கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 8,978 
 

மாயவன்

ஜங்-ப்ளோர் சந்தியில் உள்ள றோயல் பாங்கின் வாசற் படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்காணோர் அவசரமாக என்னைக் கடந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். கூப்பிடு தூரத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தும், நான் மட்டுமே அங்கிருப்பது போல் ஒரு உணர்வு. முகம் தெரியாத சிலர் இன்னும் சில முகம் தெரியாதவர்களுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டு செல்ல, வேறு சிலர் தூரப் பார்வையுடன், யோசனைகளுடன் அவசரமாகச் செல்ல, நான் தற்காலிகமாக மறைந்து போனேனோ என்று சந்தேகமாயிருந்தது.

வீடியோ கடைக் காக்கா – அப்பா, அம்மா வைத்த பெயர் இஸ்மாயில் – கூட என்னை மாதிரித்தான் அன்று உணர்ந்திருப்பான். இன்று என்னை கவனிக்காமல் சனம் போகிறமாதிரித்தான் அன்று அவன் றோட்டில் விழுந்து கிடக்கையில், நாங்கள் எல்லோரும் கவனிக்காமல் ஓடினோம்.

காக்காவும், நானும் பெரிய ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும் நல்ல பழக்கம். சிகரெட்டிற்கு காசு இல்லாத போது காசு தந்து உதவியிருக்கிறான். அன்று கூட அவனிடம் வாங்கிய காசைத்தான் கொடுக்கப் போயிருந்தேன்.

“எப்ப மாயா பயணம்?” என்று காக்கா கேட்டான். நான் அப்போது ஜேர்மனி போவதாக ஏற்பாடு ஆகியிருந்தது.

“அடுத்த கிழமை கொழும்பு போகிறேன் – பிறகு அங்காலே ஒரு கிழமையாவது எடுக்கும் என்று நினைக்கிறேன்.” காசைக் கொடுத்தேன்.

“நீயும் போகிறாய். ஆ? எல்லோரும் போகிறீர்கள். நீங்கள்தானடப்பா கொஞ்சம் காசு அனுப்பி என்னையும் கூப்பிட வேண்டும். என்ரை மூனா எனக்கு மூன்று வருசமாக ஒரே சம்பளம்தான் தருகிறான். சாப்பிட்டுப் போட்டு குண்டி கழுவத்தான் காணும்! நப்பிப் பயல்!”

“போய் ஒரு வேளை வேலை எடுத்தேன் என்றால் கட்டாயம் ஹெல்ப் பண்ணுவேன். பயப்படாதேயடா.”

“சரி, வாவன் நாகாஸிலே ஏதாவது குடித்துக் கொண்டு கதைப்பம்.”

நாகாஸிற்குப் போவதற்காக மெயின்ரோட்டிற்கு போகும்போதுதான், ஆர்மி வரிசையாக ட்ரக்குகளிலும் ஐPப்புகளிலும் இருந்து இறங்கியது. சனம் எல்லாம் ஒவ்வொரு திக்கிலும் தலைதெறிக்க ஓட, நான் எனது சைக்கிளில் மெயின் ரோடில் இருந்து பிரிந்து போகும் ஒழுங்கையால் போக எத்தனிக்க, காக்கா எனது சைக்கிளின் பின்னால், கரியரில் ஏற முயலத்தான் முதல் துவக்கு வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனேயே ஒரு நிமிடத்திற்குள், சாரமாரியாக பல துவக்குகள் வெடித்தன. அதில் ஒரு குண்டு காக்காவின் முதுகில் பட்டிருக்க வேண்டும். முதலில், மாமூட்டையை உதைத்தது போல் ஒரு சத்தம் கேட்டது. உடனேயே காக்கா மெதுவாக கேவியது கேட்டது. பிறகு காக்கா என் முதுகில் சாய்ந்ததும் நான் சைக்கிளை வேகமாக மிதித்ததால் அவன் சரிந்து றோட்டில் விழுந்ததும், நான் திரும்பிப் பார்க்க அவன் எழும்ப முடியாமல் கையை உயர்த்தி என்னைக் கூப்பிட்;டதும் – ஒரு நொடிப் பொழுதிலேயே நடந்து முடிந்து விட்டாலும் பல மணிநேரங்கள் எடுத்தது போல் பிரமை.

ஆர்மிக்காரங்கள் போனாப் பிறகு, மெயின் ரோட்டிற்கு போக, ஐந்தாறு பேர் செத்தும் சிலர் காயப்பட்டும் இருந்தனர். காக்காவை மெயின் ரோட்டருகில் இருந்த சாக்கடைக்குள் தள்ளி விட்டிருந்தனர். முதுகில் ஒரு குண்டு பிடரியில் ஒரு குண்டு. பிடரியில் கிட்ட வந்து சுட்டிருக்கிறார்கள் என்று அங்கு நின்றவர் ஒருவர் சொன்னார். சாக்கடையில் விழுந்ததால் முகத்தில் காயம் ஏற்பட்டு முகம் முழுக்க ரத்தம் உறைந்திருந்தது. சாக்கடையில் போன களிவுத் தண்ணீரோடு அவனின் இரத்தம் சேர்ந்து போனது. ஆனால் காக்காவின் கண்கள் மூடாமல் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்றவர் அவன் கண்களில் பயம் தெரியுது என்று சொன்ன போதும் எனக்கென்னவோ கோபம்தான் தெரிந்தது – என்னைக் குற்றம் சாட்டுவது போல்.

அதற்குப் பிறகு ஜேர்மனி பயணம் பிழைத்து . . .

இன்று காலை ஊரிலிருந்து வழக்கம் போல் பாரமாக ஒரு கடிதம் வந்தது: அப்பாக்கு இன்னும் அடிக்கடி இழுக்குது . . . டொக்டர் ஸ்பெலிஸ்;ட்டிடம் காட்ட வேண்டும் என்று சொல்லுகிறார். உன்னை நம்பித்தான் இருக்கிறோம் . . . தங்கச்சிக்கு ரிய+சன் பிறைவேட்டாக எடுக்காமல் எக்ஸாம் பாஸ் பண்ண இயலாது என்கிறாள் . . . ஸ்கூலிலே படிப்பிக்கிறது இல்லையாம் . . . வாடகை இரண்டு மாதம் பாக்கி . . . வீட்டு மனிசி என்னை அன்றைக்கு பச்சையாகத் திட்டினது . . . உன்னை நம்பித்தான் இருக்கிறோம். அப்பா கூட நேற்றுச் சொன்னார்: என்ரை மகன் முந்தி மாரி இல்லை, அவன் இப்ப திருந்திட்டான் . . . இயக்கம் விட்டதிலிருந்து அவன் புது மனிதன் . . . ஏதோ உன்னை நம்பித்தான் இருக்கிறோம். . .

“Hi. Er. . . You got a light on you?” முகம் எல்லாம் லிப்ஸ்டிக்குடன் ஒரு பெட்டை கேட்டது. நான் மௌனமாக என்னுடைய லைட்டரைக் கொடுத்தேன். சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு எனக்குப் பக்கத்தில் இருந்தாள்.

 “I hate it when it’s hot and muggy like this. It just drives me crazy. So crazy,  in fact, that I want to rip my clothes off and run naked,” என்றாள். நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். கிழிப்பதற்கும் கனக்க இல்லை. லேசான இருட்டில் அவள் சிரிப்பது தெரிந்தது. 30 – 35 வயது இருக்கலாம்.

 “I mean this weather makes me feel . . . so horny, you know”. நான் பேசாமல் இருந்தேன். இவள் விரும்புவது என்னிடம் இல்லை. பொக்கட்டில் கொஞ்ச சில்லறைதான் இருந்தது.

 “Hey, you wouldn’t have a quarter on you, would you?” நான் மௌனமாக இருக்க, “I need to make a phone call and I don’t have any change with me,” என்று இயல்பாக, புன்னகைத்தபடி கேட்டாள். நான், “No” என்றேன்.

“Well . . . actually, I live right down there . . . Just a couple minutes from here. So if you could give me a quarter, I will make the phone call and then . . . you could come with me to the apartment  –  I live by myself, you know  –  I will give your money back. What do you say about that?”

“If you live so close, why don’t you go home and make your phone call?”

“Actually, I don’t have a phone-”

“Well . . . like I said, I don’t have any money. Anyway, I got to go,” என்றபடி சேர்போனில் உள்ள என்னுடைய அபார்ட்மெண்டை நோக்கி நடக்கத் தொடங்கினே;. Bitch! கையில் ஊசி குத்தின இடங்கள் குறுகுறுத்தன. இனிமேல் ஹார்ட் சாமான்களை எடுக்கக் கூடாது.

என்னுடைய வாழ்க்கையில் ஒரேயொருக்காத்தான் வேசியிடம் போயிருக்கிறேன். நான் இயக்கத்தில் இருக்கும் போது அது நடந்;தது. மாறன்தான் கூட்டிக் கொண்டு போனான். மாறன் என்னிலும் பார்க்க மூன்று நாலு வயது மூப்பு. தவிர, இயக்கத்திலும் நான் சேர்வதற்கு முன்பே சேர்ந்துட்டான். காம்பிலே இரண்டாவது சீனியர். ஆனால் எங்களுடன் எல்லாம் சகஜமாகப் பழகுவான். இவன்தான் எனக்கு முதன் முதல் கஞ்சா அடிக்கப் பழக்கினவன். அன்றுகூட கஞ்சா அடித்துப் போட்டுத்தான் போனோம்.

முதலில், ரவுன் போய் பிள்ளையார் கபேயில் கொத்துரொட்டி சாப்பிட்டோம். எல்லோரும், பிள்ளையாருக்கே உபசரிப்பது போல விமரிசையாக உபசரித்தார்கள். சாப்பிட்டு முடிந்ததும் பில்லை தன்;னுடைய கணக்கில் எழுதி வைக்கும்படி மாறன் கடைக்காரனுக்குச் சொன்னான். ரவுனிலேயே இருக்கிற கன கடைகளில் இவனுக்கு கணக்கு இருக்குது. ஆனால், ஒருத்தரும் காசு கேட்கிறதில்லை. இவனும் கொடுப்பதில்லை. இப்படிக் கடைகள், பொது இடங்கள் என்று வந்தால் மாறன், “காப்டன் மாறன்” ஆக மாறிவிடுவான். சில சமயம் சங்கேதப் பாசையிலேதான் கதைப்பான். அவனுக்கே பாதி விளங்காது. பிஸ்டலை கண்ணுக்குத் தெரிகிற மாதிரித்தான் வைப்பான். மகசின், கிறனைட் அடங்கிய பெல்ட்டை சேர்ட்டுக்கு வெளியேதான் கட்டுவான். நாங்கள் கதைப்பதை, அவனுடைய நடவடிக்கைகளை கவனிப்பவர்கள், நாங்கள் சாப்பிட்டவுடன் ஏதோ ஆர்மிக் காம்பை அடிக்கப் போகிறோம் என்றுதான் நினைப்பார்கள். அந்தளவுக்கு மாறன் படம் போடுவான்.

சாப்பிட்டு முடிந்ததும், பெற்றோல் ஸ்டேசனுக்குப் பின்னால் பிக்கப்பை நிற்பாட்டிப் போட்டு இன்னுமொரு கஞ்சா சிகரெட்டைத் தயாரித்துக் குடித்தோம். தலையெல்லாம் லேசாகி மிதப்பது போல் இருந்தது. பிறகு, இறங்கி முருகன் கோவில் பக்கம் நடந்து போனோம். ஒரு நாளும் நேராக பிக்கப்பிலேயே போய் அவள் வீட்டில் இறங்குகிறதில்லை என்று மாறன் சொன்னான். (காப்டன் மாறன் அப்பழுக்கற்ற தியாகி என்று ஊர்ச்சனம் இன்று போனாலும் சொல்லும்.)

இருட்டில் பல ஒழுங்கைகளுக்குள்ளால் போனோம். அங்கங்கே நாய்கள் குரைத்தன. நடக்கிறேன் என்ற உணர்வே எனக்கில்லை. மிதப்பது போல் இருந்தது. அடிக்கடி மாறன் தேவையில்லாமல் சிரித்தான். எனக்கும் சிரிப்பு வந்தது. கடைசியாக, ஒரு படலையைத் திறந்து ஒரு சின்னக் கொட்டிலின் முன்னால் வந்து நின்றோம். ஒரு பெரிய நாய் குரைத்துக் கொண்டு வந்தது. மாறன் “த்-த்-த்,” என்றான். நாய் வாலை ஆட்டியது. பக்கத்தில் நின்ற பனை மரத்தின் ஓலைகள் காற்றில் ஆடி, உராய்வதால் எழும்பிய சத்தம் அந்த இரவின் அமைதியை குழப்பிக் கொண்டிருந்தது.

கொட்டிலுக்குள் இருந்து ஒரு மெல்லிய உருவம் வெளியில் வந்து, “வாங்கோ, உள்ளே வாங்கோ,“ என்றது. ஒரு பெண்ணின் குரல். உள்ளே ஒரு சின்னக் குசினியும் ஒரு அறையும் இருந்தது. மூலையில் ஒரு விளக்கு மங்கலாக, காற்றில் ஆடியபடி எரிந்தது.

“இது தோழர் டேவிட். அண்டைக்கு காம்ப் அடிக்கப் போன வீரர்களுள் இவரும் ஒரு ஆள். அதிலே ஒரு குண்டு தோளில் பட்டு சாகக் கிடந்தவர்,“ என்று மாறன் என்னை அந்தப் பெண்ணிற்கு அறிமுகப்படுத்தினான். முழுக்கப் பொய்! ஆனால் நான் அடக்கமாகச் சிரித்தேன். மங்கலான விளக்கொளியில் அந்தப் பெண் என்னைப் பார்த்து, புன்னகைப்பது தெரிந்தது. அவளின் கண்கள் விளக்கொளியில் மின்னின. “அப்ப நான் வெளியிலே இருக்கிறேன்,“ என்று போட்டு மாறன் வெளியிலே போயிட்டான். நானும் அவளும் அங்கிருந்த அறைக்குள், விளக்கை எடுத்துக் கொண்டு போனோம். உள்ளே ஒரு பாயும், பக்கத்தில் கட்டியிருந்த ஒரு ஏணையில் குழந்தை படுத்திருப்பதும் தெரிந்தது. கேள்விகள் கனக்க கேட்க வேண்டும் போலிருந்தாலும், கஞ்சாவும் விளக்கொளியில் தெரிந்த வளைவுகளும் என்னை மௌனமாக்கின. நளினியுடன் செய்வதற்கும், அன்று செய்ததற்கும் பயங்கர வித்தியாசம்.

பெற்றோல் ஸ்டேசனுக்கு திரும்பி நடந்து போகையில், மாறனிடம் எழும்பிய கேள்விகளைக் கேட்டேன்.

“அவளுடைய புருஷன் இங்கே சந்தைக்குள் குண்டு போட்ட போது செத்திட்டான். பிறகு, அவள் என்ன செய்கிறது? இதை ஒரு சேவை மாதிரி செய்கிறாள். புருஷன், சிங்களவன் போட்ட குண்டினால் செத்ததால் சிங்களவனுக்கு எதிராக போராடுகிற எங்களிற்கு அவள் தருகிற சப்போர்ட்தான் இது. தான், குழந்தையையும் வைத்துக் கொண்டு இயக்கத்தில் சேரக் கஷ்டம் என்பதாலே, எங்களிற்கு உதவி செய்வதன் மூலமாவது நாட்டிற்கு சேவை செய்வோம் என்று இப்படிச் செய்கிறாள். சிங்களவர்களை இப்படி பழிவாங்குகிறாள்! ஆனால் நான் சிலசமயம் காசு கொடுக்கிறனான் – அதுதான் உன்னைக் கூட பெரிய ஆள்போல அறிமுகப்படுத்தினான். அவளிற்கு, இப்படி எங்களை திருப்திப்படுத்தவதால், ஒரு மனநிறைவு கிடைக்குது. சண்டைகளிலேயே காயப்பட்டவர்கள் என்றால் அவளுக்கு கூடத் திருப்தி!”

குமரன்

என்னோடுதான் மாயவன் இருக்கிறான். எல்லோரும் மாயா என்றுதான் கூப்பிடுவம். ஆனால் இயக்கத்தில் இருக்கும் போது அவன் பெயர் டேவிட். இரண்டு பேரும் ஊரிலே ஒன்றாகத்தான் படித்தனாங்கள். முந்தியெல்லாம் இவன் எப்போதும் சந்தோசமாகவே இருப்பான். ழுஃடு முதல் தரம் ஃபெயில் ஆன போதும் கூட சிரி;த்தபடியே திரிந்தான். இப்படித்தான், ஒருமுறை நாங்கள் எல்லோரும் கிறிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, நந்தினி என்று எங்களுடன் படிக்கும் பெண் ஒருத்தி, நாங்கள் விளையாடிய கிறவுண்ட் பக்கத்தாலே போக, மாயவன் “ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா” பாட்டை பயங்கரமாக கொச்சைப்படுத்திப் பாடினான். நாங்கள் எல்லோரும் சிரித்தோம். இதற்கிடையில் பாற் பண்ணிக் கொண்டிருந்த மாயா சிக்ஸர் அடிக்கக் கூடிய மாதிரி போல் பண்ணச் சொல்லிப் போட்டு வைடாக போடப்பட்ட பந்துகளை அடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தான். ஏனென்றால் போல் பண்ணியது முரளி. இவனை நாங்கள் எங்களிற்கு ஏன் பிரச்சினை என்று போட்டு, கப்டனாக ஆக்கினாங்கள். ஆனால், இவனுக்கு தான் ஏதோ மிலிட்டரி கப்டன் என்று நினைப்பு. ஒரே சர்வாதிகாரம். அதற்கிடையில் இவனுக்கு ஒரு வடிவான தங்கச்சி. முரளியைத் தவிர ரீமில் இருக்கும் மற்ற எல்லோரும் அவளைத்தான் கட்டுகிறது என்று கனவு. இது அவனுக்கு சாதகமாய் அமைந்;திற்றுது. இவன் சொல்கிறதை தங்கச்சிக்காக எல்லோரும் கேட்போம். அவன்தான் இப்ப மாயாவுக்கு வைட் போலாக போட்டுக் கொண்டு இருந்தான். மாயா அடிக்கடி சொல்லுகிற மாதிரி அவனுக்கு எதிராக புரட்சி அன்று எழும்பும் போல் இருந்தது. ஆனால் அதற்கிடையில், இரண்டு பக்கத்திற்கும் பொதுவான எதிரி தலையை நீட்ட, நாங்கள் கூட்டணியானோம். நந்தினியின் சொந்தங்களும், பந்தங்களும் என்று ஒரு குட்டிப் பட்டாளமே வந்துவிட்டது. எங்களில் கனபேருக்கு நல்ல அடி.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு மாயவன் நந்தினிக்கு மை ஊத்;திவிட்டான். அவள் ஸ்கூல் முடிந்து, வீட்டிற்கு ஒரு ஒழுங்கையால் போகும்போது, இவனும் இன்னுமொருவனும் சைக்கிளில் பின்னால் போய் மையை ஊத்திவிட்டாங்கள். இவன் சைக்கிளில் முன்னால் இருந்ததால் அவளுக்கு யார் மை ஊத்தினது என்று தெரியாமல் போய்விட்டது. இப்படி அவன் எப்போதும் விளையாட்டு பகிடி என்று இருப்பான்.

ஆனால் அவன் இயக்கம் போய் வந்ததிலிருந்து சரியான மாற்றம். இங்கு சிலர் அவனைப் பைத்தியம் என்று கதைக்கும் அளவிற்கு மாற்றம். சில நேரங்களில் அவன் இந்த உலகத்திலேயே இருக்கிறதில்லை. சில நேரங்களில் கதை கொடுத்தால் தூரப்பார்வையுடன், செவிடு மாதிரி இருப்பான். இப்ப கொஞ்சக் காலமாக நல்லாக் குடிக்கவும் தொடங்கிவிட்டான். ஆனால் மற்றவர்கள் மாதிரி குடித்துப் போட்டு சத்தம் போடுகிறதில்லை. அமைதியாகவே இருப்பான். எனக்குக் கூட சில நேரங்களில் இவனோடு இருப்பதை நினைத்துப் பயமாக இருக்கும். ட்ரக்ஸ் அடிக்கிறான் என்றும் கதை.

கனடா வந்ததில் இருந்து இரண்டு மூன்று வேலை செய்தவன். ஆனால் ஒன்றிலும் இரண்டு மாதம் கூட நிலைக்கவில்லை. இப்ப கன காலமாக வெல்ஃபேர் எடுத்துக் கொண்டு இருக்கிறான். அதற்கிடையில் இவனுடைய குடும்பம் எல்லாம் தகப்பனுக்கு சுகமில்லை என்பதால் கொழும்பு வந்திட்டினம். அன்றைக்கு ஒரு நாள் இவனுடைய தாய் ஃபோன் பண்ணி, இவன் இல்லாததால், என்னோடு கதைத்தா. கதைத்தா என்பதும் பார்க்க அழுதா என்பது கூடப் பொருந்தும். காசு அனுப்புகிறான் இல்லை என்றா. ஃபோனில் கதைக்காமல், சத்தம் போடாமலே இருக்கிறான் என்றா. புருஷனிற்கு இன்னும் சீரியஸாகவே இருக்குது, ஸ்பெஷலிஸ்டடிம் காட்டக் காசு வேண்டும் என்றா. பிறகு அழுதா. நான் அவனோடு கதைக்கிறேன் என்று போட்டு வைத்திட்டேன். ஆனால், நான் கதைக்கேலை. எப்படிக் கதைக்கிறது? நான்தான் விசரன்போல கதைத்துக் கொண்டிருபN;பனே தவிர, அவன் கதையான், ஏதோ தியானத்தில் இருப்பது போல் இருப்பான்.

விசரன்!

மாயவன்

அபார்ட்மென்டில் என்னுடைய றூம்மேட், குமரன், வுhந டீசனைபந ழn வாந சுiஎநச முறயi என்ற படம் பார்த்துக் கொண்டிருந்தான். நானும் விஸ்கிப் போத்தலைத் திறந்து, குடித்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். “வேலையேதும் அம்பிட்டுதோ?” என்று கேட்டான். நான் டிவியில் இருந்து கண்களை எடுக்காமல், “இல்லை,“ என்று தலையாட்டினேன். பேசாமல் இருந்தான்.

இவனிற்கு, நான் ஏதோ வேலை செய்ய விருப்பமில்லாமல்தான் ஊர் சுற்றிக்கொண்டு திரிகிறேன் என்று நினைப்பு. ட்ரை பண்ணுகிறேன்; கிடைக்கேலை. நான் என்ன செய்ய?

இவன் ஒரு பக்கா கப்பிட்டலிஸ்ட். றூம் முழுக்கப் புதுப்புது சாமான்கள் வாங்கிப் போட்டிருக்கிறான். இரண்டு, மூன்று இடத்தில் சீட்டுக் கட்டுகிறான். இரண்டு வேலை செய்கிறான். மெசின்! விசர் பிடித்த மெசின்! ஆனால், மாதக் கடைசியில் ஒரு பத்து டொலர் கேட்டால், மூக்காலே அழுவான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் புத்திமதி சொன்ன மாதிரி எனக்குப் புத்திமதி சொல்லுவான். இப்படி உழைத்துச் சேர்த்து என்னத்தைக் கண்டான்? வாங்கியதெல்லாம் புதுசு புதுசாக இருக்குது. ஒன்றையும் அனுபவிக்கிறதில்லை. ரிமோட் கண்ட்ரோலிற்கு பொலீத்தீன் பாக்காலே கவர் போட்டு வைத்திருக்கிறான். அதை மெதுவாக எடுத்து, டி.வி.யை, டெக்கை மெதுவாக ஒன் பண்ணிப்போட்டு, பத்திரமாக திரும்ப மேசையில் வைத்து விடவேண்டும். சனல் எல்லாம் மாத்தக் கூடாது! கொஃபி ரேபிளை தினம் நாலு தரமாவது துடைப்பான். ரொய்லட் ரிசு பிங்கலரிலே இருக்க வேண்டும். ஏனென்றால், பாத்ரூம் சுவர் பிங்கலர்! இந்த நாய் ஊரிலே பத்தைகளிற்குப் பின்னாலே, எறும்பு, ©ச்சி கடிக்க, குந்திப் போட்டு, இங்கே வந்து பிங்க் ரிசு கேட்குது. நாளைக்கு சாகும்போது அப்பதானே மரண அறிவித்தலில் அறிவிக்கலாம்: பிங்கலர் பாதரூமில் பிங்க் ரிசுவால் துடைத்த அன்னாரின் ©தவுடல் . . .

விசர் நாய்!

டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த படத்தில் சிலர் ட்ரெயின் ஒன்றை, தாங்கள் கட்டிய பாலத்தின் மேல் போகும்போது வெடிக்க வைக்க எத்தனிக்கையில், அதைத் தெரிந்து கொண்ட எதிரிகள் இவர்களை நோக்கிச் சரமாரியாக சுட்டார்கள்.

இதேபோலத்தான் நாங்கள் ஆர்மி வாகனங்கள் சிலதைத் தாக்கிய போது சுட்டோம். தாக்குதல் முடிந்ததும், வாகனங்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்தோம். காயப்பட்டு, சாகாமல் இருந்த சிலரை எங்கடை ஆக்கள் பிஸ்டலால் தலையில் சுட்டார்கள். நான் ரோட்டிலிருந்து விலகி, கவிழ்ந்து கிடந்த ஐPப்புக்குள் இருந்து, இரண்டு ளுஆபுகளை எடுத்தேன். அப்போதுதான் மாறன் என்னைக் கூப்பிட்டான். “டேவிட்! டேய்! இங்கே பார் ஒரு சிங்களவன் கிடக்கிறான். இன்னும் சாகலை போல இருக்குது.” நான் ளுஆபுகளை எடுத்த ஐPப்பிலிருந்து ஒரு பத்தடி தூரத்தில் விழுந்து கிடந்தான். கிட்டே போய்ப் பார்க்க, அவன் சுவாசிப்பதும், இலேசாக முனகுவதும் தெரிந்தது. அவன் வயிற்றுப் பகுதியில் பெரிதாகக் காயமேற்பட்டிருந்தது. தொடையிலும் இரத்தம் கசிந்தது. குப்புறக் கிடந்தவனை, மாறன் காலால் தள்ளி திருப்பினான். அடிவயித்தில், இடதுபக்கமாக, பெரிய துவாரமே ஏற்பட்டிருந்தது. இரத்தம் தோய்ந்த குடல், வெள்ளைச் சவ்வுகளுடன், வயித்தின் வெளியே துருத்திக் கொண்டு, சரிந்து நிற்க, இரத்தம் மெதுவாக வெளியே கசிந்தது. மாறன் அவனைத் திருப்பியதாலோ என்னவோ, அவன் கண்களை இலேசாக திறந்து எங்களைப் பார்த்தான். “வத்துர . . . வத்துர,“ என்று முனகினான். அவன் தண்ணி கேட்கிறான் என்று மாறன் சொன்னான். இதற்கிடையில், மாறன், சிங்களவன் போட்டிருந்த ©ட்ஸைக் கழட்டி, தான் போட்டுக் கொண்டிருந்தான். அவன் கண்களை மூடுவதும், கொஞ்ச நேரத்தில் திறப்பதுமாக இருந்தான். சின்னப் பெடியன். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும். திடீரென்று, இவனுக்கும் ஒரு தாய், தகப்பன் இருக்கும் என்ற உணர்வு வந்தது. இவனை இந்த நிலையில் பார்த்தால் என்னபாடு படுவார்கள். பாவம்.

நளினியும், மற்றவர்களும் அபகரித்த ஆயுதங்களோடு வயலுக்குள் இறங்கி, பனைக் காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். நானும் நான் எடுத்த இரண்டு ளுஆபுகளையும், ளுடுசுஐயும் எடுத்து, போகத் தயாரானேன். அந்த சிங்களப் பெடியன் சுற்றிவர என்ன நடக்குது என்றுணரத் தொடங்கியிருக்க வேண்டும்: திடீரென, ஆனால் பலவீனமாக, “ழே! ழே ளாழழவ . . . pடநயளந! ழே!” என்று கெஞ்சினான். இதற்கிடையில், மாறன், சிங்களவனுடைய ©ட்ஸை போட்டுவிட்டு எழும்பி நின்றான்.

“டேவிட். எல்லாம் எடுத்துக் கொண்டு வெளிக்கிடு. மற்றவர்களும் போறாங்கள். நிய+ஸ் போய் அவங்கள் ஹெலியில் வருவாங்கள். அதற்குள்ளே பனைக் காட்டுக்குள்ளே புகுந்து விடவேண்டும்,“ என்றவன், சிங்களவன் முனகுவதைப் பார்த்துவிட்டு, “இந்த நாய் இன்னும் சாகேலையே?” என்றான்.

பிறகு ©ட்ஸ் காலால் சிங்களவனின் முகத்தில் உதைத்தான். “சா! நாயே, சா!” அந்தப் பெடியனின் உடம்பு, இவன் ஒவ்வொருதரம் ©ட்ஸ் காலால் உதைக்கவும், துடித்தது. மாறன் பல தரம் சிங்களவனின் முகத்தில் உதைத்ததில், சிங்களவனின் முகம் உருக்குலைந்து, தோலுரிந்து, இரத்தத்தில் தோய்ந்திருந்தது. மாறன் என்னையும் வந்துதைக்கச் சொன்னான். ஆனால், நான் அவன் உதைப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன். “உனக்கு மச்சான், மிடில் கிளாஸ் திமிர். நீ இவங்களுடைய ஆதிக்கத்தாலே பாதிக்கப்படவில்லை. அதுதான் உதைக்கப் பஞ்சிப் பட்டுக் கொண்டு நிற்கிறாய்,“ என்றான். தூரத்தில் ஹெலி வருவது கேட்டது. “மாறன்! டேய்! வா போவம். அவங்கள் வாறாங்கள்.”

“இருடா. இவன் இன்னும் சாகேலை,“ என்றபடி, ஒருவித வெறியுடன், இன்னும் இடித்தான். அலெக்ஸ{ம் கிரியும் தூரத்திலிருந்து எங்களை வரும்படி கூப்பிட்டாங்கள். நான் வருவதாக சைகை காட்டினேன். கொஞ்சம் முதல் பார்த்த அந்தப் பெடியனின் முகமே இப்ப இல்லை. அங்கங்கே எலும்புகள் தெரிந்தன. இரத்தத்தில் முகம், கழுத்தெல்லாம் தோய்ந்திருந்தது. மாறன் ஒவ்வொரு தரம் உதைக்கவும், வெளியில் துருத்தியபடி இருந்த சிங்களவனின் குடல், இதர வயிற்றுப் பாகங்கள் குலுங்கின.

குமரன்

நான் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனான், சாடையாக நித்திரை வருகிற மாதிரி இருக்க, கொஞ்சம் நித்திரையாகி விட்டேன். என்ன செய்கிறது? பகல், இரவு என்று வேலைக்குக் கூப்பிடுகிறாங்கள். நிம்மதியாகப் படுத்து வருஷக் கணக்காகி விட்டது. உழைக்கிற வயதிலே உழைத்து முன்னுக்கு வந்துவிட வேண்டும். எனிவே, சோஃபாவிலே நித்திரையாகிக் கொண்டிருந்தனான். கிளாஸ் கீழே விழுந்து உடைகிற சத்தம் கேட்டு எழும்பினேன். சோஃபா, கொஃபி ரேபிள் எல்லாம் சாராயம் ஊத்தப்பட்டிருக்குது. இவன் – மாயா – ஏதோ காக்கைவலி வந்த மாதிரி கையைக் காலை உதறிக் கொண்டிருக்கிறான். எனக்கு சோஃபாவைக் கிளீன் பண்ணுகிறதா, அல்லது இவனைக் கவனிக்கிறதா என்று ஒரே குழப்பம் ஆகிவிட்டுது. புது சோஃபா! சேலிலே ஆயிரத்து அறுநூறு ரூபாய்க்கு வாங்கினான். அதற்கு மேலே இந்த புளுவுஇ Pளுவுஇ னுனுவு என்று எல்லாமா இரண்டாயிரத்துக்குக் கிட்ட வந்துட்டுது. எனிவே, நான் குசினிக்குள்ளே ஓடிப் போய், இரும்பால் செய்த சாமான் எதுவும் இருக்குதா என்று தேடினேன். எனக்குத் தெரிந்து இவனுக்கு காக்கை வலி இல்லை. ஆனால், யார் கண்டது?

மாயவன்

இப்ப சிங்களவன் இருந்த உருக்குலைந்த நிலையில்தான், பிறகு மாறனும், நளினியும் குண்டு வெடித்து செத்த போதிருந்தார்கள். இருவர் உடல்களும் காம்பிற்கு கொண்டு வந்தபோது ஊதியிருந்தது. உடம்பு முழுக்க ஒரு நாவல் கலர் படிந்திருந்தது. செல்கள் உடல் முழுக்கத் தாக்கி, உடலெல்லாம் உருக் குலைந்து, இரத்தம் உறைந்திருந்தது. மாறன் போட்டிருந்த வெள்ளி மோதிரம் அவனை அடையாளம் காட்டியது. நளினியின் இரும்புக் காப்பு அவனை அடையாளம் காட்டியது.

சிங்களவனை இன்னும் மாறன் உதைத்துக் கொண்டிருந்தான். இவனுக்கு உண்மையாகவே வெறி. ஹெலி கிட்ட வந்து கொண்டிருக்குது. தரை மூலமாகவும் சப்போர்ட் வந்து கொண்டிருக்கும். ஆனால், இவன் வாறான் இல்லை. மற்றவங்கள் எல்லாம் வயல் தாண்டி பனைக் காட்டிற்கு கிட்டே போட்டாங்கள். இதனாலேதான் ட்ரக்ஸ் அடிக்காதே என்று மாறனிற்குச் சொன்னான். இவன் அடித்தால்தான் உசாரா அட்டாக் பண்ணலாம் என்றான். இப்ப போதையில், சுயநினைவில்லாமல் அந்தப் பெடியனை உதைத்துக் கொண்டிருக்கிறான்.

நான் என்னுடைய பிஸ்டலை எடுத்து, அந்தச் சிங்களவனின் தலையில் குனிந்து சுட்டேன். குண்டு தாக்கிய வேகத்தாலோ, அல்லது மிச்சமிருந்த உயிரும் விலகியதாலோ, அவன் உடல் ஒரு முறை துடித்தது. “வா போவம்,“ என்று மாறனைக் கூப்பிட்டேன்.

திடீரென அந்தச் சிங்களப் பெடியன் என்னை நோக்கி ஓடி வந்தான். கையில் ஒரு மொத்தமான இரும்புக் கம்பி. நான் உடனே பாய்ந்து அந்தக் கம்பியைப் பிடுங்கினேன். பிஸ்டலால் சுடலாம் என்றால் பிஸ்டலைக் காணேலை! மாறனையும் காணேலை! சிங்களவனை அந்தக் கம்பியாலேயே அடித்தேன். “ணங்,“ என்று சத்தம் கேட்டது. சிங்களவன் சாய்ந்து விழுந்தான்.

எனக்கு எங்கிருந்தோ திடீரெனக் கோபம் பொங்கி வந்தது. கொஞ்சம் முதல், மாறன் என்னை வந்து சிங்களவனை உதைக்கச் சொன்ன போது கூட எனக்குப் கோபம் வரவில்லை. ஆனால், இப்போதோ கட்டுக்கடங்காத, இனந்தெரியாத கோபம். காக்காவின் இரத்தம் தோய்ந்த, இலையான் மொய்த்த முகத்திலிருந்து கோபமாக, குற்றஞ்சாட்டுகிற கண்கள்;; நளினியின் செத்த ஊதிய உடம்;பு; மாறனின் உருக்குலைந்த, இரத்தம் உறைந்த உடம்பு – எல்லாம் என் கண்களிற்கு முன்னால் வந்தன. அம்மாவின் கடிதம் – “உன்னை நம்பித்தான் இருக்கிறோம்,“ என்று சொல்லும் அம்மா. பின்னாலேயே, அப்பாவும், தங்கச்சியும். அவர்களுடன் நளினியையும், மாறனும், காக்காவும் வந்து, “உன்னை நம்பித்தான் இருக்கிறோம்,“ என்று திரும்பத் திரும்ப, முதலில் மெதுவாகவும், பிறகு இரைந்தும், சொல்ல சிங்களவனின் மேல் ஆத்திரத்துடன் பாய்ந்து, இரும்புக் கம்பியால் அடித்தேன். முகத்திலும், மண்டையிலும், நெஞ்சிலும் திரும்பத் திரும்ப அடித்தேன். முதலில் பார்த்த சிங்களப் பெடியனின் முகமில்லை அது. மாறன் ©ட்ஸ் காலால் உதைத்ததால், அவன் முகத்தில் ஏற்பட்டிருந்த காயங்கள் அவனுடைய முகத்தை உருக்குலையச் செய்திருந்தன. ஆனால், இவனின் முகம் வேறு மாதிரி இருந்தது.

ஆனால் நான் இரும்புக் கம்பியால் பல தரம் அடித்ததும், அவனின் முகம் இரத்தத்தில் தோய்ந்து, உருக்குலைந்து, பழையபடி மாறன் ©ட்ஸ் காலால் உதைத்த சிங்களவனைப் போல – அதேநேரத்தில், இரத்தம் உறைந்த காக்காவின் முகத்திலிருந்து என்னைக் கோபத்துடன் ஊடுருவிய அதே கண்களைக் கொண்டு – இருந்தான். உண்மையில், அந்தச் சிங்களவனின் முகத்தின் தனித்தன்மையை, அடையாளங்களை அவனின் இரத்தம் முகமூடி போல மறைக்க, அவனின் முகம், ஒரே நேரத்தில் மாறனின், நளினியின் உருக்குலைந்த முகங்களைப் போலிருந்தது.

தூரத்தில் இன்னும் ஹெலியின் சப்தம் கேட்டது. நான் என்னுடைய பிஸ்டலைத் தேடத் தொடங்கினேன். டி.வி.யில் பாலமொன்று வெடித்துச் சிதற, ஒரு ட்ரெயின் ஆற்றில் விழுந்தது. தூரத்தில் நானும், மாறனும் பனைக் காட்டுக்குள் ஒடுவது டி.வி.யில் படிந்திருந்த இரத்தக்கறைகளினூடாக மங்கலாகத் தெரிந்தது.

(சரிநிகர், 1996)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *