கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: நக்கீரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 29,881 
 

ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண் டிருந்தாள். சிறு குழந்தை களைப்போல அவள் தன்னு டைய கால்களால் சேற்றை யும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டி ருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை அவள் பாடிக் கொண்டும் இருந்தாள்.

அன்று மிகப்பெரிய சூறாவளிக் காற்று நகரத்தின்மீது படுவேகமாக வீசி அடித்துக் கொண்டிருந்தது. பெய்து கொண்டிருந்த மழை அந்தத் தெருவை ஒரு சேற்றுக் குவியலாக மாற்றி விட்டிருந்தது. சேறு மிகவும் ஆழமானதாக இருந்தது. கிட்டத்தட்ட முழங்கால்வரை அந்தப் பெண்ணின் கால்கள் சேற்றுக்குள் இருந்தன. குரலை மிகவும் கவனமாகக் கேட்டால், அந்தப் பாடலைப் பாடும் பெண் மது அருந்தியிருக்கிறாள் என்பதை மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நடனம் ஆடிக் களைத்துப் போய்விட்டால், அவள் அந்த சேற்றில் மூழ்கிப்போவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன.

என்னுடைய கால்களில் அணிந்திருந்த காலணி களை நீக்கிவிட்டு அந்த சேற்றில் மெதுவாகக் கால்களை வைத்தேன். சேற்று நீரில் நின்று துள்ளிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கைகளை பலமாகப் பிடித்து இழுத்து, அந்த சேற்றிலிருந்து அவளை வெளியே கொண்டு வந்தேன். ஒரு நிமிட நேரத்திற்கு அவள் பயந்திருக்க வேண்டும். அதனால் எதுவும் பேசாமல் கீழ்ப்படியும் மன நிலையுடன் அவள் என்னுடன் வந்தாள். ஆனால் திடீரென்று தன்னுடைய சரீரத்தை உதறிக்கொண்டு, வலது கையை எடுத்து என்னுடைய நெஞ்சில் அடித்தவாறு அவள் உரத்த குரலில் சத்தம் போட்டாள்: “”உதவிக்கு வாங்க…”

அடுத்த நிமிடம் என்னையும் இழுத்துக்கொண்டு அவள் அந்தச் சேற்றுக் குவியலுக்குள் இறங்கினாள்.

“”நீங்க நாசமாப் போகணும்”- அவள் சாபம் போட்டாள். “”நான் போக மாட்டேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் இல்லாமல் நீயும் வாழ முடியுமான்னு பார். என்னைக் காப்பாற்றுங்க…”

இருட்டுக்குள்ளிருந்து ஒரு இரவு நேரக் காவலாளி அங்கு வந்து நின்றான். அவன் எங்களிடமிருந்து ஐந்தடி தூரம் தள்ளி நின்றுகொண்டு முரட்டுத்தனமான குரலில் கேட்டான்:

“”ஏன் சண்டை போடுறீங்க?”

அந்தப் பெண் சேற்றுக்குள் விழுந்து இறந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வருவதற்கு நான் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நான் அந்த ஆளிடம் சொன்னேன். அந்தக் காவலாளி இன்னும் சற்று அருகில் நகர்ந்து நின்று கொண்டு அவளையே வெறித்துப் பார்த்தான். சத்தமாக காரித்துப்பிய அவன் உரத்த குரலில் சொன்னான்:

“”மாஷ்கா, வெளியே வா.”

“”எனக்கு வரப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல!”

“”வெளியே வான்னு நான் சொல்றேன்.”

“”நான் வரமாட்டேன்.”

“”என்னிடம் உதை வாங்கினால்தான் உனக்கு சரியாக இருக்கும். அப்படித்தானே?”- அவன் சொன்னான். தொடர்ந்து நான் இருந்த பக்கம் திரும்பி அவன் நட்புணர்வுடன் சொன்னான்:

“”இவள் இங்கே… பக்கத்தில்தான் இருக்கிறாள். இவள் பெயர் மாஷ்கா ஃப்ராலிக்கா. ஆண்களை வசீகரித்து இழுப்பது இவளின் தொழில். இவளை மேலே கொண்டு வரணுமா?”

நாங்கள் சிகரெட்டைப் பற்ற வைத்தோம். சேற்றைத் தெறிக்க வைத்துக்கொண்டு அவள் உரத்த குரலில் கத்தினாள்: “”பெரிய முதலாளிகள் தேடி வந்திருக்காங்க! பேசாம போங்கடா… நான்தான் எனக்கு முதலாளி. இங்க பாருங்க… உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் இதில் கொஞ்சம் மூழ்கிட்டு வர்றேன்.”

“”நான் உன் முதுகில் ஒரு அடி கொடுக்கப் போறேன்”- காவலாளி எச்சரித்தான்.

அவன் ஒரு பலம் கொண்ட தாடி வளர்த்திருந்த மனிதனாக இருந்தான். எல்லா இரவு வேளைகளிலும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவது என்பது அவளுடைய வாடிக்கையான செயலாகி விட்டது. வீட்டில் இரண்டு கால்களும் இல்லாத ஒரு சிறுவன் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.

“”இங்கேயிருந்து ரொம்பவும் தூரத்திலா இவள் இருக்கிறாள்?”

“”சாகடிக்கப்பட வேண்டிய ஒருத்தி இவள்!” – என் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் சொன்னான்:

“”யாராவது இவளை வீட்டில் கொண்டுபோய்விட்டால் நன்றாக இருக்கும்”- நான் சொன்னேன்.

காவலாளி தன்னுடைய தாடையில் மூக்கின் வழியாகப் புகையை விட்டவாறு, அந்த சிகரெட் வெளிச்சத்தில் என்னைப் பார்த்தான். அந்த சேற்றை அழுத்தி மிதித்துக்கொண்டு அவன் நடந்து சென்றான். போவதற்கு மத்தியில் அவன் இப்படிச் சொன்னான்:

“”இவளை அழைச்சிட்டுப் போ. ஆனால் அதற்கு முன்னால் இவளுடைய மூஞ்சில ஒண்ணு கொடு.”

அந்தப் பெண் சேற்றில் நின்றுகொண்டு தன்னுடைய கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டிருந்தாள். மூக்கு அடைத்துக்கொண்டதைப் போன்ற கரடுமுரடான குரலில் அவள் சொன்னாள்:

“”கடலில் இப்படியே… போகணும் ஐலஸா…”

வானத்திலிருந்த இருட்டிலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், குழம்பைப்போல இருந்த அந்த நீரில் தெரிந்தது. சேற்றில் அலைகள் உண்டானபோது அந்தத் தோற்றம் இல்லாமல் போனது. நான் மீண்டும் அந்தச் சேற்றில் இறங்கிச் சென்றேன். பாட்டு பாடிக் கொண்டிருந்த பெண்ணின் இரண்டு கைகளின் இடுக்குகளிலும் கைகளை வைத்துத் தூக்கி, என்னுடைய முழங்கால்களால் முன்னோக்கித் தள்ளி நான் அவளை வெளியே கொண்டு சென்றேன். அவள் என்னை எதிர்த்தவாறு, கையை ஆட்டிக் கொண்டு சவால் விட்டாள்:

“”வா… என்னை அடி. நான் பார்க்கிறேன்… என்னை அடி. யாருக்கு என்ன இழப்பு? டேய், பிராணியே… பிச்சைக்காரப் பயலே… வாடா… என்னை அடி…”

நான் அவளை அந்த வேலியின்மீது சாய்த்து நிற்க வைத்தேன். அவள் எங்கே இருக்கிறாள் என்று நான் விசாரித்தேன். அவள் மதுவின் போதையுடன் தொங்கி ஆடிக்கொண்டிருந்த தலையை உயர்த்தினாள். கறுத்த பீளை விழுந்திருந்த கண்களால் அவள் என்னைப் பார்த்தாள். அவளுடைய தாழ்ந்து காணப்பட்ட மூக்கின் நடுப்பகுதியை நான் பார்த்தேன். அதன் மீதமிருந்த பகுதி ஒரு பொத்தானைப்போல மேல்நோக்கித் தள்ளிக் கொண்டு நின்றது. அவளுடைய மேலுதடு காயம்பட்டு சற்று வளைந்திருந்தது. அதன் வழியாகப் பற்களின் ஒரு வரிசை வெளியே தெரிந்தது. அந்தச் சிறிய சதைப் பிடிப்பான முகம் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தது.

“”அப்படியென்றால் சரி… வா… நாம போகலாம்”- அவள் சொன்னாள்.

வேலியின் மேற்பகுதியில் அவ்வப்போது சாய்ந்தவாறு அவள் முன்னோக்கி நடந்தாள். அவளுடைய பாவாடையின் ஈரமான நுனி என்னுடைய கால்களில் அவ்வப்போது பட்டுக் கொண்டிருந்தது.

“”பேசாம வா என் தங்கமே”- சுய உணர்விற்குத் திரும்பி வந்தவாறு அவள் சொன்னாள்: “”நான் நல்ல பிள்ளையா இருக்கேன். நான் உனக்கு சுகம் தர்றேன்.”

ஒரு பெரிய இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடத்தை நோக்கி என்னை அவள் அழைத்துச் சென்றாள். ஒரு கண்பார்வை தெரியாதவளைப்போல குதிரை வண்டிகள், பீப்பாய்கள், பிய்ந்துபோன பெட்டிகள் ஆகியவற்றின் வழியாக தட்டுத் தடுமாறி அவள் முன்னோக்கி நடந்தாள்.

தரையில் ஒரு பெரிய துவாரத்திற்கு அருகில் சென்றதும் அவள் நின்றாள்.

“”கீழே இறங்கு”- அவள் சொன்னாள்.

அந்த அடர்த்தி குறைந்த சுவரின்மீது சாய்ந்து கொண்டு, நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சரீரத்தை என்னுடைய கைகளில் தாங்கியவாறு, அந்த வழுக்கிக் கொண்டிருந்த படிகள் வழியாக நான் கீழே இறங்கினேன். இருட்டில் சற்று தேடிப் பார்த்துக் கொண்டே நான் அந்தக் கதவின் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தேன். கதவைத் திறந்த பிறகு, முன்னோக்கி நகரத் தயங்கியவாறு நான் கதவின் அருகிலேயே நின்றுவிட்டேன்.

“”அம்மா, நீங்கதானே?”- இருட்டிற்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.

“”ஆமாம்… நான்தான்.”

தார், சிதிலம் ஆகியவை கலந்த ஒரு தாங்க முடியாத வாசனை என்னுடைய நாசிக்குள் நுழைந்தது. நெருப்புப் பெட்டியை உரசியபோது, அதன் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு சிறுவனின் வெளிறிப்போன முகத்தை நான் பார்த்தேன்.

“”என்னைத் தவிர வேறு யார் இங்கே வருவாங்க? இது நானேதான்”- தன்னுடைய உடலின் எடை முழுவதையும் என்மீது சாய்த்துக் கொண்டு அவள் சொன்னாள்.

இன்னொரு நெருப்புக் குச்சியையும் எடுத்து உரசினேன். கண்ணாடி டம்ளரின் “சில்’ சத்தம் கேட்டது. அந்த சிறிய மெலிந்து காணப்பட்ட கை தகர விளக்கை எரியச் செய்தது.

“”என் தங்கமே…”- ஒரு மூலையில் சாய்ந்து விழுந்துகொண்டே அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். செங்கற்களாலான அந்தத் தரையிலிருந்து அதிக உயரத்தில் என்று கூற முடியாத அளவிற்குப் படுப்பதற்கான ஒரு இடம் தயார் செய்யப்பட்டிருந்தது.

விளக்கின் ஒளியைக் குறைப்பதற்காக அந்தச் சிறுவன் அதன் திரியைத் தாழ்த்தினான். அப்போது அது புகையத் தொடங்கியது. அவனுடைய முகத்தில் ஒரு தீவிரத்தன்மை இருந்தது. அவன் கூர்மையான மூக்கின் நுனியையும், பெண்பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்ற தடிமனான உதடுகளையும் கொண்டிருந்தான். சிறிதும் பொருத்தமற்ற முறையில் வண்ணம் பூசப்பட்ட ஒரு ஓவியத்தைப்போல அவன் இருந்தான். விளக்கைச் சரி பண்ணிய வுடன், தன்னுடைய கூர்மையான பார்வையால் என்னைப் பார்த்து அவன் சொன்னான்:

“”அம்மா மது அருந்தியிருக்காங்கள்ல?”

அவ்வப்போது தேம்பித் தேம்பி அழுதுகொண்டும், இடையில் குறட்டை விட்டுக் கொண்டும் அவனுடைய தாய் அந்தப் படுக்கை யில் மல்லாக்கப் படுத்துக் கிடந்தாள்.

“”இவங்களோட ஆடையை மாற்றணும்”- நான் சொன்னேன்.

“”அப்படின்னா ஆடையை மாற்றுங்க”- கண்களைத் தாழ்த்திக் கொண்டு அவன் சொன்னான்.

நான் அவளுடைய நனைந்த பாவாடையை அவிழ்க்க ஆரம்பித் தவுடன், மிகவும் தீவிரமாக குரலைத் தாழ்த்திக்கொண்டு அவன் கேட்டான்:

“”விளக்கை அணைக்கணுமா?”

“”எதற்கு?”

அதற்கு அவன் பதில் கூறவில்லை. ஒரு சாக்கு மூட்டையை அவிழ்ப்பதைப்போல அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்துக் கொண்டே நான் அவனைப் பார்த்தேன். சாளரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியில் அவன் உட்கார்ந்திருந் தான். நல்ல உறுதியான பலகைகளைக் கொண்டு உண்டாக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியின் மேலே கறுப்பு எழுத்துக்களில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எல்.ஆர். அன்ட் கம்பெனி.’

சதுர வடிவத்தில் இருந்த அந்தச் சாளரத்தின் அடிப்பகுதி அந்தச் சிறுவனின் தோளுக்கு அருகில் இருந்தது. சுவரில் சிறிய அடுக்குகளைக் கொண்ட அலமாரி இருந்தது. அந்த அடுக்குகளில் பலவகைப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளும் நெருப்புப் பெட்டி களும் இருந்தன. அந்தச் சிறுவன் உட்கார்ந்திருந்த பெட்டிக்கு அருகில் மஞ்சள்நிறத் தாளால் மூடப்பட்டு, மேஜையாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெட்டி இருந்தது. மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்ட கைகளால் அவன் தன்னுடைய கழுத்திற்குப் பின்னால் பிடித்திருந்தான். இருள் நிறைந்த சாளரத்தின் பலகைகளுக்கு அப்பால் அவனுடைய பார்வை இருந்தது.

அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நான் அவற்றை அடுப்பிற்கு மேலே விரித்துப் போட்டேன். அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்து நீரை எடுத்து, நான் கைகளைக் கழுவினேன். கைக்குட்டையால் கைகளைத் துடைத்த நான் சொன்னேன்:

“”சரி… குட்பை.”

என்னைப் பார்த்து சற்று கொஞ்சுகிற குரலில் அவன் கேட்டான்:

“”நான் இந்த விளக்கை அணைக்கட்டுமா?”

“”உன் விருப்பம்…”

“”என்ன? நீங்க போறீங்களா? நீங்க இங்கே படுக்கலையா?”

தன்னுடைய மெலிந்த கையை அவன் தன்னுடைய தாயை நோக்கி சுட்டிக் காட்டினான்: “”இவங்ககூட…”

“”எதற்கு?”- நான் அலட்சியமாகக் கேட்டேன்.

“”அதை நீங்களே தெரிஞ்சிக்குவீங்க”- சர்வசாதாரணமாக அவன் சொன்னான்: “”இங்கே வர்றவங்க எல்லாரும் அப்படி நடப்பதுதான் வழக்கம்.”

கடைக் கண்களால் நான் சுற்றிலும் பார்த்தேன். நான் நின்றிருந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளி அழுக்கான ஒரு அடுப்பு இருந்தது. அதற்கடுத்து கழுவ வேண்டிய பாத்திரங்கள் கிடந்தன. மரப்பெட்டிக்குப் பின்னால் தார் புரண்ட கயிறும், ஓக் மரத்தின் கொம்பு ஒன்றும், மரத்துண்டுகளும், ஒரு தாழ்ப்பாளும் கிடந்தன.

என்னுடைய கால்களுக்கு அருகில் அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட பெண்ணின் உடல் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தது.

“”உன்னுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமா?”- நான் அந்தச் சிறுவனிடம் கேட்டேன்.

கவலையுடன் என்னைப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்:

“”உங்களுக்குத் தெரியுமா? நாளை காலை வரை அவங்க எழுந்திருக்க மாட்டாங்க.”

“”அப்படியா? எனக்கு அவள் தேவையில்லை.”

அந்த மரப்பெட்டிக்கு அருகில் சப்பணம் போட்டு அமர்ந்து கொண்டு, அவனுடைய தாயைப் பார்த்த சூழ்நிலையை நான் விளக்கிச் சொன்னேன். மிகவும் சுவாரசியத்துடன் நான் பேச முயற்சித்தேன்.

“”அவள் அந்த சேற்றில் இருந்துகொண்டு துளாவ ஆரம்பிச் சிட்டா- துடுப்பால் தோணியைச் செலுத்துவதைப்போல… பாட்டு பாடிக்கொண்டே…”

தன்னுடைய மெலிந்த மார்புக் கூட்டின்மீது தடவிக் கொண்டே ஒரு வெளிறிய சிரிப்பை எனக்கு வெளிப்படுத்தியவாறு அவன் தலையை ஆட்டினான்.

“”அம்மா அதிகமாகக் குடிச்சிட்டாங்கன்னா இப்படித்தான். சுய உணர்வு வந்த பிறகும் அம்மா ஒவ்வொரு தமாஷ்களும் பண்ணு வாங்க… சின்ன பெண் குழந்தைகளைப்போல…”

இப்போது என்னால் அவனுடைய கண்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்தக் கண்களின் மேற்பகுதியில் நிறைய உரோமங்கள் வளர்ந்திருந்தன. அசாதாரணமான அளவில் பெரிதாக இருந்த புருவங்களையும், சற்று அதிகமாகவே சிறு உரோமங்கள் வளர்ந்திருந்த இமைகளையும் அவன் கொண்டிருந்தான்.

உடல் வெளிறிப்போய் இருப்பதை எடுத்துக்காட்டுவதைப் போல அவனுடைய கண்களுக்குக் கீழே நீல நிறம் படர்ந்து விட்டிருந்தது. மூக்கின் இணைப்புப் பகுதியில் நீளமான ஒரு வளைவு இருந்தது. அதற்குச் சற்று மேலே நெற்றியில் சிவப்பு நிறத்தில் உரோமங்கள் வளர்ந்து காணப்பட்டன. கண்களில் சாந்தம் குடிகொண்டிருப்பதைப்போல தோன்றினாலும், அது விளக்கிக் கூற முடியாதது மாதிரி இருந்தது. அமானுஷ்யமானதாகவும் அசாதாரணமானதுமாகவும் இருந்த அவனுடைய பார்வையை மொத்தத்தில் என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.

கீழே கிடந்த கிழிந்த துணிகளை எடுத்துப் போட்டு தன்னுடைய மெலிந்துபோன கால்களில் ஒன்றை அவன் வெளியே எடுத்தான். அடுப்பிலிருந்து நெருப்புக் கனலை எடுத்து மாற்று வதற்கு பயன்படக்கூடிய ஒரு இடுக்கியைப்போல அது இருந்தது. அவன் தன்னுடைய கால்களைக் கையால் எடுத்து அந்த மரப்பெட்டியின்மீது வைத்தான்.

“”உன் கால்களுக்கு என்ன ஆச்சு?”

“”இங்கே பாருங்க… இது எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? பிறக்கும்போதே இது இப்படித்தான் இருந்தது. அதனால் நடக்க முடியாது. இந்தக் கால்களுக்கு உயிர் இல்லை. ஒரு பயனும் இல்லாமல்…”

அவன் தான் கூற வந்ததை முழுமையாகக் கூறி முடிக்கவில்லை.

“”அந்தச் சிறிய பெட்டிக்குள் என்ன இருக்கு?”

“”அது என்னுடைய மேஜிக் பெட்டி”- ஒரு குச்சியை எடுத்துக் கீழே போடுவதைப்போல, கையால் அந்த கால்களை எடுத்து மரப்பெட்டிக்குக் கீழே வைத்த அவன் சொன்னான். நல்ல பிரகாசமான சிரிப்புடன் அவன் தொடர்ந்து சொன்னான்:

“”நீங்க அதைப் பார்க்கணுமா? அப்படியென்றால் பொறுமையா உட்கார்ந்திருக்கணும். வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் இப்படிப்பட்ட ஒரு மேஜிக்கை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.”

மெலிந்துபோன, அசாதாரணமான நீளத்தில் தோற்றம் தந்த கைகளின் வேகமான அசைவுகளால் தன்னுடைய சரீரத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டவாறு, அந்த அலமாரியிலிருந்த ஒவ்வொரு பெட்டிகளையும் எடுத்து, அவன் என்னுடைய கையில் தந்தான்.

“”பத்திரமா வச்சிருங்க. பெட்டிகளைத் திறக்கக் கூடாது. அவை ஓடிப்போய் விடும். அந்தப் பெட்டிகளில் ஒன்றை காதில் வச்சுப் பாருங்க, சரியா?”

“”உள்ளே ஏதோ ஓடுறது மாதிரி இருக்கே!”

“”ஆமா… அதுதான் எட்டுக்கால் பூச்சி. செண்டை மேளம் அடிப்பவன் என்று நான் அவனுக்குப் பெயர் வச்சிருக்கேன். அவன் புத்திசாலி!”

அவனுடைய கண்கள் பிரகாசமாக இருந்தன. அந்த நீலநிறத்தில் இருந்த முகத்தில் சிறிய ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது. கைகளை வேகமாகச் செயல்பட வைத்து அலமாரியிலிருந்த சிறிய பெட்டிகளை எடுத்து, முதலில் தன்னுடைய காதிலும் பிறகு என்னுடைய காதிலும் அவற்றைச் சேர்த்து வைத்துக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் அவன் கூறத் தொடங்கினான்:

“”அவன்தான் அனீஸம் என்ற கரப்பான் பூச்சி. ஒரு பட்டாளக்காரனைப்போல சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். இதோ இது ஒரு ஈ… திருமதி. அஃபீஸ்யல் என்று அழைக்கலாம். ஒரு கேடுகெட்ட படைப்பு. நாள் முழுவதும் முனகிக் கொண்டே இருக்கும். எல்லாரிடமும் போய் ஏதாவது சொல்லிக்கொண்டி ருக்கும். அது என் தாயின் தலைமுடியைப் பிடித்துத் தரையில் இழுத்தது. அது ஈ அல்ல… தெரியுதா? தெருவிற்கு அப்பால் ஒரு பெண் இருக்கிறாள். ஈயைப் பார்க்குறப்போ அவளைப்போலவே இருக்கும். இனி… இதோ… இன்னொருவன். கருவண்டு! பெரிய ஆள்… ஒரு முதலாளி. சாதாரண மோசக்காரன் அல்ல. குடிகாரன், வெட்கம் இல்லாதவன்… அவ்வளவுதான். போதை ஏறிவிட்டால் ஒரு ஃபர்லாங் தூரத்திற்கு நிர்வாணமாக நகருவான். ஒரு கறுப்பு நிற நாயைப்போல உரோமங்கள் நிறைந்தவன். இனி… மணியன் ஈயைப் பற்றி… அங்கிள் நிக்கோடிம். நான் இந்த ஆளை வெளியில் இருந்து பிடித்தேன். இளவரசன்… அது உண்மை. கொடுத்து வைத்த ஊர்சுற்றி என்று அவன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வான். ஏதோ தேவாலயத்திற் காகப் பணம் வசூலிப்பதாக அவனுக்கு நினைப்பு. ஓசியாகக் கிடைத் தவன் என்று என் தாய் அவனைப் பற்றிக் கூறுவாள். அவனும் என் தாயின் காதலர்களில் ஒருவன். என் தாய்க்கு எத்தனையோ காதலர்கள் இருக்கிறார்கள்.”

“”அவள் உன்னை அடிப்பாளா?”

“”யார்? என் தாயா? எனக்கு அது பிடிக்கும். நான் இல்லாமல் அவங்களால் வாழ முடியாது. அவங்க ஒரு இளகிய இதயத்தைக் கொண்டவங்க. மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவங்க என்பது வேறு விஷயம். ஆனால் எங்களுடைய தெருவில் இருப்பவர்கள் எல்லாரும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். என் தாய் ஒரு பேரழகி. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவங்க. முழுமையாக மது அருந்தி, போதையில் ஆழ்ந்து கிடப்பாங்க. ஒரு கிராமத்து தேவடியாள். நான் அவங்கக்கிட்ட கூறுவேன்: “என்னு டைய பாவப்பட்ட பெண்ணே! மது அருந்துவதை நிறுத்துங்க. நீங்க பணம் சம்பாதிக்கலாம்’ என்று. ஆனால் அவங்க வெறுமனே சிரிப்பாங்க. ஒரு முட்டாள்தனமான பெண்! இல்லாவிட்டால் வேறு என்ன? ஆனால் அவங்க நல்லவங்க. அவங்க கண் விழிச்ச பிறகு, நீங்கள் அதைத் தெரிஞ்சுக்குவீங்க.”

அவன் இதயத்திலிருந்து சிரித்தான். அவன் சிரித்தபோது என்னுடைய இதயத்திற்குள் என்னவோ பொங்குவதைப்போல இருந்தது. என் இதயம் இரக்கம் கொண்டு எழுந்து அடங்கியது. அந்த நகரம் முழுவதும் கேட்பது மாதிரி சத்தம் போட்டு அழ வேண்டும்போல எனக்குத் தோன்றியது. கழுத்திற்கு மேலே அவனுடைய தலை ஒரு அசாதாரண மலரைப்போல ஆடியது. உணர்ச்சிவசப்பட்டதால் அவனுடைய கண்களில் இருந்து மேலும் அதிகமாக பிரகாசம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பதில் கூற முடியாத அளவிற்கு அது என்னை தன்னை நோக்கி இழுத்தது.

சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கருணை கலந்த அவனுடைய சிந்தனைகளைக் கேட்டு ஒரு நிமிட நேரத்திற்காவது நான் எங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தைக்கூட மறந்துவிட்டேன். ஆனால் அடுத்த நிமிடம் சிறையில் இருப்பதைப் போன்ற சாளரத் தைப் பற்றியும், வெளியே இருந்த சேற்றுக் குவியலைப் பற்றியும், அறைக்குள் இருந்த அடுப்பைப் பற்றியும், அறையின் மூலையில் கிடக்கும் மரத்துண்டுகளைப் பற்றியும் என்பதைப்போல, மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த பெண்ணைப் பற்றியும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.

“”நல்ல சுவாரசியமான மேஜிக். அப்படித்தானே?”- அந்த சிறுவன் பெருமையுடன் கேட்டான்.

“”நல்ல சுவாரசியமான விஷயம்தான்.”

“”பட்டாம்பூச்சிகள் இல்லை… பட்டாம்பூச்சிகளும் மின்மினிப் பூச்சிகளும் இல்லை.”

“”உன் பெயர் என்ன?”

“”லியோங்கா.”

“”நீ என்னுடைய பெயரைக் கொண்ட புத்திசாலிப் பையனா?”

“”உண்மையாகவா? நீங்கள் எப்படிப்பட்டவர்?”

“”நானா? யாருமே இல்லாதவன்…”

“”என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. எல்லாரும் ஏதாவ தொரு வகையைச் சேர்ந்தவர்கள்தான். எனக்கு அது தெரியணும். நீங்கள் நல்ல மனிதர் என்று தோன்றுகிறது.”

“”இருக்கலாம்.”

“”எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு பயந்தாங்கொள்ளியும்கூட.”

“”பயந்தாங்கொள்ளியா?”

“”வேணும்னா நாம் பந்தயம் வைக்கலாம்.”

எல்லாம் தெரியும் என்பது மாதிரியான ஒரு சிரிப்பைச் சிரித்த வாறு அவன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

“”நான் பயந்தாங்கொள்ளி என்று எதை வச்சு நீ நினைச்சே?”

“”அதுவா… நீங்க இப்போ என் பக்கத்துல இருக்கீங்க. உங்களுக்கு இரவு நேரத்தில் வெளியே போவதற்கு பயம் இருப்பதால்தான் நீங்க அப்படி நடந்து கொள்கிறீர்கள்.”

“”ஆனால் பொழுது புலர ஆரம்பிச்சிடுச்சு.”

“”அப்படின்னா நீங்க போயிடுவீங்க.”

“”உன்னைப் பார்க்குறதுக்கு நான் மீண்டும் வருவேன்.”

அவன் என்னை நம்பவில்லை. அவன் தன்னுடைய அழகான கண்களை இமைகளைக் கொண்டு மூடினான். ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு அவன் கேட்டான்:

“”எதற்கு?”

“”உன்கூட இருக்குறதுக்கு. நீ நல்ல ரசிகனாச்சே! நான் வரட்டுமா?”

“”சரி… இங்கே எவ்வளவு ஆட்கள் வருவது உண்டு.” ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவன் தொடர்ந்து சொன்னான்:

“”நீங்க சும்மா விளையாட்டுக்குச் சொல்றீங்க.”

“”விளையாட்டுக்குச் சொல்லல. உண்மையாகவே நான் வருவேன்.”

“”அப்படியென்றால் சரி. ஆனால் நீங்க என்னைத் தேடி வந்தால் போதும். என் தாயிடம் போக வேண்டாம். அவங்களை யாருக்கு வேணும்? நாம ரெண்டு பேரும் நண்பர்களாக இருப்போம்.”

“”சரி…”

“”ஒரு விஷயம்… நீங்கள் என்னைவிட வயதானவர் என்பது ஒரு விஷயமே அல்ல. உங்களுக்கு என்ன வயது?”

“”இருபத்தொண்ணு நடக்குது.”

“”எனக்கு பன்னிரண்டு நடக்குது. எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. எனக்கு இருப்பது அந்த நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா மட்டும்தான். என்கிட்ட வந்தால் அவளை அவளுடைய தாய் உதைப்பாள். நீங்க ஒரு திருடனா?”

“”இல்லை. ஏன் அப்படிக் கேட்கிறே?”

“”உங்க முகம் அந்த அளவிற்கு கோரமாக இருக்கு. நீளமான மூக்கும், சுருக்கங்கள் விழுந்த முகமும்… அசல் திருடனுக்கு இருப் பதைப்போலவே இருக்கு. இங்கே இரண்டு திருடர்கள் வழக்கமா வருவாங்க. ஒரு ஆளின் பெயர் ஸாஷ்கா. அவன் ஒரு முட்டாள். ஆனால் நல்ல பலசாலி. இன்னொரு ஆளின் பெயர் வனிய்கா. அவன் இரக்க குணம் படைத்தவன். ஒரு நாயைப் போன்றவன். உங்கக்கிட்ட சிறிய பெட்டிகள் ஏதாவது இருக்குதா?”

“”நான் கொண்டு வர்றேன்.”

“”சரி… நீங்க மீண்டும் வருவீங்கன்னு நான் என் தாயிடம் சொல்ல மாட்டேன்.”

“”என்ன காரணம்?”

“”அது அப்படித்தான். ஆண்கள் வருவது என்பது என் தாய்க்கு எல்லா நேரங்களிலும் விருப்பமுள்ள ஒரு விஷயம். அவங்களுக்கு ஆண்களை மிகவும் பிடிக்கும். ஆண்களின் பைகளையும்தான். அம்மா ஒரு தமாஷான பெண். அவங்களோட பதினைந்தாவது வயதில் நான் அவங்களுக்குக் கிடைச்சேன். ஆனால் அது எப்படி நடந்தது என்று என் தாய்க்கு இப்போதும் தெரியாது. நீங்க இனிமேல் எப்போ வருவீங்க?”

“”நாளைக்கு சாயங்காலம்…”

“”சாயங்காலம் நேரம் வந்துவிட்டால், என் தாய் நல்லா குடிச்சி ருப்பாங்க. திருடவில்லையென்றால் பிறகு நீங்கள் எப்படி வாழுறீங்க?”

“”நான் பவேரியன் க்யாஸ் விற்கிறேன்.”

“”அப்படியா? எனக்கு ஒரு குப்பி கொண்டு வந்து தருவீங்களா?”

“”தாராளமா… கட்டாயம் கொண்டு வந்து தர்றேன். நான் புறப்படட்டுமா?”

“”சரி… நீங்க மீண்டும் வருவீங்களா?”

“”கட்டாயமா…”

அவன் அந்த நீண்டு மெலிந்த கைகளை நீட்டிப் பிடித்தான். அந்த குளிர்ந்துபோன கைகளை என் கைகளுக்குள் வைத்து நான் குலுக்கினேன். திரும்பிப் பார்க்காமல் ஒரு மது அருந்தியவனைப் போல வேகவேகமாக நான் அந்த வாசலுக்கு வந்தேன்.

நேரம் விடிந்து கொண்டிருந்தது. அணையப் போகும் வெள்ளி நட்சத்திரம் நடுங்கியவாறு அந்த நனைந்து கிடந்த கட்டிடங்களுக்கு மேலே வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கீழ்தளத்தில் இருந்த கட்டிடத்தின் சாளரங்கள் ஒரு குடிகாரனின் சுருங்கிப்போன, அசிங்கமான கண்களைப்போல என்னைப் பார்த்தன. வாசலில் நின்ற குதிரை வண்டியில் சிவந்த முகத்தைக் கொண்ட ஒரு மனிதன் படுத்திருந்தான். அவனுடைய பெரிய கால்கள் விரிந்து கிடந்தன. சிறு தாடி வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பற்கள் அதற்கு மத்தியில் தெளிவாகத் தெரிந்தன. அவன் கண்களை மூடிக்கொண்டு யாரையோ கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்கிறான் என்று நமக்குத் தோன்றும். முதுகில் முடிகள் உதிர்ந்த ஒரு நாய், நான் நீரில் நடக்கும் சத்தத்தைக் கேட்டு எனக்கருகில் வந்து கால்களை முகர்ந்து பார்க்கத் தொடங்கியது. என்னுடைய இதயத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இரக் கத்தை எழுப்பியவாறு பசியின் கொடுமையை அது வெளிப்படுத்தியது.

முந்தைய இரவு உண்டான அந்த சேற்று நீரில், அதிகாலை வேளையில் வானம் தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. நீலநிறமும் குங்குமத்தின் நிறமும் சேர்ந்து தெரிந்த வானத்தின் தோற்றம் அந்த சேற்று நீரில் மனதை மயக்கி வசப்படுத்தும் அட்டகாசமான இனிய உணர்வைப் படைத்தது.

மறுநாள் நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில் இருந்த சிறுவர்களிடம் எனக்குக் கொஞ்சம் வண்டுகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தரவேண்டும் என்று சொன்னேன். மருந்துக் கடைக்காரனி டம் அழகான சிறிய அட்டைப் பெட்டிகளை வாங்கினேன். ஒரு குப்பி க்யாஸ், கொஞ்சம் தேனில் செய்யப்பட்ட கேக்குகள், பன்கள் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு நான் லியோங்காவைப் பார்ப்பதற்காகச் சென்றேன்.

மிகுந்த ஆச்சரியத்துடன் லியோங்கா என்னுடைய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டான். அந்தப் பகல் வெளிச்சத்தில் அவனுடைய கண்கள் எப்போதும் இருப்பதைவிட அழகாகவும் மலர்ந்தும் காணப்பட்டன.

“”கடவுளே!”- ஒரு சிறுவனிடமிருந்து வரும் குரல் என்பதைப் போல இல்லாமல் ஆழத்திலிருந்து புறப்படுவதைப்போன்ற குரலில் அவன் சொன்னான்:

“”இங்கே பாருங்க… நீங்க ஒரு பணக்காரரா? இல்லாவிட்டால் இதெல்லாம்…? இதெல்லாம் எப்படி முடியும்? ஒரு வசதி படைத்த மனிதர் வறுமை வேடம் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் ஒரு திருடர் இல்லை என்று நீங்களே சொன்னீங்க. அடடா… என்ன அழகான பெட்டிகள்! என் கைகள் கழுவப்படாமல் இருப்பதால் எனக்கு அதைத் தொடுவதற்குக்கூட தயக்கமாக இருக்கிறது. அதற்குள் என்ன இருக்கு? அந்த வண்டு என்ன மாதிரி சத்தம் போடுகிறான்! எல்லாம் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. சில பச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். கடவுளே! போடா, பறந்து போடா… போகமாட்டியா? ம்… அது நடக்காது.”

தொடர்ந்து அடக்க முடியாத சந்தோஷத்துடன் அவன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்.

“”அம்மா… சீக்கிரமா கொஞ்சம் வாங்க. ஏய்… விலைமாதுவே! நீங்க என் கைகளைக் கொஞ்சம் கழுவிவிடுங்க. இந்த மனிதர் என்ன வெல்லாம் கொண்டு வந்திருக்கிறார் என்பதை வந்து பாருங்க. இவரை உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரவு வேளையில் உங்களை இங்கே கொண்டு வந்த மனிதர்… போலீஸ்காரரைப்போல பார்ப்ப தற்கு இருக்கிறார். இவருடைய பெயரும் லியோங்காதானாம்.”

“”நீ அவருக்கு நன்றி சொல்லு”- சிறிதும் அறிமுகமில்லை என்று தோன்றக்கூடிய சாந்தமான குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது.

சிறுவன் பலமாகத் தலையை ஆட்டினான்.

“”நன்றி… நன்றி…”

முடி இழையைப் போன்ற தூசுப்படலம் ஒரு மேகக் கூட்டத் தைப்போல அந்த தரைக்கு மேலே பரவியது. அதற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் புன்சிரிப்பில் தெரிந்த கொஞ்சம் பற்களையும், மங்கலாகத் தெரிந்த முகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது.

“”குட் மார்னிங்!”

“”குட் மார்னிங்!”- அந்தப் பெண் திரும்பச் சொன்னாள். அவளுடைய அடக்கிப் பிடித்த குரல்… ஒரு விதத்தில் மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. தன்னுடைய சிறிய கண்களைக் கொண்டு, சற்று கேலி பண்ணுவதைப்போல அவள் என்னைப் பார்த்தாள்.

லியோங்கா என்னை மறந்து போயிருந்தான். அவன் ஒரு தேன் கேக்கைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த அட்டைப் பெட்டி களை மிகவும் கவனமாகத் திறந்துகொண்டே அவன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். கண்களுக்குச் சற்றுக் கீழே நீலநிறத்தைப் பரவச் செய்துகொண்டு அவனுடைய இமைகள் நிழல் விரித்துக்கொண்டிருந்தன. ஒரு கிழவனின் தெளிவற்ற பார்வை யைப்போல சூரியன் சேறு படிந்த சாளரத்தின் கண்ணாடிகள் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவனின் சிவந்த தலைமுடியில் அது சிறிதும் கடுமை இல்லாத பிரகாசத்தைப் பரப்பியது. கழுத்துப் பகுதியில் அவனுடைய சட்டை திறந்து கிடந்தது. அந்தச் சிறிய எலும்புக் கூட்டிற்குள் அவனுடைய இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவனுடைய மார்பில் மிகவும் சிரமப்பட்டு பார்க்க முடிகிற மார்புக் கண்களும் வெளித் தோலும் அந்தத் துடிப்பில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன.

அவனுடைய தாய் அடுப்பிற்கு அருகில் இருந்து எழுந்தாள். துவாலையை நனைத்து எடுத்து அவள் லியோங்காவின் அருகில் சென்றாள். அவள் அவனுடைய இடக் கையைத் தன் கையால் எடுத்தாள்.

“”அதோ அவன் ஓடுகிறான். அங்கேயே நில்லுடா”- மரப் பெட்டிகளை இறுகப் பற்றிக்கொண்டு, கீழே போட்டிருந்த துணிகளைத் தாறுமாறாக்கி, மெலிந்த கால்களை வெளியே காட்டியவாறு அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கத்தினான்:

“”அவனைப் பிடிங்க…”- அவன் ஆர்ப்பாட்டத்தை அதிகரித்தான்.

அந்த வண்டைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கையில் வைத்து, சோள மலரின் நிறத்தைக் கொண்ட கண்களால் அதையே வெறித்துப் பார்த்தவாறு, அதிகமான நாட்கள் பழக்கம் இருப்ப தைப்போல காட்டிக் கொண்டு அவன் என்னுடன் பேசினான்.

“”இவை எங்களுக்கு நிறைய இருக்கு. இவற்றை நெருக்கிக் கொன்னுடாதீங்க”- முன்னெச்சரிக்கையாகக் கூறுவதைப்போல அவன் சொன்னான்: “”நல்லா தண்ணி அடிச்ச ஒரு நாள், என் தாய் என்னுடைய மேஜிக் பெட்டிகளின்மீது ஏறி உட்கார்ந்து, இருந்தவை அனைத்தையும் நாசம் பண்ணிட்டாங்க.”

“”அதை மறந்திடு சிறுவனே!”

“”பிணங்கள் ஒரு குவியலாக இருந்தன. அவை எல்லாவற்றையும் நான் நெருப்பு வைத்து எரித்தேன்.”

“”ஆனால் பிறகு ஒருநாள் சில வண்டுகளை நான் உனக்குப் பிடித்துத் தந்தேன்ல?”

“”அதனால் என்ன பிரயோஜனம்? என் தாய் அன்னைக்கு நசுக்கிக் கொன்ற வண்டுகள் அனைத்தும் பயிற்சி பெற்றவையாக இருந்தன. அவை இறந்தவுடன், நான் அவற்றை அடுப்பில் போட்டு எரியவிட்டேன். இதோ… பார்த்தீங்களா? நான் இங்கு ஒரு சுடுகாட்டை உண்டாக்கி வைத்திருக்கிறேன். நான் நடந்து சென்று அவற்றை அதில் போடுவேன். உங்களுக்குத் தெரியுமா? என் கையில் மிங்கா என்ற ஒரு எட்டுக்கால் பூச்சி இருந்தது. கிட்டத்தட்ட என் தாயின் வாடிக்கையாளர்களில் ஒருத்தனைப்போல- அந்த அடிதடி களில் ஈடுபடக்கூடிய தடியன் இருந்தானே…. இப்போ சிறையில் நிரந்தரமாக இருக்கும் ஒருத்தன்… அவனைப்போல அந்த எட்டுக்கால் பூச்சி இருக்கும்.”

“”அடடா… என் செல்ல மகனே!”- அந்தப் பெண் குச்சியைப் போல இருந்த சிறிய விரல்களைக் கொண்ட கைகளால் அவனுடைய தலைமுடியை ஒதுக்கிவிட்டு அவனைக் கொஞ்சினாள். முழங்கை யால் என்னை சீண்டியவாறு, புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்த கண்களுடன் அவள் என்னிடம் கேட்டாள்:

“”நல்ல பையன்… என்ன அழகான கண்கள்! சரியா?”

“”என் கண்களில் ஒன்றை எடுத்து, அதற்கு பதிலாக எனக்கு என்னுடைய கால்களைத் தந்தால் போதும்”- லியோங்கா சிரித்துக் கொண்டே சொன்னான். ஒரு வண்டை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவன் தொடர்ந்து சொன்னான்:

“”இந்தத் தடியன் இரும்புப் பானையைப்போல இருக்கிறான். அம்மா, இவன் அந்த பாதிரியார் மாதிரியே இல்லே? நீங்க ஒரு ஆளுக்கு கோணி சரி பண்ணி தந்தீங்கள்ல அம்மா? அந்த ஆளை ஞாபகத்துல இருக்குதா?”

“”ஞாபகத்துல இருக்குன்னு கட்டாயம் சொல்வேன்.”

சிரித்துக்கொண்டே அவள் அந்தக் கதையைக் கூறத் தொடங்கினாள்:

“”ஒருநாள் ஒரு பாதிரியார் வந்தார். அவருடைய தோற்றத்தைப் பார்க்கவே சகிக்கலை. அவர் என்னிடம் சொன்னார், “நீ ஒரு தையல் பண்ணக்கூடிய பெண்தானே? நீ எனக்கு சணலாலான ஒரு கோணியை உண்டாக்கித் தரமுடியுமா?’ என்று. “அப்படிப்பட்ட கோணிகளைப் பற்றி நான் இன்றுவரை கேள்விப்பட்டதே இல்லை. என்னால் முடியாது’ என்று நான் சொன்னேன். “அப்படியென்றால் உனக்கு நான் கற்றுத் தருகிறேன்’ என்று அவர் சொன்னார். அவர் தன்னுடைய ஆடையை அவிழ்த்தார். நீங்க நம்புவீங்களா? அவருடைய இடுப்பைச் சுற்றி பலமான நீளம் கொண்ட ஒரு கயிறைச் சுற்றி வைத்திருந்தார். சணலைப் பயன்படுத்திக் கோணி தயாரிப்பது எப்படி என்பதை எனக்கு அவர் கற்றுத் தந்தார். அந்தக் கோணியை நெய்து கொண்டிருந்தபோது, நான் மனதில் நினைத்தேன்- “இந்தக் கோணியை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? தேவாலயத்திற்குள் நுழைந்து திருடுவதற்காக இருக்குமோ?’ என்று.”

அவள் சிரித்தாள். ஒரு கையால் அவள் சிறுவனைத் தடவ ஆரம்பித்தாள்.

“”அந்த மனிதர் சரியான நேரத்திற்கு வந்தார். நான் அவரிடம் சொன்னேன், “திருடுவதற்காக நீங்கள் இதை பயன்படுத்துவதாக இருந்தால், நான் இந்த வேலையைச் செய்ய முடியாது’ என்று. ஆனால் அந்த தந்திரசாலியான மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார், “இல்லை. ஒரு சுவரில் ஏறிப் பிடிப்பதற்குத்தான். என் வீட்டைத் தாண்டி பெரிய சுவர் இருக்கிறது. நாங்கள் பாவம் செய்பவர்கள். சுவரின் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு நாங்கள் பாவம் செய்கிறோம். உனக்குப் புரியுதா?’ என்று. நான் கோணியை நெய்ய ஆரம்பித்தேன். இரவில் என்னுடன் உடலுறவு கொண்ட பிறகு அவர் வெளியே போனார். அப்போ நாங்க எப்படியெல்லாம் சிரிச்சோம் தெரியுமா?”

“”சிரிக்கிறதுன்னா மிகவும் விருப்பமான விஷயமாச்சே!” – ஒரு முதிர்ந்த ஆணின் குரலில் அந்தச் சிறுவன் கேட்டான்: “”பாத்திரத்தை எடுத்து வச்சு தேநீர் தயாரிக்கக்கூடாதா?”

“”அதற்கு இங்கே கொஞ்சம்கூட சர்க்கரை இல்லை.”

“”போயி வாங்கிட்டு வாங்க.”

“”பணமில்லை.”

“”ஓ! உங்களுடைய பாழாய்ப்போன குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்! இவரிடமிருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்குங்க” – அவன் நான் இருந்த பக்கம் திரும்பினான்: “”உங்க கையில காசு இருக்கா?”

நான் அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் காசு கொடுத்தேன். உற்சாகத்துடன் அவள் வேகமாக எழுந்தாள். காய்ந்துபோன, கரி படிந்த சிறிய ஒரு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து வைத்து விட்டு, ஒரு பாட்டை மெதுவான குரலில் பாடியவாறு அவள் வெளியே சென்றாள்.

“”அம்மா, அந்த சாளரத்தைக் கழுவுங்க. வெளியே இருக்கும் காட்சிகள் எதையும் என்னால் பார்க்க முடியல” – அந்தச் சிறுவன் உரத்த குரலில் சொன்னான்.

“”டேய், பூச்சிகளா! நீங்க அந்த அளவுக்கு புத்திசாலிகளாக இருக்க வேண்டாம். நான் சொல்றேன்”- அவன் சொன்னான். பூச்சி கள் இருந்த ஒவ்வொரு சிறிய பெட்டியையும் மிகவும் கவனமாக அவன் அலமாரியில் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். ஈரமான சுவரில் அறையப்பட்டிருந்த ஆணியின் பலத்தில் நின்று கொண்டிருந்த அலமாரிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. “நல்லா வேலை செய்கிற என் தாய் நூல் நூற்க ஆரம்பித்து விட்டால் நமக்கு இருமல் வரும். இந்த அறை முழுவதும் தூசி நிறைந்து விடும். அப்போது நான் அழுவேன். “அம்மா, கடவுள் புண்ணியமா என்னை வெளியே கொண்டு போங்க. இல்லாவிட்டால் நான் இங்கே கிடந்து அருகிலேயே இறந்துவிடுவேன்’ என்று சொல்வேன். ஆனால் நான் அதையெல்லாம் சகிச்சுக்கிடணும் என்று என் தாய் சொல்லுவாங்க. நான் அவங்ககூடவே இருக்கணும்னு சொல்லுவாங்க. என் அம்மாவுக்கு என்மீது ரொம்ப பிரியம். அதில் சந்தேகமே வேண்டாம். வேலை செய்றப்போ அம்மா பாடிக் கொண்டே இருப்பாங்க. என் தாய்க்கு எவ்வளவோ பாடல்களைத் தெரியும்.”

உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக அவனுடைய கண்கள் ஒளிர்ந்தன. அடர்த்தியான புருவங்கள் உயர்ந்து வளைந்து நின்றன. கரடுமுரடான உற்சாகக் குரலில் அவன் பாட ஆரம்பித்தான்.

“”ஸோஃபாவில் கிடப்பது யார்? ஸோஃபிதானே?” – சிறிது நேரம் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு நான் சொன்னேன்.

“”அது நல்ல பாட்டு இல்ல…”

“”அந்தப் பாட்டுகள் எல்லாம் அப்படிப்பட்டவைதான்”- லியோங்கா உரத்த குரலில் சொன்னான். திடீரென்று எதையோ கேட்டதைப்போல அவன் சொன்னான்: “”அந்தப் பாட்டைக் கேட்டீங்களா? சீக்கிரமா என்னைக் கொஞ்சம் தூக்குங்க.”

சாம்பல் நிறம் படர்ந்த தோலால் மூடப்பட்டிருந்த அந்த சிறிய எலும்புக் கூட்டை நான் எடுத்துத் தூக்கினேன். தன்னுடைய தலையை சாளரத்தின் வழியாக வெளியே வைத்துக்கொண்டு ஆர்வத்துடன் அவன் கூர்ந்து கவனித்தான். அவனுடைய அசைவே இல்லாத கால்கள் சுவரிலிருந்து கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. வெளியே தெருவில் ஆர்கனில் ஒரு அருமையான பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பையனின் கரடுமுரடான குரலுடன், நாயின் ஊளைச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பாட்டுடன் சேர்ந்து லியோங்கா முனகிக் கொண்டிருந்தான்.

தறியில் தூசு குறைந்து விட்டிருந்தது. அவனுடைய தாயின் தலைக்குப் பின்னால் சிதிலமடைந்த சுவரில், ஒரு நாணயத்தின் அளவிற்குப் பெண்டுலம் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண் டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் கழுவாமல் கிடந்தன. அங்குள்ள எல்லா பொருட்களின் மீதும் தூசியால் ஆன ஒரு அடர்த்தியான படலம் படர்ந்து விட்டிருந்தது. மிகவும் அதிகமாக தூசு படர்ந்திருந்தது அந்த அறையின் மூலையில் இருந்த எட்டுக்கால் பூச்சியின் வலையின்மீதுதான்.

லியோங்காவின் இருப்பிடம் தூசிப்படலம் நிறைந்த ஒரு பொந்தைப்போல இருந்தது. அந்த துவாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான தூசிகள் படிந்திருந்தன.

தேநீர் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரம் அதற்கென்று இருக்கக்கூடிய சத்தத்தை உண்டாக்கியது. அதன் சத்தத்தைக் கேட்டு பயந்துவிட்டதைப்போல, தெருவில் ஒலித்துக் கொண்டிருந்த ஆர்கனின் சத்தம் நின்றுவிட்டது. அதற்கு பதிலாக ஒரு முரட்டுத்தனமான குரல் வெளியே கேட்டது: “”ரிஃப் ராஃப்.”

“”என்னைக் கீழே விடுங்க”- நீண்ட பெருமூச்சை விட்டவாறு

லியோங்கா சொன்னான்: “”ஆட்கள் அவனை அங்கேயிருந்து விரட்டி விட்டுட்டாங்க.”

நான் அவனை அந்த பெட்டியின்மீது உட்கார வைத்தேன். நெஞ்சைத் தடவிக்கொண்டும், அசைந்து கொண்டும் இருந்த அவன் மிகவும் கவனமாக இருமினான்.

“”என் நெஞ்சு வலிக்குது. கொஞ்ச நேரம் சுத்தமான காற்றை சுவாசிப்பது என் உடலுக்கு நல்லது அல்ல. நீங்க எப்போதாவது பேயைப் பார்த்திருக்கீங்களா?”

“”இல்ல…”

“”நானும் பார்த்தது இல்ல. இரவு வேளையில் அவை வெளியே வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அடுப்பிற்குக் கீழே நான் உட்கார்ந்திருப்பேன். பேய்கள் சுடுகாட்டில் சுற்றித் திரியும். அப்படித்தானே?”

“”உனக்கு அவற்றால் என்ன ஆகணும்?”

“”அது ஒரு சுவாரசியமான விஷயம். அந்தப் பேய்களில் நல்லவர்களும் இருக்கலாமே! நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா அந்தத் தரைக்குக் கீழே இருக்கும் அறையில் ஒரு பேயைப் பார்த்திருக்கிறாள். அவளுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் அப்படி பயப்படச் செய்யும் விஷயங்கள் எதுவும் என்னை பயமுறுத்த வில்லை.”

தன்னுடைய காலைச் சுற்றிக் கிழிந்த துணிகளை இழுத்து சுற்றிக்கொண்டே அவன் மிகவும் வேகமாகப் பேசிக் கொண்டி ருந்தான்.

“”எனக்கு அவற்றைப் பிடிக்கும். பயப்படச் செய்யும் கனவுகள்மீது எனக்கு மிகவும் விருப்பம். மேலே வேர்கள் இருக்கும்- இலைகளும் கிளைகளும் தலைகீழாக வளரும்- வேர்களுடன் வானத்தைத் தள்ளிக் கொண்டு நிற்கும் ஒரு மரத்தை நான் கனவில் கண்டேன். வியர்வையால் குளித்து நான் கண்விழித்து விட்டேன். ஒருநாள் நான் என் தாயைக் கனவில் கண்டேன். எந்தவித ஆடைகளும் இல்லாமல் என் தாய் படுத்திருந்தாள். ஒரு நாய் என் தாயின் வயிற்றின்மீது உட்கார்ந்து மாமிசத் துண்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துண்டையும் தின்று முடித்து, அவன் எலும்புத் துண்டைத் துப்பிக் கொண்டிருந்தான். எங்களுடைய வீட்டை ஒரு வழிபண்ணி, அவன் தெரு வழியாக ஓட ஆரம்பித்தான். கதவுகளும் சாளரங்களும் பெரிய சத்தத்துடன் மூடின. ஒரு பூனைக்குட்டி அதற்குப் பின்னால் ஓட ஆரம்பித்தது…”

அவன் தன்னுடைய நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை உயர்த்தினான். ஒரு வண்ணத்தாளை எடுத்து அதைச் சுத்தம் செய்து விரித்து, சாளரத்தின் படியில் வைத்துவிட்டு அவன் சொன்னான்:

“”இந்தத் தாளை வைத்து அழகான பல பொருட்களை நான் உண்டாக்குவேன். இல்லாவிட்டால் நான் இவற்றைக் காத்காவிற்குக் கொடுப்பேன். இப்படிப்பட்ட நல்ல பொருட்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். கண்ணாடித்துண்டு, பாத்திரத் துண்டுகள், தாள், வேறு சிறு சிறு பொருட்கள்…. இவை எல்லாம் அவளுக்குப் பிடிக்கும். ஒரு வண்டிற்கு நாம் தினமும் நன்றாக இரை கொடுத்தால், அது குதிரையைப்போல பெரியதாக ஆகும். அப்படித்தானே?”

அவன் அதை முழுமையாக நம்புகிறான் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் சொன்னேன்:

“”அதற்கு ஒழுங்காகத் தீனி போட்டால் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.”

“”உண்மையாகவா?”- மிகுந்த சந்தோஷத்துடன் அவன் கேட்டான்: “”ஆனால் என் தாய் சிரிக்கிறாங்க. ஒரு பைத்தியக்காரப் பெண்!”

ஒரு மோசமான வார்த்தையையும் அவன் சேர்த்துச் சொன்னான்.

“”அவங்க ஒரு பைத்தியம்தான். நன்றாகத் தீனி கொடுத்தால், ஒரு பூனையை திடீரென்று குதிரை அளவிற்குப் பெரியதாக ஆக்க முடியும். இல்லையா?”

“”முடியும். என்னால் அதை உறுதியாகக் கூற முடியும்.”

“”அதற்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு உணவு என் கையில் இல்லை. இதை அதிர்ஷ்டக் கேடு என்று அல்லாமல் வேறு எப்படி அழைப்பது? அப்படிச் செய்ய முடியுமானால் விஷயம் நல்லபடி நடக்கும்.”

உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் அவன் இறுக்கமாகத் தன்னைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு, கைகளைச் சுருட்டிக் கொண்ட அவன் அவற்றைத் தன் மார்பில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“”ஈக்கள் ஒரு நாய் அளவிற்குப் பெரிதாகிப் பறந்து திரியும். வண்டுகளுக்கு ஒரு குதிரை அளவிற்குப் பெரிய தோற்றமும் பலமும் கிடைத்து விட்டால், அதன்மீது ஒரு குவியல் செங்கற்களை ஏற்றினா லும் அவன் அதைக் கொண்டுபோய் விடுவான். இல்லையா?”

“”அவனுக்கு தாடியும் கிருதாவும் இருக்கும் என்பதுதான் பெரிய பிரச்சினையே!”

“”அது ஒரு பிரச்சினையே இல்லை. கடிவாளம் போட நாம் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஆடி ஆடி நடக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியின் பிரச்சினையை எடுப்போம். எதைப்போல அது இருக்கிறது என்று கூறுவது? ஒரு பூனைக் குட்டியைவிட பெரிய அளவை அவனுக்குக் கொடுக்க முடியாது. எனக்கு கால் இருந்திருந்தால், அவன் எப்படி நடப்பான் என்பதை நானே நடந்து காட்டியிருப்பேன். அப்படியென்றால், கடினமாக உழைத்து என்னுடைய வளர்ப்பு மிருகங்கள் எல்லாவற்றுக்கும் நல்ல முறையில் தீனி கொடுப்பேன். நான் ஒரு கடையை ஆரம்பிப்பேன். வெளியே பரந்து கிடக்கும் வயலில் இன்னொரு வீட்டை உண்டாக்குவேன். திறந்து கிடக்கும் வயலில் நீங்கள் எப்போதாவது நடந்திருக்கிறீர்களா?”

“”நடந்திருக்கிறேனே! என்ன விஷயம்?”

“”அது எப்படி இருக்கும் என்று எனக்குக் கொஞ்சம் சொல்ல முடியுமா?”

வயல்களைப் பற்றியும் மைதானங்களைப் பற்றியும் நான் அவனுடன் பேசத் தொடங்கினேன். மிகுந்த கவனத்துடன் அவன் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உறங்க ஆரம்பித்த வுடன் கண் இமைகள் கண்ணுக்கு மேலே தாழ்ந்து விட்டிருந்தன. வாய் மெல்லத் திறந்தது. அதைப் பார்த்தவுடன் நான் என்னுடைய பேச்சின் சத்தத்தைக் குறைத்தேன். ஆனால் கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்துடன் அவனுடைய தாய் அங்கு வந்தாள். அவனுடைய இன்னொரு கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. அவளுடைய ரவிக்கைக்குள்ளே ஒரு குப்பி வோட்கா வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

“”நான் வந்துட்டேனே!”

“”வெறும் புல்லும் பூக்களும் மட்டும்”- அவன் சொன்னான்: “”அம்மா, ஒரு தள்ளு வண்டியில் ஏற்றி உட்கார வைத்து என்னை வெளியே இருக்கும் வயலுக்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாதா? ஒரு முறைகூட அதைப் பார்க்காமலேயே நான் இறந்து விடப் போகிறேன்! நீங்க ஒரு அசிங்கம் பிடித்த பன்றி… அம்மா!”- மிகுந்த கவலையுடனும் கோபத்துடனும் அவன் சொன்னான்.

ஆனால் மிகுந்த கனிவுடன் அந்தப் பெண் அதற்கு எதிர்வினை ஆற்றினாள். “”நீ இப்படியெல்லாம் கோபமாகப் பேசக்கூடாது. உனக்கு அதற்கான வயது ஆகவில்லை.”

“”கோபமாக பேசக்கூடாது என்று கூறுவது உங்களுக்கு மிகவும் சர்வசாதாரணமான ஒரு விஷயம். உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு ஒரு நாயைப்போல நீங்கள் போகலாம். நீங்கள் கொடுத்து வைத்தவள்…”- எனக்கு நேராகத் திரும்பிக் கொண்டு அவன் தன் பேச்சைத் தொடர்ந்தான்: “”இந்த வயல்களையும் மைதானங்களையும் படைத்தது கடவுள்தானே?”

“”அப்படித்தான் நான் நினைக்கிறேன்.”

“”எதற்காக அவற்றைக் கடவுள் படைத்தார்?”

“”மனிதர்கள் அந்த வழியே நடந்து திரிய…”

“”திறந்து கிடக்கும் வயல்கள்…!”- அவன் கூறிக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் விருப்பங்களை வெளிப்படுத்தும் அடையாளமாகப் புன்சிரிப்பு மலர்ந்து காணப்பட்டது. “”நான் என்னுடைய பிராணிகள் அனைத்தையும் அந்த வயலில் இறக்கி விடுவேன். என்னுடைய வளர்ப்பு மிருகங்களும் அந்த சுகத்தைக் கொஞ்சம் அனுபவிக்கட்டும். சரி… தெய்வத்தை அகதிகள் இல்லத்திலா படைக்கிறார்கள்?”

அவனுடைய தாய் தலையில் அடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். படுக்கையில் விழுந்து, கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“”யாராவது என்னை மேலே கொஞ்சம் கொண்டு போவார்களா? என் தங்கமே…”

புன்சிரிப்புடன் லியோங்கா அவளைப் பார்த்தான். பாசம் பொங்க அவளைப் பார்த்து அவன் சொன்னான்:

“”சின்ன பிள்ளையைப்போல இவ்வளவு பெரிய பெண் சிரிக்கிறாங்க. அம்மாவுக்கு சிரிப்புமீது மட்டுமே விருப்பம்!”

அந்த வார்த்தைகளை அவன் மீண்டும் சொன்னான்.

“”அவள் சிரிக்கட்டும்!” – நான் சொன்னேன்: “”நீ அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.”

“”இல்லை. நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை” – லியோங்கா ஒப்புக் கொண்டான். “”சாளரத்தின் கண்ணாடிகளைக் கழுவாத போதுதான், நான் என் தாயை வாய்க்கு வந்தபடி பேசுவேன். “சாளரத் தைக் கழுவு… சாளரத்தைக் கழுவு’ என்று நான் கெஞ்சிக்கொண்டே இருப்பேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத, கொடுத்து வைக்கப்பட்ட பகல் வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியாது. ஆனால் என் தாய் எல்லா நேரங்களிலும் அதை மறந்து விடுவாங்க.”

தேநீர் பாத்திரத்தைக் கழுவுவதற்கு மத்தியில், அவள் மெதுவாக சிரித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவாறு அவள் அந்த நீல நிறக் கண்களில் ஒன்றைச் சிமிட்டினாள்.

“”இங்கே பாருங்க… இவன் ஒரு முத்து ஆயிற்றே! இவனுடைய இதயம் எந்த அளவிற்குப் பரிசுத்தமானது! இவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நான் என்னுடைய உயிரை எப்போதோ முடித்துக் கொண்டிருப்பேன்! ஆமாம்… நான் தூக்கில் தொங்கி இறந்திருப்பேன்…”

புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண் இவை எல்லாவற்றை யும் சொன்னாள்.

அந்த நிமிடமே லியோங்கா என்னிடம் கேட்டான்: “”நீங்கள் ஒரு முட்டாளா?”

“”எனக்குத் தெரியாது. ஏன்?”

“”அம்மா சொல்றாங்க, நீங்க ஒரு முட்டாள் என்று.”

“”ஆமாம்… நான் அப்படிச் சொன்னேன் என்பதென்னவோ உண்மைதான். எதற்காக அப்படிச் சொன்னேன்?”- எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அவள் சொன்னாள்: “”தெருவில் மது அருந்தி ஆர்ப்பாட்டம் பண்ணும் ஒரு பெண்ணை இந்த மனிதர் அவளு டைய வீட்டில் கொண்டு வந்து விடுகிறார். அவளைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அங்கேயிருந்து வெளியேறுகிறார். அவ்வளவுதான். நான் இதைச் சொல்றதுக்குக் காரணம் துரோக எண்ணத்தால் அல்ல. என்ன முட்டாள் மனிதன்டா நீ!”

அவளும் ஒரு சிறுகுழந்தையைப் போலவே பேசினாள். அவளுடைய பேசும் முறை ஒரு சிறிய பெண் குழந்தையை ஞாபகப் படுத்தியது. அவளுடைய கண்கள் ஒரு பெண் குழந்தையின் கண் களைப் போலவே இருந்தன. உள்ளே போன மூக்கும், உயர்ந்த உதடும், அதற்கு உள்ளே தெரிந்த ஒரு பல்லும் பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தன. அசிங்கமான நடையும், சந்தோஷத்துடன் செய்யும் கிண்டல்களும் அவளின் இன்னொரு பக்கமாக இருந்தன.

லியோங்காவிற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு பழைய பெட்டியின்மீதுதான் தேநீர்ப் பாத்திரம் எடுத்து வைக்கப்பட்டி ருந்தது. அதன் மூடியின் வழியாக ஆவி வெளியே கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தது. லியோங்கா தன்னுடைய கைகளில் ஒன்றை ஆவி பறப்பதற்கு மேலே வைத்தான். ஆவியால் உள்ளங்கையில் ஈரம் உண்டானதும், அவன் அதை தலைமுடியில் துடைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கனவுகள் தெரிந்தன.

“”நான் பெரியவனாக ஆகும்போது, என் தாய் என்னை ஒரு கை வண்டியில் ஏற்றி தள்ளிக்கொண்டு போவாங்க. தெரு முழுவதும் பிச்சை கேட்டு கெஞ்சி நாங்கள் பணம் சம்பாதிப்போம். அதற்குப் பிறகு நான் அந்த திறந்து கிடக்கும் வயலில் இறங்குவேன்.”

“”ஓஹோ!”- அந்தப் பெண் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு சொன்னாள்: “”வயல் ஒரு சொர்க்கம் என்று இவன் நினைத் துக் கொண்டிருக்கிறான். பாவம்! பட்டாள முகாம்களும், வெட்கம் கெட்ட பட்டாளக்காரர்களும், குடிகாரர்களும் மட்டும்தான் அங்கே இருக்கிறார்கள் என்ற விஷயம் இவனுக்குத் தெரியாது.”

“”ஏய்… அப்படி எதுவும் இல்ல…”- அவன் தன் தாயின் கருத்தை எதிர்த்தான். “”இவர்கிட்ட கேட்டுப் பார். இவர் நிறைய வயல்களைப் பார்த்தவர்.”

“”நானும் பார்த்திருக்கேன்.”

“”அது கள்ளு குடித்த பிறகு…”

சிறு குழந்தைகளைப்போல தாயும் மகளும் சண்டை போட ஆரம்பித்தார்கள். அறிவுப்பூர்வமாக அந்தச் சண்டை நீண்டு கொண்டிருந்தது. உற்சாகமான அந்த மாலைப்பொழுது நிறை வடைந்து கொண்டிருந்தது. புகைந்து கொண்டிருந்த வானத்தில், சாம்பல், நீல நிறங்களில் இருந்த மேகங்கள் பரவி விட்டிருந்தன. வீட்டிற்குள் இருள் பரவியது.

ஒரு கோப்பை தேநீர் உள்ளே போனவுடன் சிறுவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னை ஒருமுறை ஓரக்கண்களால் பார்த்த அவன் தன் தாயின் பக்கம் திரும்பிச் சொன்னான்:

“”என் வயிறு நிறைந்துவிட்டது. எனக்குத் தூக்கம் வருது.”

“”அப்படியென்றால் தூங்கு”- தாய் சொன்னாள்.

“”அப்படின்னா இவர் போகப் போறாரா? நீங்க போயிடுவீங்களா?”

முழங்காலால் என்னைச் சீண்டிய அவள் சொன்னாள்: “”பயப்படாதே… நான் இவரை விடமாட்டேன்.”

“”போகக்கூடாது… தெரியுதா?”- லியோங்கா சொன்னான். கண்களை மூடிக்கொண்டு நன்கு பரவி அந்த மரப்பெட்டியின்மீது அவன் உடலை நீட்டிக் கொண்டு படுத்தான். திடீரென்று தலையை உயர்த்தித் தன் தாயைப் பார்த்து திட்டுகிற குரலில் அவன் சொன்னான்:

“”மற்ற பெண்கள் செய்வதைப்போல… அம்மா, நீங்க இவரைக் கல்யாணம் பண்ணினால் என்ன? கண்களில் கண்ட ஆட்களுடன் எல்லாம் நீங்கள் ஏன் பழகுறீங்க? அவர்கள் உங்களை அடிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறார்கள்? இவர் ஒரு அன்பான மனிதர்…”

“”தூங்கப் பார்…”- தேநீர்க் கோப்பையுடன் தன் உதடுகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்:

“”இவர் ஒரு பணக்காரர் வேறு…”

அவலட்சணம் பிடித்த தன்னுடைய உதடுகளால் அந்தக் கோப்பையிலிருந்து தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே, பழைய ஒரு நன்கு அறிமுகமான மனிதனிடம் கூறுவதைப்போல அவள் என்னிடம் சொன்னாள்:

“”இப்படித்தான் தட்டியும் முட்டியும் எங்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இரண்டுபேர் மட்டுமே இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை… வெளியே இருப்பவர்கள் என்னை பைத்தியம் என்று அழைப்பார்கள். அதனால் என்ன? எனக்கு அதைப்பற்றி எந்த வெட்கக் கேடும் இல்லை. வெளியே நான் ஒரு கேடு கெட்ட சரக்குத்தான். அந்த விஷயம் உங்களுக்கு என்னைப் பார்க்கும்போதே தெரியும்ல? நான் எதற்கு லாயக்கு என்ற விஷயம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவன் தூங்கிவிட்டான். அவன் ஒரு நல்ல பையன்…”

“”ஆமாம்… மிகவும் நல்ல பையன்.”

“”என்னால் அவனை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க முடியவில்லை. அவன் நல்ல புத்திசாலி. சரிதானா?”

“”பிறகு? நல்ல அறிவுள்ள பையன்.”

“”நீங்கள் சொன்னது ஒரு வார்த்தைகூடப் பிசகாமல் சரியானது. அவனுடைய அப்பா நல்ல ஒரு மனிதராக இருந்தார். வயதான மனிதர். இந்த சட்டங்கள் எல்லாம் எழுதுவார்களே… அவர்களை நாம் எப்படி அழைப்போம்.”

“”நோட்டரி…”

“”ம்… அதேதான். நல்ல மனிதராக இருந்தார். அவருக்கு என்மீது நல்ல பிரியம் இருந்தது. நான் அவருடைய வீட்டில் வேலை பார்த்தேன்.”

அவள் அவனுடைய கால்களுக்கு மேலே துணியை இழுத்து விட்டாள். அவன் தலையணையாக பயன்படுத்திய அந்தக் கறுத்த துணிக்கட்டை அவள் சரியாக வைத்தாள். தொடர்ந்து மிகவும் சாதாரண முறையில் அவள் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தாள்:

“”திடீரென்று அவர் இறந்துவிட்டார். நான் அங்கேயிருந்து வேலை முடிந்து திரும்பி வந்த பிறகு அது நடந்தது. ஒரு இரவு வேளையில் வெறுமனே தரையில் நிலை குலைந்து விழுந்து அவர் இறந்துவிட்டார். உங்களுக்கு க்யாஸ் விற்பதுதானே வேலை?”

“”ஆமாம்…”

“”சொந்தத் தொழிலா?”

“”இல்லை, ஒரு முதலாளிக்குக் கீழே…”

மேலும் சற்று நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் சொன்னாள்:

“”என்னைப் பார்க்குறப்போ உங்களுக்கு வாந்தி எடுக்கணும் போல இருக்கக்கூடாது. எந்தச் சமயத்திலும் நான் ஒரு மோசமான பிறவியாக இருந்தது இல்லை. இந்தத் தெருவில் இருக்கும் யாரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுக்கோங்க… எல்லாருக்கும் என்னைத் தெரியும்.”

“”எனக்கு வெறுப்போ வாந்தி எடுக்கணும் என்றோ தோணல.”

“”வெட்டப்பட்ட நகங்களும் முரட்டுத்தனமான விரல்களும் இருந்த தன்னுடைய கையை என்னுடைய முழங்காலில் வைத்துக்கொண்டு அவள் தொடர்ந்து சொன்னாள்:

“”லியோங்காவிற்காக நான் உங்களிடம் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். அவன் இன்று மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறான். இன்று நல்ல ஒரு நாளாக இருந்தது. நீங்க நல்ல காரியத்தைச் செய்தீங்க.”

“”நான் போக வேண்டிய நேரம் வந்திடுச்சு!”- நான் சொன்னேன்.

“”எங்கே?”- அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“”எனக்கு வேலை இருக்கு.”

“”இங்கே தங்குங்க.”

“”அது முடியாது.”

“”தன்னுடைய மகனையும் சாளரத்தையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, மிகவும் அமைதியாக அவள் சொன்னாள்:

“”ஏன் மெதுவா போகக்கூடாது? நான் என்னுடைய முகத்தை ஒரு துணியால் மூடிக்கொள்கிறேன். என் மகனுக்காக உங்களிடம் நன்றியைக் காட்டாமல் என்னால் இருக்க முடியாது. நான் இங்கு எங்காவது மூடிப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்கிறேன். போதுமா?”

மிகவும் உண்மை துடித்துக் கொண்டிருந்த மன சந்தோஷத்து டன் அவள் பேசினாள். அவளுடைய கண்களில்- குறும்புத்தனமான முகத்தின் சிறுபிள்ளைத்தனம் ததும்பிக் கொண்டிருக்கும் கண் களில் புன்சிரிப்பு மலர்ந்திருந்தது. ஒரு பிச்சைக்காரியின் புன் சிரிப்பாக அது இல்லை. தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு வசதி படைத்த பெண்ணின் புன்சிரிப்பு அந்தக் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“”அம்மா…”- அந்தச் சிறுவன் உரத்த குரலில் அழைத்தான்: “”பூச்சிகள் அரிக்கின்றன அம்மா. கொஞ்சம் சீக்கிரம் வாங்க…”

“”அவன் கனவு காண்கிறான்”- தன் மகனுக்கு நேராக குனிந்து கொண்டே என்னிடம் அவள் சொன்னாள்.

நான் வெளியேறினாலும் சிந்தனையில் மூழ்கியவாறு அந்த வாசலிலேயே நின்றிருந்தேன். அந்த வீட்டின் திறந்துவிடப்பட் டிருந்த சாளரத்தின் வழியாக ஒரு தூங்க வைக்கும் பாடல் மிதந்து வந்து கொண்டிருந்தது. ஒரு தாயின் தாலாட்டுப் பாடல் அது. மூக்கை அடைத்துப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு குரலில் அவள் பாடிக்கொண்டிருந்தாள். முன்பு எந்தச் சமயத்திலும் கேட்டிராத ஒரு பாடலை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

“பூச்சியும் பிராணியும் வந்தாச்சு

துன்பமும் தொல்லையும் வந்தாச்சு

துன்பத்தின் கணக்கு தெரியாது- அது

நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது!

துயரம்… துயரம்… துயரம் மட்டும்…

எங்கே நாங்கள் பறப்பது?’

சத்தம் போட்டு அழுதுவிடக் கூடாது என்பதற்காக பற்களை யும் உதடுகளையும் சேர்த்து அழுத்தி வைத்துக்கொண்டு நான் அந்த வாசலில் இருந்து தெருவில் இறங்கினேன்.

– மாக்ஸிம் கார்க்கி (அக்டோபர் 2008)

Print Friendly, PDF & Email

1 thought on “மாஷ்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *