கலுழ்ந்தன கண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 18,150 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

களவின்பத்தை நுகர்ந்து வந்த காதலர்களுக்கு இடையீடில்லாமல் கணவனும் மனைவியுமாக இருந்து இன்புற வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. ஒரு நாளைப் போலவே நள்ளிருளில் கரடுமுரடான வழியில் தான் வருவ தைக் காதலன் பொருட்படுத்தவில்லை. அவளோ, அவ னுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் என் செய்வது என அஞ்சினாள். இனி வரவேண்டாம் என்று சொல்லி அவன் வருவதை நிறுத்தலாமா? அப்புறம் அவள் வாழ் வதே அரிதாகிவிடும். அவனைப் பிரிந்து வாழ்வது என்பது நினைப்பதற்கும் அரிய செயல். எத்தனை நாளைக்குத்தான் பிறர் அறியாமல் அவர்கள் சந்திப்பது? எப்படயாது மணம் புரிந்து கொண்டு உலகறிய ஒன்று பட்டு வாதம் என்ற எண்ணம் மேல் ஓங்கியது.

அவனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க அலட் ளுடைய தாய் தந்தையர் உடம்படுவார்களோ என்ற ஐயம் எழுந்தது. ஒருவருக்கும் தெரியாமல் அவளை அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று மணந்துகொள்ளலாம் என்று அவன் எண்ணினான். தோழி அது நல்ல வழி என்றாள். காதலியும் இணங்கினாள்.

ஒருநாள் விடியற் காலையில் புறப்பட்டுவிடுவது என்று திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் புறப்பட வில்லை. காரணம் இது தான்.

காதலி தன் வீட்டைப் பிரிந்து செல்வதற்கு ஏற்ற மன உறுதி இல்லாமல் இருந்தாள். தான் பழகிய இடத் திலும் பழகிய பொருள்களின் மேலும் பழகிய தோழிமார்களிடத்தும் அவளுக்கு இணையற்ற பற்று இருந்தது.

அந்தப் பற்றே அவளைத் தடுத்து விட்டது.

இறுதிக் கணம் வரையில் அவள் எப்படியும் போய் விடுவது என்றே நினைத்தாள். அதற்கு வேண்டிய காரியங் களையும் செய்தாள். விடியற் காலத்திலே எழுந்து விட்டாள். சர் சர்’ என்று அயல் வீடுகளில் தயிர் கடையும் ஒலி அவள் காதில் விழுந்தது.

***

பெண்டிர் விடியற் காலத்திலே எழுந்து தயிர் கடைவார்கள். முதல் நாள் நன்றாகத் தேய்த்துக் கழுவின பானையிலே பாலைக் காய்ச்சி இரவில் பிரை குற்றுவார்கள். அந்தப் பானை வயிறு அகன்றதாய் நிறைந்த கருப்பம் உடையது போல இருக்கும். கமஞ்சூலையுடைய குழிச் அது எவ்வளவோ காலமாக அந்தப் பானையில் தான் தயிரைத் தோய்த்துக் கடைந்து வருகிறார்கள். அது ஆகிவந்த பானை. மாமியார் கடைந்தது; மருமகள் கடைந்தது; மறுபடி மருமகள் மாமியாராகிச் கடைந்தது; அவள் மருமகள் கடைந்தது. அந்தத் தயிர்ப் பானை அந்தக் குடும்பத்தின் பழமையையும், சுறுசுறுப்பையும், முயற்சி யையும், வளப்பத்தையும் எடுத்துக் காட்டும் அடையாளம் போல விளங்குவது.

ஒரே பானையில் தயிரைத் தோய்த்து வைத்தால் அதில் புளித்த நாற்றம் உண்டாகும்; தயிரின் முடை நாற்றம் ஏற்படும். வெயிலிலே காய வைப்பதோடு கூட, அந்த முடை நாற்றம் மாறுவதற்கு முறிவாக அவர்கள் ஒரு காரியம் செய்வது வழக்கம். விளாம்பழத்தை அதற்குள் இட்டு மூடி வைப்பார்கள். பிறகு அதை எடுத்தால் கம் மென்று விளாம் பழ வாசனை வீசும். முடை நாற்றம் அடியோடு போய்விடும். அதில் பாலைக் காய்ச்சித் தோய்த்தால் அந்தத் தயிருக்கே ஓர் இனிய வாசனை உண்டாகும். விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி அல்லவா அது?

இதோ ஒரு வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறாள் ஒரு மங்கை. அதைச் சற்றுக் கவனிக்கலாம். அவள் முன்னே தயிர்ப் பானை இருக்கிறது; விளாம்பழ வாசனை வீசும் குழிசி; கமஞ்சூற் குழிசி. ஒரு கம்பம் நட்டிருக்கிறார்கள். அதில் தான் மத்தைப் பூட்டி அந்த மங்கை கடைகிறாள். மத்தின் கோல் தேய்ந்திருக்கிறது கயிற்றால் கடைந்து கடைந்து அப்படித் தேய்ந்து விட்டது. எவ்வளவு காலமாக அந்த மத்து இருக்கிறதோ, யார் கண்டார்கள்? யாரேனும் நுட்பமான ஆராய்ச்சி வல்ல வர்கள் அதன் தேய்மானத்தை அளவெடுத்து, இத்தனை காலம் இது வெண்ணெய் எடுக்கும் வேலையைச் செய்து வருகிறது என்று சொல்லலாம். அப்படி ஆராய்ச்சி செய் கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா, என்ன? கயிறு தின்று தேய்ந்துபோன தண்டையுடைய மத்தைக் கம்பத் திலே பூட்டி அந்தப் பெண் கடைகிறாள். வெண்ணெய் எடுப்பதற்காகக் கடைகிறாள். அந்த மத்துச் சுழல்கிறது நெய்யை எடுப்பதற்கு இயங்குகிறது; அது நெய் தெரி இயக்கம், விடியற்காலையில் பலர் இன்னும் துயின்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நெய் தெரி இயக்கம் நடைபெறுவதால் அதன் ஒலி தெளிவாகக் கேட்கிறது. அந்தக் கம்பத்தின் அடியிலே முழங்குகிறது தயிர் கடையும் சத்தம். இருள் பிரியும் நேரம் அது என்பதை அந்தக் சத்தமே சொல்கிறது. அந்தப் பெண்மணிக்குத்தான் எத்தனை சுறுசுறுப்பு!

***

தங்கி நின்ற இரவு புலரும் விடியற்காலமாகிய அந்த வைகு புலர் விடியலில் நெய் தெரியும் இயக்கம் முழங்குவ தைக் கேட்டுக் காதலி எழுந்தாள். முன்னாலே திட்டமிட்டபடி தன் காதலனுடன் புறப்பட எண்ணியே எழுந்தாள். அவள் போகும் செய்தி உயிர்த் தோழி ஒருத்திக்குத்தான் தெரியும்; வேறு யாருக்கும் தெரியாது.

அந்த இரவெல்லாம் அவளுக்குத் தூக்கம் இருந்திருக் குமா? தன் காதலனுடன் என்றும் பிரியாமல் இணைந்து வாழும் இன்ப உலகத்துக்கல்லவா அவள் செல்லப் போகிறாள்? யார் கண்ணிலும் படாமல் புறப்படவேண் டுமே என்று கவலை கொண்டாள். உடம்பையெல்லாம் போர்த்துக் கொண்டு வழி நடக்கவேண்டும் என்று தீர் மானம் செய்தாள். அவள் காலில் உள்ள சிலம்பு நடக்கும் போதே கல் கல் என்று ஒலிக்கும். அதற்குள் பரல்கள் இருந்தன, பரலுக்கு அரி என்று ஒரு பெயர் உண்டு. அரி யமை சிலம்போடு நடந்தால் அவள் செல்வதைச் சிலம்பே விளம்பரப்படுத்திவிடும். அதைக் கழற்றி வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.

கொஞ்சம் கண் மூடியும் சிறிது நேரம் தூங்கியும் நெடு நேரம் யோசனையுள் ஆழ்ந்தும் அவள் படுத்திருந்த போது தயிர் கடையும் ஒலி காதில் பட்டது. விடியற்காலம் ஆகி விட்டது என்று எழுந்தாள். ஒருவரும் அறியாமல் ஒரு நீண்ட போர்வையை எடுத்துத் தன் உடம்பு முழுவதை யும் போர்த்துக் கொண்டாள். அரிகள் அமைந்த தன் சிலம்புகளைக் கழற்றினாள். அவற்றை எங்கே வைக்கலாம் என்று யோசித்தாள். அவள் விளையாடும் கருவிகளெல் லாம் ஓரிடத்தில் இருந்தன. அங்கே வைக்கலா மென்று போனாள். தன்னுடைய தோழிமார்களுடன் பந்து விளை யாடுவதில் அவளுக்கு மிக்க விருப்பம். அழகான பந்துகள் அவளிடம் இருந்தன. பல வகை அழகோடு கூடிய பல பந்துகளை அவள் வைத்திருந்தாள். இறுக்கிக் கட்டிய பந்து கள் அவை. அந்தப் பந்துகளோடு சேர்த்து இந்தச் சிலம்பு களை வைத்துவிடலாம்’ என்று எண்ணிக் கழற்றிய சிலம்பு களைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றாள்.

அப்போது அவள் உள்ளம், மறு நாள் காலையில் என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கியது. அடுத்த நாள் காலையில் தாய் எழுந்து தன் காரியத் தைப் பார்ப்பாள். செவிலித் தாயும் எழுந்து ஏதேனும் வேலையிலே ஈடுபடுவாள். தோழிமார்கள் எழுந்து வந்து அவளை எழுப்ப வருவார்கள்; பந்து விளையாடலாம் என்று அழைக்க வருவார்கள். படுக்கையிலே காணாால் வீட்டில் மற்ற இடங்களைப் பார்ப்பார்கள். தாயினிடம் கேட்பார் கள்; செவிலித்தாயைக் கேட்பார்கள். ”நேற்று ராத்திரி வழக்கம் போலத்தானே இங்கே படுத்திருந்தாள்? எங்கே போயிருப்பாள்? உங்களில் யாரையாவது தேடிக் கொண்டு போயிருப்பாள். வந்து விடுவாள்” என்று அவர்கள் சொல் வார்கள். சிறிது நேரமாகியும் தலைவி வராமை கண்டு தோழிமார்கள் கவலைக்கு உள்ளாவார்கள். பெற்ற தாயும் வளர்த்த செவிலித் தாயுங்கூட மனத்தில் அச்சமடைந்து தேடத் தொடங்குவார்கள்.

தோழிமார் விளையாட்டுக் கருவிகள் வைத்திருக்கும் இடத்தில் போய்ப் பார்ப்பார்கள். வரிப்புனை பந்தோடு அரியமை சிலம்புகளும் இருப்பதைப் பார்த்துக் கூவுவார் கள். தலைவி புறத்தே சென்று விட்டாள் என்ற உண்மை அவர்களுக்கு அப்போது தெரியவரும். அந்தப் பந்தையும் சிலம்பையும் பார்த்து யாவரும் வருந்துவார்கள்.

இந்தக் கற்பனைக் காட்சி காதலியின் உள்ளத்தே ஓடியது. தன்னைப் பெற்ற தாயும் வளர்த்த செவிலித் தாயும் நொந்தாலுங்கூட அவர்களைப் பற்றி அவள் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அந்த இரண்டு பேருமே தன்னுடைய தலைவனைத் தான் மணம் செய்து கொள்ள முடியாமல் தடையாக இருப்பவர்கள். ஆதலால். அவர்களிடம் அவளுக்குக் கோபந்தான் இருந்தது. ‘அவர்கள் உண்மை தெரிந்து வருந்தட்டும்’ என்றுகூட அவள் எண்ணினாள். ஆனால் தோழிமார் வருந்துவார்களே! அதை நினைக்கும் போது தான் அவளுக்கு என்னவோ போல் இருந்தது. மனசுக்குச் சமாதானம் தோன்றவில்லை. பல நாட்களாக ஒன்றுபட்டுப் பழகிய ஆயத்தோர்கள் அல்லவா அவர்கள்? அவர்கள் தன் பிரிவால் நொந்து அரற்றுவார்களே! அவர்களுக்குக் காதலியின் நிலை தெரி யாதே! அவர்கள் வருந்துவதை நினைத்தால் உள்ளம் இரங்குகிறது. அவர்கள் மிகவும் அன்புடையவர்கள்; பாவம்! ஏங்கிப் போவார்கள். அளியரோ அளியரி! இரங்கத்தக்கவர்கள்.

இந்த நினைப்பு வந்ததோ இல்லையோ, காதலிக்கு ஊக்கம் குறைந்தது. திட்டமிட்டபடி எல்லாவற்றையும் செய்தவள், இப்போது வாட்டம் அடைந்தாள். அவள் கால் எழவில்லை. காதலனுடன் இடையூறின்றி இன்புற்று வாழலாம் என்று எண்ணி அடைந்த பெருமிதம் இப்போது எங்கோ ஒளித்துக்கொண்டது. அவள் உள்ளத்தே துயரம் வந்து கப்பிக் கொண்டது. அவளையும் அறியாமல், அவ ளுடைய உறுதியையும் மீறி, அவள் கண்களில் நீர்த் துளிகள் புறப்பட்டன. மயங்கி நின்றாள்.

அவள் எழுந்தது முதல் அவளை ஒருத்தி கவனித்துக் கொண்டே இருந்தாள். அவள் வேறு யாரும் அல்ல அவளுடைய உயிர்த்தோழி. தலைவனுடன் அவளை வழி யனுப்புவதற்கு வேண்டிய காரியத்தைச் செய்தவள் அவளே. அவள் தலைவியைக் கவனித்தாள். சிலம்பைக் கழற்றும் வரைக்கும் அவளுக்கு இருந்த ஊக்கம், வரிப்புனை பந்தைக் கண்ட போது இல்லாமற் போனதையும் அவள் கண்கள் கலுழ்வதையும் கண்டாள்.

மெல்லச் சென்று அவளை அணுகினாள். தலைவனுடன் செல்வதற்கு அவள் மனம் விரும்பினாலும், பழகிய இடத்தைப் பிரிவதற்குரிய துணிவு அவளுக்கு இல்லை என்பதைத் தோழி உணர்ந்து கொண்டாள். அவள் முதுகைத் தடவித் தலையைக் கோதி ஆறுதல் செய்தாள். “நீ வருந்தாதே; இங்கிருந்து நீ போக வேண்டாம் உன் காதலனை ஏற்றுக் கொண்டு மணம் செய்து கொடுக்கும்படி செவிலித் தாய்க்குக் குறிப்பாகத் தெரிவிக்கிறேன்; உன் உள்ளம் கொள்ளை கொண்டவன் இன்னான் என்பதை வேறு சந்தர்ப்பத்தில் தந்திரமாக அவள் உணரும்படி செய்வேன். நீ படுத்துக் கொள்” என்று சொல்லி, அவள் காலில் மீட்டும் சிலம்பை அணிந்தாள். தடுமாறும் உள்ளத்தோடே தலைவி தன் பாயலில் வந்து படுத்தாள்.

வெளியில் தலைவன் நின்று கொண்டிருந்தான். தன் காதலியை அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவளை எதிர்பார்த்து மறைவான ஓரிடத்தில் காத்துக் கொண் டிருந்தான். தோழி அங்கே சென்றாள். காதலியைக் காணாமல் அவளை மட்டும் கண்ட தலைவன், அவள் எங்கே?” என்று கேட்டான். அவள் வருவதாகத்தான் இருந்தாள். ஆனால்…” சிறிது நிறுத்தினாள். தலைவன் ஆவலோடு கேட்கலானான்.

விடியற் காலையில் எழுந்து யாரும் அறியாமல் புறப்படலானாள். காற் சிலம்பைக் கழற்றிப் பந்தோடு வைக்கப்போனாள்; உம்மோடு வருவதில் முழு மனமும் உடையவளாய் எல்லாவற்றையும் செய்தாள். பந்தைக் கண்டவுடன் ஆயத்தோர் நினைவு வந்துவிட்டது போலும்! காலையில் அவர்கள் இவற்றைப் பார்த்து எப்படியெல்லாம் வருந்துவார்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருக்க வேண்டும். அவளும் எவ்வளவோ அடக்கி அடக்கிப் பார்த்தாள். ஆனால் அவள் கண்கள் அதையும் மீறி அழுது விட்டன. அவளுக்கு உடம்பாடு தான்; ஆனாலும் அழுத கண்ணோடு புறப்படலாமா?’

தலைவன் தலைவியின் பூப்போன்ற உள்ளம் புண்படக் கூடாதென்று நினைக்கிறவன். தோழி கூறியதைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தான். “இனி என்ன செய்வது?” என்ற கேள்வி அவன் வாயிலிருந்து வந்தது. “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபயம் அளிப்பவளைப் போலச் சொன்னாள் தோழி.

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல், மெய்கரந்து தன்கால்
அரி அமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்,
‘இவைகாண் தோறும் நோவர் மாதோ!
அளியரோ அளியர் என் ஆயத் தோர்’ என,
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

விளாம்பழத்தின் வாசனை வீசும், நிறைந்த கருப் பத்தை உடையது போல நடுவிடம் பருத்த பானையில், கயிறு தின்ற தெய்ந்த தண்டையுடைய மத்தினால் மகளிர் வெண்ணெயைக் கடைந்து எடுக்கும் தொழில் தூண் அடி யில் ஒலிக்கின்ற இரவு புலர்கின்ற விடியற் காலத்தில், தன் உடம்பை மறைத்துத் தன் காலில் இருந்த பரற்கல் அமைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவாகி மாட்சிமைப் பட்ட வரிந்து புனைந்த பந்தோடு அவற்றை வைக்கும் பொருட்டுச் சென்ற உம்முடைய காதலி, ‘இவற்றைப் பார்க்குந்தோறும் வருந்துவார்களே, என் தோழிமார்! மிகவும் இரங்கத்தக்கவர்கள்’ என்று எண்ணவே , அவள் உம்மோடு வருவதற்கு வேண்டியவற்றைச் செய்து கொண்டே இருக்கவும், அவள் சக்திக்கு உட்படாமல் அவள் கண்கள் அழுதன.

கரந்து, கழீஇ, வை இய செல்வோள், என, அயரவும் கண் கலுழ்ந்தன என்று கூட்டுக.

கம – நிறைவு ; கமஞ்சூல் – நிறைந்த கருப்பம். குழிசி; பானை. பாசம் – கயிறு. மத்தம் – மத்து. தெரிதல் – கடைந் தெடுத்தல். இயக்கம் – செயல் . வெளில் முதல் – கம்பத்தி னடியில் . வைகு புலர் விடியல் – இரவு விடிகிற விடியற் காலம். அரி – சிலம்பின் உள்ளே இடும் பரல். கழீஇ – கழித்து கழற்றி . மாண் – மாட்சிமைப்பட்ட ; அழகுள்ள. வரிப்புனை பந்து – வரிந்து புனைந்த பந்து. வைஇய – வைக்கும் பொருட்டு. அளியர் – பாவம் என்று இரங்குவதற்குரியவர். ஆயத்தோர் – பாங்கியர். அயர – செய்ய, வரைத்து – சக்திக்கு உட்பட்டது. கலுழ்ந்தன – அழுதன.*

“தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது’ என்பது இந்தப் பாட்டின் துறை, ‘தலைவியை அழைத்துக் கொண்டு அவ ளுடன் போகலாம் என்று துணிந்த தலைவனிடம் தோழி பேசி அப்படிச் செல்வதற்கு அஞ்சும்படி செய்தது’ என்பது இதன் பொருள். தலைவி வீட்டை விட்டுப் பிரிவ தற்கு வருந்துகிறாள் என்ற காரணம் காட்டி, ‘அவள் வருந்தும்படி நாம் அவளை அழைத்துச் செல்லுதல் தகாது’ என்று தலைவனை அஞ்சச் செய்தாள்.

இதைப் பாடியவர் கயமனார் என்ற நல்லிசைப் புலவர்.

இது நற்றிணையில் பன்னிரண்டாவது பாட்டாக உள்ளது.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *