விட்டு விலகி நின்று…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 7,503 
 

உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன்.

எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது.

பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது.

அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் தாயை இழந்த சிறு வருத்தம் கூட உன்னிடம் தென்படாதது எனக்கு வியப்பாக இருந்தது. என்னளவுக்கு அந்த வயதில் உனக்கு முதிர்ச்சியில்லை என்று நான் தவறாக விளங்கிக் கொண்டதை உன்னிடம் பழகிய பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

எனக்கு நிறைய தோழிகள் உண்டு, உனக்கு நான் மட்டும்தான் தோழியாக இருந்தேன். அப்படியாக நீ ஏற்படுத்திக் கொண்டாய். யாரிடமும் எளிதில் ஒட்ட மறுத்துவிடும் உன் சுபாவம், உன் வித்தியாசமான மனப் போக்கு, விசித்திர கண்ணோட்டம், அதிசய சிந்தனை, கடிவாளமில்லாத உன் கற்பனை எல்லாவற்றிற்கும் உனக்குப் பொருத்தமான அலைவரிசையில் நான் மட்டுமே பொருந்திப் போனதாய் சொல்லிக் கொள்வாய். அதனால் உன்னையே என் நெருக்கமான தோழியென்று சொல்லச் சொல்லி அடம்பிடிப்பாய்.

நாம் சேர்ந்தே வளர்ந்தோம். பருவங்கள் மாறும் போது நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனதளவில் நாம் குழந்தையாகவே இருக்க விரும்பினோம். மாதவிடாயே வரக் கூடாது என்று பிராத்திக்கத் தொடங்கிவிட்டாய் நீ. அந்த மாற்றத்தில்தான் பெண்ணின் தலையெழுத்தே மாறிவிடுவதாக சொல்லி சாதித்தாய். அதெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியதல்ல என்பதை நாளடைவில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது உனக்கு.

உன் தந்தையென்றாலே உனக்கு எப்போதும் அலட்சியம்தான். ‘அவரைக் கண்டாலே ஏன் எரிந்துவிழுகிறாய்’ என்று நான் ஒருநாள் உன் செயல் பொறுக்காமல் கேட்டதற்கு உன் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத தந்தையைப் பிடிக்கவில்லை என்றாய். உன் தாய்க்குப் பின் உன் தந்தை உனக்காகவே வாழ்ந்தாரே தவிர வேறு மனம் செய்துக் கொள்ளவில்லை என்று புரிய வைக்க முற்படும் போதெல்லாம் நீ பொருட்படுத்துவதில்லை. நானும் என் அறிவுரைகளைக் குறைத்துக் கொண்டேன்.

அழகாக வளர்ந்து வரும் நம்மை ஆண்கள் கண்களால் மேய்வதை உன்னால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘பார்ப்பவர்களை நீ பார்க்காதே அலட்சியம் செய்’ என்று எவ்வளவு சொல்லியும் யாராவது விழுங்குவது போல் பார்த்தால் போய் சண்டைக்கு நின்றாய். நான் துணையாக இருக்கும் தைரியத்தில்தான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாய். நீ தனியாகப் போகும் போது எதிர்பாராத விதமாக அந்த காமுகன் நடுவீதியில் உன்னைக் கட்டியணைத்த சம்பவத்திலிருந்து உன்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதை விபரமாகச் சொல்ல முடியாமல் நீ தேம்பியதும் விம்மியதும் உன் கண்களில் நான் கண்ணீர் கண்டதும் அதுதான் முதல் முறை.

இறுக்கமாக அணைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்றவனை ஒன்றுமே செய்ய முடியாமல் ஒடிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் போது அனைத்துமே தெரிந்த முகமாக இருந்தும் கேட்க ஆளில்லாமல் போனதற்குக் காரணம் அவன் புதுக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாட்டசாட்டமான பலசாலியான தாதா.

அன்றிலிருந்து கனவிலும் கயவர்களுடன் சண்டையிட்டு தூக்கத்தில் பேசுவதைப் பார்த்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் உன் அப்பா. ஆண்களை வெறுக்கும் உச்சக்கட்டத்திற்கே நீ சென்றுவிட்டதை உன் பேச்சிலிருந்து அறிந்துக் கொள்ள முடிந்தது. சில நேரங்களில் நீ வெறுப்பவர்களைப் பற்றிப் பேசும் போதே உன் நிலை மறந்து விசித்திரமாக நடந்துக் கொண்டாய். சில சமயங்களில் எனக்கு பயமாகக் கூட இருந்தது. நிறைய நாட்கள் உன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உன் அறையைத் தாளிட்டு வெளியில் இடிந்து உட்கார்ந்திருக்கிறேன்.

என் வற்புறுத்தலின் பேரில் மனநல மருத்துவரைச் சந்தித்து அறிவுரை எடுத்து வந்தது என்னை திருப்திபடுத்த மட்டுமே இருந்தாலும் பலன் இருப்பதாக நான் கருதினேன். அந்தக் காமுகன் மீண்டும் உன் கண்களில் படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

உன் முடிவே சரியென்று நினைக்கும் உன்னை யாரும் மாற்றிவிடவோ கலைத்துவிடவோ முடியாததால் ஆண்களை வெறுக்கும் உனது சுபாவத்தை மாற்ற முயற்சி செய்ததில் எனக்குத் தோல்விதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியல்ல என்று உனக்கு விளங்க வைக்க என் சில நல்ல நண்பர்களை நட்பாக இணைத்து வைத்தேன், அதில் உனக்கு ஆத்மியைத் தவிர வேறு யாரையுமே பிடிக்காமல் போனது.

ஆத்மியை உனக்கு பிடிக்கும் காரணமும் அவனது கண்ணியமான சுபாவம் என்று நீயே சிலாகித்திருக்கிறாய். உன்னை ஓரளவுக்கு மாற்ற முடிந்ததில் மகிழ்ந்தேன். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு தமிழ்த்திரைப்படங்களே பிடிக்காமல் போனது. கல்லூரியில் உன்னைப் போலவே நான் மற்றவர்களுடன் சரியாக ஒட்ட முடியவில்லை காரணம் எல்லா மாணவிகளுக்கும் பேச பிடித்த தலைப்பு ‘ஆண்கள்’, ‘காதல்’, ‘அந்தரங்கம்’. எல்லாவற்றையும் ஓரளவுக்கு என்னால் சகித்துக் கொள்ள முடிந்தளவுக்கு உன்னால் முடியவில்லை – கல்லூரி வாழ்வையே வெறுப்பதாகச் சொன்னாய்.

படிப்பு முடிந்த பிறகு எனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து நான் செல்ல ஆயத்தமான போது எல்லோரையும் விட மிகவும் வருத்தப்பட்டது நீதான் என்று எனக்குத் தோன்றியது. நான் அங்கு சென்று சூழல் சொன்ன பிறகு நீயும் என்னுடன் வந்துவிடுவேன் என்று கூறிக் கொண்டிருந்தாய். விமான நிலையத்திற்கு என் குடும்பத்தாரை தவிர்த்து வெளியாளென்றால் அது நீ மட்டும்தான்.

விமான நிலையத்தில் உன்னுடன் நான் ஆத்மியைப் பார்த்து ஆச்சர்யமாவதை கவனித்த நீ அவன் உன்னுடன் வரவில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் மூத்த சகோதரனை வரவேற்க வந்திருப்பதாக எனக்கு விளக்கமளித்தாய். எப்படியோ என்னைத் தவிர உனக்கு வேறு ஒரு துணையை விட்டுச் செல்லும் எக்களிப்பில் இருந்தேன்.

நான் இந்தியாவை விட்டுப் பறந்தது அக்டோபர் 26 காலையில். அவளிடமிருந்து அழைப்பு வராததால் அவளை நான் இரண்டு நாட்களுக்கு பின் தொடர்பு கொண்டேன். என் அழைப்பிற்கு அவள் பக்கத்தில் பதில் இல்லாததால் இரு தினங்கள் விட்டு மறுபடியும் அவளை நான் அழைத்தேன் ஆனால் மறுமுனையில் அவள் இல்லை, அவள் அப்பா பேச முடியாமல் அழுதார்.

நான் சென்ற அதே தினம் ஆரம்பமான அவளுடைய கொலை வெறி அடுத்த தினமே முற்றியிருக்கிறது. யாரையோ தேடிச் சென்று அவன் ஆண் உடைமையை அவள் வெட்டி வந்தது அக். 28 இரவு.

அவள் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழிந்து. ஆத்மியின் சகோதரன் தான் அந்தக் காமுகன் என்று நான் தெரிந்து கொண்டது அவள் கைதுக்குப் பிறகு.

மனநலம் சரியில்லாத காரணத்தால் அவளைச் சிறையில் வைக்காமல் சிகிச்சை தர வேண்டுமென்ற வாதத்தில் வெற்றி பெற இரண்டு வாரங்களானது. மனநல மருத்துவமனையை விட்டு அவள் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது நவம்பர் மாத இறுதியில். அவள் தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் வந்தது அவள் தப்பிக்க முயற்சி செய்த நாளுக்கு மறுநாள்.

நீ கண்டிப்பாகத் தற்கொலை போன்ற முடிவுக்கு வரமுடியாதவள் என்று உன்னை முழுதும் அறிந்த என்னால் மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் உனக்காக என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *