வனத்துக்குத்திரும்புதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,613 
 

ஒரு நல்ல கதையை வாசித்து நிறைக்கையிலும், பணிமுடிய இன்னும் 5 நிமிஷங்கள்தான் இருக்கு என்று மணிக்கடிகை அபிநயக்கையிலும் எனக்குள் எப்போதும் ஒரேமாதிரியான உணர்வே திரைக்கும்.

பணி என்றால் ஏதோ ‘கழுத்துப்பட்டி’ கட்டிக்கொண்டு இயற்றுவது என்று நீவீர் எண்ணிவிடலாகாது, பாண் வெதுப்புவதுதே ஊழியம். என் சகபணியாளன் அயிடின் “ இன்றைக்கு என் காதலியின் பிறந்தநாள். நாம் பணிமுடிந்து போகையில் ஒரு அருந்தகத்தில் ‘ராக்கி’ குடிக்கப்போகலாம் ”என அழைத்திருந்தான். துருக்கியில் இருக்கும் காதலியின் நினைப்பைக் கொண்டாடவேண்டி தன்னார்வத்தில் அவனே அழைத்திருந்தாலும் எனக்கான திராவகத்துக்கும் கொறியலுக்கும் நானே பணம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதறிக.

ஒருகாலத்தைய இந்திப்படங்களில் வரும் சகோதரிகள் அனைவரும் தவறாது தம் சகோதரர்கள் கையில் அழகழகான ‘ராக்கி’களை அணிவித்துவிட்டுச் சம்பாவனை பெறுவதைப் பார்த்திருப்போம். ஸ்கொட்லான்ட் என்றால் விஸ்க்கி, ஃப்ரான்ஸ் என்றால் ‘கோனியாக்’, ரஷியா என்றால் வொட்கா என்பதைப்போல் துருக்கி என்றால் ‘ராக்கி’. இந்தத்துருக்கியின் ‘ராக்கி’ அல்கஹோல் செறிவான ஒரு மதுவகை. துருக்கிய மளிகைப்பொருட்கள் விற்கும் சில்லறை அங்காடிகளிலும், அருந்தகங்களின் விறாக்கைகளிலும் ‘ராக்கியைப் பார்த்திருக்கிறேனே அல்லாமல் எஞ்ஞான்றும் உள் ‘இறக்கி’ப்பார்த்ததில்லை. இன்று அயிடின் அனுசரணையுடன் அதையும் சுகித்துவிடச் சித்தமானேன்.

நாம் நுழைந்த அந்த அருந்தகத்தில் பரிசாரகியாக ’சிக்’கென்றுடுத்தி புலியன்ன நளின அசைவுகளுடன் ஒரு இளநாரியை நீங்கள் எதிர்பார்த்திருந்தால் ஏமாந்தீர்கள், நாமுந்தான். உணவகங்களிலாயின் ‘பர்தா’ அணிந்தபடி துருக்கி யுவதிகள் ஓடியாடிப்பணி செய்வார்கள். ஆனால் அருந்தகங்களில் அருந்தலாகத்தான். இங்கே பரிமாறுவதற்கு ’ஜிம்’மிலேயே பிறந்தவன்போல் ஒரு கனரக இளைஞன்தான் நின்றிருந்தான், எங்களைக் கண்டதும் மகிழ்ந்து ‘மெஃறேபா’ சொல்லி வரவேற்றான் .

அநேகரும் செய்வதைப்போல் நாமும் 2cl, 2cl ஆக ஏற்றிக்கொண்டால் முடிவில் 5 முழுப்போத்தல்களுக்கான ‘சிட்டை’ வரும், ஆதலால் “ ஒரு முழுப்போத்தல் ராக்கி கொண்டுவா ஆபி ” என ‘ஆக்ஞை’ கொடுத்தோம்.

ஆபியோ ” நைன் நைன் நைன்………… இங்கே ஷாம்பேன் மட்டுந்தான் முழுப்போத்தலாகத் தருவோம். ‘ராக்கி’ ‘வொட்கா’போன்ற ஸ்றோங் மதுக்களைத் தருவதில்லை” என்று தம் அருந்தக தர்மத்தை விளக்கினான்.

அயிடின் “ அப்படியானால் கிளம்பு நாம் வேறு அருந்தகம் போகலாம்………….. ” என்றபடி எழும்பினான்.

ஆபி தனக்கான சம்பாவனையை இழக்கத்தயாரில்லை. எம்மைத் தோளில் முட்டியைவைத்து அமுக்காத குறையாக அமுக்கி மீளவும் இருத்தி “ இருங்க இருங்க………… ‘புசுக்கெனக் கோபித்துக்கொண்டு கிளம்பிட்டா எப்படி, இருங்க உங்களுக்காக நான் ஒரு ‘டிறிக்’ பண்ணிக் கொண்டாந்தாரேன் ‘ராக்கி’.” என்று கண்களைச் சிமிட்டிச் சொல்லிவிட்டுச்சென்றான் .

“எப்படியோ கொண்டு வா” என்றான் அயிடின்.

வழமையில் ஐஸ்கட்டிகள்போட்டு ஷாம்பேன் போத்தல் வைத்துப்பரிமாறப் பயன்படுத்தும் அலுமினிய வாளிக்குள் ஒரு 700cl போத்தல் ‘ராக்கி’யை வைத்து ஏதோ செறிவாக்கப்பட்ட யூரேனியத்தைக் கடத்திக்கொண்டு வருபவனைப் போன்றதொரு பாவனையோடுகொண்டுவந்து பௌவியமாக மேசையில் வைத்துவிட்டு கண்ணாடிக் குவளைகளையும், ஸ்டில், சோடா வாட்டர் போத்தல்களையும் பரவினான். அல்கஹோல் செறிவான ‘ராக்கி’யுடன் 50:50 தண்ணீர் கலந்து பருகுவதே பொதுமரபாம்.

‘வொட்கா’வைப்போன்றே நிறமற்று இருக்கும் ‘ராக்கி’யை கண்ணாடிக்குவளையுள் ஊற்றிவிட்டு அதனுள் சோடா நீரைச் சேர்க்கவும் அது கள்ளின் நிறத்துக்குமாறி ’முதல்மாயம்’ பண்ணியதுடன் கூடவே கராம்பின் வாசத்தையும் கிளப்பியது. இணைப்பு உணவாக ஆவியில் அவித்த ‘ஸல்மோன்’மீன் ஃபிலேயை அவனும், எண்ணெயுள் அமுக்கிப் பொரித்த ‘டொறாடோ’ மீனை நானும் வருவித்தோம். குடித்துவிட்டு மேசையில் வைத்த கண்ணாடிக்குவளையின் அதிர்வு ஓயமுதலே நடுமண்டைக்குள் ‘ஜிவ்’வென்று சுகமாக ஏறியது. ஒரு ரவுண்ட் உள்ளே இறங்கியதும் எமக்குள் ஹீலியம் வாயு புகுந்துவிட்டதைப் போலிருந்தது. பின் நண்டைப்போல் எட்டுத்திசைகளிலும் அசைந்தபடி மிதக்கத்தொடங்கினோம். அருந்தகத்தில் ‘பெல்லி-டான்ஸு’க்குரிய இசை வைத்திருந்தார்கள். நேரம் ஆக ஆக அந்த இசைமாறி சல்லாப லயங்கள் இழைந்ததும், சிருங்கார ரஸங்களைக் கிளர்த்துவதும், வேறொரு லாகிரி உலகத்துள் இட்டுச்செல்வதுமான ஸ்ருதி’ ’சந்தங்களு’டன்கூடிய அங்கே வைக்கப்படாத புதியவகைச் ‘சங்கீதங்கள் எமக்குக் கேட்கத் தொடங்கின.

—-

சீருந்தைப்பிடித்து தொடருந்துநிலையத்துக்கு வந்தேனோ, இல்லை கால்களில் வந்தேனோ, வீட்டுக்குப்போகவேண்டிய உந்துக்குள் இருந்தேன்.

எனக்கு எதிரேயிருந்த ஆசனத்தில் நாற்பது வயது மதிக்கக்கூடிய வெள்ளையர் ஒருவர் பகுமானமாக அமர்ந்திருந்தார். ஒருவேளை உல்லாசப்பயணியாக இருப்பாரோ………… இல்லை இருக்காது, அவர்களது தேசத்தில் நான்னல்லவா பரதேசி. உடனே என்னைத் திருத்திக்கொண்டேன். அவ்வப்போ அவர் என்னைப் பார்த்து முறைப்பதைப் போலவும், புன்னகைப்பதைப் போலவும் இருந்தது.

கொஞ்சநேரம் வெளியே ஜன்னலூடே வெளியே பார்த்துக்கொண்டு இருந்தவர் திடீரென நினைப்பு வந்தாற்போல் தன் கோட் உறையிலிருந்து உறையளவுநாவல் ஒன்றை எடுத்துப்படித்தார். ஒரு பக்கம்கூடப் படித்திருக்க மாட்டார். மீண்டும் உள்ளே வைத்துவிட்டார். மொக்கையாக இருந்திருக்கும்போல.

அவருக்கு நான் ‘ஜோஹிம்’ என நாமகரணம் செய்திருந்தது அவருக்குத் தெரியாது. அவர் தன் இருபதுகளில் காதலியுடன் ஏற்பட்ட மனமுறிவினால் ’இறையியல்’ படித்துக்குருநிலைக்குப் போய்ப் பின்னர் மனம்மாறிக் காதலுக்கே மீண்டவராயிருப்பார். இப்போது இரண்டு பிள்ளைகளும் இருக்கலாம், பின் அவளைவிட்டு மீண்டும் தனித்த வாழ்க்கைக்குத் திரும்பியுமிருக்கலாம். மீசையையும் சேர்த்து மழுங்கச் சௌவுரம் செய்திருக்கும் இவர் இராணுவத்துக்குப்போய் துப்பாக்கிப்பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டிருக்கமாட்டார்.

மனம் முகில்போல் அலைந்துகொண்டிருக்கிறது, நான் அவதானிக்காமல் இருந்துவிட்டேன்போல. எந்த நிலையத்தில் ஏறினாரோ தெரியவில்லை, இப்போது ஒரு புதியபெண் என் எதிர்வரிசையில் ஆசனங்களின் நுனிப்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். பெண் என்பதாலாயிருக்கலாம் அவர் என்னைப் பார்க்கவில்லை. நான் அவரை அவதானித்தேன், அதுவும் நான் ஆண் என்பதால் அல்ல. அவர் பூசினிவிதையின் முகவெட்டுடன் ஆன் ஃபிராங்கின் சாயலில் பார்க்கும்படியாக இருந்தார், அத்துடன் அவருக்கு மார்க்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலில்வரும் நீலவ்னாவைப்போல புருவத்தில் ஆரம்பித்து நடுநெற்றிவரை நீளும் ஒரு ஆழமான தழும்பும் இருந்தது. அவ்வடு அவருக்கு ஒரு மிதியுந்துக்காரன் அவரை மொத்தி வீழ்த்தியதாலோ, குளிப்பறையில் வழுக்கியதாலோகூட ஏற்பட்டிருக்கலாம். ’தாய்’ நாவலைப்படித்த பின்னால் இப்போ எந்தப்பெண்ணினதும் முகத்திலோ நெற்றியிலோ தழும்பைப்பார்த்தாலும் அவள் குடிகார முரட்டுப்புருஷன் அவள்மீது பாத்திரம் எதையாவது விட்டெறிந்திருப்பான் என்கிற எண்ணமும், வருத்தமுந்தான் வருகின்றன. ஆனால் நிஜத்தில் ‘பாதிக்கப்பட்டவர்கள்மீது எமக்கெழும் அனுதாபம் அவர்களுக்குப் பிடிப்பதில்லையாம், பதிலாக அவர்களை எரிச்சலடையவே செய்கின்றது’ என்கிறது நவீனஉளவியல். இந்த இயல்களை மீறியும் எனக்கெழும் அனுதாபத்தை என் செய்வேன்?

நான் கண்ணயர்ந்த வேளையிலாயிருக்கவேண்டும், ஏராளம் முகில்கள் வண்டிக்குள் நுழைந்திருந்தன. யாருக்கும் எந்த இடையூறும் பண்ணாமல் அவை தம்பாட்டுக்கு எண்ணங்களைப்போல மிதந்துகொண்டிருந்தன. எண்ணங்களுக்கும் முகில்களுக்குந்தான் என்னே ஒரு ஏர்வை? ஐயகோ…………… இப்படித்தான் அப்பப்போ என் எண்ணங்கள் செந்தமிழாகத் திரிந்துவிடுகின்றன, செந்தமிழாவது பரவாயில்லை. என் தாத்தாவுக்குக் ‘கோப்பறேசன்’ பூட்டி அவரை வெளியே விட்டுவிட்டால் தன் மிலிட்டரி இங்கிலீஷில் சீறிக்கொண்டு வீடுவந்து சேர்வார். போதையேறவும் பிறிதொரு பாஷை மூளையை ஆக்கிரமித்து ராஜ்ஜியம் பண்ணுவதன் மர்மம் இன்னமும் எவரதும் பெருங்கதையாடலுக்குமுட்பவில்லை.

எந்த வார்த்தையுடன் என்ன விஷயத்துடன் யாம் சம்பாஷிக்கத் தொடங்கியிருந்தோம் என்பது நினைவில் இல்லை, எனினும் யாம் ஏதோவொரு கணத்தில் இயல்பாகச் சம்பாஷிக்கத் தொடங்கியிருந்தோம். அப்பெண்ணின் பெயரை நான் கேட்டபோது, என்ன அதிசயம் ’நீலவ்னா’ என்றார். ’தாய்’ நாவலில் வரும் தாயின் பெயரல்லவா…. அது உங்களுக்குத் தெரியுமாவெனக் கேட்க உன்னினேன், பின் சடுதியில் அடக்கிக்கொண்டுவிட்டேன். கேட்டிருந்தால் பயல் தன் மேதாவித்தனத்தை எழுப்பிக்காட்டுகிறான் என நினைத்திருப்பார். நீலவ்னா தான் ஹொஸ்டலில் படிக்கும் தன் மகளைப்பார்த்துவிட்டு வருவதாகச்சொன்னார். அவரது காலடியில் வைத்திருந்த பையிலிருந்து கொஞ்சம் லீக்ஸும், றொகோலாக்கீரையின் தளிரிலைகளும் சேர்ந்துகொண்டு வெளியே எட்டிப்பார்த்தன. இப்போது எனக்கு ‘ இப்படித்தான் அநேகமான பெற்றோர்களின் காலங்கள் பிள்ளைகளுடனேயே கரைந்துபோகின்றன’ எனச்சொல்லவேண்டும் போலிருந்தது. சடுதியில் ‘பிள்ளைளுக்கு இன்னும் இன்னும் அதிகமாக உங்கள் நேரத்தைத்தாருங்கள்’ எனும் சமூகசேவைப்பிரிவின் அறிவித்தல்கள் நினைவுக்குவர அதையும் அடக்கி நிறுத்திவிட்டேன். ஒருவேளை அப்பிடி நான் சொல்லியிருந்தால் அவர் ஒரு புன்னகையுடன் ஆமோதித்துவிட்டு உள்ளுக்குள் என்னையொரு ‘முட்டாள்பயல்’ என நினைத்திருக்கலாம்.

தன் டிஷ்-அன்டெனாக்கள் போலிருந்த செவியின் சோணைகளை பேசுபவர்களின் பக்கமாக மாறிமாறித் திருப்பிக்கொண்டிருந்த ஜோஹிம், நீலவ்னா என்னுடன் பேசும்போது அவரது தழும்பைக் கவனித்திருக்கவேண்டும் “என் தாயாருக்கும் இதேயிடத்தில் கிடந்த ‘வடு’ அவரது வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது.” என்றார். ‘அந்த வடுவை உண்டுபண்ணிய அப்பாவை அவர் விரட்டி விட்டாராக்கும்’ என்று நினைத்தேன். ஆனால் தொடர்ந்து அவர் சொன்னகதை என் கற்பனையை விடவும் வேறாக இருந்தது.

“ அம்மாவுக்கு தான் ஒரு சினிமா நக்ஷத்திரமாக வேண்டுமென்பது இளவயதிலிருந்தான கனவாக இருந்தது, நெற்றியிலிருந்த அந்தத் துக்கிரி (blod) வடுவினால் அவரை எந்த சினிமா நிறுவனமும் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டன, அவரது கனவுகளும் கலைக்கப் பட்டுவிட்டன.”

“ இப்போதாயின் அது ஒரு பிரச்சனையாகவே இருந்திருக்காது, அந்த அளவுக்கு எந்தவடுவையும் இல்லாமலாக்கிவிட மேக்-அப்பிலும் நவீனவிஞ்ஞானத்தின் பயன்பாடு கைகொடுக்குமாக்கும்.”

அதன்பின் மௌனமாகிவிட்ட அவரை யாரும் அவ்‘வடு’ ஏன், எதனால், எப்படி அவருக்கு ஏற்பட்டதென்று உசாவவில்லை.

நான் சாதுரியமாக விஷயத்தை மாற்றி அவரிடம் எனக்கு என்னவென்ன விஷயங்களெலெல்லாம் பிடிக்கும் என் அக்கறைகள் என்னவென்ன என்பதை விளம்பிக்கொண்டிருந்தேன். அவற்றுள் மோஸாட், ஜஃக்ஜித்சிங்-கஸல்ஸ், டெஸ்லா-மகிழுந்து, டென்னிஸ், ஒடியல்கூழ், அக்கார அடிசல், ஹெமிங்வே, கம்யூ, செக்கோவ் என்பன மட்டும் காதில் மெலிதாய் ரீங்கரிக்கின்றன.

ஜோஹிமும் தனக்கு “ பேஹாக், கல்யாணவசந்தம், பிருந்தாவனசாரங்கா, ரேவதி, லதாங்கி, யமன்கல்யாணி, காபி, பாகேஸ்வரி, கீரவாணி, மதுவந்தி ராகங்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும், அதைவிடவும்………… பிடில் வாசிப்பது இளம்பெண்களானால் அந்தக்கைகள் வில்லைப் பிடித்திருக்கும் லாவகமும், அவைகளின் நளின அசைவுகளும் நிரம்பப் பிடிக்கும்” என்றார்.

நீலவ்னாவுக்கும் ஜோஹிமுக்கும் நடுவில் அளவான உடம்பும், பச்சைக்கண்களுமுடைய இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தார். அவருக்கு எடுப்பான மோவாயும் உதடுகளும் அமைந்திருந்தன. அடர்ந்த, அலைகளோடிய வெண்கேசத்தைக் கொஞ்சம் குள்ளமாக வெட்டியிருந்தார் , சிரித்தால் இன்னமும் பொலிவாகவும் அழகாயுமிருப்பாரோ என்றிருந்தது. எம் பேச்சுக்களை ரசித்துக்கொண்டு வந்திருக்க வேண்டும். இடையிடையே எதையோ சொல்லுவதற்குத் விரும்புபவர்போலவும், வந்தசிரிப்பை அடக்குபவர்போலவும் அவரது முகபாவங்கள் மாறிக்கொண்டிருந்தன. அவர் தன் இளமைக்கால நினைவுகளில் தோய்ந்துபோயிருந்திருக்கலாம். தன் காதலனிடம் கிடைத்த முதல் முத்தத்தை, அவன் முதன் முதலாக இடுப்பில் கைவைத்த சுகத்தை, கட்டித்தழுவியதை, கல்லூரி நண்பர்களின் சல்லாபப்பேச்சுக்களை, அவர்கள் பண்ணிய சில்மிஷங்களைமீட்டு அவற்றில் தோய்ந்துகொண்டும் வந்திருக்கலாம். நான் அவருக்கு என்ன பெயர் வைக்கலாமென யோசித்துக்கொண்டிருக்கையில்………

ஜோஹிம் தன் பேச்சைத்தொடர்பவர்போல் “ என்றாலும் வாழ்க்கையில் நான் பார்த்த காட்சிகளை நீங்கள் எவரும் பார்த்திருக்கவே……………முடியாது” என்றார்.

‘அப்படி என்ன உன்னதமான காட்சியைத்தான் பார்த்தீர்கள்’ எனக்கேட்க நினைக்கைவும் அவராகவே வலிந்து

“ என் நண்பனின் காதலியை என் இன்னொரு நண்பனின் கட்டிலில் பார்த்தேன்………..ஜா” என்றார்.

நடுவிலிருந்த பெண் திடுப்பென உயிர்த்து “அந்தப் ஃபெர்டினான்ட் எனக்கு என்ன பண்ணினான்னு உங்களுக்குத்தெரியுமா” என்றார், கடுப்பான குரலில். அவர் முகம் சடுதியில் வெளிறிவிட்டிருந்தது.

“ ஏம்மா அப்பிடி என்னதான் அந்த ஃபெர்டினான்ட் பண்ணினான்.” என்றேன் குரலில் தண்மை சேர்த்து.

உடனே எழுந்தவர் முன்னே சாய்ந்து என்னைக் கட்டி அணைத்துக்கொண்டு கேவி அழலானார். என் ஷேர்ட் முழுவதும் அவர் உதட்டுச்சாயமும், மஸ்காராவும், கண்ணீரும் கலந்து அழுந்த அவர் காதருகே மெதுவாக “ ஆமா…………. ஃபெர்டினான்ட் என்ன பண்ணினான் டியர்” என்றேன் மறுபடியும்.

அணைப்பை விலக்கி என் முகத்தைப் பார்த்தவர்

“அப்போ………உனக்கும் அந்த ராஸ்கலைத்தெரியுமா” என்றார் கண்களில் வியப்போடு.

“ ஆமா…………அவனும் எங்கள் வீதியில்தான் குடியிருந்தான். ”

எங்கிருந்துதான் வருகின்றனவோ இந்தப்பொய்கள்.

அவர் குரலைத்தணித்துக்கொண்டு ஒரு சிறுமி முறையிடுவதைப்போலத் தலையை ஆட்டியாட்டி

“என்பாட்டுக்குத் தேமேயென்று பள்ளிக்கூடம்போய்க்கொண்டிருந்தேனா, அந்த ராஸ்கல் என்னை பசப்பி வம்புக்கிழுத்து காதலிக்கிறேன்பேர்வழி என்று ஆரம்பித்து என்னை மயக்கி எல்லாத்தையும் xxxxx xxxxx xxxxx காட்டிப்போட்டு (அனைத்தும் வார்த்தைப்படுத்த முடியாத பாலியல் வர்ணனைகள்.) கடைசியில் ஏமாத்திட்டான்………..ஜா.”

மேலும் உதிர்ந்த கண்ணீரை டிஸுவை எடுத்துத் துடைத்துக்கொண்டார்.

நான் அவர் தோளில் தட்டி எத்தனை சமாதானப்படுத்தியும் தொடர்ந்து விம்மிக்கொண்டே வந்தார்.

ஜோஹிமின் மௌனத்திலிருந்து அவர் தன் ‘தரிசன’த்துக்காக அருவருப்படைகிறாரா, அருகிலுருக்கும் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்காக அனுதாபப்படுகிறாராவென்பது தெரியவில்லை.

முகில்கள் நிறைந்திருந்த உந்துக்குள் மீண்டும் அமைதி கசிந்து நிறையலாயிற்று. தொடருந்து லின்டன், கஸ்டானியன் மரங்கள் செறிந்தவொரு பிரதேசத்தால் நகர்ந்துகொண்டிருந்தது. அதன் பாதையின் கீழாக பள்ளத்திலுள்ள சிறுநகரத்தின் குடியிருப்புகளிலிருந்து வரும் வெளிச்சத்துளிகள் மின்மினிகள் அலைவதைப்போல் அலைகின்றன. அம்மின்மினிகள் எனக்கு அடர்காடு ஒன்றினூடாக நாம் பயணிப்பதைப்போன்ற பிரமையைத்தந்தன. இப்போதெல்லாம் எனக்கு காடுகளில் இயற்கையோடு வாழவே மனம் அவாவுகிறது. நான் வனத்துக்குத் திரும்புதல்பற்றிச் சிந்திக்கத்தொடங்கினேன்.

—–

இலையுதிர்காலம், வெளியில் புல்வெட்டுகிறார்களோ, இலைச்சருகுகளை உறிஞ்சுகிறார்களோ அவர்களது குட்டிச்சிள்வண்டுமெஷின் எழுப்பிய இரைச்சலில் என் தூக்கம் கலைகிறது.

என் படுக்கையில் கம்பளிப்போர்வைக்குள் இருக்கிறேன், பரிச்சயமான படுக்கை. ஓ………… இது என் வீடுதான், குசினியிலிருந்து மனைவியின் குரலோடு, நல்ல மீன்பொரிக்கும் வாசமும் சேர்ந்து வருகிறது.

அவளுக்குக் கேட்கும்படியாகச் சத்தமாகக்கேட்டேன்:

“ஸ்வீட்டி………. எப்போ நான் வீட்டுக்கு வந்தேன்”

“நேற்றிரவும் நீங்கள் ‘புத்தி’யுடன் வரவில்லை” குரலில் இணைவிகிதத்தில் பரிகாசமும், கடுப்பும். அதாவது குடிக்காமல் வரவில்லையாம், அவள் பர்ஸிக்காரி, வார்த்தைகளைப் பர்ஸியிலிருந்து மொழிபெயர்த்துத்தான் பேசுவாள்.

“அப்போ…………. எப்படி வந்தேன் ஹனி.”

“ நான் உரத்துத்தூங்கிக்கொண்டிருந்தேனா உங்கள் கூட்டாளி ஆந்திரேயோ………… அயிடினோ குறுந்தாடிவைத்த ஒரு கடுவன் சீருந்தில் இட்டுக்கொண்டுவந்து பறித்துவிட்டுப்போனான்.”

நிஜந்தானோ………. எழுந்து என் பர்ஸைத் திறந்து பார்த்தேன். அதனுள் நான் எடுத்துச்சென்ற 50 இயூரோத்தாளும் , வங்கிஅட்டை, அறிமுகஅட்டை அனைத்தும் அப்படியே இருந்தன.

—-

பாண் => ரொட்டி, ‘மெஃறேபா’ => (துருக்கியில்)வந்தனம், ஆபி => (துருக்கியில்)சகோதரன், சீருந்து => டாக்ஸி, ஏர்வை => பொருத்தம், ஆக்ஞை=> உத்தரவு, கோப்பறேசன்=> அன்றைய யாழ்வழக்கில் => கள்ளுக்கொட்டகை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *