கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 17,423 
 

குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்த பேருந்திலிருந்து இறங்கியதுமே, இந்த தடவைக்கான மாறுதலாய் நெடுக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரே மணல் தான். ஒரு தடவை தெருவில் நடந்து போய்விட்டு வந்தால், காலெல்லாம் புழுதியாகிவிடும். சைக்கிளில் போய்விட்டு வந்தால் மேல் மூச்சு… கீழ்மூச்சு வாங்கும்.

anthimam pic1அந்தளவிற்கு மணலிருக்கக் காரணம் பக்கத்திலேயே கடல். கடலிருக்கும் ஊரில், அதுவும் கடலுக்கு பக்கத்திலேயே குடியிருப்பதன் அனுபவங்கள் தனியானது. கடல்… கரையோர தென்னந்தோப்புகளின் வரிசை… உப்பளம்… மாலை நேரத்தில் ஊர் சிநேகிதர்களுடன் வத்தையில் அமர்ந்தபடியான நேரச்செலவினங்கள்- பெருமாள் கோவில் வெளிப்பிரகார மணல்வெளி என்று சிறுவயதில் ஊர் எனக்குள் நிறைந்து கிடக்கும்.

ஊருக்கு என்றிருந்த ஒரேயொரு டூரிங் டாக்கீஸில் தினசரி ஒரு படம் என்ற வழக்கத்தில், தண்டோரா போட்டுக்கொண்டு வீசிவிட்டுப் போகும் நோட்டீசை பொறுக்க மொய்யாய் மொய்க்கும் சிறுவர்களில் நானும் ஒருவன். ஆறு மணிக்கெல்லாம் கடைத்தெருவில் கூட்டம் சேரத்துவங்கி, மெல்ல மெல்ல இருட்டுவதற்கும், கூட்டம் தியேட்டர் வாசல் சென்று சேர்வதற்கும் சரியாய் இருக்கும். தரை பெஞ்ச் என்றிருக்கும் இரண்டு வகையில் சித்தப்பாவோடு போனால், பெஞ்ச் டிக்கெட்டும், கருப்பு கலரும் நிச்சயம்.

ஒவ்வொரு தடவை ஊருக்குப் போகும்போதும், ஒவ்வொன்றாய் இல்லாமல் போய் நகரத்தின் அத்தனை சாயல்களையும் உள்வாங்கிக் கொண்ட ஊரின் நவீனத்திற்கு, டூரிங் டாக்கீசும் பலியானது பெரிய சோகம்.

வேலை, படிப்பு, திருமணமாகி இன்னும் சிலர் இறந்தென்று… பழைய முகங்கள் தென்படுவது குறைந்து போன ஊருக்கு, இப்போதெல்லாம் கட்டாயத்தின் பேரில் சென்று வருவதோடு சரி.

இப்போது போவது கூட முரளியின் (தூரத்து உறவு) கல்யாணத்திற்காகவும், பாட்டியை பார்த்துவிட்டு வந்ததுபோல் இருக்கும் என்பதற்காகவும்தான்.

சிறுவயதில் திருமணம் முடிந்து வந்ததிலிருந்து, தன் வாழ்நாளின் பெரும்பகுதி இந்த ஊரிலேயே கழிந்து போய், கண்பார்வை இழந்து, ஒரு ஓரமாய் முடங்கிபோயென்று பாட்டிக்கு தொண்ணூறுக்கும் அதிகமான வயது. அப்பாவும், சித்தப்பாவுமென்று இரண்டே பிள்ளைகளில், சித்தப்பாவுக்கு குழந்தையில்லை என்பதால் பாட்டிக்கு என் மேல் கொள்ளைப்பிரியம்.

பரீட்சை லீவிற்கு நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் தலைகால் புரியாது பாட்டிக்கு. “நீ வந்துட்டியா… உம்பாட்டிக்கு இனிமே இடுப்புல சேலை நிக்காது” என்று சித்தப்பா கேலி செய்ததுண்டு.

கடலுக்குப் போகக் கூடாது ( பாட்டியோடு ஊரணிக்குப் போய் குளிப்பது விதி விலக்கு), பையன்களோடு தெருப்புழுதியில் விளையாடக்கூடாது, சைக்கிளை எடுத்துக்கொண்டு வெய்யிலில் சுற்றக்கூடாது என்று, நிறைய “கூடாதுகள்” சித்தப்பா போட்டு வைத்தாலும், இது எல்லாமே நடக்கத்தான் செய்யும்.

தோப்பிற்குப் போய் மாங்காய் பறித்துத் தின்றதற்கு அடையாளமாய் உதட்டோரத்து புண்ணும், கடலில் சென்று ஆட்டம் போட்டதற்கு அடையாளமாய் கண் சிவந்தும் சித்தப்பா கண்டுபிடிக்க ஏதுவாகிவிடும். அந்த மாதிரி நேரங்களில், பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொள்வேன்.

“போடா தெரியும். சின்னப்புள்ளைங்கன்னா அப்படியிப்படித்தான். உன் வேலையைப்பாரு” என்று சித்தப்பாவை அதட்டி அனுப்பிவிட்டு, என் பக்கமாய் திரும்பும் பாட்டியின் விசாரணை.

“எதுக்குடா தோப்புக்கு போனே?”

“சும்மா விளையாடத்தான். முரளி தான் சொல்லச் சொல்லக் கேட்காம மாங்கா பறிச்சுக் கொடுத்தான்.”

“பறிக்கிறது தப்பில்லே. சாப்பிடறதும் தப்பில்லே. அதை காம்பை பிச்சுட்டு பட்டைல தேய்ச்சப்புறம் சாப்பிட்டா, பாலும் இருக்காது. புண்ணும் வராது.”

சூட்சமத்தை சொல்லிக் கொடுப்பாள் பாட்டி. நிற்கும் ஒன்றிரண்டு தென்னை மரங்கள் தவிர, சங்கு புஷ்பம், மருதாணி, மாதுளை, அரை நெல்லியென்று பாட்டியின் பராமரிப்பில் கொல்லைப்புறமே பசேலென்றிருக்கும். சங்கு புஷ்பம் கோவிலுக்கானது. தினசரி போய்ச்சேர்ந்துவிடும். பொறித்த மோர் மிளகாய் வத்தல் கலந்த தயிர் சோறுக்கும், அரை நெல்லி ஊறுகாய்க்கும் சாப்பாடு வயிறு முட்டிவிடும். மரத்தில் கட்டிய கயிற்று ஊஞ்சலில் ஆடியபடியே பாட்டி சொல்லக் கேட்ட கதைகளில் நிறைய மனதிற்குள் இன்னும் படிந்து கிடக்கிறது. வீட்டின் மொத்தமும் பாட்டியின் விரலசைப்புக்கு கட்டுப்பட்டிருந்த நாட்கள் அது.

சித்தப்பா கண்டிப்புக்கு பேர் போனவர். கோபம் பழியாய் வந்து தொலைக்கும். யாருடனும் ஒட்டுறவின்றி, எதற்கெடுத்தாலும் மூக்கு விடைக்க கத்தித் தீர்ப்பதுண்டு. சித்தி நேரெதிர். மௌனி.

கல்யாணத்துக்கு கிளம்புகிற அவசரத்திலிருந்த சித்தப்பா. என்னைப் பார்த்ததும், சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பின் “சீக்கிரமா மண்டபத்துக்கு வாடா. நேத்தே உன்னை முரளி எதிர்பார்த்திட்டிருந்தான்” என்றபடி வெளியேறினார்.

பாட்டியிடம் நான் வந்திருப்பதைச் சொன்னதும், தடவித்தடவிப் பார்த்து என்கையைப்பற்றிக் கொண்டாள்.

“ஏம்பா இத்தினி தாமசம்? நேத்தே வந்திருக்கக்கூடாது. வேற யாரெல்லாம் வந்திருக்கா?”
“நான் மட்டுந்தான் பாட்டி”

“ஏதாவது கல்யாணம் காட்சின்னாதான் இந்தப் பக்கம் வர்றதுன்னு வச்சிருக்கியாக்கும்?”

“அப்பிடின்னு எல்லாம் ஒண்ணுமில்லே. லீவு போடறது சிரமமாயிருக்கு. அதான்.”
“ரெண்டு மூணு நாள் இருப்பில்ல?”

“இல்ல பாட்டி இதுக்கே சம்பளம் போயிரும். சாயந்தரம் கிளம்பணும்”

“கால்ல வெந்நீர் ஊத்திக் கிட்டு வந்தியாக்கும்?”

“நீ எப்படியிருக்க பாட்டி?”

“எனக்கென்னடா போ. போய்ச் சேராம இன்னும் இருக்கேன். கண்ணு போய், கைகாலெல்லாம் இழுத்துட்டுப்போய் எல்லாருக்கும் பாரமா”

“ஏன் பாட்டி அப்படிச் சொல்ற?”

“போய்ச் சேர்றதுக்கு வேளைவராதப்ப, வேற என்னத்தடா சொல்றது?”

பேசிக்கொண்டிருக்கும் போது சித்தி கொண்டுவந்து வைத்துவிட்டுப் போன காபியில், சூடு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

பேச்சு முரளியின் பக்கம் திரும்பியது.

“சின்னப் பையனா இருந்தவண்டா. பயங்கரமான சுட்டிதெரியுமா அவன். தண்ணியக்கொட்டி, கிடைக்கிறதெல்லாம் இழுத்துப்போட்டு உடைச்சின்னு, அவங்கம்மாவை ஒரு வேலை செய்யவிடமாட்டான். எங்கிட்ட கொண்டுவந்து விட்டுட்டுத்தான் அவங்கம்மா வீட்டு வேலைய பாக்கணும். அங்க வாசப்புறமா கிடக்குதுபாரு ஆட்டுரலு, அதுலதான் அவன அப்பப்ப கட்டிப் போட்டுருவேன். அதுக்கு பயந்துட்டு நான் எப்ப கயிறு எடுத்தாலும் போதும், கம்முன்னு ஒரு இடத்துல உட்கார்ந்துப்பான். அவனுக்கு இப்ப கல்யாணம். நல்லாயிருக்கட்டும். காலந்தான் எத்தினி சீக்கிரமா போகுதுபாரு?”

கடந்துபோன நிகழ்ச்சி சுருளுக்குள் புகுந்த பாட்டி கைநீட்டிய இடத்தில் ஆட்டுரல் இல்லை. அது இந்நேரம் தேவை தீர்ந்துபோய் எங்காவது ஒரு மூலையில் கிடக்கலாம். பாட்டியைப் போலவே. ஆனால் பாட்டியைப் பொறுத்த அளவில், கண் போனதற்கு முன்பிருந்த மாதிரியே எல்லாமுமே இன்னமும் இருப்பதாக நினைவிலிருக்கும் போலிருக்கிறது.

மண்டபத்திற்குள் நுழைந்ததும் யாரிடமும் பேச்சுக்கொடுக்காமல் நேரடியாக முரளியின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். “நேற்றே ஏன் வரவில்லை?” என்று அவன் கோபப்பட்டபோது, அவனை சமாளிப்பதற்கான பதிலேதும் என்னிடம் இல்லாமல் போனது.

மணப்பெண்ணைப் பார்த்ததும் கொஞ்சமும் தாமதமின்றி கனகவல்லியின் ஞாபகம் வந்தது. கனகவல்லி எங்கள் சிறுவயதுக் கூட்டணி. முரளிக்கு அவள் மேல் நிறைய பிரியமுண்டு. அவளை எப்போதும் சீண்டிக்கொண்டேயிருப்பான். அவளும், முரளி தன்னை சீண்ட வேண்டும் என்று விரும்புகிறவளாகவே இருந்தாள்.

நாள்பட நாள்பட அவர்களுக்குள்ளான நெருக்கம் அதிகமாகி, நான் ஊருக்கு போகும்போதெல்லாம் அவளைப்பற்றிச் சொல்வதற்கென்று நிறைய கதைகள் வைத்திருப்பான். இடையில் என்ன நடந்ததோ கனகவல்லிக்கு வேறு இடத்தில் திருமணமாகியிருந்தது. அவளும் வந்திருக்கக்கூடுமோ என்று சுற்றும் முற்றும் தேட, பின்புறத்தில் கைக்குழந்தையுடன் யாருடனோ பேசிக்கொண்டேயிருந்தாள். குழந்தை நிறங்கம்மியென்றாலும் துருதுருவென்றிருந்தது.

என்னைக் கவனித்ததும் “எப்ப வந்தீங்க?” என்கிற ஒற்றை விசாரிப்போடு நிறுத்திக்கொண்டு நகர்ந்து விட்டாள். மேற்கொண்டு என்னிடம் எதுவும் பேச ஏன் தோன்றவில்லை அவளுக்கு என்பது தெரியவில்லை. முரளியிடமோ, கனகவல்லியிடமோ இழப்பிற்கான எந்த வாட்டமும் தெரியவில்லை. எனக்குத்தான் தேவையற்று சில சம்பலங்கள் ஞாபகத்திற்கு வந்து போனது.

எல்லாம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்தபோது வீடு அல்லோலகல்லோலப்பட்டது. சித்தப்பா உச்சஸ்தாதியில் கத்திக்கொண்டிருந்தார்.

“என்ன சித்தி என்னாச்சு?”

“ஒண்ணுமில்லப்பா”

“ஒண்ணுமில்லாததுக்கா சித்தப்பா இத்தினி கோபப்படணும்?”

“என்னை என்ன பண்ணச் சொல்ற? கல்யாண வீட்டிலிருந்து வந்ததும் வராததுமா உங்கபாட்டி திங்கறதுக்கு எதுவும் எடுத்துட்டு வந்திருக்கியான்னு கேட்டாங்க. இல்லேன்னதும், நீ ஊர்ல இருந்து வந்திருக்கியே. நீ வாங்கிட்டு வந்ததையாவது குடுன்னு கேட்கவும் ஆரம்பமாயிருச்சு.”

“திங்கிறதுக்கு கேட்டதுக்கா இவர் இத்தினி கத்தி ஆர்ப்பாட்டம் பண்றார்?”

“உனக்கு இது புதுசு. எங்களுக்கு பழகிப்போச்சுப்பா”

சித்தப்பா விடுவதாயில்லை.

“யாரு போனாலும், வந்தாலும் ஏதாவது இருக்கா? ஏதாவது இருக்கான்னுட்டு. அப்படி என்ன அந்த நாக்கு கேக்குதாம். செத்துத் தொலையாம இருந்துக்கிட்டு. இருக்கிறவங்க உசுர வாங்கிகிட்டு”.

கோபத்தில் வார்த்தைகள் வரிசையாய் வந்து விழுந்தன. பாட்டியின் கண்கள் கலங்கிப் போயிருந்தது.

“அழாதபாட்டி. எதுவும் இருந்தாதான் கொடுத்திருப்பாங்கல்ல.”

“கல்யாண வீட்டில இருந்து வெறுங்கையோடவா அனுப்புவாங்கன்னு கேட்டேன். இல்லேன்னதும் நீயாவது வாங்கிட்டு வந்திருப்பியோன்னு கேட்டேன். இது தப்பா? ஆடி ஓடி இருந்தவடா. இப்படி ஒரே இடத்துல சவமா கிடக்கிறதுக்கு முடியலை. அதைத்தின்னா எப்படியிருக்கும்? இதச்செஞ்சா எப்படியிருக்கும்னு தோணித்தொலைக்குது.”

“………………….”

“பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லே தெரியுமா? காலாகாலத்துல போய்ச் சேரலைன்னா பாட்டும், பேச்சுந்தான். எதுக்குத்தான் இன்னும் போய்ச்சேராம கிடக்கிறேனோ? பெத்தபுள்ளயே செத்துத் தொலையாமன்னு சொல்றதக் கேக்கறதுக்கா? எப்படியெல்லாம் வளர்த்திருப்பேன் தெரியுமாடா அவனை? உனக்குக் கூட பாட்டிக்குன்னு எதுவும் வாங்கிட்டு வரணும்னு தோணாம போச்சில்ல?”

“அவசரத்துல மறந்துட்டேன் பாட்டி என்ன வேணும்னு சொல்லு. வாங்கிட்டு வந்து தர்றேன்.”

“இப்ப ஒண்ணும் வாங்க வேணாம். பக்கத்துல யாரும் இருக்காங்களா?”

“யாருமில்லே. எதுக்கு?”

“ஒரு பத்து ரூபா இருந்தா கொடுத்துட்டுப் போடா”

தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து மெல்ல மெல்ல விலகியதாயிருக்கும் பாட்டியின் நிலை சுரீரென்றது. தனிமையும், எதிர்பார்ப்பும் ஒன்று சேர்ந்த வயோதிகத்தில், இருத்தலின் மீதான அவநம்பிக்கை நிழலின் வலி உணர முடிந்தது.

அவரசரத்தில் வந்ததாகச் சொன்னாலும், பாட்டிக்கென்று எதுவும் வாங்கத் தோன்றவில்லை என்பதே உண்மை. பாட்டியின் எதிர்பார்ப்பும் தெரியாதென்பது கூடுதல் காரணம்.

மேற்கொண்டு எதையும் யோசிக்கத் தோன்றாமல், பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து பாட்டியின் கையில் நான் கொடுக்கவும், ஈசிசேரை எடுக்க வந்த சித்தப்பா அதைப் பார்த்து விடவும் சரியாக இருந்தது.

எனக்குள் ஏற்பட்ட பய உணர்வின் காரணமாக லேசாக வியர்க்க ஆரம்பித்தது. சம்பவத்தின் விபரீதம் உணராத பாட்டி, பணத்தை தலையணைக்கு கீழ் பத்திரப்படுத்துவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

சித்தப்பாவிடம் “நானாகத்தான் பணம் கொடுத்தேன்” என்று சொல்வதன் மூலம், பிரச்சனையை சமாளிக்கலாம் என்று முயற்சித்து, வார்த்தைகள் வெளிப்படாமல் சொல்ல முடியவில்லை.

இருப்பது போதாதென்று என் கவனக்குறைவால்வேறு பாட்டிக்கு மேலும் பேச்சு விழப்போகிறதே என்று நினைக்கும்போது வருத்தமாக இருந்தது.

ஆனால் எதிர்பார்த்ததைப் போலில்லாமல், சித்தப்பா உடனடியாக அதைப் பெரிது பண்ணவில்லை. வீடு முழுவதும் தவிர்க்க முடியாத இறுக்கமும், அமைதியும் அப்பிக்கொண்டது.

சமாதானப்படுத்தும் விதமாக சித்தி அருகில் வந்தமர்ந்து பாட்டியின் கையைப் பற்றிக் கொள்ளவும், ஆற்ற முடியாதவளாக சித்தியின் கையை பாட்டி உதறியதும் அடுத்தடுத்து நடந்தது.

குழந்தைகள் இல்லாததால் ஏற்பட்ட ரணமும், ஏக்கமும் நாளடைவில் வீட்டின் சகஜ நிலைக்கு எதிராக போய்விட்டதும், தன் பிள்ளைகளுக்கு தான் பார்த்துப் பார்த்து செய்ததைப் போல, தன் குழந்தைகளும் தனக்கு செய்வார்கள் என்கிற பாட்டியின் எதிர்பார்ப்பும், மனதின் எட்டாத மூலைகளுக்குள்ளிருந்து சின்னச்சின்ன விஷயங்கள்கூட பெரிதாவதற்கு காரணமாகிறது.

அதற்காக சித்தப்பாவும் அத்தனை பெரியவார்த்தை சொல்லியிருக்கவேண்டாம்.
மௌனங்களுடனான இடைவெளியோடு நேரம் மிக மெதுவாக போய்க்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு பின் அங்கிருக்க இயலாமல் ஊருக்குப் புறப்பட்டேன்.

பாட்டியிடம் சொல்லப்போக, பழையபடி கைகளை இறுகப்பற்றிக்கொண்டு “உடம்பைப் பார்த்துக்கோடா. வயசுலயே கல்யாணத்தைப் பண்ணிக்க. அடிக்கடி வந்துட்டுப்போடா. அடுத்த தடவை நீ வரும் போது நானிருக்கேனோ, இல்லியோ?” என்ற பாட்டியின் குரல் தழுதழுத்திருந்தது.

சித்தி பார்த்த பார்வையில் “இன்னொரு நாள் கூடுதலா இருந்திட்டுப் போகக்கூடாதா?” என்கிற கேள்வி இருந்தது.

பாட்டிக்கு பணம் கொடுத்ததைப் பற்றி திரும்பவும் சித்தப்பாவிடம் சொல்ல நினைத்து. அவரிடமிருந்து என்ன வெளிப்படும் என்பது தெரியாத பயத்தில், எதுவும் சொல்லாமல் கிளம்பினேன். நான் வந்த பிறகு சித்தப்பா இந்த விஷயத்தை பெரிது பண்ணக்கூடும். இன்றில்லாவிட்டால் நாளையோ, இன்னொரு நாளோ, இன்னொரு சந்தர்ப்பத்திலோ பாட்டியை சத்தம் போடலாம்.

“நான் ஏதோ உனக்கு எதுவும் பண்ணாத மாதிரி, வர்றவங்க, போறவங்க கிட்ட எல்லாம் காசுகேட்டு வேற அசிங்கப்படுத்திக்கிட்டு திரியறயா?” என்கிற வார்த்தைகள் அப்போது நிச்சயமாக இருக்கக்கூடும்.

எப்படியும் பாட்டி இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

உடனடியாக இது சம்பந்தமாய் சித்தப்பா ஏன் எதுவும் பேசவில்லை என்பது கேள்வியாகவே இருந்தது. போக, பாட்டியிடம் பணம் இருந்தால் பாட்டிக்குத்தேவைப்படுவதை வாங்கிக்கொண்டு வந்து தரும் நபர் யாராக இருக்கும் என்பதையும் என்னால் யூகிக்க முடியவில்லை.

பாட்டிக்கென்று எதுவும் வாங்கிக்கொண்டு போகவில்லை என்கிறபோது, என்மீது எனக்கே கோபம் வந்தது. “அடுத்த தடவை நீ வரும்போது நானிருக்கேனோ இல்லையோ” என்கிற வார்த்தைகள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தது.

அடுத்த தடவை ஊருக்குப்போகும் போது நிச்சயமாய் பாட்டிக்கென்று எதையாவது வாங்கிக்கொண்டு போகவேண்டும் என்று தோன்றியது. கூடவே முரளியின் கல்யாணத்திற்கு போயிருக்க வேண்டாமென்றும்….

– “செம்மலர்” இலக்கிய இதழில் ஏற்கனவே பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *