விளையாட்டு வினை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 8,154 
 

பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் அக்கல்லூரிக்கு. வழிநெடுக புளிய மரங்கள். மண்ணால் போடப்பட்ட சாலை. கல்லூரியின் குட்டிச்சுவரில் அன்பு யாரையோ எதிர்ப்பார்த்து உட்காந்திருந்தான். கல்லூரிக்கு மாணவர்கள் வருகின்ற திசையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அன்பு உட்காந்திருந்த பின்பக்கத்தில் இருந்து வினோத் வலது தோளை தட்டியவாறு இடதுபக்கம் வந்து குட்டிச்சுவரின் மீதேறி அமர்ந்தான். “எவன்டா என்ன தட்டினது” என்று வலப்பக்கம் திரும்பிப்பார்த்தான். “என்ன மச்சான் எந்த பிகரை பார்க்க இப்படி டிப்டாப்பா வந்திருக்க” என்றான் வினோத். “அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்று இழுத்த இழுவையைக் கண்டு வினோத் புரிந்து கொண்டான். “அந்த மாலதி புள்ளயப் பாக்கத்தானே…” “ஆமா மச்சான்”. “காதல் வேணாமின்னா எவன் கேட்குறான். பட்டாதான் புத்தி வரும்போல.. அது உன்பாடு அன்பு. அது இருக்கட்டும் எங்க ரவியும் கேசவனும்” என்று கேட்க, அவர்கள் இருவரும் சாலையின் மறுப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்.

அன்பு, வினோத், ரவி, கேசவன் நால்வரும் நல்ல நண்பர்கள். ஒரே கல்லூரியில் வெவ்வேறு பிரிவுகளில் மூன்றாம் வருடம் படிக்கிறார்கள். அன்பு பத்தி சொல்லனுமின்னா, நல்ல குண்டு. கருப்பா சுருட்டை முடியோட கடோத்கஜன் மாதிரி இருப்பான். கொஞ்சம் கோபக்காரன். பட்டுன்னு அடிச்சிட்டுதான் பேசுவான். அதனால என்னவோ இவன் கபடி பிளேயர் ஆயிட்டான். அடுத்து வினோத், உயரமா சிவப்பா இருப்பான். இந்த நால்வரில் இவன்தான் கொஞ்சம் அழகு. இவன் வாலிபால் பிளேயர். அடுத்ததா ரவி மாநிறம். அளவான உடம்பு. உடம்பெல்லாம் ரோமம். இவனுடைய ஒவ்வொரு ரோமமும் பேட்மிட்டன் பெயரைச் சொல்லும். ஆமாங்க! இவன் பேட்மிட்டன் பிளையர். கடைசி ஆள் கேசவன். எல்லாம் எனக்கு தெரியுமுன்னு நினைக்கிற ஆள். மாநிறம்தான். கிரிக்கெட் பிளையர். எப்போதுமே களத்தில தான் மட்டும் நிக்கனுமுன்னு நினைக்கிற ஆளு. இப்படி நாலுபேரும் நாலு விதமான விளையாட்டில் கெட்டிக்கார்கள். அந்த விளையாட்டிற்காக தன்னோட உசிரையே கொடுப்பாங்க. இவுங்க விளையாட்டுப் போலவே ஒவ்வொருத்தரும் மாறுபட்ட குணம் உடையவர்கள். ஒருத்தன் சொன்ன கருத்துக்கு மற்ற மூணு பேரும் எதிர்த்து பேசுவார்கள். ஒருத்தன் ஆமா என்பான். இன்னொருத்தன் இல்ல என்பான். அடுத்தவன் அதற்கு வேறவிதமா பதில் தருவான். கடைசி ஆளு இதெல்லாம் ஒரு மேட்டராடா வேற பேசுங்கடா என்பான். ஆனாலும் இவுங்க நட்புக்குள்ள அவர்களுடைய விளையாட்டுகள் ஒருபோதும் வந்ததில்லை. அதை அவர்களும் அனுமதித்ததில்லை. இவுங்க நாலுபேரும் நல்ல நண்பர்கள்.

“என்ன ரவி இவ்ளோ லேட்” என்றான் வினோத். “அதற்கு பஸ் வர வழியில பிரேக்டவுன் ஆயிடிச்சுடா மச்சான்” என்றான் கேசவன். “சரி பேச்சைக் குறைச்சிட்டு கிளாஸ்க்கு போகலாம்டா. ஈவினிங் எல்லொரும் அவுங்க அவுங்க பிராக்டிஸ் முடிச்சிட்டு இதே இடத்தில வந்து சந்திக்கலாம்” என்றான் அன்பு. மாலை நாலு மணிக்கு கல்லூரியில் அனைத்து வகுப்புகளும் முடிந்து விட்டன. இந்த நண்பர்கள் நாலு பேரும் அவுங்க அவுங்க பிராக்டிஸ் பன்ற இடத்துக்குப் போய்ச்சேர்ந்தார்கள். வாலிபால் களம். தோளில் மாட்டிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு ஷீ மாட்டிக்கொண்டான் வினோத். தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டியவாறு எகிறி எகிறி குதித்தான். உடம்பை நான்கு முறுக்காய் முறுக்கிக்கொண்டான். தலையை காலுக்குக் கொண்டுபோய் இரு உள்ளங்கையினையும் நிலத்திலே தொட்டான். ஒரே குதியில் களத்திற்கு வந்து விட்ட வினோத், எதிர்ப்புறத்தில் வேகமாய் வந்து கொண்டிருந்த பந்தினை தட்டியபடியே தன்னோட விளையாடிக் கொண்டிருக்கின்றவனைப் பார்த்து, “என்ன கோச் இன்னும் வரலியா” என்று கேட்டான். “கோச் இன்னிக்கு வரமாட்டாராம்” ஏன்? “அவுங்க அப்பாவுக்கு திடிரென்று நெஞ்சுவலியாம்” தன்னை நோக்கி வந்த பந்தை வெறி வந்தவன்போல் எகிறி ஒரு அடி அடித்தான் வினோத். களத்தில் இருந்து வெளியே வந்து அமைதியாய் உட்கார்ந்து கொண்டான் வினோத். அப்பா மேல உசிரா இருந்தாரு. பாவம் கோச் என்று பரிதாப்பட்டான். கோச்சும் இல்ல. விளையாட மனசும் இல்ல. என்ன பன்றதன்னு யோசித்தான். சரி நண்பர்களைப் பார்க்கப் போவோம் என்று கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

அது பேட்மிட்டன் களம். வினோத்தின் கால்கள் நின்றன. தன்னோட நண்பன் ரவி எதிர்நொக்கி வருகின்ற அனைத்துப் பந்துகளையும் துவம்சம் செய்து மறுமுனைக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ரவியின் ஆட்டத்தைப் பார்ப்போம் என்று அக்களம் ஓரத்தில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். பந்து மாறிமாறி வருவதும், அதை லாவகமாக திருப்பி மெதுவாக அடிப்பதும் பார்த்து ரொம்பவே ரசித்தான் வினோத். தன்னோட வாலிபால் விளையாட்டு போலத்தான் இதுவும். ஆனாலும் ஒரு ஜென்டில் தெரிந்தது வினோத்துக்கு. தன்னை லயித்து அவ்விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மறைந்தான். பயிற்சி ஆட்டமும் முடிவுக்கு வந்தது. “ஹே… வினோத் எப்படா வந்த…” “உன்னோட எதிர்ல இருக்கிறவனோட மூக்குலயே அடிச்சியே அப்பவே வந்துட்டன்”. இருவரும் சிரித்துக் கொண்டனர். “ஏய் ரவி… நீயும் நானும் ஒரு ஐஞ்சு நிமிசம் பேட்மிட்டன் ஆடுவோமாடா…” சிறிது யோசனைக்குப் பிறகு ரவி ஒப்புக்கொண்டான். இந்த நிகழ்வானது எத்தகைய விளைவை தரப்போகிறது என அப்போது ரவிக்கு தெரியவில்லை. இருவரும் மகிழ்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

குட்டிச் சுவரு. நால்வரும் பயிற்சி முடிந்து வந்து சேர்ந்தார்கள். “டே! கேசவா… நான் இன்னிக்கு ரவியோட சேர்ந்து பேட்மிட்டன் விளையாண்டன்டா… ரொம்ப இன்ரஸ்டா இருந்தது தெரியுமா!” “என்ன வினோத் உன் ஆட்டத்தை விட்டுட்டு அடுத்தவரோட ஆட்டத்துல சேர்ந்துட்ட” என்றான் அன்பு. “இல்ல.. சும்மா விளையாண்டு பாத்தன்” என்றான் வினோத். “விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது. நீ உன் விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்து. மத்தவங்க விளையாட்டுல மூக்கை நுழைச்சி வீணா உடைச்சிக்காதே” என்று கோபத்தோடு முறைத்துக் கொண்டே கூறினான் அன்பு. “டே அன்பு.. நீ சும்மாயிரு. அவன் ஏதோ ஆசையில போயி விளையாண்டிருக்கான். அதுக்குபோய் அவனை திட்டுற…” என்றான் கேசவன். “ஏய் அன்பு நான் விளையாடுற வாலிபால் அக்கான்னா… பேட்மிட்டன் தங்கச்சி மாதிரிடா… இரண்டு ஆட்டமுமே ஒரேமாதிரிதான் இருக்குதுடா… அதான் விளையாண்டேன்” என்றான் வினோத். இத்தனைக்கும் நடுவில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கின மாதிரி ரவி காணப்பட்டான்.

நண்பர்கள் எப்போதும் போல ஜாலியாக இருந்தார்கள். பயிற்சியின் போது மட்டும் அவரவர் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். மற்ற நேரங்களில் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். ஆனால் வினோத் மட்டும் வாலிபால் பயிற்சி முடிய அரைமணி நேரத்திற்கு முன்பாகவே தன்னுடைய பயிற்சியை முடித்துக்கொள்வான். நேராக பேட்மிட்டன் விளையாடுற இடத்துக்குச் சென்று விடுவான். வேடிக்கைப் பார்த்து மகிழ்வான். பயிற்சி முடிந்தவுடன் இவனும் ரவியும் சேர்ந்து விளையாடுவார்கள். காலம் செல்லச் செல்ல வினோத்தும் பயிற்சியில் சேர்க்கப்பட்டு விட்டான். வாலிபால் ஒரு மணிநேரம். பேட்மிட்டன் ஒருமணிநேரம் பயிற்சி என்றானது வினோத்துக்கு.

பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. பேட்மிட்டன் கோச், ரவியை தன்னோட அறைக்கு அழைத்தார். “என்ன ரவி லிஸ்ட் ரெடி பண்ணிடலாமா? நீயும் கார்த்திக்கும் உள்ள ஆடுங்க. கதிரேசனும் சிவக்குமாரும் வெளிய மாற்று ஆளாக இருக்கட்டும். என்ன ரவி உனக்கு ஓகேவா… என்னாடா நான் கேட்டுகிட்டே இருக்கேன். நீ ஒரு மாதிரியாவே இருக்க..” என்றார் கோச். “அதுவந்து… வந்து… என்று இழுத்தான்” ரவி. “நீ என்னா நினைக்கிறன்னு சொன்னாதான தெரியும். சொல்லுப்பா…” “கடந்த ஒரு மாசமா கதிரேசன் சரியாவே பிராக்டிஸ்க்கு வரவே இல்ல. அவன எப்படி கூட்டிட்டு போறது. அதனால என்னோட பிரெண்டு வினோத்த போடுங்க” என்றான் ரவி. என்ன நினைச்சிட்டு இருக்கிற ரவி. நீ நல்லா ஆடுறன்னா, அதுக்காக எதை வேணுமின்னாலும் சொல்லுவியா? என்று கோபமாகக் கத்தினார் கோச். கோச்சின் அதட்டலைக் கேட்டு ரவி பயந்துதான் போனான். ஆனாலும் மனம் எப்படியாவது வினோத்த உள்ள கொண்டு வந்திடனும். அப்பதான் அவனுக்கும் ஒரு சர்ட்டிபிகேட் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டான். அந்த அறை கொஞ்சநேரம் அமைதி நிலவியது.

கோச்சே பேச ஆரமித்தார். “ரவி! வினோத்த நான் தப்பு சொல்லல. வினோத் வாலிபால் பிளையர். அவன எப்படி பேட்மிட்டன்னல சேர்த்துகிறது. அவன் வாலிபால்ல விளையாடட்டும். அவன விட்டுறு. உன்னோட கனவப்பத்தி நெனச்சுப்பாரு ரவி. நீ இதுல ஜெயிச்சா கண்டிப்பா உன்னோட வாழ்க்கையே மாறிடும். என்ன ரவி நான் சொல்லுறது புரியுதா?” என்றார். கொஞ்சநேரம் மெளனித்திருந்தான் ரவி. பிறகு “வினோத்த கண்டிப்பா சேத்துக்கணும்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அடுத்தநாள் மாலை பேட்மிட்டன் அலுவலகத்தின் முன்பு தேர்வு வீரர்களின் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அப்பட்டியலில் வினோத் பெயரும் இடம்பெற்றிருந்தது. ரவியின் பின்தோளில் கைவைத்து அழுத்தினார் கோச். “இப்ப திருப்தியா? எனக்கு நம்ம கல்லூரி ஜெயிக்கனும், அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றார். நான் கண்டிப்பா ஆடனுமா ரவி என்று மனக்குழப்பத்துடன் கேட்டான் வினோத். “ஆமாம்! கண்டிப்பா நீ ஆடனும். நாம ரெண்டு பேரும் ஒன்றா ஜெயிப்போம்” என்றான் ரவி.

பல்கலைக்கழக போட்டிக்களம். பலக்கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேட்மிட்டன் நடுவர்கள். தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கச் செயலர், மற்றும் ஆட்டத்தை ரசிக்க வந்த ஏராளமான மாணவ மாணவிகள். பாட்டும் சத்தமும் ஒருபுறம். வெற்றி முழக்கங்கள் இன்னொருபுறம். தங்களின் போட்டி உடைகளை அணிந்து தயார் நிலையில் இருந்தார்கள் இரு அணியினரும். போட்டியும் தொடங்கியது. அனல் பறக்கும் போட்டி. யாருக்கு வெற்றி தோல்வி எனக் கணிக்க முடியாதபடி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ரவி மிகவும் ஆக்ரோசத்துடன் பந்தை எதிர் முனையில் திருப்பிக்கொண்டிருந்தான். ரவியின் முகம் சோர்வு அடைந்ததாக தெரியவில்லை. முகமும் வெற்றி நமக்கே என்று சொல்லியது. எதிர் திசையில் வேகமாய் வந்த பந்தினை முன்னால் நின்றிருந்த கார்த்திக், தன்னிடமிருந்து பந்து செல்லக்கூடாது என்று ஒரு காலை ஊன்றி மறுகாலை எகிறி வைத்து பந்தை அடிக்கிறான். எகிறி வைத்தக் கால் நழுவி மண்ணில் தேய முட்டி பிளந்து ரத்தம் கொட்டுகிறது. வலியால் துடிக்கிறான் கார்த்திக். நடுவர் ஆட்டத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்துகின்றார். கார்த்திக்கு முதலுதவி செய்யப்படுகிறது. அடுத்து கார்த்திக்குப் பதிலாக சிவக்குமார் உள்ளே ஆடவருகின்றான். “சிவா நீ போய் உட்காரு. வினோத் உள்ள வாடா…” கோச் குழப்பத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நிற்கிறார். 2011 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி ஆறாவதாக களம் இறங்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே களம் இறங்கி சிக்ஸர் அடித்து ஜெயிக்க வைக்கவில்லையா? அதுபோலத்தான் இன்றைக்கும் ஏதாவது நடக்கும் என்று மனதைத் தேத்திக்கொண்டார் கோச்.

“ரவி எனக்கு பயமா இருக்குடா…” “பயம் இருந்தா ஜெயிக்க முடியாது. நான் உன்னை நம்புறன். சந்தோசமா விளையாடு. ஆனா ஒன்னு மட்டும் நினைவுல வச்சிக்க. நீ முன்னால நில்லு. முடிந்தவரை உனக்கு வர பந்தை அடி. முடியலன்னா விட்டுறு. பின்னால் இருக்குற நான் பாத்துகிறேன். உன்னை பின்னால நிக்கவெச்சன்னா என்னைத் தாண்டி வர்ற பந்தை நீ விட்டுட்டன்னா பாயின்ட்ஸ் நமக்கு குறைஞ்சிரும். என்னா சொல்லுறது புரியுதாடா…” ஏதோ தலையை ஆட்டிக்கொண்டான் வினோத். போட்டியும் தொடங்கப்பட்டது.

தனக்கு வர்ற பந்தை கவனமாக அடித்து எதிர்முனைக்குத் திருப்பினான் வினோத். வினோத் அடிக்க முடியாமல் விட்ட பந்தினை ரவி அடித்து சரிசெய்து கொண்டான். ஆட்டமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்டத்தில் வேகத்தோடு சூடும் பிடிக்க ஆரமித்தது. பார்வையாளர்கள் ஓயாமல் தங்களின் களிப்பினை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ரவி எதிர்முனையில் இருந்து வந்த பந்தினை லாவகமாக திருப்பி அடிக்க, எதிர்முனையில் இருந்த ஒரு பிளையர் அப்பந்தினை மெதுவாக மேல்நோக்கி அடிக்கிறார். பந்து நெட்டுக்குப் பக்கத்தில் உயரத்தில் இருந்து கீழ்நோக்கி வருகின்றது. நெட்டுக்குப் பக்கத்தில் முன்னால் நிற்கின்றான் வினோத். “வினோத் உனக்குதான்டா பந்து வருகிறது. பாத்து அடிடா” என்று எச்சரிக்கைப் படுத்துகிறான் ரவி. இப்போது வினோத்துக்கு இக்களம் பேட்மிட்டன் களம் அல்லாமல் வாலிபால் களம் போன்று காட்சியளிக்கிறது. மேலிருந்து வருகின்ற பந்தும் வாலிபாலாக வினோத்துக்குத் தெரிய அவனுள் பெரிய மாற்றம் நிகழ்கிறது. வினோத் நல்ல உயரம். வாலிபாலை எப்படி ஓடி வந்து கட் அடிப்பானோ அதேபோல் இந்த பந்தையும் ஓடிவந்து எகிறி கையை மேலே உயர்த்தி ஓங்கி ஒரு அடி அடிக்கிறான். பந்து நெட்டுக்கு நூல் அளவே இருக்கிற மாதிரி தரையில் லொட் என விழுகிறது. பார்க்க வந்த அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கிறார்கள். பேட்மிட்டன் சங்க செயலர் “இப்படி ஒரு ஷாட்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை” என்கிறார். ரவி வினோத்தை கட்டிப்பிடித்து தன்னோட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பார்வையாளர்களின் கரகோஷம் நிற்க நீண்ட நேரம் ஆனது. அன்றையப் போட்டியில் ரவியின் அணி வெற்றியைச் சூடி கோப்பையைக் கைப்பற்றுகிறது.

பதினைந்து நாள் கழித்து தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்திலிருந்து கடிதம் ஒன்று வரகிறது. அக்கடிதத்தில் தமிழ்நாட்டு அணிக்காக வினோத் அழைக்கப்பட்டிருந்தான். உண்மையான பேட்மிட்டன் பிளையருக்குக் கிடைக்காத வாய்ப்பு வாலிபால் பிளையருக்குக் கிடைத்துவிட்டது. இதை ரவி கேட்டவுடன் கையில் இருந்த பேட்டை தரையில் ஓங்கி அடித்தான். நன்றாக ஆடியும் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மனதில் குமுறினான். “ரவி கோவப்படாதடா… வினோத் அடித்த அந்த ஒரு ஷாட்டப் பார்த்துதான் அவனை செலக்ட் பன்னியிருக்காங்கடா…” என்றார் கோச். மனம் தாங்கதவனாய் அறையை விட்டு வெளியேறுகிறான். கல்லூரியின் கடைசி நாள். அதே குட்டிச்சுவரு. வினோத், அன்பு, கேசவன் என மூன்று நண்பர்கள் மட்டும். மூவரும் மாணவர்கள் வருகின்ற திசையில் யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “விளையாட்டு வினை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *