வெற்றி முன்னாடி..நடேசன் பின்னாடி..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 9,784 
 

வெயில் சாய நேரு விளையாட்டு அரங்கத்தின் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. போகப் போக அம்மின்னொளி படர்ந்து பகல் போல காட்சியளித்தது. எப்போதும் பரபரப்பிற்கு மட்டும் பஞ்சமில்லாத சென்ட்ரல் இரயில் நிலையம் அன்று மாலையும் அவ்வாரே மல்லுக்கட்டியது. கால்பந்து போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருக்க ரசிகர்களின் ஆரவாரமும், சீட்டிகளும் தனி உற்சாகத்தைக் கிளப்பியது. மக்கள் கூட்டம், கட்டடம் போல் அடிக்கிக் கொண்டு போக, இரயில்கள் தாமதம் எனும் செய்தி தாமதமில்லாமல் ஒலித்தது. “டன்… டன்ன்… டொன்., பயணிகளின் அன்பான கவனத்திற்கு, அரக்கோணம் மார்கமாக செல்லும் மின் தொடர்கள் சற்று தாமதமாகப் புறப்படும், தாமதத்திற்கு வருந்துகிறோம்” என ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் ஒரு நடுத்தர பெண்மணியின் குரல் ஒலித்தது, மக்கள் நெரிசல் அதிகரித்து நொறுக்குத் தீனி விற்பவரின் ராகம் நாக்குகளுக்கு மோகம்! ஒரே இடத்தில் செய்த “பாப்கார்ன்” எல்லா மத வாயினுள் செல்லும், வியாபாரிகள் பெரும் போராளிகளாக வீரு கொண்டு விற்பார்கள். பல வாய்களுக்கு வெட்டி நேரங்களில் நொறுக்குத் தீனியும், வீண் பேச்சும் தானே! கால்பந்து போட்டியும் நிறைவுற்றது. இரயிலுக்கு செல்லும் கூட்டமும் அலையாய் நடைமேடை கரையோரம் நுரையாய் பொங்கி வழிந்தது.

‘தூ ஜானேவாலி… அக்லி காடி…’ என்ற அறிவிப்புக்கு பின் “திருத்தனி வரை செல்லும் விரைவு மின் தொடர் பணிரென்டாவது நடைமேடையிலிருந்து இன்னும் முப்பது நிமிடங்களில் புறப்படும், தாமதத்திற்கு வருந்துகிறோம்” என சிறு மழை பெய்து ஓய்ந்தார் போல இருந்தது.

மனிதர்களைவிட கொசுக்கள் அதிகம், ஒவ்வொரு தலைமேலும் வைக்காத கீரிடம் போல தலையைச் சுற்றி கொசுக்கள், அடர்ந்த தேன் கூட்டின் ஈயாக மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். நடைமேடையின் சிமெண்ட் பெஞ்களும், பளிங்கு திண்ணைகளும் நெரிசல் தாங்காமல் முணுமுணுக்கும் கால்பந்து போட்டியின் மறு ஒலிபரப்பு, வானொலி வர்ணனையாக அங்குமிங்கும் ரசிகர்கள் நிபுணர்களாக பேச, தூரத்தில் இரு நாற்காலியில் இரண்டு நபர்கள் குரட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர். வாயிலிருந்து ஜொல்லு ஒழுக ஒருவர், இன்னொருவர் தலை சரிந்தவாறு நித்திய சயனத்தில் இருந்தார்கள். இவர்களுக்கு என்ன ஒரு குடுப்பினை. பஞ்சு மெத்தையில், குளிரூட்டியில் அமைதியான சூழலில் பலருக்கும் வராத உறக்கம், நெரிசலில், சப்தத்தில், வியர்வை நாற்றத்தில், கொசுக்கடியில், ஒலிப்பெருக்கியின் இரைச்சலில் தன்னை மறந்த உறக்கம், உறுதியாக அது போதையாக இருக்க முடியாது. ஒருவர் தலைமைக் காவலர் மற்றொருவர் வெள்ளை உடையில் பார்பதற்கு பொம்மைப் பட முகமாக இருந்தது. ஒருவித ஊகம் தான் போதையில்லையென்று.

திடீரென ஒரு அலரலில் எழுந்தார் வெள்ளை உடை ஆசாமி அதன் தாக்கத்தில் காவலரும் விழித்தார். இருவருக்கும் பெரும் மருட்சி, அங்குள்ள கூட்டத்தைப் பார்த்து சிறிது நேரம் பொருத்தே புலப்பட்டது இரயில் தாமதமென,

முதலில் காவலர் கேட்டார், “என்ன, சார் அலரிட்டீங்க கெட்ட கனவா?”

“ஆமாங்க! தமிழ்நாட்ல பூரண மது விலக்கு”

சிரிப்பை அடக்கியவாறு “நல்ல கனவுதானுங்களே!”

“நல்ல விஷயம் தாங்க, ஆன பிப்ரவரி 30 ‘ல’ இருந்து அமல்ன்னு சொல்றாங்க!” என்றார் வெள்ளை உடை ஆசாமி

லேசான புன்னகையுடன் காவலர், “ கெட்டதோ கெட்ட கனவு”

“ஐயா, என் பேரு பழ. நடேசன் நீங்க?”

“என் பேரு வெற்றி, ஹெட் கான்°டபல்.. அது என்னா சார்? பழ பிசின°ஸா உங்களுக்கு?”

“எங்க அய்யன் பேரு பழனி, அப்படியே ‘பழ’ன்னு முன்னாடி வெச்சிக்கிட்டேன், அதுவுமில்லாத அரசியல்ல வேற இருக்கேன். இங்க இந்த மாதிரி சீரியல் பல்புக்கு மரியாத ஜா°தி” என கூறி நகைத்தார்.

இரயிலின் கால தாமதம், இவர்களது பேச்சுக்கு வீச்சாக தட தட வென தண்டவாளம் மேல் ஓடும் இரயிலாக நன்றாக ஒத்துப்போனது.

“உங்க ஊர் எதுங்க?”

“சார் அரக்கோணத்துல இருந்தேன், போலீ°ல வேல கிடச்சிட்டு சென்னைக்கு வந்திட்டேன், இப்போ அம்பத்தூர்ல இருக்கேன்!”, சிறு இடைவேளைக்குப் பின், “சரி! இவ்வளோ, மருவாதையா பேசுறீங்க! நீங்க எப்படி அரசியல்ல? எந்த கட்சி? எந்த ஊரு நீங்க?”

“ஐயா! எனக்கும் அரக்கோணம் தான், பக்கத்துல தக்கோலம். அங்கதான் பூர்வீகமெல்லாம். எந்த கட்சியும் சார்ந்து இல்ல, சுயேட்சி; நிறைய கட்சிலயிருந்து கூப்டாங்க; ஹீம்.. ஹீம்ம்… போகலையே! தொடர்ந்து பதினெஞ்சு வருஷம் உள்ளாட்சி தேர்தல்ல கவுன்சிலரா இருக்கேன்” என பெருமிதத்தோடு கூறினார் நடேசன்.

“சார்!!!, நீங்க தானா அது?? ரொம்ப சந்தோசம் உங்கள பாத்ததுல”

ஒரு வயோதிகர் “பாப்கார்ன்” விற்று செல்ல, அதை வாங்கி இருவரும் பகிர்ந்தார்கள், இரயில் சற்று நேரத்தில் நடைமேடை வந்தடையும் என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. காவலர், நொருக்… நொருக் என வாயில் பாப்கார்ன் போட்ட வாறு.

“எப்படி சார், சுயேட்சியா? அதுவும் மூனு டைம்? ஏன் எம்.எல்.ஏ.க்கு நிக்கல?”

“அது ஒரு பெரிய கதங்க! எம்.எல்.ஏ.க்கு பொறுப்பு அதிகம் அதுவும் எல்லா காரியத்துக்கும் நம்பலால போக முடியாது, யாரவது உதவிக்கு வேணும், அரசியல்ல யாரையும் நம்ப முடியாது. உள்ளாட்சினா எல்லாதுக்கும் நானே போவேன். ரோடு பிரச்சன, கொழா தண்ணி, தடுப்பூசி, மழை வெள்ளம் எல்லாத்தையும் சரியா பாத்துக்குவேன். என்னைக்கு எல்லாத்தையும் சமாளிக்களாம் ங்கர தெம்பு வருதோ அன்னைக்கு நிப்பேங்க!”

காவலரின் வாயிலிருந்த பாப்கார்ன் உள்ளே செல்லாமல் அவரும் மெல்லாமல், நடேசனின் நேர்மையும், மாண்பும் திக்கு முக்காடவைத்தது. மேலும், ஓர் ஆர்வம் சூழ, அப்படி என்ன பெரிய கதை, எப்படி கவுன்சிலர் ஆனார் என்பதை கேட்கவும் விரைந்தார்.

“சார்! இந்த காலத்துல இப்படியா? நீங்க சீரியல் பல்பு இல்ல எல்.ஈ.டி.சார்… எல்.ஈ.டி…? நானும் அரக்கோணத்துல இருந்திருக்கேன் உங்கல பாத்தது இல்லை, அந்த பெரிய கதைய சொல்லுங்க சார்.”

பெரிய சிரிப்புடன் பழ. நடேசன் பழைய பாத்திரத்தை உருட்டினார். “நான், தக்கோலம் பக்கத்துல இருக்கிற திருமால்பூர்ல அப்ப சின்ன திருடன். இரும்பு, பிளா°டிக் அயிட்டங்களா திருடுவேன், அப்பப்போ எவர்சில்வர் சாமானுங்களும். பெருசா எதுவும் திருடினது கிடையாது. அப்படியே என் வண்டி ஓடிட்டு இருந்துது. சுமாரா பதினாறு, பதினேழு வருஷம் இருக்கும், எங்க ஊர் பக்கத்துல ஒரு சேடு கடையப் போட்டான். அதிக வட்டி வசூல் செய்வான் கம்முநாட்டி. ஆனா, காசு உடனே கொடுத்துடுவான். அந்த டைம்ல ‘அருணாச்சலம்’ படம் ரிலீ°, அப்ப தான் கோடி அளவுக்கு காசு போகும் ன்னு தெரியும், அதுவரைக்கும் லட்சத்துக்கு மேல எதுவும் இல்ல ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.”

அந்த படம் பாத்தவுடனே, பணம் சம்பாதிக்கணும் ன்னு பெரிய ஆர்வம், தெரு கோடீல நின்னு கோடிக் கோடியா சேக்கனும் ன்ற ஆசை வந்தது. அப்படியே நடந்து போகும் போது அம்மாவாச பூசணிக்காய்ல வெச்ச நாலணா தான் முதல் சேமிப்பு, ஊருக்குள்ள நடந்து வந்தா அந்த சேடு எங்க இழ்துல மெரட்டிக்கிட்டு இருக்கான்.

“ஹரே! இங்க கேள், மரியாதயா வட்டி வர்ணும், இல்லே போலீ° கூப்பிடுவேன், உன்கு மானம் இல்லே, காசு வாங்கினேலே, அறுவுலே, சோறு தானே…! நாலைக்கு வரிக்கும் டைம் ன்னு கோவமா போய்ட்டான்”

சட்டென காவலர் குறுக்கிட்டு, “சார்! சேடுங்க எல்லாம், நிம்பில் சொல்றான்! மேல வைக்கிறான்; அப்படி தானே பேசுவாங்க!”

“நிறைய தமிழ் படம் பாத்திருப்பீங்களோ!!, ஒரு ப்ளோபா போவுது நடுல டி°டர்ப் பண்ணாதீங்க யா..!”

காவலரின் கண்கள் உருண்டது, மன்னியுங்கள் என்ற முகபாவனையோடு, பெரும் கூட்டத்திலிருந்து உ°சு… உ°சு என்ற ஆட்பறிப்பும் இருக்க, “மேல! சொல்லுங்க சார்!” என்றார் காக்கி.

“என்னோட பக்கத்து வீட்டு கோவாலு, அவன் பொண்ஜாதியோட மூக்குத்திய அடமாணம் வெச்சான், நானூறு ரூபாய்க்கு. அது குட்டிப் போட்டு, வட்டி அவன் புள்ளைய விட பெருசாயிருச்சு! எட்டு நூறு ரூபாய் வையுன்று சொல்றான் அந்த சேடு. இந்த மேட்டர் நடக்கும் போது நான் என்டிரி ஆனேன். எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. திரும்ப அருணாச்சலம் எஃபக்டு வந்துது, ‘நமக்கு முப்பது நாள்ல மூப்பதாயிரம் ரூபாய் செலவு பண்ணணும் ன்னு சொன்னா! ச்சா… ச்சா… மூவாயிரம் போதும், பத்து பட்டாப்பட்டி வாங்குவேன், ஜம்முன்று மைனர் சொக்கா, அதுக்கு மஞ்சள் வெச்சி, நலங்கு பண்ணுவேன், டெல்லி எருமை, பசு ன்னு வாங்குவேன், பெரிய லெவல்ல திருடி ஜாமின்ல வெளியே வருவேன், அப்பறம்… அப்பறம்… கோவாலு கடன் அடைக்கலாம்’ ன்னு யோசிச்சேன். அப்ப தான் மனசல பெரிய தைரியம், வீரியம் கலந்து, எம்.ஜி.ஆர் மூணாவது அடிக்கு அப்புறம் எழுந்து நிப்பாரே அதே மாதிரி இருந்துது.

சேடு கடைய ஆட்டைய போடலாம். கைல கிடைச்ச காசெல்லாம் ஊர்ல எல்லாருக்கும் கொடுக்கலாம். கொஞ்சம் எனக்கும் ன்னு திட்டம் போட்டேன். அடுத்த நாள் இந்தத் திட்டத்தை நிறை வேத்தலாம்னு இருந்தேன். எனக்கு நவ்தால் பூட்டு மட்டும் தெறக்கத் தெரியும். சேடும் அதே பூட்டு போடுவான். அடுத்த நாளும் வந்துச்சு. நல்லா முகத்த துணியால சுத்திட்டு, மணி சரியா பதினோறு பதினொன்றையிருக்கும், இரண்டாவது ஆட்டம் முடிஞ்சு ஜனங்க வரதுகுள்ள சுரிட்டிடனும் ன்னு சேடு கடைக்கு கிட்டப்போனேன், அக்கம் பக்கம் யாருமே இல்லை, தூரமா ஒரு நாய் ஊளையிட்டுட்டு இருந்துது.

திடீன்று பூனை ‘மியாவ்’ ன்னு எகிறி என் தோள்மேல ஒக்காறுமா!! பயந்து போய் ‘அடங்க கொனியா’ ன்னு அலறிட்டேன், பயம் நெஞ்சுக்கு தெரிஞ்சு போச்சு, லப் டப்… லப் டப் எஃ°பிர° டிரைன் மாதிரி அதிவேகமாக போச்சு. இதுக்கு முன்ன இந்த மாதிரியெல்லாம் திருடல, திரும்ப ஏழுமலையான வேண்டி, குனிஞ்சு பூட்ட திறக்க போனா…., பூட்டு தொரந்து இருக்கு, அட நமக்கு முன்ன யாரோ வரிசை வெச்சிடான்னுவளா!! ன்னு கதவ திறந்து உள்ளே போய் பாத்தா….! பாத்தா…!”

காவலர், “அட…. சொல்லுங்க சார்! °டக்கான ரிகார்டு மாறி…..” என ஆர்வத்தின் உச்சியிலும் ஏதோ பீதியோடு தொனித்தார்.

“பொறுமை அவசியம் காவலரே!.., பாத்தா…. சேடு, கை, கால் கட்டிப் போட்டு, வாய்ல பிலா°திரி போட்டு படுத்திருந்தான். உடனே, என் முகத்துல சுத்தன துணிய எடுத்துட்டேன். கை, கால் கட்ட அவுத்துவிட்டேன். பிலா°திரியையும் எடுத்தேன். ஒரே பீதி எனக்கு, ‘யோவ், சேடு என்னாச்சு?’ ன்னு கேட்டேன் அதுக்கு சேடு, ‘தண்ணீ… தண்ணீ’ ன்னா, மயக்கத்தோடையே இருந்தான். உடனே வத்திக்குச்சி வெளிச்சத்துல தண்ணீ எடுத்துட்டு வந்தேன், அதை குடிச்சான். கொஞ்ச நேரம் கழிச்சி, ‘என் உயிர காப்பாத்திட்ட…! காப்பாத்திட்ட…! ஒருத்தன் வந்தான் கடை சாத்தும்போது, நாலு கொட்டு நருக்குன்று கொட்டினான்! பக்வான்…. பக்வான் ன்னு கத்தும் போது பிலா°திரி போட்டான், கட்டியும் போட்டான், ரொம்ப நேரமா காசு தேட்னான், அதுக்குள்ள யாரோ வெளிய கத்துற சத்தம் கேட்டுது. யாரோ வந்துட்டாங்கன்ற கடுப்புல போய்ட்டான். போரதுக்கு முன்ன ஒரே ஒரு கொட்டு ஓங்கி கொட்னான் (அழுது கொண்டே சொன்னார்), மொத்த காசும் என் பாக்கெட்ல இருந்துச்சு, என்கிட்ட அவன் தேடல, இந்த ஊர் வேணா! எதுவும் வேணா, உசுரு போதும், இந்தா மொத்த காசும் நீயே வெச்சிக்கோ! சேட் ராஜ°தானுக்கே போறான்” ன்னு கைல காசை திணிச்சிட்டு சேடு ஓடியே போய்ட்டான். எனக்கு ஒன்னுமே புரியல. காக்கா ஒக்கார பனம் பழம் விழுந்த கணக்கா ஆயிடுச்சு. எல்லா துட்டையும் எடுத்துட்டு அடுத்து நாள் காத்தால ஊருக்கு போனேன். எனக்கெதுக்கு இவளோ துட்டு ன்னு ஏழைங்க எல்லாருக்கும் கொடுத்தேன். அதுல ஒரு பெரிய சந்தோஷம் இருந்துது… சமீபத்துல வடிவேலு சினேக் பாபு ன்னு நடிப்பாரே, அதே மாதிரியே ஜனங்க என்ன கவுன்சிலர் ஆக்கிட்டாங்க. அப்பறம் எல்லாருக்கும் நல்லது செய்றது சந்தோஷமா இருந்துது. அப்படியே அது பழக்கமும் ஆயிடுச்சு. நிறைய கட்சிகாரங்க கூப்பிட்டாங்க! ஆனா இந்த மாதிரி தன்னிச்சையே, சுதந்திரமா வேல செய்ய முடியுமானு தெரியல. எனக்கு பெருசா எந்த ஆசையும் இல்ல, என்னோட ஊர் ஜனங்களுக்கு தேவையானத செய்யனும், செஞ்சிட்டுயிருக்கேன். எங்க மாவட்டத்துல எனக்கு கீழ் இருக்கிற வட்டம் தான் முதல்ல இருக்கு, இது தாங்க நம்ம எ°.டி.டி. (ஹி°டரி)”.

கண்ணில் தண்ணீருடன், மன நிறைவானதொரு உணர்வோடு நெகிழ்ச்சியடைந்தார் காவலர் வெற்றி. சற்று நேரம் அவரிடையே சலனமில்லா நிசப்தம் இருக்க. தன் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு,

“சார்! அந்த சேடு பாக்கெட்ட தேட பறந்துட்டேன் சார்!!”

பெரு மூச்சுடன் “என்னாது???” என அதிர்ந்தார் நடேசன். “ஆமா சார்! நானும் திருட்டு பய தான். சரியா தப்பு கூட பண்ண தெரியாது. திருட்டையும் சேத்து; பேரு மட்டும் வெற்றி. அந்த சேடு பேரு கவுதம் சந்த் தானே?”

“ ஆமா…. பா!”

“அந்தாள கட்டிப் போட்டு, கொட்டுனது நான் தான், ஒரு சத்தம் கேட்டுது. ‘கொன்னியா’ன்னு உருவம் பெருசா இருக்க பயந்து போய் ஓடிட்டேன். நீங்க சொல்ல சொல்ல அப்படியே திகச்சிப் போய்ட்டேன்.” ஆச்சரியம் எனும் அருவியில் குளித்து எழுந்தது போல ஆனார் நடேசன்.

“அப்போ, எப்படி போலீ° வேல?”

“எல்லாம் உங்க ஆசிர்வாதம் சார்! சேட்டு கட பின் பக்கமா இறங்கி ஓடினேனா, பயத்துல ரொம்ப வேகம் பிடிச்சேன், எதிர்ல ஒருத்தன் வந்து மோதினான் சார்!! அவனும் நானும் இடிச்சி கீழே விழுந்தோம், என்னோட ஒரே ஒரு இருபது ரூபாய் நோட்டு கீழே விழுந்துடுச்சு, அந்த களவாணிப் பய அவனோட காசுன்னு நினைச்சு எடுத்து லவுட்டிக்கினான், சுமார் பத்து போலீ° இருப்பாங்க ஜீப்லயும், ஓடியும் வந்தாங்க, அதுக்குள்ள சேடு மேட்டர் தெரிஞ்சிடுச்சு போலன்னு நினைச்சேன். கீழே விழுந்த அவனும் போலீ° பாத்து பயந்து ஓட ஆரம்பிச்சான், ‘அடேய், அவங்க என்ன துரத்துறாங்க… என்னோட இருபது ரூபாய் கொட்ரான்று கத்தி ஓடினேன். அவன் நிக்கவேயில்ல, போலீசும் தோரத்துராங்க, வந்துதே கோபம் ‘இருவது ரூபாய் டா. என்துதுது……’ அப்பறம் ஒரு வழியா அவனைப் பிடிச்சிட்டேன். ‘மருவாதையா என்னோட இருபது ரூபாய் குட்ரா’ ன்னு சொன்னேன், போலீ° சுத்துப் போட்டாங்க ‘யு, டன்ன கிரேட் ஜாப், அதாவது நீ அற்புதமான வேலை செஞ்சியிருக்கே ன்னு மேஜர் சுந்தர்hஜன் °டைல ஐ.ஜி சொன்னாரு எனக்கு ஒன்னுமே புரியல, அப்பறம் தான் தெரியும் நான் பிடிச்சது வெளிநாட்டு தீவிரவாதியாம்!! அப்படியே எனக்கு போலீ° வேலையும் கொடுத்து, பதக்கத்தையும் கொடுத்தாங்க சார் !”

பழ. நடேசன் வாயைப் பிளந்து சிரித்ததில் பத்து கொசு உள்ளே சிக்கி இரும்பிக் கொண்டிருதார். பிறகு, “நீங்க, இருபது ரூபாய் ன்னு கேட்டது அவனுக்கு புரியல போல, புரிஞ்சிருந்தா அதையும் உங்களையும் தூக்கிப் போட்டு இருப்பான்”

பெரிய நீண்ட சிரிப்பிற்கு பின் “சரி ! மாமூல் எதாவது வாங்குவீங்களா???”

“போங்க சார் ! தீவிரவாதிய புடிச்ச ஆள் மாமூல்லாம் வாங்குவானா?? ன்னு ஊர் உசுப் பேத்தி ரணகளம் ஆகிருச்சு. அதுக்காகவே கொஞ்ச நாள் வாங்காமயே இருந்தேன். அப்பறம் அது பழக்கம் ஆயிடுச்சு. அதுவும் இல்லாம சந்தோஷமா இருக்கு மத்தவங்க நல்ல போலீ°ன்னு சொல்லும் போது……..”

“நீங்க முன்னாடி தப்பா பண்ண காரியத்தால, நான் சரியா பண்ண செயலால, இரண்டு பேருக்குமே நல்லது நடந்து, ஓடி, பறந்து இருக்கு. எந்த நல்ல காரியத்தையும் தொடர்ந்து செஞ்சா பழக்கம் ஆயிடும் யா !” என்று கூறி கைக்குலுக்கினார் பழ.நடசேன்.

என்றோ தூவிய விதை மரமாகி, யாருக்கோ நிழல் தருவதை அறிந்த நபர் போல மகிழ்ச்சிப் பெருக்குடன் இருந்தார் காவலர் வெற்றி.

இவரும் ஓரே வண்டியில் பயணிப்பவர்கள், இரயிலும் நடைமேடை வந்தடைந்தது, மற்ற மக்களைப் போல் இருக்கைக்கு அடித்துக் கொள்ளாமல் பொறுமையாக ஏறினர், வெற்றி முன்னாடி.. நடேசன் பின்னாடி……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *