வழிப்போக்கன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 9,154 
 

துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன். தலைக்குப் பின்புறம் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த ஏர் கூலர், மின்சாரம் தடைப்பட்டு நின்றிருக்கிறது. காரை பெயர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த விட்டத்தை சில நிமிடங்கள் வெறித்து கொண்டிருந்தேன். வியர்வையில் நனைந்தபடி பக்கத்தில் சோனி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இன்றோடு இந்த நொய்டாவிற்கு வந்து ஆறு நாட்களாகி விட்டது. நான் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டது. அதனால் பயிற்சிக்காக சென்னையிலிருந்து நொய்டாவிற்கு நான் மற்றும் என் கல்லூரி நண்பர்கள் அறுவர் உட்பட மொத்தம் 56 பேர் அழைக்கப்பட்டிருந்தோம். முதல் நான்கு நாட்களில் கார்பரேட் ட்ரைனிங் முடிந்து அனைவரும் சென்னைக்கு பணியாணை கொடுக்கப்பட்டிருந்தனர் என்னையும் சோனியையும் தவிர.

என் நண்பர் குழுமத்தில் நான் மட்டும் தனித்துவிடப் பட்டிருந்தேன். ஊர் புதிது. மொழி புதிது. தண்ணீர், தட்ப வெட்பம் என எல்லாம் புதிதெனக்கு. இன்று வரை நொய்டாவைப் பற்றி அறிந்து வைத்திருந்தவை எல்லாமே பெரும்பாலும் அச்சமூட்டுபவையாகவே இருந்தன. காயலான் கடையிலிருந்து எழுந்து புறப்பட்ட நிலையில் இருந்த பேருந்துகளும், மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கைவண்டி ரிக்ஷாக்களும், “மெக் டி” உணவக வாயில்களில் கொக்கோலாக்களை பிச்சை கோரும் தெருவோர சிறு பிள்ளைகளும் எனக்கு இருபது வருடம் பின்னோக்கிச் சென்ற தோற்றத்தினை கொடுத்தது.

நாங்கள் விடுதியெடுத்து தங்கியிருக்கும் ‘ஹாசியாபாத்’ எப்போதும் ஒரு பதற்றத்துடனே இருப்பதாக எனக்குப் படும் . அதிலும் மார்கெட் பகுதிகளில் தொங்கவிடப் பட்டிருக்கும் குண்டு பல்புகள் என்னுள் இருந்த அச்சத்தை அதிகப்படுத்தின. தற்செயலோ என்னவோ நாங்கள் இங்கு வந்த இரண்டாவது நாள், இரவு பதினோரு மணியிருக்கும். உயிர்க்காயம் பட்ட காட்டுப்பன்றியின் சத்தம் போல் கூக்குரல் கேட்டது. எட்டிப் பார்த்தால், ஒரு கிழவனை ஏழெட்டுப் பேர் கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டிருந்தனர். அவர் அடிப்பவர்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தார். நாங்கள் சட்டென்று அறையடைந்து, கதவைச் சாத்திக் கொண்டோம். நான் உறங்கிப் போகும் வரையில் அக்கிழவனின் அழுகையும், கதறலும் கேட்டுக் கொண்டே இருந்தது.

என்னைப் போன்றே தனித்துவிடப்பட்ட இன்னொரு ஜீவன்தான் இந்த சோனி. சோனி தாமஸ் இவனது முழுப் பெயர். சற்றே ஏறிய முன்னெற்றி. சுருள் முடி. வெண்மஞ்சள் நிறம். பாசிமணியில் கோர்த்த சிலுவை. கடவுளின் சொந்த தேசத்துக்காரன். தனியன்களான இருவரும் இணைந்து கொண்டோம். இன்று இருவரும் தங்குவதற்கு ஒரு வீடு வாடகைக்குப் பார்ப்பதாக முடிவு செய்திருந்தோம். என்னைப் போலவே அவனுக்கும் இந்தி தெரியாது. ஏதோ தத்தித் தத்தி பேசுவான். பொள்ளாச்சி என்றால் புள்ளத்தாச்சி என்பதாக புரிந்து கொள்வான். தமிழ் தெரியாமல் அவனும், மலையாளம் புரியாமல் நானும் பேசிக்கொள்வதே ஒரு நாடகம் போலிருக்கும்.

இடைப்பட்ட நேரத்தில் தடைப்பட்ட மின்சாரம் வர, சோனியும் விழித்துக் கொண்டான். விறுவிறுவென்று ரெடியாகி வீடு பார்க்கக் கிளம்பினோம். சுள்ளென்ற பசியடக்க டீ குடித்தோம். அதிலிருந்த இஞ்சி பசியை இன்னுமே கிளறிவிட்டது. வெயில் வேறு பத்து மணிக்கே பதம் பார்த்தது. வீடு பார்க்கக் கிளம்பிவிட்டோமே தவிர, எங்கு ஆரம்பிப்பது என்று ஒன்றும் புரியவில்லை. நாங்கள் முடிவு செய்து வைத்திருந்த ஒரே விஷயம் செக்டர்-3 க்கு (நம்மூரில் தெரு போல அங்கு செக்டர் செக்டர்களாக ஊரைப் பிரித்திருப்பார்கள்) அருகே வீடு பார்க்க வேண்டும் என்பதே. அங்கிருந்து அலுவலகம் பக்கம். அலைச்சல் குறைவு. ஆனால் இந்தி தெரியாமல் என்ன செய்வது என்று ஒன்றும் புலப்படவில்லை. அந்தக் காயலான் கடை பஸ்ஸிற்கே காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆட்டோவில் செல்வதற்கும் தயக்கம். ஆட்டோ ஓட்டும் எவர் மீதும் எனக்கு அப்படி ஒரு அப்பிராயம் இல்லை. எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்கள் அவ்விதம். ஒருவழியாக பஸ் பிடித்து, செக்டர் 3 க்கு வந்து இறங்கினோம். பசி அடிவயிற்றைப் பிசைய, அருகில் மாம்பழ ஜூஸ் குடித்தோம். பத்து ரூபாய்க்கு ஒரு கிளாஸ் நிறைய மேலே உலர்திராட்சை, முந்திரி தூவிக் கொடுத்தான். அங்கே ஏதோ இரு கண்கள் எங்களை நோட்டமிடுவதாய் தோன்றியது.

ஜூஸ் கடைக்காரனிடமே ஒரு வழியாகத் தத்திக் கித்தி இந்தியில் வீட்டுப் புரோக்கர் பற்றிக் கேட்டோம். அவன் சொன்ன வழியில் சென்றோம். ” சாய் ரிடைலர்ஸ்” என்ற போர்டு தொங்கிய கடைக்குள் நுழைந்தோம். அங்கே நல்ல கனத்த உருவத்தில், வழுக்கைத் தலையுடன் 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் உட்கார்ந்திருந்தார். பத்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருந்தார். அடித்த வெயிலுக்கு குளிரூட்டப்பட்ட அறை இதமாக இருந்தது. நல்ல வேளை அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது.

எங்களின் தேவைகளைக் கேட்டுக் கொண்டுவிட்டு அவர் வசமிருக்கும் சில வீடுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினார். எட்டாயிரத்துக்கு குறைந்து எந்த வீடும் இங்கு சாத்தியமில்லை என்றார். அதுவும் எங்களைப் போன்ற தென்னாட்டாருக்கு வீடு தரத் தயங்குவார்கள் என்றார். மேலும் மூன்று மாத வாடகை அட்வான்சாகத் தர வேண்டும் என்றார். எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு மாத வாடகை புரோக்கர் கமிஷனாகத் தர வேண்டும் என்றார். எனக்குத் தெரிந்த கணிதப்படி பார்த்தாலே, இதற்கு குறைந்த பட்சம் 40 ஆயிரம் தேவைப் பட்டது.

நொய்டா வரும் போது, சித்தப்பாவிடம் பத்தாயிரம் மட்டுமே கடன் வாங்கி வந்த எனக்கோ அல்லது அரசுக் கல்லூரி பியூனின் மகனான சோனிக்கோ அது சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை. எங்களுக்கு மொழி தெரியாது என்பதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே எங்களுக்குத் தோன்றியது. நானும் சோனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நாங்கள் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்கிறோம் என்று அவர் நம்பரை வாங்கிக் கொண்டு வெளியேறிய போது ஏதோ இந்தியில் கூறினார். அதன் பொருள் ” இதற்குக் குறைவாக நீங்கள் இங்கே குடியேறிவிட முடியாது ” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

வெயில் வேறு எங்களை வாட்டி வதக்கியது. மீண்டும் அந்த ஜூஸ் கடைக்காரனிடமே வேறு ஏதாவது விசாரிக்கலாம் என்று சென்றோம். அங்கே அவன் மும்முரமாக வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் முடிக்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குப் பக்கத்தில் ஒருவன் வந்தான். பரட்டைத் தலை. காவியேறிய பற்கள். அழுக்கு அப்பிய உடை.

” ஊருக்குப் புதுசா ? மதராசி ? ” (தென்னிந்தியர்கள் எல்லோருமே அவர்களுக்கு மதராசி)

ஆமாம். சென்னை என்றேன். சோனி கோட்டயம் என்றான்.

இரண்டும் தெரிந்த ஊர்கள்தாம் என்பது போலத் தலையாட்டிக் கொண்டான்.

” வீடு பார்த்து அலைகிறீர்களா? நான் உதவிக்கு வரட்டுமா? ” என்றான். சோனிக்குத் தெரிந்த அரைகுறை இந்தியை வைத்து அவன் கூறியதை இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொண்டோம். அவனது நடை உடை பாவனை எதுவுமே நம்பிக்கையளிப்பதாய் இல்லை. இருந்தாலும் எங்களுக்கும் வேறு வழியில்லை. எங்களை என்ன கடத்திக் கொன்று விடவா போகிறான். சரி என்று ஒப்புக் கொண்டோம்.

எங்களை ஒரு நிமிடம் அங்கே நிற்க வைத்துவிட்டு, பக்கத்தில் பான் கடையில் பீடா ஒன்றை வாங்கி வாயில் திணித்துக் கொண்டான். சைகையால் எங்களை அவன் பின்னால் வருமாறு அழைத்தான்.

நாங்கள் அவன் பின்னால் நடக்கத் தொடங்கினோம். எத்தனை பேர்? எவ்வளவு வாடகையில் எதிர் பார்க்கிறோம் என்பதையெல்லாம் சைகையிலும், நாங்கள் பேசிய பட்லர் ஹிந்தியிலும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

முதலில் ஒரு வீட்டைக் காட்டினான். அங்கு ‘டு லெட்’ போர்டு எதுவும் தொங்கவில்லை. ஆனால் மாடி ஒன்று காலியாக இருந்தது. போர்டு கூட இல்லாமல் இவனுக்கு எப்படித் தெரியும். ஒரு வேளை இவனும் ஒரு வகையில் வீட்டு புரோக்கராக இருப்பானோ என்று தோன்றியது. வீட்டைப் பார்த்து பிடித்த பின்புதான் வேலையைக் காட்டுவானாயிருக்கும். அவன் எங்களுக்காக வீட்டு ஓனரிடம் பரிந்து பேசிக் கொண்டிருந்தான். நடுவே “பேச்சிலர்” என்ற வார்த்தை கேட்டது. நாங்கள் புரிந்து கொண்டோம்.

அடுத்தடுத்து இரண்டு வீடுகளிலும் இதே வார்த்தை. இடையில் எங்களிடம் அந்த வீட்டுக்காரர்களை ஏதோ காரமாகத் திட்டினான் போலிருந்தது. மணி இரண்டாகி விட்டிருந்தது. வெயிலில் சுற்றியதற்கும், அதற்கும் பசி வயிற்றைக் கடித்தது. காலையில் வேறு நாங்கள் சாப்பிட்டிருக்கவில்லை.

அவனுக்கும் பசித்திருக்க வேண்டும். ஆங்கிருந்த அந்த ஒரு வாரத்தில் கானா, பானி போன்ற அடிப்படை வார்த்தைகள் எனக்கும் புரிய ஆரம்பித்திருந்தது.

அவனே அருகில் ஒரு இடத்திற்கு சாப்பிடக் கூட்டிப் போனான். எங்களைப் பார்த்து ” உங்களுக்கு சாவல் (அரிசிச் சோறு) கிடைக்கும் ” என்றான். எப்போதும் எதையாவது பேசிக் கொண்டிருந்தான். எங்களுக்குப் புரிந்ததா புரியவில்லையா என்பதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை. சாப்பிடும் போது கூட ஏதோ பேசிக் கொண்டே இருந்தான்.

அவன் பேசிய தொனியிலும் உடல் மொழியிலும் வைத்துப் பார்க்கும் போது, எங்களுக்கு ஏதோ ஆறுதல் கூறுவது போலவும். நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என்பது போலவும் பேசுவதாகவேத் தோன்றியது.

சாப்பிட்டு முடித்துவிட்டு நான் எங்கள் மூவருக்கும் சேர்த்து பில்லைக் கட்டிவிட்டு, மறுபடியும் வீடு பார்க்கும் காண்டத்தைத் தொடர்ந்தோம்.

இரண்டு தெருக்கள் சுற்றியலைந்த போது, ஒரு மைதானத்திற்கு அருகே ஒரு வீட்டில் “டூ லெட்” போட்டிருந்தது. ஆனால் அந்த வீடு ஐந்து பேர் தங்குமளவு பெரியதாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று ஓனரின் தொடர்பு எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டோம்.

வெயில் கொஞ்சம் தாழ ஆரம்பித்திருந்தது. அதே நேரத்தில் எங்கள் கால்கள் நோக ஆரம்பித்திருந்தன. அவன் முகத்தில் அந்தச் சோர்வு கொஞ்சம் கூடத் தெரியவில்லை. தினமும் இப்படிச் சுற்றித் திரிபவனுக்கு எப்படித் தெரியும்?

ஒரு வழியாக வீட்டை நாங்கள் கண்டடையும் போது மேலும் இரண்டு தெருக்கள் சுற்றியிருந்திருப்போம். அந்த வீடு ஒரு பொது நூலகத்திற்கு வெகு அருகில் அமைந்திருந்தது. எதிரே ஒரு பார்க் இருந்தது. அந்த அமைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த வீடு கிடைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

வீட்டிற்கு வெளியே “வத்வா, இ-369″ என்று கருங்கல்லில் பொறிக்கப் பட்டிருந்தது. வீட்டினுள் ஒரு மாருதி 500 நின்று கொண்டிருந்தது. அதில் “ப்ரஸ்” என்று எழுதியிருந்தது. ஏதோ பத்திரிக்கையில் வேளை செய்பவர் போலும். காலிங் பெல்லை அழுத்த வயதான பெரியவர் ஒருவர் இறங்கி வந்தார். மைதா நிறத்தில் இருந்தார். கேசம் கலைந்திருந்தது. முதலில் இவனே போய் பேசினான். எங்களைக் கைக்காட்டி ஏதோ பேசினான்.

பின்பு அந்தப் பெரியவர் எங்களிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அத்தனை சுத்தமான ஆங்கிலத்தை நான் அதுவரை கேட்டதில்லை. தான் தான் வத்வா என்றும், இந்தியன் எக்ஸ்பிரசில் எட்டிடராக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்பு வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். வீடு சுத்தமாக, காற்றோட்டத்துடன் இருந்தது. எங்களிருவருக்கும் பிடித்திருந்தது. அவன் இப்போதும் எங்கள் அருகே எங்களை கன்வின்ஸ் செய்யும் தொனியில் ஏதோ பேசிக் கொண்டே வந்தான். அவன் கொஞ்சம் வாயை மூடினால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

வீட்டு வாடகை, அட்வான்ஸ் என எல்லாம் எங்களுக்கு அடக்கமாக வந்தது. அவன் அவரிடம் ஏதோ ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தான். நானும் சோனியும், பக்கத்திலிருக்கும் கடைகள், பார்க், நூலகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். மணி ஆறைத் தொட்டிருந்தது. காலை பதினோரு மணிக்குத் தொடங்கி ஒரு வழியாக ஆறு மணிக்கு முடிந்தது எங்கள் வீடு தேடும் படலம். அப்போதே நாங்கள் 1000 முன் பணம் கொடுத்து புக் செய்து கொண்டோம்.

நாங்கள் வத்வாவிடமே சென்று மெதுவாக ஆங்கிலத்தில், அவனுக்கு நாங்கள் எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டோம். அவரும் அவனிடம் ஹிந்தியில் வினவினார். அவன் சட்டென்று சிரித்துவிட்டு, அவரிடம் ஏதோ சொன்னான். பின்பு எங்கள் இருவரின் கைகளையும் பற்றிக் குலுக்கிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் என்ன சொன்னான் என்று அவரிடம் கேட்டோம். ” இந்தப் பிள்ளைகளைப் பார்த்தால் ஊருக்குப் புதிது போலிருந்தது. பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. ஏதோ நம்மாள முடிஞ்சது. எல்லாத்துக்கும் காசுதானா? ” – இதுதான் அவன் கூறியதாக அவர் எங்களிடம் ஆங்கிலத்தில் கூறியது.

வெயில் முற்றிலுமாக மறைந்து வானம் செம்பூத்திருந்தது. காற்றில் குளுமை யேறியிருந்தது.

பெயரைக் கூட சொல்லாத அவன், தனியே கைகளை காற்றில் அசைத்தபடி சென்று கொண்டிருந்தான். அவன் ஏதோ பேசிக் கொண்டே செல்வது போல் தோன்றியது. அதுமட்டும் புரிந்துவிடவா போகிறது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *