மிருகக் காட்சி சாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 5,034 
 

அது பெருநகரத்தின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் கூட்டமும் அவர்களை “ஏய், வரிசையாய் போ”, என்ற வாத்திமார்கள் பிள்ளைகளை அதட்டும் சப்தமும் அடிக்கடி கேட்டபடி இருக்கும்.

அன்று அந்த மிருகக் காட்சி சாலையில் எக்கச்சக்க கூட்டம். கூட்டத்தை விலக்க ஹார்ன் அடித்தபடி மூடிய அந்த மாமிச வேன் வந்து நின்றது. கதவு திறக்கும் முன்பே ஓடியும் பறந்தும் வந்தன தெரு நாய்களும், காகங்களும். உலோக முத்திரையுடன் பூட்டியிருந்த கதவை திறக்கும் முன் சுகாதார ஆய்வாளர் மற்றும் சூப்பரின்டெண்டெண்ட் வருவார்கள். இன்று அவர்கள் இருவருமே இல்லை.

“நாளைக்கி நீயே பார்த்து வண்டிய அனுப்பிடு”, “என்னைய எதிர்பார்க்காதே” என்று சூப்பரிண்ட் நேற்றே சொல்லிவிட்டார். எல்லாம் அவனுக்குத் தெரியும்.

கதவைத் திறந்து குதித்த வேன் டிரைவர், “தொள்ளாயிரம் கிலோ”, என்றான்.

வவுச்சரில் ஆயிரம் கிலோ என்று பதிவு செய்தவன் டிரைவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். “என்ன இன்னிக்கி 50 கிலோ கூடப் போட்டிருக்கு” என்றவனிடம்,

“மதுரையிலிருந்து அய்யா வீட்டிற்கு விருந்தாளிக வந்து இருக்காக”. “நாளை சரிபண்ணிக்கலாமாம், அய்யா சொன்னாவ” என்றவனிடம் சிரித்தபடி எனக்கு ஒரு 5 கிலோ நாளைக்கி தனியா எடுத்து வை, போசொல்ல வந்து எடுத்துக்கறேன்” என்றான்.

தினமும் வரும் கறி எடையில் ஐம்பது கிலோ சேர்த்து வவுச்சரில் எழுத வேண்டும் என்று சூப்ரண்ட் வேலை கத்துக் கொள்ளும் போதே சொல்லியிருந்தார். இன்றைக்கு 100 கிலோ.

வேனில் வந்த உதவி ஆள் குத்து மதிப்பாக ஒரு நூறு கிலோ கறியை எடுத்து வைத்து விட்டு மீதத்தை பட்டியல் பார்த்துப் பகிர்ந்து பிளாஸ்டிக் வாளிகளில் போட்டான். மொத்தம் கிட்டத்தட்ட 80 கூண்டுகள். பட்டியலில் ஒவ்வொரு கூண்டில் உள்ள விலங்கிற்கும் எத்தனை கிலோ மாமிசம் என்ற அளவு இருக்கும்.

தினமும் சூப்ரண்ட் அய்யா வீட்டிற்கு பதுவா இரண்டு கிலோ. இன்றைக்கு அவருக்கு மட்டும் 15 கிலோ. சானிட்டரி ஆசாமி சுத்த சைவம். கறி சாப்பிடாவிட்டாலும் கறியை காசா மாற்றி சாப்பிடுவார். அவரது தினசரி கோட்டா 2 கிலோவை அமீர் வந்து வாங்கிக் கொள்ளுவான். சானிட்டரி ஆசாமி அதை தர்மம் கொடுத்ததாக சொல்லிக் கொள்வார். ஆனால் அமீர் கிலோவிற்கு மார்கெட் விலையை விட 50 ரூபாய் குறைவாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனுக்கு சிரிப்பு வரும். உத்திராட்சப் பூனைகள். நாளைக்கு அமிர் பாய் வாங்காட்டா இல்லை வாங்க ஆளில்லாட்டா சானிட்டரி சார் கறி சாப்பிட ஆரம்பித்து விடும்.

ஒவ்வொரு மூடியுள்ள பிளாஸ்டிக் வாளியிலும் அந்தத்த கூண்டின் எண் மற்றும் விலங்கின் படம் வரையப்பட்டிருந்தது. வாளியின் மூடியில் எடுத்துப்போக வேண்டிய பணியாளரின் பெயர் பெயிண்டில் எழுதியிருந்தது.

அப்புறம் மத்தவங்களுக்கு ஆளுக்கு அரைக் கிலோவும் கால் கிலோவுமா எவர்சில்வர் டப்பாகளில் போட்டாச்சு. கூட்டற லட்சுமி வீட்டுக்காரன் தான் தினமும் தனக்கு எலும்பு தான் கிடைக்கிறது. கறியே இல்லை என்று தகராறு செய்வான். இன்னிக்கு அவனுக்கு கொஞ்சம் கறியா போட்டாச்சு.

மணி ஒன்று ஆனதும் பிளாஸ்டிக் வாளிகளை காத்திருந்த அந்தந்த பகுதி பணியாட்களிடம் மிருகங்களுக்கு உணவு தர கொடுக்க வேண்டும். காத்திருந்த பணியாளர்களை அழைத்து அவரவர் வாளிகளையும், அவர்கள் எவர்சில்வர் டப்பாகளையும் கொடுத்தாகி விட்டது.

உணவு எல்லாக் கூண்டுகளுக்கும் போயாகி விட்டதற்கு பணியாட்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். அய்யா வீட்டு ராங்கி புடிச்ச சமையல்காரி அதிகாரமாக வந்து ” இன்னா லேட்டு” அய்யாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா ஒன் சீட்டு கிழிஞ்சிடும்” என்று தினமும் சொல்லுவாள். அய்யா அவளிடம் அலமேலு, அலமேலு என்று வழிவதைப் பலமுறை கண்டிருக்கிறான். எதுக்கு பெரிய இடத்துப் பொல்லாப்பு. பரம சிவன் கழுத்துப் பாம்பு.

“தோ. ரெடியா இருக்கு அக்கா”, என்று அவன் சொன்னதும்

“இம்மாம் வெயிட்டு எல்லாம் தூக்க முடியாது. கோட்ரஸுக்கு எங்கூட வந்து கொண்டு வச்சிட்டுப் போடா தம்பி” என்றாள்.

மறுக்க முடியாது. மறுத்தால் ஒன்றுக்குப் பத்தாக அய்யாகிட்ட வத்தி வைக்கும். அய்யாவிடம் பாட்டு வாங்க வேண்டும். திரும்பிப் பார்த்தால் இன்னும் புலி படம் போட்ட ஒரே ஒரு பக்கெட் தான் எடுத்துப் போகப்படாமல் இருந்தது. வருகைப் பதிவேட்டில் சரிபார்த்தான். வருகைப் பதிவேட்டில் புலிக் கூண்டுக்கு உணவு தரும் தோமா அன்று விடுப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது.

“அக்கா புலிக் கூண்டிற்கு ஆளு இல்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோக்கா”, “புலி பசி தாங்காது” என்றவனிடம்

“அப்போ அய்யா பசி தாங்குவார்னு சொல்றியா” உன்னைய அவரு வைக்கற இடத்தில வைக்கலை. அதான் நீ ஆடுற”

உண்மையிலேயே புலி பசி தாங்காது. வேற ஆட்களிடம் கொடுக்கலாம். ஆனால் மூன்று மணிக்குத்தான் மற்ற டிரைனர்கள் வருவார்கள்.

சரி என்ன செய்வது. பேய்க்கு முன் புலி என்ன செய்யும். விதியே என்று அவள் பின்னால் இரண்டு பக்கெட்களையும் எடுத்துக் கொண்டான். புலி பக்கெட்டை திறந்து பார்த்த அலமேலு, அதிலிருந்து இன்னும் ஒரு கால்கிலோ கறியை தன் டப்பாவில் அடைத்துக் கொண்டது. வழியேற எசமானி போல் வசவு சொல்லியபடியே வந்தது. இருக்கட்டும். அம்மாவிடம் இதைப் பற்றி கொஞ்சம் காதில் போட வேண்டியதுதான். இல்லாட்டா இதுவே எசமானியாக மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டான்.

லக்கி பிரியாணி கடை பையன் வந்து மீதமுள்ள இருபத்தைந்து கிலோ கறியை வாங்கிட்டு போயிட்டா அப்புறம் வேற வேலை இல்லை. தோட்டக்கார மாரியை ஆபிஸில் விட்டு விட்டு பக்கெட்டை தூக்கியபடி புலிக் கூண்டை நோக்கி நடந்தான். லக்கி பிரியாணி கடையிலிருந்து கிலோவுக்கு 5 ரூபாய் இவனுக்கு கமிஷன் டாண் என்று ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வந்துவிடும். மற்றபடி அது யாரால் விற்கப்படுகிறது எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்பதெல்லாம் தெரியாது. பெரிய இடத்து சமாச்சாரம் என்பதால் அதில் அவனுக்குப் பெரிய அளவில் ஈடுபாடில்லை.

கூண்டுப்புலிக்கு தினம் வேண்டிய அளவு உணவை விட குறைவாகவே கிடப்பதால் மிகவும் பசித்துக் கிடந்தது. போதாத குறைக்கு இன்று மணி வேறு அரை மணி நேரம் அதிகம். கடும் பசியுடன் சரியான வேட்டைக்கு காத்திருந்தது.

அவனுக்கு காலையிலிருந்தே மனசு சரியில்லை. தங்கச்சியின் மாமியார் இன்னும் போடாத அந்த மைனர் செயின் பற்றி பேசுகிற மாதிரி ஏசியது பற்றியே நினைத்தபடி இருந்தான். போதாத குறைக்கு இங்கே இந்த அலமேலுவின் அட்டகாசம். அழுகை வந்தது. ஆண்பிள்ளை அழக்கூடாது. அடக்கிக் கொண்டான்.இந்த சிந்தனையில் புலிக்கூண்டின் நடு கம்பித் தடுப்பை போட மறந்து முன் கதவைத் திறந்தான். தான் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாளிட்டான்.

பக்கெட்டின் பச்சை மாமிச இரத்த வாடைக்கு புலி உறுமியபடி வந்த போது வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் “ஓ” எனக் கத்தி ஆர்ப்பரித்துக் கூச்சல் போட்டது.பக்கெட்டை வைத்து வெளியே வர கதவை பார்த்து வரும் போது அவன் பின் மண்டையில் புலி ஓங்கி அடித்து கவ்வியபடி உட்புறம் கம்பீரமாய் நடந்தது.

வெளியே ஆபீசில் லக்கி பிரியாணி கடைப் பையன் அவன் வருகைக்காக காத்திருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *