மச்சம் உள்ள ஆளு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 4,291 
 

மாலை மணி 6. 30

கண்கள் குழி விழுந்து சோர்வு, தளர்வுடன் வரும் சேகரைப் பொறாமையாகப் பார்த்தார்கள் அறை நண்பர்களான சிவா, குமார், ராமு, கணேஷ்.

” ஒரு இரவு, ஒரு பகல் ! ஏ அப்பா !”

“மச்சம் உள்ள ஆளு…!!”

“தினைக்கும் அனுபவிக்கிற…ராசி ! ராஜா !”

” எங்களைச் சொல்லு..? வேலைக்குப் போய் வெந்த சோத்தைத் தின்னுட்டு வெட்டியாய் இருக்கிறவர்கள்” என்று ஆளாளுக்கு அவனைக் கலாய்த்தார்கள்.

“சும்மா புலம்பாதீங்கடா. உங்களிடம் சரக்கு இல்லே. சாமர்த்தியம் போதலை.” என்று கெத்தாகச் சொல்லி அறைக்குள் நுழைந்து பேண்ட், சட்டை களைந்து கைலிக்குள் மாறினான் சேகர்.

“அது என்னமோப்பா. உன்னுடைய திறமை எங்களுக்கு வரலை. அதுதான் ராசி போல” என்று அங்கலாய்த்தான் ராமு.

“திறமை என்ன திறமை. ! மனுசன் பொறந்த நேரம் அப்படி !” என்றான் சிவா.

இப்படி ஆளாளுக்கு அடுக்கி தங்கள் பேச்சுகளைத் தொடர்ந்து கொண்டிருக்க…..

சேகர், இவர்கள் பேச்சு எதையும் காதில் வாங்காமல் கட்டிலில் பாயை விரித்து தலையணையை முதுகிற்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு சாய்ந்தான்..

ராமு, சிவா, கணேஷ், சேகர், குமார் இந்த ஐவரும் சென்னை திருவல்லிக்கேணி’சேவல் பண்ணை’அறை ஒன்றில் அடைந்து கிடப்பவர்கள்.

சொந்த ஊர் மதுரை, காரைக்கால், சேலம். என்று வெவ்வேறு ஊர்கள்.

வங்கி, அரசு, என்று அவரவர்கள் தகுதிகளுக்குத் தக்கபடி வெவ்வேறு இடங்களில் வேலை. வயிற்றிக்குச் சோறு என்பது’பாட்டிவீட்டுமுறை சாப்பாடு உணவகத்தில்’மாதக்கணக்கு.

எல்லார் வயதுகளும் இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள். அத்தனைப் பேர்களும் கட்டைப் பிரம்மச்சாரிகள்.

மன்னிக்கவும் மணம் முடிக்காத இளைஞர்கள், வாலிபர்கள்.

கலியாணமாகாதவர்கள், கட்டைப் பிரம்மச்சாரிகள் இருவருக்கும் ஒரு சிறு. வித்தியாசம்.

திருமணமாகாதவர்கள் பெண் வாசனைப் பிடித்தவர்கள். ஒருமுறையேனும் அனுபவித்தவர்கள். கட்டைப் பிரம்மச்சாரிகள் மொட்டை, பிடிக்காதவர்கள் !!

இவர்கள், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை என்று தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பெற்றவர்களிடம் தலைக்காட்டி வருபவர்கள். இந்தப் பயணம் பெரும்பாலும் சம்பளத் தேதியைத் தாண்டியதாக இருக்கும்.

இரவெல்லாம் கொட்டமடித்து விட்டு, காலை எட்டுமணி வரை தூங்கிவிட்டு , அடுத்து பல்துலக்கி, முகம் கழுவி, காலைக்கடன்கள் முடித்து, பத்மா மெஸ்ஸில் போய் வயிற்றிக்கு இட்லி தோசை ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்க அலுவலகம் செல்வார்கள்.

மாலை 6. 00 மணிக்குத் திரும்புபவர்கள்.

அறையில் வந்து தங்களைப் புதுப்பித்துக் கொண்டு, சாலையோர மலையாளக் கடையில் ஒரு சாயா அடித்து விட்டு மெரினா, பூங்கா, கோவில், என்று சுற்றி கண்களுக்கு விருந்தாய் கலர்கள் பார்த்துவிட்டு அறையில் அடைவது இரவு மணி 10.00.

இதில் சேகர் விதிவிலக்கு. அடிக்கடி காணாமல் போகும் ரகம்

அப்படி நேற்று வெள்ளி மாலை காணாமல் போனவன் இதோ மறுநாள் சனி மாலை திருப்பம் !.

இது இப்படி அடிக்கடி நிகழும் நிகழ்வு என்பதால். அறையிலிருக்கும் மற்றவர்களுக்கு வயிறெரியாமல் வேறு என்ன செய்யும்..?

அதன் வெளிப்பாடுதான் இந்தக் கலாய்ப்பு.

அவர்கள் பொறாமை, பொச்சரிப்புப் படுவதிலும் நியாயமிருக்கிறது.

சேகருக்கு வாரத்தில் மூன்று நாட்கள்’அந்தப் படியான’நாட்கள்.!

எவளையாவது மடக்கி இருப்பான். மாட்டி இருப்பார்கள். !

அறை நண்பர்களும் அவனை அப்படி ஜோடி ஜோடியாக வெவ்வேறு இடங்களில் கண்டு, காதுகளில் புகை போக வயிறெரிந்து சென்றிருக்கிறார்கள்.

அந்த மாதிரியான நேரங்களில் சேகர் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை.

அவனுக்கு அழகிகள் என்று மட்டும் கிடையாது. நிறம், அழகு, பேதமில்லாமல் சுமாருக்கும் சுமார்கூட பிடித்தம், பழக்கம்.

எவளாய் இருந்தாலும் அவனுக்கு எப்படி இது சாத்தியம் என்பது எல்லோருக்குள்ளும் கேள்விக்குறி….!

“ஏன்டா சேகர் ! நீ எப்படிடா மடக்குறே..?” – இன்று ராமு வாய் விட்டே கேட்டு விட்டான்.

“ஆமா..! இவன் மடக்களெல்லாம் சுமார் ரகம். இன்னும் சொல்லப்போனால் எவனும் திரும்பிப் பார்க்காத முகம்.. . ஏன்டா ! புடிக்கிறதைத்தான் புடிக்கிறே..? கொஞ்சம் நல்லதா புடிக்கக்கூடாதா…?” தன் தாக்கத்தை வெளிப்படுத்தினான் சிவா.

தலையணையை முட்டிலிருந்து நிமிராத சேகர்….

“இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க.” என்றான்.

“என்ன .?” எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.

“பொதுவா எல்லா ஆண்கள், வயசுப் பசங்க பார்வை எல்லாம் பாஸ் மார்க்குக்கு மேலதான் பார்வை மேயும். அவளை மடக்க ஆளாய்ப் பறப்பீங்க.. நாம அழகா இருக்கோம் என்கிற கர்வத்துல அதுங்களும் உங்களுக்கு ரொம்ப ஆட்டம் காட்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் உங்ளை அலைக்கழிக்கனும், அலையவைக்கனும்ன்னே ஆட்டம் காட்டுவார்கள். அப்படி ஆட்டம் காட்டியும் கிடைக்காமல் போவார்கள் அப்படியே கிடைச்சாலும் அது புதுசா இருக்காது. நம் உழைப்பு வீண்.

என் பார்வை எல்லாம் யாரும் சீண்டாதது. சுமாருக்கு சுமார் ரகம். எவனும் பார்க்காமல் ஏங்கிக் கிடக்கும் இவர்கள்.. என்னை மாதிரி அழகானவன் பார்வை பட்டதும் பட்டுன்னு மயங்கி மலர்ந்துடுவாளுங்க. இன்னும் சொல்லப்போனால் பார்வை படாத இவளுகதான் பத்தினையாவும் இருப்பாளுங்க. நமக்குப் பெண்ணுக்குப் பெண். புதுசு.” சிரித்தான் சேகர்.

‘இதுக்குள் இப்படி ஒரு சூட்சமமா..!’கேட்ட நால்வரும் வாயைப் பிளந்தார்கள்.

“அதுக்காக ஒரு வரைமுறை வேணாமா..? வேலைக்காரக்குட்டி எல்லாமா கணக்குப் பண்றது..?!” என்றான் ராமு.

அதுகூட கிடைக்க முடியாத ஆதங்கத்தில் பார்த்தான் கணேஷ்.

“அங்கேயும் ஒரு ரகசியம் இருக்கு. அதுங்க மட்டும் பொண்ணுங்க இல்லையா..? அவர்களுக்கும் ஆசை, காதல், அனுபவிக்கனும் என்கிற ஏக்கம் இருக்காதா..? நம்மை மாதிரி வேலைக்காரன் அதுங்களை மதிச்சு, பார்த்து பேசினா போதும் உச்சி குளிர்ந்து உடனே கூப்பிட்ட இடத்துக்கு வந்திடுவாங்க.”

“டேய் ! நீதான் இவ்வளவு அனுபவிக்கிறீயே. எங்கள் மேல் கருணைக் காட்டி அப்படி ஒன்னு ரெண்டு ஒதுக்கக்கூடாதா..? ” ஏக்கமாகக் கேட்டான் சிவா.

“மச்சி ! இதிலெல்லாம் கூட்டு கூடாதப்பு !” என்று நக்கலாகச் சிரித்தான் சேகர்.

“ராத்திரி மாட்டினது எப்படி..?” ஏறிட்டான் குமார்.

“புரியல..? !”

”சுமாரா..? அதுக்கும் கீழா..?”

“செம கட்டை !1” என்று கண்ணடித்தான்.

“நாட்டுக்கட்டையா..?”

“ச்ச்சூ! ஆண்டி !” என்றான்.

“டேய்…! இதுக்கெல்லாமா போவே..?!” கணேஷ் திகிலாய் கேட்டான்.

“மகளைக் குறி வைச்சேன். அம்மா மாட்டினாள். நான் என்ன பண்றது..?”

“விட்டு ஓடி வந்துடறதுதானே..!”

“தப்பு ! பசுவை வைச்சு கன்றுக்குட்டியை மடக்குறது சுலபம்.’’ .

“ஒரு பொண்ணைப் பார்த்து’இதுக்குன்னு எப்படிடா கூப்பிடுறது..? ’’ ஆவலுடன் கேட்டான் குமார்.

“அதெல்லாம் ஒரு திறமை பேசாம துங்கு..”

“இது நமக்கு மடங்கும் மடங்காதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது..?”

“அதெல்லாம் பார்க்கிற பார்வையிலேயே தெரியும். !”என்றான் சேகர்.

“என்னமோ போ. உனக்கு எல்லா ரகசியமும் தெரியுது. டாக்டர் பட்டமே கொடுக்கலாம். வாரத்துக்கு மூணு அனுபவிக்கிறே..?” என்று சொல்லி நீண்ட பெருமூச்சு விட்டுப் படுத்தான் கணேஷ்.

எல்லோரும் படுத்தார்கள்.

அதிகாலை மணி 5.30.

அறைக்கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள்.

விழித்த ராமு எரிச்சலுடன் திறந்தான்.

வாசலில்.. நான்கு குப்பத்து இளைஞர்கள் வாட்டசாட்டமாக வரிசையாக நின்றார்கள்.

“இங்கே யாருப்பா.. சேகர்..?” ஒருவன் குரல் கரடு முரடாக வெளி வந்தது.

பயந்து போன ராமு சேகரை எழுப்ப… மற்றவர்களும் எழுந்து கொண்டார்கள்.

தூக்க கலக்கத்துடன் வெளியே வந்த அவன்….

“நான்தான் சேகர்…என்ன வேணும்..?” கண்களைக் கசக்கிக்கொண்டு கேட்டான்.

“நீதான் வேணும் !” என்றான் இன்னொருவன்.’

“நானா…?!” – விழித்தான்.

“இன்னா முயிக்கிறே..? நீதான் புள்ளைக்குடுத்தேன்னு தங்கச்சி சொல்லிச்சி. அதான் மாப்பிள்ளையாக்கிடலாம்னு வந்தோம்.”என்றான் வேறொருவன்

“எ… சொ… சொல்றீங்க..???!!!”

“தங்கச்சி ! நீயே சொல்லும்மா..”என்று சொல்லி ஒருவன் நகர…

அவன் முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்ற பெண்ணொருத்தி வெளியில் வந்தாள்.

ஆளைப் பார்த்த சேகருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்… தன்னோடு லாட்ஜ் அறையில் தங்கி இருந்த வேலைக்காரப் பெண். !

“ஐயோ..! இவள் யாருன்னே தெரியாது…” சேகர் அலறினான்.

“இது யாருன்னே தெரியாதா…? அதை டி.என்.ஏ டெஸ்டுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ உனக்கும் இவளுக்கும் நம்ம சாமியார் பேட்டை புள்ளையார் கோவிலாண்டை கலியாணம். நீங்களும் மறக்காமல் வந்துடுங்க..தூக்குடா இவனை” என்று ஒருவன் சொன்ன அடுத்த வினாடி

மற்றவர்கள் சேகர் கையைப் பிடித்து கொத்தாக அள்ள…

சிவா, குமார், ராமு, கணேஷ் உறைந்து நின்றார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *