கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,684 
 

பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை.

‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது.

ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்தான் கபாலி.

‘ஊரில் தன்னைப் பார்ப்பவர்கள் தூற்றுவார்களோ!’ என்ற அச்சத்துடன் வந்த கபாலிக்கு யாரும் அவனைக் கண்டு கண்டுகொள்ளாதது வியப்பைத் தந்ததது.

டீக்கடைக்குச் சென்ற கபாலி, அங்கே சுந்தரலிங்கத்தின் தாய்மாமன் அமர்ந்திருப்பதைப் பார்த்துச் சற்றே பின்வாங்க…

“என்ன கபாலி என்னதான் பிரச்சனைன்னாலும் அதுக்காக இப்படியா பண்ணறது…?” என்று கேட்டார் சுந்தரலிங்கத்தின் தாய் மாமன்.

“அது வந்து … நானே எதிர்பார்க்காம…”

“தெரியும்… தெரியும்… கேள்விப் பட்டேன். ‘நீ ஒரு சரியான ஆம்பிளையா இருந்தா வெளியூர்ல போய் ஒரு ஆறு மாசம் இருந்து குப்பை கொட்டு பார்ப்போம்’னு உன் முறைப்பொண்ணு சவால் விட்டதுக்காக அவளை இப்படி ஒண்ணரை வருஷம் உன்னையே நினைச்சி உருகி ஓடாத் தேய வெச்சிட்டியே… போ போய் உன் முறைப்பெண்ணை கட்டிக்க… போ…” என்று சிரித்தார் அவர்.

‘சுந்தரலிங்கத்தின் கை வெட்டுப்பட்ட விஷயமாகப் பேசப் போகிறார்…!’ என்று பயந்த கபாலிக்கு அதைப் பற்றிக் கேட்காததோடு தன்னிடம் இயல்பாகப் பேசுகிறாரே…?’ என்று குழப்பமாகவும் இருந்தது கபாலிக்கு.

‘சுந்தரலிங்கம் உயிரோடு இருக்கிறானா?’

‘அப்படியானால் நான் ஒரு கொலைகாரனா?’

சுந்தரலிங்கம் செத்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் கபாலி… காரணம் ‘அவன் உயிரோடு இருந்திருந்தால் அவனை வெட்டிய விஷயத்தை தாயும் தந்தையுமாய் இருந்து அவனை வளர்த்த தாய்மாமனிடம் சொல்லியிருப்பானே…!’

‘முறைப் பெண்ணைச் சென்று பார்ப்பதா…? இல்லை வந்தவாசி மீண்டும் தலைமறைவாகிவிடுவதா…?’ முடிவெடுத்தான்.

பஸ் ஸ்டாண்டுக்கு முன் ஒரு பஸ் வந்து நின்று, போயிற்று.

‘அந்தப் பேருந்திலிருந்து இறங்கி வரும் ஒற்றை ஆள் யார்…? ஓ… சுந்தரிலிங்கம்தான்… ‘அப்போது நான் கொலைகாரனில்லை…!’ என்று மனசு கூவியது

“சுந்தரலிங்கம் என்னை மன்னிச்சுடு…” என்று கபாலி கண்ணீர் விட ஒற்றைக் கையோடு சுந்தரலிங்கம் கபாலியைத் தட்டிக் கொடுத்தான்.

“கபாலி… உன்னை எதுக்கு நான் மன்னிக்கணும். படிச்சிட்டு வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு இருந்த எனக்கு உன் தயவாலதான் வேலை கிடைச்சுது. நீ என் கையை வெட்டின உடனே என் கஷ்டமெல்லாம் தீந்துடுச்சு…”

கபாலிக்கு ஒன்றுமே புரியவில்லை. விழித்தான்.

“என்ன கபாலி அப்படிப் பார்க்கறே…? இரண்டு கைகளும் இருந்தப்போ வேலை கொடுக்காத இந்த அரசாங்கம் என் ஒரு கையை இழந்த பிறகு ஊனமுற்றோர் கோட்டாவுல வேலை கொடுத்துடுச்சு…!” என்று சுந்தரலிங்கம் சொல்லிக் கொண்டே போக சிலையாக நின்றான் கபாலி.

– 27.02.1998

Print Friendly, PDF & Email

1 thought on “வெட்டு ஒண்ணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *