மைத்திரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 2,902 
 

(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருநாகலிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாவத்தகம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் புஞ்சி பண்டா. கமுகு, தென்னை, வாழை, பலா மரங்களோடு கோப்பி, மிளகு ஆகிய பணப்பயிர் களும் நெல்லும் செழித்துக் கொழிக்கும் அழகிய கிராமம் மாவத்தகம.

ஆனால், இந்த அழகு, கண்களால் மட்டும் பார்த்து அநுபவிக்கக் கூடிய ஒன்றாகத்தான் புஞ்சிபண்டாவின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இருந்தது. நிலம் என்னும் நல்லாளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அவர்கள். ஹாஜியார் முகமது இபுராஹீம் அவர்களின் தென்னந் தோட்டக் காவலாளி, புஞ்சிபண்டாவின் தந்தை அப்புஹாமி. அவன் ஓர் அப்பாவி; கள்ளங்கபடு இல்லாத சுபாவம்; தானும் தன் மனைவி மெனிக்காவும் பிள்ளைகளும் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் பூர்வகர்மப் பயன் என்பது அவனது அழுத்தமான நம்பிக்கை. இதன் காரணமாக யார் என்ன தொல்லை கொடுத்தாலும் பொறுத்துப் பொறுத்துச் சூடுசுரணையற்றவனாகவே அவன் ஒருநாள் செத்துப் போனான்.

ஹாஜியாரின் தோட்டத்திலேயே ஒரு கொட்டிலில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த புஞ்சிபண்டாவின் குடும்பத்தினருக்கு அப்புஹமியின் மரணத்தோடு போக்கிடம் இல்லாது போய்விட்டது. புஞ்சிபண்டாவுக்கு அப்பொழுது பத்து வயது. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முப்பத் தைந்து வயதில் அறுபது வயதுக் கிழட்டுத்தனத்தை அடைந்து விட்ட தாய் மெனிக்கா. எல்லாரும் எங்கே போவது? சமையலுக்கான இரண்டொரு மண் பாத்திரங் களும், கறள் கட்டிய றங்குப்பெட்டி ஒன்றும், அதனுள்ளே அடைந்து வைத்திருந்த கிழிந்ததும் அழுக்கானதுமான நாலு ஐந்து சாறம், சட்டை துணிமணிகளுந்தான் அவர்களின் சொத்துக்கள்!

மெனிக்கா ஹாஜியாரின் கால்களில் விழுந்து கதறி அழுதாள். “மாத்தயா, இந்தக் குஞ்சு குருமானுடன் நான் இனி என்ன செய்யிறது? எனக்கு ஒரு வழி சொல்லுங்கோ”.

மெனிக்காவின் கலைந்த கூந்தலும், கண்களை முட்டி உடைத்துப் பெருகிய கண்ணீரும், கசங்கி அழுக்கேறிய கந்தைத் துணியும் ஹாஜியாரைக் கலக்கி விட்டன. அழகையே ஆராதித்து வந்த அந்தப் பெருந்தன வந்தர், அவலட்சணங்களைக் கண்டால் முகத்தைச் சுழிப்பதையே வழக்கமாக கொண்டவராயிருந்தும் அந்தக் கணத்தில் பலவீனப்பட்டுப் போனார்.

“அழாதை மெனிக்கா, நீ உன்ர கொட்டிலிலை தொடர்ந்து இருக்கலாம். புதிசாய் வரப்போகும் காவலாளி புத்ததாசாவிற்கு வேறை ஒரு கொட்டில் போட்டுக் கொடுக்கலாம். நீயும் பிள்ளையளும் தேங்காய் பொறுக்கிப் போடுங்கோ. நீயும் புஞ்சிபண்டாவும் தேங்காய் உரிச்சுத்தரலாம்; மட்டையளை ஊறப்போடலாம். அதுகளுக்கான கூலி நான் தருவன்.”

ஹாஜியார் இப்படிச் சொன்ன பொழுது மெனிக்கா ஆறுதல், நன்றி, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளால் விழுங்கப்பட்டவளாய் மீண்டும் ஹாஜியாரின் கால்களில் விழுந்து அழுதாள்.

இதுவரை வாழ்க்கை பற்றி எவ்வித நம்பிக்கையோ கனவுகளோ இல்லாது ஐந்தறிவுப் பிராணி போலவே உண்பதும், உறங்குவதும், பிள்ளையுற்பத்திக்கான கருமங்களில் தன் கணவனோடு இணைந்து செயற்படுவதும் உடல் அலுத்துக் களைத்து விழும்வரை பாடுபடுவதும் மட்டுமே செய்து வந்த மெனிக்கா, இப்பொழுது சற்றுப் பொறுப்புணர்ச்சியோடும் பிடிப்போடும் வாழ்க்கையை நோக்கத் தொடங்கினாள். தோட்டத்து வேலைகளைச் செய்வதோடு காலை நேரத்தில் அப்பம் சுட்டு, புஞ்சிபண்டா மூலம் கடைகளுக்குக் கொடுப்பித்து அதிலும் நாலு காசு சம்பாதிக்கத் தொடங்கினாள்.

“புஞ்சிபண்டாவைப் படிப்பிச்சு உத்தியோகத்தனாய் ஆக்கவேணும். பெண்பிள்ளையளையும் ஆனவரை படிப்பிச்சு நல்லவங்க கையிலை பிடிச்சுக் கொடுக்க வேணும். கடைக்குட்டி ரம்பண்டாவைத் தமையனுந் தமக்கைமாரும் பார்த்துக்கொள்ளுவினந்தானே?” இப்படியே சிந்தித்துத் திட்டமிட்டு மிகுந்த சிக்கனமாகவும், மனக்கட்டுப்பாட்டுடனும், கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு பிள்ளைகளை வளர்த்தாள் மெனிக்கா.

புஞ்சிபண்டா நல்ல சிறுவன். தாயிலும் உடன் பிறப்புக்களிலும் அவனுக்கு உயிர். தனது வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாத அவன், தன் கண் முன்பு கமுகங் கன்றுகள் போலக் கிசுகிசு என்று மதாளித்து வளர்ந்து கொண்டிருந்த சகோதரங்களைப் பார்த்துப் பிரமித்துப் போனான். அந்தப் பிரமிப்பிலே பெருமிதங் கலந்த மகிழ்ச்சியும் இழையோடத்தான் செய்தது. ஆனால், அதேவேளை தேய்ந்து தேய்ந்து மரணவாசலை நெருங்கிக் கொண்டிருந்த தாயைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனுடைய நெஞ்சு வேதனையால் உடைப்பெடுத்து உருகி, அது கண்களிலே வந்து தேங்கியும் விடும்.

இப்பொழுது புஞ்சிபண்டா பத்தொன்பது வயதுக் காளை. ஜி.சீ.ஈ. பாஸ் பண்ணி வேலைகள் தேடி அலுத்த நிலையில் இலங்கைக் காலாட்படைக்கு ஆள் சேர்க்கப்பட்ட பொழுது, அவன் இரண்டாவது யோசனைக்கே இடம் வைக்காது அதற்கு விண்ணப்பம் அனுப்பினான்.

மெனிக்காவிற்கு அவன் முடிவு கொஞ்சமும் பிடிக்கவில்லை. “புத்தா, நீ என்ரை மூத்த மகன். உனக்கு ஒண்டொண்டால் நானும் உன்ர தங்கச்சியள், தம்பியும் என்ன ஆவம் எண்டு யோசிச்சியே? அதோடை, உயிரை வாங்கிற கொலைத்தொழிலுக்கு நான் உன்னை எப்படி அநுமதிப்பன்?’ என்று மெனிக்கா மகனின் முகத்தைப் பாசத்தோடு தடவிக்கொண்டு அழுதாள்.

“அம்மே, படையிலை சேருறவனெல்லாம் சாகிற தில்லை. அதோடை இலங்கைப்படை எப்பவாவது போர் செய்யவேண்டிய தேவை ஏற்படப் போகுதே? ஏதேன் குழப்பங்கள் உள்நாட்டிலை ஏற்பட்டால் அடக்கிறது. வேலைநிறுத்தம் என்று உண்டானால் அந்தநேரத்தில் அரசாங்கக் கட்டளையை ஏற்று வேலை செய்கிறது.

இப்படியான விஷயங்கள் தானே? கைநிறையச் சம்பளம், சாப்பாடு, சீருடை, பலவித அலவன்சுகள் எண்டு கிடைக்கும். நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ” என்று அவன் மெனிக்காவை ஆறுதற்படுத்தினான்.

வஞ்சகமில்லாத வளர்ச்சியும் சுறுசுறுப்பும், வேலை யைப் பெறவேண்டும் என்ற துடிப்பும் கொண்ட புஞ்சிபண்டா படைவீரனாகத் தெரியப்பட்டது பெரிய விஷயம் அல்ல. ஆறு மாதம் தியத்தலாவையில் கடும் பயிற்சி பெற்றபின் சிறந்த படைவீரன் என்ற விருதுகளையும் பெற்றதோடு சிங்க றெஜிமென்றில் அவனுக்கு இடமும் கிடைத்தது.

புஞ்சிபண்டா தாய்க்குக் கூறியது போல் நான்கு வருஷங்கள் எந்தப் பிரச்சினைகளும் இல்லாது கழிந்தன.

1983 ஆம் ஆண்டு பிறந்தது.

“உங்களை யாழ்ப்பாணத்தில் பலாலி இராணுவ முகாமிற்கு அனுப்புகிறோம். அங்கு நிலைமை கட்டுக் கடங்காததாகி வருகிறது. இயக்கங்களின் பெயரால் தமிழ்ப் பொடியளின் அட்டகாசம் தலையெடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ராணுவ வீரர்கள். மரணம் உங்களைத் தேடிவரலாம். மரணத்தைப் பிறருக்கு அளிக்க நீங்களும் அதைக் கைகோத்துச் செல்ல நேரலாம். எதற்கும் தயாராயி ருங்கள். இரக்கம், தயக்கம் என்பதெல்லாம் நெருக்கடி காலத்திலே செல்லாக் காசுகள். அவற்றை இருதயங்களிலி ருந்து களைந்து விடுங்கள். யாழ்ப்பாணத்திலே சேவை செய்ய உங்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் விசேட அலவன்ஸாக ரூபா 750/= வழங்கப்படும். உங்கள் உயிருக்கு ஆபத்து உண்டானால் உங்களின் ஓய்வுக்கான வயதுக்காலம் வரை முழுச் சம்பளம் உங்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும். அதன் பிறகு ஓய்வூதியமும் கிடைக்கும். இவற்றோடு இறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒருலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும்”.

படைப் பிரிவுத் தலைவரின் பேச்சைக் கேட்டு ராணுவ வீரரிடையே ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். பேச்சு முடிந்ததும் அவர்களின் கரகோஷம் அந்த மண்டபத்தையே அதிர வைத்தது.

அநியாயமாக உயிர்களை அழிப்பதற்கு விசேட அலவன்ஸ்! ஒரு யுத்தவீரனின் உயிர் போனால் அந்த உயிருக்குப் பெறுமதி ஒரு லட்சம் ரூபாவும் இறுதிவரை சம்பளமும், ஓய்வூதியமும்!

இந்தக் கருத்தைச் சீரணிக்க முடியாத ஒரே ஒரு சீவன் அந்தப் படை முழுவதிலுமே புஞ்சிபண்டா மட்டுமே. அவன் வேறு தொழில் கிடைக்காமல் படையில் சேர்ந்தவன்; பன்சாலையில் மைத்திரி என்னும் கருணைபற்றியும் அஹிம்சை பற்றியும் பிக்குகளின் உபதேசங்களைக் கேட்டு உள்ளத்தில் இரக்க உணர்வை வளர்த்துக் கொண்டவன். ‘ஓர் உயிரைக் கொடுக்க முடியாதவனுக்கு அதனை எடுக்கவும் அதிகாரமில்லை ‘ என்று எப்பொழுதோ குருனான்சே ஒருவர் உபதேசித்தது அவனது நினைவில் அவ்வேளையில் பவனி வந்தது.

அவன் மற்றவர்கள் போல ஆரவாரிக்கவில்லை. கைதட்டவில்லை. அசையாது சிந்தனையில் ஆழ்ந்து உறைந்துபோய்க் கல்லாகிவிட்டான். பக்கத்திலிருந்த சகா அவனைத் தோளில் தட்டிச் சுயநினைவிற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.

படைவீரர்களின் ஆரவாரமும் குதூகலமும் சாப்பாட்டு மண்டபத்திலும், பாரிலும், புகைவண்டியிலும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஒருசாண் தூரத்திலே மரணத்தை நிறுத்தி வைத்துக்கொண்டு அதுபற்றித் தாங்கள் சற்றும் கவலை அடையவில்லை என்று வெளியிற் காட்டிக் கொள்கிறார்களா?

தங்களின் மனத்தில் எழுந்த அச்சத்தை மறைக்கவும் மறக்கவும் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்களா?

நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு, ஏகாந்தம் நிறைந்த நள்ளிரவில் செறிந்த இருளினிடையே வானளாவிய மரங்கள் பூதங்கள் பேய்பிசாசுகளாகத் தோற்று வதைக் கண்டபடி நடந்துவரும் சிறுவர்கள், உரத்துக் கத்தி உற்சாகமுடையவர்களாய்க் காட்டுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

புஞ்சிபண்டா சாவுக்குப் பயப்படவில்லை. ஆனால் சாவைப் பிறருக்கு அளிப்பதற்கே பயந்தான். தன்னால் அளிக்கப்படாத ஒன்றைத் தானே கவர்வது கொள்ளை யல்லவா? அதைத் தானும் செய்துதானாக வேண்டுமா, இவ்வாறு எண்ணி எண்ணியே அவன் மறுகினான்.

எப்பொழுதும் உற்சாகமாகவே இருப்பவன், எவ ரோடும் கலகலப்பாகப் பேசுபவன், குடிக்காமலே குடித்தவர் களிலும், மோசமாகக் கலாட்டா பண்ணுபவன், பைலா பாடி ஆடுவதில் மன்னன் என்றெல்லாம் தனது படையணி யிலே பெயர் பெற்றிருந்த புஞ்சிபண்டாவின் அசாதாரண மௌனமும், தனிமைவிருப்பும் அவன் சகாக்களுக்கு வியப்பாயிருந்தன.

அவர்கள் அவனைக் கோட்டா பண்ணினார்கள். சாவுக்குப் பயந்துவிட்டான் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், அவனை அவனது தியானயோகத்திலிருந்து விடு விக்க எவராலும் முடியவில்லை.

ஒருவாறு பலாலி ராணுவ முகாமையும் வந்து சேர்ந் தாயிற்று. இரவு போனது…பகல் வந்தது…பகல்போய்..இரவுவந்தது…மாறி மாறி…

ஒவ்வொரு நாளுந்தான் எத்தனை சம்பவங்கள்… எத்தனை கொடிய சாவுகள்…

படைவீரர்கள் ட்றக்குகளிலும் கவசவாகனங்களிலும் ஏதோ பகை நாட்டைப் பிடிக்கப் போவதுபோலக் காலையிலே புறப்பட்டுச் செல்வார்கள். சந்தேகத்துக்குரிய பொடியளைப் பிடிப்பார்கள். அவர்கள் ஓடினால் யந்திரத்துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள். அவர்களின் இலக்குகள் எப்பொழுதும் இயக்கப் பொடியளைத்தான் அழிக்கும், சிதைக்கும் என்பதில்லை.

பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், முதியவர்கள் என்று அப்பாவிப் பொதுமக்களும் அடிக்கடி இரையாவது உண்டு. ஆனால் படைவீரர்களின் கணிப்பிலும் அரசுச் செய்தி நிறுவனங்களின் செய்திகளிலும் அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்தாம்!

இடையிடையே போராளிகளின் கண்ணிவெடிகளுக்குப் படைவீரர்களும் வாகனங்களும் இரையாவதும் சகஜமாயிருந்தது.

மரணத்தோடு நடந்தும் பயங்கர விளையாட்டில் அழிப்பவர்களும் அழிக்கப்படுபவர்களும் போராளிகள், படைவீரர்கள், மக்களாயிருக்க அரசின் மேலிடமோ மாநாடு களையும் விவாதங்களையும் ஒழுங்காக நடத்திக்கொண்டு அமர்த்தலாக, ஆடம்பரமாக, ஆனந்தமாகத் தொடர்ந்து சேவையாற்றிக் கொண்டிருந்தது!

பலாலி இராணுவமுகாமில் எப்பொழுதும் ஒரு இறுக்கமான நெருக்கடி நிறைந்த சூழலே காணப்பட்டது. நாள் செல்லச் செல்லப் படைவீரர்களின் மனங்கள் இறுகிக் கட்டிப்பட்டுக் கல்லாகிக் கொண்டிருந்தன.

புஞ்சிபண்டாவோ கரையில் வீசப்பட்ட மீனைப்போலத் துடிதுடித்தான். கடமைக்காக அவன் தனது சகாக்களோடு வெளியிற் செல்லும்போதெல்லாம் தாங்கவியலாத நரகவேதனையை அனுபவித்தான்.

அன்று திருநெல்வேலிச் சந்தையில் நள்ளிரவில் டிறக்கிலே சென்ற இராணுவத்தினர் 13பேர் கண்ணிவெடிக்கு இலக்காகித் துண்டுதுண்டாகக் கிடந்த பொழுது… முகாம் எங்கும் ஓரே அமளிதுமளி.

படைவீரன் ஒவ்வொருவனினதும் முகத்திலும் பயங்கர வெறித்தனமே நர்த்தனமாடியது. “இந்தத் தமிழ் வேசி மக்களைத் தொலைக்க வேணும். ஒருத்தனையும் மிச்சம் மீதி வைக்கக்கூடாது.”

அடுத்தநாள் வெறிப்படை புறப்பட்டது. திருநெல்வேலிச் சந்தியிலிருந்து கந்தர்மடச் சந்திவரை வீடுவீடாகப் புகுந்து அப்பாவி மக்களை, இளைஞர்களைப் பலியிட்டுத் தனது வெறியைத் தணித்துக்கொண்டது.

‘பழி ஓரிடம் பாவம் ஓரிடம்’ என்ற புதுமையான நீதியைக் கண்டு புஞ்சிபண்டா தன்னுள்ளே செத்துப் போனான். அவன் நெஞ்சு வேதனையால் துவண்டு போயிற்று.

ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? “அம்மே, உங்கடை புத்திமதியைக் கேட்காமல் படையிலே சேர்ந்தன். இந்த அக்கிரமங்களை, கொலைகளை, கொள்ளைகளை என்னால் சகிக்க முடியவில்லையே! நான் என்ன செய்ய?” என்று அவன் மலகூடத்திற்குள் பூட்டிக்கொண்டு இருந்து குமுறிக் குமுறி அழுதான்.

“எல்லோருக்கும் ஒரேமாதிரியானதுதானே உயிர்? தமிழனைக் கொல்வதும் சிங்களவனைக் கொல்வதும் எல்லாம் கொலைதானே? சித்திரவதைத் துன்பங்களும் சாவின் இழப்புக்களும் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தானே?” என்று அவன் நினைத்து நினைத்து வேதனையால் சாம்பிப்போனான்.

இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கொலை, கொள்ளை, தீவைப்பு, கற்பழிப்பு, சித்திரவதை என்று ஒரே பயங்கரமயம்! இனவெறி, மொழிவெறி, அதிகாரவெறி என்று அத்தனை வெறிகளும் தலையெடுத்துப் பேயாட்டம் ஆடியபொழுது…

புஞ்சிபண்டாவுக்கு வாழ்வே வெறுத்துப்போய்விட்டது. மிடாக்குடியும், கலாட்டாவும், ஆட்டமும் பாட்டமுமாய் அவன் தன் கவலைகளை மறக்க முற்பட்டான். தன் சகாக்களைப் போலவே வெளியிலே சென்று கண்களை மூடிக்கொண்டு இலக்கின்றிச் சுட்டு அந்தப் பயங்கரச் சப்தத்தில், மரண ஓலங்களில் ஆழ்ந்து போக முயன்றான். ஆனால் எதுவும் அவனுக்கு மனச்சமாதானம் அளிக்கவில்லை.

அன்று பிறிகேடியரின் கட்டளைப்படி அவனும் மேலும் நூற்றுக்கணக்கான படைவீரர்களும் மறக்குகளிலும் கவசவாகனங்களிலும் கலகப் பிராந்தியமாகிய வல்வெட்டித் துறைக்குச் சென்றார்கள்.

அதிகாலைப் பொழுது… தமக்கு நிகழப்போவதை அறியாத சனங்கள் தமது நாளாந்தக் கடன்களில் ஈடுபட்டி ருந்த வேளை அது… இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு உகந்த நேரம்…

வீடுகள் மீது குண்டு வீச்சு. சிதறி ஓடியவர்கள் மீது யந்திரத்துப்பாக்கிப் பிரயோகம்…. அகப்பட்ட பொருட்களைக் கொள்ளையடித்தல்…

தனிமையில் அகப்பட்ட பெண்களைப் பலவந்தப் படுத்தி….

புஞ்சிபண்டாவால் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் ஏதும் அறியாத அபாக்கியவதிகளான அப்பாவிப் பெண்களை அவர்களின் அங்கங்களைக் காமவெறிக்கு இலக்காக்கி அந்தப் பயங்கர வேளையிலும் இன்பசுகம் கண்டவர்களை அவனால் மன்னிக்கவே முடியவில்லை.

புஞ்சிபண்டாவின் யந்திரத் துப்பாக்கி அந்தக் காடையர்களை நோக்கித் திரும்பியது…

ஆனால்…

அவனை முந்திக்கொண்டு வந்த துப்பாக்கிச் சன்னம் – ஒன்று அவன் தலையில் ஒரு புறமாகப் பாய்ந்து மறுபுறமாக வெளிப்பட்டு….

புஞ்சிபண்டா தரையில் சாய்ந்தான்…மங்கிக் கொண்டிருந்த அவன் கண்களிலே அவனது தாயும் சகோதரிகளும் தேவதைகள் போல மிதக்க…“அம்மே” என்ற இறுதி ஓலத்துடன் திறந்தவாய் திறந்திருக்க அவன் கண்கள் மூடிக்கொண்டன.

– தாயகம் (யூன் 1986), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *