முன் பின் தெரியாத பகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 3,703 
 

மிகப்பெரிய விபத்தாய் ஆகியிருக்க வேண்டிய நிகழ்ச்சி, நல்ல வேளை பரபரப்பான பாதையை விட்டு அப்பொழுதுதான் மேடேறி இருந்தான். இரு சக்கர வண்டியை ஓட்டி வந்தவன் அந்த மேட்டின் மீதேறி அவன் மீது உரசி வண்டி தடுமாறி விழ போனது.

வண்டியை ஓட்டி வந்தவன் சட்டென தன்னையும் வண்டியையும் நிலைப்படுத்தி சட்டென நிறுத்தாமல் பறந்து விட்டான்.

அங்கிருந்தவர்கள் ஏய்..ஏய்..நிறுத்து, நிறுத்து கத்தியும் சட்டென சிட்டாய் பறந்து விட்டான்.

சே..என்ன மனிஷன் ஒருத்தரை இடிச்சுட்டும் கொஞ்சம் கூட நிக்காமல் எப்படி போறான் பாரு ..!

தென்னவன் அந்த மோதலில் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகித்தான் போனான். வண்டியில் இருந்து அடிபடாமல் தப்பித்த அதிர்ச்சியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், இடித்தவன் உடனே வண்டியை எடுத்து பறந்து விட்டதை கவனிக்க முடியவில்லை.

அருகில் வந்த ஒரு சிலர் அவர் அருகில் வந்து சார் அடி ஒண்ணும் படலியே? இல்லை இல்லை, தலையசைத்து விட்டு மீண்டும் பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

இவன் வங்கிக்கு வந்த நேரம் காலை பதினோரு மணியாக இருந்ததால் வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வங்கி பணிகளை முடித்து வெளியே வந்தவன் களைப்பாக இருக்கவும், பக்கத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்தான்.

“ஜில்லென்று குளிர்பானம்” இப்பொழுதெல்லாம ஒத்துக்கொள்ளாததால் எங்கு சென்றாலும் “காப்பியோ டீயோதான்” குடித்து கொள்கிறான். இந்த வெயிலிலும் சூடாக ஏதாவது குடித்தால்தான் மனதுக்கு தெம்பாக இருக்கிறது.

அந்த ஹோட்டலில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். காலியாக இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.

அருகில் வந்த சர்வரிடம் ஒரு காப்பி கொண்டு வாப்பா,

ஏதாவது சாப்பிடறீங்களா?

என்ன இருக்கு சூடா?

வடை இப்ப போட்டது இருக்கு, சார். கடையில் சாப்பிடுவதை பிரேமா விரும்புவதில்லை. அதுவும் எண்ணெய் பலகாரம் என்றால் சுத்தமாய் ஏற்று கொள்வதில்லை. இவனையும் எங்காவது வெளியில் கிளம்பினால் கடையில் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று பலமுறை சொல்லி சொல்லி அனுப்புவாள்.

ஆனால் இவன் வெளியில் சாப்பிட இது ஒரு வாய்ப்பு என்றுதான் கருதி கொள்வான். அதனால் சூடாய் ஒரு வடை எடுத்துட்டு வா, அப்புறமா காப்பி கொண்டு வந்து கொடு.

இந்த கடையில் காப்பியாகட்டும், வடை எதுவாகட்டும் சுவையாக இருக்கும் என்பது நன்றாக தெரியும்.

அந்த ஹோட்டலை விட்டு கிளம்பும்போது மணி பனிரெண்டுக்கு மேல் ஆகி விட்டது. பிரேமா காத்திருப்பாள். இவனுக்கு பசிக்கிறதோ இல்லையோ அவளுக்கு பசிக்க ஆரம்பித்து விடும். ஆனால் இவன் இருந்தால் தான் சாப்பிடுவாள், இல்லையென்றால் காத்திருப்பான். வேலைக்கு சென்று விட்டால், காலையிலேயே படித்து படித்து சொல்லிவிட்டு போவான், நேரத்துக்கு சாப்பிட்டு விடு, என்று. சில நேரங்களில் சாப்பிடாமல் இருப்பாள், இதற்காக பல முறை அவளுடன் வாக்குவாதம் செய்திருக்கிறான்.

வீட்டில் இரு சக்கர வண்டி இருக்கும், அதுவும் காவல்துறை போர்டு மாட்டிய “புல்லட்டே” வைத்திருக்கிறான். இருந்தாலும் இந்த மாதிரி சில்லறை வேலைகளுக்கு இரு சக்கர வாகனம் எடுத்து வருவதை தவிர்த்து விடுகிறான். ஆட்டோவோ, டாக்சியோ கிடைத்தால் அதுவும் ஏதோ வேலைக்காக போகும்போது போய்க் கொள்வான். திரும்பும் போது பஸ், இல்லையென்றால் நடைதான். இது இவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதாக நினைத்து கொள்கிறான்.

போனவாரம் நடந்து வந்த பொழுது ஒருவன் இருசக்கர வாகனத்தில் வந்து மோதியதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறான். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது ஆட்டோவில்தான் வந்து இறங்கி யிருந்தான்.

வெயில் நேரம், என்ன செய்யலாம்? நடக்க ஆரம்பித்தாலும் வீடு போய் சேர அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விடும். ஆட்டோ பிடித்தால் நல்லது முடிவு செய்தவன் எதிர்த்தாற் போல் நின்ற ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் போவதற்காக அந்த பரபரப்பான சாலையோரம் நின்றான். சிக்னல் விழவும் இவன் பாதையை கடக்க கொஞ்சம் வேகமாக நடந்தான், சட்டென இரு சக்கர வாகனம் ஒன்று அவன் மீது மோத வந்து, சட்டென முன் புறமாக நடந்து சென்று விட்டதால் இரு சக்கர வாகனம் சடன் பிரேக் போட்டு அப்படியே வட்டமடித்து கீழே விழுந்தது.

ஓட்டி வந்தவன் எழ முயற்சித்தாலும் எழ முடியாமல் தடுமாற அருகில் இருந்த நான்கைந்து பேர் ஓடி வந்து அவனை எழுப்பினர்.

நிறைய சிராய்ப்பு காயங்களுடன் இருந்த அவன் தூக்கி விட்டவர்களை, அலட்சியப்படுத்தி விலக்கி விட்டான். அதற்குள் சிக்னல் வழி விட வண்டியை எடுத்து முறுக்கி பறந்தான்.

இத்தனை விஷயங்கள் நடந்தது எதுவும் இவனுக்கு தெரியவில்லை. வரிசையின் நின்ற ஆட்டோ ஒன்றில் அமர்ந்து பி.ஆர்.புரம் போப்பா,

ஆட்டோ அப்படியே திரும்பி அவனை ஏற்றி கொண்டு பறந்தது.

ஆட்டோ போக போக இவன் வீசிக்கொண்டிருக்கும் காற்றை மெல்ல மூச்சால் இழுத்தான்.

சார், நல்ல வேளை சார், ஆட்டோ டிரைவர் சொல்லவும், இவனுக்கு புரியவில்லை.

எதுக்கு நல்ல வேளை?

என்ன சார் இப்படி கேட்கறீங்க? அந்த டூ வீலர்காரன் மட்டும் உங்க மேல மோதியிருந்தானா, இந்நேரம் நீங்க ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருப்பீங்க.

என் மேலயா? என்ன சொல்றீங்க, நான் கவனிக்கவே இல்லையே.

சரியா போச்சு, அவன் நேரா உங்க மேலதான் மோதறமாதிரி வந்தான், நீங்க சிக்னல் விழுகவும் சட்டுனு இந்த பக்கம் வந்துட்டீங்க. அவனுக்கு என்ன பண்னறதுன்னு தெரியறதுக்குள்ள வண்டி வழுக்கி விழுந்து, பாருங்க எந்திரிச்சு எப்படி பறக்கறான்னு.

மனம் கலக்கமாயிற்று. இது என்ன? போன வாரம்தான் இரு சக்கர வண்டியில் ஒருவன் வந்து மோதினான். இன்னைக்கும் ஒருத்தனா? ஆட்டோக்காரன் சொல்றதை பார்த்தா என் மேல வந்து மோதறதுக்குன்னே வந்த மாதிரி சொல்றானே.

பிரேமாவை மட்டும் சாப்பிட சொல்லி விட்டு அங்கிருந்த நாற்காலியில் ஆயாசமாய் உட்கார்ந்தான்.

என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கறீங்க?

அவளின் கேள்விக்கு ம்..ம்.. ஒண்ணுமில்லை, சமாளித்தான்.

எப்பவும் இப்படி இருக்கமாட்டீங்களே, என்ன யோசனை?

ஒண்ணுமில்லைன்னு சொன்னேனே, நீ சாப்பிடு.

நீங்க என் கூடத்தானே சாப்பிடுவீங்க, உங்க தட்டை எடுத்துட்டு வரலையா?

இல்லை, எனக்கு பசியில்லை, ஓட்டல்ல வடை ஒண்ணு சாப்பிட்டுட்டேன், அதனால கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கறேன்.

அவளுக்கு சமாதானமாய் சொல்லிவிட்டாலும் மனம் சலனப்பட்டுத்தான் இருந்தது.

இரண்டு வாரமாய் தொடர்ந்து மோத வரும் இரு சக்கர வாகனம். இவை அகஸ்மாத்தமாக நடக்கிறதா? இல்லை என்னை குறி வைத்து நடக்கிறதா?

இரண்டு மூன்று நாட்களில் அதை மறந்து விட்டான். அன்று வண்டிக்கு இன்சூரன்ஸ் விஷயமாக வெளியே கிளம்ப ஆயத்தமானான்.

ஆர்.டி.ஓ, ஆபிஸ் வந்து வண்டியை சோதித்து காண்பித்து விட்டு, அப்படியே இன்சூரன்ஸ் புதுப்பித்து விட்டு வெளியே வந்தவன், வண்டியை ஓரமாக நிறுத்தி சாலையில் போக வர இருக்கும் வாகனங்களை பார்த்தபடியே இருந்தான்.

அவனுடைய பார்வை சட்டென அவனுக்கு எதிர்புறம் இருந்த கடையை நோக்க ஒரு உருவம் இவனது பார்வையை தவிர்ப்பதற்காக சட்டென தலையை திருப்பி அந்தப்புறம் பார்ப்பது போல் இருந்தது.

இயல்பான தவிர்த்தலாக இவனது மனதுக்கு படவில்லை. மெல்ல இறங்கியவன் அந்த வாகன நெரிசல்களை மெல்ல கடந்து அந்த கடைக்கு சென்றான்.

அதற்குள் அந்த உருவம் வேகமாக அங்கிருந்து விலகி சற்று தள்ளி நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

சந்தேகமில்லை, இந்த பையன் தன்னை தவிர்ப்பதற்காகவே அங்கிருந்து நகர்கிறான். இப்பொழுது அவனை குறி வைத்து நடக்கிறான்.

அதுவரை அந்த பையன் தன்னை இவன் பின் தொடர்கிறானா? என்று பார்ப்பதற்காக தலையை திருப்பி பார்க்க இவனை நோக்கியே வருவது தெரிந்ததும் வேகமாக ஓடி தன்னுடைய வண்டியில் ஏறினான்.

அவனுடைய நேரம் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை, வண்டி “ஸ்டார்ட்” ஆக மறுத்து சண்டித்தனம் செய்து விட்டது.

தோளில் கை விழுகவும், பயத்துடன் திரும்பி பார்க்க இவன் நின்று கொண்டிருந்தான். என் கூட கொஞ்சம் வர்றீயா?

யாரு நீங்க? எதுக்கு என்னை கூப்பிடறீங்க? குரலில் தைரியத்தை காட்டுவது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் அச்சம் இருந்ததை கவனித்து கொண்டான்.

தம்பி நான் கூப்பிட்ட உடனே ஒண்ணும் சொல்லாம என் கூட வந்துட்டா ஒண்ணுமில்லை, இல்லை நான் வர மாட்டேன்னு அடம் பிடிச்சா நான் அடுத்து என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கணும், அவனின் தோளை பிடித்த பிடியில் இவனின் வலிமையை உணர்ந்தான் அந்த இளைஞன்

இவன் குரல் கூட மென்மையாய் சொல்வதாய் இருந்தாலும் உள்ளுக்குள் கடுமையாக இருந்தது.

மெல்ல இறங்கினான். முன்னர் இருந்த தைரியம் அவனிடம் இப்பொழுது இல்லை. சார் நீங்க யாருன்னே தெரியாது, என்னை எதுக்கு சார் கூப்பிடறீங்க.பதற்றமான குரல்.

யாருன்னே தெரியாம நீ மட்டும் இரண்டு முறை என்னை கொல்ல பார்த்தியே தம்பி.

சார் தயவு செய்து நீங்க வேற யாரையோ நினைச்சு என்னை “டிஸ்ட்ரப்” பண்ணறீங்க. நான் காலேஜ் ஸ்டூடண்ட், இன்பார்ம் பண்ணா என்ன நடக்கும் தெரியுமா?

அப்படியா சரி, உன் காலேஜூக்கே கூட்டிட்டு போறேன். அங்க வச்சே உன்னை விசாரிச்சுக்கலாமா?

அவனின் இந்த கேள்வியால் மிரண்டவன் சார் சார் என்னை விட்டுடுங்க, சார் தெரியாம பண்ணிட்டேன்.

பயப்படாதே உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், இப்ப அமைதியா என் கூட வா. அவனின் தோளின் மீது கை போட்டு அருகில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

தம்பி பயப்படாதே, நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன், ஏன் போலீசுக்கு கூட போக மாட்டேன், புரியுதா? என்னைய ஏன் பின்னாடியே தொடர்ந்து வர்றே, உன்னுடைய வண்டியில இரண்டு முறை மோதறதுக்கும் முயற்சி பண்ணியிருக்கே. இதுக்கு மட்டும் பதில் சொல்லு போதும், அதுக்குள்ள ஏதாவது சாப்பிடறதுக்கு ஆர்டர் பண்ணிடறேன், சர்வரை அழைத்தவன் நீ என்ன சாப்பிடறே?

அந்த பையன் திகைத்து நின்றான். இவரை கொல்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்தவன் என்று தெரிந்தும் தன்னை நண்பனை போல் நடத்தி கொண்டிருக்கிறான்.

அண்ணன் அவனிடம் சொன்னது இவன் மோசமான போலீஸ்காரன், அப்படி இப்படி என்று சொன்னானே.

சொல்லு தம்பி, சர்வர் டிபன் கொண்டு வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆகும், நீ பயப்படாம சொல்லு, எதுவானாலும் எனக்கு கோபமே வராது. கவலைப்படாதே.

சார், நான் பாண்டியனோட தம்பி சென்னியப்பன் சார்.

எந்த பாண்டி?

உங்க ஊருக்காரன், உங்க சொந்தகார பொண்ணை அவன் விரும்பறான்னு தெரிஞ்சு அவனை நீங்க வேணும்னே போலீஸ்ல சிக்க வச்சு பத்து வருஷம் ஜெயில்ல போட்டு வச்சிட்டு அந்த பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணி கூட்டி போய் வச்சிருக்கீங்களே அந்த பாண்டி சார்.

பாண்டியோட தம்பியா நீ, ரொம்ப சந்தோஷம். ஒரு விதத்துல நீ எனக்கு தூரத்து உறவுக்காரந்தான் பரவாயில்லை. இப்ப அது முக்கியமில்லை. உங்கண்ணன் உன்னை எப்ப பார்த்தான்.

அவன் எங்க சார் என்னை பார்க்க முடியும்? இரண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கோயமுத்தூர் ஜெயில்ல, அவனை போய் பார்த்தேன். அப்பத்தான் சொன்னான், டேய் என்னை பிடிச்சு ஜெயில்ல போட்ட அந்த தென்னவன் போலீஸ்காரன் நம்ம ஊரு பக்கத்து டவுனுக்கு மாற்றலாய் வந்துட்டதா தெரியுது. அவனாலதான் எனக்கு இந்த தண்டனையே கிடைச்சுது அப்படீன்னு சொன்னான். அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் சார், உங்களை ..

சிரித்தான், சரி என்னை முடிச்சுட்டு நீ எத்தனை நாள் தப்பிச்சு இருந்துட முடியும்? உங்கண்ணன் கூட நீயும் ஜெயில்ல போய் இருக்கறதுதான் மிச்சம்.

சரி உங்கண்ணன் நாந்தான் அவன் ஜெயிலுக்கு போனதுக்கு காரணம்னு சொன்னானே, எதனாலன்னு சொன்னானா?

அதை சொல்லலை சார்,

சரி டிபன் வருது, இரண்டு பேரும் சாப்பிடலாம், அப்புறம் என் வண்டியில இரண்டு பேரும் என் வீட்டுக்கு போயிட்டு மறுபடி உன்னை இங்கயே கொண்டு வந்து விட்டுடறேன்.

சார்..திகைப்புடன் அவரை பார்க்க

பயப்படறியா? கண்டிப்பா உன்னைய ஒண்ணும் செய்ய மாட்டேன்.

சாப்பிட்டு முடித்து விட்டு அமைதியாய் அவன் பின்னால் வண்டியில் ஏறிய அந்த இளைஞன் அமைதியாய் உட்கார்ந்திருந்தான்

பிரேமா இவ்வளவு நேரமா? கேட்டபடி எதிரில் வந்தவள் புதியதாய் இவனை பார்த்ததும் சற்று தடுமாறினாள்.

அவளை பார்த்ததும் அந்த பையனும் தடுமாறினான்.அவன் முகத்தில் தெரிந்தது பயமா, அருவெறுப்பா, புரிந்து கொள்ள முடியவில்லை.

தம்பி நம்ம ஊருக்காரன்தான், தூரத்து சொந்தக்கார பையன்தான். பேரு சென்னியப்பன், அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.

மூவரும் ஊரை பற்றி பேசினார்கள். அவ்வப்பொழுது பிரேமாவின் முகம் மட்டும் சில நேரம் பயந்தது போல் இருக்கும், தானாக அவள் கண்களில் இருந்து கண்ணீரும் வந்தது

பிரேமா இவர்கள் மூவருக்காக காப்பி போட சமையலறைக்குள் சென்ற நேரத்தில் சார் அவங்க முகம் எப்படி சார் இப்படியாச்சு? மெல்ல கேட்டான் சென்னியப்பன்.

எல்லாம் உங்க அண்ணன் செஞ்ச திருவிளையாடல் தான் தம்பி. இன்னொண்ணு நல்லா கவனிச்சியா, நான் அவனோட தம்பின்னு கூட உன்னை அறிமுகப்படுத்தலை. காரணம் என்னன்னா உங்கண்ணன் அவ முகத்துல ஆசிட் வீசுன அதிர்ச்சியில முகம் எல்லாம் வெந்த வெளி காயம் கூட அவ மனசு ஏத்துக்குச்சு, ஆனா அந்த கொடூரத்துனால அவ மனசு பாதிச்சு ஆறு மாசம் மன நிலை சிகிச்சை கொடுக்க வேண்டியதா போச்சு.

ஏற்கனவே நம்ம ஊருல இவளுக்கு இப்படி ஆனது பெரிய விஷயமா பேசினாங்க, அதுல ஆறு மாசம் மனநல ஹாஸ்பிடல்ல இருந்ததுனால பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு முடிவு கட்டிட்டாங்க.

அவன் ஏன் சார் இந்த கொடூரமான காரியத்தை செய்யனும்.

தம்பி பிரேமாவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறதுக்காக இரண்டு வீட்டுலயும் பேசிகிட்டு இருந்தாங்க.

இவன் திடீருன்னு அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி அவங்க வீட்டுல போய் டார்ச்சர் பண்ணியிருக்கான். அவங்களும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்தாங்க. பிரேமாவே கூட அவன் கிட்டே பேசி பார்த்தா. அவன் கேட்கவே இல்லை, எனக்கு கிடைக்காத நீ எவனுக்கு கிடைக்க கூடாதுன்னு இந்த காரியத்தை பண்ணிட்டு வெளியூருக்கு ஓடிட்டான்.

அதுக்கப்புறம் போலீஸ்காரனா என் கடமையை செஞ்சு அவனை பிடிச்சு கொடுத்தேன். அதே நேரம் முதல்லயே பேசி வச்ச மாதிரி பிரேமாவை கல்யாணமும் பண்ணிகிட்டேன். அவ கூட முதல்ல மறுத்தா, நான் இப்படியே இருந்துக்கறேன்னு, நான் ஒத்துக்கலை.

சென்னியப்பன் எதுவும் பேசவில்லை.

வண்டியில் கொண்டு போய் இறக்கி விட்டான். இறங்கிய சென்னியப்பன் இரண்டு நிமிடம் அமைதியாய் நின்றான். தென்னவனின் இரு கைகளையும் சட்டென பிடித்து கொண்டவன் என்னை மன்னிச்சிடுங்க சார்.

வழிந்த கண்ணீரை சுண்டியபடியே தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நோக்கி சென்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *