முகங்களை விற்றவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,664 
 

அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது அவன் தரையில் விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தும் அதை வெளிக்காட்டாது ஓரக்கண்ணால் பார்த்தவாறு நகர்ந்தார்கள்.

அவர்களின் கவனத்தை இழுக்கும் படியாய் அம்முச்சந்தியில் விதவித அங்காடிகளும், கண்ணைப் பறிக்கும் படியான பொருட்களும் இருந்தன. அக்கடைக்காரர்கள் அலங்காரமாய் எல்லோரையும் ஈர்க்கும்படி பேசவும் செய்தார்கள். அங்கே குலுக்கல் முறை பாிசுகளும் இருந்தது மக்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கவே செய்தது. இருந்தும் கீழ்ப்பார்வையில் அவன் பரத்திவைத்திருந்த முகங்களை பார்த்தவாறே சென்றார்கள்.

மற்ற கடைக்காரர்கள் அவனுடைய கடையை சற்று ஏளனமாகப் பார்த்தார்கள். அவன் கடைக்கு கூரையும், பிரமிக்கும்படியான அலங்காரங்களும் இல்லாதது மற்ற கடைக்காரர்களுக்கு இளக்காரமாகவே இருந்தது. அவன் வேற்றூரைச் சேர்ந்தவன் என்ற அன்னியத்தொனியுடனே அவர்களின் எண்ணங்களும் ஓடியது. அவனின் கடையினால் தங்களின் வியாபாரம் பாதிக்குமோ என்ற அச்சம் உள்ளே இருந்தாலும் அதை வெளிக்காட்டாது

‘முட்டாள்..முகங்களை விற்கிறானாம்.யார் வாங்குவார்கள் ? ‘ என்றும்

‘ஒரு மாதம் தாங்கினாலே மேல் ‘

என்றும் தங்களுக்குள்ளும் சகவியாபாாிகளிடமும் மக்களிடமும் முணுமுணுத்து கொண்டார்கள். அவ்வியாபார வளாகத்தின் அழகையே அந்த நடைபாதை கடை கெடுக்கிறது என்றும் பேசிக் கொண்டார்கள்.

அவன் அதைப் பற்றியேதும் கவலைப் படாது முகங்களை பரப்பி வைத்து கொண்டிருந்தான் விற்பனைக்கு.

அவனிடம் வேறு பட்ட முகங்கள் இருந்தன. அதன் வண்ணங்கள் கண்ணைப் பறித்தன. விழிகளின் தீட்சண்யமும், புருவங்களின் நேர்த்தியும், தலைமயிாின் மென்மையும், நாசியின் கூர்மையும் இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகைகளின் ஆதரவும் கன்னங்களின் செழுமையும் உன்னதமான வடிவத்தில் அமைந்திருந்தது. பெண்,ஆண்,குழந்தை, முதிர்ந்தது என்று முகங்கள் வெவ்வேறு வடித்து வைத்திருந்தான். குழந்தைகளின் விளையாட்டுக்கென சில மிருக முகங்களையும் இட்டிருந்தான். அம்முகங்களில் ஒன்றை அணிந்து கொண்டு சில சமயம் அவன் அமர்ந்திருந்தான்.

வினோதமாக பார்த்தவாறு மக்கள் அக்கடையை கடந்து போனார்கள். குழந்தைகள் அக்கடையைப் பார்த்து தங்கள் பெற்றோர்களைப் பிடித்து இழுத்தன. அவர்கள் அதை புறக்கணித்து போக முயன்றார்கள். சில குழந்தைகள் விடாது மீறிக் கொண்டு அக்கடையின் முன்வந்து நிற்கும். அவர்களைப் பார்த்து அவன் லேசாகப் புன்னகைப்பான். முயல், யானை, சிங்கம் என்று முகங்களை அக்குழந்தைகள் உற்று பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வையில் ஆச்சர்யத்தின் சாயலும் ஆர்வத்தின் சாயலும் கலந்திருந்தன. அவனுக்கு அக்குழந்தையின் முகங்கள் தான் வடித்த முகங்களை விட மிக்க அழகுடையதாகவும், உயிரோட்டம் கொண்டிருந்ததாகவும் பட்டது. அப்படிப் பட்ட முகங்களை வடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். அக்குழந்தைகளுக்கு முன்னே வைக்கப் பட்டிருந்த முகங்கள் இறந்த தன்மையுடன் இருந்ததாய் பட்டது. அவர்கள் முகங்களிலிருக்கும் உயிாின் அடையாளங்களை எப்படியேனும் வடித்துவைத்த முகங்களுக்கு மாற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அது அவனால் இயலாது என்று உணர்ந்தபோது சற்று சோர்வடைந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல அவனுக்கு கவலை அதிகமானது. வியாபாரமாகாத முகங்களைப் பார்க்கையில் எதிர்காலத்தின் மேல் அவநம்பிக்கை அதிகமானது. தாயில்லாத அவனுடையப் சிறியப்பெண் அவ்வப்போது பசி படர்ந்த கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மங்கியப் பார்வை அவன் இதயத்தை சுண்டி இழுத்தது. நாடோடியாக நாலைந்து ஊர்களில் அவனுடன் பசியுடன் அலைந்து திாிந்து அவளின் தேகம் தேசலாய் காட்சியளித்ததை அவனால் தாங்க முடியவில்லை.

ஒரு வருஷமாக அலைந்த ஊர்களிலெல்லாம் முகங்களை விற்க முடியாது வறுமையில் தத்தளித்தது இங்கே ஒரு முடிவுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இந்த ஊருக்கு அவன் வந்தது. இந்த இடம் செல்வம் கொழிக்கும் இடமென்று கேள்விப்பட்டிருந்தான். இறுதியாக இங்கே முயன்று பார்த்துவிடலாம் முடியாது போனால் முகங்கள் வடிக்கும் தொழிலை விட்டு விட்டு கூலிவேலை செய்தோ அல்லது கையேந்திப்பிழைத்தோ வாழலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

சில நாட்கள் கழித்து குழந்தைகளின் அடம் தாங்காது பெற்றோர் அவனிடம் சில மிருக முகங்களை வாங்கிக் கொண்டனர். குழந்தைகள் முகங்களை அணிந்து கொண்டு கூச்சலிட்டு தெருவில் ஆர்ப்பாித்த போது அவர்களின் பெற்றோர் மற்ற மனிதமுகங்களை அணிந்து பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இறுதியில் தங்களுக்கென்று முகங்களை வாங்காது அவைகளை கழற்றி வைத்து விட்டு போனார்கள். அவனுக்கு ஏனென்று புாியவில்லை. சிலாிடம் முகங்களில் ஏதேனும் குறைபாடுள்ளதா என்று கேட்டான்.

ஒருத்தி முகங்களில் உணர்ச்சி பாவம் போதாதென்று சொன்னாள். இன்னொருவன் முகங்களிலுள்ள களை ஈர்க்கும்படியாய் இல்லையென்றான். பிறகு அவன் தன் முகத்தைப் போன்று வடித்து கொடுத்தால் வாங்கத் தயார் என்று சொல்ல அவனை உற்றுப் பார்த்தான். அதில் லேசாய் குரூரக் களை படிந்திருந்தது.

அவன் அன்றிரவு அவனுடையக் குட்டிபெண் தூங்கிய பிறகு, தன் குடிசையின் வாசலில் நின்றான். அப்போது அசைவற்ற கருத்த மேகங்கள் நிலவை செதில் செதிலாக வெட்டியிருந்தன. கருமை தோய்ந்த ஒளி வெளியில் கனமான எண்ணை போல் வழிந்துக் கொண்டிருந்தது. தூரத்து மர உச்சிகள் மெதுவாய் தள்ளாடிக் கொண்டிருந்தன. இனந்தொியாத ஒரு பறவை அல்லது மிருகத்தின் அழுகையொலியில் காற்று சற்று நடுங்கி கொண்டிருந்தது. மரங்களின் நீண்ட நிழல்கள் தரையில் அழிக்க முடியாத கறைகள் போலிருந்தன.

அவன் முகங்களைச் செய்ய தோல்களையும் வண்ணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டான். அவைகளை சற்று நேரம் உற்று பார்த்தான். அவன் கண்களில் ஒரு புதிய ஒளி மின்னியது. அடிவயிற்றில் சதை இழுத்துப் பிடித்துக் கொண்டது போல் இருந்தது. கால் முட்டிகள் சற்றே நடுங்கின. மனதில் ஏதோ ஒரு ஓங்காரம் எழுந்தது,தாடைகள் இறுகி பூட்டிக் கொண்டன.காற்றில் இருக்கும் அதிர்வு உள்ளுக்குள் புகுந்து கொண்டது. மனதின் நுன்ணுணர்வுகள் அழிவது போலிருந்தது. விகாரத்தின் வீச்சுப்பொறியில் உள்ளுக்குள் பற்றியொிவது போலவும், தீப்பிழம்பு கக்கி கூாிய நகங்களால் இரை பற்றி விழுங்கும் மிருகங்கள் உலாவும் அடர்ந்த அமானுஷ்யமான கானகத்தில் உலாவுவது போலவும் தோன்றியது. தானே ஒரு மிருகமாய் மாறி விட்டது போலிருந்தது. வியர்வைத் துளிகள் முகத்தில் அரும்பி உடல் மூழுவதும் தீப்பற்றி கொண்டது. வானம் சற்றே சாிந்து பக்கத்தில் பாளம் பாளமாய் விழுவது போல உணர்ந்தான். மலைச்சாிவுப்பாறைகளில் தோல்சிராய்ந்து தீப்பொறி தெறிக்க அடியில்லாப் பள்ளத்தாக்கில் சுழன்று சுழன்று விழுவதைப் போலிருந்தது. பய உணர்வு சிறிதும் அற்றதொரு மனநிலையில் உரக்கச் சிாிக்க வேண்டும் போலிருந்தது.

உணர்வுகளின் விசித்தரமானதொரு உந்துதலில் முகங்களை செய்ய ஆரம்பித்தான்.

அவன் கைகள் அவன் உடலிருந்து விலகி முகங்களை வடிக்க ஆரம்பித்தது. விரல்களுக்கு வரும் ஆணைகள் காற்றின் வெப்பத்திலிருந்து வழிந்தது. முகங்கள் தானாய் வடிவெடுத்துக்கொள்வதாயும் இருந்தது. நிலவு மெளனமாய் சில சமயம் மேகங்களின் இடுக்குவழி சற்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

* *

மறுநாள் கடையில் அவன் வடித்து வைத்திருந்தப் புதிய முகங்களைப் பார்த்ததும் அவ்வழிச் சென்ற மக்களின்

கண்களில் வித்தியாசமான வெளிச்சம் தெறித்தது. அச்சமும், குரூரக்ரோதங்களைப் பார்க்கையில் விளையும் தன்னிலை மறக்கும் ஆவலுமான கலவை அவர்கள் முகங்களில் நிழலாடியது. தாறுமாறாகச் சிதைந்து, சற்றேக் காய்ந்தக் குருதி படர்ந்தக்

காயங்களைக் கொண்டப் பிணங்களை எப்படி ஆணியடித்தாற் போல அசையாது பார்க்கும்படி தோன்றுகிறதோ – அப்படி அவர்கள் அந்த முகங்களைப் பார்த்தார்கள். அவர்களுக்குள்ளே ஆழ்ந்து படிந்திருந்த ஆதி கோரங்களை மேலெழுப்பும்படியான விகாரத்தை அந்த முகங்கள் கொண்டிருந்தன.

அவர்கள் முன்பு போல அக்கடையிலுள்ள முகங்களை அலட்சியபாவத்துடன் கடந்து போக இயலவில்லை. அவர்கள் கண்களை, அம்முகங்களில் விளைந்திருந்த வெறித்தனம் கட்டிப் போட்டுவிட்டது. அம்முகங்களில் குரூரத்தின் அழகு அரூபமாய் உள்ளடங்கியிருந்தது.

கண்கள்- ஒரு கோணத்தில் பார்கையில் -வக்கிரம் வழியச் சிாிப்பது போலிருந்தது – இன்னோரு கோணத்தில் பார்க்கையில் கருணையும் கொலைவெறியும் சாிவிகிதத்தில் கலந்தது போலவும் தோன்றியது. முழுமையாய் ஒவ்வொரு முகத்திலும் திகிலூட்டும் வெறியும், கீழுணர்வுகள் தாண்டவமாடும் பிரதிபலிப்பும் மாறி மாறி வினோதமான தோற்றங்களை அம்முகங்கள் வெளிக் காட்டிக் கொண்டிருந்தன. மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடைபட்டதொரு படிவத்தை அம்முகங்கள் கொண்டிருந்தன. அந்த இடமே திடிரென்று அபாிமிதமான அமானுஷ்யத்தன்மை பொருந்தியதாய் தோற்றமளித்தது.

மக்கள் மெதுவாய் அவன் கடையில் குழுமத் தொடங்கினார்கள். பலகணங்கள் தயக்கத்துடன் மெளனமாய் முகங்களையே வெறித்தபடி பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அம்முகங்கள் அவர்கள் உள்ளுக்குள் தோற்றுவிக்கும் அலறல்களும், வெறியுடன் நாளங்களில் பாய்ந்தோடும் ரத்தத்தின் சப்தங்களும், கிளர்ச்சியுடன் துடிக்கும் இதயத்தின் சப்தமும் அவர்களின் உடல்விளிம்புகளை தாண்டி காற்றில் கலப்பதாய் இருந்தது. அங்கே கூச்சலும் சப்தமும், தூரத்தில் இடைவிடாது கேட்கும் அலையோசை போல, நிரம்பியது. உத்வேகத்துடன் அவர்கள் அம்முகங்களை அணிந்து கொண்டார்கள்.

விகாரமாய் சிாிக்கத் தொடங்கினார்கள். அவன் மேல் கைக்கு கிடைத்த காசை அள்ளி வீசினார்கள். எங்கும் காசு சிதறியபடி துள்ளி விழுந்தவாறு இருந்தது. அதன் சத்தம் அவனுக்குத் தித்திப்பாய் இருந்தது. தலை குனிந்தபடி கைகளினால் அள்ள அள்ளப் பணம் விழுந்து கொண்டே இருந்தது. கடையில் இருந்த அத்தனை குரூர முகங்களும் காலியாகி விட்டன. உற்சாகத்துடன் பணத்தையெல்லாம் பொறுக்கிக் கொண்டு தலை நிமிர்ந்து சுற்றியிருந்த மக்களைப் பார்க்கையில் சற்று அச்சமாக இருந்தது. அம்முகங்களில் கொதித்து நீளும் குருரத்தின் நாக்குகள் தீப்பிழம்புகளை கக்குமோ என்று பயந்தான். பையில் பணத்தைக் கட்டிக்கொண்டு மெதுவாய் பின்வாங்கினான்.

வீதியில் மக்கள் முகங்களை அணிந்து கொண்டு பெருத்தக் குரலில் சிாித்து கொண்டிருந்தார்கள். அச்சிாிப்புச் சத்தம் காற்றின் இடைவெளிகளில் வெடிக்கும் குண்டுகளைப் போலிருந்தது. ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு ஏதுமில்லாதிருந்தது. அவர்கள் நாக்குகளை நீட்டுகையில் தீக்கற்றைகள் நீண்டன. அவர்கள் அப்போது கைதட்டியபடி குதிக்கத்தொடங்கினார்கள். ஒருவன் பக்கத்திலிருந்த துணிக்கடைக்குள் புகுந்து அங்கே வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை அள்ளிக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்து இன்னுமிருவர் அக்கடைக்குள் புகுந்து மிச்சமிருந்த துணிகளை அள்ளிக் கொண்டு வந்து நடுத்தெருவில் குமித்தனர். அக்கடை வியாபாாி அச்சத்தில் வாயடைத்துப் போய் நின்றிருந்தான். ஒருவன் அத்துணிகளின் மேல் வாய் விட்டு ஊத தீப் பிழம்பு அம்பு போல் வெளியேறி துணிகளைத் தாக்க அவைப் பற்றிக் கொண்டன. அவை நெருப்பில் படபடத்து எாியும் சப்தம் எல்லாவித கூச்சல்களையும் மீறி கேட்கும்படி இருந்தது. அவர்களின் கும்மாளம் இன்னும் அதிகமானது. சுற்றி முற்றி இருந்த மற்றக்கடைகளிலிருந்து எல்லாவித பொருட்களையும் சிலர் எடுத்த கொண்டு வர ஆரம்பித்தனர். தீயின் நாக்குகளுக்குள் ஒவ்வொன்றாய் எறியப் பட்டன.

தீ ஜ்வாலை மஞ்சளும் சிகப்பும் நீலமும் கலந்து ஹோவென்று எழுந்தது. அடியில் அகன்று பரந்திருந்த ஜ்வாலையின் உச்சி மஞ்சள் அம்பாய் பிரபஞ்சத்தைக் குத்திக் கிழிப்பதுப் போலிருந்தது. அதைச்சுற்றி மக்களின் வெறியாட்டம் இன்னும் உச்சத்திற்கு போனது. முகங்களை அணியாமல் அப்பக்கம் வந்தவர்களை அத்தீக்குள் மற்றவர்கள் தள்ள முயற்சிக்க அவர்கள் பீதியுடன் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள். அவர்களை மற்றவர்கள் துரத்த அந்த இடமே ஒரு பொிய போர்களத்தின் அம்சங்கொண்டதாய் தோற்றமளித்தது. சிலர் தங்கள் ஆடைகள் கழற்றி எாிந்து அம்மணமாய் தீயை சுற்றி குதிக்கத் தொடங்கினர். அவர்கள் காறித் தெருவில் உமிழ்ந்து கொண்டே இருந்தார்கள்.ஒரு காிய திரவம் கெட்டியாய் தெருவெங்கும் பரவியது. துர்நாற்றங்களும் உடல்கள் காியும் வாசனையும் எங்கும் நிறைந்தது. ஓங்கார ஓலமும் வெறி பிடித்த சிாிப்புகளும் எழும்ப காற்றும் மரங்களும் இலைகளும் நடுங்குவது போல் உணர்ந்தான். அவர்களின் நிர்வாண உடல்களையும் வக்கிர முகங்களையும் பார்க்கையில் அவனுக்கு தலைசுற்றி மூச்சு முட்டியது.

அப்போதுதான் தன் பெண்ணின் ஞாபகம் வந்தது அவனுக்கு. தன் பெண் மட்டுமல்ல அவ்வூாின் மற்றக் குழந்தைகளின் ஞாபகம் வந்தது. அவனுடையப் பெண் காலையில் அவனுடன் கடைக்கு வரவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்ப வேண்டாமென்று அவன் மட்டுமே வந்திருந்தான். எழுந்து தானாகவே இந்நேரம் அவள் கடைக்கு வந்திருக்க வேண்டும். அவள் இதையெல்லாம் பார்த்தால் ..என்ற பீதி அவனுள் எழுந்தது. மனம் பதைபதைத்துப் போனது. தன் சிறிய இளவரசியும் மற்ற பூப்போன்ற மென்குழந்தைகளும் வயது தேய்ந்து கரைந்து கொண்டிருக்கும் முதுமக்களை நினைக்கயில் அவனுக்குத் தாபமாய் இருந்தது.

என்ன ஆகி விட்டது ? எனக்கும் இந்த கேடு கெட்ட மனிதர்களுக்கும் ? இவர்கள் மனிதர்களா ? சில கணத்தில், சிாிக்கும், சிந்திக்கும், கருணை தவழும், அன்பு சுரக்கும் முகங்களை தூர எறிந்து விட்டு ஊழியின் முகமணிந்து அழிவின் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இவர்களா மனிதர்கள் ? முகங்களிலுள்ள குரூரமும் விகாரமும் அவர்களை தன்னிலை இழக்கச் செய்தது ஏன் ? இதற்கு நான் தானே காரணம் ? இந்த முகங்களை வடித்தது நானே. இல்லை இருக்காது. நானாக இருக்காது. நேற்றைய ராத்திாி பித்து பிடித்து இப்படிப்பட்ட முகங்களை நானா செய்தேன் ? என் மனசின் வக்கிரங்களா இப்போது இங்கே பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன ? நேற்று என் மனசையும் என் உயிரையும் யார் திருடிக் கொண்டுப் போனது ? நான் நானாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட முகங்களைச் செய்திருப்பேனா ? என்ன நிகழ்ந்து விட்டது எனக்கு ? அடர்ந்த கானகத்தின் இருளில் உலாவும் கெட்ட ஆவியொன்று என் உள்ளுக்குள் புகுந்து என்னை இப்படிப் பட்ட முகங்களைச் செய்யத் தோன்றியதா ? நேற்று அந்த மனிதனின் முகத்தில் நான் உணர்ந்த குருரச் சாயல் உண்மையில் அவன் முகத்தில்தான் இருந்ததா ? இல்லை என் வக்கிரங்களை அவன் முகம் கண்ணாடியாகப் பிரதிபலித்ததா ?

மனம் அரற்ற நேராய் தன் குடிசையை நோக்கி ஓடத்தொடங்கினான். இனி என்ன ஆகும்..இது எப்படி முடியும் என்ற உளைச்சலும், தன் சிறிய மகள் இதையெல்லாம் பார்க்காது, அவளுக்கு எந்த விதமான தீங்கும் நிகழாது இருக்க வேண்டுமே என்ற ஏக்கமும் அவனை விரைவாகச் செலுத்தின. போகும் தெருவெங்கும் இதற்குள் காற்று கடத்தி வந்த தீப்பொறி போல எங்கும் பேயாட்டம் பரவிக் கொண்டிந்தது. தீயின் ஜ்வாலை பெருக்கெடுத்து காட்டு நதியாய் பிரவாகித்து ஓடிக் கொண்டிருந்தது.

ஊர் எல்லைத் தாண்டி தோப்போரம் ஒதுங்கியிருந்த கல்லறை அடுத்த தன் குடிசைக்கு வந்தான். உள்ளே அவள்

இல்லை. மனம் விதிர்விதிர்த்துப் போனது. குடிசைக்கு பிற்பக்கத்திலுள்ள பரப்பு வெளியில் நின்று என்னச் செய்வதென்றக் குழப்பத்தில் நின்ற போது, நடந்து போகும் ஒரு மலர்க்கூட்டமாய், சற்றுத்தூரத்தில் போகும் அந்தக் குழந்தைகளைப் பார்த்தான்.

அவர்கள் அந்த சமவெளியின் மத்தியில் மெதுவாய் போய்க் கொண்டிருந்தார்கள். வெறிபிடித்தவனைப் போல தன் மகளின் பெயரை கூவியவாறு அவர்களை நோக்கி ஓடினான். அவர்கள் அதை கேட்டது போல தொியவில்லை. சற்று அருகாமையில் போன போது அவன் தன் மகளை அக்கூட்டத்தில் பார்த்தான்.அவள் அவனைத் திரும்பிப்பார்க்காதது அவனுக்கு கிடைத்த தண்டனையைப்போல உணர்ந்தான்.

ஒவ்வொரு சிறிய முகமும் அதீத ஒளியுடன் ஜ்வலித்தது. அம்முகங்களில் பறவைகளின் சிறகுகளைப் போன்ற மென்மை இருந்தது. சிறிது நேரம் முன்புப் பார்த்த விகார முகங்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத அழகு அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. எல்லாக் குழந்தைகளின் முகமும் ஒரேவிதமாக இருந்தது. எல்லோரும் அவன் மகளைப் போலவே இருந்ததாய் நினைத்தான்.

தரையில் விழுந்த பூக்கும்பலை மெதுவாய் காற்று முன்செலுத்துவதைப் போல அவர்கள் போய் கொண்டிருந்தார்கள்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு நீண்ட வண்ணமயமான சிறகுகள் முளைத்தன. வியந்து போய் நின்றான்.மெல்லிய காற்று அச்சிறகுகளுக்கு அடியில் படர்ந்து அவர்களை மேல் தூக்கியது. நீந்துகின்ற மீன்குட்டிகளைப் போல அவர்கள் காற்று வெளியில் சிறகுகள் படபடக்க நீந்திச் சென்றார்கள்.

சற்றுநேரத்தில் மேகக்கூட்டங்களில் அவர்கள் மறைந்து போனார்கள்.

– அக்டோபர் 1999

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *