மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 5,925 
 

வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்? விழியோரம் ஒருதுளி நீர் கசிந்து காற்றில் கரைந்தது…

மலர்விழியை சுற்றிலும் தலைவிரிக்கோலமாக அழுது கொண்டிருந்தனர் பெண்கள்.

மனத்திரையில் மலர்விழியை முதன்முதலாய் சந்தித்த நாட்கள் மலரத்தொடங்கியது..

பெண்களுக்கு பூக்கள் பிடிக்கும் என்பது இயற்கை. குறிப்பாக மல்லிகைப்பூக்களை அதிகம் விரும்புவர்.

கோவையில் கல்லூரியில் படிக்கும் மலர்விழிக்கு மல்லிகைப்பூக்கள் மீது காதல் என்றே சொல்லலாம்.

கல்லூரியில் சேர்ந்த புதிதில் “உங்களது பொழுதுபோக்கு என்ன?” என்கிற கேள்விக்கு
புத்தகம் வாசிப்பது,டிவி பார்ப்பது,அரட்டை அடிப்பது,உறங்குவது என்று ஏதேதோ எல்லோரும் சொன்னபோது

“மல்லிகைப்பூக்களுடன் பேசுவது” என்றொரு மென்மையான குரலில் மலர்விழி சொன்னது கேட்டு எல்லோரும் சிரித்தார்கள் என்னைத் தவிர.

ஏனெனில் பூக்களுடன் பொழுதுகள் கழிப்பது என் பொழுதுபோக்கு. நான் தங்கியிருக்கும் விடுதியின் ஜன்னலோரம் ஒரு செவ்வந்தி செடி உண்டு. இளமஞ்சள் வண்ணத்தில் சிறுசிறு மடல்கள் உள்மடங்கி பூத்துச் சிரிக்கும் செவ்வந்தி பூக்களில் மனம் லயித்திருக்கிறேன். என்னைப் போன்றே மலர்விழிக்கும் பூக்கள் பிடிக்கும் என்பது தெரிந்தவுடன் ஆச்சரியத்துடன் அவளை பார்த்தேன்.

அழகி என்று யாராவது அவளைச் சொன்னால் அது பாவம். அவள் பேரழகி.
பெயருக்கு ஏற்ப அவளது கண்கள் “மலர்விழி”தான்!

முதலாமாண்டு சுற்றுலா செல்லும் போதுதான் மலர்விழியுடன் அதிகம் பேச நேரம்கிடைத்தது. ஊட்டிக்கு சென்று பொட்டானிக்கல் கார்டனில் பூக்கள்நிறைந்த பகுதியில் ஒவ்வொரு பூக்களாக ரசித்தோம். மலர் என் தோழியானது அப்போதுதான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு உணவருந்த அழைத்தாள் மலர். கவுண்டம்பாளையத்தில் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அவள் வீடு. வாசல் திறந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டேன். வீட்டைச் சுற்றிலும் மல்லிகைக்கொடி படர்ந்து பச்சைபசேலென்று வளர்ந்திருந்தது. அதில் பூத்திருந்த மல்லிகைப்பூக்களின் வாசம் உயிர்தொட்டது. இதென்ன ,மல்லிகைத்தோட்டத்திற்கு நடுவே ஒரு வீடா?
என்று மலைத்துபோனேன்.

தோட்டம் அவ்வளவு பெரிதாக இருந்தாலும் வீடு மிகச்சிறியதென்றே சொல்லமுடியும். காரணம் வறுமை. மலர்விழியின் அப்பா கோவை ரயில் நிலையத்தில் கூலியாக இருக்கிறார்.

மலர்விழியின் புத்தகங்களில் கூட ஏதாவதொரு பக்கத்தில் ஒன்றிரெண்டு மல்லிகைப்பூக்கள் உறங்கிகொண்டிருக்கும்.

——————————————————————————————
சங்கின் ஒலிகேட்டு நிகழ்காலத்திற்கு வந்தேன்…

ரோஜாமாலைகளுக்கு நடுவே ஐந்தடி மல்லிகை பூவென கண்மூடி
படுத்திருக்கும் மலர்விழியை நான்கைந்துபேர் தூக்கிச் சென்று
பல்லக்கில் வைத்தார்கள்.

இந்த நிலையில் என் தோழியை பார்க்க மனமில்லாமல் அருகில் இருந்த பெட்டிக் கடைக்கு சென்று ஒரு சிகரெட் பற்றவைத்தேன். மனதை போலவே எரிய ஆரம்பித்தது என் சுயகொள்ளி.

வறுமைக்கு இரக்கமில்லையா? வறுமைக்கு மலர்விழி ஏன் உணவாகினாள்?
இடைப்பட்ட இந்த மூன்று வருடத்தில என்ன நடந்தது?

கல்லூரியின் கடைசி நாளில் என் கரம் பற்றி மெல்லிய குரலில் மலர்விழி பேசியது நினைவில் பூத்தது.

“என்னமோ தெரியலடா இந்த வாழ்க்கையே எனக்கு பிடிக்கல…எங்க வீட்ல செழிப்பா இருக்கறது அந்த மல்லிகைச்செடி மட்டும்தான். வறுமையோட வளர்ந்துட்டாலும் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி இருக்க போறேன்னு தெரியல…வசதியான வாழ்க்கை வாழ எனக்கு கொடுப்பினை இல்லையா?” பேசும்போதே அழுதுவிட்டாள். அந்த முகம் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதால்தான் இன்று மலர்விழிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

—————————————————————————————————————————

ஹாய்டா எப்படி இருக்கே…வந்து ரொம்ப நேரமாச்சா? சாரிடா ஷாட் முடிய நேரமாகிடுச்சு….

என்னருகில் வந்து கேட்ட மலர்விழியிடம் எதுவும் பேசத்தோன்றாமல் திரும்பிநடந்தேன்.

வழியெங்கும் சுவரொட்டியில் “ஆசைமல்லி” என்கிற அடைமொழியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள் நடிகை மலர்விழி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *