வாய் முகூர்த்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 6,971 
 

சேலத்தில், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விடுதி வாசம். நான்காண்டுகளும், அந்தச் சதுர வடிவ விடுதிக் கட்டடதிலேயே முடிந்தது. ஊத்தாப்பமும், வெண்பொங்கலும் அதோடு பல்லி விழுந்திருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து எடுக்கும் தோசையும் எங்களிடையே மிகப் பிரசித்தம். தோசை சுடும் போது கல் மீது அந்தப் பல்லி விழுந்திருக்கலாம் என்றார்கள். மூடி வைக்காத மாவுக்குள் விழுந்திருக்கும் என்று நாங்கள் சொன்னோம்.

எனக்கும், சில நண்பர்களுக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. ஏதாவது நடக்கட்டும் என நான் சொன்னால் அதற்கு நேர் மாறாக நடக்கும் என்று. பெயில் என்று சொன்னால் பாஸ், பாஸ் என்று சொன்னால் பெயில், வெற்றிக்கு தோல்வி, தோல்விக்கு வெற்றி என. இதற்கு காதல், தேர்வு, விளையாட்டு என்றெல்லாம் விதிவிலக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும். ராஜேஷ் கொடுத்த ரோஜாவை இந்து குப்பைக் கூடையில் எறிந்ததிலிருந்து, ராமமூர்த்தி ரேங்க் வாங்கியது வரை என் வாய் முகூர்த்தம் இருப்பதாக நம்பிக்கை.

தோசையில் பல்லி விழுந்த சமயம் மெஸ்ஸில் வேலை செய்வதற்கென சிறுவர்கள் வந்து சேர்ந்தார்கள். கணேஷ்,சக்தி வேல் இருவரும்தான் வந்தவர்களிலேயே சின்னவர்கள். பாக்கிய சுப்பிரமணிக்குதான் முதலில் ‘பெட்’ ஆனார்கள். எனக்கு கணேஷை பிடித்தது. ஆனால் சக்திவேலை பார்த்தாலே கடுகடுப்பு. ஒரு முறை அப்பாவுடன் தேர்வு குறித்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது, உள்ளே புகுந்த சக்தி வேல், இந்தத் தடவை பெயில் என்று சொன்னான். அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பதையும் மறந்து ஆறெழுத்து கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டேன். அது குறித்தான அப்பாவின் கேள்விகளை எதிர்கொள்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது.

சிறிது நாட்களுக்குள்ளாக இருவரிடமும் சகஜமாகப் பேசினாலும் கணேஷின் மீது அக்கறை அதிகம். ஒரு முறை அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருக்கும் போது இரண்டு பேரும் வந்தார்கள். கணேஷிற்கு காதல் கவிதை வேண்டுமாம். 13 வயதில் என்னடா காதல் என்றால் பெரிய மனுஷத்தனமாக பதில் சொன்னான். பத்து வருடம் புரிந்து கொண்டு, பின்னர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக. என் கவிதை என்னுடன் படிப்பவர்களுக்கே புரிவதில்லை, நான் எழுதிக் கொடுத்தால் அந்தப் பெண் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள், அதிகபட்சமாக உன்னை ‘ஒரு மாதிரி’ என நினைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லி, ‘சென்னிமலை’பிரபு வை சிபாரிசு செய்தேன்.

கணேஷ் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. எலெக்ட்ரிகல் மெஷின் டிசைன் தேர்வன்று காலையில் அனைத்து சூத்திரங்களும் மறந்தது போலாகிவிட்டது. அந்த பாடத்தில் சூத்திரம் தவிர எதுவுமே இருக்காது. கணேஷிடம் சொல்லி மைக்ரோஜெராக்ஸ் எடுத்து ‘பறக்கும் படை’ சென்ற பிறகு தண்ணீர் கொடுக்கும் தருணம் தரச் சொன்னேன். இம்மியும் பிசகாமல் செய்து காப்பாற்றினான்.

ஒட்டுமொத்த ஹாஸ்டல் மாணவர்களுக்கும் ஒரு முறை குலதெய்வம் ஆனான். அந்தச் சமயம் மாணவர்களுக்கும், வார்டன் சுகவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. பெரும்பாலான பெற்றோர்களுக்கும் கடிதம் சென்று சேர்ந்துவிட்டது. நாளை கூட்டம் என்ற நிலையில், நாங்கள் மூச்சு திணறிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே தொலைபேசியில் ஒவ்வொருவருக்கும், அவரவரின் பெற்றோரிடமிருந்து அர்ச்சனை. எனக்கு கிட்டத்தட்ட காதில் இரத்தம் வடியும் அளவிற்கு. பிரச்சினை ஒன்றும் பெரிதில்லை. எங்களது விடுதிக் கட்டடத்தை ஒட்டியே மாணவிகளுக்கும் விடுதி. அறைகள் எல்லாம் தெரியாது என்றாலும் அவர்கள் விளையாடும் கூடம் தெரியும். சந்திரசேகர ஆசாத்தும், ‘ட்ரிப்பிள் ஈ’ சரவணனும் பெண்கள் மீது ‘லேசர் லைட்’ அடிக்க, சேர்மேனின் உறவுக்கார பெண்ணொருத்தி மயக்கம் அடைந்துவிட்டாள். இதற்குத்தான் கூட்டம். நாங்கள் புலம்புவதைக் கண்ட கணேஷ், கொஞ்ச நேரத்தில் வந்து நாளை வார்டன் வரமாட்டார் என்று சொன்னான்.

ஆச்சரியமாக இருந்தாலும் விசாரித்த போது சந்தோஷமாக இருந்தது. வார்டனுக்கு கொடுத்த டீயில் எதையோ கலக்கிவிட்டான். எலி மருந்தா அல்லது பினாயிலா என்று சொல்லத் தெரியவில்லை. அடுத்த நாள் மீட்டிங்கில் ‘வேட்டி’ வெங்கடாசலம்தான் பேசினார். அவருக்கு எங்களிடமே நன்றாக பேசத் தெரியாது என்பதால் கொஞ்சமும் கவலையோ பயமோ இன்றி இருந்தோம். இதில் இரட்டைச் சந்தோஷம் என்னவென்றால் வார்டனுக்கு மட்டுமில்லாது, எங்களை எல்லாம் போட்டுக் கொடுத்த ‘வாட்ச்மேன்’ சித்தனுக்கும் ‘டீ’ கொடுத்ததுதான். வார்டன் ஒருவாரம் விடுப்பில் சென்றார். ஆஜானுபாகுவான சித்தன் பதினைந்து நாள்.

சாந்தி தியேட்டரில் என்ன ‘பிட்’ எவ்வளவு நேரம் என்பது குறித்தெல்லாம் துல்லியமாகச் சொல்வான். அதுவரை அந்த விஷயத்தில் கோலோச்சி வந்த பாரதிக்கு கூட அதில் வருத்தம். விடுதியின் அதிகாரபூர்வ ‘புக்ஸ் டிரான்ஸ்பர் ஏஜண்ட்’ கணேஷ்தான். சகலவிதமான் புத்தகங்களையும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு, மூன்றாவது மனிதர்களின் கண்களில் படாமல் மாற்றிக் கொடுப்பான்.

நான்காவது வருட இறுதி நாளில் பெரும்பாலும் எல்லா மாணவர்களும் கிளம்பிவிட்டார்கள். நானும் கணேஷ் மட்டும் படம் பார்க்கச் சென்றோம். அவன் நிறைய பேசிக் கொண்டே வர, நான் கேட்டுக் கொண்டே வந்தான். காணவில்லை என்று மெஸ் மேனேஜர் திட்டப் போறார் என்றேன். ‘டீ இருக்குண்ணா’ என்று சிரித்தான்.

கிளம்பும் போது, ஐம்பது ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, சாந்தி தியேட்டருக்கா? என்றேன். நீ கொடுத்த காசை செலவு பண்ண மாட்டேன் என்றான். ஒரு மாதிரியாகி விட்டது. சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். இருந்தாலும் நல்ல மனதோடு சொன்னால் ஒன்றும் பிரச்சினையில்லை என முடிவு செய்து “நல்லா இருப்படா” என்று சொன்னேன். பஸ்ஸில் செல்லும் போது ஏதோ மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

முதுநிலை படிப்பு, வேலை என்றெல்லாம் மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கடந்த முறை ஊருக்கு சென்ற போது கல்லூரிக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன். குறிப்பாக கணேஷைப் பார்க்க வேண்டும். நான் சென்றிருந்த போது விடுதியில் பெரிதாக எதுவும் மாற்றம் இருக்கவில்லை. நீச்சல் குளம் மட்டும் புதிதாக இருந்தது. மாணவர்களின் முகம் எதுவும் பரிச்சயமானதாக இல்லை. சித்தன் ‘நைட் டியூட்டி’ என்றார்கள். பழனிதான் ‘பகல் டியூட்டி’யில் இருந்தார். வெளியாட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்று என்னை வெளியே உட்கார வைத்தார். எனக்கு சிரிப்பு வந்தது. மெஸ்ஸிலிருந்து சக்தி வேலும் இன்னும் சிலரும் வந்தார்கள். கணேஷைக் காணவில்லை. சக்திவேலுக்கு என்னை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. கணேஷ் குறித்து கேட்டேன்.

“அது தெரியாதா? நீங்க எல்லாம் போன ஒரு மாசத்துக்குள் மாடியில் துணி காய வைக்கப் போயிருந்தான். அப்போ அங்க இருந்த கரண்ட் கம்பிய மிதிச்சு அப்பவே செத்துட்டான்” சொல்லிவிட்டு இழப்பெதுவுமற்றவன் போல நகர்ந்துவிட்டான். நான் “நல்லா இருப்படா” என்று சொல்லியது நினைவுக்கு வந்து என் குற்றவுணர்ச்சியை அதிகப் படுத்தியது. தேம்பி அழுது கொண்டிருந்தேன். யாராவது அந்தப் பகுதியைக் கடக்கும் போது அழுகையை மறைக்க வேண்டியிருந்தது, என் மனதை மேலும் கீறுவதாக இருந்தது.

சிறிது நேரத்தில் வந்த பழனி, கண்கள் கலங்கியிருப்பது குறித்து வினவினார். “கணேஷ்ணா…” என்றேன். “ஓ..அவனா…நேத்து புளிச்ச மோரை நிறையக் குடிச்சுட்டான்னு சொன்னாங்க. கக்கூஸ்ல இருப்பான். வரச் சொல்றேன் இரு” என்று உள்ளே சென்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த இடத்தில் சிரிக்க வேண்டுமா என்று கூட குழப்பமாக இருந்தது. கிளம்பி வந்துவிட்டேன்.

– ஆகஸ்ட் 22, 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *