மரண சிந்தனைகள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 6,975 
 

அப்பல்லோ ஹாஸ்பிடல், சென்னை.

பிரபல தமிழ் சினிமா டைரக்டர் மதனகோபால் டீலக்ஸ் அறையில் தனியாகப் படுத்திருந்தார்.

அவருக்கு லிவர் கேன்சர். தன்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது.

வயது எழுபத்தைந்து ஆகி விட்டது. கடந்த நாற்பது வருடங்களாக சினிமா இண்டஸ்ட்ரியில் அவர் சாதித்தது ஏராளம். மதனகோபால் தயாரித்து டைரக்ட் செய்த எழுபது படங்களில் அறுபது படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அவர் கடைசியாக தன்னுடைய எழுபதாவது வயதில் தயாரித்து வெளியிட்ட ‘காதல் மழை’ சூப்பர் ஹிட்.

வித்தியாசமான தன்னுடைய டைரக்ஷனுக்காக அவர் ஏராளமான ரசிகர்களை சேர்த்து வைத்திருந்தார். அவர்கள் அனைவரும் கேன்சரிலிருந்து மீண்டுவர அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

மதனகோபால் தன்னுடைய எழுபதாவது வயதில்தான் தன்னை உணரத் தலைப்பட்டார். க்வான்டம் ஹீலிங் (quantum healing) பற்றி நிறைய படித்துத் தெரிந்துகொண்டார். டாக்டர் தீபக் சோப்ரா; டாக்டர் அமீத் கோஸ்வாமி போன்றவர்களின் பேச்சுக்களை அடிக்கடி கேட்டு, அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்து தன்னையே மனதளவில் நிறைய நல்லவற்றுக்கு மாற்றிக்கொண்டார். மனதையும் உடம்பையும் ஒருமுகப்படுத்தி, கெட்ட பழக்கங்களை முற்றிலும் உதறிவிட்டு தன்னை மிகவும் ஹெல்தியாக மாற்றிக்கொள்ள முயன்றார்.

எழுபது வயதிற்குமுன் பல கதாநாயகிகளுடன் தொடுப்பில் இருந்தார். தினமும் இரவில் குடித்துவிட்டு அவர்களுடன் உருளுவார். வாழ்வியல் ஒழுக்கம் என்பதே கிடையாது. ஒரு பிரபல டைரக்டருக்கு இதெல்லாம் மிகவும் சகஜம் என்று தன்னையே சமாதானப் படுத்திக்கொள்வார்.

நிறைய குடித்ததால் லிவர் சிரோசிஸ் என்பதில் ஆரம்பித்து தற்போது லிவர் கேன்சரில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடுகிறார்.

இந்த எழுபத்தைந்து வயதில் மரண பயம் இல்லாவிடினும், மரண சிந்தனைகள் அவருக்குள் ஊற்றெடுத்தன.

தனது குடும்பம் என்கிற ஒரு பத்து பேர்; தனது நண்பனும் பகைவனும் என்கிற பத்து பேர்; தனது தொழிலில் தனக்கு போட்டியாக பத்து பேர்; தனது ஏரியாவில் பத்து பேர்; கடைசியாக தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்.

இந்த நூறு பேரின் மத்தியில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரமாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்தக் கேடுகெட்ட சமுதாயம் நமக்குப் போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதைவிட ஒரு படியேனும் அதிகமாக தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் ஒருத்தருக்கு மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ இந்த உலகம் நம்மை கட்டாயப் படுத்துகிறது. அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்து வம்பு பேசச் சொல்கிறது.

பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும், பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கெளரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசா பாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்தப் பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை. பரந்த சிந்தனை இல்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார், எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது; அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. இதே நிலை எனக்கும் ஒருநாள் சீக்கிரம் வரும்.

நான் பிறப்பதற்கு முன்பும் இந்த உலகம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது. அதேபோல நான் மறைந்த பிறகும் இந்த உலகம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

நான் இந்தப் பூமியில் வாழ்ந்ததற்கான அத்தனையும் கால ஓட்டத்தில் மறைந்துவிடும். ஆக, எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரத்தை நான் அங்கீகரிக்க வேண்டும்? யார் இவர்கள்? என்னுடைய வாழ்க்கையில் தேவையற்ற ஜம்பமான கற்பனை இவர்கள்.

நான் இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழப்போவதில்லை. நான் இறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இறப்பு என்பது நிரந்தர உண்மை. இறப்பின் மூலமாக சர்வமும் ஒருநாள் பூஜ்யமாகிவிடும்.

மனித வாழ்க்கை மிகவும் அற்புதமானது; அழகானது. வாழ்க்கை ஒரே ஒரு முறைதான். ஆனால் அதை நாம் போலியாக வீணடித்து விடுகிறோம்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. நம் பேரனின் பேரனை நாம் பார்க்கப் போவதுமில்லை. இதுதான் வாழ்க்கை.

மீண்டும் வாழ எனக்கு கடவுள் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் பிறருக்கு உதவியபடி ஒரு நேர்மையான மனிதனாக திருந்தி வாழ வேண்டும். பிறரை வஞ்சிக்காமல், அடுத்தவர்களை தொந்திரவு செய்யாமல் உயிருடன் இருக்கும்போது எவ்வளவு இயலுமோ அவ்வளவு தூரம் தேவையானவர்களுக்கு உதவி செய்து பிறகு இறக்க வேண்டும்.

என்னுடைய இந்த மரண சிந்தனைகள் இனி சாத்தியப்படுமா? இல்லை, இது என்னுடைய கண்கள் கெட்ட பிறகு சூர்ய நமஸ்கார ஆசையா?

மதனகோபாலை கவனித்துக் கொள்ளும் டாக்டர் சலீம் உள்ளே வந்தார்.

“ஹலோ சார்… நீங்கள் எத்தனயோ நல்ல படங்களை உங்கள் சிறந்த கற்பனையில் கொடுத்தவர். அதனால் இந்த எழுபத்தைந்து வயதில் உங்கள் மனதை நான் சொல்லப்போகும் உண்மை பாதிக்காது.”

“பரவாயில்லை… சொல்லுங்கள் டாக்டர்.”

“உங்களுக்கு டெர்மினல் கேன்சர். நாங்கள் தொடர்ந்து அளிக்கும் கீமோதெரபியும் உங்களைக் காப்பாற்றாது. மூன்று மாதத்திற்கு மேல் நீங்கள் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். நாளை காலையில் உங்களை டிஸ்சார்ஜ் செய்து விடுகிறோம். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருங்கள். உறவினர்களை வரவழைத்து சந்தோஷப் படுங்கள்.”

“கண்டிப்பாக டாக்டர்…”

டைரக்டர் மதனகோபால் தன்னை தைரியப்படுத்திக் கொண்டார். வீட்டிற்கு வந்தார். தனிமையில் நிறைய சிந்தித்தார். திடீரென அமெரிக்காவில் வாழும் டாக்டர் தீபக் சோப்ராவை ஆர்வத்துடன் தொடர்பு கொண்டார். தன்னுடைய டெர்மினல் கேன்சர் பற்றி எடுத்துச்சொல்லி, தன்னுடைய மெடிகல் ரிப்போர்ட்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தார்.

அதையெல்லாம் படித்துப் பார்த்த டாக்டர் தீபக் சோப்ரா, “இதே மாதிரிதான் இங்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய பணக்காரராக வசித்த, பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்ற குஜராத்தி இந்தியர், டாக்டர் அமீத் வைத்யா கேன்சரில் அவதிப்பட்டு, சில வருட சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அவரைக் கைகழுவி விட்டனர். சரி, சொந்த நாடான இந்தியாவுக்குச் சென்று இறந்து விடலாம் என்கிற எண்ணத்தில் டாக்டர் அமீத் வைத்யா தனது சொத்துக்கள் அத்தனையையும் அமெரிக்காவில் விற்றுவிட்டு இந்தியா திரும்பினார்.

“அதன்பிறகு யாரோ சொன்னார்கள் என்று பசுமாட்டை வளர்க்க ஆரம்பித்து, அதன் மூத்திரத்தை தினமும் குடித்து வந்தார். ஆச்சர்யப்படத் தக்க வகையில் சில மாதங்களில் அவருடைய கேன்சர் செல்கள் அனைத்தும் இறந்து, கேன்சரிலிருந்து முற்றிலுமாக மீண்டு, தற்போது குஜராத்தில் சந்தோஷமாக பசுக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் எழுதிய “Holy Cancer” How a cow saved my life – புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். நீங்களும் அதையே ஒரு கடைசி சந்தர்ப்பமாக முயற்சி செய்து பாருங்கள். என்னுடன் தொடர்பில் இருங்கள்…” என்றார்.

டைரக்டர் மதனகோபால் உற்சாகத்துடன் மறுநாளே இரண்டு காராம் பசுக்களை வாங்கி தன் வீட்டில் வளர்த்தார். தினமும் விடிகாலையில் அவைகளின் மூத்திரத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் பிடித்துவைத்து தண்ணீருக்குப் பதிலாக பசுமாட்டின் கோமியத்தை குடித்துவந்தார்.

மூன்றே மாதங்களில் புத்துணர்ச்சி பெற்றார். அவரது உடம்பில் வியக்கத்தக்க நல்ல மாற்றத்தை அவரால் உணர முடிந்தது. மதனகோபால், வாழ்க்கையில் மறுபடியும் உற்சாகமானார்.

நான்காவது மாதத்தில் டாக்டர் சலீமை சந்தித்து தன் உடம்பை சோதித்துக் கொண்டார். கேன்சர் செல்கள் எண்பது சதவீதம் மடிந்துவிட்டதாக டாக்டர் ஆச்சர்யத்துடன் உறுதிப் படுத்தினார்.

வீட்டுக்கு உற்சாகமாக வந்தவர் தன் ஒரே மகனை கூப்பிட்டு, “உடனே நாம் ஐநூறு பசுக்கள் வாங்கி, நம்முடைய படப்பை பார்ம் நிலத்தில் அவைகளை நல்லபடியாக பராமரித்து பெரிய ‘கோசாலை’யாக்கி அவைகளை சிறப்பாக பாதுகாக்க வேண்டும்…” என்றார்.

பசும் பாலையும்; அதன் கோமியத்தையும்; சாணத்தையும் படப்பை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார்.

ஐநூறு பசுக்களை ஆரோக்கியமாகப் பராமரித்ததுடன், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தார்.

மரண பயத்திலிருந்து மீண்டவர் தன் மகனிடம், “நான் தற்போது கேன்சரிலிருந்து மீண்டு இன்னொரு மனிதப்பிறவி எடுத்துள்ளேன். பிறவிகளில் மனிதப்பிறவிதான் மிக மேன்மையானது. அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிதிலும் அரிது என்று ஒளவையார் அன்றே சொன்னார். அவர் சொன்னது உண்மையான, உன்னதமான கூற்று. நம்மிடம் கோடி கோடியாகப் பணம் இருக்கிறது. அதனால் நான் இறப்பதற்குள் நல்ல காரியங்கள் பல செய்துவிட விரும்புகிறேன்.

நம் ட்ரஸ்ட் மூலமாக ஏழைகளுக்கும், நலிந்தோர்களுக்கும் ஏகப்பட்ட உதவிகள் செய்ய வேண்டும். அனாதை இல்லங்களை தத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழைப் பெண்களுக்கு தங்கத் தாலி எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்த பட்சம் ஐந்து கோடியை நம் ட்ரஸ்ட் மூலமாக பல நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்.

சக மனிதர்களை அன்பாகவும், மரியாதையாகவும் நடத்தவேண்டும். நேர்மையாக இருந்து தைரியமாகச் செயல்பட வேண்டும்…” அவர் கண்கள் மின்னியது.

டைரக்டர் மதனகோபால் நடுவில் ஒருமுறை டாக்டர் தீபக் சோப்ராவை அமெரிக்கா சென்று நேரில் சந்தித்தார். அவ்வப்போது குஜராத் சென்று டாக்டர் அமித் வைத்யாவை சந்திக்கிறார். அவரது பசுக்களை வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பார். பாசம் வழியும் கோலிக்குண்டு போன்ற அதன் அழகான கண்களை காதலுடன் பார்த்து ரசிப்பார். அவைகளை கட்டியணைத்துக் கொள்வார்.

டைரக்டர் மதனகோபாலுக்கு தற்போது வயது எண்பத்தி எட்டு.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மரண சிந்தனைகள்

  1. தவறான கருத்துக்களை வெளிப்படுத்தும் முட்டாள்தனமான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *