வீரமும் வகையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,700 
 

ஒரு நாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்காமல் உத்தர பாரதம் முழுவதையும் சுற்றி மறைந்து திரிந்து கொண்டிருந்தான் ஒரு வாலிபன். தன் உண்மைப் பெயரை வெளியிடவே அவனுக்குப் பயமாக இருந்தது..

கொளுத்துகிற உச்சி வெயில் . புழுதியில் கால் பட்டால் துள்ளி விழச் செய்தது. சாலை நாவல் மரத்து மந்திகள் கிளையோடு கிளையாக ஒட்டிக்கிடந்தன. வெயிற் பறவைகளான காகங்கள் கூட வெப்பம் தாங்காமல் ஜலக் கரையோர ஈர நப்பில் கால் வைத்துச் சூடாற்றிக்கொண் டிருந்தன. மேய்ச்சல் மாடுகள் மேய்வதையும் விட்டு மரத்தூறுகளோடு உராய்ந்து நின்று அசை போட்டுக் கொண்டு இருந்தன. அனல் ஓடிக்கொண் டிருந்தது. உஷ்ணக் காற்றுச் சுவாசப் போக்கைத் தடுமாற வைத்தது.

“உஸ், அப்பாடா!” என்று சொல்லிக்கொண்டே வெள்ளம் போல் ஓடிய வேர்வையைத் துடைத்துக் கொண்டு சாலையோர மரத்து நிழலில் ஓய்ந்து போய் உட்கார்ந்தான் அந்த வாலிபன் – மகத சாம்ராஜ்யத்தின் வரப் போகும் சத்ராதிபதியான சந்திரகுப்தன். முழங் கால் வரை ஏறிப் படிந்திருந்த புழுதி அன்றைய அவன் நடையின் தூரத்தை அளந்து காட்டுவதுபோல் இருந்தது.

வெளி உஷ்ணம் அவனைத் தகித்ததைவிட அவன் ஹிருதயத்தில் நிரந்தரமாகத் தங்கியிருந்த உஷ்ணந் தான் பன்மடங்கு வேகத்தில் தகித்துக்கொண்டிருந்தது. அவனுடைய அனாதை நிலைமையிலும் சாம்ராஜ்ய லக்ஷ்ய நினைவு தான் அவன் மனக் கண் முன் நின்று கொண்டிருந்தது.

கீர்த்தியுடன் தலைமுறை தலைமுறையாக நந்தர்கள் ஆண்டுவந்த மகத சிம்மாசனத்தில் அப்போது ஒரு ஜாரபுத்திரன் உட்கார்ந்து கொண் டிருந்தான். அது தான் அவனை உறுத்திக்கொண் டிருந்தது . – ஒரு நாவிதனின் மகன் ; அவன் பெயர் தன நந்தன் என்பது. தாய் பரிஹாரியின் துணை கொண்டு புருஷனைக் கொன்றவள் ! இந்த ஜாரபுத்திரனை விட மகத சிம்மா சனத்துக்குத் தன் பாத்தியதை மதிப்புள்ளது என்று அவனுக்கு நிச்சயப்பட்டது. அவனும் நந்த வம்சத்தைச் சேர்ந்தவன் தானே?

“அடடா! மகத சிம்மாசனத்துக்குத்தான் என்ன கௌரவம்! தனி அந்தஸ்து! – போகட்டும்; ராஜரீகத் திலாவது நியாயம் உண்டா என்றால், நிரபராதிகளின் ரத்தம் எங்கும் சிந்திக்கிடக்கிறது ! இதற்கு முடிவு இருப்பதாகவும் தெரியவில்லையே. ஹூம்! ஈன ரத்தம் ஓடும் ஹிருதயத்தில் நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று அவன் தனக்குள் பேசிக்கொள்ளும் போது ஹிருதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.

தனநந்தன் மீது சந்திரகுப்தனுக்கு அத்தனை ஆக் ரோஷம் இருக்க மற்றொரு காரணமும் உண்டு. நந்த வம்சத்தில் வந்த மௌரியனையும், சந்திரகுப்தனைத் தவிர அவனுடைய மற்ற மக்களையும், தன் ஆட்சிக்குப் பின்னால் ஆபத்து வந்து விடுமே என்று பயந்து கொலை செய்துவிட்டான். சந்திரகுப்தன் மட்டும் தப்பியது தெய்வாதீனம். அந்த க்ஷத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று துடிதுடித்துக் கொண் டிருந்தது அவன் ராஜபுத்திர ஹிருதயம்.

இரண்டும் சேர்ந்து அவன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்தன. ஊர் ஊராகச் சுற்றிக்கொண் டிருந்தான். தனநந்தனது சதிக்குத் தப்பி ஒவ்வோர் இரவும் அவன் உயிர் வாழ்வதே எவ்வளவு கஷ்டமாக இருந்தது!

சில தினங்களுக்கு முன் தான் சரித்திரக் கீர்த்தி பெற்ற மாஸிதோனிய அரசனான கிரேக்க நாட்டு வீரன் அலெக்ஸாண்டரை நேரில் கண்டு பேசியிருந்தான். ஜீலம் நதிக்கரையில் போரஸ் என்ற புருஷோத்தமனை ஜயித்து விட்டு அலெக்ஸாண்டர் விபாஸா நதிக்கரையில் முகாம் போட்டிருந்த சமயம். அவன் கீர்த்தி சந்திர குப்தனை இழுத்தது. அவனைப் பார்த்துப் பேசி விட்டான்.

அந்தக் கிரேக்க புருஷனின் துணிச்சலும் காம்பீர்யமும், திமிரும் சந்திரகுப்தன் மனத்தில் மூடி யிருந்த இருளையும், மங்கிக்கிடந்த உணர்ச்சியையும், Cஆவலையும் தூண்டி விட்டன. வஜ்ரக் கட்டமைந்த அவ்வுருவம் அவன் மனத்தில் ஆழமாய்ப் பதிந்து விட்டது. அந்தக் கிரேக்கனின் வார்த்தைகளும் அப்படியே.

சந்திரகுப்தன் யோசிக்கத் தொடங்கினான். மரஸி தோனிய ராஜ்யம் எங்கே, மகத ராஜ்யம் எங்கே! இரண்டிற்கும் இடையேயுள்ள ஆயிரக்கணக்கான மைல் விஸ்தீரணத்தைத் தனதாக்கி விந்து நதிப் பிரதேசத் திலும் தன் கொடியை நாட்டி விட்டுப் போயிருக்கிறான் அலெக்ஸாண்டர். அவனுடைய சாம்ராஜ்ய வேகந்தான் எவ்வளவு ! அவன் படை எவ்வளவு உறுதியான கட்டுப் பாடு அமைந்தது ! ஹிந்து ஸ்தானத்தைப் பிடித்த அதிருஷ்டந்தான், அவன் படை இதற்குமேல் செல்ல மறுத்ததும், அவனும் இளக்கம் காட்டித் திரும்பியதும் என்று சொல்ல வேண்டும். புருஷோத்தமன் காட்டிய வீரமும் மற்றொரு காரணம்.

ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு மறுபடியும் யோசித்தான்: “அவனும் என்னைப்போல மனிதன் தானே? அவனை இவ்வளவு தூரம் கொண்டு வந்த துணிச்சலும் வீரமும் எனக்கு இல்லையா? பல ஆயிரம் மைல் என் ஜயக்கொடியை நாட்டமுடியாதா?” என்று அவன் வாய் முணுமுணுத்துக்கொண்ட போது முகத்தில், ரத்தம் வேகமாகப் பாய்ந்து சிவந்தது. கண்கள் தீர்க்க மாக உறுத்து விழித்தன. வார்த்தைகள் பதறி வெளியே வந்தன :

“என்னால் முடியும். சந்தேகமே இல்லை. அவனைப் போலவே எதற்கும் தளராத படை இன்று முதல் சேர்ப்பேன். என் கருத்தை – மகத சாம்ராஜ்ய லக்ஷியத்தை அடைந்தே தீருவேன். இந்தச் சிம்மா சனத்தில் முடங்கிக் கிடக்கும் ஈன ஜந்துவை இழுத் தெறிந்து விட்டு அதன் மீது நான் உட்காருவேன். மகத சாம்ராஜ்யத்தைக் கோடி சூரியப் பிரகாசமாக்குவேன்” என்று உயரே தோன்றிய சூரியனைப் பார்த்துக் கொண்டே சபதம் செய்தான் சந்திரகுப்தன். பற்கள் கடித்துக்கொண்டன. இடையில் செருகியிருந்த வாளின் பிடியைக் கை பலமாக அமிழ்த்தியது.

சபதம் செய்து விட்டுச் சந்திரகுப்தன் தன்னைச் சுற்றிப் பார்த்தான். அவனுக்கு இருந்த உணர்ச்சிவேகத் தில் அது வரையில் அவன் கவனித்திராத ஓர் உருவம் அவன் கண்களுக்கு அப்போது தான் தென்பட்டது. ஐந்தாறு மரங்களுக்கு அப்பால் உள்ள நிழலைச் சந்திர குப்தன் கூர்ந்து கவனித்தான். இருவர் கண்களும் சந்தித்தன. வெகு நேரமாக அந்த உருவம் தன்னையே பார்த்துக்கொண் டிருக்க வேண்டுமென்று பார்வையின் தீக்ஷண்யத்திலிருந்து ஊகித்துக் கொண்டான் சந்திரகுப்தன்.

மறு விநாடி அந்த உருவம் கண்களைத் திருப்பிக் கொண்டது. இருமல் கலந்த தொண்டையில் லேசாகக் கனைத்துக்கொண்டதைச் சந்திரகுப்தன் கேட்டான். அவன் பார்த்துக்கொண் டிருக்கையிலேயே அந்த உருவம் உயர்ந்து எழுந்து ஒரு மூட்டையை எடுத்துக் கொண்டு சாலையில் அவன் பக்கமாக வரத் தொடங்கியது. அந்த உருவத்தையே சந்திரகுப்தன் கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தான்.

வற்றலான சரீரம். நல்ல உயரம். எலும்பு மூடிய தோலுருவம். சதைப்பற்று இல்லாத அவயவங்கள். குடலோடு ஒட்டிய வயிறு. கண்கள் ஆழப்பதிந்து இருந்த போதிலும் பீரங்கிவாய்க் குண்டுகள் சூரிய ஒளியில் ஜ்வலிப்பது போல் தீக்ஷண்யமான பார்வை. பண்டைச் சாஸ்திர ஞானம் அவன் முகத்தில் பிரதிபலித்தது. தட்டிமுடியாத உச்சிக்குடுமி காற்றில் மெதுவாகப் பறந்து கொண்டிருந்தது. அவன் தான் விஷ்ணுகுப்தன். உலகத்துக்குப் பொருள் நூல் இயற்றித்தர இருக்கும் சாணக்கியன்.

கம்பீர நடை போட்டு வந்த சாணக்கியன் சந்திர குப்தனைக் கடந்து சில அடி தூரம் போயிருப்பான். காலில் ஏதோ தடுக்கித் தடுமாறியது. சாணக்கியன் சட்டெனத் திரும்பிக் கீழே தடுக்கிய இடத்தைத் தீர்க்க மாகப் பார்த்தான். கண்கள் உற்று விழித்துப் புருவங்கள் உயர்ந்தன. கீழே சாவதானமாக உட்கார்ந்தான். அந்த இடத்தில் வளர்ந்திருந்த, தன்னைத் தடுக்கிய அந்தப் புல்லைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். தடுக்கிய புல் மீது அவ்வளவு க்ஷாத்திரம்!

சந்திரகுப்தன் வியப்படைந்து சம்பவத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

புல்லை மேலாகப் பிடுங்கி எறிந்து விட்டதோடு சாணக்கியன் நிற்கவில்லை. ஒரு குச்சியை எடுத்து ஆழத் தோண்டி வேரோடு அந்தப் புல்லை மறுபடியும் வளர வொட்டாமல் கல்லி எறிந்துவிட்டான். ஒரு சல்லி வேர் கூடப் பாக்கி இல்லை. மறுபடியும் குழியை மூடி விட்டு எழுந்து மேலே எட்டு வைத்தான்.

சந்திரகுப்தனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சரேலென்று எழுந்து க்ஷத்திரிய நடை போட்டுச் சாணக்கியனை நெருங்கினான். அவன் வருவதைப் பார்த்த சாணக்கியனும் நின்று விட்டான்.

“உனக்கென்ன பைத்தியமா!” என்று ஏளனமாகச் சிரித்துச் சந்திரகுப்தன் அவனைக் கேட்டான்.

சாணக்கியன் உதடுகளில் அலக்ஷியப் புன்னகை தோன்றியது. “நான் பைத்தியம் அல்ல; இன்று மகத சிம்மாசனத்தின் மீது தான் ஒரு பைத்தியம் இருக்கிறது” என்று அர்த்த புஷ்டியுடன் தனக்குத் தனநந்தன் மீதுள்ள வெறுப்பைக் காட்டினான்.

அந்தக் குறிப்பைச் சந்திரகுப்தன் அறிந்து கொண்ட போதிலும் புல் விஷயம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. மறுபடியும் கேட்டான் :

“அந்தப் புல்லை ஏன் அப்படிச் செய்தாய்?”

“எனக்கு இடையூறு செய்த அந்தப் புல்லைப் பிடுங்கி எறிந்ததில் நீ ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

“ஒரு சின்னப் புல்மீதா உனக்குக் கோபம்?”

“சின்னப் புல்! பயிரை வளர முடியாமல் நசுக்கி விடும் அந்தப் புல்! அது செய்திருக்கும் வேலையைப் பார்த்தாயா?” என்று தன் கால் கட்டைவிரல் இடுக்கைப் புரட்டிக் காண்பித்தான் சாணக்கியன். அந்த இடத்தில் ரத்தம் கசிந்து பரவி இருப்பதைச் சந்திரகுப்தன் பார்த் தான். அப்போதும் சந்திரகுப்தனுக்கு அவன் செய்கை புரியவில்லை. அவன் அஜாக்கிரதைக்குப் புல்லா காரணம்? “இதற்காக வேரோடு கல்லி எறிய வேண்டுமா?” என்று மீண்டும் கேலியாகக் கேட்டான்.

சாணக்கியன் ஆத்திரம் அதிகரித்தது. கண்களில் ஆக்ரோஷம் தோன்றியது. “நுனிப்புல்லைப் பிடுங்கி விட்டால் போதுமென்று நினைக்கிறாயா நீ? இன்னும் பச்சை இழக்காத அதன் சல்லி வேர்களின் ஆதரவைக் கொண்டு எவ்வளவு வேகமாக முளைத்தெழும் தெரியுமா? க்ஷத்திரியனான நீ அறிந்து கொள்ள முடிய வில்லையா இதை?” என்று படபடப்பாக வார்த்தைகளைக் கொட்டி விட்டான்.

தன்னை அவன் க்ஷத்திரியன் என்று கண்டு கொண்டதைக் கேட்ட சந்திரகுப்தன் திடுக்கிட்டுப் போனான். அவனை விறைத்துப் பார்த்து, “நான் க்ஷத்திரியன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று வியப்புடன் கேட்டான்.

“சந்திரன் மங்குகிறதில்லை. மேகந்தான் மறைக் கிறது. ராஜ லக்ஷணமும் அப்படியேதான்; புழுதி மூடிக்கிடந்தாலும் சரி, ஊட்டமின்றிச் சோபை குன்றிய போதிலும் சரி.”

சந்திரகுப்தன் பிரமித்துப் போனான். சாணக்கியன் தொடர்ந்து கூறினான் ; “மேலும் நீ பகைவருக்கு அஞ்சி நிலையாக நிற்க வழி இல்லாமல் என்னைப்போல் திரிந்து கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும். பிரமிக்காதே. சூரியனைப் பார்த்து நீ செய்த சபதத்தைக் கேட்காவிட்டாலும் பார்த்தேன். உன் பல் நறநறப்புக்கூட எனக்குக் கேட்டது. அந்தச் சூசகந்தான் நான் புல்லைப் பிடுங்கி எறிந்ததற்குக் காரணம்.”

“அதற்கும் புல்லைப் பிடுங்கி எறிந்ததற்கும் என்ன சம்பந்தம்? உன் ஆத்திரத்தைக் காட்டுவதற்குத்தானே பிடுங்கி எறிந்தாய்?” என்று கேட்டான் சந்திரகுப்தன்.

சாணக்கியன் வாய் விட்டுச் சிரித்து விட்டான். “ராஜ புத்திர ! என் ஆத்திரத்தை உத்தேசித்து அல்ல; நீ ஆத்திரங்கொள்ளத்தான், ஸாதாரண ஸந்தர்ப்பத்தில் நான் புல்லைப் பிடுங்கி எறிந்திருந்தால் பைத்தியம் என்று நீ என்னைக் கூறியது மிகவும் பொருந்தி இருக்கும். ஆனால் இப்போது உனக்கு ராஜ தர்மத்தை உணர்த்தவே அந்தச் சூசகக் குறி காட்டினேன்” என்றான்.

“எது ராஜ தர்மம்?”

“சத்துருக்களை வேருடன் களைவது தான். எனக்கு இடையூறு செய்த புல் கதிதான் உன் பகைவருக்கும் நேரவேண்டும் என்பதை வேறு எந்த விதத்தில் சுருக்கமாக உனக்கு உணர்த்த முடியும்? அதற்குரிய தகைமை உன் ரத்தத்தில் ஓடுகிறது” என்று தன் செய்கையை விளக்கினான் சாணக்கியன்.

அந்தப் பதிலைக் கேட்ட சந்திரகுப்தன் மனம் திருப்திபெற்றுக் குதூகலம் அடைந்தது. “அந்தண குமுறிக்கொண்டிருந்த என் ஆவலை வேகமாகத் தூண்டி விட்டாய். அதற்குச் சரியான துணை வேண்டும். நீ இருப்பாயா?” என்று ஸ்பஷ்டமாகக் கேட்டு, “என்னிடம் வீரம் இருக்கிறது; வகை வேண்டும்” என்றான்.

“நானும் வீரத்தைத் தான் தேடி அலைகிறேன், வகையை வைத்துக்கொண்டு” என்றான் சாணக்கியன்.

சந்திரகுப்தன் மரியாதையுடன் சாணக்கியன் முன் தலை தாழ்த்தி வணங்கினான். “மகத சத்ராதிபதி வாழ்க” என்று சாணக்கியன் வாயார வாழ்த்தினான்.

“தனநந்தன் காலம் நாட்கணக்கில்” என்று தன் வாளைக் கொஞ்சம் இழுத்து உறையில் போட்டான் சந்திரகுப்தன்.

“விஷ்ணுகுப்தன் சபதம் நிறைவேற, அவன் தன் குடுமியை முடிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று சொல்லிக்கொண்டே சாணக்கியன் கை குடுமியை ஒரு தரம் கோதிக் கொடுத்தது.

வீரமும், வகையும் அந்த இடத்திலே கலந்தன. அந்தக் கலப்பிலிருந்து தான் மகத சாம்ராஜ்யம் பிறந்தது.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *