொடுப்பதற்கோ அல்லது கேட்காமலையே முட்டாய்களை அள்ளிதருவதற்கோ ராமசாமி பழகியிருந்தான். ஆரஞ்சு வில்லைகள்,தேன்மிட்டாய், பொரிஉருண்டை என எனக்கு பிடித்ததை நான் வாங்கி வருவதை ஆச்சியுடன் பங்கு போட்டு தின்றிருக்கிறேன். ஒருவேளை அந்த கணங்களுக்காக கூட ஆச்சி மாதாமாதம் எனக்காக காத்துக்கொண்டிருந்தாள் என்று இப்பொழுது வரையறுக்க முடிகிறது.

அடுத்த வருடத்திலேயே ஆச்சியின் கால் எழும்பு முறிந்து படுத்த படுக்கையானாள். வீட்டின் முற்றத்தில் அவளது வாழ்க்கை முடக்கப்பட்டது. உணவு, தூக்கம், குளியல், கட்டிலுக்கு அடியில் வைக்கப்படும் வாஷிங் பேன் என சகலமும் அந்த முற்றத்திற்குள்ளாக நடந்தது. சில நாட்கள் கழித்து பார்க்க போன பொழுது சகல விஷயங்களுடன் மாத்திரை மருந்து டெட்டால் என்று ஒரு விதமான நெடி பரவியிருந்தது.

‘இங்க வாடா’ என்றழைத்தாள்.

அந்த நிமிடம் மிகப்பெரிய தவறை செய்தேன்.

‘நான் போமாட்டேன். பயமா இருக்கு’

அம்மா, ‘போடா ஆச்சி தான. உன்னை பாக்கணும்னு நினைக்கிறா. எப்டியிருக்க ஆச்சினு கேளு, என்றாள்.

‘ம்ஹூம். மாட்டேன். பயமா இருக்கு’

இன்று வரை பிடிபடவில்லை. எதற்கு பயந்தேன். ஏன் பேசவில்லை என்பது. ஆனால் அன்று ஒரு முறை கை பிடித்து ‘நான் இருக்கேன் ஆச்சி. ஒண்ணும் பயப்படாத’ என்று ஒரு வார்த்தை பேசியிருந்தால் நிச்சயமாக அவளது உடல் நிலையும் மன நிலையும் சிறிது தேறுவதற்கு வாய்ப்பிருந்திருக்கும்.. அடுத்த மாதமே கூட ராமசாமி கடைக்கு போக பணித்திருப்பாள். ஆனால் ஆறு வயதில் அந்த பக்குவத்தை வளர்த்து கொள்ள இயலவில்லை.

விதி வலியது. அடுத்த மாதமே ஒரு மாலை நேரம். பாவயாமி ரகுராமத்தை உருகி உருகி எம்.எஸ். பாடிக்கொண்டிருந்தார். ஜன்னலோரத்தில் உள்ள திண்டில் உட்கார்ந்துகொண்டு ஒரு கிண்ணத்தில் பொரிகடலையுடன் சர்க்கரை சேர்த்து வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். கதவு தட்டப்படும் சப்தம். போஸ்ட்மேன் தந்தி கொடுத்து சென்றிருந்தார். ‘MOTHER EXPIRED. START SOON’ என்ற ஒற்றை வரியில் மாமாவின் தந்தி. அத்தனை வருட ஞாபகங்களும் ஒரு சேர தாக்க அம்மாவில் கண்ணில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. அவள் அழுவதை பார்த்து எனக்கு பயம் எழுந்து ஆழ ஆரம்பித்துவிட்டேன். நான் பயந்ததை பார்த்து அம்மா அழுகையை நிறுத்தினாள். அப்பா வந்தவுடன் உடனே ஊருக்கு கிளம்பினோம்.அந்த பயணம் மட்டும் அம்மாவிற்கு நீண்டதாக முடிவில்லாத பயணமாக தோன்றியிருக்க வேண்டும்.

வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்க, புறக்கடை வாயிலாக உள் சென்றேன்.அக்கா கூப்பிட்டு உக்காரவைத்தாள்.

‘காபி குடிக்கிறியாடா?’

‘வேணாம்க்கா’

‘ஆச்சிய கடைசியா ஒருதடவ பாத்துக்கோ.அப்புறம் முடியாது

பயமாக இருந்தது. உள்ளே எட்டி பார்த்தேன். சுவற்றின் மூலையில் ஒரு மர நாற்காலியில் ஆச்சியை உட்கார வைத்து நாடியை தலையுடன் சேர்த்து வெள்ளைத்துணியில் கட்டியிருந்தார்கள். நெற்றியில் பட்டையாக விபூதி. நடுவில் காசு.அதற்கடுத்த இரண்டு மணிநேரத்தில் ஆச்சி மீளா பயணத்திற்கு கிளம்பியிருந்தாள்.அம்மாவோடு பெரியம்மா சித்தி அக்கா என்று ஜன்னலோரத்தில் கம்பியை பிடித்தபடி அழுதது இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை.

அந்த நாளை அவ்வளவு எளிதாக அன்று எப்படி கடக்க முடிந்தது என்று இன்றும் வியப்பாக இருக்கிறது, குலுங்கி அழவில்லை. கண்ணில் சொட்டு நீர் இல்லை. ஆச்சி வாங்கி கொடுத்த மூங்கில் நாற்காலி, குட்டியாக அழகாக வீட்டை பல வருடம் அலங்கரித்து கொண்டிருந்தது. அதில் உட்கார வீட்டை சுற்றிலிருக்கும் அத்தனை வாண்டுக்களும் போட்டி போடும். வீட்டை மாற்றும்பொழுது சில சேதாரங்களை சந்தித்தது. பின்பு ஒரு நாள் அது தூக்கியெறியப்பட்டது. அது காணாமல் போனபின்பு ஆச்சி அதிகமாக ஞாபகம் வர ஆரம்பித்தாள்.

சிறு வயதில் அதிகமான மோகத்தையும் வேடிக்கையையும் கொடுத்த பலூன், பொம்மை, கார் எல்லாம் வயதான பின்பு அதே சந்தோஷத்தை தர இயலாதது. அது தர இயலாதது என்பதை விட அதற்குள் சந்தோசமடைய மனது விரும்பவில்லை என்று கொள்ளலாம். பொருள் அன்று எவ்வாறிருந்ததோ இன்றும் அவ்வாறே இருக்கிறது. பார்க்கும் பார்வை சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. என் மட்டும் சிறு வயதில் மிட்டாய் வாங்கித்தரும் சந்தோஷமாக, பயமுறுத்திய நோயாளியாக விவரம் தெரிந்த பின்பு ஆச்சியாக தன் நிலை அடைந்திருக்கிறாள்.

ஆச்சி தாத்தாவோடு வளரும் அனைத்து பேரக்குழந்தைகளும் அதிர்ஷ்டசாலிகள். கள்ளம் கபடமில்லாமல் கை பிடித்து அழகாக கூட்டி போகத்தெரிந்தவர்கள். அதிலும் பேரக்குழந்தைகளின் கல்யாணம் வரை இருந்து மணமேடையில் நின்று அட்சதை போட்டவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து திருப்தியடைந்தவர்களாக இருப்பர். அட்சதை போட்டு ஆசீர்வாதம் வாங்கிய பேரக்குழந்தைகள் அதனிலும் அதிர்ஷ்டசாலிகள்.

இத்தருணத்தில் அதிகம் இழந்திருக்கும் துரதிர்ஷ்டசாலி நானே. இப்பொழுது கூட,சாலையில் தாத்தா கையை கோர்த்து கொண்டு செல்லும் நடை பயலும் பேத்தியையோ, பாட்டி கையை கோர்த்து கொண்டு நடக்கும் பேரனையோ பார்க்கும்பொழுது அவர்களை அழைத்து உரக்க சொல்ல வேண்டும் போலிருக்கிறது.‘ நீங்கள் பிடித்திருக்கும் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொள்ளுங்கள்.’ என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *