கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,101 
 

எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) என்றொரு இடம். அதற்கு பக்கத்தில் இருக்கும் ரயில்வே டிவிசன் ஆபீசுக்கு செல்ல வேண்டும். என்னோடு கிஷோரும் சாந்தமூர்த்தியும் வருகிறார்கள். ஞாயிறு மதியம் கோவை எக்ஸ்ப்ரஸில் கிளம்பி கோவை சென்று அங்கு ரூம் போட்டு பின்னர் மறுநாள் காலை பாலக்காடு செல்லலாம் என்று திட்டம்.

கம்பெனி செலவு என்பதால் நாங்கள் எப்போதும் AC இல்தான் செல்வது வழக்கம். எங்கள் சொந்த காரியத்திற்கு சென்றால் sleeper (அ) unreserved . சென்னை சென்ட்ரலில் குழுமி இருந்த மனிதக் கூட்டத்தில் எவரிடமும் இடிபடாமல் இருக்க வளைந்து நெளிந்து பறந்து எங்கள் கோச்சை அடைந்தோம். எப்போதும் சார்டைப் பார்க்கையில் நம்மோடு இன்று யாரெல்லாம் பயணம் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் நம் பக்கத்து சீட் என்றால் அந்த பயணமே முழுமை அடைந்ததாக அர்த்தம். இந்த முறை சில தாத்தாக்களும் பாட்டிகளும் எங்களோடு பயணிப்பதால் நாங்கள் வாழ்க்கையே வெறுத்துப் போனது உங்களுக்கு பேரின்பத்தை அளிக்கும்.

மெல்லிய சீரான குளிர் காற்று என் உடலை புணரத் தொடங்கியது. ஆசனத்தில் சாய்ந்தபடி ஹெட்போனில் காற்றுக்குள்ளே வாசம் போல எனக்குள் நீ என்ற யுவனின் குரலைக் கேட்டபடி வெளியே பார்த்தேன். பனை மரங்கள், நீர்குட்டைகள் என்று அனைவருக்கும் எங்கள் கண்களால் செய்தி பரிமாறிக்கொண்டு சென்றோம். பரிசோதகர் எங்களிடம் வந்து சோதனை இட்டு பின்னர் எதாவது இருக்கை காலியாக உள்ளதா ஏதேனும் சம்பாதிக்க முடியுமா என்று தீவிரமாக சார்டையே வைத்து ஏதோ சமன்பாடு செய்து கொண்டு இருந்தார்.

காட்பாடி முன்னரும் பின்னரும் ஏகப்பட்ட தென்னை மரங்கள். ஒரு வேளை இந்த ஊர் வெயிலூராக இருப்பதற்கு இது காரணமோ என்று கிஷோர் கேட்டான். எதிரே இருந்த தாத்தாவை வெறுப்புடன் பார்த்தபடி எனக்கு தெரியாது என்று சலிப்புடன் சொன்னேன். என் கவலை எனக்கு. என்னிடம் எதுவும் தேறாது என்று சாந்தமூர்த்தியிடம் போய் பாலாறு வற்றியதற்கு காரணம் ஆம்பூர் சாயக் கழிவு பட்டறைகளா, பாலக்காடில் ஒரு கோட்டை இருக்கிறதாமே அது நம் செஞ்சி கோட்டை போல் இருக்குமா என்றெல்லாம் ரகுவிடம் கேட்க, சாந்தமூர்த்தி விஞ்ஞானி ஆக வேண்டிய பிள்ளையை விற்பனைப் பிரிவுக்கு மாற்றி இழுத்து விட்டோமோ என்ற கவலையில் ஆழ்ந்தான். சேலம் வந்தவுடன் அந்த பெரியவர்கள் இறங்கிக் கொள்ள நாங்கள் சற்று நிம்மதி அடைந்தோம்.

சிறிது நேரத்தில் போலியோ தாக்கப்பட்டு நடக்க முடியாத மிகவும் அழுக்காக பக்கத்தில் வந்தால் நாற்றமடிக்கும் அந்தச் சிறுவன் ஒரு அழுக்குத் துணியால் தரையை துடைத்துக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு குடலைப் புரட்டியது. ஓரமாக கர்சீப்பால் என் மூக்கைப் பொத்திக் கொண்டு அவனைப் பார்ப்பதை தவிர்த்தேன். சாந்தமூர்த்தி அவனுக்கு ஐந்து ருபாய் கொடுத்தான். நான் அவனிடம் இது அதிகம் என்பது போல பார்த்தேன்.

அவன் இப்போது என்னைப் பார்த்து நான் கடவுள் படத்தில் பூஜா ஆர்யாவிடம் மரண பிச்சை கேட்பது போல காசு காசு என்று கெஞ்சினான். கொடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கும் போது உள்ளே நுழைந்த அந்த பரிசோதகர் ஆவேசமாக அவனைப் பார்த்து “நாயே. உன்னை இங்க எல்லாம் வரகூடாதுன்னு சொல்லியும் திமிரெடுத்து இங்க வரியா? பரதேசி. கொன்னுடுவேன். ஓடிப் போய்டு” என்று கத்தி விட்டு என்னைப் பார்த்து “பாருங்க சார். இந்த நாய்க்கு எதாவது வேணும்னா second seating / unreserved போலாம்ல. சொகுசா AC ரூமுக்கு வந்து பிச்சை எடுக்குது பன்னாடை. அவங்கம்மா இந்த சனியன ரயிலுக்கு பெத்துட்டு ஜாலியா எவன்கூடவோ இருக்கா. இது நம்ம தாலிய அறுக்குது” என்று சகட்டு மேனியில் கெட்ட வார்த்தைகளால் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு திட்டினார். அவரது இன்றைய இலக்கு தவறி விட்டது போலும்.

AC ரூமுக்கு வந்து பிச்சை எடுத்த அந்த மாபெரும் குற்றத்திற்காக தன் சுயமரியாதை இழந்து வசைச் சொற்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் நொந்து சென்றான் அவன். ஈரோடு தாண்டியவுடன் ஒருவன் கையில் DVD களை அடுக்கியபடி “சார். புது படம். புது படம்” என்று கூவியபடி என்னிடம் நீட்டினான். தமிழ் சினிமாக்களை இப்போது எந்த வடிவிலும் பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். கிஷோரும் சாந்தமூர்த்தியும் தலா ஒரு DVD வாங்கிக் கொண்டனர். அந்த நபர் “வணக்கம் சார்” என்றபடி பரிசோதகரிடம் கொஞ்சத் தொடங்கினான்.

சிறு உரையாடலுக்குப் பிறகு “சரி சார். நான் வரேன். இத வச்சிகோங்க” என்றபடி ஒரு புது படத்தின் DVD யை கொடுக்க அவர் தலையைக் குனிந்தபடி யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்டார்.

சில நொடித்துளிகள் கழித்து வெளியே வந்தேன். அங்கே அந்த சிறுவன் உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் விசும்பும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் முதுகை தட்டி “தம்பி” என்றேன். அவன் திடுக்கிட்டு திரும்பி தன் கண்ணீரை துடைத்தான் . “இந்தப்பா வச்சிக்கோ” என்று ஒரு இருபது ருபாய் நோட்டை அவனிடம் கொடுத்தேன். அவன் வாங்கும்போது அந்த நோட்டில் காந்தியின் கண்ணில் ஒரு சொட்டு நீர் இருந்தது .

– அழகிய இளவேனில் ( எ ) நாசா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *