கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 14,613 
 

நோபல் பரிசு பெற்ற கதை!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது.
சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் வேதனையால் வாடிப்போய், கண்ணீரால் நனைந்திருந்தது.

அவர்களிடமிருந்து சற்றே விலகி மறைவாய் நின்றுகொண்டு ஒரு இளைஞன் இயேசுவையே பார்த்து கொண்டிருந்தான்.
யார் அவன்? எதற்காக மறைந்து நிற்கிறான்?
இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக அவன்தான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும். அவன் பெயர் பாரபாஸ்.

மன்னரின் பிறந்தநாளன்று யாரேனும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். அந்த வாய்ப்பு இம்முறை இயேசுவுக்கு வழங்கப்படும் என்று அவரின் நம்பிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. திருடனும் கொலைகாரனுமான பாரபாஸ் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கே தான் விடுதலை செய்யப்பட்டது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனினும், இயேசு நிச்சயமாக ஒரு குற்றவாளியாக இருக்க முடியாது என்று அவன் புரிந்துகொண்டான். அவரை சிலுவையில் அறையவேண்டும் என்ற சூழ்ச்சி திட்டத்தின் காரணமாகவே தான் விடுதலை செய்யப்பட்டிருக் கிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.
பாவச்செயல்கள் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவன் பாரபாஸ். இருந்தாலும், அவனும்கூட இயேசுவின் மரணத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.

பாரபாஸ் விடுதலையடைந்ததை அவனது நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினார்கள். பாரபாஸ் அதில் கலந்துகொண்டாலும் கொண்டாட்டத்தில் அவன் மனதில் மகிழ்ச்சியில்லை.’யார் அந்த இயேசு கிறிஸ்து? எதற்காக அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவர் செய்த குற்றம்தான் என்ன?’
இப்படி பாரபாஸின் மனம் இயேசுவையே எண்ணிக்கொண்டிருந்தது.
ஜெருசலேம் நகரத்தில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தான். இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களை சந்தித்தான். ‘இயேசு, தேவனின் குமாரன். மனிதர்கள் செய்த பாவங்களை தானே ஏற்றுக்கொண்டு தண்டனை அனுபவித்திருக்கிறார்’ என்று அவர்கள் நம்பினர்.
பாரபாஸ் அதில் உண்மையிருப்பதாக ஒப்புக்கொண்டாலும் அவனால் முழுமையாக நம்ப முடியவில்லை. எனினும், மனிதர்கள் செய்யும் பாவச்செயல்களுக்கு மன்னிப்பு உண்டு என்று அவர்கள் நம்பியது பாரபாஸின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. தான் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும், அதன்பிறகு திருந்தி வாழ வேண்டும் என்று அவன் உறுதிகொண்டான்.
ஆனால், அதற்குள் பாரபாஸ் யார் என்பதை இயேசுவின் நம்பிக்கையாளர்கள் கண்டு கொண்டனர். தங்களது குருநாதர் சிலுவையில் அறையப்பட்டது அவனுக்கு பதிலாகத்தான் என்பதால் பாரபாஸின் மீது கோபம் கொண்டு அவனை விரட்டியடித்தனர்.
நகரத்தை விட்டு நீங்கிய பாரபாஸ், மீண்டும் தனது கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டான். அவர்களுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டான். ஆனாலும் அதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. ஜெருசலேம் நகரத்தில் நடந்த சம்பவங்களையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான். பாரபாஸின் கூட்டாளிகள் அவன் தங்களுடன் இருப்பதையே வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். அதை உணர்ந்துகொண்ட பாரபாஸ் திடீரென்று ஒருநாள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யாருக்குமே தெரியவில்லை.

சுரங்கம் ஒன்றில் பாரபாஸ் அடிமையாகி விட்டான். அவனோடு சேர்த்து விலங்கிடப்பட்ட மற்றொரு அடிமையின் பெயர் ஸஹாக். அந்த அடிமை இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவனாய் இருந்தான். இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயேவை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்னமும் கூட பாரபாஸிற்கு இயேசுவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை.
அவர்கள் இருவரும் இயேசுவைப்பற்றி பேசிக்கொள்வது உண்மைதானா என்று அரசரின் பிரதிநிதி விசாரித்தார். ஸஹாக் ‘இயேசுவே என் கடவுள்’ என ஒப்புக்கொண்டான். பாரபாஸோ ‘எனக்கு முழு நம்பிக்கையில்லை’ என்று உண்மையைக் கூறினான்.
இயேசுவை நம்புபவர்கள் அரசின் விரோதிகளாக கருதப்பட்டனர். எனவே ஸஹாக் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டான். பாரபாஸை அந்த அதிகாரி தன் வீட்டிலேயே அடிமையாக வைத்துக் கொண்டார்.யாருடனும் பாரபாஸ் பேசுவதேயில்லை. அந்த அரச பிரதிநிதியின் வீட்டிலிருந்த அடிமை களிலும் சிலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அவர்கள்தான் காரணமென்று குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து பாரபாஸ¨ம் சிறை வைக்கப்பட்டான்.

அங்கிருந்தவர்களில் சிலர் ‘இயேசு வுக்குப் பதிலாக சிலுவையிலிருந்து தப்பித்த பாரபாஸ் அவன்தான்’ என்று அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களும் அவனை புறக்கணித்துவிட தனியாக ஒதுங்கி நின்றான்.
கடைசியில் அவர்கள் எல்லோரையுமே சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
முதல்தடவை பாரபாஸின் சிலுவையை இயேசு சுமந்தார். அவன் தப்பித்துக்கொண்டான். ஆனால் இப்போது அவன் சிலுவையை அவன்தானே சுமக்க வேண்டும்.
செய்யும் தவறுகளுக்கு தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறுக்கு மனம் வருந்தி திருந்த முயற்சிப்பதுதான். திருந்திவாழ விருப்பமில்லாத பட்சத்தில் தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கவேண்டியதுதான்.

– ‘அன்பின் வழி’ என்ற இந்த நாவலை எழுதியவர் ஸ்வீடிஷ் மொழி எழுத்தாளரான பேர்லாகர் குவிஸ்ட். இந்த நாவலுக்கு 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *