ராயல் டாக்கீஸ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 15,071 
 

நான் கையில் டிராவல் பேக்குடன் ‘ராயல் டாக்கீஸ்’ தியேட்டர் வாசலை நெருங்கியபோது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. தியேட்டர் வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டு இருந்த தேவராஜ் என்னைப் பார்த்தவுடன் வேகமாக வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு, ”வா மகேந்திரா…’ என்றான்.

ராயல் டாக்கீஸ்2

நான் லேசாகச் சிரித்தபடி, ”தம்மு வெச்சிருக்கியா தேவா?’ என்றேன். தேவராஜ் சட்டைப் பாக்கெட்டில் இருந்து கிங்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான்.

”நீயும் கிங்ஸுக்கு மாறிட்டியா?’ என்றேன்.

”கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே…’ என்றபடி தேவராஜ் சிகரெட்டை நீட்ட… நான் சத்தமாகச் சிரித்தேன்.

”வர மாட்டேன்னு நினைச்சேன்…’ என்றபடி தேவராஜ் சிகரெட்டைப் பற்றவைத்தான்.

”வர வேண்டாம்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். அப்புறம் மனசு கேக்கல…’ என்றபடி தியேட்டரை உற்றுப் பார்த்தேன். மனதில் மெள்ள மெள்ள ஒரு பாரம் ஏறுவதை என்னால் தெளிவாக உணரமுடிந்தது. தியேட்டர் வாசலில் பெரிதாக ‘அன்னக்கிளி’ போஸ்டர் ஒட்டி, அதன் மேல் ஒரு பிட் நோட்டீஸில் ‘இன்றே இப்படம் கடைசி’ என்று ஒட்டப்பட்டு இருந்தது.

”என்னடா… ‘அன்னக்கிளி’ போட்டிருக்கீங்க…’ என்றேன்.

”இந்த தியேட்டர் ஆரம்பிச்சப்ப முதல் படம் ‘அன்னக்கிளி’தானாம். அதனால முதலாளி சென்டிமென்ட்டா தியேட்டர மூடறப்பவும் அதே படம் போடலாம்னு எங்கெங்கேயோ சுத்தி இந்த பிரின்ட்ட வாங்கிட்டு வந்தாரு. உள்ள வா…’ என்றபடி எனது பேக்கை வாங்கிக்கொண்டான்.

எனது வாழ்நாளின் ஏதாவது ஒரு பகுதியை மீண்டும் வாழ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், ராயல் டாக்கீஸில் பெரும்பாலான நாட்களைக் கழித்த எனது இளமைக் காலத்தைத்தான் நான் தேர்வு செய்வேன். ராயல் டாக்கீஸ்… எனது இளமைக் காலத்தின் ஒரு மகத்தான அத்தியாயம்.

என்னுடன் பத்தாவது வரை படித்த தேவராஜ், பத்தாவது ஃபெயிலானவுடன், ராயல் டாக்கீஸ் ஆபரேட்டரிடம் உதவியாளனாகச் சேர்ந்தான். நான் கல்லூரி படித்து முடித்து, சென்னைக்கு வேலை கிடைத்துச் செல்லும் வரையில் என் வாழ்நாளின் பாதி நேரத்தை ராயல் டாக்கீஸில்தான் கழித்தேன். தியேட்டர் முதலாளியில் இருந்து ஸ்வீப்பர் வரை அத்தனை பேரும் எனக்கு மிகவும் நெருக்கம்.

ராயல் டாக்கீஸ்

தியேட்டரில் நுழைந்து ஆபரேட்டர் அறைக்குச் செல்லும் படிகளில் ஏறியபடி தேவராஜ், ”என்னடா ரொம்ப டல்லா இருக்க…’ என்றான்.

”இருக்காதாடா? இந்த தியேட்டர்ல நான் எவ்ளோ கூத்தடிச்சிருப்பேன். நீ போன் பண்ணி, இன்னையோட தியேட்டர மூடுறாங்கன்னு சொன்னதுல இருந்து மனசே சரியில்ல. அதான் கடைசி நாளு வந்துடணும்னு லீவு போட்டுட்டு வந்துட்டேன்’ என்றபடி ஆபரேட்டர் ரூமில் நுழைந்தேன். பழைய இரண்டு பெரிய புரொஜெக் டர்களின் பக்கத்திலேயே கண்ணாடியால் தடுத்திருந்த ரூமில் டிஜிட்டல் புரொஜெக்டர் இருந்தது.

சுவரில் சாய்த்துவைக்கப்பட்டு இருந்த எம்ப்ட்டி ஸ்பூல்கள், மூலையில் கிடந்த வேஸ்ட் ஃபிலிம் சுருள்கள் என்று அனைத்தையும் பார்க்கப் பார்க்கத் துக்கம் தொண்டையை அடைத்தது. பேக்கைக் கீழே வைத்த தேவராஜ், ”வா… கீழ தியேட்டருக்குப் போகலாம்’ என்றான்.

ஃபர்ஸ்ட் க்ளாஸ் கேட் வழியாக தியேட்டரினுள் நுழைந்தபோது என் மனம் நெகிழ்ந்துவிட்டது. வேகமாக தேவாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டேன். ”பயமா இருக்கா?’ என்று ரேகாவிடம் கேட்கும் ‘புன்னகை மன்னன்’ கமல், ”செயினத் தாங்க கண்ணத்தான்…’ என்று கார்த்திக்கிடம் சிணுங்கும் ‘வருஷம் 16’ குஷ்பு, ”என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங் கிறியே…’ என்று ஸ்டைலாகக் கூறும் ’24 மணி நேரம்’ சத்யராஜ் என்று எல்லோரும் ஒரே விநாடியில் மனதில் வந்துபோனார்கள். நினைக்க… நினைக்க இந்த தியேட்டரில்தான் எத்தனை சுவாரஸ்யமான சம்பவங்கள்…

”இந்த தியேட்டர்தானடா முதலாளி சாருக்கு உயிரு. எப்படிரா மூட மனசு வந்துச்சு?’ என்றேன்.

”அவருக்குத் துளிகூட இஷ்டமே இல்ல. ஆனா, முதலாளி பையன்தான் ஒத்தக் கால்ல நிக்கிறான். இப்பெல் லாம் தியேட்டர்ல பெருசா வருமானம் ஒண்ணும் கிடையாது. முதலாளி ஆசைக்குத்தான் தியேட்டர் நடந்துட்டு இருக்கு. டவுன் மெயின்ல, இவ்ளோ பெரிய இடத்துல எதுக்குத் தெண்டமா தியேட்டர் நடத்திக்கிட்டு… இடிச்சுட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டலாம்னு முதலாளி பையனுக்கு ஐடியா. பிடிவாதமா முதலாளிகிட்ட பேசி கடைசில சாதிச் சுட்டான்.’

”முதலாளி சார் எத்தனை மணிக்கு வருவாரு?’

”ஒன்பது மணி ஆகும்.’

முதலில் நானும் தேவாவைப் போல் அவரை முதலாளி என்றுதான் கூப்பிட்டுக்கொண்டு இருந் தேன். பிறகு, நான் அவரை ‘முதலாளி சார்’ என்று கூப்பிட ஆரம்பித்ததற்குப் பின்னால் ஒரு திரைப் படம் இருக்கிறது.

‘தளபதி’ படம் ராயல் டாக்கீஸில் ரிலீஸான சமயம் அது. ஏதோ ஒரு பிரச்னையில் தேவாவை முதலாளி கடுமையாகத் திட்டிவிட்டார். தேவா என்னிடம் மிகவும் வருத்தப்பட… அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த நான், தேவாவுடன் சேர்ந்து செமத்தியாகத் தண்ணி அடித்துவிட்டு தியேட்டருக்குச் சென்றோம். நானும் தேவாவும் முதலாளி அறையில் நுழைந்த போது, பணத்தை எண்ணிக்கொண்டு இருந்தார் அவர். எங்களைக் கண்டுகொள்ளாததுபோல் அவர் பணத்தைத் தொடர்ந்து எண்ண… நாங்கள் அவர் முன்பு இருந்த நாற்காலிகளில் அமர்ந் தோம். மூக்கைத் தடவிக்கொண்ட முதலாளி, ”என்ன சரக்குடா… மானிட்டரா? இந்த நாத்தம் நாறுது… என்ன விஷயம்?’ என்றார்.

எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை. ‘தளபதி’ படத்தில் கலெக்டராக இருக் கும் அரவிந்த்சாமி, மம்முட்டியையும் ரஜினியையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தும்போது ரஜினி பேசும் டயலாக் அப்போது மிகவும் ஃபேமஸ். தியேட்டருக்குத் தினமும் வருவதால் எங்களுக்கு எல்லாப் படங்களின் வசனமும் அத்துப்படி.

ரஜினியின் அந்த டயலாக், ”கலெக்டர் சார்… நீங்க எப்பவாவது ஏழையா இருந்திருக்கீங்களா? என்னைக்காவது பட்டினியா இருந்திருக்கீங்களா? பையில நாலணா காசு இல்லாம அலைஞ்சிருக்கீங்களா?’ என்று ஆரம்பிக்கும் அந்த வசனம்.

அதை மனதில் வைத்துக்கொண்டு நான் ரஜினிபோல் மிகவும் சீரியஸாக, ”முதலாளி சார்… நீங்க எப்பவாச்சும் ஆபரேட்டரா இருந்திருக்கீங்களா? பிட்டு படத்துல பிட்டு இல்லன்னு ரௌடிப் பசங்ககிட்ட என்னைக்காச்சும் அடி வாங்கி இருக்கீங்களா? அட்டுப் படத்தை எல்லாம் தினம் நாலு ஷோ மனசுக்குள்ள நொந்தபடி பாத்திருக்கீங்களா? ஆனா, அவ்ளோத்தையும் தேவா பண்ணியிருக்கான். அவனப் போயி திட்டிட்டீங்களே முதலாளி சார்…’ என்று பேச்சை நிறுத்தினேன்.

முதலாளி சிரிப்பை அடக்கிக்கொண்டு, ”ஸ்டூடன்ட் சார்… நீங்க என்னைக்காச்சும் முதலாளியா இருந்திருக்கீங்களா?’ என்று ஆரம்பிக்க… நான் அரண்டுபோய், ”தெய்வமே…’ என்று டேபிளுக்குக் கீழ் தலையைவிட்டு அவர் காலைத் தொட்டுக் கும்பிட… ”எந்திரிடா… எங்கிட்டயே என் தியேட்டர் டயலாக்க விடுறியா? நாங்களும் ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டுத்தானே உக்காந்திருக்கோம்’ என்றார் முதலாளி.

அன்றிலிருந்து நான் அவரை ‘முதலாளி சார்’ என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கும் நான் ஸ்டூடன்ட் சார்தான்.

”ஸ்டூடன்ட் சார்…’ என்று குரல் கேட்க… திரும்பி னேன். முதலாளி சார் தளர்ந்த நடையுடன் வந்துகொண்டு இருந்தார். நான் வேகமாக அவரை நெருங்க… முதலாளி சார் என்னைப் பிரியத்துடன் கட்டி அணைத்துக்கொண்டார்.

இரவு செகண்ட் ஷோ. ராயல் டாக்கீஸின் இறுதிக் காட்சியாக ‘அன்னக்கிளி’ படம்

க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஆபரேட்டர் அறையில், நானும் தேவாவும் தண்ணியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். தேவா அடுத்த பெக் பிராந்தியை பிளாஸ்டிக் க்ளாஸில் ஊற்ற நான், ”மெதுவாக் குடிடா…’ என்றேன்.

”என்னால முடியல மகேந்திரா… பத்தாங்கிளாஸ் ஃபெயிலானப்ப எங்கப்பா, ‘நீ உருப்படவே மாட்டே’னு அடி பின்னி எடுத்தாரு. அழுதுகிட்டே எங்க அண்ணன்கிட்ட ஓடி வந்தேன். அன்னைல இருந்து இங்கதான். இதை விட்டுட்டு எப்படிரா…’ என்று தேவா கூறிக்கொண்டு இருக்கும்போதே ரூமினுள் முதலாளி சார் நுழைய… தேவா வேகமாக டம்ளரை மறைத்தான்.

”மறைக்காத… மறைக்காத… சாப்பிடு’ என்றவர் சட்டென்று தரையில் அமர்ந்தார்.

”முதலாளி…’ என்று தேவா அவசரமாக எழப் பார்க்க, ”உக்காருடா… இனிமே என்ன முதலாளி? எல்லாம் முடிஞ்சுபோச்சு. மனசே சரியில்ல

ஸ்டூடன்ட் சார்… எனக்கும் ஊத்துங்க’ என்று

முதலாளி கூற… நான் உற்சாகத்துடன் ஒரு டம்ளரை அவரிடம் நீட்டினேன். முதலாளி கடகடவென்று ஒரே மூச்சில் குடித்துவிட்டு, மீசையைத் துடைத்துக்கொண்டார். சில நிமிடங்களில் எங்கள் மூவருக்கும் நல்ல போதை ஏறியிருந்தது.

தேவா எழுந்து சதுர ஓட்டை வழியாக திரை யைப் பார்த்துவிட்டு, ”படம் முடியப்போவுது முதலாளி…’ என்று கூற, நாங்களும் எழுந்து திரையைப் பார்த்தோம். எரிந்துகொண்டு இருக்கும் தியேட்டருக்கு முன்பு, சிவகுமாரின் மடியில்படுத்து சுஜாதா உயிரைவிட… திரையில் ‘கண்ணனுக்காகவே வாழ்ந்தாள் ஆண்டாள். காதலனுக்காகவே வாழ்ந்தாள் அன்னம்’ என்ற வரிகளுடன் படம் முடிய… முதலாளியின் கண்கள் கலங்கின. நாங்கள் மெது வாகக் கீழே இறங்கினோம். கும்பல் சோம்பலாக வெளியேறிக்கொண்டு இருந்தது.

”பாத்தியா மகேந்திரா… 20 பேர்கூட இருக்க மாட்டாங்க. இந்தப் படம் வந்தப்ப என்னா கும்பல் தெரியுமா? 1976-ல தியேட்டரைத் திறந் தேன். முதல் படம் ‘அன்னக்கிளி’. இளையராஜா வுக்கு அதான் முதல் படம். அப்ப இந்த ஊர்ல ஃபர்ஸ்ட்டு ரிலீஸ் கிடையாது. நான் துணிஞ்சு இறங்கினேன். படம் ரிலீஸுக்கு முன்னாடி பாட்டெல்லாம் கேட்டேன். பாட்டாலயே அந்தப் படம் ஓடப்போவுதுன்னு மனசு சொல்லுச்சு. தில்லா அட்வான்ஸ் கொடுத்தேன். படம் ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னாடி, நாலு குதிரை வண்டி வாடகைக்கு எடுத்தேன். தெக்க தவுத்தாகுடிலேர்ந்து திருவையாறு வரைக்கும், கிழக்க கைகாட்டிலேர்ந்து ஜெயங்கொண்டம் வரைக்கும் தினம் ரெண்டு, ரெண்டு வண்டி. ஒவ்வொரு கிராமத்துலயும் ஒரு மணி நேரம் நிக்கவெச்சு, ‘அன்னக்கிளி’ பாட்ட மூணு தடவை போடுவேன். தியேட்டர் திறந்தப்ப இங்கருந்து…’ என்றவர் என் தோளில் கைபோட்டு, ”அங்க பாரு… மிளகாய் மண்டி தெரியுதுல்ல… அது வரைக்கும் க்யூ நின்னுச்சு…’ என்றார்.

”அடேங்கப்பா…’

”என்ன அடேங்கப்பா… ‘சகலகலா வல்லவன்’ படத்துக்கு மிளகாய் மண்டி தாண்டி, நிர்மலா காந்தி ஸ்கூல் வரைக்கும் தினம் க்யூ நிக்கும்.’

இப்போது தேவா, ” ‘முரட்டுக் காளை’க்குஎல்லாம் அடிதடி முதலாளி… ஞாபகம் இருக்கா முதலாளி?’ என்றான்.

”என்னடா… இப்படிக் கேட்டுட்ட… முத நாள் போலீஸ் வந்து லத்தி சார்ஜ் பண்ணித்தானே கும்பல் கலைஞ்சுச்சு. அதெல்லாம் ஒரு காலம்டா. இப்ப எல்லாப் படமும் மூணாவது நாளே காத்து வாங்குது’ என்ற முதலாளி தேவாவை நோக்கி, ”டேய்… நீ மிச்ச சரக்க எடுத்துட்டு வா. தியேட்டருக்குள்ள உக்காந்து அடிப்போம்…’ என்றார்.

ஃபர்ஸ்ட் க்ளாஸுக்கும் செகண்ட் க்ளாஸுக் கும் நடுவே இருந்த இடைவெளியில் மூவரும் வட்டமாக அமர்ந்துகொண்டோம். துயரத்தில் நாங்கள் அடுத்தடுத்த ரவுண்டுகளை வேகமாக முடிக்க… போதை உச்சத்தை எட்டியது. முதலாளி தள்ளாடியபடி எழுந்து திரையை நோக்கி நடந்தார். பின்னால் நடந்த எனக்கும் நடை தடுமாறியது. மூவரும் திரை முன் இருந்த மேடையில் ஏறி, வெறிச்சோடிக் கிடந்த நாற்காலிகளைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டோம்.

”இந்த மேடை இருக்கே… உனக்கு விறகுக் கடை வெங்கடேசன் தெரியுமா?’ என்றார் முதலாளி என்னிடம்.

”தெரியாதே…’

”டேய்… நம்ம நிர்மலா அப்பாடா…’ என்றான் தேவா.

”இப்படிப் புரியற மாதிரி சொன்னாத்தானே தெரியும்’ என்ற என் தோளில் செல்லமாகத் தட்டிய முதலாளி, ”வெங்கடேசன் எம்.ஜி.ஆர். வெறியன்… 84 சட்டசபைத் தேர்தலப்ப எம்.ஜி.ஆர். அமெரிக்கால சீரியஸா இருந்தாரு. அப்ப தினம் நியூஸ் ரீல் ஒண்ணு போடுவோம். அதுல முதல்ல ‘இதயக்கனி’ படத்துல இருந்து ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற…’ பாட்டு ஓடும். அப்புறம் எம்.ஜி.ஆர். ப்ரூக்ளின் ஆஸ்பத்திரில பேப்பர் படிக்கிறது… டாக்டரோட பேசறத எல்லாம் காமிப்பாங்க… அப்புறம் ‘ஒளி விளக்கு’ படத்துல இருந்து ஒரு பாட்டு… ‘இறைவா! உன் மாளிகையில்…’னு எம்.ஜி.ஆர். உயிரக் காப்பாத்த வேண்டி சௌகார் ஜானகி பாடற பாட்டு. அந்த நியூஸ் ரீல பாக்குறதுக்குன்னே வெங்கடேசன் தினம் தியேட்டருக்கு வருவான். வந்து இந்த மேடைல ஏறிப் படுத்துக்கிட்டு அழுதுக்கிட்டே பாப்பான். நியூஸ் ரீல் முடிஞ்சவுடனே எந்திரிச்சுப் போயிடுவான்’ என்றார்.

சில விநாடிகள் அமைதியாக மேடையைப் பார்த்த முதலாளி, மீண்டும் ஒரு மடக்கு விழுங்கிவிட்டு, ”இந்த மேடைல சிவாஜி ஏறியிருக்காரு தெரியுமா? ‘திரிசூலம்’ படம் இங்க 50 நாள் ஓடுச்சு. இங்க 50 நாள்னா, மெட்ராஸ்ல 200 நாள் ஓடினதுக்குச் சமம். அப்ப பொதுவா 100 நாள் ஓடுச்சுன்னா, பெரிய ஊர்ல இருக்கிற தியேட்டருக்கு அந்தப் படத்துல நடிச்ச நடிகருங்கள அழைச்சுட்டு வருவாங்க. நான் 50-வது நாளைக்கே ஒரு காங்கிரஸ்காரரப் பிடிச்சு, இந்த சின்ன ஊருக்கு சிவாஜிய அழைச்சுட்டு வந்தேன். கூட கே.ஆர்.விஜயா எல்லாம் வந்தாங்க. ‘திரிசூலம்’ என்னா படம் தெரியுமா? அதுல சிவாஜி, ”உன்னைப் பிரிஞ்சிருந்த இத்தனை வருஷமும் ஒவ்வொரு நாளும் இந்த மனசு சுமதி… சுமதினு உன் பேரத்தாம்மா சொல்லிட்டிருந்துச்சுன்னு’ போன்ல சொல்லி அழுவாரு பாரு… தியேட்டரே அழும். மகா கலைஞன்டா அவன். சியர்ஸ் டு சிவாஜி’ என்று முதலாளி அடுத்த ரவுண்டை அடிக்க… நாங்கள் மூவரும் கொஞ்சம் கொஞ்ச மாக வெளி உலகை மறந்து ஒரு பித்த நிலையை அடைந்துகொண்டு இருந்தோம்.

”கடைசியா, ‘தேவர் மகன்’லகூட சூப்பரா நடிச்சிருப்பாரு முதலாளி’ என்றேன் நான்.

”ஆமாம்… அதுவும் ஒரு சீன் கமலும் சிவாஜியும் டயலாக் பேசுவாங்க பாரு… அடடடடா… உனக்கு அந்த ஸீன் டயலாக் ஞாபகம் இருக்கா?’

”என்ன முதலாளி… தினம் ரெண்டு ஷோ, மூணு வாரமும் பார்த்தேன். ஞாபகம் இருக்காதா?’

”சபாஷ்டா… இப்ப நான்தான் சிவாஜி. நீ கமல்… நாம பேசுவோமா?’

நான் நாக்கு குழற, ”இவன் முதலாளி…’ என்று தேவாவைக் காட்டினேன்.

”இவன் சங்கிலி முருகன். ஆரம்பிப்போமா? எங்கருந்து ஆரம்பிப்போம்?

”சிவாஜி, கமல் சட்டையப் பிடிச்சிக் கோபமாப் பேசுவாருல்ல. அங்கருந்து ஆரம்பிப்போம்.’

”ம்… நீயே ஆரம்பி.’

நான் தள்ளாடிய நடையைச் சமாளித்துக்கொண்டு, ”என்னை விட்டுருங்கய்யா… நான் இந்த ஊர விட்டுப் போறன்ய்யா…’ என்று கூறியவுடன் முதலாளி சிவாஜி போல் வேகமாக என் சட்டையை இறுகப் பிடித்து, ”தாடியும் மீசையும் வெச்சுக்கிட்டு, நெஞ்சு நிமிந்து அய்யாவப் பேசுற வயசுல்ல?’ என்றார்.

”இல்லய்யா… என்னை விட்ருங்கய்யா. நான் போறன்யா…’

”போய்ட்டு வர்றன்னு சொல்லுங்க. அந்த நம்பிக்கைதான் வீட்டுல உள்ளவங்களுக்கு முக்கியம். த… எங்கய்யா கணக்கப்பிள்ளை? டேய்… யார்றாவன்? கணக்கப்பிள்ளை எங்கடா?’ என்று முதலாளி பின்னால் திரும்பிப் பார்க்க, தேவா ஓடி வந்து பணிவாக ”அய்யா’ என்றான்.

”இங்கதான் இருக்கியா? அய்யா… யாவாரமா வெளியூர் போறாகளாம். ரொம்ப நாள் தங்க மாட்டாகளாம். அவருக்கு டிக்கெட் போடு.’

”பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா?’ என்று தேவா கேட்க… முதலாளி, ”என்னப்பு… பத்து நாள் தங்க மாட்டீகளா?’ என்று கேட்டு விட்டு என்னைக் கை காட்டி அழைக்க… நான் முன்னே நகர்ந்து முதலாளி முன்னால் முட்டி போட்டு நின்றவுடன், முதலாளி அச்சு அசலாக சிவாஜி போல், ”பத்து நாள் இருக்க மாட்டியளா? என் மயன பக்கத்துலயே வெச்சுப் பாக்கணுங்கிற ஆசை எனக்கு இருக்காதா? நீ ஊரெல்லாம் சுத்திட்டு வரும்போது அய்யா போய்ட்டன்னா என்ன பண்ணுவீக?’ என்று தொண்டை அடைக்கப் பேச… முதலாளி யின் நடிப்பில் அசந்துபோய், நான் என் டயலாக் கைக் கோட்டைவிட்டேன்.

”போதுங்க முதலாளி…’ என்ற நான் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

”ரொம்ப சோகமாயிடுச்சுல்ல. இப்ப நீங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் லவ் சீன் பண்ணுங்க. நான் கிழவன்… ஓரமா உக்காந்துக்கிறேன்’ என்று தரையில் அமர்ந்துகொண்டார்.

நான் யோசித்து, ”கடலோரக் கவிதைகள் படத்துல அடி ஆத்தாடி பாட்டுக்கு ஒரு லீட் சீன் வரும்ல அதைப் பண்ணுவோம். தேவா… நீ சத்யராஜ். நான் ரேகா. ஓ.கே-வா?’

”ம்… ஓ.கே.’

நான் ரேகா போல் கைகளைக் கட்டிக்கொண்டு, ”ஏன் தாஸ்… இதே மாதிரி ஒரு ஆடு திசைமாறி உன் கைல கிடைச்சா என்ன பண்ணுவ?’ என்றேன்.

”பிரியாணிதான். பட்டை கிராம்புலாம் போட்டு வெளாசிட மாட்டேன்’ என்றான் தேவா.

”அதுவே ஜென்னியா இருந்தா?’

”டீச்சர்…’ என்று தேவா என்னை அதிர்ச்சி யுடன் பார்க்க நான், ”அதுவே நானா இருந்தா…’ என்று கேட்க… முதலாளி சரியாக ”அடி ஆத்தாடி…’ என்று பாடலை ஆரம்பிக்க… நான் ”முதலாளி… சூப்பர்…’ என்றேன். சிரித்தபடி திரையைப் பார்த்த முதலாளி, ”ஏதோ ஒரு படத்துக்கு ஸ்க்ரீனுக்குச் சூடம் காட்டி, ஸ்க்ரீனைக் கொளுத்திப்புட்டானுங்களே… அது என்ன படம்டா?’ என்றார்.

”அம்மன் கோயில் கிழக்காலே…’ என்றான் தேவா.

”ம்… அதுல ஒரு சூப்பர் பாட்டு வருமே… ம்… சின்ன மணிக் குயிலே… மகேந்திரா… நீ பாடுடா…’ என்று முதலாளி கூறியவுடன் நான்

”சின்ன மணிக் குயிலே…

மெல்ல வரும் மயிலே…

எங்கே என் ஜோடி?

நான் போறேன் தேடி…

இங்கே என் ஜோடி இல்லாம

கேட்டாக்கா பதிலும் சொல்லாம

குக்கூவெனக்

கூவுவதேனடி?

கண்மணி… கண்மணி…” என்று பாட, முதலாளி எழுந்து லேசாக இடுப்பை ஆட்டி ஆட… நான், ”ஆ… முதலாளி…’ என்று பாய்ந்து அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன்.

”வேற ஏதாச்சும் நல்லா டப்பாங்குத்தாப் பாடு’ என்றார் முதலாளி.

”ஏய் ஆத்தா… ஆத்தோரமா வாரியா?

நான் பாத்தா… பாக்காமலே போறியா?”

முதலாளி வேகமாக ஆட… நான் பாடல்களை மாற்றிக்கொண்டே இருந்தேன்.

”கட்டை வண்டி… கட்டை வண்டி

காப்பாத்த வந்த வண்டி…”

”பொதுவாக என் மனசு தங்கம்

ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’

”ஆட்டமா… தேரோட்டமா?” என்று பாட்டு மாற்றி பாட்டுப் பாடி நாங்கள் மூவரும் அரை மணி நேரம் சேர்ந்தாற் போல் ஆடிவிட்டு களைத்துப் போய்ப் படுத்தோம். முதலாளி கண்களை மூடியபடி புன்னகையுடன், ”லைஃபுன்னா… அதான்டா லைஃபு’ என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருந்தார்.

மறுநாள் காலை ராயல் டாக்கீஸ் மதில்சுவரை புல்டோஸர் இடித்தபோது, என் மனதின் ஞாபகங்களை யாரோ அறுப்பதுபோல் இருந்தது. என் தோளை இறுகப் பிடித்து அழுத்திய தேவா, ”மகேந்திரா… நம்ம இங்க இருக்க வேண்டாம்டா… வாடா…’ என்று கூற… நான் அவனுடன் திரும்பியபோதுதான் கவனித்தேன்… முதலாளி எங்களுக்கு முன்பே புறப்பட்டு தொலைவில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *