பேய்ப் பனங்காய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,766 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீண்ட நெடிய பனைமரச் சோலை. இருநூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்து விட்ட அந்தப் பனைமரங்கள் நூறு அடி உயரம் வரை வளர்ந்திருந்தன.நேர்த்தியாக நடப்பட்ட அவற்றின் நடுவே ஒரு சிறிய அழகிய அம்மன் கோயில். ரங்கன் குழந்தையாக இருந்த போது நண்பர்களுடன் மாலைப் பொழுதெல்லாம் அங்கேயே கழிப்பான். கறுத்த கருங்காலிக் கட்டைகளாகக் காட்சியளித்த பனைமரச் சோலையிலே விளையாட்டுக்களுக்கும் வினோதங்களுக்கும் குறைவே இல்லை. காற்று வீசி அடித்தால் ஒரு அற்புதமான காட்சி கிடைக்கும்.

மழை கொட்டினால், பனை பழுத்தால், அம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா வந்தால் அந்தச் சோலை ஒரு அழகிய இடமாக மாறிவிடும்.

அந்தப் பனஞ் சோலை ஒருவருடைய பரம்பரை சொத்து. சொந்தக்கார அம்மா மாலைப் பொழுதிலே தொடர்ந்து அங்கு வருவார். ரங்கனுக்கு அந்த அம்மாவை நீண்ட காலமாகத் தெரியும். ரங்கனுடைய நண்பர்கள் மாலைப் பொழுதிலே விளையாடுவது, வெள்ளை மணலிலே கட்டி புரள்வது, கண்களிலே மண்ணை ஊதி விடுவது, ஒடி ஒடித் தொண்டை காயும் போது வாளியிலே வாய் வைத்து தாகத்தைத் தீர்ப்பது: எல்லாவற்றையும் இப்பொழுது நினைத்தால் கண்ணணுக்கு சிரிப்புத்தான் வருகிறது.

பத்து வருடங்களுக்கு முன் வரைக்கும் ரங்கன் அங்கு’ விளையாடிக் கொண்டிருந்தான். பழுத்த பனை மட்டைகள் காய்ந்து ஓலைகளோடு கூட்டாக சேர்ந்து மரத்தை விட்டு பிரிய மனமில்லாமல் மரத்தின் அடி வரை சர் என்று ஓசை எழுப்பி நுனியிருந்து அடிவரைக்கும் மரத்தை தழுவிக் கொண்டே இறங்குவது ஒரு நல்ல காட்சி. அவற்றைப் பிரித்து எடுத்து அந்த அம்மாவுக்கு கொடுப்பது தோட்டத்திலே விளையாட விட்டதற்காக ரங்கன் கோஸ்டியின் பிரதி உபகாரமாகும்.

அந்த அம்மாவுக்கு கண் தெரியாமல் போன போதும் அழகிய வெள்ளைத் தலையோடு மணலிலே கால் நீட்டி உட்கார்ந்து இருப்பதை ரங்கன் ரசிப்பது வழக்கம். அவனும் பக்கத்திலே அந்த அம்மாவைப் போல் கால் நீட்டி உட்கார்ந்து காற்று வாங்குவான்.

பனங் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எனும் பழங் கூற்றுக்கு ரங்கன் உதாரணமாக வாழ்ந்தான். பனை மரத்திலே பேய் வாசம் செய்யும் என்றும் பனங் காயாக அது தோட்டத்திலே உருண்டு திரியும் என்றும் சனங்கள் சொல்வதை அவன் காதில் கொள்வதில்லை. சிறுவனாய் இருந்த போது பல ஆண்டு காலமாக அந்த தோட்டத்து அம்மன் கோயில் விழாவிலே பூசைக்கு முன்பே பல மடைகளில் அவன் ஆசாமியாக இருந்து பதம் பார்த்திருக்கிறான்.

அந்தக் காலம் சென்று கனகாலமாகிவிட்டது தோட்டத்தின் பக்கத்து வீட்டுத் தடியன் சண்டித் தனம் காட்டிய அந்தக் காலத்திலே ரப்பரை இணைத்து பனங் காய்களை பேய் காய்களாக மாற்றி அந்தத் தடியனுக்கு காய்ச்சல் வர வைத்தது தொடங்கி பழையவற்றையெல்லாம் உருப் போட்டப்படி அந்தத் தோட்டத்தைப் பார்த்தபடி அம்மனை நினைத்து குட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் வீதியால் செல்வான். ரங்கன்.

போராட்டம் பொழுதை சுருக்கியதால் ஏதோ சிலர் ஆண்டுக்கொருக்கா ஆவணிக்கொருக்கா அந்த இடத்தில் திரிகிறார்கள். பரம்பரைகள் இருந்த இடத்தை விட்டு அகன்று கொண்டிருக்கையில் தற்போதைய வளவின் பராமரிப்பாளர் ஒவ்வொரு மரங்களாக வெட்டி வெட்டி விற்கிறார்.

பக்கத்து வீட்டுத் தடியனாக இருந்தவர் இப்பொழுது ஜம்பதைத் தாண்டி வாழ்கிறார். ஆவர் கோமாளித் தனம் மிக்கவர். குரல் மாற்றிக் கதைப்பதில் வல்லவர். சிறியவர்களின் தொல்லைகளை அவர் இப்போது விரும்பவில்லை. விழுகின்ற மட்டைகளும் பழங்களும் தனக்கே உரிமை என நினைக்கிறார். பாடசாலைப் பிள்ளைகள் தற்செயலாக ஒரு பழத்தைப் பொறுக்கி விட்டால் கண்ணைக் காட்டியே மிரட்டி பழத்தைப் பிடுங்கி விடுவார். எஞ்சியுள்ள கொஞ்சப் பனைகளுக்கு அவரே உரிமையாளாக நினைத்துக் கொள்கிறார். அவருடைய வாழ்விற்கு இப்போது அந்த மரங்களே தெய்வம். சில வேளைகளில் ரங்கன் தோட்டத்தின் நடுவிலே உள்ள மண்ணில் மாலை வேளையில் கால் பதித்து நடப்பான்.

ஒரு நாள் இப்படியொரு காட்சி. திடீரென ஒரு பழம் ரங்கனுக்கு அண்மையில் விழுந்தது. எடுப்போமா விடுவோமா என நினைப்பதற்குள் வருகின்ற வேகத்திலே ரங்கனை முட்டி விட்டார் வேகத்தில் அந்தத் தடியர். பழம் நிலத்தில் கிடந்தது. கிளையிலே குழை குத்தி விளையாடும் கோழி கோட்டான் விளையாட்டுப் போல் இருந்தது நிலமை. ரங்கன் அசையவில்லை நான்கு முறை மரத்தைச் சுற்றி துள்ளினார் தடியர். திடீரெனக் குனிந்து பழத்தை எடுத்தார். ரங்கனை அணைத்து முத்தம் கொடுத்தார். துள்ளிக் குதித்து பனம் பழத்துடன் அவரது வீட்டை நோக்கி ஓடினார் அழிந்து போன அந்தச் சோலையிலே ரங்கனுக்கு அது புது அனுபவம்.

பிறிது ஒரு நாளில் மனைவி மக்கள் முன்னாலே ஒரு உருவம் இழுத்துச் செல்லப்படுகிறது. வீட்டு முற்றத்தில் கொட்டிக் கிடந்த ஊமை விதைகளில் இழுபட்ட போது பனங்காய் பிரியரின் உதிர்ந்த ரோமங்கள் சங்கமமாயின.

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *