யாரோ யார் இவர் யாரோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,275 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாரிவள்?

சாயலைப் பார்த்தால் அரியாத்தை போலுள்ளதே. அட! அரியாத்தையேதான். ஒரு அங்குசத்துடனும் வடக்கயிற்றுடனும் அப்படி எங்கேதான் போகிறாள் இவள்? குலத்தொழிலைக் கையிலெடுத்துவிட்டாள் போலும். அட! கதைத்துக்கொண்டிருக்கும் போதே கண் மறைவாகிவிட்டாள் அரியாத்தை. காட்டுக்குள் அந்த அலியன் யானை அலைகின்றது என்பது அரியாத்தைக்கு தெரியாதா? எதற்காகத் தனியாக, மிக வேகமாக, ஏதோ சாதிக்கப் போகின்றவள் போல் போகின்றாள்? ஏதேனும் அபாயம் நேருமுன்னர் வாருங்கள், நாமும் அவளுடன் ஓடிப்போவோம்.

காட்டுக் கொடிகளை, மரங்களை ஊடுருவியவாறு உட்புகுந்த நாம் திகைத்துப் போனோம். கத்தவும் வாய் வராமல், அருகே நெருங்கவும் துணிவின்றி விறைத்த கட்டைகளாய் நாம் நிற்க, கண்முன்னே பெரும் போர், போர்தான் நடந்தது.

வியர்த்துக் களைத்த அரியாத்தை, தன் அங்குசத்தால் அடக்கிய அலியன் யானையின் காலிலே வடக்கயிற்றால் முடிச்சிட்டு, முந்தானையால் முகத்தை துடைத்தவாறு நிமிர்ந்தாள், எம்மை பார்த்ததும் புன்னகைத்துவிட்டு, யானையை இழுத்தவாறு நடக்கலானாள். வரலாறு அவள் பின்னே நடந்தது.

நூறு வருடங்களின் பின் யானையொன்று அரசு கட்டிலேறியது, முடி சூடிக்கொண்டது. அரியாத்தையிடம் அடிவாங்கி மதநீர் வற்றிக் கிடந்த அலியன் யானைதான் மறுபடியும் உச்சிக்கு மதமேறி, கட்டி அவிழ்க்க ஆளில்லாமல் அரசு செய்கின்றதோ?

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், மகாவலி கங்கை திசை திருப்புத்திட்டம், தரப்படுத்தல், அது இதுவென அலியனின் அட்டகாசம் கட்டிலடங்காது போயிற்று. பொறுத்திருப்போம். அன்னை மண்ணில் கண்மூடிய அரியாத்தையின் அடி வேரிலிருந்து புதிய வீராங்கனைகள் துளிர்விடத்தானே வேண்டும். அல்லது போனால் மண்ணுள் புதையுண்டிருக்கும் அரியாத்தையின் மரபணுக்களை அகழ்ந்தெடுத்து உயிர் கொடுக்க ஒரு தமிழ் வீரன் புறப்படும் நிகழ்வொன்றாவது வெகுவிரைவில் நடந்தேறவேண்டுமே.

ஆயிரம் வருடங்களுக்கொரு தடவை, உலகறியும் வல்லமையுடன் ஒரு தமிழ்வீரன் வெளிவரவேண்டிய காலம் வந்துவிட்டதல்லவா? அவன் எங்கு பிறந்திருக்கிறானோ? எத்தகைய இடர்பாடுகளிடையே தன்னை அவன் பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறானோ?

பட்டை தீட்டப்பட்ட வைரம் அந்த நெடுங்காட்டிடையே ஒளி வீசியவாறு இருந்தது. மணலாற்று காட்டிடையே மறைந்திருந்தவாறு இடையிடையே பளீரென ஒளி வீசி பகைவரின் தலைகளில் இடியாய் முழங்கியவாறு இருந்த அந்த அபூர்வ வைரத்தைத் தேடி நேரு பேரனின் தூதர்கள் வலை வீசித் திரிய, வைரமோ ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி காட்டுத் தடிகளால் அமைக்கப்பட்ட இருக்கையொன்றில் வீற்றிருந்தவாறு ஈழத்தமிழரின் தலைவிதியை தீர்மானித்துக்கொண்டிருந்தது. அரியாத்தையின் பூட்டப்பட்ட பெண்கள் சிலர் வைரத்தின் ஒளியால் ஈர்க்கப்பட்டு போர்க்கோலம் பூண்டு, கள அனுபவங்களையும் சுமந்தவாறு வனம் புகுந்திருந்தனர்.

வனத்திலிருந்து வெளிவருகையில் இவர்களின் விழிகளும் ஒளி பொருந்தியவாறிருந்ததை எல்லோரும் அவதானித்தனர்.

முற்றுகை வளையம் இறுகிவிட்டது. அதோ தெரிகிறது பாருங்கள் கோட்டை. காலத்துக்கு காலம் எம்மை அடக்கியாள வந்தோரை நினைவுபடுத்தியவாறு இன்னமும் நிமிர்ந்து நிற்கும் அடிமைச் சின்னம். அதற்குள் இப்போது வாளேந்திய சிங்கத்தின் வாரிசுகள். இம்முறை விடுவதேயில்லை என்ற வீறுடன் வெளியே வேங்கைகள்.

இவர்கள் நிற்கும் நிலையைப்பார்த்தால் இன்று முன்னேறித் தாக்கப் போகின்றார்கள் போல் மனதுக்குப் படுகின்றது. அட! நினைத்துக் கொண்டிருக்கையிலேயே சண்டை தொடங்கிவிட்டது. சரி. என்னதான் நடக்கின்றது என்று நின்றுதான் பார்ப்பமே!

சண்டையின் வேகத்தில் கோட்டை வாசலை நோக்கி தனியே ஓடிப்போவது சங்கீதாதானே? இந்தச் சின்னப் பெண்ணுக்கு இத்தனை துணிவா? என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. எதிரிக்கும் இதே நிலைதான் போலிருக்கிறது. பாருங்கள் அந்த இராணுவ வீரன் தன் முன்னே மிக அருகில் சங்கீதாவை கண்ட மலைப்பிலிருந்து இன்னமும் விடுபடவில்லை துப்பாக்கியை கையில் வைத்தவாறு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே பார்த்தபடி நிற்கின்றான். சங்கீதாவின் துப்பாக்கி தோளுக்கு உயருகின்றது. இப்போது விழிப்பு வந்ததுபோல் அவனும் துப்பாக்கியைத் தோளுக்கு உயர்த்த… கோட்டை வாசலிலே சரிந்துகிடந்த லெப். சங்கீதாவிடம் நாமும் போக முடியாமல் எதிரியும் போக முடியாமல்…. புலிக்கொடியை கையிலேந்திய வீரர்களின் வருகைக்காக கோட்டை வாசலிலேயே காத்திருந்த அவளின் காலடியில் வரலாறு வந்து அமர்ந்து கொண்டது.

பயணம் இப்போது பலாலிப் பகுதியை நோக்கி. விளானில் மகளிர் படையணி வந்த வேகத்தில் அவசர அவசரமாக நிலைகளை அமைத்துக்கொண்டிருக்கிறது. எதிரியின் நகர்வொன்றை இரண்டொரு நாட்களுள் எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் வேலை செய்யும் வேகத்திலேயே தெரிகின்றது. அவர்களின் வேலைக் களைப்பை வெயில் மேலும் அதிகமாக்கிக்கொண்டிருந்தது. நாம் அந்த வாழைத் தோட்டத்தினுள்ளே அமர்ந்துகொள்வோம். குளிர்ச்சியாக இருக்கும் சண்டை நடக்கும்போது முன்னே போகலாம்.

எங்கோ கவனத்திலிருந்த எம்மை ஒரு பிறண் LMG யின் ஒலி உலுப்பியது அடிப்பது நம்மவர்கள்தான். எதிரியை கண்டுவிட்டார்கள். சண்டையென்றால் இது சண்டை. அனல் பறந்த சண்டை. தேவானந்தியின் காலிலே பலத்த காயம். நகர முடியாமல் சிரமப்படுகிறாள். பரவலாகச் சண்டை நடக்கின்றது. அவளின் முகம் அவள் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டதைச் சொல்லுகின்றது. அருகிலே எவருமில்லையே. என்ன செய்யப்போகின்றாள்?

கழுத்திலிருந்து குப்பியை வெளியே எடுத்துவிட்டு, தனது கையெறி குண்டின் பாதுகாப்பு ஊசியைக் கழற்றி, குண்டைத் தனது உடலின் கீழ் வைத்துவிட்டு, சயனைட்டைச் சாப்பிடுகின்றாளே! சாவின் பின்னும் தன்னை நெருங்கும் எதிரியைக் கொல்லத் துணிந்த 2ம் லெப். தேவானந்தியின் மன உறுதியில் மலைத்துப்போன வரலாறு ஒரு கணம் அப்படியே நின்றுபோனது.

வரலாறு தன் பழைய பதிவேட்டை மேசையில் வைத்துவிட்டு புதிய பதிவேடொன்றைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டது. பின்னே ஓடியவாறு எங்கே பயணம் என்று விசாரித்ததில், “மூன்றாம் ஈழப்போர் தொடங்கிவிட்டது. தெரியாதா?” என்றவாறு வரலாறு போக, பின்னோடு எமது ஓட்டமும் தொடர்ந்தது.

காங்கேசன்துறைக் கடற்பரப்பு ஏன் இன்று கொந்தளிப்பாக இருக்கின்றது? சற்று முன்னர் கடலிலே சண்டையொன்று நடந்த தடயங்கள் இந்த இருளிலும் தெரிகின்றன. உடைந்த படகுத் துண்டுகள், இன்னும் ஏதோ சில பொருட்கள் மிதப்பதைப் பார்த்தால், சண்டை முடிந்து அதிக நேரம் இல்லைப்போல் தெரிகின்றது.

அது என்ன, ஏதோ அசைகின்றது மனித உருவம்போல இல்லையா? யாரது? செவ்வானம்! கடற் கரும்புலியல்லவா இவள்? சண்டைக்கு இவளது வெடி மருந்துப் படகும் வந்திருந்ததா? சண்டையின்போது இவள் போய் இடிக்க முன்னரே படகு சேதப்பட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் செவ்வானமாவது தன் படகை விட்டுவிட்டுத் தனியே கடலில் நிற்பதாவது.

மயக்கமடைந்து விழித்திருக்கிறாள் போலும். இல்லாவிட்டால் தன் சகோதரப்படகுகளை தவறவிட்டிருக்கமாட்டாள். கரையே தெரியாத நடுக்கடலில் திசை பிடிக்க முடியாமல் திணறுகிறாள். இன்றைக்கென்று பார்த்து இந்த முகில்களும் நட்சத்திரங்களை மறைத்தபடி. களைத்து விடாதே செவ்வானம். உனக்கென ஒரு இலக்கு இருக்கின்றது. அதை அழிக்கும்வரை நீ இருந்துதானாக வேண்டும். நம்பிக்கையிழக்காமல் மிதந்துகொண்டிரு. முகில் விலகும்.

அப்பாடா! ஒருவாறு நட்சத்திரமொன்றைப் பார்த்து திசையறிந்து விட்டாள். நீந்தத் தொடங்கிவிட்டாள். பொலபொலவென விடிகிறது. அதோ ஒரு பாறை தெரிகின்றது. அதுவரையிலாவது நீந்து செவ்வானம். களைப்பு மேலிட்டதால் பாறையிலேறிப் படுத்துவிட்டாள். அலைகள் அவள் கால்களை உரசிச் செல்கின்றன. இயந்திரப் படகுகள் இரையும் ஒலி கேட்கும்போதெல்லாம் நீருள் அமிழ்ந்து கிடப்பதும், நீல உடையணிந்த பேய்களின் படகுகள் கடந்ததும் பாறையில் படுப்பதுமாக, சோதனைதான் செவ்வானம். பொறுத்திரு, இருளட்டும்.

சென்று வா சூரியனே. காலையில் சந்திக்கலாம். செவ்வானம் தன் தோழமை நட்சத்திரத்தின் துணையுடன் நீச்சலைத் தொடங்கிவிட்டாள். அவளின் கைகள் சோர்வடைகின்றன. அவளின் சீருடை நீச்சலுக்குப் பெரும் தொந்தரவாயிருக்கின்றன. ஈர உடைகள் உடலை வெட்டுகின்றன. கொஞ்சத் தூரம் நீந்திவிட்டு தன் நீண்ட காற்சட்டையைக் கழற்றி கடலன்னையிடம் கொடுத்துவிட்டு நீச்சலைத் தொடர்ந்தாள். நீந்துவதும் இடையில் சில நேரம் மிதப்பதுமாக…. கடலின் அடிவாரத்தில் கீறல் கீறலாக ஒளி தெரிகின்றது. இன்னும் சில நிமிடங்களில் வானம் சிவப்பேறும். ஒரு குத்துமதிப்பில் கரையை நோக்கி திரும்பினாள் அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட பனைமர வரிசை கரையோர ஊர்களை இனங்காட்டியது. ஊர்களைப் பார்த்தவாறே நீந்தியவள் தன்னுடைய தளத்திலிருக்கும் பனைமரக் கூட்டத்தை கண்டதும் கரையேறி மயங்கிப் போனாள். பரவாயில்லை. இனி அவளின் தோழிகள் கவனித்துக்கொள்வார்கள்.

அலைமகளே, உனக்கு நன்றி. வரலாறே வேகமாக வா. வேலை இன்னும் இருக்கிறது.

முன்னர் தங்கியிருந்த அதே காடு. பெருங் காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஒட்ட வெட்டிய முடி. எதிரி தலைமுடியைப் பிடித்து இழுக்கவும் முடியாது. முட்கம்பிகள், கிளைகளுள் கூந்தல் சிக்குண்டு பணி தடைப்படும் அபாயமும் இல்லை இவர்களுக்கு. சிறுத்தை போல ஓசையின்றிய நகர்வு. ஆனால் பாய்ந்தால் பாய்ச்சல்தான். எதிரியின் தலை இவர்களின் கையில் இருக்கும் என்பதில் நீங்கள் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.

அந்தோ! பாய்ச்சல் தொடங்கிவிட்டது. ஐந்து சிறு தளங்களைக்கொண்ட இராணுவத் தொகுதியில் ஒரு பக்கத் தடையை அணியொன்று உடைத்து வழியமைத்துக் கொடுக்க, மேஜர் மாதங்கி தன் அணியுடன் புயலென உள்ளே பாய்கிறாள். அவளின் பின்னே நாமும் பாய்ந்து போனால் சரி. ஒரு கணம் தாமதித்தாலும் இந்த இருண்ட காட்டிலே தவறிவிடுவோம். வெட்டப்பட்ட முட்கம்பிகளிடையே பார்த்து பார்த்துக் காலை வையுங்கள். ஓடி வாருங்கள். அட பக்கவாட்டில் நின்று சுட்டுக்கொண்டிருக்கும் எதிரியைப் பொருட்படுத்தாது என்னோடு வாருங்கள். என்னது? மரக்கிளையில் உடை கொழுவிவிட்டதா? இழுத்து அறுத்தவாறு வாருங்கள். கிழிந்தாலும் பரவாயில்லை. பாருங்கள் மாதங்கி அதற்குள் எங்கே போய்ச் சேர்ந்துவிட்டாள் என்று.

ஆட்டலறிச் சுடுதளம். பாதுகாத்து நிற்கும் இராணுவத்தினர் மீது சூடுகளைத் தொடங்கிவிட்டார்கள் இவர்கள். குறுக்குச் சூடுகளுள் சிக்காமல் நாம் இந்தப் பெரு மரத்தின் மறைவில் நின்று பாப்போம்.

இவர்கள் சுடச்சுட, செத்து விழுவபவர்கள் போக, புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல சனியன் பிடித்தவர்கள் வந்துகொண்ருக்கிறார்களே. இவர்கள் கொண்டு வந்த ரவைகள் முடிந்த பின்பும் எதிரியின் வருகை முடிவுறாது போலிருக்கின்றதே. எப்படி எதிரியைச் சமாளித்து ஆட்லறியைத் தகர்க்கப்போகின்றாள் மாதங்கி? இருப்புக் கொள்ளவில்லை. கை, கால்கள் பரபரக்கின்றன. வருகின்ற கோபத்துக்கு ஒரு இராணுவத்தின் காலைப் பிடித்துச் சுழற்றி தலையைச் சிதறடித்தால் என்ன என்று இருக்கின்றது.

அடியம்மா! நடப்பதைப் பார்!. மாதங்கி தன் ஆயுதத்தின் பின்புறத்தால் ஓங்கி ஒருவனின் மண்டையில் போடுவதை, விடாதே, அடி. எல்லாருமே கை கலப்பில் இறங்கிவிட்டார்கள். அடியென்றால் அடிதான். ஒருத்தி உண்மையிலேயே ஒரு இராணுவத்தினனின் தலையை மரத்தோடு மோதி மண்டையை உடைத்துவிட்டாள். கற்பனை செய்தது போலவே இராணுவத்தினரின் காலைப் பிடித்து விழுத்தி, மண்டையை நிலத்தில் மோதி… நிலைமை தன் கட்டுப்பாட்டை மீறிப் போகுமுன் மாதங்கி ஆட்லறியைத் தகர்க்கும் பணியில் முனைந்துவிட்டாள். காட்டுப் போர் முறையை வெளிநாட்டு சக்திகளிடம் கன கச்சிதமாய் பயின்ற சிறீலங்காவின் சிறப்புப் படையணியால் மாதங்கியிடமிருந்து தனது ஆட்லறியொன்றைப் பாதுகாக்க முடியாமல் போன அவலத்தை பார்த்தீர்கள் அல்லவா?

பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வெடித்துப் புகை கிளம்பி ஆட்லறிப் பீரங்கி சிதறிப் போக, வந்த வேலையை முடித்த நிறைவுடன் மாதங்கியும் தோழியரும் கண்மூட, இமைக்க மறந்து விழி விரித்தபடி வரலாறு அப்படியே நின்று விட்டது.

பள்ளமடுவின் பறட்டைக் காட்டிடையே நிலையமைத்துக் காத்திருந்து சண்டை பிடிப்பதற்குள், காய்ந்து கருவாடாகி விடுவோம். ஆனால் கஜேந்தியைப் பாருங்கள் ஏதேனும் வாட்டம் தெரிகிறதா என்று. ஓரிடத்தில் நிற்க மாட்டாதவள். அடிக்கொரு தடவை தொலைத்தொடர்புக் கருவி ஊடாக லெப். கேணல் மைதிலியுடன் கதைக்கவில்லையென்றால், மண்டை வெடித்துவிடும். வீர சாகசங்களில் ஈடுபடுவதென்றால் இனிப்பு சாப்பிடுவதுபோல்.

எதிரி ஒரு நடவடிக்கையைச் செய்யப்போகிறான் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த வழியால் வரப்போகிறான் என்று அறியும் ஆவல் கஜேந்திக்கு. அங்கே பார் சொல்லாமல் கொள்ளாமல் எமது காவலரணின் முன்புறமாக அவள் புறப்பட்டு போவதை, உதவிக்கு கூட்டிப்போன போராளியை பின்னால் வரவிட்டு தான் முன்னே போகும் அவளின் துணிவைப் பார், நிலத்தில் எதைக் கூர்ந்து பார்க்கிறாள்.

ஆ! எமது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. கஜேந்தியின் கூர்மையான கண்கள் எதிரி நகர்ந்து வந்த பாதையை இனங்கண்டவாறு முன்னே நடந்தன. எதிரியின் பகுதியை நோக்கிப் போன பாதை இடையிலேயே கிளை பிரிந்து எமது பகுதிக்குப் போனது. இது இரண்டாவது பாதை. அதோ அங்கேயும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டுவிட்டாள். இது போதுமே இனி எதிரியை எதிர்கொள்ள. எதிரிப் பகுதியை நோக்கிப் போகும் பாதையால் சிறிது தூரம் போய் பார்த்துவிட்டு, ஒரே ஓட்டமாய் வந்து மைதிலியிடம் சொல்ல, மைதிலி தன் மேலாளருக்கு அறிவிக்க, அதோ பாருங்கள் முன்னணிப் பகுதியில் சூழ்ச்சிப் பொறிகள் அமைத்து, புதிய வடிவில் கண்ணிவெடிகளை இணைக்கும் வேலை எவ்வளவு வேகமாக நடைபெறுகின்றது என்று.

வரலாறே, இனி நடக்கவிருக்கும் எதிரியின் போர் முழக்கம் (ரணகோ’) 05 நடவடிக்கையில் எதிரி முற்றாகத் தோல்வியைத் தழுவப்போவதையும், நடவடிக்கையைத் திட்டமிட்ட மேஜர் ஜெனரல் வசந்த பெரேரோ ஏனைய படையதிகாரிகள் மத்தியில் அவமானத்துடன் தலை குனியப்போவதையும் நீ இப்போதே குறித்துக்கொள்ளலாம்.

கிளாலிக் கரையிலிருந்து நாகர்கோயில் கரைவரையிலான நீண்ட காவலரண் வரிசை. அலுப்புச் சலிப்பில்லாத போராளிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தடுப்புச் சுவர் அது. உயிர்களாலே நிலம் மீட்டு, தம் உடல்களாலே காப்பிட்டிருந்த அவர்களுக்கு மறுநாள் சண்டை என்பது நன்றாகவே தெரியும். எல்லாரும் தயார் நிலையில்,

விடியவும், எதிரியின் பீரங்கிகள் இடி பொழியவும் அந்தக் காவலரணை உடைத்தவாறு எதிரிகள் வரிசையாய் உள் நுழைந்தனர்.

அதே நேரம் வேறு இடங்களிலும் இதே வகையில் எதிரி நுழைய, லெப். இசைப்பிரியா தனது பதுங்கிச் சுடும் துப்பாக்கியைத் தோளுக்கு உயர்த்தினாள். வேலிக்குள்ளால் குறித்த நகர்வகழியைக் கடந்து பாயும் இராணுவத்தினரை ஒவ்வொன்றாகக் குறி வைக்கத் தொடங்கினாள்.

ஒன்று…. இரண்டு …. ஒன்ப து… பத்து…. பதி…. இசைப்பிரியா சுட்டு விழுத்திக்கொண்டேயிருந்தாள். பதுங்கிச் சூட்டு வீச்சு எல்லைக்குள் அகப்படாமல் உள் நோக்கி ஓடிக்கொண்டிருந்தவர் களைப்பற்றி அவள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. உள்ளே போனவர்கள் பீரங்கிப் படையினருக்குரிய இலக்குகளல்லவா?

பதினாறு, பதினேழு, — அங்க பார். நான் நினைக்கிறன் இந்த ராங்கியோடு மூன்றாவது அல்லது நான்காவது ராங்க் எங்களுடைய பகுதிக்குள் நுழைகின்றது. இசைப்பிரியா அதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை. அவளுக்குத் தெரியும் இவற்றை சுறிபுகாரர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று. அவள் தன் பணியிலே கண்ணாக….

இருபத்து மூன்று, இருபத்து நான்கு, ….

அந்தா பார் அந்தப் பெண், ஓ!… ம், அவளின் சுறிபு ஒரு முறை சீற ராங்க் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு நிற்கின்றது. பக்கவாட்டாகவும் அந்த ராங்கிக்கு அடி விழுகின்றது. ம், சகோதரப் புலி ஒருவரின் சுறிபுயும் இயங்குகின்றது. ஆ! சக்கரங்களின் இணைப்புச்சங்கிலி அறுந்துவிட்டது நல்லது பெண்ணே எங்கே உனது அடுத்த அடியையும் பார்ப்போம்.

மறுமுறை சுறிபு சீற, ராங்க் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு திணறிக்கொண்டிருக்கின்றது. இசைப்பிரியாவின் கவனம் கலையவில்லை கருமமே கண்ணாக….

இருபத்தெட்டு, இருபத்தொன்பது, …. தீச்சுவாலை 01 எதிர் நடவடிக்கையின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றான இதையும் உன் பதிவேட்டில் குறித்திருக்கிறாயல்லவா வரலாறே.

சூரிய ஒளி பட்டு ஒளிரும் நிலவுபோல, வைரத்தின் ஒளி பட்டு மிளிரும் இந்த நிலவுகளைப் பார். இவர்களை நிலவு என்றும் சொல்ல முடியாது. நெருப்புகள். தீச்சுவாலையை அடித்து நூர்த்த நெருப்புகள். வைரத்தின் தகத்தகாயமான ஒளி வெள்ளத்தை தம் விழிகளால் உள் வாங்கி மூளையிலே பதிந்து, அடுத்த செயலுக்காகத் தம்மை தயார்படுத்திக்கொண்டிருக்கும் அவர்களின் திறம் பாராய்.

தீச்சுவாலையை அணைத்து விட்ட வீச்சுக்காய் வைரத்தின் அருகிருக்கும் பேறுபெற்ற இவர்களுக்கு உன் பதிவேட்டில் ஒரு பக்கத்தை ஒதுக்கி வை வரலாறே.

தமிழீழம் – வன்னிப் பகுதியில் சில நூறு வருடங்களின் முன் வாழ்ந்த வீரப் பெண்களில் ஒருத்தியே அரியாத்தை.

லெப்.சங்கீதா 1990.08.05 அன்று யாழ் கோட்டை வாயிலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவரது வித்துடல் கோட்டை எம்மால் வெற்றி கொள்ளப்பட்ட 1990.09.26 அன்று மீட்கப்பட்டது. இவரது கடைசி நேரச் சம்பவம். சங்கீதாவைச் சுட்ட இராணுவ வீரரின் பத்திரிகை நேர்காணல் மூலம் அறியப்பட்டது.

1992.09.18 அன்று பலாலி விளான் பகுதியில் முன்னேறி வந்த சிறீலங்காப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைந்த 2ம் லெப். தேவானந்தியின் வித்துடலை சண்டை முடிந்த பின்னர் எடுக்க வந்தபோதே தன் உடலின் கீழ் பாதுகாப்பு ஊசி அகற்றப்பட்ட குண்டை அவர் வைத்திருந்தது தெரியவந்தது.

கரும்புலி கப்டன் செவ்வானம் முதல் தடவை காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சிக்கலால் தன் பணியைச் செய்ய முடியாமல் திரும்பி வந்தார். மறுபடி இவர் 1995.10.25 அன்று அதே கடற்பரப்பில் ‘லங்காமுடித’ கப்பல் மீதும் அதற்கு உறுதுணையாக வந்த டோறா பீரங்கிப் படகுகள் மீதும் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலிலின் போது டோறாவைத் தகர்த்து வீரகாவியமானார்.

விடுதலைப் புலிகளின் சிறுத்தைகள் அணியைச் சேர்ந்த மேஜர். மாதங்கி 1995.07.23 அன்று மணலாற்றில் அமைந்திருந்த ஐந்து இராணுவத் தளங்களின் மீது ஒரே நேரம் எம்மால் தாக்குதல் நடத்தப்பட்டபோது தன் அணியினருடன் ஆட்லறித் தளமொன்றைத் தகர்த்தபின் வீரச்சாவடைந்தார்.

மேஜர் கஜேந்தி அருந்ததி 1999.09.12 அன்று மன்னார் மாவட்டத்தில் போர் முழக்கம் 05 எதிர் நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்.

2ம் லெப் மாலதி படையணியின் பதுங்கிச் சுடும் அணியில் ஒருவரான லெப் இசைப்பிரியா, தீச்சுவாலை 01 எதிர் நடவடிக்கையின் நான்காவது நாளான 2001.04.28 அன்று பளை எழுதுமட்டுவாள் பகுதியில் வீரச்சாவடைந்தார்.

– வெளிச்சம் பவள இதழ் 2001 கார்த்திகை – மார்கழி, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *