கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 7,612 
 

ஒருநாள் இரவு போலீஸ் பெரும்படையுடன் போய் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்த முயன்றனர். திடீரென்று எங்கிருந்தோ வந்த கதிரவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசுடன் போராடினார், போலீஸ் அவரை கண்மூடித்தனமாக தாக்கி இழுத்து கொண்டுப் போனது.

அரசியல்வாதி கதிரவனுக்கு பாராட்டு விழா… ஊரெங்கும் பேனர்,கட் அவுட் என அமர்க்களப் படுத்தியது. இதை பேருந்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவர் மற்றவரிடம் கேட்டார்…

“யாருப்பா இது?.இவ்வளவு பெரிய பாராட்டு விழா நடக்கிறது?” என்று கேட்டார்.

“ஓ இவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? இன்றைய காலகட்டத்தில் இவரைப்போல அரசியல்வாதி கிடைப்பது அபூர்வம். சில மாதங்களுக்கு முன்பு அருகிலுள்ள அருள் காலணியில் இரவு நேரத்தில் பெரிய பிரச்சினை ஒன்று நடந்தது. அது என்னவென்றால் பல நாட்களாக ஆற்றோரம் இருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்த வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டு இருந்தது அரசு. ஆனால் அந்த மக்கள் காலி செய்யவில்லை. ஒருநாள் இரவு போலீஸ் பெரும்படையுடன் போய் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்த முயன்றனர். திடீரென்று எங்கிருந்தோ வந்த கதிரவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசுடன் போராடினார், அதனால் போலீஸ் அவரை கண்மூடித்தனமாக தாக்கி இழுத்துப் கொண்டு போனது. இதை அங்கு தூரத்தில் நின்றிருந்த நானே கண்கூடாகப் பார்த்தேன்… அதைப் பார்த்த பின்பு அங்கிருந்த மக்கள் எல்லோருக்கும் எழுச்சி ஏற்பட்டு பெரிய போராட்டமாக மாறியது. பல பிரச்சினைகளுக்கு பிறகு அரசு பின்வாங்கி விட்டது. பலத்த அடியுடன் மருத்துவமனையில் இருந்த கதிரவன் பின்பு மீண்டு வந்தார். அதன்பிறகு அந்த மக்களின் தலைவராகி விட்டார். இன்று அந்த மக்கள் அங்கு குடியிருக்க அவர்தான் காரணம்’’ என்று அரசியல்வாதி கதிரவனை பற்றி விளக்கிக் கூறினார் நண்பர்.

“அடடா அவ்வளவு நல்ல மனிதரா? அவர் தேர்தலில் நின்றால் என் ஓட்டு அவருக்கு தான் நண்பா” என்றார் நண்பர்.

பின்பு தன் இருப்பிடம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர் நண்பர்கள் இருவரும்.

மாலை நேரம்.. பாராட்டு விழா முடிந்து தன் வீட்டிற்கு பெருமை பொங்க மகிழ்ச்சியுடன் வந்தார் கதிரவன். வீட்டிற்கு நுழைந்து வரவேற்பறையில் தனக்காக காத்துக் கொண்டிருந்த ரகுவரனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மறுகணமே அவருக்குள் பதட்டம் ஏற்பட்டது. மகிழ்ச்சி காணாமல் போனது.

தன்னுடன் வந்தவர்களை அனுப்பிவிட்டு ரகுவரன் எதிரே அமர்ந்த பின்பு கேட்டார்..

“என்ன விஷயம்?”

“வேறென்ன செலவுக்கு காசு இல்ல.. அதான் ஏதாவது வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் ரகுவரன்.

“பணம்…பணம்…எவ்வளவுதான் நான் தருவது?’’ என்று கோபப்பட்டார்.

“ஏன் அங்கே இங்கே கமிஷன் வாங்கி நிறைய தான சேர்த்து வச்சு இருக்கே? கொஞ்சம் கொடுத்தாதான் என்ன?’’ என்றான் ரகுவரன்.

“அளவா பேசு… நீ ஒரு மாஜி திருடன் என்பதை மறந்து விடாதே’’ என்றார் கதிரவன்.

“நான் மாஜி திருடன்தான்…. ஆனா நீ இன்னிக்கும் திருடன் தான் அதை மறந்துடாதே” என்றான் ரகுவரன்.

பதில் ஏதும் சொல்லாமல் அசடு வழிந்தார் கதிரவன். உள்ளே சென்று 10,000 ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் ரகுவரன்.

“நான் ஆளும் கட்சியில் சேரப் போறேன்… வரும் தேர்தலில் நிற்கப் போகிறேன்… ஜெயிச்ச பிறகு உனக்கு ஏதாவது ஏஜென்சி எடுத்து தரேன் அதை வச்சி வாழ்ந்து கோ… என்னை தொந்தரவு பண்ணாதே’’ என்றார் கதிரவன்.

“ஏஜென்சி எல்லாம் தேவையில்லை… அது எல்லாம் என்னால பண்ண முடியாது” என்றான் ரகுவரன்.

“வேற என்னதான் வேணும்?”

“யாராவது டைரக்டர் கிட்ட சொல்லி சினிமாவுலே சான்ஸ் வாங்கி கொடு…”

“என்னது சினிமாவா?’’ முழித்தார் கதிரவன்.

“ஹீரோ இல்லப்பா… சின்ன கேரக்டர் போதும்…. அத வச்சி நானே வில்லன் ஆகி அப்புறம் ஹீரோவாகி அப்புறம் அரசியலுக்கு வந்துடறேன்’’ என்ற ரகுவரனை உற்று பார்த்த கதிரவன்…

“சரி அடுத்த வாரம் ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

ஓகே என்று சொல்லிவிட்டு கிளம்பி போனான் ரகுவரன். அவன் போன பிறகு பழைய நினைவில் மூழ்கினார் கதிரவன். அந்த ஒரு நாளை நினைத்துப் பார்த்தார்.

ஒருநாள் இரவு நேரம்… அருள் காலனியில் தன்னுடன் பழக்கத்தில் இருக்கும் கீதா வீட்டிற்கு வழக்கம் போல் யாருக்கும் தெரியாமல் போனார் கதிரவன். நள்ளிரவு நேரம்… பெரும்படையுடன் போலீஸ் வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் மைக்கில்… உடனே எல்லோரும் வீட்டை காலி செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த கதிரவன் அதிர்ந்தார்.

“இப்ப என்னங்க பண்றது’’ என்றாள் கீதா.

“அதான் யோசிக்கிறேன்… இங்கிருந்து போறதுக்கு வேற எதாவது வழி இருக்கா?…”

“இல்லைங்க இது ஒரே ஒரு வழி தான்..”

“மக்கள் வந்து பார்த்தால்… தன் அரசியல் வாழ்வு முடிந்து போகும்’’ என்று நினைத்த கதிரவன் மக்கள் வருவதற்கு முன்னாடியே போக முடிவெடுத்து தானாகவே கிளம்பி போலீஸிடம் சென்றார்.

“நீ யாரு?” என்று கேட்டார் போலீஸ்காரர்.

“நான் மக்களுக்காக போராட வந்திருக்கும் போராளி’’ என்றார் கதிரவன்.

பின்பு வாக்குவாதம் அதிகமாகி அவரை போலீஸ் அடித்து இழுத்துச் சென்றது. அதைப் பார்த்த மக்கள் கொந்தளித்து பின்பு அதுவே போராட்டமாக மாறியது. மக்கள் தலைவரானார் கதிரவன்.

பின்பு ஒருநாள் கதிரவன் வீட்டிற்கு வந்த ரகுவரன் தன் மொபைலில் உள்ள வீடியோவை காட்ட அதில் கதிரவன் கீதா வீட்டில் இருந்தது பதிவாகி இருந்தது.

“நீ … இதை… எப்படி?”

“நான் ஒரு திருடன். போராட்டம் நடத்துனியே அன்னைக்கு நான் அந்த வீட்ல மறைஞ்சுட்டு இருந்தேன். திருட வந்த இடத்தில் உங்களை பார்த்ததும் எதற்கும் பயன்படும் என்று வீடியோ பிடித்து வச்சுக்கிட்டேன். இத மட்டும் நான் வெளியே சொன்னா…..”

“சரி உனக்கு என்ன வேணும்?”

“திருட்டு தொழில் ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால அதை விட்டுட்டேன்… அப்பப்ப கொஞ்சம் செலவுக்கு பணம் கொடுத்தீங்கன்னா போதும்” என்று சொல்லிவிட்டு போனான் ரகுவரன்.

பின்பு அடிக்கடி வந்து பணம் வாங்கிக் கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டான். இதுதான் நடந்தது… சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவுக்கு வந்து விட்ட கதிரவன் உள்ளே சென்று படுக்கையில் சாய்ந்தார். எம்எல்ஏ ஆன பின்பு எப்படியும் அமைச்சர் ஆகி விடுவோம் என்ற கனவுடன் உறங்க ஆரம்பித்தார்…!

– மார்ச் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *