கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 14,326 
 

அது ஒரு சனிக் கிழமை. சூரியனின் தங்க கதிர்கள் மறைந்து, நிலவின் வெள்ளி ஒளி படர்கின்ற மாலைப் பொழுது.

அலுவலக பணி தந்த அலுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை மகிழ்ச்சியாக மனதில் அசை போட்டவாறு, எனது பைக்கில் விடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் காற்று பலமாக வீசியது. சில நிமிடத்திலேயே மழையும் லேசாக தூறியது. ஏதோ ஊட்டியில் இருப்பதை போன்று தோன்றியது.

மெல்லிய இருள் சூழ்ந்த அந்த மாலை நேரத்திலும், அந்த ஒரு கடை மட்டும் Tube Light வெளிச்சத்தில் ஒளிர்ந்துக் கொண்டு, என் பயண கவனத்தை சிதறடித்தது.

ஆம். நமது அரசு நடத்தும் நவீன காலத்து கள்ளுக் கடை(TASMAC) தான் அது!

குளிரின் நடுக்கத்திலா அல்லது மனதின் நடுக்கத்திலா என்று தெரியவில்லை என் கால்கள் சரியாக அந்த TASMAC கடை முன்பு பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்தியது.

பெரு மூளை வேண்டாம் என்று கட்டளையிட, சிறு மூளையோ போடா என்றது. விளைவு, TASMACஐ நோக்கி என் கால்கள் பயணமானது!

200 ரூபாவுக்கு ஒரு ஹாஃப்வும், அதற்கு சைட் டிஸாக 100 ரூபாவுக்கு சிக்கன் 65யும் வாங்கி, சரக்கை ராவாக வயிற்றுக்குள் விட்டேன். சரக்கு சரியாக தன் வேலையை காட்டியது. போதை என்னை ஆக்கிரமிக்க தொடங்கியது.

நான் சென்றுக் கொண்டிருக்கும் இந்த பாதைகள் எனக்கு அத்துபுடி. தண்ணீ அடிப்பது, தாகத்துக்கு தண்ணீர் பருகுவது போல எனக்கு சாதாரணமான
ஒன்று தான். ஆதலால், எத்தகைய சூழ்நிலையிலும் என்னால் சரியாக பைக்கை ஓட்டிச் சென்று, வீட்டை அடைந்து விட முடியும் என்ற அசாதாரணமான நம்பிக்கை என்னிடம் இருந்தது.

அப்பொழுது 8 மணியாகியிருந்தது .எனது குருட்டு நம்பிக்கையுடன் ,சாவியை திருகி – Self Startடால் பைக்கை Start செய்து, மறுபடியும் எனது பயணத்தை தொடர்ந்தேன்.

ஆனால், எனது நம்பிக்கை – அவநம்பிக்கையாக மாறியதை சற்று நேரத்திலேயே உணர்ந்தேன்.

வழக்கத்திற்கு மாறாக போதை சற்று அதிகமாகவே என் தலைக்கெறியிருந்தது. வளைந்து நெளிந்து செல்லும் அந்த பாதைகளை என் கண்களால் சரியாக கணிக்க முடியவில்லை. என் கண்கள் சொக்கின. தலை சுற்றியது. பைக்கை ஓட்டியவாரே, என் தலையை இரு முறை உதறினேன்.

ஆனால், தலை மேலும் சுற்றியது. என் கைகள் நடுங்கின. அந்த நடுக்கத்தில் பைக் ஹன்பர் தட்டு தடுமாறி இடது – வலது பக்கமாக திரும்பித் திரும்பி சென்றது.

திடீர் என “பொய்ங்” என்ற ஒலியை எழுப்பியவாறு எதிரே ஒரு லாரி வந்தது. High Beam ஒளியில் லாரியின் லைட் வெளிச்சம் என் கண்களில்பட்டது.

ஏற்கனவே சொக்கியிருந்த என் கண்கள், லாரியின் வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல் சுருங்கி மூடிக்கொண்டது.

லாரியில் விழுந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், நடுங்கிய என் கைகள் பைக் ஹன்பரை 90 டிகிரி இடபக்கமாக திருப்பியது.

இதனால், தடுமாறி சாலையில் இருந்து விலகி சென்று, பைக்குடன் கீழே விழுந்தேன். கீழே விழுந்த போது என் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இரத்தம் என் முகம் எல்லாம் வழிவதாக உணர்ந்தேன். கை, கால்களில் அடிபட்டு கடுமையான வலி இருந்தது.

இரத்தம் வழிய எழுந்து நின்றேன். மயக்கம் வருவது போல இருந்தது. அப்படியே சரிந்து குப்புற விழுந்தேன்.

எவ்வளவு நேரம் அப்படி கிடந்தேன் என்று தெரியவில்லை. மீண்டும் எழுந்தேன். என்னை சுற்றி இருள் சூழ்ந்திருந்தது. எழுந்த எனக்கு ஒரே ஆச்சர்யம்.

ஆம்! சற்று முன் தலையில் இருந்து வழிந்த இரத்தம் இப்பொழுது இல்லை. சற்று முன் கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மாயமாகின. வலியேயில்லை!

என்னை சூழ்ந்திருந்த அந்த இருளில் ஏதோ அமானுசம் இருப்பதாக உணர்ந்தேன். அந்த சமயம் திடீர் என்று நரிகள் ஒன்றுக் கூடி ஊஊஊ என ஊளையிட்டது. நான் பயந்து துடித்து விட்டேன்.

அந்த பயத்துடன் கீழே விழுந்த என் பைக்கை தேடினேன். ஆனால், அந்த இருளில் என் பைக்கை என்னால் காண முடியவில்லை.

நான் இருந்த குழப்பமான மற்றும் அஞ்சிய சூழலில் பைக்கை என்னால் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை. ஆதலால், பைக்கை தேடுவது வீண் என்று தோன்றியது.

சரி, யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று என் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு கைபேசியை எடுத்தேன். கீழே விழுந்ததில் அதற்கும் பலத்த காயம் ஏற்பட்ட, அது வேலை செய்யவில்லை.

இரத்தம் வழிந்தது, திடீர் என்று நின்றது. வலி ஏற்பட்டது, அதுவும் திடீர் என்று மறைந்தது. கனவு காண்கிறோமோ என்று கூட தோன்றியது.

ஒருவேளை உள்காயங்கள் இருக்குமோ என்ற குழப்பம் வேறு முளைத்தது. என் குழப்பத்திற்கு தீர்வு, ஒரு மருத்துவமனை தான்.

ஆதலால், “ரோட்டில் வரும் வாகனத்தை வழிமறித்து Lift கேட்டு மருத்துவமனையை அடைந்து விட வேண்டும்” என்று மனதுக்குள் நானே பேசிக் கொண்டேன்.

ஏதாவது வாகனம் வருகிறதா என்று என் கண்கள் தேடியது. ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த வாகனமும் தென்படவில்லை.

ஏமாற்றம் அடைந்த நான், சிறிது நேரம் காத்திருந்தேன். இருள் சூழ்ந்த அந்த இரவு நேரத்தில் அங்கு மயான அமைதி நிலவியது. அத்தகைய சூழ்நிலையும், எனது தனிமையும் ஒரு திகிலை என் மனதிற்குள் உருவாக்கியது.

சற்று பயத்தில் நடுங்கியே போயிருந்தேன் என்று சொல்லலாம். அதுவரை கடவுள் நம்பிக்கையற்ற நான், கடவுளை என் துணைக்கு அழைத்தேன்.

அந்த இருளையும், அமைதியையும் குலைக்கும் வண்ணம் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. சற்று நகர்ந்து சென்று, எனது இடது கையின் பெருவிரலை கீழ் நோக்கி காண்பித்து Lift கேட்டேன்.

ஆனால், அந்த கார் சற்றும் வேகத்தை குறைக்காமல் என்னைத் தாண்டி சென்றது. “ஒரு மனிதன், உதவி கோருவதை” கூட கண்டும், கண்டு கொள்ளாமல் சென்ற அந்த கார்காரரின் சுருங்கி போன அந்த மனிதாபிமானத்தை எண்ணி வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.

இதன் பின்னரும் கூட சில வாகனங்கள் என்னை கடந்து சென்றது. ஆனால், என்னை கண்டு கொள்ளாமலேயே அனைவரும் சென்றனர். யாருக்கும், எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை போலும்!

Lift கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுவதும் எனக்கு அற்று போனது. வருத்தத்துடன், சிறிது தூரம் நடந்து பார்க்கலாம் என்று அந்த ரோட்டோரம் என் நடை பயணத்தை தொடங்கினேன்.

சில அடி தூரம் சென்றிருப்பேன், அங்கு விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கின் அருகில், இரும்பு கம்பி மேல் பிலஷ்டிக் ஆஸ்பட்டாஸ் கூரைப் போட்ட ஒரு பஸ் Stop இருந்தது.
அதன் கீழ் ஒரு சிமன்ட் பேன்ச் ஒன்றும் போடப்பட்டிருந்தது.

சரி விடிந்த பிற்பாடு யாரிடமாவது உதவி கேட்கலாம், அதுவரை இதில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று அதில் அமர்ந்தேன்.

சற்று கண்களை மூடி தூங்கலாம் என்று எண்ணினேன். அடிபட்டும் என் உடல் டயர்டு ஆகவில்லை என்பதாலோ என்னவோ தூக்கம் வரவில்லை.

பென்சை விட்டு எழ மனமில்லாத நான், கண்களை மூடி அங்கேயே நேரத்தை கழித்தேன். கண்களை மூடி ஓய்விலேயே முழுமையாக மூழ்கியிருந்தேன்.

காலச்சக்கரம் நகர, நேரமும் நகர்ந்து – காலை பொழுதும் விடிந்தது. என் ஓய்வை கலைக்கும் வண்ணம் மக்களின் சப்தம் பெரும் திரளாக கேட்டது.

கண்களை திறந்து பார்த்தேன். பஸ் Stopல் இருந்து சிறிது தூரம் தள்ளி மக்கள் கூட்டமாக கூடி எதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அய்யோ! யாராவது நம்மை போலவே போதையுடன் வந்து விபத்துக்குள்ளாகிவிட்டனரா?” என்ற பதட்டத்துடன், மக்கள் கூட்டத்தை நோக்கி நடந்தேன்.

கூட்டத்தை நெருங்கிய சமயம், 108 ஆம்புலன்சும் அங்கு வந்தது. ஆக, அங்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருப்பது உறுதியாக தெரிந்தது.

ஆம்புலன்சில் இருந்து இரு ஊழியர்கள் Structure உடன் இறங்கினர். அவர்களை பார்த்ததும் மக்கள் கூட்டம், அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியது.

அந்த ஊழியர்கள் பின்னாலேயே நானும் சென்றேன். அங்கு ஒரு உடல் குப்புறக் கிடந்தது. ஊழியர்கள் அந்த
உடலை Structureல் ஏற்றினர்.

அந்த உடலின் முகத்தை கண்ட நான் அதிர்ந்து போனேன்! இடியே என் தலையில் விழுந்தது போல இருந்தது!

அந்த உடல் வேறுயாரோ மூன்றாம் நபருடையது அல்ல. அது என்னுடையது! ஆம்! மக்கள் கூடி நின்ற இடம், நேற்று எனக்கு விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் தான்!

கீழே கூர்மையாக இருந்த பாறையில் என் தலை மோதியதில், நேற்றே நான் இறந்துவிட்டேன்!

ஏன் எனக்கு ஏற்பட்ட இரத்த கசிவு திடீர் என்று நின்றது, ஏன் எனக்கு வலி ஏற்படவில்லை, ஏன் யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை என்று இப்பொழுது தான் எனக்கு புரிந்தது!

ஏன்யென்றால், நான் உடல் அல்ல; உடலை விட்டு பிரிந்த ஆன்மா!

ஆம்! கீழே விழுந்தது முதலில் எழுந்த நான், மயக்கம் ஏற்பட்டதால் கீழே விழவில்லை. உயிரை விட்டதால் தான் கீழே விழுந்தேன்.

உயிருடன் இருக்கும் போது புரியாத ஒரு விஷ்யம் எனக்கு இப்பொழுது புரிந்தது. “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கெடு; அதை விட, நம் உயிருக்கு கேடு.” – என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *