கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 9,567 
 

சரக்கென்று ஒரு அரை வட்டமடித்து பஸ் நிறுத்தத்தை ஒட்டி இவளருகே வந்து முகாமிட்டது அந்த ஆட்டோ.உள்ளேயிருந்து ஆபாசப்பாட்டும்,சிகரெட்டின் புகையும் கிளம்பி அந்த பகுதியே மாசுபட்டது.

இவள் சற்று விலகி நின்று கொண்டாள்.முந்தானையை இழுத்து தலைவழியே போர்த்திக்கொண்டாள்.உடையில் ஏழ்மையும் உடலில் வசீகரமும் கொண்டிருந்தாள். நாலு நாளாய் இருந்த காய்ச்சலுக்கு டாக்டரைப் பார்க்க வந்தவளுக்கு திரும்பிச் செல்ல இன்னும் பஸ் கிடைத்தபாடில்லை.கூட்டமாய் வந்த பஸ் ஒன்று சற்று தொலைவிலேயே நின்று ஆட்களை இறக்கிவிட,இவள் துரத்திபோய் சேர்வதற்குள் புறப்பட்டு போனது.

இயலாமையில் உடலெல்லாம் வலிக்க திரும்பி பழைய இடத்துக்குப் போக சலிப்பாய் இருந்தது.அதிலேயே நின்றாள்,தனியாக.ஆட்டோ சட்டென்று உயிர் பெற்று வேகம் காட்டி இவளருகே வந்து நங்கூரமடித்தது.இப்போது இவளுக்கு மெல்ல பயம் உருவாயிற்று.

இவளையே குறி வைக்கும் மிருகம் போல ஆட்டோவிலிருந்து ஒருவன் இறங்கினான்.கண்களில் காமத்துடன் புகையை ஊதியபடி அருகினான்.பாக்கெட்டிலிருந்து ருபாய் நோட்டை எடுத்து முகத்துக்கெதிரே நீட்டி,”வேணுமா” என்றான்.”சீ..போடா..”என்று சொல்ல நினைத்தாள்.பயத்தில் தொண்டை அடைத்தது.

அவன் திரும்பி ஆட்டொவை பார்த்து கண்ணடித்து விட்டு முகத்தில் அதிர்ச்சி காட்டினான்.”அது என்னது..கன்னத்தில் கறுப்பா…” என்று கை நீட்டிமுன்னேற இவள் பின்னால் நகர்ந்தாள்.எதுவோ இடிபட்டது.திரும்பினாள்.பின்னால் இன்னொருவன் நின்றிருந்தான்.பயந்து விலகினாள்.

அழுகையாய் வந்தது.பஸ் ஸ்டாண்டில் நின்ற வயதானவர் அருகில் வந்து,”என்ன..என்ன பிரச்சனை இங்க..”

என்றார்.அவரை அவன் உற்று பார்த்து விட்டு சொன்னான்.”புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ போய்யா பொத்திகிட்டு…”

இவள் திடுக்கிட்டாள்.புருஷனா..இல்லை..இல்லவேஇல்லை…என்று மறுக்க நினைப்பதற்குள் இவள் தோள் மீது அவன் கையைப் போட்டான்.

இவள் பயத்தில் அலறினாள்.சத்தம் வரவில்லை.உடல் நடுங்கியது.எங்கும் வியர்த்தது.தொண்டையில் பயம் அடைத்து,தலை கிறுகிறுத்து,மூச்சையடைக்க,மயக்க மயக்கமாய் வந்து…சட்டென துவண்டு விழுந்தாள்.சற்று தள்ளியிருந்த பெட்டிக்கடையிலிருந்த யாரெல்லாமோ சத்தமிட்டபடி ஓடிவர…ஆட்டோ நிமிஷத்தில் காணாமல் போனது.

***

“என்னால முடியாதுன்னா முடியாதுதான், நீ ஆனதை பார்த்துக்க..”எதிரே நின்ற காண்டிராக்டரை கிருஷ்ணன் விரட்டிக் கொண்டிருந்தான்.’கொடுக்கல் வாங்கல் பிரச்சனை’ என்று புரிந்தது.ஒரு வாரமாய் இந்த இழுத்தடிப்பு நடக்கிறது.

இவனுக்கு கிருஷ்னன் மீது வெறுப்பாய் வருகிறது.மனுஷன் ஏன்தான் இப்படி காசு காசு என்று பறக்கிறாரோ என்று கோபம்.”ஏன் சார்.புது ஆபீசர் கெடுபிடி தெரிஞ்சுமா இப்படி…” என்றான் இவன்.கிருஷ்ணன் சினத்துடன் இவனை முறைத்தான்.

“ராஸ்கல்..ஒரு பியூன் நீ..எனக்கு புத்தி சொல்ல வந்திட்ட..கவனிச்சிகிறேண்டா…உன்ன நான் கவனிச்சிகிறேன்..” என்றான் குரோதமாய்.

இன்று நேரமே சரியில்லை போலிருக்கிறது.காலையிலிருந்து எல்லாமே ஏறுக்கு மாறாய் தான் நடக்கிறது.

காலையில் கண் விழித்துபார்த்தபோதே ,’ஐயய்யோ இவ்வளவு நேரமாகிப்போச்சா’ என்று பதட்டம் தொற்றிக்கொண்டது.’அந்த திமிரு பிடிச்ச கழுதை எழுப்பிவிடாம என்ன பண்ணிக்கிட்டிருக்கு,,’ என்று எழுந்து போய் பார்த்தால் அடுக்களையில் சிமெண்ட் தரையில் சுருண்டு படுத்து கிடந்தாள்.பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து கிடந்தது.இவனுக்கு அசாத்திய கோபம் வந்தது.’யேய்’ என்று காலால் தட்டினான்.திடுக்கிட்டு எழுந்தாள்.என்னமோ முனகினாள்.சரியாக கேட்கவில்லை “யேய் என்ன பேசின..என்ன பேசின..”என்றான்.
“ஒண்ணுமில்லப்பா… நீங்க போங்க உங்க கலெக்டர் உத்யோகத்துக்கு..”

“கிண்டலாயிருக்கு இல்ல..பியூந்தானேன்னு இளக்காரம்.மூதேவி ஓங்கி மிதிச்சேன்னா செத்துபோயிடுவ பார்த்துக்க.”

அவள் திடீரென்று ஓங்கி நெஞ்சில் ‘டமார் டமார்’ என்று அடித்துக் கொண்டாள்.” நான் சாவணும்..சாவணும் செத்தாதான் உங்களுக்கு நிம்மதி.” கீச்சு குரலில் அழுதாள்.

“ராட்சசி.என் உயிரை எடுக்கிறதுக்குன்னே வந்து வாய்ச்சிருக்கு.சனியன்.”

எரிச்சலோடுதான் அலுவலகம் கிளம்பி வந்திருந்தான்.இங்கு அதற்கு மேல் எரிச்சல். வீணாக கிருஷ்னனின் கோபத்துக்கு ஆளாகி…பாவி என்ன செய்யப் போகிறானோ. பசி வேறு காதை அடைத்தது.

வெளியே போய் ஒரு டீ குடித்து விட்டு தலைமை பொறியாளர் வருவதற்குள் திரும்பி விட வேண்டும் என்று அவசரமாய் வருகையில் என்ன துரதிஷ்டமோ வாசல் படியில் கால் சறுக்கி கீழே விழுந்தான்.

மூக்கு நசுங்கி முகம் பிய்ந்திருக்கும்.னல்ல வேளையாக எதிரே வந்த காண்டிராக்டர் தான்கிப் பிடித்துக் கொண்டார்.”பார்த்து மெதுவா போப்பா” என்றார்.

இவன் எழுந்து கையையும் காலையும் உதறுவதுவரை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஏதோ நினைத்தவனாக ஓடிவந்தான்.

“அடிச்சிட்டானா,அந்த காண்டிராக்டர் உன் மேல கையை வச்சிட்டானா?இத இப்படியே விடக்கூடாது” என்று கத்தினான்.காண்டிராக்டர் வெலவெலத்து போய் நின்றார்.இவனுக்கு எதுவும் புரியவில்லை.”இல்லை சார் நான்தான் கால் தடுக்கி…”

” நீ வாயை மூடு.எனக்கு எல்லாம் தெரியும்.இன்னிக்கு உன் மேல கையை வச்சவன் நாளைக்கு என்னவெல்லாம் செய்வானோ.விடகூடாது இத..”காண்டிரக்டரை எதற்கோ மடக்க பார்க்கிறான் என்று புரிந்தது.அலுவலகம் மெல்ல கவனத்தை வாசல் நோக்கி திருப்பியது.இவனுக்கு தவிப்பாயிற்று.பிரச்சனை விசுவரூபமெடுக்குமோ என்று கவலையாயிற்று.

கிருஷ்னன் யாரோ மந்திரிக்கு உறவாயிற்றே .அவனை ஆதரிக்காமல் இருந்தால் என்ன ஆவது.சடுதியில் அலுவலகம் மொத்தமும் எழுந்தது.வெளியேறி வேப்பமர நிழலில் நின்று மாறி மாறி ஆலோசித்தது.நடப்பது எதுவும் புரியாமல் இவன் சிலையானான்.

“என்ன மணி உனக்காக நாங்க வெளிய நிக்கிறோம். நீ என்னடான்னா வாசலை விட்டு வெளியே வரமாட்டேங்க..”

வந்து இவனை இழுத்துக் கொண்டு போனார்கள். ” உனக்கு ஒண்ணுன்னா விட்டுருவோமா..தமிழ்நாடு முழுக்க இத கொண்டு போகணும்..” இவனுக்கு கவலையாயிற்று.

சற்று நேரத்தில் கிருஷ்னனை காண்டிராக்டர் அணுகினார்.”பார்த்தேயில்ல.என்னை பகைச்சா பிரச்சனை இன்னும் பெரிசாகும்.”

“விடுங்க சார்.அப்படி தனியா வாங்க பேசுவோம்.” தனியே கூட்டிப் போய் ரகசியமாய் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தார்.பணமாக இருக்கும்.அவன் எதிபார்த்ததும் அதுதானே.

அந்த நேரம் பார்த்து தலைமை பொறியாளரின் ஜீப் உள்ளே நுழைந்தது.வெளியே கூட்டத்தைப் பார்த்து தயங்கி நின்றது.இவன் போய் வணக்கம் சொன்னான்.

“என்ன மணி பிரச்சனை” இவன் பதில் சொல்லத் தெரியாமல் தவித்தான்.

“மணிக்காகத்தான் சார் இந்த பிரச்சனை” யாரோ சொல்ல வெலவெலத்து போனான்.எங்கிருந்தோ கிருஷ்னன் ஓடி வந்தான்.”மணி நேத்து போட்ட தண்ணி தெளியலை போலிருக்கு.தள்ளாடி விழுந்திட்டு,காண்டிராக்டர் அடிச்சி போட்டாருன்னு சொன்னான்.சரி நம்ம ஆளாச்சேன்னு உணர்ச்சி வசப்பட்டோம்.இப்ப விசாரிச்சாதான் உண்மை தெரியுது.காண்டிராக்டர் இவனுக்கு அஞ்சோ பத்தோ குடுக்கிறதில்லையாம்.இப்படி நாடகமாடி பழிவாங்கியிருக்கான்..”கிருஷ்னன் சொல்லிக்கொண்டே இவனைப் பார்த்து கண்ணடித்தான்.

கழுத்து வெட்டப்பட்ட பலிகடா போல துடிப்பு எழுந்தது.பாவி.’உன்னை கவனிச்சிகிறேண்டா’என்று சொன்னதன் அர்த்தம் இதுதானோ.கிருஷ்னன் ஒரு கல்லில் மூன்று நான்கு மாங்காய்கள் அடித்து விட்டது போல் தோன்றியது.

கிருஷ்னனை எதிர்த்து பேச யாருக்கும் துணிவு வரவில்லை.அதையே ஆமோதிப்பாய் அர்த்தப்படுத்திக் கொண்டு அதிகாரி இவனை அருவருப்புடன் ஏறிட்டார்.”சே மனுசனாய்யா நீ.என்னிக்குதான் திருந்த போறீங்க.டிசிப்ளின் இல்லாதவங்களை நான் சும்ம விடப்போறதில்லை” என்றவர்.”இந்தாம்மா சாரதா.சீட்டுக்கு போய் ஒரு மெமோ டைப் பண்ணு “என்றார்.

பேச நாவெழாமல் இவன் இடிந்து போய் உட்கார்ந்தான்.

***

சோர்வாய் சைக்கிளை உருட்டிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.மனசு ரணமாகி இருந்தது.தியேட்டர் பக்கம் வந்த போது பஸ் ஸ்டண்ட் அருகே நிறைய கூட்டமிருந்தது.சில போலீஸ் தலைகள்.

“பட்ட பகல்லயே பஸ்சுக்கு நின்ன பொம்பளய நாசம் பண்ண பார்திருக்கானுகளே.உருப்படுமா இந்த நாடு.”எதிரே வந்தவர் புலம்பிக் கொண்டே நகர,இவன் அலட்சியமாய் விலகி நடந்தான்.வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை.பார்வதிபுரம் மேம்பாலம் வந்ததுமிறங்கி, நிழல் பொதிந்திருந்த அதன் கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்தான்.பாலத்துக்கு கீழே ரயில் ஒன்று பேரிரைச்சலுடன் கடந்து போயிற்று.பாக்கெட்டிலிருந்து பீடி எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

சாலையில் கண்ணுக்கு எட்டிய தோரம் வரை அனல் பறந்து கொண்டிருந்தது.மாட்டு வண்டி ஒன்று ‘கடக்முடக்’ ஓசையுடன் வந்து கொண்டிருந்தது.வண்டி நிறைய பாரம் இவன் மனதைப் போல.மாடு இழுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

“ஏ மணி பஸ் ஸ்டாண்ட்வரை போய் ஒரு பாக்கெட் கோல்டு பில்டர் வாங்கிட்டு வந்திருப்பா”

“வடசேரியில போய் நல்ல நெய் மீனா வாங்கி வீட்டுல கொண்டு குடுத்திட்டு வந்திரு.தேடிட்டே இருப்பா.ஒன் அவர்ல வந்திருவேல்ல.”

“ஞாயிற்றுக்கிழமை சும்மாதானே இருப்ப.வீட்டில ஒட்டடை அடிக்கணும்னு சொன்னா…வந்திரு.. நம்ம வீட்ல சாப்டுக்கலாம்.”

ஒரு வார்த்தை மறுத்து பேசியிருப்பானா.எல்லாவற்றுக்கும் ‘சரி சார்.சரி சார்’என்று தலையாட்டியது தப்புதானோ.குடும்பத்தையே மறந்து முழு மூச்சாய் உழைத்ததின் பலன் இதுதானோ…

‘சுளீர்’ என்று எழுந்த சாட்டையொலியில் நினைவு கலைந்தான்.வண்டிக்காரன் மாட்டை விளாசிக் கொண்டிருந்தான்.

“என்ன மணி எங்க போயிட்ட.உன்னை எங்கெல்லாம் தேடுறது.”அரக்க பரக்க வந்த பக்கத்து வீட்டு ஆள் மூச்சிரைத்தான்.

“ஏண்ணே.என்ன எதுக்கு தேடினிய..”

“உடம்பு சரியில்லாதவளை தனியா விட்டிருக்கியே.என்னப்பா நீ…இப்ப பாரு என்னவேல்லாம் நடந்து போச்சி.”

பதட்டமானான்.”உடம்பு சரியில்லையா.யாருக்கு.”

“என்னப்பா தெரியாதவன் மாதிரி பேசற.அங்க ஊரே திரண்டு கிடக்கு…பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா பார்க்க மாட்டியா. என்ன மனுஷன் நீ…போ பேசிட்டு நிக்காம முதல்ல அந்த புள்ளையப் போய் பாரு.” இவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தலைதெறிக்க விரைந்தான்.

***

மருத்துவமனையின் பொதுவார்டுக்கு வெளியே நிறைய கூட்டம்.பார்த்த முகங்கள்,பழகாத நபர்களென்று யார் யாரோ நின்றிருந்தார்கள்.அருகில் வந்து ஆறுதல் கூறினார்கள். அப்பாவியாய் உள்ளே நுழைந்தான்.

வார்டின் கடைசிக் கட்டிலில் கழிவறைக்கருகே சந்திரா கிடத்தப்பட்டிருந்தாள். நாற்றம் மூக்கை அரித்தது.கட்டிலைச் சுற்றி அயலார் பெண்கள் கூட்டம்.எல்லோருக்கும் முன்பே தெரிந்திருக்கிறது.

சந்திரா தலைவழியே மூடிக்கொண்டிருந்தாள்.ஒரு பெண் விசிரி வாங்கி வந்து விசிறிக் கொண்டிருந்தாள்.இன்னொருவர் காபி கொண்டு வந்து’குடிம்மா.கொஞ்சம் தெம்பு வரும்’ கெஞ்சிக் கொண்டிருந்தாள்.இந்த கூட்டத்தில் அவளிடம் போய் என்ன சொல்வது.திகைப்பாயிருந்தது.

நர்ஸ் வந்து கூட்டத்தை விலக்கி,சந்திராவின் இடுப்பில் ஊசியை செருகிவிட்டு போனாள்.

“நிமிர்ந்து ஒரு ஆள் முகத்தை பார்த்து பேசமாட்டா.அவளை போய் இந்த பாடு படுத்தியிருக்கானுவளே. பாவிபயலுக.”

” நாடே சீரழிஞ்சிப் போச்சி. இவனுகள கண்டதுண்டமா வெட்டிக் கொல்லணும்.”

“பட்டபகல்ல நடந்திருக்கு.ஒரு கல்ல தூக்கி எறிஞ்சாவது அவன பிடிச்சிருக்கலாமே”

ஆறுதல் படுத்துகிறவர்களின்வார்த்தைகளே துக்கத்தை மேலும் தூண்ட.இவனுக்கு ஏனோ கண்ணீர் பெருகியது.

கட்டிலை நெருங்கி பொய் ‘சந்திரா’ என்று கூப்பிட்டு பார்த்தான்.அவள் திடுக்கிட்டு உதறி எழுந்தாள்.கண்களில் பயம் உறைய சுற்றிலும் பார்த்தாள்.கட்டில் முனையில் சுவரோரமாய் ஒண்டினாள்.இவன் கலவரமாய் பார்த்தான்.

காலையில் அவளோடு மல்லுக்கு நின்றது நினைவுக்கு வந்தது.சுகவீனத்தால்தான் விழுந்து கிடந்தாளோ… நான் ஒரு முரடன். எப்படியெல்லாம் நோகடித்துவிட்டேன்.மறுகி மறுகிதான் கிடந்திருப்பாளோ.பட்டால்தானே எல்லாம் புரிகிறது.தனக்கு வலித்தால்தான் அடுத்தவனின் வேதனை உணர முடிகிறது.அடிபட அடிபடத்தான்மனிதனுக்கு பாடங்கள் கிடைக்கிறதோ?

மெல்ல மெல்ல ஒவ்வொருவராய் நகர,இவன் கட்டில் விளிம்பில் போய் அமர்ந்தான்.இவள் பயத்தை எப்படி தெளியவைப்பது. ஆண்டவனே என்று பெருமூச்சு விட்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் வெளியேறியிருக்க,மெல்ல அவள் தலையை வருடினான்.என்ன நினைத்தாளோ சட்டென்று துணியை விலக்கி எழுந்து வந்து இவன் மடியில் தலைவைத்து அழுதாள்.பூனைகுட்டி மாதிரி சுருண்டு படுத்தாள்.இவன் கையை இழுத்து நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள்.

இவனுக்கு அன்றெல்லாம் பட்ட வலிகள் ஏனோ அந்த நிமிடத்தில் காணாமல் போன மாதிரி இருந்தது.

– மே 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *