கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,315 
 

நான் என்னைப் பெரிய பராக்கிரமசாலி, தொழிற்சங்கவாதி என நினைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மேலே போய், இயேசுவைப் போல அற்புதங்கள் புரியும் வல்லமை கூட எனக்கு உண்டு என நம்பினேன். எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் வரும் வரைக்கும், நாம் நம்மை இப்படிதான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் என் மனைவியோ, இந்தப் பம்மாத்து நினைப்புகளை எல்லாம் நம்புவது இல்லை.

சும்மா வேலையில்லாது உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை, தொழிற்சங்க வேலைகளை நான் பார்க்கக்கூடாது என்பது எனது நிர்வாகத்தின் சித்தம். ஆகவே லக்னோ ஆபிஸிக்கு என்னை மாற்றினார்கள். நானும் அட்டெண்டர் திலீப்பம்தான், ஆபிஸிலுள்ள ரெண்டு பிரஜைகள். “உங்களை இப்படி டிரான்ஸ்பர் பண்ணியதை நினைச்சா, சிரிப்பா வருது. உங்களைப் போய் பெரிய யூனியன்காரரென மத்தவங்க நம்புறதுக்கு, உங்கள் நிர்வாகமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துச்சு..,” என்று சொல்லி, என் மனைவி பகடி செய்தாள்.

ஆபிஸில் வேலையில்லாமல், நாங்கள் களைத்துப் போயிருந்தோம். அப்போதுதான் கலங்கரை விளக்கமாக பிரதீப் வந்து சேர்ந்தான். அவன் திலீப்பின் நண்பன். கிரிஷ்பவனில் பியூனாய் இருக்கான். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அவன் கிரிஷ்பவனுக்குப் போறானோ இல்லையோ, கண்டிப்பாய் எங்க ஆபிஸிக்கு வர ஆரம்பித்தான். வரும் போது, ஒரு சதுரங்க போர்டுடன் சில நண்பர்களையும் கூட்டிக் கொண்டு வந்து, ‘விளையாடிக் கழிப்போம்,’ என்றான். சதுரங்கத்துடன், வெட்டுப்புலி ஆட்டம், தாயக்கட்டை, பாம்பு-ஏணி என ஆபிஸே அவனால் களை கட்டியது.

தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருந்த டிபுடி மேனேஜர், லக்னோ ஆபிஸைப் பார்த்து அரண்டு விட்டார். “பிரபா! பழி வாங்குறதுக்குதானே இவ்வளவு தூரம் லக்னோவுக்கு நிர்வாகம் உங்களை மாத்தியடிச்சிருக்குது. இருந்தாலும், அதற்காக சிறிதும் கிலேசப்படாம இப்படி விளையாட்டுப் பிள்ளையாட்டம் இருக்கீங்களே?” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

“என்னை இங்கே சும்மா உட்கார வைக்கணும் என்றுதானே டிரான்ஸ்பர் பண்ணுனீங்க? நான் சும்மா உக்காந்திருக்கிறதுக்குப் பதிலா, விளையாடிட்டு இருக்கேன்..” என்றேன்.

இந்த டிபுடி மேனேஜர் எனக்குப் பதிலாய், பிரதீப்பிடம் போய் கெஞ்சினார். “வரும் புதன்கிழமை ரிஜீனல் மேனேஜர் இன்ஸ்பெக்சனுக்காக வரார். (ஓடாத லக்னோ ஆபிஸில் என்ன இன்ஸ்பெக்சன் என்று ஏனோ பிரதீப் கேட்கவில்லை) அவர் வந்துட்டுப் போற வரைக்குமாவது, இந்த விளையாட்டை எல்லாம் மூட்டை கட்டி வையுங்களேன்..”

அவர் ஏன் பிரதீப்பிடம் போய் இப்படிக் கெஞ்சுகிறார் என்று துளி சந்தேகம் அப்போது வரலை. அவர் வருகிற வரைக்கும் விளையாடாதீர்கள் என்று டிபுடி மேனேஜர் என்றால், வந்துட்டுப் போன பிறகு பூந்து விளையாடுங்க என்றுதானே அர்த்தம்? பிரதீப்பும் ரிஜீனல் மேனேஜர் வந்துட்டுப் போற வரைக்கும், தலையை இந்தப்பக்கம் காட்டவில்லை. ஏன்?

###

பிரதீப்பிற்குக் கல்யாணம் ஏற்பாடாயிருந்தது. “ஸாப், நீங்க வடஇந்தியாவுக்கு டிரான்ஸ்பரில் வந்த பிறகு, ஒரு கல்யாணமாவது அட்டெண்ட் பண்ணியிருக்கீங்களா? கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்து, வடஇந்தியர்கள் கல்யாணத்தை எப்படி ‘ஜம்’முன்னு நடத்தறாங்கனு பாருங்க,” என்று ரொம்ப பிரியமாய் அழைத்தான்.

என் கூடப்பிறந்த தம்பி கல்யாணத்தின் போது, எங்கப்பம்மா கூட, என்னை இப்படி வாஞ்சையாய் அழைத்ததில்லை. என் மகனுக்கு லக்னோவில் முழுப்பரிட்சை நடந்து கொண்டிருக்கும் போது பார்த்து, தம்பியின் கல்யாணத்தை திருச்செந்தூரில் நடத்தி, நாங்க கண்டிப்பாய் கல்யாணத்தில் கலந்து கொள்ள கூடாது என்று பார்த்துக் கொண்டவர் எனது அப்பா. ஆனால் அப்படி இல்லாமல் உண்மையிலேயே, பாசத்துடன் அழைக்கிறான் இந்தப் பிரதீப்..

கல்யாணத்திற்கு வெறுமனே கையை ஆட்டிட்டுப் போக முடியுமா? என்ன செய்யலாம் என மனசுக்குள் அழைந்து கொண்டிருந்தேன். “பரிசுனு எதையாவது வாங்கிக் கொடுக்காதீங்க!” என்றான் திலீப். நான், “அப்படியா? பரிசு கொடுத்தா நார்த் இண்டியான்ஸிக்குப் பிடிக்காதா?” என சந்தேகத்துடன் கேட்கும் முன்னரே, முந்திக் கொண்டு, “கிப்டுக்குப் பதில் ரூபாய் கொடுத்துட்டா, பிடிச்சதை அவங்களே வாக்கிக்குங்க,” என்று திலீப் சொல்ல, என் முகம் பொசுங்கிப் போனது.

நான் பிரதீப் கல்யாணத்திற்குப் போக போவதை வீட்டில் அறிவித்தேன். “இப்படிக் கண் காணாத வட இந்தியாவிற்கு வந்து, கல்யாணமும் அட்டெண்ட் செய்து, மொய்யும் எழுதி, எழுதின மொய் என்னைக்காவது திரும்பி வருமென மொன்னைத்தனமாய் நம்பிக் கொண்டிருப்பதற்குப் பெயர் வடிகட்டின முட்டாள்தனம்,” என்று தனது கருத்தைத் தெரிவித்தாள் எனது மனைவி.

இருநூறு ரூபாய் பிரதீப்புக்கு எழுத வேண்டும் என்று நினைத்தவன், உடனே அதை வெகுவாகக் குறைத்து, “வெறும் நூறு ரூபாய்தான் குடுக்கப் போறேன்,” என்று விளக்கினேன். ஒரு மனதாய் போவதற்குச் சம்மதித்தாள். “போகும் போது, நம்ப பையனையும் கூட்டிட்டுப் போங்க. கொடுக்கிற அம்பது ரூபாயுக்கு வஞ்சகம் இல்லாம தின்னுத் தீப்பான்,” என்றாள்.

“கல்யாண வீட்டில் தீர்த்தமும் இருக்கும்.. அதையும் தீர்த்தால் பரவாயில்லையா?” என்று எதிர்க்கேள்வி கேட்டதும், அவள் விக்கித்துப் போனாள். மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. “கோயில் தீர்த்தத்தைக் குடிக்கலாம்னா, ஏன் பார்ட்டியில் மட்டும் அதைக் குடிக்கக்கூடாது? நான் கல்யாணத்திற்குக் கண்டிப்பா போவேன்.. தீர்த்தம் குடிப்பேன்,” என மகன் அடம் பிடிக்க, அவன் முதுகில் பூஜைகளை அரங்கேற்றினாள் என் பத்னி.

###

வடஇந்திய திருமணங்கள் இரவில்தான் நடக்கும். நான் மண்டபத்தை அடைந்த போது, மாப்பிள்ளை குதிரை மேல் அமர்ந்து, கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான். குதிரைக்கு முன்னால் எக்கச்சக்கமாய் மேக்கப் போட்டு, ஆண்களும் பெண்களும் நடனமாடிக் கொண்டு இருந்தார்கள். இந்தி திரைப்படங்களைப் பார்த்து, பார்ட்டி மேனர்ஸ்களை வட இந்தியர்கள் பெரிதும் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணமாகாத பெண்கள் தினவு தீரும் வரை, வெஞ்சினத்துடன் ஆடினார்கள். தொப்பலாய் வியர்வையில் நனைந்து இருந்தாலும், பட்டு லஹங்காவை மீறி ஈரம் புலப்பட்ட மாதிரியும் இல்லை. புலப்படாத மாதிரியும் இல்லை, கோட்டுப் போட்ட ஆண்களால், பெண்களுக்கு ஈடுக்கொடுத்து ஆட முடியவில்லை. “மப்பு ஓவராப் போச்சு. அதான…” என அவர்கள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.

பிரதீப்பின் நண்பன் ஒருவன் கூட்டத்தை விடியோ கேமராவால் சுட்டுக் கொண்டு இருந்தான். என் கூட வந்து ஒட்டிக் கொண்ட திலீப, “அதோ விடியோ எடுக்கறான் இல்லை, அவன் பிரதீப்பின் நண்பன். தூர்தர்ஷனில் வேலைப் பாக்கிறான்,” என்றான்.

பாய்ந்து அவனிடம் போய், “ஹலோ, ஐயாம் பிரபாகரன். ஒர்க்கிங் இன் பிஸ்க். கம்பெனியிலே சின்னப் பிராப்ளம் ஆகிப் போச்சு. இங்கே நார்த் இண்டியாவுக்கு டிரான்ஸ்பர் அடிச்சுட்டாங்க. பட், ஐயாம் என்ஜாயிங் லக்னோ வெரி மச்,” என்றேன் அசட்டுத் தனமாய்.

அவன் என்னிலும் எள்ளவும் குறைந்து விடாத அளவுக்குப் போதுமான அளவு அதே அசட்டுத் தனத்துடன் பதில் புன்முறுவல் பூத்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ஆனால், அதை நான் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. ஏனென்றால், என்னைப் பொறுத்த வரை, எனக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதையும் விட, நான் அவனிடம் என்னச் சொல்லப் போகிறேன் என்பதுதான் முக்கியம்.

“பை தி பை.. நானும் அடிப்படையில் ஒரு கலைஞன்தான். அடிப்படையில் ஒரு எழுத்தாளன். பட் எனக்கு இந்தியில் எல்லாம் எழுத வராது…” என்று கேணைத் தனமாகச் சிரித்துக் கொண்டே என் பேச்சை ஆரம்பித்து, முழுவதுமாய் சொல்லிதான் முடித்தேன். அவனுக்கு நான் பேசிய ஆங்கிலம் புரிந்திருக்குமா என்ற சந்தேகம் வேறு இடையில் எனக்கு வந்தது. இருந்தாலும், தூர்தர்ஷனில் ஏதாவது வாய்ப்பு வாங்கித் தருவான் என மொன்னைத் தனமாய் நம்பினேன்.

திருமணம் ரொம்ப வசீகரமாய் நடந்தது. ஆண்கள் மேற்கத்திய பாங்கில், கோட்டு சூட்டுடன் வலம் வர, பெண்கள் எக்கச்சக்கமான மேக்-அப்புடன் பட்டு லஹங்கா மற்றும் லக்னோ சிக்கன் உடைகளை மாட்டிக் கொண்டு அலைந்தார்கள். எதிர்பாலினரை வசீகரிக்க துல்லியமான முயற்சி.

திலீப் தனது சித்தப்பா என ஒருத்தரை அறிமுகப்படுத்தி வைத்தான். அவர் ஜெயிலில் அசிஸ்டெண்டாய் பணிபுரிகிறாராம். அரசுக் காலனியில் வீடு உள்ளதாம். அவரிடம் ஏதாவது பேசணும் என்பதற்காக, “பிரதீப்பை உங்களுக்குத் திலீப் மூலந்தான் பழக்கமா?” என்று கேட்டு வைத்தேன்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்து இருந்திருந்தாலும், நான் பெரிதாக எடுத்துக் கொண்டிருந்திருக்க மாட்டேன். ஆனால் அவர் இப்படிப் பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. “அப்படி இல்லை. ரெண்டு தடவை பிரதீப்பை அரெஸ்ட் பண்ணி ஜெயிலிலே போட்டு இருந்தாங்க. அப்பதான் பிரதீப்புடன் நேரடி பழக்கம் ஏற்பட்டது. அந்த உறவு, இப்ப கல்யாணத்துக்கு அட்டெண்ட் செய்ற அளவுக்கு வளர்ந்து உள்ளது” அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அதில் கல்யாணத்திற்கு வந்ததற்கான மகிழ்ச்சி தெரியவில்லை. ஒரு குரோதம்தான் தென்பட்டது.

அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து அந்தச் சித்தப்பாவுடன் என்னால் பேச முடியவில்லை. அவருக்கு மருந்துக்குக் கூட ஆங்கிலம் தெரியவில்லை. கலந்து ஆலோசிக்கும் அளவுக்கு என் இந்தி போதவில்லை. இருந்தாலும் அவர் சொன்ன ஒரு அறிவுரை மட்டும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. “பார்த்தா, படிச்ச, நாகரிகமானவர் போல் தெரியறீங்க? சீக்கிரம் சாப்புட்டுட்டு, வீட்டுக்குப் போற வழயைப் பாருங்க!”

ஏன் இப்படிச் சொன்னார்?

###

திடீரென துர்தர்ஷன்காரனது சட்டையைப் பிடித்து ஒருவர் தரதரவென இழூத்து வந்தார். “என் மச்சனிச்சியை இசகுசகான நேரத்தில் படம் பிடிச்சிட்டான். சோர்..” இழுத்ததில் தூர்தர்ஷன்காரன் சட்டை நார்நாராய் கிழிந்து இருந்தது. விட்ட குத்தில், மூக்கு வெற்றிலைச் சுண்ணாம்பு போட்டது போல் சிவந்திருந்தது.

நண்பரைப் பாதுகாக்க பிரதீப் ஏதாவது ஏற்பாடு செய்கிறானா எனத் தெரிந்து கொள்ளும் நோக்குடன் மணமேடையை நோக்கினான். அவன் குதிரையில் இருந்து முன்பு விட்டது போலவே, கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான். தூர்தர்ஷன்காரன் எப்படி வேண்டுமானாலும் அடிபட்டு டார் டாராய் கிழியட்டும் என்று விட்டு விட்டானா?

தொடர்ந்து ‘தொபு, தொபு’வென கூட்டம் ஓடியது. தூர்தர்ஷன்காரன், அவனை முஷ்டியால் குத்தியவன், அவன் மச்சினிச்சி எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். நானும் குழம்பிப் போய், அவர்களுடன் சேர்ந்து ஓடினேன்.

போஜனம் ஆரம்பித்து விட்டது. ‘செல்ப் சர்விஸ்’தான். பிரிட்டிஷ்காரனிடம் இருந்து, வட இந்தியர்கள் கற்றுக் கொண்ட நல்லப் பழக்கம் இது. ஆனால் பிரிட்டிஷ்காரன் இப்படி அசிங்கமாய் ‘சாப்பாடு’ என்றதும் ஓடி வந்திருக்க மாட்டான் என்பதுதான் வித்தியாசம்.

முதலில் சாலட்.. பின்னர் பப்பட், நன் ரொட்டி, பன்னீர் மசால், தயிர்வடை, பிரைட் ரைஸ், சாதா ரைஸ, ஐஸ்கிரீம் என பலவகை உணவுகள். “நான்-வெஜ் கிடையாதா?” என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்டேன். “பிரதீப் அடிப்படையில் திவாரி… சுத்தப் பிராமணன்..” என்றான் திலீப்.

“பிரதீப் பிராமணனா? நான் அவனை டாகூர் என்று நினைத்தேன்.. பிராமணன் மாதிரி அவன் சாதுவாய் இல்லையே? எங்கே கூட சேர்ந்து, மாட்டுக்கறி வரை சாப்பிட்டானே?” என்றேன். அவன் நண்பர்கள் விழுந்து, விழுந்து சிரித்தார்க்ள. அப்பதான் ஒருவன் அந்தக் குட்டைப் போட்டு உடைத்தான்: “உங்க ஆபிஸிலே கோகோ கோலாவைப் பாட்டிலில் வைத்து, பிரதீப் குடிப்பானே, ஞாபகம் இருக்கா? அது உண்மையில் என்னத் தெரியுமா? கலப்படமில்லாத ஜின்.”

###

பல ஜீப்கள் ‘சர் சர்’ரென சாரைப்பாம்பு போல பாய்ந்து வந்தன. பலர் ஜீப்பில் தொங்கிக் கொண்டு வந்தார்கள். “பொண்ணோட அப்பா ஜன் தாந்திரிக் காங்கிரஸின் லக்கீம்பூர் மாவட்டச் செயலாளர். ஜீப்பில் வருபவர்கள் கட்சித் தொண்டர்கள்,” என்று ஒருத்தர் விளக்கம் தந்தார். அவர்கள் கையில் நாட்டுத் துப்பாக்கிகள். வண்டியை விட்டு இறங்கியதும், பத்து பத்து பேராக வரிசை அமைத்துக் கொண்டு, வானை நோக்கிச் சுட்டார்க்ள. எனக்குத் தொடை நடுங்கியது. “தொண்டர்களுக்கு மஜா வந்தால், இப்படிதான் சுடுவார்கள்,” என்றார் மற்றொருவர்.

உடனே கல்யாண மண்டபத்தற்குள் திடீரென அமைதி. ஏதோ அடுத்ததாக ஒரு புது சம்பவம் நடக்கப் போகிறது என அது கட்டியம் கூறியது. இந்தி ரிகார்ட் டான்ஸ் . . ரித மாதிரியான வடிவான பெண்களும், மன்மதன் மாதிரியான ஆண்களும் விதவிதமான இந்திய மற்றும் மேற்கத்திய உடைகளில் வந்து, ரிகார்டட் இந்திப் பாட்டுக்கு நடனம் ஆடத் துவங்கி விட்டனர்.

நேரமாக ஆக, நாட்டியமாடிய பெண்களின் ஆடை, விரலுக்கு மோதிரம் போடுவது போல, குறைய ஆரம்பித்தது. நொட்டை விட்டுக் கொண்டு, கண்பந்து தெறித்து விழும் மாதிரி, கும்பல் இதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆண்களோடு சேர்ந்து, பெண்களும் பார்த்துக் களித்தார்கள்.

சிலர் ஓடிப்போய், ஆடிய பெண்களுக்குப் பணமாலைச் சூடி, தங்கள் பணப்பரிமாணத்தைக் காட்டினார்கள். வேறு சிலர், பெண்களின் பணத்தைக் குத்த எத்தனித்தார்கள். ஐநூறு ரூபாய் நோட்டைதான், பெண்களின் மாரில் குத்த அனுமதிப்போம் என ஒருவன் இடையில் நந்தி மாதிரி நின்று தடுத்துக் கொண்டிருந்தான்.

“ஆராயிரம் கொடுத்து, இந்தக் காபரே பார்டியை பிரதீப் ஏற்பாடு செய்திருக்கிறான்,” என மாப்பிள்ளை வீட்டார் பெருமையாகச் சொன்னார்கள்.

மறுபடியும் திலீப்பின் சித்தப்பா என் முன் காட்சி அளித்தார்: “இன்னும் நீங்க இங்கேதான் இருக்கீங்களா? இன்னும் அரைமணி நேரத்திலே, இங்கே எப்படிக் களைக் கட்டப் போகுதுனு, நீங்க பாக்கதானே போறீங்க!”

பக்கத்தில் நின்ற திலீப் சிரித்துக் கொண்டே சொன்னான். “சித்தப்பா அரைகுடம் பங்காவை, ஒற்றை ஆளா குடிச்சுட்டு, இப்ப நிலை தடுமாறி நிக்கறார். கூடவே கோபம் வேற.. அவர் மச்சினிச்சியை, பிரதீப் ஆசைக் காட்டி மோசம் பண்ணிட்டானாம். அதான் ஆத்திரம் அவருக்கு. பிரதீப்பைச் சும்மா விட மாட்டாராம்.. நீங்கப் போறதுக்குதான் காத்துகிட்டு இருக்கார்…”

நான் போவதற்காக காத்துகிட்டு இருக்காரா?

எனக்குள் என்னை அறியாமலேயே ஒரு பயம் தொற்றிக் கொண்டது. மொய் பணம் நூற்றைக் கொடுத்து, சரியாய் குறித்துக் கொண்டார்களா என்று உறுதி செய்து கொண்டேன்.

பின்னர் பரபரப்பாய் கல்யாணப் பந்தலை விட்டு, அகன்றேன்..

###

அடுத்த நாள் லக்னோ டைம்ஸில், கல்யாண வீட்டில் நடந்த கலாட்டாவில், மாப்பிள்ளை சுட்டுக் கொலை என்ற விஷயம், கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்தது. ரத்தம் பதிந்த பிரதீப்பின் முகம் முதல் பக்கத்திலேயே, கலர் படமாக இருந்தது. திலீப்பின் சித்தப்பா தலைமறைவாகி விட்டாராம்.

ஜன் தாந்திரிக் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய கொலை வெறியாட்டத்தில் சிலருக்குப் படுகாயமாம். சிலர் பலாத்காரம் செய்யப்பட்டார்களாம். நான் செய்தியைப் படித்து, உறைந்து போயிருந்தேன்.

அப்போது பார்த்து வீட்டு வாசலில் பைக்கில் திலீப் வந்திறங்கினான்.

“சலாம் ஸாப்!” என்று சொல்லி, ஏதோ கோயிலுக்குள் பகவான் முன்னால் நிற்பது போல், என பயபக்தியுடன் கைக்கட்டி நின்றான்.

எனக்கு எப்போதுமே பக்தர்களுடன் பேசுவது என்றால், அலர்ஜி. ஆகவே அமைதி காத்தேன்.

தொடர்ந்து உள்ளறையில் இருந்த என் மனைவி மகனுடன் பேச சென்றான். “பாபிஜி! நேற்று இந்தப் பிரதீப் கல்யாணத்துக்கு ஏன் போனோம்னு ஆகிப் போச்சு!” என்று ஒரு பாட்டம் சொல்லி புலம்பினான்.

கல்யாண வீட்டில் நடந்ததை, விலாவாரியாக விவரித்தான். என் மனைவியும், மகனும், ஏதோ சினிமா கதை கேட்பது போல், செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு, கண்களை அகல விரித்துக் கொண்டு, மூக்கு புடைக்கக் கேட்டார்கள். அப்போதுதான் அந்த உண்மையை எடுத்து விட்டான். என்னை எச்சரிக்கைச் செய்வதற்காக, நிர்வாகத்தின் தரப்பில் இருந்து அனுப்பப் பட்ட ரெளடிதான் இந்தப் பிரதீப்பாம்.

திலீப் தொடர்ந்து சொன்னான்: “ஆனா ஸாப், ஒரு குழந்தை மாதிரி! அவரிடம் அப்படியே மகுடிக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்பாய் பிரதீப் அடங்கிப் போனான். அவரை எப்படி எச்சரிப்பது என்பது அவனுக்குக் கடைசி வரை புரியவில்லை. ரொம்ப குழம்பிப் போயிருந்தான்.”

என் மகன், “உங்க பிரதீப், உங்க நிர்வாகம் யாருக்கும் மூளையே இல்லை!! அவங்க பேசாம, அப்பாவை கொஞ்சம் எச்சரிக்கணும்னு, அம்மாகிட்டே சொல்லியிருந்தா, அவங்க காசு கூட வாங்காம, அந்த வேலையைக் கச்சிதமா செஞ்சு முடிச்சு தந்திருப்பாங்க..” என்றான்.

இதைக் கேட்ட எனக்குச் சிரிப்பாய் வந்தது. என் மனைவி முகத்தை ‘உர்’ரென வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஸாப் கடவுளை நம்பா விட்டாலும், பகவானின் அனுக்கிரகம் என்னவோ அவருக்குதான்! பாருங்க! இவருக்குத் தீங்கு இழைக்கும் வேலையை ஒப்புக் கொண்டதினால்தான், இந்தப் பிரதீப் நாய் மாதிரி சுடப்பட்டுச் செத்தான்.”

நான் ஸ்தம்பித்து நின்றேன். எனக்கு அற்புதம் புரியும் வல்லமை உண்டு என்று நானே சற்று நம்ப அரம்பித்தேன். என் மனைவி சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள்.

“ஸாப்புக்கு, கடவுள் நம்பிக்கை இல்லாததில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவரே ஒரு பகவான். அவருக்கு எதற்கு இன்னொரு பகவானின் துணை?”

மேம்ஸாபிடம் கதையளந்த பிறகு, போகும் போது, என்னிடமும், “சலாம் ஸாப்!” என்று பவ்வியமாகச் சொல்லி விட்டு கிளம்பினான்.

###

என் மனைவி அன்று இரவு, மிளகு, உப்பு, வெள்ளைத்துணி, பாதி எலுமிச்சைத் துண்டு, மிளவாய் வத்தல் ஆகியவற்றை இடது கையால் பிடித்து, என் தலையில் மூன்று சுற்று சுற்றி, யாருக்கும் தெரியாமல், இரவில் நடுச்சந்தியில் போட்டு வந்தாள்.

எல்லா ஆபத்தும், திருஷ்டியும், காற்றில் கரைந்து போய் விடுமாம்.. அந்தப் பாதி எலுமிச்சைத் துண்டை யார் மிதிக்கிறார்களோ, அவர்களைப் புதுதிருஷ்டி பிடித்துக் கொள்ளுமாம்.

நான் இடி விழுந்தது போல உட்கார்ந்திருந்தேன். யூனியன்காரன் என்ற அடையாளத்தைக் காட்டிலும், கடவுளின் அனுகிரகத்தைப் பெற்றவன், பகவான் என்ற புது அடையாளங்களைச் சுமப்பதுதான், சிலுவையைச் சுமப்பது போல கடினமாக இருந்தது.

இனி ஏதாவது அற்புதம் செய்து, கடவுள் அனுகிரகத்தைப் பெற்றவன் அல்லது நானே பகவான் என்று திலீப்பிடம் நிரூபித்துக் காட்ட வேண்டும். ஒருமுறை நிரூபித்தால் போதாது, பலமுறை நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்பதான் “சலாம் ஸாப்!” என பிரதீப் பயபக்தியுடன் சொல்வான்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *