பேருந்து நிலையத்தில் ஒரு நாள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 20,815 
 

பிச்சைக்காரனின் பார்வை தூங்குமூஞ்சி மரத்துக்கு அப்பால் பிரம்மாண்ட லாட்ஜுக்குப் பின்னால் வடிவமே அற்ற பெருங்கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் மேக நாயின் மேல் பதிந்திருந்தது. உடைந்து விழுந்து போன, ஒரு சின்னப் பையன் கைவைத்து ஒரே எம்பு எம்பித் தாவிக் குதித்துச் செல்லும் அளவுக்கு உயரமான, காம்பவுண்டு சுவருக்குப் பின்னால் வெங்காயத் தாமரைகளுடன் தேங்கிக் கிடந்த நீர்ப் பரப்பிற்கு அருகில் உறுமியபடி பன்றிக் கூட்டம் சுற்றிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில் சைக்கிள்களுக்கு டோ க்கன் போட்டுக்கொண்டிருந்தார்கள். டோ க்கன் போடப்பட்டதற்கான அத்தாட்சியான சைக்கிள் பூட்டில் தொங்கவிடப்படுவதற்கெனத் தரப்படும் நம்பர் போட்ட தகர வில்லையையும் அதோடு அந்தச் சைக்கிளுக்குரியவர் வைத்துக்கொள்ளத் தரப்பட்ட மஞ்சள் கலர் டிக்கெட்டையும் சரிபார்த்த பின் விடைபெற்ற சைக்கிள்கள், பேருந்து வரும், போகும் வழியை எதிர்கொள்ளாமல் வயது வந்தவர்களுக்கு மட்டும் படம் பேடும் ஒரு தியேட்டருக்குப் பின்னால் உள்ள வேறு ரோட்டின் வழியே சென்றன.

பிச்சைக்காரன் அட்டைக் கருப்பாக இருந்தான். பட்டன்கள் இல்லாமல் தவிக்கும் சட்டைக்குள்ளே மார்பில் கொத்தாக, கறுப்பாக முடி வளர்ந்திருந்தது. கையிலும் கால்சட்டைக்குக் கீழும் தெரியும் காலிலும் வெறும் செம்பட்டை முடிதான் இருந்தது. அவன் காலில் நகத்தால் கோடு கிழித்துச் சொறிந்துவைத்திருந்தான். அவனுக்கே உரிய பாணியில் இரண்டு உள்ளங்கையையும் தட்டிச் சத்தமெழுப்பிக்கொண்டே நடந் தான். கொஞ்சம் மெதுவாகவும் திடீரென்று யாராவது சிறுவனைக் கண்டால் அவனைப் பயமுறுத்த வேகமாகவும் நடந்து அந்தச் செவ்வகப் பரப்பைச் சுற்றிச் சுற்றி வந்தான்.

ஒற்றை யானைக் காலன், ஒருவர் ஜனத் திரளைக் கிழித்துக்கொண்டு வரும் பேருந்து நின்று, பயணிகளை இறக்கிவிடும் முன்பே அது இன்னும் சிறிது நேரத்தில் போகவிருக்கும் ஊர்ப் பெயரைக் கூவினான்.

கான்கிரீட் கூரையினடியில் சாக்கடையையொட்டி ஒரு குறவனும் குறத்தியும் உட்கார்ந்துகொண்டு பலூன் கொத்துகளைச் செய்துகொண்டிருந்தார்கள். குறத்தியின் இடதுபக்க மார்பில் ஒரு குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தது.

குறத்தி ஒரு ஜவ்வுத்தாள் பையிலிருந்து கிழிக்கப்பட்ட பாவாடைத் துணியில் கொட்டிப் பரப்பிவைத்திருந்த பலூன்களில் ஓட்டை பலூன்களைப் பொறுக்கி எறிந்து விட்டு நல்ல பலூன்களை எடுத்துத் தர, குறவன் அதை வாயால் ஊதி, முடிச்சுப் போட்டு அதை முறுக்கி ஒரே பலூனை இரண்டு பலூன்கள்போல மாற்றினான். அதைப் போலவே இன்னொரு பலூனை ஊதி முடிச்சுப் போட்டு முறுக்கி இரண்டாக்கினான். இவ்வாறு இரண்டாக்கிய பலூன்களை எதிரெதிரே முறுக்கிப் பெருக்கல் குறிபோல மாற்றினான்.

பின்னர் வாயால் காற்று ஊத முடியாத சைக்கிளின் வால்டியூப் போல இருக்கும் பலூனை எடுத்தான். குறத்தி சிறிய கைப்பம்ப்பை ஒற்றைக் கையால் இயக்க, பலூனின் முனையைப் பம்பின் காற்று வரும் முனையில் சொருகிக் காற்றுப் பிடித்த குறவன், போதுமான நீட்டு வந்ததும் எடுத்துக் கையால் நீவிச் சத்தமெழுப்பினான். இதுதான் வாயால் ஊதப்பட்ட பெருக்கல் குறி பலூன் கொத்திற்குக் கைப்பிடியாகச் செயல்பட்டது.

இவ்வாறு பலூன் கொத்துகளை அவன் குறத்தியுடன் பேசியவாறே சாக்கடையில் வெற்றிலைச் சாறைத் துப்பியவாறே, அவிழ்ந்து விழுந்த கொண்டையைச் செருகியவாறே செய்துகொண்டிருந்தான்.

குளிர்பானக் கடைக்கருகில் பேருந்து உள்ளே வரும் பக்கத்தில் நிலையத்துத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடும் சினிமாப் பாட்டுகளை விளம்பரத்தோடு சேர்த்துப் பார்த்துக்கொண்டே பலூன் பொருத்தித் தரும், பால் கொடுக்கும் குறத்தியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தனர் சிலர்.

ஒரு வியாபார ரவுண்டு போய் மீண்டும் பலூன் கொத்துச் செய்யும் குறவனிடம் எட்டா முட்டிப் பாவாடை தாவணி போட்டுள்ள சின்ன, கறுப்பான குறத்திப் பெண் வந்தாள். அவள் வைத்திருந்த தாங்கியில் இரு பலூன்கள் மட்டுமே இருந்தன. அந்தத் தாங்கியின் இடைவெளியில் குறத்தி புதிய பலூன் கொத்துகளைச் செருகினாள். அந்தத் தாங்கியின் வழியே பலூனின் கைப்பிடி மட்டுமே நுழையும்.

பின்னர் தாங்கியின் மேல்புறம் பலூன் கொத்துகள் நெளிய, கீழ்ப்புறம் வெறும் கைப்பிடிகள் மட்டும் தெரிய, அதைப் பிடித்தபடி மற்றொரு ரவுண்டு சென்றாள்.

அவள் போனதும் குறத்தி வலது பக்க மார்பில் குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பித்தாள். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் நின்ற சிலர் நாசூக்காக நழுவி அவளுக்கு எதிர்ப்புறத்தில் வந்து நின்றபடி வெறிக்கப் பார்த்தனர். ஆனால், அவ்வாறு நின்றிருந்தவர்கள் பேருந்தை எதிர்பார்த்து நிற்பதுபோல் பாவனை காட்டினர்.

பேண்ட், சட்டை போட்டிருந்த அந்தக் கணவன் பேருந்து நிற்கும் முன், கையில் ஒரு பையைப் பிடித்த படி முதலில் இறங்கிவிட்டான். அவன் மனைவியோ சிறுமியைப் பிடித்தபடி படிக்கட்டில் நின்றுகொண்டே சென்று பேருந்து நின்றதும்தான் இறங்க ஆரம்பித்தாள். அதற்காகக் கணவன் அவளைக் கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்தான்.

அவன் முன்னால் செல்ல, அவள் பின்னால் சென்று, நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். பையிலிருந்து ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள். அச்சமயத்தில் அவன் அவளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு எங்கோ சென்றான் தலையைச் சீவியபடி. அவளையே பார்த்தபடி இரண்டு பேர் இருந்தார்கள். அவள் அவர்களைப் பார்க்காததுபோல் இருந்தாள். ஆனால் அடிக்கடி கணவனைத் தேடுவதுபோல் அவர்கள் அருகில் வந்து பார்த்தாள். அங்கே ஒன்றும் அவள் முகத்தில் வெயிலடிக்கவில்லை. இருந்தாலும் அவள் கையை நெற்றியில் வைத்துக் கணவனைத் தேடினாள்.

அவள் நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சில் மீண்டும் வந்தமர்ந்தாள். சடையை முன்பக்கம் இழுத்துவிட்டுக் கொண்டு கையால் ஆட்டிக்கொண்டிருந்தாள். இச் சமயத்தில் சிறுமி விளையாட்டுத்தனமாய் மெதுவாக அவளது முந்தானையைப் பிடித்தாள். இப்போது அவளை நோட்டமிட்ட இருவர் பார்வையும் மேலும் தீவிரம் அடைந்தது. மெதுவாகச் சிறுமி முந்தானையை இழுக்க ஆரம்பித்தாள். இன்னும் அவர்கள் எதிர் பார்த்தது நடக்கவில்லை. அவளோ எதையும் கவனிக் காதவளாய் ஆரஞ்சுப்பழச் சுளைகளைத் தின்று கொண்டு கொட்டைகளைத் துப்பிக்கொண்டிருந்தாள். சுவரில் ஒட்டியிருக்கும் அப்பகுதிப் பிரமுகரின் பிறந்த நாள் சுவரொட்டியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுமி சிரித்துக்கொண்டே இப்போது வேகமாக முந்தானையை இழுத்துவிட்டாள். அந்த இருவரும் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. அவள் மெதுவாகக் கீழே குனிந்து முந்தானையை மேலே தூக்கிப் போட்டாள். அப்போதும் அதைச் சரியாகப் போடவில்லை.

பின்னர் அவள் அந்த இரண்டு பேரையும் பார்த்தாள். அவர்கள் தாங்கள் அந்தச் கோலத்தைப் பார்த்துவிட்டோ ம் என்பதற்காக நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

மீண்டும் அவள் எழுந்துவந்து கணவனின் வருகையை எதிர்நோக்கினாள். அந்த இரண்டு பேரையும் பார்த்து “மணி எத்தினி ஆவுது” என்று கேட்டாள். ஒருத்தன், கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்து மணி சொன்னான். பின்னர் அவள் ஒரு ஊர்ப் பெயரைக் கூறி, அந்த ஊருக்குப் போகும் பேருந்து எப்போது வருமென்று கேட்டாள். இன்னொருவன் அதற்குத் தாங்கள் வெளியூர் என்றும் தங்களுக்கு அது தெரியாததென்றும் சொன்னான்.

பிச்சைக்காரன் உள்ளங்கையைத் தட்டிக்கொண்டே சென்று பெட்டியோடு நிற்கும் ஒரு டிப்டாப் நபரிடம் பிச்சை கேட்டான். அவர் கொஞ்ச நேரம் கவனிக்காத மாதிரி நின்றும் அவன் இடத்தைவிட்டு நகராமல் பிச்சை கேட்கவே, வேறு வழியின்றி சூட்கேஸ் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு மேல் பாக்கெட்டில் கைவிட்டார். அவருக்குப் பக்கத்தில் அவரைப் போல் தனியாகத் தோல்பையை மாட்டிக்கொண்டு வந்திருந்த பெண் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்ததால் அவருக்குத் தர்மசங்கடமாயிருந்தது. வெறும் பத்து, இருபது, ஐம்பது, நூறு என நோட்டுகள்தான் வந்தன. எனவே, சில்லரை இல்லையென்று சொல்லிப் பிச்சைக்காரனைப் பக்கத்துப் பெண்ணிடம் அனுப்பிவைத்தார். அந்தப் பெண் எட்டணாவைப் போட்டாள்.

“ச்சே… ச்சே… நாட்ல பிச்சைக்காரன் தொந்தரவு பெரிய தொந்தரவா இருக்கு… இவனுங்களுக்காகப் பொங்கல் காசு மாதிரி சில்லரை வச்சிக்கணும் போலிருக்கிறது” என்று பேசி, அதன் மூலம் அந்தப் பெண்ணை உரையாடலில் சேர்த்துக்கொள்ள முயன்றார் அந்த டிப்டாப் நபர்.

ஆனால் அவளோ ஒன்றும் பேசாமல் நின்றிருந்தாள். “நீங்க வெளியூரா?” என்று கேட்டதும் அவள் பேசாமல் பின்னால் வியாபார மும்முரத்தில் இருக்கும் டீக்கடைக்காரனிடம் சென்றாள். உடனே அந்த நபர் தன்னைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று பயந்துபோய்ப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைக் காலிசெய்தார். அவள் உடனே திரும்பி நின்ற இடத்துக்கே வந்துவிட்டாள்.

இப்போது அவளால் பிரச்சினையின்றி எதிரே சுற்றுச்சுவர் ஓரத்தில் ஒன்றுக்கு இருக்கும் ஆண்களைப் பார்க்க முடிந்தது. பேண்ட் அணிந்திருப்பவர்கள் நின்றுகொண்டும் வேட்டி கட்டியிருப்பவர்கள் உட்கார்ந்துகொண்டுமிருந்தார்கள். அங்கிருந்து பார்த்த போது, இருகால்களையும் கொஞ்சம் பரப்பி நின்று கொண்டிருந்ததும் பூமியில் விழுந்த சிறுநீருந்தான் தெரிந்தன. சிலர் சுற்றுச்சுவர் எதிரில் நின்று கொண்டே ஜிப்பை இழுத்து மூடாமல் நிலையத்தின் பக்கம் திரும்பி நின்றபடி ஜிப்பை அரைகுறையாக இழுத்து மூடினார்கள். சிலர் வேண்டுமென்றே ஒன்றுக்கிருந்து முடித்ததும் நிலையத்தின் எதிரில் நின்றபடி தத்தம் குறியைக் காட்டினார்கள். அப்போது நிலையத்துக்கு வரும் பேருந்துகளிலிருந்து சில பெண் பார்வைகள் தெரியும். பின்னர் ஒன்னுக்கு முடித்த நபர்கள் நிலையத்தின் தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கியும் பேருந்துகளை நோக்கியும் சென்றார்கள்.

அந்தப் பெண் அங்குதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது தோழியொருத்தி எதேச்சையாகப் பார்த்துவிட்டு அருகில் வந்தாள்.

“ஹேய், இன்னும் நீ போகலையா?” என்றாள் அவளைப் பார்த்ததும்.

“இல்லை… இன்னும் பஸ் வரலையே” என்றாள் சிவ பூஜைக் கரடியைப் பார்த்து.

“செரியாப் போச்சி போ… பஸ் அங்க இருக்குது வா” என்று அவளை அழைத்துக்கொண்டே சென்றாள். அப்படிப் போகும்போது சிலர்மேல் இடித்தபடியே சென்றாள்.

அனைத்துப் பயணிகளும் இறங்கியதும், அந்தப் பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் வெளியே டீ குடிக்கச் சென்றார்கள். கல்யாணமாகாத ஒரு பெண் தான் முதன்முதலில் ஏறியமர்ந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவளுக்குப் பின்சீட்டில் ஒரு இளைஞன் அமர்ந்தான். அவர்கள் இரண்டு பேரைத் தவிரப் பேருந்தின் உள்ளே இப்போது யாருமில்லை. இரண்டு பேரும் ஜன்னல் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார்கள். வெளியே கொய்யாப்பழக் கடைகளுக்கு அருகில் நின்றிருந்தோரின் பார்வை தன்மேல் படுவதை அந்தப் பெண் கவனித்தாள். உடனே வெடுக்கென்று எழுந்து பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினாள். வண்டிக்காகக் கும்பலாகக் காத்திருந்த ஒரு குடும்பத்தின் அருகில் போய் நின்றுகொண்டாள். இன்னொரு குடும்பம் அந்தப் பேருந்தின் உள்ளே போய் உட்கார்ந்தது. பின்னர் அந்தப் பெண் அதே பேருந்தில் உட்காரச் சென்றாள்.

இன்னொரு பெண் பேருந்தை விட்டிறங்கி நடந்தாள். அவளுக்குப் பக்கத்தில் இன்னொருவன் நடந்தான். இருவரும் ஒரே சீராக நடந்தார்கள். உடனே அந்தப் பெண் அதே இடத்தில் நின்றுவிட்டாள். இவளை ஆரம்பத்திலிருந்தே கவனிக்காத, கண்ணாடியணிந்த அந்த வாலிபன் அதே சீராகத்தான் நடந்தான். இவன் கொஞ்ச தூரம் போனதும் அவள் நடந்து போனாள்.

இன்னொரு இளைஞன் தன் தோல் செருப்புக்கு பாலிஷ் போட நிலையத்தின் உள்ளே சிமிட்டித் தரையில் உட்கார்ந்திருந்த செருப்புத் தைப்பவனிடத்தில் சென்றான். பின்பு அங்கிருந்து பக்கத்து இனிப்புக் கடையின் அலங்காரக் கண்ணாடியில் முகம் பார்த்துத் தலை சீவிக்கொண்டான். கைக்குட்டையின் மடிப்புக் குள்ளேயிருந்த பவுடரை முகத்தில் பூசிக்கொண்டு சென்றான்.

ஒரு கும்பல் நீண்ட நேரமாகப் பேருந்துக்காக அங்கே காத்துக்கிடந்தது. அந்தக் கும்பலிலிருந்த ஒரு கன்னிப் பெண் இரு கைகளையும் மேலே தூக்கி ஒரு எக்கு எக்கிச் சோம்பல் முறித்துவிட்டுத் தலைக்கு ஒரு முடுக்கான துணிப் பையை வைத்துக்கொண்டு படுத்தாள். வெற்றிலைப் பாக்குப் போட்டிருந்த அவள் அம்மா அதற்காக இடத்தை ஒதுக்கித் தந்தாள். கொஞ்ச நேரம் அவள் கைகளைத் தொடையிடுக்கில் வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அந்த நேரத்தில் இன்னொருவன் வந்தான். அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததும் அவளுக்கு எதிரே கைக்குட்டையை விரித்துத் தலையை அழுக்காகாமல் வைத்துக்கொண்டு படுத்தான். அவன் தலைக்கும் அவள் தலைக்கும் நிறைய இடைவெளி இருந்தது. ஆனால், அவள் பாதத்துக்கு அருகில் அவனது இடது கால் பாதம் மிகவும் நெருங்கியிருந்தது.

சிறிது நேரத்தில் தூங்கிவிட்டதால், அவன் குறட்டை விட்டான். பலூன்காரக் குறத்தி அவ்வழியே சென்ற போது, திடீரென்று விழித்துக்கொண்டதுபோல் எழுந்து கோட்டுவாய் விட்டவாறே அவ்விடத்தை நோட்டம் விட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான். இப்போது அவன் பாதம் அவள் பாதத்தைத் தடவியது. பின்னர் லேசாக அவன் பாதம் இருந்த இடத்திற்கே வந்தது. அவன் கண்கள் மூடியிருந்தாலும் லேசாக ஓரக் கண் தெரிந்தது. எவ்வித எதிர்வினையும் இல்லாததால் அவன் பாதம் மீண்டும் அவள் பாதத்தை அடைந்து தடவிக் கொடுத்தது. உடனே அந்தப் பெண் விழித்துக் கொண்டதுபோல் கண்களைத் திறந்து பார்த்தாள். உடனே இவன் கண்களைச் சுத்தமாக மூடிக்கொண்டான். ஆனால், அவள் இவன் பாதத்தை எட்டி உதைக்கவும் இல்லை, தன் பாதத்தை நகர்த்திக்கொள்ளவும் இல்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டுத் தூங்கினாள்.

எழுந்துபோய் வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டு வந்ததும், அவள் அம்மாவின் பார்வை இந்தப் பாத பூஜையில் பதிந்தது. உடனே அவள் எழுந்துபோய் அவன் பாதத்தைக் கையால் தூக்கி அப்பால் போட்டு விட்டு இருவருக்கும் நடுவில் உட்கார்ந்துகொண்டாள்.

இப்போது அவனால் எந்தச் சில்லறைத்தனமும் செய்ய முடியவில்லை. தீவிரக் கண்காணிப்புப் பணி தொடர்ந்ததால், அவன் தூக்கம் கலைந்ததுபோல் எழுந்து கைக்குட்டையை உதறிப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, கலைந்த தலையைச் சீவிக்கொண்டு இடத்தைக் காலிசெய்தான்.

பிச்சைக்காரன் கீழே உட்கார்ந்துகொண்டு வரிசையாக ஊர்ந்து சென்ற எறும்புகளுக்கு நடுவில் கைவிரலால் வெற்றுக் கோடு கிழித்து வரிசையைக் கலைத்தான். எதிரே மினரல் வாட்டர் குடித்த பெண்ணிடம் தன் வலதுகைக் கட்டை விரலை உதடு நோக்கி வளைத்துக் குடிநீர் கேட்டான். அவள் தராததால் ஏமாந்துபோய் வீறாப்பாக டீக்கடை எதிரில் நின்று பாக்கெட்டிலிருந்த எட்டணாவைக் காட்டி டீ கேட்டான்.

“ச்சீ போ” என்று கடைக்காரன் விரட்டியடித்து விட்டுப் பக்கத்துக் குளிர்பானக் கடைக்காரனைப் பார்த்துச் சிரித்தான். இந்த இரு கடைக்காரன்களும் சிரித்தபோது, மகிழ்ந்துபோய்ப் பிச்சைக்காரனும் சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து அங்குக்காத்திருந்த சிலரும் லேசாகச் சிரித்தார்கள்.

கொஞ்சம் பேர் பேருந்தில் உட்கார்ந்தபடியே படித்துக் கொண்டு செல்ல செக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள். ஓரமாகப் பெண்கள் கலைந்துபோன ஆடைகளைச் சரிசெய்தனர். பையிலிருந்து கண்ணாடி எடுத்து, முகம் பார்த்து, தலைசீவி, பூ வைத்துக்கொண்டனர். ஆண்கள் பேண்ட்டிற்குள் மிகச் சரியாக மேல் சட்டை ‘இன்’ செய்யப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்துக் கொண்டார்கள். குளிர்ச்சிக் கண்ணாடி அணிந்து கொண்டார்கள். வெள்ளைச் சட்டையில் பட்டகறைக்காக மனத்தைக் குழப்பிக்கொண்டு அந்தக்கறையை ஏற்படுத்தியவனைத் திட்டினார்கள். சிலர் தொப்பியணிந்துகொண்டால் நன்றாக இருக்கிறதா எனப் பக்கத்து நபரைக் கேட்டுக்கொண்டார்கள்.

பிச்சைக்காரன் திடீரென்று கும்பலுக்கு நடுவே அம்மணமாக ஓடினான். அவனது விதைக் கொட்டைகள் அளவில் பெரியதாய் இருக்க, குறி துவண்டுபோய் இருந்தது. அப்பகுதியைக் குளிப்பாட்டி எத்தனை நாளாச்சோ தெரியவில்லை. அப்பகுதியைச் சொறிந்து எங்குப் பார்த்தாலும் காயப்படுத்தி வைத்திருந்தான்.

இரு கைகளையும் பறவையின் இறக்கைகள்போல் விரித்துக்கொண்டு நிலையத்தில் ஓடினான். அவனது குறி இப்படியும் அப்படியுமாக அலைந்தது.

அவனைப் பார்த்துச் சிறு பிள்ளைகள் பயந்து போனார்கள். கிளம்பத் தயாராய் இருந்த பேருந்தின் பெண்கள் ஓரத்து ஜன்னல்கள் உடனே இழுத்து மூடப்பட்டன. சிலர் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்கள். கடைக்காரர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் சிரித்தார்கள். சில கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களை வேறு பக்கம் திருப்பி அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஏறக்குறைய அங்கிருந்த பெண்கள் கூட்டத்தின் பார்வை வேறு எங்கோ சும்மாங்காட்டியும் பார்த்துக்கொண்டிருந்தது.

அவன் கொஞ்சத்தில் அடங்கவில்லை. இங்குமங்கும் வளைந்து ஓடினான். அவன் கழற்றிப் போட்ட கால்சட்டையை எடுத்துக்கொண்டு ஒருவன் ஓடினான். சிலர் அவனை மடக்கிப் பிடிக்க முனைந்தார்கள். அவன் ஒரு திசையில் ஓட, எதிர்த் திசையில் இரண்டு பேர் அவனை மடக்க ஓடி வர, அவர்களை ஏமாற்றிவிட்டுப் பக்கவாட்டில் புகுந்து ஓடிய அவன், கடைசியில் வசமாக மாட்டிக்கொண்டான். அவன் கால்சட்டை வரும்வரை தற்காலிகமாய்ச் சாக்குச் சுற்றப்பட்டது.

Print Friendly, PDF & Email

1 thought on “பேருந்து நிலையத்தில் ஒரு நாள்

  1. ஒரு Camera வினால் எடுத்த Still shot ஐப்போல ஒரு பேருந்துநிலையத்தின் காட்சிகள் விபரிக்கப்படுகின்றன. பேருந்தினுள்ளே ஏறியமர்ந்தவுடன் தூங்க முனைவோர், அருகிலிருக்கும் பெண்ணின் காலை வருடுவோர், பாலூட்டும் தாயின் முலையையும் விடாமல் கண்களால் பருகுவோர் என ஒரு சமூகத்தின் அத்தனை ரக மக்களும் பிரதி எடுத்ததைப்போல அப்பேருந்து நிலையத்துள் இருப்பதுவும் அதிசயங்கள் அல்ல. இது ஒரு நெடுங்கதையின் ஒரு அத்தியாயத்தைப் படித்ததைப்போன்ற அனுவத்தையே வாசகனுக்குத் தருகிறது. அழகாகச் சித்தரிக்கப்படும் பகைப்புலம் மட்டுமே ஒரு கதையாகிவிடாது. சொல்லப்படப்போகும் விடயத்துக்கு ஒரு கருவும், அதைக்காட்சிப்படுத்தச் சில பாத்திரங்களும், அவர்களுக்கிடையேயான ஊடாட்டங்களும் வைத்து இதைவிட அழகான கதையை இவ்வாசிரியரால் பண்ணமுடியுமென்பதை அவரது மொழி சான்றுகூறுகிறது. அ.முரளி இன்னும் விர்த்தியாசமான கதைகளைப்பன்ன முயலவேண்டும். பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *