கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 26,368 
 

அம்மா வரலட்சுமி போன வாரம் இறந்துவிட்டாள். இறப்பு என்பது தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு சம்பவம். உற்றவருக்கோ உயிர்வேதனை. இந்த ஐம்பத்தெட்டு வருடவாழ்க்கையில் அம்மாவின் சிரமங்களையும் வேதனைகளையும் நான் நன்கு அறிவேன்.

எனக்கு ஐந்துவயதாகும்போது என் அப்பா தவறியதும் அப்போது பத்துவயது அண்ணன் ரகுவையும் என்னையும் ( ராம் ) எப்படி வளர்ப்பது என்று அம்மா குமுறி அழுததும், என் அப்பாவின் சாவுக்கு வந்தவர்கள் எங்கே இன்னும் ஒருநாள் இருந்தால் எங்கே குடும்பப்பொறுப்பை சிறிதாவது ஏற்கவேண்டி வருமோ என்று பயந்து அன்றைக்கே பல்வேறு காரணங்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டதும் அம்மா கதைகதையாகச் சொல்லி எங்களிடம் அழுதிருக்கிறாள்.

அப்பா இறந்தபோது அவர் விட்டுப்போனது இரண்டு தறிக்குழிகளும் இரண்டு படைமரங்களும் ( பட்டுச்சேலைத்தறியில் நெய்து முடித்துக்கொண்டே வரும் சேலையை சுருட்டிக்கொண்டே போகும் நீண்ட நால்பட்டை மரப்பலகை ) ஒரு ராட்டினமும் ஐந்து திருவட்டங்களும்தான். அவர் இருந்த வரையிலும் தறித்தொழிலில் முன்னேற்றம் என்பதைக் காணாமலேயே போய்விட்டார். காலமுச்சூடும் கூலிக்கு மாரடித்தே வாழ்க்கையை முடித்தவர். இப்போது ஏன் என் தந்தையை நினைக்கிறேன்..? ஒரு திறமையான கணவனாயும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் குடும்பப்பொறுப்பு மிக்க தலைவராகவும் இருந்திராத அவரை இப்போது நினைத்தாலும் கோபம் வரத்தான் செய்கிறது.

ஒருவாரம் ஆன நிலையில் இன்று காலை பட்டுசேலை காண்ட்ராக்டர் வந்து துக்கம் விசாரிக்கும் சாக்கில் அண்ணனிடம் இரண்டு தறிகளிலும் இருக்கும் முடிவுபெறாத சேலைகளின் அவசியத்தை நினைவுபடுத்திவிட்டுப் போய்விட்டார். வசதி உள்ளவர்களுக்குத்தானே துக்கம் எல்லாம் வருடக்கணக்கில் நீளும்..? அன்றாடம் சாப்பாட்டுப் பிரச்சினைகளில் காலம் தள்ளும் எங்களைப்போன்ற ஏழைகளுக்குத் துக்கம் ஏது..?

அம்மா இருந்தவரை அம்மா ஒரு தறியையும் அண்ணன் ஒரு தறியையும் நெய்துவந்தார்கள். அண்ணன் எட்டாவது கூட முடிக்கமுடியாத நிலையில் தனியாக எங்களை வளர்க்கக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு உதவியாக இன்னொரு தறிக்குழியில் தள்ளப்பட்டுவிட்டார்.

தறிக்குழியில் ஒருமுறை விழுந்தவர்கள் மீண்டதில்லை என்பது எங்களைப்போன்ற நெசவாளர்களின் சாபம். கைகள் கண்கள் கால்கள் என எல்லாமே ஒற்றுமையாய் ஒருங்கிணைந்த நிலையில் இருந்தால் தான் பட்டுச்சேலை நெய்வது என்பது சாத்தியமாகும். அதிலும் பாதக்கோல்களை ( ஓடும் நூல் பாவினை மாற்றிப்பின்னலிட கால்களால் மிதிக்கும் வலது இடது மிதிகள். மரத்தால் ஆன பாதரட்சைப் போல இருக்கும். ) மாற்றி மாற்றி மிதித்து இரண்டு கைகளையும் இயந்திரம்போல் வலதும் இடதுமாக இயங்கவைத்து நூல்கண்டு பொருந்திய தறிநாடாக்களை ( மூங்கில் துண்டில் செய்யப்பட்டு கூர்மையான தந்தம் அல்லது துருப்பிடிக்காத இரும்பு மூக்கு வைக்கப்பட்ட கோல்கள் ) வலதும் இடதுமாக லாவகமாகப் பிடித்து அந்த வேகத்துக்கேற்ப சரியான நேரத்தில் ஜரிகை பார்டர்களை உருவாக்கும் ஜுங்கு எனப்படும் நூலியந்திரங்களையும் இயக்கி ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு மணிவரை தறி நெய்தால் ஐந்து நாட்களில் ஆயிரம் ரூபாய் பார்க்கலாம். தறி போடும் ஒருவரைத்தவிர இன்னொருவர் பட்டு நூல்களை சரிபார்த்து பட்டையத்தில் இழைத்து பின் ராட்டினத்தில் கண்டுகளைப் பொருத்தி நூல்கண்டுகளாக மாற்றி அமைக்க இன்னொரு உதவியாளர் தேவைப்படும்.

எப்படி எல்லாம் என் தாய் தனியாகக் கஷ்டப்பட்டு எங்கள் இருவரையும் வளர்த்திருப்பாள் என்பதை எனக்கு விவரம் வந்தபோது அறிந்தபோது அந்தத் தாய்க்கு ஒரு கோயிலைக் கட்டிக் கும்பிடலாம் எனத்தோன்றும். தனியாளாய்ச் சிரமப்பட்ட என் தாய்க்கு 14 வயதில் என் அண்ணன் தோள்கொடுக்க முன்வந்தபிறகு வீட்டில் இரண்டு தறிகளாயிற்று. வருமானம் இரண்டு மடங்கானாலும் விலைவாசியும் செலவுகளும் நான்கு மடங்கானதில் இரண்டு வேளைச் சோறும் ஒருவேளை நீராகாரமும் தவறாமல் கிடைப்பதே பெரிய வரமாகத்தான் பட்டது.

அண்ணன் ரகுவோ நான் தான் படிக்கமுடியவில்லை ராமாவது படித்து முன்னுக்குவரட்டும். நம் பரம்பரைச்சாபம் நீங்கி ஒரு நல்ல உத்யோகத்தில் வந்து உருப்படட்டும் என்று முடிவெடுத்தவராய் என்னைப் படிக்கவைத்தார். ஒரு தந்தையின் கண்டிப்பினையும் ஒரு அண்ணவின் விட்டுக்கொடுத்தலையும் ஒன்றாகக் கொண்ட என் அண்ணன் ரகு ஓர் அதிசயப்பிறவிதான். அவனது தியாகத்தால் இதோ நான் வீட்டில் சிரமப்பட்டாலும் படிப்பில் சூட்டிகையாய் இருந்ததால் எஞ்சினியர் கல்லூரியில் பி இ இரண்டாம் ஆண்டு படிக்கமுடிந்தது. ரகுவோ தனக்கென எதையும் செலவு செய்துகொள்ளமாட்டான். கிடைக்கும் வழிகளில் எல்லாம் காசு பார்க்க நினைக்கும் கடும் உழைப்பாளி. தறி நேரம் போக அச்சு பிணைத்தல் போன்ற வேலைகளையும் இரவு நேரத்தில் செய்து என் கல்லூரிச் செலவைச் சரிக்கட்டிக்கொண்டு இருந்தான். அம்மாவின் தறி சம்பாத்தியமும் அண்ணனின் சாமர்த்தியமும் சேர்ந்து என் படிப்புக்கும் எங்கள் மூவரின் வயிற்றுக்கும் ஓரளவு சரிக்கட்டி வந்தது.

அம்மாவின் சாமர்த்தியத்தைப்பற்றிக்கூறிக்கொண்டே போகலாம் என்றாலும் வயிற்றில் உயிர்போகும் வலியாகத் தொடங்கி அரசுமருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பைப் புற்றுநோய் எனக்கண்டறியப்பட்டு அரசு மருத்துவர்களின் பொறுப்பற்ற அறுவைச்சிகிச்சையால் அதிக ரத்தம் வெளியேறி இதோ போனவாரம் இறப்பதற்கும் முன்னால் ஆறுமாதத்திற்கு முன்பே அண்ணன் ரகுவுக்கு ஒரு திருமணத்தையும் செய்துவைத்துவிட்டதை பெரும் சாதனையாகச் சொல்லலாம். அதிக வசதி இல்லை என்றாலும் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த அண்ணி ஜானகி சொக்கத்தங்கம்தான். என் அம்மாவின் என் அண்ணனின் குறிப்பறிந்து நடப்பதிலும் தறிவேலைகளுக்கு மேல்வேலைகள் செய்து கொடுப்பதிலும் சுவையாகச் சமைப்பதிலும் அண்ணிக்கு நிகர் அண்ணிதான். நீ கொடுத்துவைச்சவ விசாலாட்சி உனக்கு தங்கம் போல மருமகள் வந்து இருக்கா என்று அக்கம்பக்கத்துப் பெண்களின் பொறாமைப்பேச்சுகளுக்கெல்லாம் ஒரு சிறுபுன்னகை மட்டும் தந்துவிட்டு மருமகளைப் பெருமையாகப் பார்ப்பாள் அம்மா.

எனது பிரிப்பரேட்டரி லீவில் ஒருவாரம் அம்மாவின் துக்கத்தில் கழிந்துவிட்டது. இனி எஞ்சி இருக்கும் ஒருவாரத்தில் இந்த ஆண்டுத்தேர்வுகளுக்குத் தயார்செய்யவேண்டும். தேர்வுக்கட்டணம் இன்னும் செலுத்திய பாடில்லை. தேர்வு தொடங்குமுன் கட்டாவிட்டால் இடையில் என்னை தேர்வெழுதாது நிறுத்திவைக்கும் ஆபத்தும் உண்டு என்ற நினைவு வந்ததும் இதை எப்படி அண்ணனிடம் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். அவர் இப்போது தான் சற்றுத் தேறி தறியைத்தட்டித் துடைத்து மீண்டும் தறியை இயக்கும் ஆயத்தங்களில் மூழ்கி இருக்கிறார். அம்மாவின் தறியோ கடந்த ஒருமாதமாக அப்படியே கிடக்கின்றது. ஏற்கனவே கடன்கள் கொஞ்சம் ஏறிக் கிடக்கின்றது. என்னதான் அரசாங்க மருத்துவனையில் இலவச அறுவைச்சிகிச்சை என்று பெயர் இருந்தாலும் நிறைய மருந்துகளை எங்களை விட்டே வாங்கிவரச்சொல்லவே செலவுகள் எக்கச்சக்கமாகின. எங்கள் தறிக்காண்ட்ராக்டர் அவரால் கொடுக்க முடிந்த அளவுக்கு அட்வான்ஸ் ஆகவும் பத்தாயிரம் ரூபாயைத் துயர்துடைப்பு உதவியாகவும் கொடுத்தவை எல்லாம் கரைந்துபோயிருந்தன. அம்மாவின் ஈமச்சடங்குகளுக்கு சமூக ஃபண்டில் இருந்து கொடுத்து உதவி இருந்தார்கள். அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கவேண்டும். இந்த நிலையில் தேர்வுக்கட்டணம் பற்றி அண்ணனிடம் எப்படிப்பேசுவது..?

என் தலையை யாரோ தடவியது போலிந்தது. தலையை உயர்த்தினேன், என் அண்ணிதான். ராமு நீ கலங்காதேப்பா.. அம்மாவுக்கு நல்ல சாவுதான் வந்துது. நோய்ப்பட்டு சிரிப்பாய்ச் சிரிக்க பாயிலயும் தரையிலயும் அசிங்கமாக்கிச் சாவும் சாவு இல்லாமல் இன்றும் இருப்பது போலவே நினைவுடன் பொசுக்குன்னு போனது நல்லது தான். தேத்திக்கோ ராமு. படிக்கவேண்டியதைப் படி என்றார்கள் அண்ணி. எனக்கு அழுகை அடக்கமுடியாமல் வந்துவிட்டது, யாராவது தேற்றும் போது உடைபட்டு விசும்பும் குழந்தைபோல அழுதேன். அழாதே ராமு. உங்க அண்ணன் எவ்வளவு தைரியமா அம்மா இல்லாத வாழ்க்கையை ஏத்துக்கிட்டாருன்னு பாரு. நாங்க ரெண்டுபேரும் உனக்கு இருக்கோம்ப்பா.. என்ற அண்ணியின் ஆதரவுச்சொல் என்னை ஆசுவாசப்படுத்தியது.

அப்போதுதான் ரங்கராஜன் மாமா வந்தார். தூரத்து மாமா உறவு. அண்ணனிடம் துக்கம் விசாரித்தவருக்கு காபி போடுக்கொடுக்க அடுக்களைக்குப் போனார்கள் அண்ணி.

‘’ என்னடா ரகு..? ஏன் சோகமா இருக்கே.. இதான் நமக்கு ப்ராப்தம்னு நினைச்சுக்கோப்பா. ஆகவேண்டியதைப் பாரு என்றவர் ரகு அண்ணாவைப்பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று நானோ அண்ணனோ எதிர்பார்க்கவில்லைன்னுதான் சொல்லனும்.

‘’ இனி என்னடா செய்யப்போறே..? ஒத்தைக்குழியில உலைவைக்க முடியாது. அமமா இருந்ததால் ஏதோ பொழப்பு ஒடிச்சு. பேசாம இன்னொரு குழியில் ராமுவை உக்காறவை. நாலு காசு தேத்தாத்தான் நாளைக்கு உனக்கு புள்ள பொறப்பு வந்தா சமாளிக்கமுடியும் ‘’ – இப்படி ஓர் அணுகுண்டைப் போடுவார் என நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

’’ இல்லீங்க மாமா.. ராமுவோட ரெண்டாவது வருசப்படிப்பு நடக்குது. இன்னும் ரெண்டு வருஷம் பல்லைக்கடிச்சு சமாளிச்சா அவன் ஒரு நல்ல வேலைக்குப் போய் அவன் வரையிலும் நல்லா இருக்கமுடியும். அதனால அவனை தறுக்குழியில் தள்ளுவதாக இல்லை. ‘’ அண்ணனின் குரல் திட்டவட்டமாக் ஒலித்தது.

’’ டேய் உலகம் புரியாமப் பேசாதே. உங்கம்மாவும் சம்பாதிச்சதால ரெண்டு வேளைக்காவது சாப்பிட முடிஞ்சுது. இனி எப்படி உன் தம்பியின் படிப்பையும் சமாளிச்சு குடும்பத்தை ஓட்டுவே..? ‘’

‘’ நான் இன்னும் எக்ஸ்ட்ரா வேலை செய்து எப்படியும் ராமுவைப் படிக்கவைச்சுடுவேன். ‘’ ஆக்ரோஷமாக அண்ணன் சொன்னபோது என் அண்ணன் வாயுரம் வளர்ந்து நிமிர்ந்து நின்றபோலிருந்தது.

‘’ இல்லைன்னா பேசாம ஜானகியை இன்னொரு தறி நெய்யச்சொன்னா என்ன..? ‘’ என்றார் மாமா. இது என்ன இவர் நம்மைக் குழப்பாம விட மாட்டாரோ என்று தோன்றியது. சட்டென்று அடிபட்டது போல நிமிர்ந்தார் அண்ணா. ‘’ நீங்க யோசிச்சுதான் சொல்றீங்களா மாமா..? ஜானகி நம்ம வூட்டுக்கு வந்த மஹாலட்சுமி. ஆறுமாதம் கூட ஆகலை. நம்ம ஜனங்கள்ல வீட்டுக்கு வந்த மருமகளை தறியில் தள்ளிய முதல் பாவியாக என்னை பாவம் செய்யச் சொல்றீங்களா..? ‘’ சினத்துடன் கேட்டார் அண்ணா.

இதற்குமேலும் நான் பதில் சொல்லாம இருந்தா மாமாவை அண்ணா அடிச்சாலும் அடிச்சுடுவார் போல இருந்ததால் நான் இடையில் நுழைந்தேன்.

‘’ அண்ணா.. அம்மா தறிக்குழியில் நானே உட்கார்றேன். ஆத்திரப்படாதீங்க..நிலைமை தெரிஞ்சு நாம தான் சமாளிக்கனும். படிப்பு என்ன பெரிசு அண்ணா..? படிச்சவன்லாம் இன்னும் வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு திரியிறான். கவலையை விடுங்கண்ணா.. ‘’ என்ற போது என்னை அறியாமலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. அம்மா.. அம்மா.. ஏன்ம்மா எங்களைவிட்டுப்போனே..?

‘’ பாருடா .. அதான் எதார்த்தம் தெரிஞ்ச புள்ள.. நீ தான் குதிக்கிறே கொதிக்கிற எண்ணையில விழுந்த தவளை மாதிரி. பிரச்சினை தீர்ந்துடுச்சு.. ‘’ என்று ஒருவித வெற்றிப்புன்னகை செய்தார் மாமா.

மாமாவுக்கு நான்கு மகன்கள் நாலுமே படிக்காமல் தறியில குந்தினதால் காசு புரளுது. தன் பிள்ளைங்க படிக்காம போனதைவிட நான் மேற்கொண்டு படிப்பது அவருக்கு உறுத்திக் கொண்டிருந்திருக்கும் போல. இப்போது குரலில் சந்தோஷம் தென்பட்டது.

‘’ எனக்கு கோபம் வரதுக்கு முன்ன போயிடுங்க மாமா. வயது மூத்தவர்னு தான் இத்தனை நேரம் பொறுத்துக்கிட்டிருந்தேன். என் தம்பி படிக்கனுமா தறிபோடனுமான்னு நான் தான் முடிவு செய்யனும்.. போங்க பொழப்பைப்பார்த்துக்கிட்டு..’’ அண்ணன் கத்தினார்.

’’ இருங்க சித்தப்பா.. காபி குடிச்சுட்டு போங்க ‘’ என்று சொல்லியபடி அண்ணி அவருக்கும் என் அண்ணனுக்கும் எனக்கும் காபி கப்களை நீட்டினாள். காபிகளை நாங்கள் எடுத்துக்கொண்டதும் நடுவாசலின் மேல் சாய்ந்துகொண்ட அண்ணி மாமாவிடம் கனைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்கள்

‘’ சித்தப்பா.. நீங்க பேசினதை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். இந்த வீட்டுக்கு ஒரு மஹாலட்சுமியா என்னைக் கொண்டுவந்து வைத்து என்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட அம்மா போனபின் இந்தக் குடும்பத்துப் பொறுப்பு என்கிட்ட வந்துடுச்சுன்னு உங்களுக்குப் புரியாததா..? அம்மாவின் ஆசையும் ஏன் எங்க ஊட்டுக்காரருக்கும் இருந்த ஒரே ஆசை ராமுவைப் படிக்கவைத்து உத்யோகம் அனுப்பறது தான். குடும்பத்துல ஒருத்தியான எனக்குமட்டும் அந்த அக்கறை இருககாதா..? மருமகள்னா தறியில் இருக்கக்கூடாதுன்னு ஏதாச்சும் சட்டமா போட்டு இருக்காங்க..? நாளையில இருந்து அம்மா தறியில் நான் உக்காறப்போறேன். ராமு அவன் படிப்பை முடிக்கட்டும். ‘’

தீர்மானமாகச் சொல்லிய அண்ணியின் வார்த்தைகளை வெட்டிபேச வாயெடுத்த அண்ணனின் முயற்சியை ஒரு பார்வையால் தடுத்த அண்ணி என்னிடம், ‘’ ராமு நாளைக்கு காலேஜ் போயி எக்சாம் ஃபீசைக் கட்டிடு. நான் பணம் தரேன்..’’ என்றார்கள்.

மாமாவின் கண்களில் ஈயாடவில்லை.

என் வாய் அடைத்துக்கொண்டது. அம்மாவின் பேச்சுப் போலவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ரகமான பேச்சு. அம்மா எங்கேயும் போகவில்லை.

என் அண்ணியில் என் அம்மாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கியது. ஆனாலும் மனது நிறைந்தது.

பி.கு. : தமிழ்மன்றம் இணையதளத்தில் நிகழ்ந்த கதைப்போட்டியில் மூன்றாம் பரிசினை வென்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *