வழி விடுங்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 5,127 
 

உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? !

தெரியாது ! சொல்றேன்.

நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை செய்கிறார்கள். 12 பெண்கள். மீதி ஆண்கள். இந்த 12 ல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் பாஸ் மார்க் வாங்கும் அழகில் உள்ள பெண்கள் மூன்று. சித்ரா, கௌரி, நிர்மலா.

சித்ராவிற்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது.

கௌரி தபால் பிரிவில் வேலை செய்யும் மகேசைக் காதலிக்கிறாள்.

இதில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருப்பது நிம்மி என்றழைக்கப்படும் நிர்மலா.

இந்த ஒருத்தியை வலைக்க….. நாளைக்கு ஓய்வு பெற்று வீட்டிற்குச் செல்ல இருக்கும் தலைமை எழுத்தாளர் தண்டபாணியிலிருந்து,,, நேற்று புதிதாக வேலைக்குச் சேர்ந்து வேலையையே கற்றுக் கொள்ளாத வேலாயுதம் வரை… எல்லோருக்குமே நீ, நான் என்று போட்டி.

ஆண்களுக்கு இந்த விஷயத்தைப் பொறுத்தவரை விவஸ்தை என்பதே கிடையாது. இருந்திருந்தால் திருமணம் முடித்தது, முடிக்காதது, பிள்ளைக்குட்டி பெற்றது, பெற்றுக் கொள்ளாதது, இளசு, பெருசுகள் என்று ஆளாளுக்குப் போட்டிப் போடுவார்களாலென்ன…?

நிம்மி அப்படியொன்றும் கடைக்கண் காட்டினால் விழுந்து விடும் வீட்டில் பூச்சு ரகமல்ல.

ஒரு குடும்பப் பெண்ணிற்கான அச்சம், மடம், நாணம் பயிர்ப் எல்லாமே உடைய முழு பெண். அதைவிட சம்பாதிக்கிறோம் என்கிற கர்வம் துளிகூட முகத்தில் கிடையாது. ஆள் அழகோ அழகென்றால் பதிவிசிலும் நல்ல பதிவிசு.

அலுவலகத்தில் அத்தனை பேர்களுக்கும் இவள் கனவுக் கன்னி. எல்லோர் கனவிலும் தினம் கண்டிப்பாக வந்து செல்வாள்.

ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் மடக்கப் பார்ப்பார்கள்.

ஒருத்தன் எதிரில் நின்று வழிவான்.

இன்னொருவன் தன் இருக்கையில் அமர்ந்தபடியே அவளை விழுங்குவான்.

வேறொருத்தன்…. தொட்ட தற்கெல்லாம் சந்தேகம் வந்து அவளிடம் போய் கேட்டு தெளிந்து கொள்வதைப் போல்….. வழி கிடைக்கிறதா என்று பார்ப்பான்.

இன்னொன்று… அது விவஸ்தைக்கெட்ட ஜென்மம். அதற்கு படுக்கை அறை பார்வையைத் தவிர வேறொன்றும் தெரியாது. அவன் பார்வையே அப்படித்தான். ஆண்களே வெறுப்பார்கள். அப்புறம் பெண்கள் எப்படி பார்ப்பார்கள்..? ஆள் பார்வையைப் பார்த்த அடுத்த வினாடி படக்கென்று முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள்.

இந்த வயது முதிர்ந்த கிழம்… மட்டம்….. அதன் போக்குத் தனி. அதற்கு வயசு ஒரு தகுதி. இவள் கோப்புகள் அனுப்பிய அடுத்த வினாடி அவளை உடனே அழைக்கும்.

அது என்ன..? இது என்னவென்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கும் . அவள் குனிந்து பதில் சொன்னால் பார்வை விகாரப்படும். நிற்க வைத்து தலைமுதல் கால்வரை மேயும்.

இப்படி ஆளாளுக்கு அவளை வீழ்த்தப் பார்த்தாலும் உள்ளுக்குள் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரியும். ஆனாலும் இதற்காக யாரும் யாரையும் அனாவசியமாக நோகடித்துக் கொள்வது கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை விழுந்தால் லாபம். இதில் யார் முதலில் மடக்கினாலும் வம்பு வேண்டாமென்று ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதானே நியாயம்….? !

இப்படித்தான்…. வந்த புதிதில் கௌரியின் மேல் அத்தனைப் பேர்களும் கண் வைக்க…அவள் மகேசிடம் மயங்கியதும்… மரியாதையாக எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஆனால்…. இந்த நடராஜ் இருக்கானே… அவன் பாதையே தனி. பெண்களை அவர்கள் மெல்லினம் என்பது புரிந்து மெதுமெதுவாய், நிதானமாய், மென்மையாய்ப் பேசி பழகி தானாகக் கனியைக் கனிய வைப்பான்.

எல்லோரையும் போல் சடனாய் பெண்கள் மீது பார்வையை வீசமாட்டான். பெரிய யோக்கியன், சத்புத்திரனைப் போல் நடந்து…. அவர்கள்….. இவன் பார்க்க மாட்டானா, தங்களோடு பேசமாட்டானா, பழக்கமாட்டானா என்று ஏங்க வைத்து , சரியாய் மீனை சிக்க வைத்து அனுபவிப்பான்.

நிம்மி வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களில்… அவளுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, யார்யார் தோழிகள். வேலைக்குத் துணையுடன் வருகிறாளா, வழியில் எவனோடாவது உரையாடுகிறாளா, பழகுறாளா, எப்படி போகிறாள், எப்படி வருகிறாள் என்று எல்லாவற்றையும் கவனித்து அப்புறம்தான் களத்தில் குதித்தான்.

முதலில் அவள் அணிந்து வரும் துணிமணிகளைக் கவனித்து அவளுக்குப் பிடித்த வண்ணங்களில் இவன் ஆடைகள் அணிந்து வந்தான். கண்ணியமாகத் தோன்றினான். மரியாதையுள்ளவனாக நடந்தான். கடவுள் பக்தி உள்ளவனாக காட்டிக்கொண்டான்.

இப்படி அவளை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து… சாய்த்தான்.

அவளை அனுபவிக்க நாளும் குறித்தான்.

”என்ன ! இன்னைக்கு லாட்ஜ்ல அறை போடலாமா ? ” கேட்டான்.

” போடலாம். கலியாணம் கட்டிக்கிறதா இருந்தா போடலாம். அனுபவிச்சு விட்டுப் போறதா இருந்தா வேணாம்.! ” என்றாள்.

நடராஜ் அப்படியே திகைத்து நின்றான்.

” நடராஜ் சார். ! நீங்க யாரு.? எப்படிப்பட்ட ஆளுன்னு எனக்கு நல்லாத்தெரியும். உங்களுக்குக் கலியாணம் ஆகி குழந்தை குட்டிகள் இருக்கு என்கிறதும் எனக்குத் தெரியும். நான் வேலைக்கு வந்து சேர்ந்த ஒரு மணி நேரத்திலேயே உங்களை நான் கணிச்சிட்டேன். எல்லோரும் என்னை ‘ஆ’ன்னு பார்க்கும்போது நீங்க மட்டும் யோக்கியன் போல் பார்வையை விடாமலிருந்ததிலிருந்தே…. நீங்க பயங்கரமான ஆள் என்கிறது புரிஞ்சு போச்சு. அப்புறம் நீங்க என்னைக் கவனிச்சு ஒவ்வொன்னா மாறியதிலிருந்தே…என் கணிப்பு சரி என்கிறதை புரிஞ்சு…. உங்களுக்குப் புத்தி குடுக்கணும்ன்னு உங்க வழிக்கு வந்து பழகினேன்.

ஒருத்தியை அழைச்சுப்போய் அனுபவிச்சு விடுறதுல உங்களுக்கு அப்படி என்ன சார் ஆனந்தம், லாபம்….?! கலியாணம் கட்டியும் ஏன் சார் ஆண்களுக்கு இன்னும் சபலப் புத்தி..? உங்க மனைவியிடம் இருக்கறதுதான் என்கிட்டேயும் இருக்கு, எல்லா பெண்களிடமும் இருக்கு..?! உங்களை எல்லாம் குரோனா வைரஸ்கிட்ட கூட்டிக் கொடுக்கணும்.

கலியாணமாகி பிள்ளைக்குட்டி பெத்தவங்களெல்லாம் கவுரமாக ஒதுங்கி பிரம்மச்சாரிகளுக்கு வழி விடுங்க சார். நாங்களும் எங்களுக்கானவனைத் தேர்ந்தெடுக்க சவுகரியமா இருக்கும். அதைவிட்டு நீங்களும் வந்து குதிக்கிறதால நாங்களும் குழம்பி, தடுமாறி, தவறிப் போறோம். ”- சொல்லி விடுவிடுவென்று இவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.

நடராஜ் சிலையாக நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *