மனிதநேயன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 8,110 
 

பகலெல்லாம் ஆபிஸில் வேலை செய்துவிட்டு ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தான் பிரபு. சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான். ஆனால் தூக்கம் வராமல் புற உலகத்தைப் பற்றி எண்ணத் தொடங்கினான். அவனுக்குள்ளாகவே பலவாறு பேசிக் கொண்டான். என்னப்பா! உலகம் இது. நான் நன்றாகப் படித்திருந்தும் இன்னும் ஆபீசில் கிளார்க்காகவே வேலை செய்கிறேன். ஆனால் என்ன விட படிப்பில் குறைந்தவன் இனியன். அவன் மேனஜராக வேலை செய்கிறான். என் வாழ்க்கைக்கு விடிவு காலமே வராதா? நான் இறுதிவரை ஒரு கிளார்க்காகவே வேலை செய்யனுமா? என எண்ணங்களைச் சிதறவிட்டு விட்டு உறங்கினான்.

வீட்டில் நர்மதா காபி போட்டுக் கொண்டே பிரபு பிரபு எழுந்திருப்பா ..நீ ஆபீஸ் கிளம்பும் டைம் ஆயிடுச்சு பாரு என்று சொன்னார். அவன் தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்த போர்வையைவிட்டு விலகி கடிகாரத்தைப் பார்த்தான். ஐயையோ டைமாயிடுச்சு என விரைவாக கிளம்பி ஆபிஸூக்குச் சென்றான். மானேஜர் இனியன் தனது அசிஸ்டெண்டைக் கூப்பிட்டு அங்க பிரபு இருப்பாரு அவர நான் கூப்பிட்டேன் என்று சொல்லிவிடு என்றார்.

பிரபு தயங்கித் தயங்கி இனியனைப் பார்க்கச் சென்றான். நுழைவதற்குள் எதுக்காக என்னை அவர் கூப்பிட்டார்? ஏதாவது தப்பா டைப் அடிச்சிட்டு இருப்பேனோ? இல்லை இருக்காது சரியாகத்தானே அடித்தேன் என்று நினைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

பிரபு இனியனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். உடனே இனியன் பேசத் தொடங்கினான். ஏம்பா பிரபு என்ன ஒரு மாதிரி இருக்குற என்றார். அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் எனச் சொன்னான். சரி சரி உனக்கு இந்த மாதத்திலிருந்து 500 ரூபாய் சம்பளம் ஏறி இருக்குதுப்பா என்றார். இதைக்கேட்டவுடன் அவன் மனசு அமைதியாகி பின் மகிழ்ச்சிப் பொங்க ஆரம்பித்தது. சரி நான் போய் வேலை பார்க்கிறேன் என்று சொல்லி அறையிலிருந்து வெளியே வந்தான் பிரபு.

இவ்வாறாக நாட்கள் ஓடின. பிரபுவின் குடும்பம் மிகவும் வறுமையில் சென்று கொண்டிருப்பதை நினைத்து நினைத்து வேதனைப்பட்டான். அவன் பலரிடம் கடன் வாங்கியிருந்தான். கடன் கொடுத்தவர்கள் வீடுதேடி வந்து கேட்டுவிட்டு சென்றனர். தன்னுடைய அப்பா அம்மாவிற்குக்கூட சொல்லிக்கொள்ளாமல் கடன் விஷயத்தை மறைத்து வந்தான் பிரபு. சென்ற வருடம் வாங்கிய சிறு சிறு கடனைக்கூட இன்னும் அவனால் தர முடியவில்லை. வட்டி வேற ஏறிகிட்டே போகுது சீக்கிரம் கொடுத்துவிடும்படி அவனது நண்பர்களும் சொன்னார்கள். என்ன செய்வது? என் நேரம்… என்ன வேலை செய்து என்ன புரோஜனம் என்று நினைத்து நினைத்து கஷ்டப்பட்டு வருந்தினான்.

இவ்வாறாக மாதங்களும் பலக் கடந்தன. ஒருநாள் பிரபு ஆபீஸில் மயக்கமடைந்து கீழே விழுந்து விடுகிறான். இந்தச் செய்தியைக் கேட்டவுடன் இனியன் ஓடிச் சென்று அவனை அப்படியே தூக்கிக்கொண்டு தன் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தான்.

பிரபுவைப் பார்த்துவிட்டு அறையில் இருந்து வெளியே வந்த டாக்டரை பார்த்து இனியன்…. பிரபுவின் உடல்நிலைக் குறித்து விசாரித்தான். டாக்டரோ சார் பிரபுவுக்கு ஒன்னுமில்லை என்று கூறினார். எல்லாம் சரியாயிடும். ஆனா என்னாலப் பார்க்கவேண்டியத பாத்துட்டேன். எல்லாம் இயற்கையிடத்து தான் இருக்குது என்று கூறினார். இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருக்கணும்.

இன்னும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சுதான் எல்லாத்தையும் சொல்ல முடியும் என்று இறுதியில் சொன்னதை நினத்து வருத்தமாகவே இருந்தான் இனியன்.

அவன் இதைக் கேட்டவுடன் காதில் ஈட்டிக் கொண்டு தாக்குவதாவே உணர்ந்தான்.

இதயத்தை இரண்டு பிரிவாகப் பிரிப்பதாகவே நினைத்தான். உடனே தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு சார்… என்ன சார் சொல்றீங்க? எனக் கெஞ்சிக்கொண்டே கேட்டான் பிரபு.

பிரபுவிற்கு ஏற்கனவே இரண்டு முறை நெஞ்சுவலி வந்தது. அப்போது எல்லாம் எப்படியே பிழைச்சிட்டான். இது மூன்றாவது முறை அதான் என டாக்டர் சொல்லி முடித்தவுடன் பிரபு அழுதேவிட்டான்.

உள்ளே இருந்து நர்ஸ் ஒருவர் வந்து சார் சார்… என்றார். என்னம்மா சொல்லுமா என்றார். அதற்கு வந்து வந்து என இழுத்தார். பிரபு இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னவுடன் இனியனால் அவனது வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை ஓவென்று கதறிக்கதறி அழுதான்.

டாக்டர் உடனே என்ன சார் நீங்க… பிரபுவுக்காக இப்படி அழறீங்க என்றார்.

அவர் உங்ககிட்ட ஒரு கிளார்க்காகத்தானே வேலை செய்தார் என்றார். அப்படி என்ன சார் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்றார். இதனைக் கேட்ட இனியன் அவன் என்னுடைய நண்பரும் கூட என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்து கண் கலங்கினான் இனியன். இறந்த செய்தியை நான் எப்படி அவங்க வீட்டுக்குச் செல்வேன் என்னாலேயே நம்பமுடியவில்லை என்று மேலும் வருந்தினான். அவங்க அப்பா அம்மா எப்படி நம்பப்போறாங்களோ என்று தெரியவில்லை என்று புலம்பினான். உடனே டாக்டரிடம் பேசி பிரபுவின் சடலத்தை வீட்டிற்குக் கொண்டு சென்றான்.

இனியனின் கார் வருவதைப் பார்த்தவுடன் பிரபுவின் அம்மா உடனே தன் கணவரிடம் கூறினார். இருவரும் வாசலுக்கு வந்து இனியனை வரவேற்க நின்றனர். ஆனால் அங்கே இனியன் சொன்ன செய்தியைக் கேட்டவுடன் சிலையாய் அவர்கள் நின்றுவிட்டார்கள். மகன் பிரபு இறந்ததை தாங்கமுடியாமல் அவர்கள் அழத்தொடங்கினர்.

பிரபு இறந்த செய்தியைக் கேட்ட பக்கத்து வீடு மற்றும் ஊர் மக்களின் மூலமாக பிரபுவிற்குக் கடன் கொடுத்தவருக்குத் தெரிந்தது. அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பிரபுவின் வீட்டிற்கு வந்தார்கள். இனியன் பிரபுவின் அப்பாவை நோக்கி அங்கு வருபவர்கள் யார் என்று கேட்டான். அதற்கு அவர் எனக்கு, அவர்கள் யார் என்று தெரியவில்லை என்று கூறினார். ஒருவேளை பிரபுவின் நண்பர்களாக இருப்பார்கள் என்றார். வந்தவர்கள் பிரபு இறந்து விட்டானா? எனக் கேட்டனர். அவர்கள் பிரபுவின் அப்பாவையும் அம்மாவையும் உலுக்கி குலுக்கி கேட்டார்கள்.

வந்தவர்கள் அடப்பாவி பிரபு… ஏண்டா? எங்ககிட்ட வாங்கினக் கடனக் கொடுக்காமல் இப்படி செத்துவிட்டீயே என்று கத்தினர். பிரபுவின் அப்பாவையும் அம்மாவையும் துன்பப்படுத்தினர். இருவரும் தன் மகனை இழந்து விட்ட நினைத்து தாங்கிக் கொள்ள முடியாமல் கதறிக் கொண்டிருந்தார்கள்.

கடன் கொடுத்தவர்கள் உடனே அழுத்தமான குரலில் திட்டினர். இன்னொருவன் ஏண்டா நாங்க இங்க கத்திகிட்டு இருக்கோம். ஆனா நீங்க மட்டும் உங்க வேலையிலே குறியா இருக்கீங்க என்றனர். எங்களுக்கு என்ன சொல்றீங்க? நீங்க எங்கப் பணத்தை கொடுத்துவிடுங்க என்றனர். அப்பதான் நாங்க பிரபுவின் பிணத்த எடுக்க விடுவோம் என்றனர். பணத்தை கொடுங்க கொடுங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

சீக்கிரம் பணத்தைக் கொடுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தனர். ஒருவன் நீ ஏன்? அவருகிட்ட இப்படி கேக்குற…இப்படிக் கேட்டா இவுங்க கொடுக்க மாட்டாங்க… அதனால வீட்ல இருக்கிற பொருளை எடுத்துக் கொண்டு போவோம் என்றார்.

இவையெல்லாம் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த இனியன் அவர்களிடம் வந்து மடமடவென பேசினார். ஏம்பா உங்களுக்கு பிரபு சுமார் எவ்வளவு பணம் தரவேண்டும் என்றார். அதற்கு நீ… அதைக் கேட்கிற என்றும் நீயா தரப்போற என்றும் கேட்டனர்.

இனியன் உடனே ஆமாம் நான்தான் பணம் கொடுக்கப் போறேன். உங்களுக்குப் பணம் வேணுமா? வேண்டாமா? என்று கேட்டான். எவ்வளவு பணம் யாருக்குத் தருணம் என்று சொல்லுங்க என்று இனியன் சொல்ல அனைவரும் அவரவர்களது பணத்தைச் சொன்னார்கள்.

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பிரபுவின் அப்பா இனியனிடத்து அருகில் வந்தார். ஏம்பா? என்னாச்சு? ஏதேதோ பேசுறாங்க என்றார்.

அதைக்கேட்ட இனியன் அதெல்லாம் ஒன்றுமில்லை நான் பார்த்துக்குறேன் நீங்க ஆகவேண்டியதப் போய் பாருங்க என்று சொன்னான்.

கடன் கொடுத்தவர்கள் அது சரி பிரபு வாங்கிய பணத்துக்கு நீ பணம் தரேன் சொல்றீயே நீ யாருய்யா? என்று கேட்டனர். அதற்கு இன்னொருவன் இந்தா பார்யா இவர் யாராவது இருக்கட்டும் நமக்கு பிரபு கொடுக்க வேண்டிய பணம் வந்தா சரி என்றார். சிலர் இவர்தானே அதைக் கொடுக்கறன்னு சொல்றாறே என்று பேசிக்கொண்டனர். இனியனிடம் பணத்தை வாங்க அனைவரும் இடித்துக்கொண்டு சென்றனர். அப்போது இனியன் இப்ப என்கிட்ட பணம் இல்ல. அதனால நீங்க நாளைக்கு வாங்க என்றான். கண்டிப்பாக கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

இனியன் பிரபுவின் அப்பாவை அழைத்து பிரபு இவுங்களுக்கு எவ்வளவு பணம் தரணும் என்றார். அதற்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார். கடன் கொடுத்தவர்களிடம் ஓடிச்சென்று மொத்தமா உங்க அனைவருக்கும் பிரபு தரவேண்டிய பணம் எவ்வளவு என்று கேட்டான். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அனைவருக்கும் தர வேண்டிய பணத்தைக் கணக்கு பார்த்தால் பத்து லட்சம் ஆகும் என்றார். நீங்க எதுக்கும் வட்டிபோட்டு ஒரு பண்ணிரெண்டு லட்சம் கொண்டு வாங்க என்று கூறினர்.

இதைக் கேட்டவுடன் அவன் மனதில் பிரபு செலவுக்கு இவ்வளவு பணமா? அப்படி என்னதான் செஞ்சா அவன்? ஏதாவது பிஸினஸ் செய்தானா? சரி எனக்குத் தெரிஞ்சு அப்படி எல்லாம் அவன் ஒன்னும் செய்யலையே என்று நினைத்தான். அவனுக்கு என்ன ஆச்சு? என்ன பண்ணானே? தெரியலையே என்று மனதுக்குள் பேசிக்கொண்டான்.

சரி எப்படியோ ஆயிடுச்சு இனிமே நான் யோசித்து என்ன பண்ணப் போறேன் என்று நினைத்துக் கொண்டு மெதுவாக வீட்டுக்கு வந்தான்.

ஏம்பா இனியா அவுங்களுக்கு எவ்வளவு தருணமாம்? என்ன சொன்னாங்க என்று பிரபுவின் அப்பா கேட்டார். கொஞ்சம்தான் என்று சொல்லிவிட்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்கப் புறப்பட்டான்.

பணம் எவ்வளவு என்று நான் சொன்னால் அவர் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்று நினைத்து இனியன் மறைத்து விட்டான். பின்னர் இனியன் அனைத்தும் முடிந்து பின் கடைசி வரை இருந்துவிட்டு தன் வீடிற்குப் புறப்பட்டான்.

மறுநாள் காலை கடன் கொடுத்தவர்கள் அனைவரும் பிரபுவின் வீட்டு வாசற்படியில் திரண்டிருந்தனர். பிரபுவின் அப்பா வெளியே வந்தார். ஏம்பா உங்களுக்கு எங்க பையன் எவ்வளவு பணம்தான் தரவேண்டும் என்று கேட்டார்.

அதற்கு ஒருவன் 12 லட்சம் தரனும் என்று சொல்லிவிட்டார். இனியன் இதப்பத்தி என்கிட்ட சொல்லவே இல்லை. இவ்வளவு பணத்துக்கு அவன் என்ன செய்வான் என்று நினைத்துக் கொண்டே இருந்தார்.

கொஞ்ச நேரம் கழிந்தவுடன் வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கிய இனியன் உடனே பிரபுவின் அப்பாவிடம் சென்று அவர்களுக்கு எவ்வளவு பணம் தரணுமென்று எனக்குத் தெரியும். நீங்க போய் வேற வேலையைப் பாருங்க என்றான். இவ்வாறு சொன்னதும் எனக்கு எல்லாம் தெரியுமென்று இனியனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பிரபுவின் அப்பா அழுதேவிட்டார்.

என் மகன் ஸ்தானத்தில் இருக்கிறாய் நீ. உன்னை நான் மகன் என்று கூப்பிடலாமா? என்று கேட்டார். என்னப்பா இது? நானும் உங்க மகன் மாதிரிதான் என்னை அப்படியே கூப்பிடுங்க என்று சொல்ல, அவர் மகனே என்று சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்.

கடன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு பிரபுவின் அம்மாவிடத்தும் அப்பாவிடத்தும் கூறிவிட்டு அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் வீட்டிற்கு புறப்பட்டான் இனியன்.

பிரபுவின் பெற்றோர்கள் இனியனின் கார் சென்ற இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆம் இப்படிப்பட்ட மனிதநேயர்களும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்…

Print Friendly, PDF & Email

1 thought on “மனிதநேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *