ராஜகுமாரியின் ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 11,920 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உதய ராஜ்யத்தைச் சேர்ந்த ராஜகுமாரி தேவிக்கு நெஞ்சிலே ஒரு ஆசை நிறைவேறாது நெடுநாட்களாய் அனல்மூண்டு கிடந்தது.

அவளைப் போன்ற கன்னி ரோஜாக்கள் எல்லாம் வதுவை புரிந்து மகிழ்ச்சி மிகமேவ நாயகரோடு, நன் மக்களோடு களித்திருக்கையிலே, பாவம் அந்த ராஜகுமாரி மட்டும் காலத்துக்கே சவால் விட்டு நிற்கும் தனது திவ்ய யௌவனத்தோடு பருவப்பற்றுக் கோடற்றுப் பதைத்துக் கிடந்தாள்.

“ஒரு நாட்டின் ராஜகுமாரி! அவளுக்குத் திருமணம் புரிய ஆள் கிடைக்கவில்லையா?”

இப்படி என் வாசகர்களே நீங்கள் அசட்டுத்தனமாகக் கேட்டுவிடக் கூடாது.

அந்த ராஜகுமாரி லாவண்யத்தின் பிரபை; செல்வத்தின் செல்வம். கலையின் ஜீவ வீணை.

அவள் –

“உலகிலேயே எவன் சிறந்த அழகனோ அவனையே மணப்பேன்” எனச் சொல்லி ஒற்றைக் காலில் நின்றாள். ஆனபடியாலே தான் – இருபத்தெட்டு வயதாகியும் அந்த அரசகுமாரிக்குத் திருமணம் நடக்கவில்லை.

பெரிய ராஜாவின் மனக் கவலையோ கூறி ஒழியாது. தனது மகள், தன் ஏனைய புத்திரர்களைப்போல் மண வாழ்வின் சுகங்களை அனுபவிக்கவில்லையே!

“மணந்தால் அனைத்துலகிலும் ஆணழகனாய் இருப்பவனைத்தான் மணம் புரிவேன்”

என முட்டாள் தனமாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறாளே என்று மனம் வெதும்பினார் மாமன்னர்.

உலகின் பல நாடுகளுக்கும் தனது தூதுவர்களை அனுப்பிப் பல நாட்டு அழகு ராஜகுமாரர்களையும், மற்றும் பெருமையற்ற குடும்பத்திற் பிறந்திருந்தாலும் அழகோடு விளங்கியவர்களையும் தன் நாட்டுக்கு வரச் செய்தார்.

என்னே துரதிஷ்டம்? ராஜகுமாரிக்கு ஒருவரையுமே பிடிக்கவில்லை.

“இவன் வானர மூஞ்சன்; இவன் கழுதை மூஞ்சன்; அதோ அவன் கரடிப் பரம்பரையின் நேரடி வாரிசு”

இப்படியாக, நல்ல அழகுமிக்க ஆண்களையே அந்த ராஐகுமாரி ஏளனித்து ஒதுக்கினாள்.

உலகின் அதிமேன்மையான அழகனுக்கல்லவா அவள் மாலையிடக் காத்திருக்கிறாள்.

எத்தனையோ ஆடவர்கள்! அவர்களில் யாரையுமே ராஜகுமாரி மோஹிக்கவில்லை.

காலம் தன் வழியே விரைந்து கொண்டிருந்தது.

இப்போது ராஜகுமாரிக்கு முப்பத்து மூன்று வயதாகி விட்டது.

அரசன் மனம் தளர்ந்துவிட்டான்.

“ஐயோ! இந்த அழகரசி தன் சௌந்தர்யத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறாளே?” இவ்வண்ணம் நல்ல அழகர்கள் ஏங்கித் தவித்தார்கள்.

“ஈசா! இப்பிறப்பில் என் மகளுக்குக் கல்யாணம் நடக்கப்போவதில்லையா? நீயாவது நான் கண்மூடும் முன் என் மகளை மணக்கோலத்தில் காண்பிக்கமாட்டாயா?”

மன்னர் நெஞ்சுருகப் பிரார்த்தித்தது கண்டும் கடவுள் தன் பாட்டிலிருந்தார்.

ஒரு நாள்!

உதய ராஜ்யத்துக்கு இலங்காபுரியிலிருந்து, அந் நாட்டின் புதிய இளவரசனும், அவனது இளைய சகோதரன் குமாரோதயனும் வந்தார்கள்.

இளவரசனை அழைத்து வந்த தூதுவர்கள் “இனியாவது ராஜகுமாரி கல்யாணம் பண்ணிக்கொள்கிறாளா? இல்லையா என்பதைப் பார்த்துவிடுவோம்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

நாட்டின் அமைச்சர் – பொதுமக்கள் – அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாவருமே,

“மிகவும் அழகனான இலங்காபுரி இளவரசன், உதய ராஜ்ய குமாரிக்கு மாலை சூடப்போகிறான்” என்று பேசிக் கொண்டார்கள்.

உதய நாட்டு அழகர்கள் எரித்துவிடுவதுபோல் அவனைப் பார்த்துக்கொண்டார்கள்.

உதய நாட்டுக் குமரிகள் எல்லாரும் ‘எதையோ எதுவோ பார்த்து வாய் பிளந்து நின்றது’ என்பார்களே அப்படி இலங்காபுரி இளவரசனைப் பார்த்துப் பிளந்த வாய் பிளந்தபடி நின்றார்கள்.

அதோ ராஜ்ய சபை. பெரும்பெரும் அழகர்கள் – பலநாட்டு முக்கியஸ்தர்கள் யாவரும் அமர்ந்திருக்கின்றார்கள்.

மாமன்னன் வழக்கத்திற்கு மாறாக அமைதியுடனும், ஒரு புதிய நம்பிக்கையின் சாயை கதிர்வீசும் முகத்தோடும் அமர்ந்திருக்கிறான்.

அதோபாருங்கள்!

பட்டே பாதமாக; மலர்களே கன்னங்களாக; மீன்களே விழிகளாக அன்ன நடைபோட்டு நடந்து வருகிறாள் ராஜகுமாரி தேவி.

மண்டபத்தே தன் தரிசனத்திற்கு வந்திருப்பவர்களை நோக்குகிறாள் அவள்.

அடடா! அவள் கூர்விழிகள் இலங்காபுரி இளவரசன் மேற்பாய்கின்றன.

அட சே! ஒரே ஒரு கணந்தான் அவள் பார்வை அவன்பாற் பாய்ந்தன.

மறுகணம் –

உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் ஆசன பக்கல் அணுகுகிறாள் தேவி.

“என்ன? இத்தனை அழகனான இலங்காபுரி இளவரசனையே ராஜகுமாரி விரும்பவில்லையா?”

பரவலாகப் பலரும் ஆச்சர்யத்தோடு பேசிக்கொண்டார்கள்.

பெரிய மகாராஜாவோ,

“என் கனவுகள் கனவுகளே” என மண்டையில் அடித்துக்கொண்டு கதறினார்.

மறுநாள் –

ராஜகுமாரிதேவி வழக்கம்போல் மாலை நேரத்தில் அந்த ராஜ்யத்துக்கே புனிதஞ் சேர்ப்பதாக அமைந்திருக்கும் குமரன் கோவிலுக்குத் தன் தோழிகளோடு ‘தரிசன சாந்தி’க்காகச் சென்றாள்.

ராஜ ரதத்தைவிட்டுக் கோயில் வாசலில் இறங்கிய தேவியின் வதனத்தே மந்தகாச மின்னல் நெளிந்தது.

கண்கள், ஆண்டாண்டு காலம் ஏங்கித் தவங்கிடந்த காட்சி கண்ட களிப்பிலே நீந்தின.

“ஆ! அது….அது யார்? என் அழகுத் தெய்வமே! நான் உன்னையே காலங்காலமாகத் தேடினேன்.”

தேவி தனக்குள் கூறிக்கொண்டாள். பின் தோழிக ளிடமும்,

“அதோ அந்தப் பேரழகனைக் காண்மின்கள்! அவனுக்காகவே என் யௌவனத்தைக் காத்தல் செய்தேன். அவனே என் இதய ஜோதி!”

இப்படிச் சொன்ன தேவியையும், அவள் சுட்டியவனையும் பார்த்த தோழிகள்,

“இதென்ன கொடுமை? அந்தக் கோயில் வாசற் புறத்தே இருந்து பகவானை நினைத்துக் கண்ணை மூடிய நிலையில் நிற்கின்ற அந்தச் சிறு பையனையா எம் தேவி காமுறுகிறாள்? அவனுக்குப் பதினாறு வயது தானே இருக்கும்?”

தோழிகள் தமக்குள் மேற்கண்டவாறு கருதிக்கொண்டார்கள்.

“என்னடி கல்லாகிவிட்டீர்கள்? அந்தத் ‘தெய்வ தரிசனத்தில் சொக்கிவிட்டீர்களா”

ராஜகுமாரிக்குப் பதிலிறுக்கத் தெரியாது தோழிகள் மௌனமானார்கள்.

அன்றைய பொழுதுகள் ராஜகுமாரியின் உள்ளத்து இன்பக் கனல் மூட்டிச் சென்றுகொண்டிருந்தன.

பூரண நிலாப் பொழிந்த அன்றிரவு தேவி தன் தந்தையிடம் சொன்னாள்:

“என் தந்தையே! என் நீண்ட நாள் கனவு நிறை வேறப்போகிறது. ஆம் தந்தையே, நான் தேடிய அழகனைக் கண்டேன்! அவனையே நான் விழைகிறேன்.”

மகாராஜாவின் மனம் இன்பசாந்தி பெற்றது.

“அப்படியா? என் அன்பான மகளே! இப்போது தான் என் ஆத்மா குளிர்ந்தது. யாரம்மா அவன்? நாளை காலையே நான் இங்கவனை அழைக்கிறேன்; நாளையே உன் திருமணம்!”

மன்னர் மகிழ்வோடு சென்றார். தேவி ஆவிக்கினி யானை நினைத்தாள். அமைதி இழந்தாள்.

மறுநாள் –

தேவியால் மோஹிக்கப்பட்டவனைக் கண்ட அரசர் சிலையானார்.

“அட இந்தச் சிறுவனையா இவள் காதலிக்கிறாள்? ஐயோ! இதென்ன அவமான கார்யம்?”

அதோ! வழக்கம்போல் மண்டபத்தே நுழைந்த ராஜ குமாரி அவனைப் பார்க்கிறாள்.

அந்த அழகன் இலங்காபுரி வேந்தனின் இளைய சகோதரன் என்பதறிந்து குதூகலித்தாள்.

ஆனால்?

அரசன் இந்த முறைகோடிய ஆசையை ஏற்றுக் கொள்ளவில்லை.

சேதியை அறிந்து, அரச மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட இளவலைத் தேடி இலங்காபுரி இளவரசன் ஓடோடி வந்தான். மன்னன் ஆக்ரோஷத்தோடு ராஜகுமாரியிடம்,

“மகளே உன் வயதில் பாதி வயதே எட்டியுள்ள இந்தப் பாலகனையா விரும்புகிறாய்? சீ! இதைவிட மதி கெட்ட தனம் என்ன இருக்கிறது?”

அரசன் மட்டுமல்ல அனைவருமே “இது விபரீத ஆசை; இதனை விட்டுவிடுங்கள்” என்று ஒருமித்துச் சொன்னார்கள்.

தன் பிரயாண சல்லாபிப்புக்காகத் தான் அழைத்து வந்த தன் இளவலை ராஜகுமாரி காமுற்றதறிந்த இலங்காபுரி இளவரசன் வெஞ்சினங்கொண்டான்.

தன்னை அவமதித்த இந்த அரசி என் இளவலை – சின்னஞ் சிறுவனை விரும்புகிறாளா? ஆத்திரம் மிகவுற்ற இளவரசன்,

“அரசனே உமது மகள் முறைகெட்ட ஆசைக்காரி!” என்றொரு நிரூபத்தை அரசனுக்கு அனுப்பிவிட்டுத் தன் தம்பியையும் அழைத்துக் கொண்டு தன் தேசம் போய் விட்டான்.

சேதி தெரிந்த தேவி துடித்தாள்.

“என் அழகுத் தெய்வமே! நீ போய்விட்டாயா? நீயன்றோ என் சம்பத்து?” எனக் கதறினாள். நிலை கெட்டாள். நிம்மதி இழந்தாள்; பாவையவள் பைத்தியமாகவே மாறிவிட்டாள்.

எத்தனையோ நாடுகளிலிருந்து எத்தனையோ வைத்தியர்கள் வந்தும் ராஜகுமாரியின் ‘நோயை’ மாற்ற முடியவில்லை.

சீச்சீ! அந்த ராஜகுமாரியின் சேதிகளை சொல்லவே மிகுந்த லஜ்ஜையாக இருக்கிறது.

பித்து முற்றிப்போனமையால் அந்த ராஜகுமாரி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

தன் துகில் அவிழ்த்து எவருக்கும் கட்டுப்படாத நிலையில் நடந்து கொள்ளலானாள்.

பிறந்த மேனியோடு தன் அறையின் பிரமாண்டமான நிலைக் கண்ணாடியின் முன் நின்று தகாதன செய்தாள் அவள்.

பாவம்! உலகின் தலைசிறந்த அழகனை விழைந்த அந்த ராஜகுமாரி, வைத்திய வல்லுநர்களுக்கே இனங்காண முடியாத – நோயின் முதிர்ச்சியினால் சிலகாலத்துக்குப் பின் செத்தே போய்விட்டாள்!

– சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *