மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 6,111 
 

மகாசன்னிதானம் இதற்கு முன்பும் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம் முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென இறுமாந்திருந்தபோது, மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை போதித்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, நுகத்தடியில் எருதுகளை வலம் இடம் அறிந்து பூட்டியவர் இப்போது சாட்டையைக் கையிலெடுக்கப் பயம். சாட்டையைக் கையிலெடுத்துப் பழகிய கைக்குச் சோர்வு ஒருபக்கமெனில் ஓங்கிய கையைத் தடுத்து ஓரிரு வார்த்தைகளை இவருக்கு எதிராக உதிர்த்தாலும் போதும், உடல் கூசிப்போகும். குருபீடத்திலிருத்து இவர் இறக்கப்பட்டது குறித்த கவலைகளோடு வாரிசுகளின் பார்வையில் தெறிக்கிற கோபமும் துச்சமும் வேறு கழுத்தை அன்றாடம் நெறிக்கின்றன.

எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அனைத்தும் பூஜ்யத்தில் ஆரம்பிக்கப்பட்டன. சாதுர்யமும் சவடாலும் இருபதாம் நூற்றாண்டிற்குத் தோதான ஆசாமியென்ற பெயரை வாங்கித் தந்திருந்தன. தொட்டதெல்லாம் துலங்கிற்று. ஆடுபுலி ஆட்டத்தில் இவர் மட்டுமே புலி – பசித்த புலி. எத்தனை ஆடுகளின் குரல் வளையைக் கடித்து உயிரை வாங்கியிருப்பார், இரத்தம் தோயக் காடு கரம்பைகளிலும் முட்புதர்களிடையேயும் இழுத்துச் சென்று வாய்கொள்ளக் கவ்வியும் பற்களால் கிழித்தும் மென்றும் விழுங்கியும் பசியாறியிருப்பார். கடைவாய்ப்பற்களில் நிணச்சாறு வழிய முகவாயை அடி மரத்தில் துடைத்திருப்பார்; நிதானமாக அசைபோட்டிருப்பார். சோர்வுகளில்லை, கண் துஞ்சலில்லை. திட்டமிட்டுக் காய்களை நகர்த்தினார், வெற்றியின் களிப்பை உதட்டோரங்களில் ஆரம்பித்துப் பிடறி மயிர்க் கால்கள்வரை சிலுசிலுவென்று உணர்ந்திருக்கிறார். மலமிருக்கப் புதருக்குப் பின்னால் ஒதுங்கியது போக, கழிவறைக்குக்கூடத் தொண்டர்கள் பொன்வேய்ந்து அழகுபார்த்தார்கள். படகைச் செலுத்துவதில் சாமர்த்தியம் அதிகமென்று ஊர்மெச்சியது. எதிர் நீரோட்டத்திற்கும் சுழலுக்கும் வெகு எளிதாகத் தப்பித்ததுண்டு. காலம் பொல்லாதது. வழக்கம்போல இந்த ஆனையின் அடி சறுக்க வேண்டுமென்பதற்கான காரணங்களுக்குக் காத்திருந்திருக்கிறது. ஆகப் படகு கரைதட்டிவிட்டது. காரணங்கள்: ஒன்றா இரண்டா? திசைகள்தோறும் இருக்கின்றன. இங்கே கொலையாளியும் கொலையுண்டவரும் ஒருவரே என்றால் நம்பவா முடியும்.

அழைப்பு மணிப் பொத்தானை நான்கு அழுத்தினார். தலையை படியவாரி, சந்தனப்பொட்டும் சாம்பல் வண்ண சபாரியுமாக எட்டிப்பார்த்த காரியதரிசி ‘கூப்பிட்டிங்களா!’ என்றார். சில நொடிகள் தம்மை ஏறிட்டுப்பார்ப்பதைக் காரியதரிசி சிலிர்ப்புடன் ஏற்றுக்கொண்டார். அச்சு அசலாகத் தாம் செல்லமாய் வளர்க்கும் நாயின் முகவாயைப் போலவே காரியதரிசியின் முகவாயும் இருப்பதாக ஒரு முறை கூறியிருந்தார். அவர் தலையை உயர்த்திய மாத்திரத்தில் அழைப்பின் காரணத்தை ஊகிந்திருந்த காரியதரிசி, ‘எதுவும் வரலீங்க. அம்மாவையும் கேட்டேன், இல்லைண்ணு சொன்னாங்க’, என்றார். ‘சரி நீ போ’ என்றதும் காரியதரிசி தலையைத் தாழ்த்தி விடைபெற்றார். வெளியேறி கதவை மூடும் வேளை, ‘நில்லுய்யா!’ என்றார். காரியதரிசி நின்றார். ‘வா!’, என்றார். வந்தார். தனக்கும் அவருக்குமான இடைவெளி சாசுவதமானதென்பதைப்போலப் பாதங்களை யோசித்து எண்ணி நான்கடிகள் வைத்த காரியதரிசி, தோராயமாகத் தமது மனத்திற்குள் கிழித்திருந்த எல்லைக்கோட்டுக்குள் நின்றார். “நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கா?”, அதட்டல்போலப் பிறந்த குரலுக்கு “ம்” என்ற முனகலைத் தொடர்ந்து காரியதரிசியின் தலை காற்றுக்கு ஆடும் கிளைபோல இரண்டொருமுறை அசைந்து கொடுத்தது. தொடர்ந்து, “பார்சலை நீதான் வாங்கணும். நேரே இங்கே கொண்டுவரணும், ஒருத்தர் கிட்டேயும் இதுபற்றி மூச்சுவிடக் கூடாது” என்று கோவையாக வாக்கியங்களைக் கூறி அமைதியானதும் மறுபடியும் காரியதரிசியிடமிருந்து தலையாட்டல்கள். அடுத்து ‘நான் போகலாமா?’ என்ற கேள்வியையும் ‘நீ போகலாம்’ என்ற பதிலையும் இருவர் பார்வைகளும் நடத்தி முடித்தன. இவருடைய கட்டளையை மனத்தில் எழுதிக்கொண்டவராகக் கால்களைப் பின்வைத்துப் பவ்யமாக வணங்கிக் காரியதரிசி வெளியேறக் கதவு மூடிக்கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. எதிரியிடம் பீடத்தைத் தொலைத்திருந்த தினம். அக்கறையுடன் அனுதாபம் தெரிவிக்கவந்தவர்களைக் காட்டிலும், மீசையில் மண் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்க வந்தவர்கள் அதிகம். எல்லோரும் புறப் பட்டுப்போனதும், இவரது பிரத்தியேகத் தொலைபேசிகளையெல்லாம் துண்டிக்கும்படி ஆணை பிறப்பித்து விட்டு இவரது நெருங்கிய சகாவோடு பேசிக்கொண்டிருந்த போதுதான், காரியதரிசி தன் கைப்பேசியைத் தூக்கிக்கொண்டு வந்தார். அமெரிக்காவிலிருந்து போன் என்றார். காரியதரிசியை வெளியிற்போகச் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த நண்பரிடம், ‘என்னவென்று கேளேன்’ என்றார். வாங்கிய நண்பர் ஓரிரு நொடிகளுக்குப்பிறகு, ‘கடைசியா ஒரு லைசென்ஸுக்கு அரசாங்கத்திடம் சொல்லி ஏற்பாடு செஞ்சு கொடுத்தோமில்லையா, அந்த ஆள். உங்கக் கிட்ட மட்டும்தான் பேசுவாராம்.’

“உனக்குத் தெரியாத ரகசியமா? என்னன்னு நீயே விசாரிச்சுட்டு சொல்லு . . .”

தொலைபேசி உரையாடல் உதடுகளில் ஏற்ற இறக்கங்களும் இடைக்கிடை சன்னமான வார்த்தைகளுமாக நான்கைந்து நிமிடங்கள் நீடித்திருக்கக் கூடும். இவர் ஓரளவிற்கு யூகித்திருந்தார். இருந்தபோதிலும் நண்பர் சொல்லட்டுமெனக் காத்திருந்தார். தொடர்பு துண்டிக்கப்படவும், நண்பர் இவர் பக்கம் திரும்பினார்.

– ஏதோ அன்பளிப்பொன்று சென்னைக்கு வந்து சேர்ந்துட்டுதாம், வீட்டுக்கு எப்ப அனுப்பி வைக்கட்டுமென்று கேட்கிறார்கள் . . .

– எந்த எழவும் இப்போது வேண்டாமென்று சொல், ஏற்கனவே தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

– என்ன செய்வது நேற்றே அனுப்பியாச்சாம். உங்கள் துணைவியார் பெயருக்கு, வீட்டு முகவரிக்கு .

– போய்யா, போய் உன்வேலையைப் பாரு. போனைக்கூட ஒழுங்காகக் கையாளத் துப்பில்ல.

– அனுப்பிட்டேன்னு சொல்லும்போது என்ன பண்ண முடியும்.

– இப்படிச் சொல்லி சொல்லியே, நீங்க . . . போய்டுவீங்க.

– ஏதோ இந்த நிலமைக்கு நாங்கதான் காரணங்கிற மாதிரி பேசறீங்க

– நேற்றுவரை நீ இப்படிப் பேசினவனில்லை, இப்போ எங்கிருந்து ஒனக்குத் தைரியம் வந்திருக்கு? சுண்டல் விற்றவனையெல்லாம் பக்கத்துலே உட்காரவெச்சன்பாரு.

– இப்படி எடுத்தெரிஞ்சு பேசறது நல்லா இல்லை. நம்ம பிரச்சினைகள் சந்திக்கு வந்தா நாளைக்கு எல்லோருக்குந்தான் கேடு.

– இன்னும் என்ன நடக்கனும்னு எதிர்பார்க்கறே.

– நேரம் சரியில்லைன்னா, வார்த்தைகள் கூடவா யோசிக்காம வரணும். எங்களையெல்லாம் பகைச்சுகிட்டா உங்களுக்கு நல்லதில்லைன்னு சொல்லவந்தேன்.

– என்ன மிரட்டறியா? குரல் வளையை அறுத்து இங்கேயே புதைச்சுடுவேன், நாயே வெளியிலே போ

நண்பர் போய்விட்டார். போனாலும் வருவாரென்று இவருக்குத் தெரியும்.

அண்ணாந்து உட்தளத்தைப் பார்த்தார். உத்திரங்களையும் பிறவற்றையும் பலமுறை எண்ணியாயிற்று. இப்போதெல்லாம் மேலே அண்ணாந்து பார்த்தாலே எண்ணத் தொடங்கிவிடுகிறார். விசாலானமான அறை, தரையில் கடப்பைக்கற்கள், இரத்தினக் கம்பளம். மெருகு குலையாமல் பாதுகாக்கப்படும் பொன் வேய்ந்த கட்டில்கள், செதுக்கு வேலைப்பாடுமிக்க நாற்காலிகள், அலங்கார மேசைகள் அவற்றின் வண்ணப்பூச்சில் தீப்பற்றியதுபோல வெள்ளித் தகடுகளாய் மினுங்குகிற குழாய் விளக்கின் ஒளி. அலங்காரமான கண்ணாடி அலமாரி, உள்ளே வெள்ளியும் பொன்னுமாய் இழைத்து இழைத்து உருவாக்கியிருந்த விருதுகள், கேடயங்கள், ஒருக்களித்த நிலையில் புத்தகங்கள். அலங்காரப் பொருட்கள், தவிட்டு நிறத்தில் சுவர், அதில் பூர்வாசிரமத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் நிழற்படம். அவ்வளவும் அலுத்திருந்தன.

கண்களில் பணிவு, ஈறுகடித்த பற்கள் தெரிய முக தரிசனத்திற்காகப் பரிதவிப்புடன் காத்திருக்கும் மனிதர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சுமந்த வீடு. நடைவாசல் திறக்காதா, மகாசன்னிதானத்தின் பார்வை படாதா என்று பயபக்தியுடன் காத்திருந்த பக்தர்களில்லை. சலவை மணம் கிஞ்சித்தும் குறையாத ஆடைகளின் சலசலப்புகூட நிசப்தத்தைக் குலைத்துவிடலாம் என்பதுபோல அச்சத்துடன் நிற்பார்கள். இவர் விழிப்பைக்கூடக் கலைத்துவிடக் கூடாதென்பதுபோலவும் இவர் கால்களை நலன் விசாரிக்க வந்தவர்கள் போலவும் தரையில் பாதியும் அவர் கால்களில் பாதியுமாகப் பார்வையைப் பங்கிட்டிருப்பார்கள். எழுந்தவர் தடுமாறி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார். இந்த வயதிலும் பிறர் துணையின்றி அவரால் எல்லாம் செய்ய முடியும். ‘சோ’வென்று மழை பெய்து முடித்த நிலத்தின் இறுக்கமும் ஈரக்கசிவும் உடலில் இருக்கின்றன, ஆனால் மனம்தான் நூலறுந்த பட்டம்போல நீரில் அமிழ்வதும் நிலத்தில் மோதுவதுமாக, இவர் துரத்தலுக்குப் பிடிகொடுக்காமல் நழுவிச்செல்கிறது.

எப்பொழுதும் தலையை நாற்காலியில் அணைத்துச் சாய்ந்து உட்கார அவருக்குப் பிடிக்கும். பகல் நேரத்திலுங்கூட அங்குள்ள அத்தனை மின்சார விளக்குகளும் பழுதின்றி முதல்நாள் ஜ்வலிப்புடன் எரிய வேண்டும். பிரகாசத்தில் தொய்வு கூடாது, ஒளி நாக்குகள் விறைத்து நிற்க வேண்டும். அதைச் செவ்வனே செய்து முடிக்க திரும்பும் திசையெல்லாம் ஏவலாட்கள், சீடர்கள், நண்பர்கள், பிள்ளைகள். இனி ஒருவரும் வேண்டாம், விளக்குகள் உமிழும் ஒளியின் நிழலுட்பட. ஒளிகள் கடந்த கால அகங்காரங்களை, பெருமைகளை நினைவில் கிளறிப் பெருமூச்சிட வைக்கின்றன.

கதவு மெள்ளத் திறக்கப்பட்டிருக்க வேண்டும், முனகியது. மீண்டும் காரியதரிசி. தலைமட்டும் கதவிடுக்கில் சிக்கிக்கொண்டதுபோல நிற்கிறது. “ஐயா மணி அடிச்சீங்களா?” காரியதரிசி.

– என்னய்யா வந்துச்சா?

– இல்லைங்க, வந்ததும் சொல்றேன். வேற ஏதாச்சும்?

– நீ கூட என்னை மறந்துட்டியா? இந்த நேரத்துலே நவதானிய கஞ்சிண்ணு ஒண்ணைக்கொடுப்பியே இரண்டு நாளா என்ன ஆச்சு?

– நான் மறக்கலை. என்னாச்சுண்ணு வீட்டுலே கேட்கறேன்.

– கேட்கவேண்டாம் நீ போ.

தனிமை வேண்டியிருந்தது. தனிமையைக் கடைசியாக எப்போது சந்தித்தது? நினைவில்லை. அந்தி மாலையிலும் புலரும் காலையிலும் காணக்கூடிய பஞ்சுபோலக் காற்றில் அலைகிற இளம் இருள் யாருமற்ற அவரது தனிமைக்குப் பொருந்துகிறது. இந்த ஒற்றை இருப்பு இவராகத் தேர்வுசெய்ததுதான். பாதக்குறடுகளைக் கையிலேந்தி நிற்கிற சேவகர்களும் பல்லக்குப் பயணமும் பேரிகையின் அதிர்வும் முழவின் தும் தும்மும் கசந்துவிட்டது. நான்கு சுவர்களுடனும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. கணக்கின்றி அவர் வாழ் நாளில் இந்த அறையையும் நாற்காலியையும் மேசையையும் உபயோகித்திருக்கின்றார், குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து மணிநேரமாவது அவற்றுடன் கழித்திருக்க வேண்டுமென மனத்திற்குள் கணக்குப்போட்டார். எஞ்சியிருக்கிற நாட்களையாவது அவற்றுயுடன் கழிக்க வேண்டும்.

அவ்வப்போது தலையை நிமிர்த்தி எதிரிலிருந்த சுவரைப் பார்க்கிறார், இவர் எதிரே சுவர் பவ்யமாக நிற்பது போலவும் இவர் பேசுவதைக்கேட்கக் தயார் என்பதுபோலவும் காதுகள் விடைத்து நிற்கிறது. பேசவும் செய்கிறார். கோவையாக இல்லையென்றாலும் சொல்லவந்ததை இரண்டொரு சொற்களில் தெளிவுபடுத்த முடிகிறது. சுவரும் இவரது பழம் பெருமைகளை அவற்றின் இழப்புகளைக் கேட்டுச் சோர்வின்றித் தலையாட்டுகிறது. சிற்சில நேரங்களில் அவரது ஒருதலை உரையாடல் முனகலாகவும் பின்னர் விசும்பலாகவும் தேங்கி நிற்கிறபோது, அத்தடையை உடைப்பதோ அல்லது குறைந்தபட்சம் சீண்டும் வழக்கமோ சுவருக்கில்லையென்பது கூடுதல் சௌகரியம். பிறகு இருவரும் கருத்தொருமித்தவர்களாய் உரையாடலை துண்டித்துக்கொண்டு அவ்விடத்தில் நிசப்தத்தை இட்டு நிரப்பிவிடுவார்கள்.

சிலவேளைகளில் இத்தனிமையை அநியாயமாக அவரற்ற பிறர் தன்மீது சுமத்தியதாகவும் உணர்வதுண்டு. அது போன்ற தருணங்களில் அகத்தில் மார்பில் அறைந்துகொள்வார். அதன் விளைவாகப் புறத்தில் விழிகளில் நீர் தளும்புவதும் – ஒன்றிரண்டு நீர்முத்துகள் இரப்பை விளிம்பில் மயிற்கால்களைச் சுற்றிவந்து பின்னர் விழிமூலையில் தயங்கித் தயங்கி இறங்கவும் செய்யும். இப்போதும் அது நிகழ்ந்தது. துண்டை எடுக்கக் கை முனையவில்லை. மனத்தைச் சமாதானப்படுத்த உயிர்ப்பின் தன்னிச்சையான இயக்கம் செய்யும் உதவி. அழுவதற்கும் கொடுப்பினை வேண்டும். மனம் வெக்கையில் அவிய விம்மி அழுவது அவர் வாழ்க்கையில் அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. ஏதோ நினைத்தவராய் நாற்காலியைவிட்டு எழுந்து அறைக்கதவுவரை மெல்ல மெல்ல நடந்து வந்துவிட்டார். கதவின் தாழ்ப்பாளைத் திறக்கப்போன வேளை, வேண்டாம் என்பது போல மீண்டும் நிதானமாக நாற்காலிப் பக்கம் திரும்பிவந்தார். வியப்பு. சரீரமும் ஆன்மாவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லையோ? கடந்த இரண்டு நாட்களாக அந்நியனைப் போலத் தனது செயல்பாடுகளை வேடிக்கை பார்க்கின்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர் கைப் பொம்மை போலச் சில நேரங்களில் சீராட்டப்படுகிறார், பல நேரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கிறார். காலத்திற்குக்கூட இவரிடம் வன்மமிருக்க வேண்டும், அதுகூட எஞ்சிய வாழ்நாளைக் கனவுகளிலும் நம்பிக்கைகளிலும் தோய்த்து அசைபோடப் பணித்துவிட்டு ஒளிந்துகொண்டது. எங்கேயாவது தொலைந்து போ என்று விட்டுவிட்டார். அதைக் கண்டுபிடித்து பரணி பாடவெல்லாம் இப்போதைக்கு இயலாது, சரீரத்தில் அதற்கான தெம்புமில்லை. இவர் வாழ்ந்ததுதான் வாழ்க்கை எனப் பிறர் கற்பிதத்தில் ஜீவித்திருக்கிற கடந்தகால வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நினைவூட்டுகிற நிலவையும் நட்சத்திரங்களையும் ஆற்றின் பாய்ச்சலையும், பெரு வெடிப்பையும் பெருநதியின் சுழலையும் மறக்க எத்தனிக்கிறார். இயலாதபோது அத்துவானக் காட்டில் தன்னைக் கொண்டுவந்த சக்திக்குப் பெயரிடத் தெரியாமல் குழம்பினார். இக்கொடுங்கனவிலிருந்து விடுவிக்கும் சூட்சுமங் கொண்ட திறப்பு யாரிடத்தில் இருக்கும்? அவரது எதிர்கால இருப்பின் தலைவிதியை எழுதும் ஆற்றல் கிடைக்கவிருக்கும் திறப்பையும் அது கையில் கிடைக்கிற கால அலகையும் பொறுத்தது. சுவரிலிருந்த சிங்கப்பூர் கடிகாரம் மணி பதினொன்றென அறிவித்தது. இரண்டு மணி நேரத்திற்குமேல் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூடிக்கிடக்கும் சன்னலைத் திறக்கலாமா? ஏசியை நிறுத்திக் கொஞ்சம் இயற்கைக் காற்றைச் சுவாசிக்கலாமென்ற எண்ணம் போயிற்று. ஒற்றை மனிதராக இவரது சுவாசத்தையே திரும்பவும் சுவாசிப்பதும் உள்ளிருக்கும் ஒவ்வொரு பொருளும் தத்தமக்கொரு வாசத்தை வாயிலடக்கி இவர்மீது துப்புவதும் எரிச்சலையும் அலுப்பையும் உடல் கொள்ளத் திணித்திருந்தது.

கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த காரியதரிசி தயங்கி நின்றார்.

– என்ன விஷயம்?

– டாக்டர் வந்திருக்கிறார்

– உள்ளே அனுப்பு.

– வாங்க டாக்டர், காலையிலே ஒன்பதுமணிக்கெல்லாம் வந்துடுவீங்களே இன்றைக்கு என்ன ஆச்சு?

– எதிர்பாராம ஒரு பிரச்சினை, வீட்டுக்குப் போன்பண்ணியிருந்தேனே?

– அப்படியா? இதற்கு முன்னாலே இப்படிப் பிரச்சினைகள் உங்களுக்கு வந்ததா ஞாபகமில்லை.

– மன்னிக்கணும், எனக்கு எப்போதும் நீங்கள் ஒரேமாதிரிதான், என்னைச் சந்தேகிக்க வேண்டாம். அப்படி எனக்குச் சிக்கல்களென்றால் அவசரத்திற்கென இன்னும் இரண்டு டாக்டர்களை வச்சிருக்கீங்க. அப்படி இருக்கச்சே உங்களுக்கு நான்தான் வரணுமென்று அடம்பிடிச்சா எப்படி? எல்லா நாட்களிலும் அது சாத்தியமா சொல்லுங்க. வாங்க வந்து இப்படிப் படுங்க. உடம்பைப் பற்றிச் சொல்லுங்க.

இவர் மவுனமாக இருந்தார். நாடி, இரத்தம் அழுத்தம் என்று ஆரம்பித்து வழக்கமான சோதனைகள் நடந்து முடிந்தன.

– உடம்பிலே எந்தக் குறையுமில்லை. வயதுக்குத் தகுந்த உடல்நிலைதான். ஆரோக்கியமென்றுதான் சொல்லணும்.

– டாக்டர் பக்கத்திலே வாங்க. எத்தனை வருடமா எனக்கு டாக்டரா இருக்கீங்க, ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?

– இதிலென்ன கஷ்டம் போன ஏப்ரலோட முப்பத்தெட்டு வருடங்கள் ஆகப்போகுது.

– ஆமாம். முப்பத்தெட்டு வருடங்கள் ஆகுது. நீங்கள் டாக்டர் அல்ல. குடும்ப நண்பர் அதனாலே சொல்றேன். எங்கிட்டே இன்னொரு நோயிருக்கு, மருத்துவப் பரிசோதனைகளோ, ஆய்வுக்கூடச் சோதனைகளோ கண்டறிவதற்குச் சாத்தியமற்ற நோய். அந்த மலைப்பாம்பு என்னைக் கொஞ்சம்கொஞ்சமா விழுங்கிவருது. நேற்று ராத்திரி தலைமட்டும்தான் என்பதுபோலக் கனவு கண்டேன்.

– எனக்குப் புரியலை?

– புரியாது. அதற்கெல்லாம் மருத்துவப்படிப்பு உதவவும் உதவாது. வாழ்க்கைதான் புரியவைக்கணும். எனக்கே இப்பதான் புரிஞ்சுது, புரிஞ்சு என்ன புண்ணியம்? ரொம்ப லேட்.

காரியதரிசி உள்ளேவந்தார்.

– என்னய்யா? டாக்டர் இருக்கும்போது உள்ளேவரக் கூடாதுண்ணு தெரியுமில்லையா?

– பார்சலொண்ணை எதிர்பார்த்திருந்தீங்களே வந்துட்டுது, அம்மா பேர்லேதான் இருக்குது, இப்போதான் கொடுத்துட்டுப் போனாங்க கையில் பிடித்துக் காட்டினான்.

– தூக்கிக் குப்பையிலே போடு.

– பிரிக்க வேண்டாமா?

– வேண்டாம்.

– சித்தே முன்னே ஏதோ நோயொண்ணு ரொம்பகாலமா இருக்குதுண்ணு சொன்னீங்களே, அதற்கான ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சுட்டீங்கண்ணு சொல்லுங்க.

மருத்துவர் இங்கிதமற்றுச் சிரித்தார். மகாசன்னிதானம் அமைதியானார். எதிரே சுவர் தமது காதுகளை விடைத்துக்கொண்டு உமது புலம் பல்களைக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்கிறது

மருத்துவரும் காரியதரிசியும் ஒருவர் பின்னொருவராகப் புறப்பட்டுப் போனதன் அடையாளமாகக் கதவு விசுக் விசுக்கென்று அசைந்து பின்னர் இறுக மூடிக்கொண்டது. சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்தார். சுவரை மீண்டும் பார்த்தார், ‘எனது பிறவி நோயைக் குணப்படுத்திட்டேன் தெரியுமா?’ என்றார். சுவர் சிரித்தது.

அன்றிரவு மறுபடியும் இவரது அந்தரங்க எண்ணிற்குப் போன் வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் கரகரவென்று ஒரு குரல். ஐயா பார்சலைப் பிரிச்சீங்களா? உள்ளே என்ன இருந்ததுண்ணு தெரியுமா? மர்லின்மன்றோவின் ஸ்கர்ட். ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலத்துக்கு எடுத்தோம். நீங்கள் செஞ்ச உதவிக்கு ஏதோ எங்களாலான சின்ன அன்பளிப்பு . . . மகா சன்னிதானத்தின் கையியிலிருந்து தொலைபேசி நழுவியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *