கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 9,524 
 

கடந்த ஒரு வாரமாக சென்னையில் பழையபடி கத்திரி வெயில் சுட்டெரித்தது. காலையிலேயே 100 டிகிரிக்கு மேல் கொளுத்த ஆரம்பித்தது.

திடீரென இரவு எட்டு மணிக்கு யாரும் எதிர்பார்க்காமல் வானத்தை பொத்துக்கொண்டு மழை கொட்டியது.

தெருவெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நிற்பதாகத் தெரியவில்லை!

கணேசனுக்கு அன்று நைட் ஷிப்ட். வேறு வழியில்லாமல் ‘ரெயின் கோட்’டை மாட்டிக்கொண்டு மழையிலேயே நனைந்து கொண்டே பைக்கில் புறப்பட்டு கம்பெனிக்கு போனான்.

நடு ரோட்டில் ஒரு மேன் ஹோல் திறந்து கிடந்தது. சற்று ஏமாந்திருந்தால் அதன் மேல் பைக்கை விட்டு தடுக்கி விழுந்திருப்பான். நல்லவேளை, சமாளித்துக் கொண்டான். பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு, சற்று தூரத்தில் கிடந்த மூடியைப் போய் எடுத்து வந்து மேன்ஹோலை மூட நினைத்தான். அதற்காக மூடி இருக்கும் இடத்திற்குப் போய் மூடியை தூக்கிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அவன் பக்கத்தில் வேகமாக வந்த கார் ஒன்று நின்றது! மூடியைப் போட்டு விட்டு அண்ணந்து பார்த்தான் கணேசன்.

“ என்ன கணேசா!…என் கம்பெனி வேலையை ரிசைன் பண்ணி விட்டு கார்ப்பரேஷன் வேலையில் எப்ப நீ சேர்ந்தே?…..எனக்கு கூட தெரியலையே?…” என்று காரிலிருந்து கொண்ட கேட்டவர் அவன் கம்பெனி முதலாளி.

“ இல்லே!…முதலாளி.. மேன்ஹோல் திறந்து கிடந்தது….அதை மூடலாமென்று…”

“ ஏற்கனவே உன் ஷிப்ட்டுக்கு நேரமாச்சு…போய் ஒழுங்கா உன் வேலையைப் பார்…இந்த வேலையை எல்லாம் காலையில் கார்ப்பரேஷன்காரன் வந்து பார்த்துப்பான்!..”

அவன் முதலாளி ஒரு மாதிரி! மறு பேச்சு பேசாமல் கணேசன் ஓடிப் போய் பைக்கை எடுத்துகொண்டு கம்பெனியை நோக்கி விரைந்தான்.

மறுநாள். காலையில் நைட் ஷிப்ட் வேலை செய்த அசதியில் கணேசன் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டிற்கு வந்த நண்பன் முருகன் “டேய் கணேஷ்!…எழுந்திரியடா!…நாமும் முதலாளி வீட்டிற்குப் போய் விட்டு வரலாம்!…”என்று எழுப்பினான்.

“எதற்கடா?..” என்று தூக்கக் கலக்கத்தில் கேட்டான் கணேசன்.

“ அட!..உனக்கு விஷயம் தெரியாதில்லே!…. நம்ம முதலாளியின் ஒரே மகன் நேற்றிரவு காலமாகி விட்டான்!… நம்ம கம்பெனிக்கு கொஞ்சம் முன்னாலே நேற்று மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்தாங்க!… மழை வந்து விட்டதால் மேன்ஹோலை மூடாமல் அப்படியே போட்டு விட்டுப் போயிட்டாங்க!…..நம்ம முதலாளி மகன் செகண்ட் ஷோ பாத்திட்டு வந்திருக்கான்…மேன்ஹோலை கவனிக்காமல் அதன் மேல் விட்டு தடுக்கி விழுந்திட்டான்…அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் அவன் மேல் ஏறி விட்டது..அங்கேயே அவன் உயிர் போய் விட்டதாம்!..”

“ அப்படியா!..” கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்த கணேசனை எழுப்ப படாதபாடு பட்டான் முருகன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *