விளையாட்டும் வினையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 5,245 
 

“இந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிக்கும்… ஆயிரம் ரூபாய் பெட்டு.”

“இல்ல, பாகிஸ்தான்தான் ஜெயிக்கும்… ஆயிரம் ரூபாய் பெட்டு.”

தலையில் பட்டையாய் கர்சீப்பை மடித்து கட்டிக்கொண்டு, தாம்பரத்தில் இருந்து சென்ட்ரல் வரும் எலக்ட்ரிக் ட்ரெயினில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டுபேர் பேசிக்கொண்டு வந்த காட்சி நினைவுக்கு வந்தது. ரயில்வேயில் வேலை பார்க்கும் இந்தச் சாதாரண மாதச் சம்பளக்காரன் வைக்கும் ஆயிரம் ரூபாய் பந்தயத்திற்கும், மேல்மட்டத்தில் டாலர்கள் கணக்கில் வைக்கப்படும் இப் பந்தயத்திற்கும் அப்படி என்ன வேறுபாடு இருந்துவிட முடியும்?

“நீங்க ரெண்டு பேரும் காசு வச்சு பருத்தி சூதாட்டம் ஆடினீங்களா?” கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் கேட்டார்.

ரவியும், சிவாவும் கேஸை ஒத்துக்கொண்டு அபராதத் தொகையை கட்டிவிட்டு வெளியேறினார்கள்.

ரவி-சிவா இவர்களுக்குப் போடப்பட்ட அபராதத் தொகையைப் போல், மேல் தட்டுப் பந்தயக்காரர்களுக்கு என்ன அபராதம் விதிக்கலாம்? இது ஒரு சட்டச் சிக்கலோ, தண்டனை விதிப்பது குறித்த ஆலோசனை மேடையோ அல்ல.

‘என்ன அபராதம்?’ என்ற கேள்வி எழுவதற்கு அடிப்படை இருக்கிறது. என்ன இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையும், எவ்வளவு பாதிப்பு என்பதும்தான் – என்ன தண்டனை என்பதை நிர்ணயிக்கும் அளவு கோலாக அமைந்து விடுகிறது. நாம் கவலைப்படுவது ஒரு தனிநபர் தண்டனை குறித்தது அல்ல.

‘எஸ்கோபார்’ உலகம் வியந்து பார்த்த ஒரு கால் பந்தாட்ட வீரன். அந்த வீரன் ஒரு நொடிப்பொழுதில் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டது மூன்று முறையா அல்லது பத்து முறையா என்பது குறித்த விவாதங்களை ஒதுக்கிவிட்டு, இந்த மரணம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் கடந்து சிந்தித்தல் அவசியமாகிறது.

இந்தக் கொலை எதற்காக நடந்தேறியது? என்று ஆராய்ந்தால், காரணம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுதான்.

‘என் நாடு தோற்றுப்போக நீ காரணம்’… அந்த நாடு தோற்றுப்போனது; அவன் ஒருவேளை பந்தயம் கட்டியிருந்தால், அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு.

‘இவை இரண்டும் இல்லையெனில் தனிப்பட்ட வெறுப்பு’

இந்த மூன்றில் முதல் இரண்டு காரணங்களே இந்தக் கொலைக்கு காரணமாய் இருந்திருக்க முடியும். அந்த இரண்டில் எது காரணமாய் இருந்தாலும், அது நம் சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய செய்தியாகி விடுகிறது.

‘என் நாடு தோற்றதற்கு நீ காரணம். அதனால் நீ இறந்து போ’ இந்த உணர்வை எதில் சேர்ப்பது? தேசப்பற்று என்றா? விளையாட்டு மோகம் என்றா?

இந்த இரண்டில் எதுவாக இருப்பினும், நெறிப்படுத்தாத எந்த உணர்வும், மனித நிலையில் இருந்து விலங்கு நிலைக்கு நம்மை தள்ளி விடுதல் இயல்புதானே!

எங்கு தவறி விட்டோம்?

‘இந்த மாட்டை யார் அடககுகிறாரோ அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருகிறேன்’ ‘இந்தக் காளையை யார் அடக்குகிறாரோ அவர் அதன் கழுத்தில் உள்ள பரிசுப் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.’

கொம்பு சீவி விடப்பட்ட காளை தறிகெட்டு ஓட, அதைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் இளைஞன் சாவதும்; பார்வையாளர்கள் பகுதியில் மாடு ஓட, மிதி பட்டுப் பார்வையாளர்கள் சிலர் சாவதும்; ஆயிரம் செய்திகளில் ஒரு செய்தியாக இருக்கலாம்.

எது வீரம்? இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் மாடு பிடியில் இளைஞனை சாகக் கொடுப்பது வீரமா? இது விளையாட்டா? இந்த விளையாட்டுக்குப் பின் இருக்கும் பார்வையாளர்களுக்கு இருப்பது ரசனையா? ஆர்வமா? இதுதான் பண்பாடா? கலாச்சாரமா? காலத்திற்கு ஏற்றாற்போல் சிந்தனைகளும், எண்ணங்களும் மாறவில்லை என்றால், அது தேக்க நிலையைத்தானே குறிக்கிறது?

கிராமத்தில் ‘உன் பக்கத்து வீரன்; என் பக்கத்து வீரன்’ என்று மிராசுகள் வெளியில் நின்று கொம்பு சீவி விடுதலுக்கும்; இன்றைய மேல்தட்டு வாசிகள் அதை டாலர்கள் அடிப்படையில் செய்வதற்கும் அதிக இடைவெளி இல்லை.

‘என் நாடு தோற்றுப் போய்விட நீ காரணம்’ என்னும் உணர்வு மட்டும்தான் இந்தக் கொலைக்கு காரணம் என்பதை ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். இதற்குப் பெயர் நாட்டுப் பற்றா? பற்று என்பதும்; ஈடுபாடு என்பதும்; அக்கறை என்பதும்; உணர்வு என்பதும் நம்மிடையே தவறாகப் போதிக்கப் பட்டிருக்கிறது.

‘என் தலைவர் போயிட்டாரு என்று தீக்குளிப்பதும்; என் தலைவர் படத்தைப் பத்தி தப்பா பேசிட்டாம்பா’ என்று அடிதடியில் ஈடுபடுவதற்கும்; ‘என் காதல் நிறைவேறவில்லை என்று தற்கொலை செய்து கொள்வதற்கும்; ‘என்னைக் காதலிக்கவில்லை’ என்பதற்காக ஒருத்தியின் முகத்தில் ஆசிட் அடிப்பதற்கும் ‘என் நாடு தோற்றதற்கு நீ காரணம்’ என்று ஒருவனை கொல்வதற்கும் அதிக வேறுபாடு இருக்க முடியாது.

‘தற்கொலை என்பது கோழைத்தனம் அல்ல; அது ஒருவிதமான போர் முறை. எதிர்ப்பை, உடன்பாடின்மையை சொல்லும் வழி என்று ஒரு வங்காள எழுத்தாளர் எழுதிப் படித்திருக்கிறேன்.

தற்கொலை இவ்விதம் எனில், கொலை என்பதும் தனக்கு உடன்பாடு இல்லாததை ஒழிப்பது என்ற போர் முறையாகி விடுகிறது. முன்னதில் பாதிப்பு போராடுபவனுக்கு என்றால், பின்னதில் பாதிப்பு பெரும்பான்மையான இடங்களில் அப்பாவிகளுக்கு என்றாகி விடுகிறது. இந்தக் கொலைகளும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

என் முயற்சி; என் திறமை; என் உழைப்பு என் ஆசை; என் ஆர்வம் என்று சகலமும் ஒரு தனி மனிதனின் உழைப்பால் விளைந்தவைகளாக இருக்கும்போது, அந்தத் திறமையை அடித்தளமாக்கி, சோம்பலாய் தங்கள் காசை அதில் பந்தயப் பொருளாக்கிப் பார்ப்பதும், தன் உணர்வுகளை அதில் உரசிப் பார்ப்பதும் கூட, தனிமனித உரிமைகளின் மீது நடத்தப்படும் உரிமை மீறல்தான்.

ஒருவனின் சொந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் ஏற்படுத்தும் விளைவுகள், அடிப்படையில் முதலில் அவனைத்தான் பாதிக்கிறது. அப்படி இருக்கையில், இன்னொருவன் திறமையில் தாங்கள் காசு சம்பாதிக்க நினைப்பதும், அது கிடைக்காதபோது வரும் ஏமாற்றத்தில், அவனையே முடித்து விடுவது என்ற முடிவுக்கு வருவதும் கூட, ஒரு விதத்தில் விபச்சாரம்தான்.

இந்தப் பந்தயங்கள் ஏற்படுத்தப் பட்டதன் நோக்கம் என்ன? மனித குலத்திற்குள் மகத்தான நேசத்தையும், நட்பையும் வளர்க்கவே இந்த விளையாட்டும் பந்தயமும் ஏற்படுத்தப்பட்டது. அந்த நேசமும் நட்பும் முறிந்து போகும் எனில், இந்த விளையாட்டுக்கள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. உடல் ஆரோக்கியத்தையும், ஆர்வத்தையும், ஊக்கத்தையும் வளர்க்கத்தான் இந்த அரங்கங்கள் என்று இருந்த நிலை மாறி, மனித சக்தியை மருந்து சக்திகளால் பெருக்கிக்கொண்டு வீரர்கள் களத்தில் இறங்குவது கலாச்சாரம் என்ற நிலை வருமானால், சேவலுக்கு சாராயம் ஊற்றி சண்டைக்கு அனுப்பும் மனோபாவத்திற்கும், தங்களுக்குத் தாங்களே செயற்கை சக்திகளை ஏற்றிக்கொண்டு விளையாடப் போகும் மனோபாவத்திற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

விலங்கு நிலையில் இருந்து பக்குவப்பட்டு, பண்பட்டு நேசக்கரம் நீட்டி, உயர்ந்து, இன்னும் உயர்ந்து போவதுதான் இதுபோன்ற விளையாட்டு அரங்கங்களின் நோக்கமாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும். அதற்கு மாறாக மனித நிலையில் இருந்து பிறழ்ந்து, விலங்கு நிலைக்கு தன்னைத் தள்ளிக் கொண்டுபோக ஒரு மனிதன் தனக்குத்தானே சம்மதம் தெரிவித்துக் கொள்வான் எனில், இந்த விளையாட்டுகளின் நோக்கமே அடிபட்டுப் போகிறது.

வாழ்க்கையின் அன்றாட ஓட்டத்திலிருந்து விலகி ரசனைகளையும், திறமைகளையும் பாராட்டும் குணத்தையும் வளர்த்துக் கொள்ளுதலே, ஒரு நல்ல ரசிகனுடைய, பார்வையாளனுடைய கடமை. அது கெட்டுப்போய் தான் ரசிக்கும் ஒரு வீரனையே பந்தயப் பொருளாக்கி, அதில் ரசிகன் விளைச்சல் செய்யத் தொடங்குவான் என்றால், அது விளையாட்டு அல்ல – வியாபாரம் என்றாகி விடும்.

எஸ்கோபரின் மரணமும், மோனிகா செலஸின் விலகலும்; பலமுறை ரத்தான இரு நாட்டின் கிரிக்கெட் பந்தயங்களும்; மைதானத்தில் அடிக்கடி ஏற்படும் ரசிகர்களின் கைகலப்பும், இது விளையாட்டா இல்லை இதுதான் விளையாட்டு வினையாகும் என்று சொன்னதா? என்று நம்மை யோசிக்க வைக்கிறது…

இது எங்கோ நடந்துவிட்ட அசம்பாவிதம் என்றோ, யாரோ ஒருவனின் முறையற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு என்றோ ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது. தனி நபர்களின் முறையற்ற உணர்ச்சி வெளிப்பாடுகளால் தேசமும் சமுதாயமும் சிதைந்ததை சரித்திரத்தில் பார்த்திருக்கிறோம்.

இது கவனிக்கப்படவில்லை என்றால், தேசத் தலைவர்களைப் போல், இனி விளையாட்டு வீரர்களும், பாதுகாப்புக்கு உட்பட்டும், உயர் பாதுகாப்புப் படைகளோடு விளையாடும் நிலையும்தான் உண்டாகும். அது விளையாட்டுப் போட்டிகளின் நோக்கத்தை மட்டுமல்ல, மனித குலத்தின் சிறப்பையே கேலிக் கூத்துக்கு ஆளாக்கும் செய்தியாகி விடும்.

ஒட்டு மொத்தத்தில் இந்தச் சம்பவங்கள் நமக்குச் சொல்வது என்ன?

பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் தொடங்கி, பரிசுகள்; புத்தகங்கள்; கேடயங்கள் என்று இருந்தவரை அது ரசனைக்கும், ஆர்வத்திற்கும் உட்பட்ட சங்கதியாக இருந்தது. பேச்சுப்போட்டி தொடங்கி சான்றிதழும், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் என்று பரிசுத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு பணம் புழங்கும் கனங்களாய் இவை மாறிய பொழுதுதான், இந்த நோக்கங்கள் திசை தடுமாறிப் போய்விட்டன.

பரிசுப் பொருளாய் காட்டப்படும் பணத்தைக் காட்டிலும், வெற்றியடையும் வீரனுக்குக் கிடைக்கும் பொருளைக் காட்டிலும் – அவன் பெயர் சொல்லிக் கைமாறும் பொருளும் பந்தயப் பணமும் அதிகமாகி விட்டது. இந்தச் சம்பவங்கள் நிதர்சனமாய் நமக்குச் சொல்வது — சேவல் சண்டை முதல், சர்வதேசப் போட்டிகள் வரை பணம் பந்தயம் என்றானால்; அந்தப் போட்டிகளின் நோக்கம் வழிமாறி விடுகிறது. தேசப்பற்று, மதப்பற்று, இனப்பற்று விளையாட்டு மீதான ஆர்வம்… இப்படி எதை இதற்குக் காரணம் காட்டி நியாயம் கற்பிக்க நினைத்தாலும், இந்த வரம்பு மீறிய உணர்வையோ, மனித நேயத்தை மிதிக்கும் செயலையோ ஏற்றுக்கொள்ள முடியாது.

என்ன சொன்னாலும் இந்தக் கொலையை மன்னிக்க முடியவில்லை. இனியும் விளையாட்டு வினையாகாதிருக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *