மின் “வெ(து)ட்டு”

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,184 
 

( இக்கதையை பற்றி ஒரு சிறிய முன்னுரை என்னவென்றால், இது என் நண்பர் மற்றும் என்னுடைய சொந்த அனுபவமே. பல அலுவலகலங்களில் ஒட்டியிருக்கும் அழுக்கு மற்றும் அவல நிலை இன்னும் மாறாமல் லஞ்சத் தாலும் கறைகளாலும் படிந்து உள்ளதே நிதர்சனம். ஊடகங்கள் பல இதை தெரியப்படுத்தினாலும் மாற்றங்களை சம்மந்தப்பட்டவர்கள் விரும்பவதில்லை.)

“ஐயா ! உள்ளே வரலாமுங்களா ?” என கேட்டேன் நான்.

மின் 1கோப்பைக்குள் முகத்தை புதைத்திருந்த மின் பொருள் ஆணையர் நிமிர்ந்து பார்த்து சைகையால் சிறிது காத்திருக்க சொன்னார்.

அலுவலகத்தை நோட்டமிட்டேன் நான். ஒரு பழைய மின் விசிறி “கரக்,கரக்” என சுழன்று கொண்டு இருந்தது. அந்த மின் விசிறி பல அலுவலர்களின் ஓய்வினை கண்டு விட்டது போலும், ஆயினும் அது ஒய்வில்லமால் ஓடி கொண்டு தான் இருந்தது. சுவற்றிலே அங்காங்கு சிலந்தி வலைகள் கட்டிடத்தின் பராமரிப்பு பணிகள் பிரிட்டிஷ் காலத்திற்கு பின் நடக்கவில்லை என்பதை பறை சாற்றியது. அதிகாரியின் மேசையில் ஒரு சமோசாவும் அதை வட்டமிட்டபடி ஒரு ஈயும் பறந்து கொண்டு இருந்தது. அருகிலேயே ஆடை படிந்து ஆறிப்போன தேநீர் கோப்பை ஒன்றும் இருந்தது. அலுவலக சிப்பந்தி ஒருவர் அலுவலக கோப்புகளை அங்குமிங்கும் எடுத்து சென்ற வண்ணம் இருந்தார். சுவற்றில் மாட்டியிருந்த கரும்பலகையில் மின்வெட்டு விபரங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் குறித்திருந்தது.

“அடுத்து எந்த ஏரியாபா ? “கேட்டுகொண்டே நிமிர்ந்த அதிகாரி என்னை பார்த்ததும் “என்ன விஷயம் சார் ?” என்றார்.

“சார்ர்ர்ர் !” ஒரு இழுவையுடன் ஆரம்பித்த நான் ” புதுசா கட்டுன என் வீட்டிக்கு மின் இணைப்பு கேட்டு நான் இருபது நாள் முன்னாடி வந்திருந்தேன்” என்றேன்.

“சரி , அதுக்கு என்னங்க ?”

“நீங்க அது விஷயமா இன்னிக்கு வர சொன்னிங்க ”

” உங்களுக்கு எவ்வளவு கனக்க்ஷென் வேணும்?”

” மூன்று கனக்க்ஷென் சார்”

” வீட்டுக்கு வரி எல்லாம் போட்டாச்சா?”

” ஆச்சுங்க சார் ” என்றேன்.

மின் 2” சரி அசிஸ்டென்ட் என்ஜீனியரை பாத்து எவ்வளவு கட்டணும்னு கேட்டு, பணத்த கட்டுங்க ” என ஆரம்பித்தவர் ” அப்படியே அவருக்கு ஒரு இருநூறு ரூபா குடுத்துருங்க ” என்றார்.

” எல்லாம் நேத்தே பண்ணியாச்சுங்க சார்” என மண்டையை சொறிந்தேன்.

“வேற என்ன விஷயம்”

“என்ஜீனியர் சார் ஒரு இணைப்புக்கு நாலாயிரம் ரூபா கேக்கறார் சார், ஆனா ஒரு இணைப்புக்கான டெபொசிட் வெறும் ஆயிரத்து எண்ணூறு ருபாய் தான் வருதுங்களே! ” என்றேன் நான் .

“ஆமாம்யா, எங்களுக்கும் கொஞ்சம் செலவாகும். இந்த வேலைக்கு வர நாங்க எவ்வளவு செலவு பண்ணி வந்திருக்கோம் தெரியுமா?” என்றார். அது வரை இருந்த மரியாதை சற்றே படி இறங்கியது.

“சார், நான் வீடு கட்ட ஏற்கெனவே நெறையா கடன் வாங்கிருக்கேன் சார்”

” அதுக்கு நான் என்னய்யா பண்றது , செலவோட செலவா இதையும் பண்ணிட்டு போயா ?” என்றார். மரியாதை கப்பல் எறங்க (ஏற?) ஆரம்பித்தது .

“சார் எதாவது தயவு பண்ணி….!!!” , இழுத்து முழுங்கிய நான் ” கம்மி பண்ணலாமே சார் , நான் ஒரு இணைப்புக்கு மூவாயிரம் தரேன் ” என்றேன் .

” அப்போ இன்னும் ஒரு மாசம் ஆகும் பரவலையா ? பேசாம பணத்தை கட்டுங்க, கனக்ஷென் வாங்கிட்டு போங்க ” வெளிப்படையாய் லஞ்சம் கேட்டார் அவர்.

” சரிங்க சார் ” என்று வேறு வழியில்லாமல் ஒத்து கொண்ட எனக்கு “பளாரென்று ” என்று அவரை அறைய வேண்டும் என தோன்றியது. ஆனால் வேலை ஆக வேண்டி இருந்ததாலும் அவர் பெரிய பதிவியில் உள்ளதாலும் பேசாமல் இருந்து விட்டேன்.

பணம் கட்டிவிட்டு பின்னர் ஒரு ரெண்டு மணி நேரம் கழிந்து நான் கிளம்பினேன். வீட்டிற்கு வந்து சிறிது இளைப்பாறி விட்டு சாயங்காலம் ஐந்து மணி வாக்கில் விழித்தேன் . தெருவிலே பழைய பேப்பர் விற்கும் பையன் கூவி கொண்டு வந்த சத்தம் கேட்டதும் நீண்ட நாட்களாக என் மனைவி பேப்பரை எடைக்கு போட சொன்னது ஞாபகம் வந்தது. அந்த பையனை அழைத்து பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்கு போட்டேன்.

போட்டுவிட்டு அவனிடம் ” எவ்வளவு ஆச்சுப்பா?” என்றேன்.

“நூற்றிமுப்பதிரெண்டு ஆச்சுங்க சார்”

அவன் சில்லறையை எண்ணி கையில் குடுத்தான். அதை எண்ணி சரிபார்த்த நான் ரெண்டு ருபாய் குறையவே , ” என்னப்பா ரெண்டு ருபாய் கம்மியா இருக்கு ” என்றேன்.

அதற்கு சிறுவன் மண்டையை சொறிந்தவாறே ” ரெண்டு ரூபா தானே சார் அப்பறம் பார்க்கலாம் சார்” என்றான்

“பளார்” என்று நான் கொடுத்த அறையில் பொறி கலங்கிய சிறுவன் என்னை சோகமாக பார்க்க நான் அவனிடம் “சரியான சில்லறை குடுத்துட்டு போடா” என்றேன்.

“என்ன மாதிரி சின்ன பசங்க கிட்ட உங்க வீரத்த காமிங்க சார் ஆனா கவர்மெண்ட் ஆபிஸ் போனா பேசாம அவங்க கேட்கற நூறு இரநூறுனு குடுத்துட்டு வருவீங்க” கன்னத்தை தடிவியவாறு கோபமாக சொன்ன சிறுவன் தன் பாக்கெட்டினுள் கையை விட்டு துழாவி தேடி ஒரு ரெண்டு ரூபாயை கொடுத்து விட்டு சென்றான்.

அவன் சொன்ன சொல் என்னை செவிட்டினில் “பளார்” என்று அறைந்தது போல் இருந்தது, என் இயலாமையை எண்ணி நான் வெட்கப்பட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *