ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,850 
 

நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து அலுத்துச் சலித்துவிட்டது. முன்பெல்லாம் நாள் தவறாமல் மகன் வீட்டுக்குச் செல்கிறவன் இப்போது இந்த செக்கிங் தொல்லையால் சனிக்கிழமை மட்டும்தான் வருகிறேன்.

வீட்டுக்குப் போனபோது துளசி அதுதான் என் நாலு வயது சின்னப் பேத்தி தெருவில் ‘அவனோடு’ சிரித்துக் கதைத்துக் கொண்டு நின்றாள். திடுக்கிட்டேன். என்னைத் தெருமுனையில் கண்டவுடனேயே, “தாத்தா,தாத்தா…” என்று ஓடிவந்தாள். தட்டுத் தடுமாறி சைக்கிளை விட்டுறங்கி அவள் கையைப் பிடித்துக் கூட்டி வந்தேன். ‘அவன்’ என்னைப் பார்த்துச் சிரித்தான். சினேகபூர்வமாகத்தான். நான் கிட்டப்போக ‘சிங்கள புலுவந்த’ என்றான். துளசி சிரிக்காமல் ‘சிங்கள
புலுவந்த’ என்று முகத்தைக் கேள்வியாக்கி அபிநயம் பிடித்துக் கேட்டாள். கொஞ்சம் தயக்கத்துடனிருந்த நான் இந்தச் சின்னன் அவனோடு இவ்வளவு கொஞ்சும்போது நான் ஏன் பயப்படுவான் என நினைத்து, ‘ஒவ்’ என்றேன். அவன் ஒரு ஏக்கத்தோடு என்னருகே வந்தான்.

“இந்தப் பிள்ளையைப் பாத்தால் என்ரை அக்கா பிள்ளையைப் போலைக் கிடக்கு…” என்றான்.

“உமக்கு அக்கா இருக்கா…?”

“அக்கா மட்டுமில்ல. இன்னும் ரெண்டு தம்பிகள். அக்காண்டை பிள்ளை பாடினால் தேனா இனிக்கும்…”

அவன் சொல்ல துளசி ஏதோ வாயெடுத்து சிங்களத்தில் பாடினாள். அவன் சொல்லிக் கொடுத்திருக்க வேணும். அவள் பாடி முடித்துவிட்டு என்னைப் பார்த்துச் சொன்னாள்.

“தாத்தா இந்த அங்கிளைப் பாத்தால் எனக்கு ரங்கன் மாமான்டை ஞாபகம் வரூது தாத்தா…”

நான் துணுக்குற்றேன்.

ரங்கநாதன்..!அங்காலை மானிப்பாய் பக்கம் உலவுறான்… யாரோ காதுக்குள் ரகசியமாய் கதைத்தது உறுத்தியது. எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. ரங்கனைப் பற்றி இவனிடம் துளசி ஏதும் உளறிவிட்டால்…

உள்ளேயிருந்து என்னைக் கண்டுவிட்ட என் மருமகள் கூப்பிட்டாள்.

“மாமா துளசியைக் கூட்டிக் கொண்டு வாங்கோ…”

“துளசி…வா…” என்று கூட்டிக்கொண்டே வந்தேன். அவன் சொன்னான்.

“நான் காவலிருக்கிறன் வரவேணும் தாத்தா…”

துளசி திரும்பித் திரும்பிச் சிரித்துக்கொண்டே வந்தாள். கையை மடக்கி விரித்து ஏதோ சொன்னாள்.

“என்ன?” என்றேன்.

“எக்காய்…

தெக்காய்…

துனாய்…

ஹத்தறாய்…

பஹாய்…”

ஓவ்வொன்றாய் சொல்லிக் காட்டிவிட்டு எனக்கேதோ புரியாத மந்திரவித்தையை தான் செய்து காட்டிவிட்டது போல, கண்களில் சிரிப்பைக் காட்டினாள்.

“ஆர் சொல்லித் தந்தது…”

“பெரேரா அங்கிள்…”

என் திடுக்கிடல் முடியமுதல் மருமகள் முறையிட்டாள்.

“எனக்கு பயமாயிருக்கு மாமா. வீட்டுக்கு முன்னாலையே ‘சென்றி’ யாப் போச்சு. இதுவும் நெடுக ரோட்டிலை வேடிக்கை பாக்குது. இந்த ஆமியும் நல்லா பழகுறான். இவரும் கண்டும், காணாமலும் விட்டுடுறார். எனக்கெண்டால் பயமாக் கிடக்கு. இது சொன்னாலும் கேக்குதில்லை.”

துளசி சிணுங்கியபடி நழுவி விட்டாள். மகனைப் பார்த்து விசாரித்தேன்.

“ஏன்டாப்பா, குழந்தைப் பிள்ளையளை உவங்களுக்குக் கிட்ட விடாதை…”

சங்கரன் சொன்னான். “ஏதோ பெரேரா நல்லவன் எண்டுதான் சனம் சொல்லுது…”

நான் ஒன்றும் பேசவில்லை.

மத்தியானம் சாப்பிட்டு விட்டு அயர்ந்த போது முற்றத்தில் மெல்லத் துளசி இறங்கினாள்.

“துளசி எங்கை போறாய்…”

என் சத்தத்தால் மிரண்ட அவள் திரும்பிப் பார்த்து “அங்கிளிட்டைப் போறன்…” என்றாள். அங்கே பார்த்தேன். அவன் கேற்றுக்கு வெளியே நின்றபடி இங்கே பார்த்தான். குழந்தை வருகிறதா என அவன் விழிகளில் ஒரு எதிர்பார்ப்பா…?

நான் கொஞ்சம் தயங்கினேன். ஒரு குடுகுடு கிழவன் நான். வெண்பஞ்சு நரைத்தாடி. மானிப்பாயில் ஒரு சின்னக் கொட்டிலில் பூசை செய்து கொண்டு வசிப்பவன். பிளளைகள் எல்லாரும் வெளிநாடு போய்விட்டார்கள்.என் கடைசிப்பிள்ளை மட்டும், கடைசிவரை இங்கே தான் வாழ்வதென்று இருக்கிறான். மானிப்பாயிலிருந்து சனிக்கிழமைகளில் இங்கு வந்து தங்கிவிட்டுப் போவது என் வாடிக்கை. முன்பென்றால் தினம் இங்கு வந்து போவேன். இப்ப அந்தத் தட்டா தெருச் சந்தியை நெடுகக் காத்திருந்து கடக்க எனக்கு உடம்புக்கு ஏலாது. ‘ஜொப் காட்’டும், ‘கிளினிக் காட்’டும் இல்லாமல் வெயிலிலை காய்ந்து ஒவ்வொரு நாளும் போக ஏலுமோ…?

புத்தளத்தில் வேலை செய்த அனுபவம். சிங்களம் நல்லாவே தெரியும். ஆனால் யாரோடையும் பேசுகிறதில்லை. பேச ஆள் இருந்தாத்தானே.

ஆமிகளை றோட்டில் கடக்கும் போது இடையிடையே இரண்டொரு சிங்களச் சொல் வரும். மற்றபடி சிங்களமே முழுசாக் கதைச்சு நாளாச்சு.

நான் கேற்றைத் திரும்பிப் பார்க்கிறேன். துளசி அவனோடு விளையாடிக் கொண்டிருக்கின்றாள். அவன் அவளைத் தூக்கி எதையோ காட்டி குழந்தைக்குச் சிரிப்பூட்டுகிறான். ஒரு புறம் துவக்கும், மறுபுறம் குழந்தையுமாய்…

எனக்கு ரங்கன்தான் அப்படி நிற்கிறானோ என்று தோன்றியது.

ரங்கநாதன் போராளி. போன வருஷம் ஆமி வரமுதல் கூட அவன் அங்குதான் இருந்தான்.

பக்கத்து வீடு வெளிநாட்டாருடையது. அதை இயக்கம் எடுத்தது. அதில் இருந்த இயக்கத்தாரோடு துளசி பழகத்துவங்கியபோது அவளுக்கு இரண்டு, இரண்டரை வயதுதான் இருக்கும். அவங்களுக்கிடையிலே அவள் வளர்ந்திருக்கிறாள். அவங்களிலும் அந்த ரங்கனுக்கு அவளிலை நல்ல விருப்பம். ஆனா, ஆவன்னா சொல்லித் தந்ததும் அவன்தான். பெரிய மரங்களில் கயிறு கட்டி ஊஞ்சலாக்கி எட்டி எட்டி குரங்கு போல் தாவி அவளுக்கு வேடிக்கை காட்டுவான்.

ஒரே வேடிக்கையும், கும்மாளமுமா இருந்த அவனின்டை வாழ்க்கைக்குள்ளை இருந்ததெல்லாம் சோகம்தான்.

“இந்தத் துளசியைப் போலத்தான் எனக்கு ஒரு தங்கச்சி இருந்தாள். அவள் ஷெல்பட்டுச் சிதறின பிறகுதான் அப்பு நான் இயக்கத்திலை சேர்ந்தனான்…”

அவன் சொல்லுறதைக் கேட்க அழுகை வரும்.

“ஓ. எல் வரைக்கும் படிச்சனான். இன்னும் படிக்க ஆசைதான். நான் படிச்சுக் கொண்டிருக்கேக்கையே ஒரு ஷெல் விழுந்து நானும் சாகலாம். அப்பிடி ஏன் அவமாச் சாவான்…

“அம்மா, நான் போற நேரமெல்லாம் என்னைத் திருப்பி வரச் சொல்லி அழுவா. பாக்க பாவமாத்தான் கிடக்கும். இப்படித்தானை எல்லா அம்மாமாரும் அழுவீனை, இதைப் பாத்தால் முடியுமே…”

அக்காவிண்டை கலியாண வீட்டுக்குப் போகேக்கை அம்மா ஒரேயடியாய் அழுது மறிச்சுப் போட்டா. அப்ப நான் இன்னும் ரெண்டு வருசத்தாலை வாறன் எண்டிட்டு வந்தனான். நான் இயக்கத்திலை சேர்ந்து அஞ்சி வருசமாச்சு தெரியுமோ அப்பு…”

கேள்வியாய் கேட்கையில் அவன் முகம் பொலிவுறும். அந்தப் பொலிவின் காரணம் அடுத்த செய்தியில் அடங்கியிருக்கும்.

“மெடிக்சிலை இருக்கிற சத்தியா. அவளிலை எனக்கு விருப்பம். அவளுக்கும்தான். இன்னும் ரெண்டு வருசத்தாலை இயக்கத்தாலை விலகி ஏதேனும் தொழில் தேடி பிறகு அவளைக் கலியாணங் கட்டிப் போடுவன்…” உறுதியாய்ச் சொல்வான்.

எனக்கு வியப்பாயிருக்கும். அவன் சத்தியாவைப் பற்றிச் சொல்வான்.

“கோவில் சிலை மாதிரி அவள் நல்ல வடிவு. எனக்காக அவள் அரசமரத்துப் பிள்ளையாருக்கு செவ்வரத்தம் பூ வைச்சுக் கும்பிடுறாள். அவள் வைக்கின்ற ஒற்றை செவ்வரத்தை எங்களைச் சேர்த்து வைக்கும்.”

அவன் ஒளிர்ந்த பார்வையோடு சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது.

அந்த ரங்கன் இயக்கம் போனபோது போனவன்தான். போகும்போது அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

பரபரப்பான ஒரு காலகட்டத்தில் துளசியைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு என்னிடம் வந்தான்.

“அப்பு, இன்னும் ரெண்டு வருசத்தாலை இயக்கத்தை விட்டு விலகலாமெண்டு நினைச்சன். இனிமேல் அது ஏலாது போலை கிடக்கு. இந்த இக்கட்டான காலகட்டத்திலை நான் இனி என்னைப்பற்றி யோசிக்கக் கூடாதெண்டு நினைக்கிறன்…”

அவன் என்னிடம் சொல்லிவிட்டுத் துளசியைப் பார்த்தான்.

“துளசி இனிமேல் எப்ப உன்னைப் பாக்க வாறனோ தெரியா. ஆனால் காலம் கூடினால் கட்டாயமா வருவன்… வருமட்டும் நல்ல பிள்ளையா இருக்க வேணும் என்ன…?

“அப்பு நான் போட்டு வாறன்;…”

“துளசிக் குட்டி ரற்றா…”

அவன் போய் விட்டான்.

அந்த ரங்கன்! துளசிக்கு அன்பு மாமாவாயிருந்தான் ‘ஆனா ஆவன்னா’ சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனவன்

துளசி அவனை மறந்து போனாளா…? அப்பகூட ரங்கன் அவளிடம் யுத்தத்தைப் பற்றி விலாவாரியாக சொன்னதில்லை.

“நாங்கள்தான் போராடுறம். எங்கட பிள்ளையள் போராடக்கூடாது. அதுக்கு நாங்கள் விடமாட்டம்…” என்பான்.

ஆதனால் அவளுக்கு, யார், யாரோடு சண்டை பிடிக்கப் போகின்றார்கள் என்பதெல்லாம் தெரியாது. அடிபாட்டுக்குப் போகிறார்கள் என்றுதான் தெரியும். இப்போதும் ரங்கன் மாமா அடிபாட்டுக்குப் போய் விட்டார் என்றும் அவர் வழக்கம் போலவே திரும்பி வந்து விடுவார் என்றும் காத்திருக்கும் துளசிக்கு புதிசாய் ஒரு அங்கிள் கிடைத்து விட்டாரா…?

நான் மெல்ல எழுந்து கேற்றை நோக்கி சென்றேன். அவன் மீண்டும் புன்னகைத்தான்.

“மகே நம, ரஞ்சித் பெரேரா…” என்றான்.

இதற்கு மேலும், பேசாமல் நிற்கப் பிடிக்காமல் “இவள் என் பேத்தி…” என்றேன்.

“எனக்கும் இவளைப் போல ஒருத்தி. என் அக்கா மகள்…”

இவனும் ரங்கனைப் போல ஒருத்தன்தானா…?

“வெறும் காட்டுக்கை வந்த மாதிரிக் கிடக்கு. மனிசர் ஒருதருமே கதைக்கினமில்லை. நாங்களும் மனிசரில்லையே…”

என் மனதிற்குள் ஏதோ கரைந்தது.

“சிங்களம் தெரியாமலிருக்கும்…” சமாளித்தேன்.

“உங்களுக்கும் சிங்களம் தெரியாமலோ இருக்கு…” அவன் அர்த்தத்தோடு சிரித்தான்.

நான் வெறும் வார்த்தைகளால் ஈடுகட்டும் முன் அவன் சொன்னான்.

“உங்களுக்கு பயம். எங்களிலை பயம். எங்களோடை கதைச்சால் ‘அவங்கள்’ உங்களைச் சும்மா விடாங்களெண்டு பயம்…”

“நாங்கள் அவங்களோடை கதைச்சால் மட்டும் நீங்கள் சும்மா விட்டிடுவீங்களோ…?

நான் திரும்பிக் கேட்டேன்.

“ஹீம்…” அவன் பெருமூச்சு விட்டான்.

“உண்மைதான். ஆராவது தமிழிலை கதைச்சுச் சிரிக்கிறதைக் கண்டால் எங்களிலை சில பேருக்குப் பிடிக்காது. ஏதோ தங்களைப் பற்றித்தான் சிரிச்சுக் கதைக்கீனையெண்டு… ஆனால் வீட்டு வறுமையைப் போக்கவெண்டு இதிலை சேர்ந்து மனசுக்கு சந்தோஷமா ஒரு குழந்தையோடை கூடக் கதைக்க முடியேல்லை…”

அவன் பேச்சின் முதிர்ச்சி மனசைத் தொடக் கேட்டேன். “தம்பி எத்தினை வகுப்புப் படிச்சனீர்…”

“பத்தாம் வகுப்புப் படிச்சன். அங்காலை குடும்பக் கஷ்டம். சோதினை எடுக்கக்கூட இல்லை. ஆமிலை சேர்ந்திட்டன். குடும்பமா அப்பா, அம்மா, பிள்ளையள் எண்டு போறவையைப் பாத்து நான் ஏங்கிறன். ஒருதருமே புரிஞ்சு கொள்ளுற மாதிரி இல்லை. இப்பிடி எவ்வளவு காலத்துக்குத்தான் பிரிஞ்சிருக்கிறது. ஊரிலையே இருக்க வேணும். அதோடை ஊருக்கு இனி நாங்கள் உயிரோடை திரும்புவமோ…இல்லையோ…?”

சட்டென்று என்னுள் ஏதோ உடைந்தது. ரங்கன் சொல்லிய வார்த்தைகள். அந்த அடிபாட்டுக்குப் போக முதல் சொன்னான்.

“அப்பு, இனித் திரும்பி வாறமோ இல்லையோ, எங்கட சைசிலை சவப்பெட்டியும் வாங்கி அடுக்கிப் போட்டுத்தான் போறம்…” என்று சொன்னவன் அந்த அடிபாட்டில் உயிர் தப்பி வந்து விட்டான். இனி எப்பவோ…?

நிலை குத்தியிருந்த பார்வையை அவன் திருப்பினான்.

“இப்பவே ஒருதன் வந்து என்னோடை கதைச்சிட்டு ஒரு கத்தியாலை குத்திப்போட்டு ஓடலாம். எந்த இடத்திலையும் யமன் இருக்கலாம். ஆனா. அன்பு என்ட ஒண்டைத் தேடுறன் நான்.அவன் கத்தியாலை குத்துறவனா இல்லாமல் இதயத்துக்குச் சாந்தியாய் கதைக்க மாட்டானோவெண்டு ஏங்குறன். நான் நினைக்கிறன். அவங்களிலையும் ஒருத்தன் இப்படி நினைப்பானோ என்னவோ…?”

“சில சில இடங்களிலை உங்கட ஆக்கள் தானை முறை தவறி நடந்து…”

“ஒத்துக் கொள்ளுறன். நான் ஒருத்தன் போலை எல்லாரும் இருப்பீனையெண்டு எதிர்பாக்கேலாதான். ஆனால் என் போலை இருக்கிற ஆமிக்காகவும், இயக்ககாரருக்காகவும் இந்தச் சண்டை ஒரு சமாதானத்தோடை முடிஞ்சால் எவ்வளவு நல்லது…”

நான் மௌனமாக நின்றேன்.

அவன் மேலும் தொடர்ந்தான். “எங்களுக்கும் ஊருக்குத் திரும்ப வேணும். குடும்பத்தோடை சுகமா இருக்க வேணும். கலியாணங் கட்ட வேணும் எண்டெல்லாம் ஆசையில்லையே. எனக்காகவும்தான் ஊரிலை ஒருத்தி காத்திருக்கிறாள். அடுத்த லீவிலை ஊருக்கு போகேக்கை என்ரை கலியாணத்தை முடிக்கிறதா வீட்டிலை சொன்னவை…”

“ஆர் அவ? என்ன செய்யிறா…?”

“சொந்தக்காரிதான். மோன்ரிசோரி டீச்சரா இருக்கிறா. பேர் நந்தாவதி…” சட்டென்று நிறுத்தி விட்டுக் கேட்டான்.

“தாத்தா நயினாதீவுக்குப் போறீங்களோ…?”

“ஏன்…?” என்றேன்.

“போனால் எனக்கொரு நூல் கொண்டு வாங்கோ…” என்று சொன்னவனது மணிக்கட்டைப் பார்த்தேன். அவன் கையில் இரண்டு மூன்று நூல் முடிச்சு. இதேபோல்தான் ரங்கனும் தாய் முடிந்து விட்டதாய்ச் சொல்லி நூல் கட்டியிருந்தான்.

“இந்த நூல் எங்காலை…”

“இதுவும் நயினாதீவு நூல்தான். வேறை ஆக்களிட்டை வாங்கின்னான். நீங்கள் கொண்டு வந்தால் நந்தாவதிக்கும் கட்டி விடுவன்…” என்றவன் பிறகு சொன்னான்.

“அவள் இதெல்லாம் கட்டுறாளோ தெரியா…அவளுக்குப் புத்தரிலைதான் நம்பிக்கை. நெடுகலும் நித்ய கல்யாணிப் பூ அடுக்கிக் கும்பிடுறவள். புத்தர் எங்களைச் சேர்த்து வைப்பாரோ…?”

“துளசிக்கும் ஒரு நூல் வாங்கிக் கட்டுங்கோ. இதிலை எங்களுக்கு எறியிற குண்டு தற்செயலா அவளுக்கும் படக் கூடாதெல்லோ” என்றபடி அவன் துளசியைத் தூக்க அந்த அன்பில் துளசி மட்டுமில்லை, நான்கூட நனைந்தேன்.

அதன் பின்பு அவன் தன் ‘காம்பி’ற்குப் போய்விட்டான். நானும் மானிப்பாய் போய்விட்டேன்.

பிறகொருநாள் மானிப்பாய் சுற்றி வளைக்கப்பட்டது. இராணுவம் வந்த வாகனத்திற்கு
நாலைந்து பேர் ஏதோ எறிந்து விட்டு ஓடியபோது அவர்கள் திரும்பிச் சுட்டார்கள். கொஞ்ச நேரம் ஒரே அமளிதுமளியாய் இருந்தது. பின்னர் இராணுவம் போய்விட்டது.

கொஞ்ச நேரத்தில் புதினமளப்பதற்காக வந்த கந்தப்பிள்ளை “அந்த ரங்கனையெல்லோ பெடியள் தூக்கிக் கொண்டு ஓடுறாங்கள். ரங்கன் செத்துப் போனானாம். றோட்டெல்லாம் ஒரே ரத்தம்…”

அதற்குப் பிறகு அவர் சொன்னதொன்றும் என் காதில் ஏறவில்லை. எல்லாமே மரத்த உணர்வு எனக்கு. உடனே துளசியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. தட்டாதெருவைத் தாண்டுவது அன்று லேசாக இருக்கவில்லை.

என் மனத்தின் விரைவாலோ அல்லது அன்றைய சண்டையின் காரணமாகவோ வெகு ஆறுதலாகத்தான் மகன் வீட்டை அடைய முடிந்தது.

துளசி ரங்கன் மாமா வருவார், வருவார் என்று காத்திருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது? நான் ரங்கனுக்காக கலங்கியபடி, வீட்டை அடைந்தபோது, வாசலில் இன்னொருவன் முரட்டுத்தனமாக முகத்தோடு நின்றான். பெரேரா எங்கே…? எனக்கேனோ ரங்கனுக்குப் பதிலாக அவனையாவது பார்க்க வேண்டும் போலிருந்தது. உள்ளே துளசி விளையாடிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் சொன்னாள்.

“பெரேரா அங்கிளும், ரங்கன் மாமா மாதிரி அடிபாட்டுக்குப் போட்டாராம் தாத்தா. ரெண்டு பேருக்கும் எப்படி வெற்றி வரோணும்” ரெண்டு பேருக்கும் எப்படி வெற்றி வரும்..?

சங்கரன் அப்பால் கூட்டிப் போய் ரகசியமாய்ச் சொன்னான்.

“மானிப்பாயிலை பெரேரா செத்துப் போனானாம். பெரியாஸ்பத்திரீலை ‘பொடி’ போட்டுக் கிடக்காம். உங்களுக்குத் தெரியாதேப்பா.”

என் மனதில் இரண்டாவது இடி.

துளசியைப் பார்க்கிறேன்.

பூக்களை ஆய்ந்து வைத்திருக்கிறாள் எதுவுமே அறியாமல் சிரிக்கும் கண்களோடு…

எக்காய்…தெக்காய்…ஒண்டு, ரெண்டு,

துனாய்…ஹத்தறாய்…மூண்டு, நாலு…

மல்லிகைகளையும், காசித்தும்பைகளையும் மணக்க, மணக்க அடுக்கிக் கொண்டிருக்கும் இவளுக்குத் தெரிந்தால்…

என் துளசிக் கண்ணே! ஆனா ஆவன்னாவும், ஒண்டு, ரெண்டுமாய் உனக்குத் தமிழ் சொல்லித் தந்த உன் ரங்கன் மாமா…எக்காய், தெக்காய் தொடங்கி சிங்களப் பாட்டு வரை பாடவைத்த உன் பெரேரா அங்கிள்…அந்த ரெண்டு பேரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு இறந்து போய்க் கிடக்கின்றனர்.

ஏன் துளசி…? எதற்காக இவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டனர்…?

ஏன் சண்டையிட்டு மாய்ந்து போனார்கள்?

தன்னுடைய அளவுக்கு ஏற்றபடி சவப்பெட்டி வாங்கி ஒழுங்குபடுத்தி விட்டு வந்த ரங்கன்…

பொலித்தீன் பையிலே ஊருக்குப் போகப் போகிற பெரேரா… வன்னிக் காட்டிலும், மல்வத்தையிலும் எரியப் போகிற உடல்கள்…

ரங்கநாதா…! ரஞ்சித் பெரெரா…! இந்த நாளை எதிர்பார்த்துத்தான் வந்தீர்களா?

இந்தத் துளசி உங்களிடம் வளர்ந்தவளில்லையா…?

அவள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நீங்கள் உங்கள் மரணத்தை மட்டும் நீங்களே தேடிப் போனீர்களா…?

தினமும் பிள்ளையாருக்கு ஒற்றைச் செவ்வரத்தை வைத்து ரங்கனின் உயிருக்கு மன்றாடும் சத்தியா…

புத்தபெருமானே! அவர் எப்போது திரும்பி வருவார்? என்று நித்ய கல்யாணிகளை அடுக்கியபடி காத்திருக்கும் நந்தாவதி…

இனி என்ன…?

ரங்கனின் துப்பாக்கி ஓயாது என தேவன் அதைத் தூக்கி சபதம் செய்வான்.

பழிவாங்குவேன் என பெரேராவிற்காக ‘பண்டா’ சூளுரைப்பான்.

அவர்கள் தேடிய அமைதியும் சமாதானமும் கானல் நீராக…

அந்த நந்தாவதியும், சத்தியாவும் முகம் தெரியாத ஒவ்வொருவரையும் தத்தமக்கு எதிரியாக்கி… வெள்ளை நித்ய கல்யாணிகளும், அழகிய செவ்வரத்தைகளும் இனி அவர்களுக்குப் பூக்குமா…?

என் மனைவி இறந்தபோதே கடைசியாகத் கசிந்த கண்கள் இப்போது மறுபடியும் கசிகின்றன.

தூரத்தில் துளசி “வெண்புறாவே, வெண்புறாவே…” பாடிக் கொண்டிருக்கிறாள். வெண்புறாக்கள் சிவப்புக்குருதியில் குளித்து எழுகின்றன.

நான் கால்போன போக்கில் மௌனமாய் நடக்கிறேன்.

– தினகரன் 20.07.1997

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *