கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 13,000 
 

விடிய கருக்கல்ல எந்திரிச்சு சாப்பிடாம கொள்ளாம சந்தைக்கு வெள்ளாடு விற்க வந்த சோனைமுத்தையாவிற்கு, காலையில் இருந்து பச்சத்தண்ணி கூட வாயில் படாத வறட்சியால் எச்சில் முழுங்குவது கூட சிரமமாகி நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி மயக்கத்தை உண்டு பண்ணியது. உக்கிரமாய்ப் பெய்த வெய்யிலால் வியர்த்து உப்பு காய்ந்த உடம்பில் அரிப்பின் ரணத்தை உண்டாக்கியது . அகோரமாய்ப் பசித்து கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உடலெங்கும் சூடு கண்டு எரிந்தது. மயக்கம் வரும்போலிந்தது. ஆனால், இன்னும் ஓட்டியாந்த ஆடு போனியாகவில்லை.

சித்தரேவு சந்தையென்பது, முன்னல்லாம் சுத்துப்பட்டு சம்சாரிகள், குடியானவர்கள் வாழ்க்கையில் வாராவாரம் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். ஊரார்களுக்கு வாரந்தப்பினாலும் சந்தை தப்பாது. சந்தை தப்பினா வாழ்க்கையே தப்பின மாதிரி. சந்தை பாக்கு வெத்தலையிலிருந்து, பட்டுப்பாவாடை வரை அளிக்கும் காமதேனு. காதலும், கத்திரிக்காயும் பரிமாறிக்கொள்ளும் இடம்;. நல்லதையும் கெட்டதையும் நடத்தி வைக்கும் மேடை. உழவோடும் உறவோடும் ஓயாது உழன்ற சீவன்களுக்கு உலகைச் சந்திக்கும் வாசல். உயிரோடும் உணர்வோடும் உலவிய மனிதர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு.

ஆனால், இப்பபெல்லாம் அப்படியில்லை. எல்லாம் காலம் போற போக்கில் மாறி வெறும் பணங்காசு சமாச்சாரமாய்ப் சுருங்கிப் போச்சு. துணிமணி, திண்பண்டம், தட்டுமுட்டுச்சாமான், ரப்பர்வளவி, ராசிபலன், ரங்கராட்டினம், படம்புடிக்குறது, பலூன் விக்கிறது, பஞ்சுமிட்டாய் வியாபாரமெல்லாம் கெடையாது. அது அதுகளுக்கு தெருதப்பாம கடைகள் வந்துருச்சு. பொழுதுபோக்கு வீட்டுக்குள்ளயே டீ.வீ பொட்டி வழியா வந்துருச்சு. சந்தைக்குன்னு போனா.. அங்கங்க கிழவிக காய்கறி விற்;கும். ஒன்னு ரெண்டு அசலூர் வியாபாரிக மளிகசாமான், செலவட இதுக விப்பாங்க. மீதி மொத்தச்சந்தையும் ஆடு, மாடு, கோழி வியாபாரந்தான். அதுக்குத்தான் கூட்டமும் கூடும்.

முதல்மரியாதை படத்துல சிவாசிகணேசன், ராதாவுக்காக ஆடு வித்துத் தருவாருல்ல.. அந்த மாதிரி துண்டு போட்டு ரேட்டு சொல்றதெல்லாம் இப்ப உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது. அவனவன் கத்திக் கூப்பிட்டு, அவனவன் பொருளை வித்துக்க வேண்டியதுதான்;. இந்த சத்தச் சந்தடியில் சோனைமுத்தையாவிற்கு ஆடு விற்க தெரியாமல் இல்லை. ஆனாலும் அவர் கொண்டுவந்த ஆடு இன்னமும் வியாபாரம் ஆகாமல் இருப்பதற்கு, அவர் ஓட்டிவந்தது சினையான ஆடு என்பதுதான் காரணம்.

பொதுவா சந்தையில ஆடு, குட்டி வாங்க வர்றவுங்க.. வீட்டு விசேசத்திற்கோ.. கோவில் திருவிழாவிற்கோ வெட்டுக் குடுப்பதற்காக நல்ல ஊட்டமான கெடா குட்டியா வாங்குவாங்க. வளக்குறதுக்காக ஆடு வாங்க வர்றவுங்க ரொம்ப கம்மி. அப்பிடியே வாங்கினாலும் நல்ல இளங்குட்டியா ஐநூறு, ஆயிரம் ரூவாக்குள்ள வாங்கி வளத்துக்களாம்னுதான் நினைப்பாங்க. வளர்ந்த சினையாட்டை எட்டாயிரம், பத்தாயிரம்னு விலை குடுத்து வாங்க மாட்டாங்க. அதுவும் இல்லாமல் நெறைந்த செனையாடு லெச்சுமி இல்லையா? யாரும் லெச்சுமிய விப்பாங்களா? இந்தாளு விக்க வர்றாருன்னா.. ஆட்டுக்கு ஏதும் நோக்காடா இருக்குமோ..? குட்டி ஈணும் போது செத்துக்கித்துப் போச்சுன்னா.. விட்ட காசு வராதேய்யா.. என பல யோசனையில் யாரும் சோனைமுத்தையாவின் ஆட்டை வாங்கவில்லை.

சோனைமுத்தையா ஆட்டை என்ன ஆசைக்கா விக்க வந்திருக்காரு? அவரு விதி அவர ஆட்டுது. அவருக்கு ஆட்டை விக்கறத தவிர இப்போதைக்கு வேற வழியில்ல.

அவருக்கு மூனு பொம்பளப்புள்ளைக. மூனும் பொட்டையாப் போச்சேன்னு அவரோட ஆத்தா பேசுன பேச்சு தாங்கமாட்டாமயே பொண்டாட்டி பாக்கியம் போய்ச் சேந்துட்டா. அப்பறம் கொஞ்சகாலம் பச்சப்பிள்ளைக கையூனி, காலூனி நடக்குற வரை சோனைமுத்தையாவின் ஆத்தா பெத்தகுறை பெறந்தகுறை தாங்கமாட்டாம பாத்துக்கொண்டாள். பிறகு அவளும் நோக்காட்டுல போய்ச் சேந்துட்டா. அன்னிய தேதியில இருந்து இன்னிக்கு வரைக்கும் பிள்ளைக மூனுக்கும் ஆத்தாளும் அப்பனுமா இருந்து எல்லாம் செஞ்சது அவர்தான். பிள்ளைகளை அவர் தனியா வளக்கபட்;ட கொடுமை தாங்காம அவரை ஊருசனம் வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுச்சு, அவரும் ரெண்டு மூனு பொண்ணப் பாத்தாரு.. என்ன காரணமோ? என்னவோ? அவரு வேற கல்யாணம் பண்ணிக்கல. பிள்ளைக வாழ்கைதான் தன்வாழ்க்கைன்னு வாழ்ந்துட்டார் மனுசன்.

அரைக்காணி நிலமும், ஒத்த ஓட்டு வீடும், விவசாய வேலையுமா வாழ்கை ஓடுச்சு. ஒன்னும் சேத்துவைக்க முடியல. பிள்ளைகளும் உள்ளுர் பள்ளிக்கூடம் தாண்டாத படிப்புத்தான். கடைக்குட்டி தேன்மொழிதான் பன்னென்டாவது வரைக்கும். முழுசாப்படிச்சவ. மூத்தவ காளியம்மாளும், இரண்டாவது தமிழ்செல்வியும் அதுலயும் பாதி. வளந்த பிள்ளைகளை வாழ வச்சுப் பாக்குறதுதான அப்பனுக்கு அழகுன்னு.. இருக்குற வித்துத்தான் ஒவ்வெண்ணா மூனையும் கரையேத்துனார். ஓவ்வொண்னுக்கும் பிரசவத்துக்கு செஞ்சது.. பெருநாளுக்கு செஞ்சதுன்னு போக மீதிச் சொத்தா அவருக்கு இருந்தது இந்த பொட்ட வெள்ளாடு மட்டும்தான். அது போட்ட குட்டிகள வளத்து வித்து சீவனம் நடத்திக் கிட்டு இருந்தவருக்கு இப்ப அதையே விக்க வேண்டியதாப் போச்சு சின்ன மக வாழ்க்கைக்காக.

– செல்லமா வளந்ததுனாலோ.. என்னவோ தேன்மொழி கொஞ்சம் வாயாடி. எதுக்கும் துணிஞ்சு பேசுவா. அவ வெடிச்சுப் பேசுறது பெத்தவனுக்கு ஆம்பளைபிள்ளை இல்லாத கொறைக்கு அவ இருக்கான்னு பெருமையாத்தான் இருந்துச்சு. இப்படி அவ வாயே.. அவளுக்கு வெனையா விடியும்னு அவரு நினைக்கல.

“புருசன்கூட சண்டை… போடான்னு வந்துட்டேன்னு” சாதாரணமா அவ சொன்னா தகப்பங்காரன் சாதாரணமா விட்ற முடியுமா? ஆயிரம் பிரச்சனையின்னாலும் ஆர அமர பேசுனா தீராத பிரச்சனையில்லை. குணம்திரிஞ்ச பிரச்சனையா இருந்தா வெட்டி விட்றலாம். மணம்திரிஞ்ச பிரச்சனையா இருந்தா சொல்றத சொல்லி, செய்யுறத செஞ்சு சேத்துத்தான விடணும். அதுக்குத்தான சீர் செய்யுறதுன்னு பேர் வச்சுருக்காக பெரியவுக. சின்னஞ்சிறுசுக புரியாத்தனததுல சண்டை போடுறது சகசந்தான். அதுக்காக.. கோவிச்சுட்டு வந்த பிள்ளைக்கு கொணஞ்சொல்லி வாழவைக்காம விட்டா.. அவ வாழாத நாளெல்லாம் பெத்தமனசுக்கு சாவுநாள் மாதிரியில்லையா?

அவரு மருமகன் முருகானந்தத்துகிட்ட போயி பேசினார். “அவதான் எதுக்கெடுத்தாலும் சண்ட போடுறான்னு” கொறை சொன்னான். அப்பறம் “நானுந்தான் கோபப்பட்டிருக்கக்கூடாதுன்னு” பிடிதளர்ந்தான். கடைசியில் “அடுத்தவாரம் ஞாயித்துக்கிழமை வந்து கூட்டிட்டு வந்துக்கறேன்னு” உறுதி சொன்னான். பேசிவிட்டு திரும்பும் போது தேன்மொழி மாமியார் “பிள்ளைய அனுப்பிவைக்கும் போது செஞ்சு போடுறேன்னு சொன்ன வளவிய போட்டுதான அனுப்புவீக.. கல்யாணத்தோட வெறுங்கையா அனுப்பிச்சமாதிரி இப்பயும் அனுப்ப மாட்டீகள்ள” ன்னு சாடையா பேசி அனுப்புனா.

இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நாளை சனிவிட்டு ஞாயித்துக்கிழமை மாப்பிள்ளை வந்திடுவார். தேன்மொழியை அனுப்பிவைக்கணும். இந்த ஆட்டை வித்துட்டு ஒரு சோடி வளவி, ரெண்டு பலகாரம் வாங்கிட்டுப் போனா.. நாளான்னைக்கு, மகளுக்கும் புத்தி சொல்லி மருமகனுக்கும் நாலு ஆன வார்த்தை எடுத்துச்சொல்லி பிள்ளைய வாழவைக்கலாம்ங்குற நப்பாசையி;ல வந்தவருக்கு இன்னும் வழி கிடைச்ச பாடில்லை. இந்தா, சந்தை முடியப்போகுது ஆடு இன்னும் விக்கலை.

உடற்ச்சிரமமும், மனச்சிரமமும் துரத்த.. வரும்போலிரு;த மயக்கம் வந்தேவிட்டது. அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துவிட்டார்.

“ இந்தாய்யா.. பாத்து.. இந்த மோரைக்குடி” இது தங்கம்மா. அவளுக்கு நாற்பத்தி ஐந்தலிருந்து ஐம்பது வயதுக்குள் இருக்கும். வைராக்கியமான கிராமத்து பொம்பளை. கடும் உழைப்பால் இருகி இருந்தது அவளது தேகம். வயதுக்கேற்ற முதிர்ச்சியுடனும் அன்பைப் பொழியும் கண்களுடனும் இருந்தது அவள் முகம். சந்தையில் மோர் விற்கும் பொம்பளை. இன்றைய வியாபாரத்தை முடித்துவிட்டு கிளம்பும் வழியில் விழுந்துகிடந்த அவரைப் பார்த்து, காப்பாற்றி இருந்தாள்.

மெல்லத் தெளிந்த சோனைமுத்தையா.. நெஞ்சுக்கூட்டை ஏற்றி இறக்கி ஒரு பெருமூச்சு விட்டார். தொண்டையைச் செருமி மிக மெல்லிய குரலி;ல் அவர் சொல்ல வந்த நன்றியையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை அவள்.

“பாத்தா விவரமான ஆளா தெரியிற.. இப்படி சினையாட்டை விக்க வந்திருக்கியே.. உனக்கென்ன புத்திகித்தி கெட்டுப் போச்சா.”

ஆட்டிற்கு ஆங்காங்கே சந்தை முழுக்க சிதறிக்கிடந்த இலைதழைகளை அள்ளிக் கொண்டு வந்து போட்டாள். அவர் விற்காது நின்ற ஆட்டிற்காக உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டிருந்தார். நெனைச்ச காரியமும் தோற்றுப் போனதாலும், இனி என்ன செய்யனும்னு தோணாததாலும் சோனைமுத்தையா சோகமாய் வெறித்தவாறே இருந்தார்.

“என்னா உம்முன்னு இருக்க..” ஆட்டிற்கு தழை கொடுத்துக்கொண்டே… அவரையே உற்று நோக்கினாள்.

“இல்ல.. எனக்கு ஆட்டை விக்குறதைத்தவிர வேற வழியில்லை அதான்..” என தழுதழுத்தார். சோகம் சொன்னாத்தான ஆறும் என அவருக்கு இருந்தது. பிறர் சோகத்தை ஆதரவு உணர்வுடன் கேட்க ஒரு பக்குவம் வேண்டும். அது அவளுக்கு இருந்தது. மெல்ல ஆரம்பித்து முழுக்கதையையும் சொன்னார். “உம்”; கொடுத்து கேட்க தங்கமாளுக்கு மனசுதாங்கல. நெஞ்சு துக்கத்தில் அடைத்து கண்கள் குளம் கட்டி இருந்தது.

தங்கம்மா சாதிமாறி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவள். அவளை “ஓடிப்போனவளாக” அடையாளப்படுத்திவிட்டு ஊரும் பெத்தவங்களும் ஒதுக்கி வச்சுட்டாங்க. புருசன் வீட்லயும் ஒரு சப்போட்டும் இல்லை. யாரு இல்லேன்னு போனாலும் போகட்டும் புருசன் இருக்கான்ல. அவனே கதின்னுதான் வாழ்ந்தா.

ஆரம்பத்தில் மெல்ல மெல்ல துளிர்க்கத் துவங்கிய அவள் வாழ்க்கை, ஊர் மெச்ச உயரும் முன்னரே வேக வேகமாகக் கருகிப்போனது. அவ புருசனுக்கு கொத்தனார் வேலை. ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகம், நண்பர்கள் கட்டாயப்படுத்தினார்கள் என்று கூறி எப்பயாவது ஒருமுறை குடிக்க ஆரம்பித்தவன்.. பின் எப்பப்பாத்தாலும் குடிக்க ஆரம்பித்தான். புள்ளகுட்டின்னு ஒன்னு உண்டாகுறதுக்கு முன்னாடியே சிறுவயசிலே தங்கம்மாளைச் தவிக்க விட்டுச் அநியாயமாயச் செத்துப் போயிட்டான். ஊரும் உறவும் அவ கருமாயம் பாத்தபின்னாடியும் திரும்பவும் ஏத்துக்கல்ல.. அவுகளுக்கு கவுரவம் பெருசாம்!. கருணையில்லாத மனசுக்கு என்ன கவுரவமோ? கண்றாவியோ? போனா, போங்கடான்னு.. தனிச்சே வாழ்ந்து வர்றா. ஏன்னு கேக்க நாதியில்லாம, எடுத்துப்பேச யாரும் இல்லாம. மனுச மக்க அன்பு கிடைக்காம போச்சேன்னு எப்பவாவது ஏங்கும். அப்பறம் சீ.. போகுது விடுன்னு மனசு தேத்திக்கும். யார் ஒத்துழைப்பும் இல்லாத அவ வாழ்க்கை மோர் விற்று உழைப்பால் ஓடுகிறது. வியாபாரத்துலயும் ஈவு இரக்கமுள்ள மனுசர் பாக்குறது குதுரைக்கொம்பு. அப்படி காலத்துல இப்படி ஒரு பிள்ளைக்காக வாழும் அப்பங் கதையக் கேட்டா மனசு பொத்துக்கிட்டு வரதா? அதான் நெக்குருகிக்போனாள்.

சோனைமுத்தையாவைப் பார்த்துக் கேட்டாள். “சரி… அதுக்காக சினையாட்ட விக்கிறத தவிற, வேற யோசனை இல்லையா உனக்கு..”

“இருக்காத்தா… அதுக்கு அந்த மகமாயி கண்ணு தெறக்கனுமே? ரெண்டு மூனு மாசமா மழயில்லேல.. அந்த மகமாயி கண்திறந்து.. ஒரு மழ பேஞ்சா போதும். கைக்கு காசு வந்திரும்.”

“மழ பேஞ்சா… காசு எப்புடி வரும்?”

“ஊர் பெரியதனம் நிலத்தை உழுகுறதுக்கு சொல்லி வச்சிருக்கேன். மழை பேஞ்சா மறுநாள் உழுதுக்க.. அட்வான்சு தர்றேன்னு சொல்லியிருக்கார். அந்தக்காசு வந்தா சமாளிச்சுருவேன். ஆனா மழ பேஞ்சாத்தான ஆச்சு. பேயலேன்னா போச்சுள்ள.. இன்னும் மருமகன் வர்ற கெடு முடிய இன்னைக்கு ஒருநாள் தான இருக்கு. அதான் இந்த ஆட்டை விக்கலாம்னு…”

தங்கம்மாளுக்கு என்ன சொல்வது.. என்ன செய்;வது எனத்; தோணவில்லை. எதாவது செய்யணும் என்ன செய்யுறது… யோசித்தவளுக்கு சட்டென ஒரு யோசனை..! விருவருவன தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்த தாலியை எடுத்து அவரது கையில் திணித்தாள்.

திகைப்பும்.. மறுப்புமாக தங்கம்மாவைப் பார்த்தார் சோனைமுத்தையா.

அவளே பேசத்துவங்கினாள்.. “இருய்யா.. எந்தாலிதான். அவரு செத்தப்பறம் என் முந்தானையிலே முடிஞ்சு வெச்சிருந்தேன். நா செத்தா தூக்கிப் போடுறவங்களுக்கு ஆகட்டும்னு வச்சிருந்தேன். இப்ப உம் மகளுக்கு வாழ பயன்படட்டும். சும்மா கிடந்ததுக்கு ஒரு பிரயோசனம்.. எனக்கும் வாழ்ந்ததுக்கு ஒரு அர்த்தம்னு இருக்கட்டும். மறுக்காத… பிள்ளைய வாழ வைய்யி..”

செத்துப்பிளைத்த உணர்வா.. அல்லது அந்த மகமாயியையே பார்த்த உணர்வா.. என்வென்று சொல்லத்தெரியவில்லை சோனைமுத்தையாவிற்கு.. பித்துப் பிடித்தமாதிரி அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தொலைந்து போய்விட்ட எல்லாம் திரும்பக்கிடைத்ததைப் போல் இருந்தது. வார்த்தைகள் தொலைந்து போய் இருந்தன. கையெடுத்துக்கும்பிட்டார். அவர் கைகளில் அவள் தந்த தாலி.

“ நன்றி சொல்றதெல்லாம் வேணாம்.. போய் பிள்ளைய வாழ வைய்யி அது போதும்.” – மௌனத்தைக் கலைத்துவிட்டு பதிலுக்கும் எதிர்பார்க்கமால் தனது முந்தானையை உதறி சும்மாடைச் சரி செய்தவாறே.. தலையில் மோர்ப்பானையை எடுத்துவைத்து.. “பொழச்சுக்கிடந்தா.. பெறகு பாக்காலாம் வாரேன்” என வெள்ளந்தியாச் சொல்லி பேச்சற்று உறைந்து போயிருந்த அவரை விலகி ஏதும் நடக்காததைப்போல் தன்பாதையில் எட்டு எடுத்து நடக்கலானாள்.

ஒரு கூப்பிடுதூரம் போயிருப்பாள். சுரசரவென சத்தம்கேட்டு திரும்பிப்பார்;த்தாள். ஓட்டமும் நடையுமா சோனைமுத்தiயா அவள் முன்னாடி வந்து நின்றார். இன்னும் என்னாச்சு எனும் பாவனையில் அதிர்ச்சியுடன் தங்கம்மா அவரைப்பார்த்தாள்.

“நீ எங்க வீட்டுக்கு வந்திரலாம்ல.. வா.. வந்திரு.. வந்திரு எங்கூட..” மேல்மூச்சு வாங்கியவாறே.. அவர் சொல்ல

“என்னாய்யா சொல்லற நீயி? வேணாம்.. ஓ வீட்டுக்கு வர்றதெல்லாம் சரிப்பட்டு வராது. ” என மறுத்தாள்.

“ஏன் வராது. வரும். வா. எதையும் எதிர்பாக்காம நீ செஞ்ச உதவிக்கு நான் காலத்துக்கும் கடன் பட்டிக்கேன். அதுக்கு உசிரக் குடுத்தாலும் தகும். அதுனால அதுக்கு பதில் கைமாறா வெறும் கடமைக்காக உன்னைய என்வீட்டுக்கு கூப்பிடுறேன்னு நினைக்காத… என் மனசு சொல்லுச்சு.. மனசார கூப்பிடுடா அவளைன்னு… வீட்டுக்கு கூட்டிட்டுப் போடா அவளைன்னு.. அதான் கூப்பிடுறேன். வா.” தயக்கமற பேசிக்கொண்டே போனார் அவர்.

அவளுக்குள் தயக்கம் “உன் பிள்ளைக.. இவ யார்னு கேட்டா என்னய்யா சொல்லுவ..?”

“உங்கள பெத்த ஆத்தான்னு சொல்லுவேன்.” ன்னு உறுதிபட சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணர்ச்சிமிகுதியில் உடல் சிலிர்த்து அவருக்கு கண்ணீர் வந்தது. அது அன்பெனும் மாமழை.

அவளுக்கும் அடக்கமுடியாமல் அழுகை வந்தது. அதுவும் அன்பெனும் மாமழை.

மாலை வானத்தில் திடீரென விசு விசுவென பெருங்காற்று வீசி.. மேகங்கருத்து இடி இடித்து பெருமழைத்துளிகள் விழத்துவங்கின. அது மாமழையின் அன்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *