முகமூடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 6,831 
 

பாட்டிக்குப் பற்கள் எதுவும் அற்ற பொக்கை வாய். அந்த வாயில் எப்போதும் தவழும் புன்சிரிப்பு. இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பொக்கை வாய்க்குப் பற்கள் கட்டியது இல்லை. பல் இல்லாது வாழ்ந்த பாட்டி பழைய கலாச்சாரங்களின் உறைவிடம் என்று சொல்லலாம். கச்சைக் கட்டாது சேலை கட்டும் காலத்தைச் சார்ந்தவர் அவர். ரமணனுக்குப் பாட்டியின் வாசம் தெரியும். அவரின் பாசம் தெரியும். சாப்பாட்டைக் குழைத்து வாயில் அன்போடு ஊட்டினால் அதில் இருக்கும் சுவை விளங்கும். பாட்டி உணவோடு நின்றுவிடாது ரமணனுக்குப் பலவிதமான அறிவும் ஊட்டினார். அந்தப் பாட்டி ரமணனுக்காக ஒரு முகமூடி செய்தார். அது ஒரு அழகான, அற்புதமான முகமூடி. அதில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. அந்தச் சிறப்பு அம்சங்களை ரமணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடே பாட்டி அதை வனைந்தார் என்பது ரமணனுக்கு விளங்கத் தொடங்கியது. ரமணனுக்குப் பாட்டி மீது மிகவும் பாசம். பாட்டி சொல்லது அர்த்தம் நிறைந்த நாம் பின்பற்ற வேண்டியவையே என்கின்ற அசையாத நம்பிக்கையும் இருந்தது. பாட்டி வனைந்த முகமூடியை உடனடியாக அவனிடம் பாட்டி கொடுத்துவிடவில்லை. அதற்கு மேலும் மேலும் அவர் அழகூட்டினார். இறுதியில் இறக்கும் தறுவாயில் பாட்டி ரமணனிடம் அந்த முகமூடியை முற்றுமாய் கையளித்தார். ரமணன் அதைப் பெருமையோடும் பொறுப்போடும் பெற்றுக் கொண்டான். பெற்றுக் கொண்டதோடு மட்டும் நிற்காது அதை அணிந்தும் கொண்டான். அது அவனுக்கு அழகாக இருந்தது.

பாட்டி இறந்த பின்பு அவன் கையில் அவர் தந்த முகமூடி அவர் நினைவாக எப்போதும் இருந்தது. அதை அணிந்து கொள்வதில் அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அதில் பொதிந்து கிடந்த அனைத்து அம்சங்களையும் அவன் ஆழ்ந்து கவனிப்பான். அது அவனுக்கு அடங்காத பூரிப்பை உண்டு பண்ணும். இவ்வளவு கைவண்ணமும் அறிவும் பாட்டியிடம் இருந்ததை அவன் அவர் உயிரோடு இருந்த போது முழுமையாக அறிந்து இருக்கவில்லை.

காலம் ஏவுகணையாக வயதுகளைப் பின்தள்ளி வாழ்க்கையை முன்நகர்த்தியது. பாட்டி போன பின்பு அம்மா ரமணனை அதிகம் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பாட்டி கொடுத்த முகமூடி பற்றித் தெரியும். அதை ரமணன் அணிவதையும் பார்த்து இருக்கிறார். அவருக்குத் தானும் ஒரு முகமூடி செய்து ரமணனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்போதோ உருவாகி இருந்தது. ஆனாலும் நிறைய வீட்டு வேலைகள் அவருக்கு இருந்தன. இருந்தும் கஸ்ரப்பட்டு நேரம் ஒதுக்கி அதற்கு அவர் செயல் வடிவம் கொடுத்தார்.
அவர் அதைச் சிறிது சிறிதாகச் செருக்கித் தனக்குத் தெரிந்த சித்திரங்கள், வர்ணங்கள் என்று அதில் பொதிந்து, அதை ஒரு கலைப் பொக்கிசமாக உருவாக்கத் தொடங்கினார். ரமணன் அதைப் பார்த்து இரசித்தான். அதை அம்மா மொத்தமாக ஒரு நாள் தன்னிடம் தருவார் என்பது அவனுக்குத் தெரியும். அது தனது கைக்கு வரும் காலத்திற்காக அவன் காத்திருந்தான். அம்மா அதை ஒரு நாள் அவனிடம் எதிர்பார்த்தது போலக் கொடுத்து அவனைக் கவனமாக வைத்திருக்குமாறு கூறினார். அதை அவன் பெருமையோடு வாங்கி அணிந்து அழுகு பார்த்தான். அவனுக்கு அம்மா மீது அளவுகடந்த அன்பாக இருந்தது. அம்மா முகமூடி செய்வதை ரமணனின் அப்பா அவதானித்துக் கொண்டு வந்தார். அவருக்கு அதைவிட அழகான முகமூடி ஒன்று செய்து ரமணனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் அதைச் செயற்படுத்தினார். அவர் அப்படி ஒரு முகமூடி செய்வது யாருக்கும் தெரியாது. ரமணனுக்கும் அது தெரியாது. அப்பா தனக்காக இவ்வளவு நேரம் செலவழித்துச் செய்வார் என்று அவன் எண்ணி இருக்கவில்லை. ரமணனின் அப்பா செய்த முகமூடியை அவர் உடனடியாக ரமணனிடம் கொடுத்துவிடவில்லை. அவர் அது ரமணனின் அம்மா செய்ததைவிட அழகாக, யொலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்தார். அதற்காக அதிக காலம் செலவழித்தார்.

அப்படிச் சில காலம் கழிந்த பின்பு ரமணனிடம் அப்பா தனது அந்த முகமூடியைக் கொடுத்தார். ரமணன் அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டான். அதைப் பார்க்க அது பாட்டி, அம்மா ஆகியோர் தந்ததைவிட மிகவும் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் அதை மிகவும் பெருமையோடும், ஆர்வத்தோடும் அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டான். பாட்டி, அம்மா, அப்பா ஆகிய மூவரும் ரமணனுக்கு முகமூடி செய்து பரிசாகக் கொடுத்ததை பார்த்த அக்காள் இரகசியமாக ரமணனுக்காக ஒரு முகமூடி செய்தார். அவர் முகமூடி செய்தது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் திடீரென ரமணனின் முன்பு வந்து அதைப் பரிசாகக் கொடுத்தார். ரமணனுக்கு மிகவும் சந்தோசமாகவும், திகைப்பாகவும் இருந்தது. அவன் அக்காவிற்கு நன்றி கூறிய வண்ணம் அதையும் வாங்கி ஆசையோடு அணிந்து கொண்டான்.

அது அத்தோடு நின்றுவிடவில்லை. அக்காளைப் பார்த்த அண்ணனும் ஒரு முகமூடி செய்து கொடுத்தான். அதைப் பார்த்த தம்பி தங்கச்சி ஆகியவர்களும் தங்களால் இயலுமான வரையில் செதுக்கி, அழகுபடுத்திய முகமூடிகளை ரமணனுக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அவன் அவற்றையும் வாங்கி ஆனந்தமாய் அணிந்து கொண்டான். இவற்றைக் கேள்விப்பட்ட ஆசிரியர்கள், சக மாணவர்கள், நண்பர்கள் என்று அவனிடம் பல முக மூடிகள் பரிசாக வந்து சேர்ந்தன.

இப்படிக் கிடைத்த எண்ணற்ற முகமூடிகளை அணிந்து அணிந்து அவன் அழகு பார்த்தான். இப்படியாக அழகு பார்த்துப் பார்த்து தனது முகத்தையே அவன் மறந்த ஒரு நாளில் அவனுக்குத் தனது முகம் எப்படி இருக்கும்? என்கின்ற எண்ணம் திடீரென எழுந்தது. அதைத் தான் இப்போது பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது.

அவன் தனது அறைக்குச் சென்றான். கண்ணாடி முன்னே நின்று ஒவ்வொரு முகமூடியாக அவற்றை அகற்றத் தொடங்கினான். அவனுக்குத் திடீரென பயம் ஒன்று உருவாகியது. தனது முகம் இந்த முகமூடிகளைப் போல் அழகானதாய் இருக்காவிட்டால் என்கின்ற பயம் உண்டாகியது. அதனால் கவலையாக இருந்தது. அவன் முகமூடிகளை அகற்றுவதை நிறுத்தினான். வெகுவாக அதைப் பற்றி எண்ணி எண்ணிக் குழம்பினான். இறுதியில் எப்படியாக இருந்தாலும் அந்த முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு மீதம் இருந்த முகமூடிகளையும் வெறியோடு களைந்து எறிந்தான். கடைசியாக அவனால் அவனது சொந்த முகத்தைப் பார்க்க முடிந்தது. அதில் நிறைய ஒளி இருந்தது. தெளிவு இருந்தது. உண்மை இருந்தது. எதற்காக அதை மறைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ரமணன் அதன் பின்பு அந்த முகமூடிகளை அணிவதே இல்லை. ஆனால் அவனுக்கு முகமூடி கொடுத்தவர்களுக்குத் தாங்கள் கொடுத்த முகமூடியைத் தொடர்ந்தும் ரமணன் அணியாதது மிகவும் மன வருத்தம் கொடுத்தது. அவர்கள் வருத்தம் பற்றி அவன் இப்போது கவலைப்படவில்லை. அவனுக்குத் தனது சொந்த முகத்தைப் பார்ப்பதிலேயே நிம்மதியும், திருப்தியும் உண்மையும் இருந்தது.

அவன் அந்த முகமூடிகளை ஒரு பையில் அள்ளிச் சென்று பக்கத்தில் ஓடும் ஆற்றில் வீசி எறிந்துவிட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *