தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,545 
 

அன்று ராயர்புரம் ஏரிய மக்களுக்கு புது அனுபவத்துடன் பொழுது விடிந்தது. காலை விடிந்ததுமே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவோடு இரவாக காம்பவுண்டு சுவை ஓட்டி, குழி தோண்டி வைக்கப்பட்டியிருந்தது எல்லோர் வீட்டு வாசலிலும் நண்டும் சிண்டுமாகக் குழந்தை குட்டியுடன் ஒவ்வொரு குடும்பமும் இழுத்துப் போத்திக் கொண்டு படுத்திருந்தனர். எழுந்து வெளியே வந்த வக்கீல் அசோக்குமார் சலாமிட்ட செக்யூரிட்டியிடம், “”என்னய்யா நடக்குது” என்றார்? “”ஏதோ கேபிள் போடறாங்களாம்யா ராவோ வநது இறங்கி வேலையை ஆரம்பிச்சுட்டாங்க என்றான் சரி, கேட்டைத்திற காரை வெளில எடுக்கணும் என்று கூறிக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

பொழுது விடிந்தவுடன் ஆங்காங்கே அடுப்பைப் பற்றவைத்து சமைக்கத் தொடங்கினார்கள். அதற்கு முன் ராயர்புரத்தைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும் செல்வச் சீமான்கள் வாழும் ஏரியா, கோட்டை போல் பெரிய கதவுகளுடன் செக்யூரிட்டியுடன் எல்லா வீடுகளும் இருக்கும். அழகாக சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், இருபக்கமும் மரம் மற்றும் பூ செடிகளுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அதனால் எல்லோரும் காலையும் மாலையும் இங்குதான் வாக் போவார்கள். நிறைய அடர்ந்த மரங்கள் இரு பக்கமும் ஒன்றோடோன்று கவிந்து இணைந்து கொண்டு குடைப்பிடித்துக் கொண்டு இருக்கும். அதனால் பறவைகள் நிறைய இருக்கும். காலை வேளையில் கீச்சு கீச்சென்று அதன் சத்தம் மனத்துக்கு இதம் அளிக்கும்.
இதை எல்லாம் எதற்கு இங்கு சொல்கிறனென்றால், இந்த இடத்தின் வசீகரத்தை அறிந்து வேறு ஏரியாவிலிருந்தெல்லாம் பலரும் வண்டி எடுத்துக்கொண்டு வந்து இங்கு நிறுத்திவிட்டு வாக் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். இப்போது. ராயர்புரம்வாசி என்று சொல்வதற்கே பெருமைபடுவர்கள் இங்கு வசிப்பவர்கள்.
அன்று மாலை பேங்க்லிருந்து வீட்டுக்குள் நுழைந்த ராஜன், குளித்துவிட்டு டி.வி. முன் உட்கார்ந்தார். சரியாக ஷேர் பற்றிய நியூஸ் கேட்டு கொண்டிருக்கும் போது வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. ஜன்னல் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தார். குழிதோண்டும் கூலித் தொழிலாளி ஒருவன் தன் மனைவியை, கையை நீட்டிக் கத்தி கொண்டிருந்தான் குடித்திருப்பான் போலிருந்தது. கையை நீட்டிக் கொண்டே பின்னால் விழப் போனான். பேசுவது தெலுங்கு போல் இருந்தது. அவளும் விடுவாதயில்லை. தம் பங்குக்கு கத்திக்கொண்டிருந்தாள். அருகில் ஒரு குழந்தை மண்ணில் தவழ்ந்து கொண்டிருந்தது. அதற்கு அருகில் ஒன்று மாங்கோட்டையைச் சப்பிக் கொண்டு நின்று கொண்டிருந்தது.

சத்தம் பொறுக்கவில்லை, இருக்க இருக்க அதிகரித்து தலையில் அடித்துக் கொண்டு ஜன்னலை இழுத்துக் சாத்தினார்.

இப்போதெல்லாம் ராயர்புரம் விடியற்காலை சித்திரை வெயிலில் கூட ஒரே புகைப்படலமாக இருக்கிறது. உபயம் விறகடுப்பு. வாக் செய்பவர்கள் எல்லோரும் மூக்கைச் சுத்தி கட்டிக் கொண்டு நடந்தாலம் இருமித் தொலைக்கிறார்கள். மூச்சு முட்டுகிறது. ஒருவருக்கொருவர் பார்க்கும் போதெல்லாம் கேட்கும் கேள்வி எப்போ இந்த வேலை முடியும் என்பதுதான்.

வாட்ச்மேன்கள் கூட அலுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். எப்போது பார்த்தாலும் தண்ணியை குடுன்னு பாட்டிலயும் குடத்தையும் எடுத்துட்டு வர்றாங்க. ஏற்கெனவே தண்ணிக் கஷ்டம். என்று இப்போது சம்மர் லீவு வேறு. குழந்தைகள் வாசலுக்கு உள்ளக்குமாக ஓடிக்கொண்டு இருந்தார்கள். வாசலில் மலைபோல் குமித்து வைத்திருந்த மண் வீடு முழுக்க கால் தடமாய்.குழந்தைகள் மாலை சைக்கிளை வெளியே எடுத்துவர வாட்ச்மேனைத்தான் கூப்பிட வேண்டியிருந்தது. ஹாயாக பீடி பிடித்துக் கொண்டு பக்கத்து வீட்டு வாட்ச்மேனுடன் அரட்டை அடித்துக் கொண்டு கண்களில் படுவோரை எல்லாம் வம்பிழுத்துக் கொண்டிருந்த வாட்ச்மேன்களின் சுத்திர வாழ்க்கை, சுந்தரத் தெலுங்கு பேசும் கூலித் தொழிலாளிகளின் வரவால் அடியோடு பறிக்கப்பட்டது. இந்த வருடம் எல்லோர் வீட்டுக் கிணறும் வற்றி விட்டது. போர் தண்ணியும் அதல பாதாளத்தில் இறங்கி விட்டது.இது போல் தண்ணீர் கஷ்டத்தை எப்போதும் அவர்கள் அனுபவித்ததில்லை.

இதற்கிடையில் காலிக் குடங்களை ஏந்தி வருபவர்களை நாயை விரட்டுவது போல் விரட்டினர் வாட்மேன்கள். என்ன செய்வது? ராயர்புரம் காலனி மக்கள் மீட்டிங் நடத்தினர் தங்கள் காலனியிலிருக்கும் பிள்ளையார் கோயிலில் மழை வரவேண்டி, யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மூன்று வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய முடிவு செய்தனர்.
இதோ பிள்ளையார் கோயில் களை கட்டத் தொடங்கிவிட்டது. வாசலில் தெரு அடைத்து, பந்தல் போட்டாயிற்று, கூடை, கூடையாகப் பூக்களும், மாலைகளும் யாகக் குண்டங்களும், வாசனைத் திரவியங்களும் பலவகையான அபிஷேகப் பொருட்களும் வந்திறங்கின. ஒவ்வொரு வெள்ளியும் பிரம்மாண்ட மாக யாகம் நடத்தப்பட்டு பல்வேறு வகையா பிரசாதங்களும் வழங்கப்பட்டன. எல்லோருக்கும் கொடுத்தது போக குழி தோன்டும் கூலித் தொழிலாளர்களுக்கு கூப்பிட்டுக் கொடுத்தனர். இரண்டு வெள்ளி முடிந்தாயிற்று, இன்னும் ஒரு வெள்ளிதான் பாக்கி. இதோ இன்று அரசு விடுமுறை நாள் எல்லோர் வீட்டிலிருந்தும் பூஜையில் கலந்துகொள்ள ஆண்களும் பெண்களும் பட்டு சரசரக்க ரெடியாக கொண்டிருந்தனர்.

இன்றைய பூஜையில் முழுக்க முழுக்க பால்தான் பிரதானமாம்.
எல்லோரும் பால் பாக்கெட்களைக் கொண்டு வந்து மலை போல் குவித்து விட்டனர். பட்டுப் புடைவையும் வைர அட்டி கையும் பளபளக்கச் செல்லும் ஒவ்வொருவரையும் கண்ணால் அளந்து கொண்டே கணவன் கொத்தித் தந்த மண்னை வாரிக் கொட்டி கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண். பக்கத்து மரத்தில் கட்டியிருந்த தூளிலிருந்த குழந்தை. தேள் கடித்தாற் போல் வீலென்று கத்தியவுடன்தான் நிலைமையின் விபரீதம் உணர்ந்தாள். காலைல குளிப்பாட்டிவிட்டு பால் கொடுத்துட்டு தூங்க வெச்சது. இன்னைக்க கூடக் கொஞ்சம் நேரம் தூங்கிடுச்சு. பாவம் பசி பிச்சுக்கும். இந்த போய் ஒரு பால் பாக்கெட் வாங்கியா, என்று தம் எட்டு வயது மூத்த பிள்ளையிடம் காசு கொடுத்து அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் வந்த அவன் “”அம்மா பால் ஒரு கடைல கூட இல்லை. இந்தா காசு என்று நீட்டினான், என்னடா இது என்றபடி தானும் ஒரு ரவுண்டு போய் வந்தாள் வெறுங்கையுடன் வந்தவளிடம், புள்ளை கத்தி விறைக்குது இந்த புடி என்று நீட்டினான் அவள் புருஷன், மடியில் வைத்து சமாதானப்படுத்த முயன்றாள் . ம்ம் பலனில்லை. கணவனிடம் சொம்பு ஒன்றைக் கொடுத்து டீக்கடையில் பால் வாங்க அனுப்பிட்டு, பதைப்பதைப்புடன் காத்திருந்தாள். நேரம்தான் கடந்து கொண்டிருந்ததே தவிர ஆள்வந்தபாடில்லை. குழந்தை கதறி கதறி மறுபடியும் தூங்கி விட்டிருந்தது மறுபடி முழித்தால் குடுக்க வேண்டுமே.

எதிர்வரிசையில் தோண்டிக் கொண்டிருந்த ஒருத்தி அவளைப் பார்த்து ஓடி வந்து இப்பத்தான் இருக்கற பால்ல டீ வெச்சேன் கொஞ்சம் முன்ன சொல்லியிருக்கக் கூடாதா? முந்தானையால் கன்னைத்துடைத்துக் கொண்டாள் தாய்காரி. யாகத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் செய்துவிட்டு நீண்ட பெரு மூச்சு ஒன்றை விட்டார் கணபதி குருக்கள். வேத விற்பன்னர்கள் எல்போரும் அவரர் ஆசனத்தில் அமர்ந்தாயிற்று. நடக்கும் ஹால்முழுவதும் நிரம்பிவழிந்தது. எல்லோரும் டி.வியை ஆஃப் செய்துவிட்ட வந்து விட்டதில் குருக்களுக்கு பரம திருப்தி. நல்ல படியாக மூன்றாவது வார யாகமும் முடிந்து மழை கொட்ட வேண்டும். சுபிட்சம் பெருக வேண்டும். அடுத்தாற்போல் தமது சம்பளத்தை அதிகரித்துக் கேட்க மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது அவருக்கு.

எல்லோரும் வரிசையாக பய பக்தியுடன் அமர்ந்திருந்தனர். யாரது எல்லோரையும் தாண்டிக்கொண்டு கிட்டத்தட்ட அவர்களின் தலை மேல் நடந்து வருவது போல் வருவது. அப்படி என்ன தலை போற அவசரம் அவனுக்கு. அருகில் வந்தவுடன்தான் தெரிந்தது. ஜட்ஜ் ராமநாதன் வீட்டு வாட்ச்மேன். வந்தவன் உடலைக் குறுக்கி வாயில் கைவைத்துக் கொண்டு குனிந்து அவர் காதருகே ஏதோ சொன்னான். அவ்வளவுதான் அவர் முகத்தில் அப்படி ஓர் அதிர்ச்சி. உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்தார். அருகே தேவாரம் பாட உட்கார்ந்திருந்த ஓதுவாரை நகரச் செய்து விட்ட மைக்கை வேகமாகத் தம் வாயருகே கொண்டுவந்தார் எல்லோருக்கும் ஒரு தகவல் ஜட்ஜ் சாரோட அம்மா காலமாயிட்டாளாம். இப்போ தான் தகவல் வந்தது அதனால் ஹோமம் பண்ண முடியாது. கோயிலுக்கு எதிர்த்தாத்துல தீட்டு இருக்கறதுனால கோயிலையும் இழுத்துச் சாத்திதான் ஆகனும் பகவன் கிருபையில அடுத்த வெள்ளிக்கிழமை இந்த ஹோமத்தைப் பண்ணலாம்,” என்று முடித்தார்.

எல்லோரும் திகைத்து நின்றனர். பின் சலசலத்துக்கொண்டே கூட்டம் கலைந்தது. கணபதி குருக்களின் அசிஸ்டெண்ட் சுப்பு பரப்பி வைக்கப்படிருந்த சமித்துக்களை எல்லாம் சேர்த்து வை. சிதற விடாதே. என்று கட்டளையிட்டுச் கொண்டே அவரும் வேகமாக எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டே வந்õதர். மாமா இதை என்ன பண்ண?” என்றான் சுப்பு அண்டாக்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பாலைக்காட்டி ம்ம் தூக்கிக் கொட்டு என்றார் கடுப்புடன்.

ஏய் சேகர் இங்க வா என்று கோயில் வாட்மேனைக் கூப்பிட்டு சுப்புவுக்கு உதவி பண்ணச் சொன்னார். இரண்டு பேரும் தூக்க மாட்டாமல் தூக்கி வந்து அண்டா பாலையும் கோயில் வாசலில் வைத்தனர். வேகவேகமாக, கோயிலைப் பூட்டி வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்தார் குருக்கள்.

“”இவாளுக்கெல்லாம் கூப்பிட்டுக் குடுத்துட்டு அண்டாவை அலம்பி எதிர்த்தாததுல கொடுத்துப் போ, என்று சுப்புவிடம் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார். செய்தி தீயாய்ப் பரவியது கையில் கிடைத்த பாட்டில்களையும் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு தெரு முழுக்க கூலியாட்கள் நிரம்பி விட்டனர். ம்ம் வரிசையில் வர்றவங்களுத்தான் இல்லாட்டி இல்ல என்று ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தான் சேகர், நிறைய இருக்கு சண்டை போடாதீங்கோ என்றபடி பாலை விட்டுக் கொடுத்தான் சுப்புவும். இடுப்பில் பசி மயக்கத்தில் இருந்த குழந்தையை இடுக்கிக் கொண்ட பாத்திரத்தில் பாலை வாங்கிக் கொண்டாள். மூத்தவன் கையிலும் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து அவனையும் வாங்க உந்தித்தள்ளிக் கொண்டிருந்தாள் அந்த இளம் தாய். பாவம் நாளையப் பொழுதுக்கும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்து அவள் மனம்.

“ம்ம் நகருங்க அவ்வளவுதான் போங்க ஆயிடுத்து என்று சுப்பு அண்டாவை நகர்த்திய பிறகுதான் கூட்டம் கலைந்தது. எல்லோரும் வீட்டுக்கு போய்விட்டாலும் ஏதோ இனம்புரியாத ஏமாற்றம் எல்லோர் மனதத்திலும் இருந்தது. சரியா மூணாவது வாரம் தடைபட்டுப் போச்சே என்று ஒருவருக்கொருவர் ஆதங்கப்பட்டுக் கொண்டனர். சே போற உசிரு நாளைக்குப் போயிருக்ககூõடதா? என்றாள் ஒருத்தி எல்லாம் இவர்கள் கøயில் இருப்பது போல், நேரிலும், ஃபோனிலும், செல்லிலும் தங்கள் ஆதங்கத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்.
மறுநாள் காலை விடிந்த போது அங்கே ரோடு இருந்த அடையாளமே தெரியவில்லை. குழிவெட்டிக் குவித்துவைக்கப்பட்டிருந்த மண் குவியல் கொழ கொழவென்று இரவு பெய்த மழையில் கரைந்து ரோடு முழுக்க அப்பியிருந்தது. ஆங்காங்கு மரம் சாய்ந்து கிடந்தது. கையில் கிடைத்த சாக்குகளையும் பேப்பர்களையும் இழுத்துப் போத்திக் கொண்டு குளிரில் ஆங்காங்கே வீட்டுக் கார் நிறுத்தங்களில் ஒண்டிக் கிடந்தனர். கூலியாட்கள்.

நேற்று பாலுக்கழுத குழந்தை. தூங்கும் தாயின் அருகே விழித்துக் கொண்டு தனியாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.

– லக்ஷ்மி மோகன் (செப்டம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *