பெயர் சூட்டும் சம்பிரதாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 10,575 
 

“ரோஜா என நாம் அழைக்கும் ஒரு பெயரில் என்ன இருக்கிறது? வேறு பெயரில் கூட அது நறுமணமாகத்தான் இருக்கும்…” என ரோமியோ ஜூலியட் என்ற காதல் காவியத்தில் ஷேக்ஸ்பியர் தன் தத்துவத்தை வெளிப்படுத்தினார். ஒரு வேளை அது காதலர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஏனெனில் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே, அதுபோல் காதும் இல்லை. இருந்திருந்தால், காதலர் மற்றவருடைய அறிவுரையைக்கேட்டு சுதாரித்துக்கொண்டிருப்பர் அல்லவா? எப்படியோ காதலிக்கும் ஒருவனுக்கு பெயர் என்ன, அவள் தெரு நாய் கூட மனதை கவர்ந்து தான் இருக்கும்.

நாம் அறிந்த சம்பிரதாயப்படி, வீட்டிலுள்ள தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள், சில நேரம் பெற்றோர்கள் குழந்தை பிறந்த ஒரு வாரத்திலிருந்து மூன்று மாதம் வரை கூட “பெயரீட்டு விழா” என்ற ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து, முன்பே சேகரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவோம். குடும்பத்தில் இருந்த பெரியவர் பெயரும் வைத்து விடுவதுண்டு, ஆளுக்கு ஒரு பெயர் சஜ்ஜஸ்ட் செய்து, அதை சூடாமலிருந்தால், வருத்தப்படுவதுமுண்டு. பல பெயர்களை சீட்டில் எழுதி மடித்து, குலுக்கல் போட்டு எடுத்து, வந்த பெயரை கூட பிள்ளைக்கு சூடுவதுண்டு. அப்பொறுப்பை பெற்றோரிடம் தந்துவிட்டால், அவர்களுக்கு இடப்படாத, அருமையான பெயர்களை முன் கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்திருப்பர். அது அவர்களுடைய நண்பர்களில் ஒருவருடைய பெயராகவோ, அல்லது, பழைய காதலர் பெயராகவோ கூட இருக்கும். தான் மதிப்போர் அயலார் அறிவுறுத்தும் பெயர் கூட, சற்றும் பெற்றோரையும் குடும்ப பெரியவர்களையும் சட்டை செய்யாமல், சிலர் வைத்து விடுவதுண்டு. குழந்தை பிறக்கும் முன்பே, ஆணாக இருந்தால் இந்தப்பெயர், பெண்ணாக இருந்தால் அந்தப்பெயர் என தீர்மானித்துக்கொள்பவரும் உண்டு. என்னைப்போல் சிலர், மனைவி யார் என்று தெரியாமலேயே திருமணத்திற்கு முன்பே, குழந்தைகளின் பெயர்களையும் குறித்து வைத்துக்கொள்பவரும் உண்டு. எப்படி இருந்தாலும் வைக்கப்படும் பெயர் அர்த்தமுள்ளதாயும், சொல்வதற்கு சுலபமாகவும் இருந்தால் சரி.

பெயர் வைத்து விட்டு, அமெரிக்கர் போல் அதை சிதைத்து அழைப்பது சரியல்ல. பிள்ளைக்கு கொடுத்த பெயர் அழைக்கப்படவேண்டும். அல்லது, அழைக்கவேண்டிய பெயர்தான் இடப்படவேண்டும். ஒரு நாள் ஒரு மாணவனிடம் உன் பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அவன் “விசு” என்றான். “நல்ல பெயரப்பா, மிகவும் சுலபமாக இருக்கிறது, எழுத படிக்கவும் சுலபமே…” என்றேன். அந்தப்பையன் உடனே, “இல்லை சார், என் பெயர் விசுவாமித்திரன், வீட்டில் என்னை “விசு” என்றும், வெளியில் என் உற்றார் உறவினர் என்னை “மித்ரா” என்றும் அழைப்பார்கள்.” என்றான். “பள்ளிக்கூடத்தில் என்ன சொல்வார்கள்…” என கேட்டதற்கு, அவன் ” நான் கொழு கொழு என்று இருப்பதால், என்னை “மதன் மித்ரா” என்றும், சிலர் ‘அமுல் பேபி” என்றும் அழைப்பதுண்டு” என்றான். பெயர் ஒன்று இருக்க, அதை யாரும் சரியாக அழைக்காததன் காரணமே நாம் நமது பெயரை சுருக்கி சொல்வதால் தான்.

நான் ஒரு சமயம் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஊர்ப்பெயர்கள் ஒரு முக்கிய மனிதரின் பெயரால் அழைக்கப்படுகின்றனவா அல்லது, அந்த புகழ்பெற்றவருக்கு, ஒரு ஊரின், அல்லது, நகரத்தின் அல்லது நாட்டின் பெயர் கொடுக்கப்படுகிறதா என்ற விவாதம் ஏற்பட்டது. தோராயமாக கேட்போமானால், ஒரு இடத்திற்கு, அது ஊராக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாலையாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு புகழ்பெற்ற ஒரு நபரின் பெயர் தான் சூட்டப்படுகிறது. அதே நேரத்தில், சற்று விலகி யோசித்தோமானால், மக்கள் தன் செல்வங்களுக்கு பெயர் சூட்டும் சரித்திரமே, சுவாரஸ்யமாக இருப்பதை அறியலாம்.

மக்கள் பெயரிடும் பாரம்பரியத்தை மேற்கொண்டு அலசிப்பார்க்க, நான் என்னுடன் பணிபுரியும் பல நாட்டவர்களுடன் உரையாடினேன். முதலில் என் கண்ணுக்கு தென்பட்டது சில ஆப்கானிஸ்தான் குடிமக்களும் சில சீக்கியர்களும் தான். நாட்டு நிலைமையைப்பற்றி பேசி, பேச்சை திசைமாற்றி, அவர்கள் பெயர் சூட்டுவதைப்பற்றி உரையாடினேன். காரணம், ஆப்கானிஸ்தானியர், எளிதில் உணர்ச்சிவசப்படும் மக்கள் வகையை சேர்ந்தவராவர். அவர் தம் குழந்தைகளுக்கு நடந்த சம்பவங்களின் ஞாபகார்த்தமாய் பெயர் சூட்டும் விதத்திலிருந்தே ஒருவர் இதை அறிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் பெரிய பூகம்பம் ஏற்பட்டு நிறைய மக்கள் பலியாயினர். அந்நேரம் பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் “ஜல்ஜலா கான் (Zalzala Khan) என பெயரிட்டனர். ஜல்ஜலா என்றால் நில நடுக்கம் என அர்த்தம். கடல் பிரயாணத்தில் பிறந்திருக்கும் பிள்ளைகள் பலருக்கு “தர்யா கான்”, சமுத்திர வழியில் பிறந்திருந்தால், அவைகளை சமுந்தர் கான் எனவும் பெயரிடுவார்களாம். “நல்ல வேளை, நீங்கள் இந்தியாவில் இல்லை, இருந்திருந்தால், இங்கே ஓடும் இரயிலிலும் பஸ்களிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு பஸ் கான் என்றோ ரயில் கான் என்றோ பெயரிட்டு விடுவீர்கள்” என கூறினேன். அவரும் சிரித்துக்கொண்டு அசட்டையாக விட்டுவிட்டார்.

பல நாடுகளில், கலாச்சாரத்திற்கு தகுந்தது போல் விசித்திர சம்பிரதாய முறைப்படி சிசுக்களுக்கு பெயரிடுவர். நாம் கேள்விப்பட்டவரை, சீன சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தையின் தலைமாட்டில் இருக்கும் எதாவது பொருளை கீழே தள்ளிவிடுவார்களாம். அதனால் ஏற்படும் உலோக / திரவ ஒலி (metallic/liquid sound) தான் அக்குழந்தையின் பெயராக அமையுமாம். அபூர்வமாகத்தான் இருக்கிறது, ஆனால் உண்மையாம்! ஒரு ஸ்பூன் (ஸ்டீல் கரண்டி) கீழே விழந்து உண்டாகும் ‘சிங் மிங்” அல்லது, “கிளிங் பாங்” என்ற ஒலி தான் குழந்தையின் பெயராக இருக்குமாம்! தப்பித்தவறி, ஒரு டம்ப்ளரோ, அல்லது ஒரு ஸ்டீல் ஜக்கோ விழுந்தால், பெயர் “ப்லாங் டாங்” என்று ஆகிவிடக்கூடும். சற்று யோசித்துப்பாருங்கள், அந்த சம்பிரதாயத்தை நாம் ஒரு வேளை பின்பற்றி, நம் ஊர்களில் பிறக்கும் குழந்தையின் தலைமாட்டில் வைத்திருக்கும் பொருள்கள் கீழே விழுந்தால், நாம் நமது குழந்தைகளுக்கு சூட்டிவிடும் பெயர்கள் என்னவாயிருக்கும்? ஒரு பொருளா குழந்தையின் தலைமாட்டில் இருக்கிறது, யப்பப்பா?

நாம் குழந்தையின் தலைமாட்டில் வைக்கும் விசித்திரமான பொருள்களை அந்த இறைவன் தான் அறிவார். அரிசி, கோதுமையால் நிரப்பப்பட்ட உருண்டையான பைகள், ஏன் என்று கேட்டால், குழந்தையின் தலையை உருண்டையாக இருக்கச்செய்யவாம். ஒரு இரும்புத்துண்டு, ஏனெனக்கேட்டால் தீய சக்திகள் குழந்தையை நெருங்காமலிருக்க அது தேவையாம். வெந்நீர் ப்லாஸ்க், குழந்தை அழுதால், அதன் கவனத்தை திருப்ப ஒரு ஜால்ரா செட், ஸ்டீல் டம்ப்ளரில் ஒரு ஸ்பூன், டிபன் கேரியர், பௌடர் டப்பா, மந்திரித்து வாங்கிய தாயத்து, ஹனுமான் சாலிஸா, கொலுஸு, மோதிரம், கிரைப் வாட்டர், தேன் பாட்டில், இன்னும் சொல்லவா வேண்டும்? துணிமணிகளுடன் எண்ணற்ற எத்தனையோ பொருட்கள். இப்பொருள்கள் கீழே விழுந்தால், குழந்தைக்கு எந்த மாதிரி பெயரிட முடியுமோ தெரியவில்லை.

ஒரு நாள் நான் விடுமுறையில் என் ஊருக்கு சென்றிருந்தேன். ஏதோ ஒரு வேலையாக அருகிலுள்ள கிராமத்திற்கு போகவேண்டியதாயிற்று. அக்கிராமத்தில், ஒரு சந்தோஷமான விவசாயி குடும்பத்தை சந்தித்தேன். நாள் முழுக்க கடினமான வயல் வேலைக்குப்பின், மாலையில் அருகில் அல்லது தூரத்திலுள்ள சினிமா கொட்டகைக்கு ஒரு படமும் தவறாமல் பார்க்க அவர்கள் சென்றுவிடுவர். தன் நிலத்தின் அருகில் சுற்றி அமர்ந்து அனைவரும் முந்திய மாலை கண்டு வந்த சினிமாப்படத்தின் கதையைச்சொல்லி, சிரித்தபடி, வசனங்களை பேசிக்கொண்டும் பாட்டுக்களை பாடிக்கொண்டும் இருந்தனர். அங்கே ஒரு தாயின் மடியில் ஒரு மும்மாதக்குழந்தையும் உறங்கிக்கொண்டிருந்தது. “குழந்தை அழகாக இருக்கிறதே, பெயர் என்னாம்மா…” எனக்கேட்டேன். சற்றும் தாமதமின்றி உரத்த குரலில், “ராஜ் கமல், உங்களுக்கு தெரியுமா, அவன் பெயர் ராஜ் கமல்”, என்று பெருமையோடு பதிலளித்தாள் அக்குழந்தையின் தாய். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அக்குழந்தையின் சகோதர சகோதரிகளின் பெயர் முனியாண்டி, மாரியம்மா, சடையப்பன் என இருக்கும் பொழுது, தேங்கி நிற்கும் தண்ணீரில் மலர்ந்த தாமரை, அதுவும் ராஜ தாமரை என பெயரிட்ட தாய்க்கு வாழ்த்து கூறினேன்.

இருப்பினும், என் வியப்பை அடக்க முடியாமல், “யார் இவ்வளவு அழகான பெயரிட்டது” என கேட்டேன். அக்குழந்தையின் பாட்டியார் குழந்தைக்கு பெயரிட்ட சாதனையை பெருமையாக தன் பக்கம் சேர்த்துக்கொண்டார். “அருகிலுள்ள ஊரில் புதிதாக திறக்கப்பட்ட சினிமா தியேட்டரின் பெயர் தான் ‘ராஜ் கமல்’, அது திறக்கப்பட்ட நாளன்று தான் என் பேரன் பிறந்தான். அதன் ஞாபகார்த்மாகத்தான் குழந்தைக்கு “ராஜ் கமல்” என்று பெயர் சூட்டி விட்டோம், நல்லா இருக்கா?” என சற்று நிமிர்ந்து முன்னுக்கு சாய்ந்தபடி கேட்டார் அந்த அம்மையார். “ரொம்பவும் அரும்ம்ம்மையா இருக்கு…” என்று ஒப்புக்கொண்டேன்.

சரி, இது தான் இப்படி என்றால், விஷயம் இத்துடன் நின்று போகவில்லை. அனைத்து ஊர்களிலும் பஜார், பஸ் ஸ்டான்ட், மூன்று, நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், பழங்குடியினர், குறவர் மற்றும் மலைவாழ் மக்கள் தன் குல வியாபாரமான மயில் எண்ணெய், மூலிகை மருந்துகள் ஆகியவற்றை சாலையோரத்தில் பரப்பி, அதன் பலன்களை கூவி அழைத்து விற்று வருவதை நீங்கள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. இது அனைத்து தமிழ் நாட்டிலும் கேரள, ஆந்திர, கர்னாடக மாநிலங்களிலும் அன்றாடம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது வரை யாராவது, அப்பழங்குடியினர் பெயரை கேட்டறிந்ததுண்டா? கேட்டுப்பாருங்கள், அநேகமாக, யார் எந்த ஊரில் பிறந்தாரோ, அந்த ஊரின் பெயராகத்தான் அவர்கள் வைத்திருப்பர். ஒரு சமயம் என் ஊரில் அப்படி ஒரு மூலிகை மற்றும் மயில் எண்ணெய் வியாபரி ஒரு முழு மயிலை, பிரெஞ்ச் ஃபிரை (French Fry) செய்து எண்ணெய்யிலேயே ஊற வைத்திருந்தார். அவருடைய மார்கெடிங் ஸ்டைல் நன்றாக இருக்கவே சற்று நேரம் நின்று கவனித்தேன். 40-க்கும் மேற்பட்ட மூலிகைகளை அவர் வைத்திருந்ததோடு அதன் பெயர்களும் அவருக்கு மனப்பாடமாக இருந்தன. அவர் பெயர் ஏதோ ஒரு ஊரின் பெயராகத்தான் இருந்தது, அவர் தன்னிடம், அவர் வைத்திருக்கும் மூலிகைகள், எந்தெந்த வியாதிகளுக்கு அவை ஏற்றது என நிறைய நோட்டீஸ் அச்சடித்து வைத்திருந்தார். அதில் கொட்டை எழுத்தில், தன் பெயருக்கு பின், “மலைக்கள்ளன் மகன்” என அச்சிட்டிருந்தார். “இது என்ன இப்படி அச்சிட்டிருக்கிறீர்கள்…” என கேட்டேன். அதற்கு அவர், “படிக்க தெரியாது சாமியோவ்…” என்ன என்று நீங்களே சொல்லுங்கோ…” என்றார். உங்கள் பெயருக்கு கீழே “மலைக்கள்ளன் மகன்” என்று எழுதியிருக்கிறதே…!” என்றேன். “ஆமாம், சரியாகத்தான் அச்சிட்டிருக்கிறேன்…” என்றார் அவர். “மலைக்கள்ளன் என்றால்….” என்று சற்று தயங்கியபோது, அவர் கூறினார், “…சாமியோவ், எங்கப்பா 1954 – ல் MGR படம் “மலைக்கள்ளன்” ரிலீஸ் ஆன சமயத்தில் பிறந்தார். ஆகவே என் தாத்தா அவருக்கு மலைக்கள்ளன் என பெயரிட்டு, இன்னிக்கும் அவர் ரொம்ப ஃபேமஸ்…. சாமியோவ், தெரியுமா…?” என்றார் பெருமையோடு.

அப்பொழுது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒருவேளை இந்த சம்பிரதாயப்படி, பம்பாயில் வாழும் மக்கள் தன் குழந்தைகளுக்கு சினிமா தியேட்டரின் பெயரை வைக்கவேண்டியிருந்தால், அப்பெயர்கள் என்னவாய் இருக்கும். “பீலா ஹவுஸ்”, “அப்ஸாரா” “மினர்வா” “ராக்ஸி” மற்றும் சற்று விலையுயர்ந்த பெயர்களான, “ஸ்டெர்லிங்”, “நியூ எம்பயர்” “ரீகல்” எனவும், ஒரு வேளை இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால், அவைகளுக்கு, “கங்கா-ஜமுனா”, “சத்யம்-சிவம்-சுந்தரம்”, எனவும் பெயரிட்டிருப்பர் போலும்! அப்படி சினிமா பெயர் வைக்கவேண்டியிருந்தால், இந்தியில், ஆவாரா (aavaaraa), லோஃபர் (Loafer), ப்லஃப் மாஸ்டர் (Bluff Master), ஜுவல் தீஃப் (Jewel Thief), தீவானா (Deewana), “படோசன்” (padosan) என்றல்லவா பெயர்கள் இருந்திருக்கும்!

அடுத்து, 1990 வது ஆண்டு, சத்தாம் ஹுஸ்ஸேன் குவைத் நாட்டின் மீது படை எடுத்து அமெரிக்காவுடனும் மோதினார். அப்போரைத்தொடர்ந்து, பலர் தன் குழந்தைகளுக்கு சத்தாம் ஹுஸ்ஸேன் என பெயரிட ஆரம்பித்து விட்டனர். 1995 – ம் ஆண்டு வாக்கில் ஒரு நாள் என் குழந்தையின் ப்ரைமெரி ஸ்கூலுக்கு சென்றிருந்தேன். பெற்றோர் பலபேர் தன் குழந்தைகளுடன் அவர்களை பள்ளிக்கூடத்தில் LKG, UKG கிலாஸ்களில் சேர்க்க வந்திருந்தனர். பள்ளிக்கூடத்தின் அட்மிஷன் அலுவலகத்தில் ஒரே அமர்க்களம். என்ன செய்தி என பார்த்தால், கொடுத்தது போல் குழந்தையின் பெயர்களை எழுத பள்ளி நிர்வாகத்தினர் மறுத்தனர். காரணம் கேட்டால், பெற்றோரில் பலர் தன் குழந்தையின் பெயரை “சத்தாம்” என்றே அறிவித்தனர். பிரச்சினை என்ன வென்றால், ஒரே பெயர் கொண்ட இரண்டு அல்லது மூன்று பேர் இருந்திருந்தால், அவர்களை வெவ்வேறு வகுப்புகளில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் வந்திருப்பதோ ஒரு டஜனுக்கு மேல் “சத்தாம் ஹுஸ்ஸேன்” என்ற பெயருடன். ஆகவே, பிரின்சிபல் தான் ஒரு போர்களத்தை பள்ளிக்கூடத்தில் உண்டாக்க முடியாது என பெற்றோரிடம் கூறி அன்பாக அடம் பிடித்தார்.

அது போதாதென்று, உலகமெங்கும் நிறைய பேர், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதார், தன் குழந்தைகளின் பெயர்களை “ஒஸாமா” என்று சில வருடங்கள் தொடர்ந்து வைத்தனர். இதில் விசேஷம் என்னவென்றால், பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருத்தர், தன் குழந்தைக்கு “ஒஸாமா பின் லாதின்” என பெயர் சூட்டினார். நீங்கள் ஒரு கிறிஸ்துவர், ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என கேட்டதற்கு, அவர் முன்பு வேலை செய்து வந்த வளைகுடா தேசம் ஒன்றில், ஒரு அமெரிக்க ஆபிஸருடன் ஏற்பட்ட அவருடைய கசப்பான அனுபவத்திற்கு பழிவாங்கும் பொருட்டு, தன் கோபத்தை தீர்த்துக்கொள்ள, தன் குழந்தைக்கு அமெரிக்க விரோதியின் பெயரிட்டுள்ளாராம். இதன் தொடர்ச்சியாக, எனக்கு தெரிந்த ஒருத்தருடைய நண்பரும் தன் குழந்தைக்கு “ஒஸாமா” என பெயரிட்டு, அரேபிய முறைப்படி “பின் லாதின்” என்பதையும் பின்னால் சேர்த்துவிட்டார். என் நண்பர் அதற்கு அவரை அணுகி, “ஜனாப், உங்கள் பெயர் ஷாஹ் நவாஸ், பின்னே ஏன் தன் குழந்தைக்கு “பின் லாதின்” அதாவது “லாதின் உடைய மகன்” என பெயரிட்டிருக்கிறீர்கள்….”, என அந்தப்பெயரை சுட்டிக்காட்டியதும், அவர் அடைந்த கோபத்திற்கு எல்லையே இல்லையாம். அவர் உடனே மகனுடைய பெயரை “ஒஸாமா பின் லாதின்” என்று இருந்ததை “ஒஸாமா பின் ஷாஹ் நவாஸ்” என திருத்திக்கொண்டாராம். உணர்ச்சிவசப்படுவதிலும் கவனக்குறைவை பாருங்கள்.

சில பேர் தன் பிள்ளைகளின் பெயரை, புகழ்பெற்ற அரசியல் வாதிகளின் பெயரையே வைத்துவிடுகின்றனர். இந்த வரிசையில், பம்பாயில் ஒருத்தரை சந்தித்தேன். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் அவர் பரம ஏழையாக இருந்தாலும், நாட்டுப்பற்று உள்ளவராகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவராகவும் இருந்தார். மாணிக்கம் போல் அவருக்கு மூன்று குழந்தைகள், இருவர் ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. அனைவரும் தன் பதின்ம வயதை எட்டிக்கொண்டிருந்தனர். அவர் தன் செல்வங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், “பெரியவன் பெயர், ‘காந்தி’, இளையவன் பெயர் ‘நேரு’, பெண் பிள்ளையின் பெயர் ‘இந்திரா’ ..” என்றவர் தொடர்ந்து, “….ஆனால் இந்திரா காந்தி, எமர்ஜென்ஸி கொண்டு வந்து, அவர் பெயர் கெட்டு போனதால், தற்சமயம், மகளின் பெயரை ‘பாஞ்சாலி ‘ என மாற்றி விட்டேன்..” என்றார். “‘பாஞ்சாலி’ என்பது ஐந்து கணவர் கொண்ட ஒரு ‘மஹாபாரத்’ கதையின் கேரேக்டர், என்ற உண்மையை சொன்னதும், அவர் தன் முகத்தை சுளித்துக்கொண்டு, திரும்பிபாராமல் நடையை கட்டினார்.

தீண்டாமை என்ற இன வெறிக்கொள்கை (Apartheid) முற்றிலும் வெறுக்கப்பட்டு உலகத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்தாலும், பிரிட்டிஷ் மக்கள் எவ்வளவு கலர் வெறி பிடித்தவர் என அறிந்து கொள்ள, அவர் தம் பெயர் வைத்துக்கொள்ளும் விதமே போதுமானது. தன் பெயருடன், வர்ணங்களை சேர்த்து, தன்னை “மிஸ்டர் ப்ரௌன்”, “மிஸ்டர் ப்லேக்” “மிஸ்டர் வைட்” என சொல்லிக்கொண்டு பல வண்ணக்கலவையில் மிதக்கின்றனர்.

நான் ஆரம்பத்தில் எழுதியது போல், ஒரு இடத்தை சேர்ந்தவர்கள், தன் பெயருடன் அந்த இடத்தின் பெயரையும் வைத்துக்கொள்கின்றனர். நீங்களே பாருங்கள், பூனேகர், கோல்காவுன்கர், கோலாபுரி, பிஹாரி, தஹல்வி, பனாரஸி, உம்ரி, மதனி என ஒரு இடத்தின் பெயர் ஆட்களுக்கு கொடுக்கப்படும் பொழுது, ஒரு ஆளின் பெயர் இடத்துக்கும் உள்ளது. உதாரணத்திற்கு, இத்தாலி நாட்டின் தேசிய ஆராய்ச்சியாளரான அமெரிகொ (Amerigo Vespucci) என்பவர் தான் அமெரிக்காவை கண்டுபிடித்ததால், அவர் பெயரையே அந்த கண்டத்திற்கு சூட்டப்பட்டதாம். அதே போல், ஹைதராபாத், செகுந்தராபாத், அஹ்மதாபாத். உம்ராபாத், அலெக்ஸான்டிரியா, வாஷிங்டன், சௌதியா ஆகியவை, தனிப்பட்டவர்களை கௌரவிக்க, கொடுக்கப்பட்ட பெயர்கள். இடத்தின் பெயரால் ஆட்களை அழைப்பதாக இருந்தால், வருங்காலத்தில், ஆஸ்திரேலியா, ஹானாலுலு, அந்தமான் என்ற பெயர்களை கேட்கக்கூடும், ஆனால், கியூபா, கொவான்டநாமோ போன்ற பெயரை மக்கள் விரும்பப்போவதில்லை.

ஒரு நாள் காலஞ்சென்ற முதல் இந்திய பிரதம மந்திரி, ஜவாஹர்லால் நெஹ்ரூ ஒரு ஊருக்குச்சென்றார். என்ன பெயர் என கேட்ட பொழுது, அது “துர்ஜன்பூர்” (கெட்ட ஜனங்கள் கொண்ட புரம்) என சொல்லப்பட்டது. கேட்பதற்கே அருவருப்பான அந்த பெயரை மக்கள் ஏன் வைத்தனர் என கேட்டதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்பெயரை உடனே “ஸஜ்ஜன்பூர்” (நேசமான மக்கள் வசிக்கும் புரம்) என மாற்ற உத்தரவிட்டாராம். அவ்வரிசையில், தமிழ் நாட்டில் “சேரி” என அழைக்கப்படும் அனைத்து பெயர்களையும் மாற்றி, நல்ல பெயர்களை சொல்லி அழைத்தால் அங்கே வசிக்கும் மக்களுக்கும் பெருமையாக இருக்கும் அல்லவா?

பொதுவாக, இந்தியாவில் அநேகமானோர், தன் பிள்ளைகளை செல்லமாகவோ அல்லது நிஜமாகவோ, உலோகங்களின் பெயர் வைத்துவிடுகின்றனர். அதாவது, தங்கம்மா, வைர முத்து, மாணிக்கம், போன்ற பெயர்கள். ஒரு சிலர், ஆகாயத்தில் மிதக்கும் கோளங்களின் பெயரையும் சூட்டி விடுகின்றனர். உதாரணத்திற்கு, சூரியா, சந்திரா, தாரா (நட்சத்திரம்) போன்ற பெயர்கள், அப்படிப்பட்டவர்கள் தன் குழந்தையை “குரு” என அழைத்தாலும், “சனி” என்று பெயர் வைக்க விரும்புவதில்லை.

அத்தனை பெயர்கள் இருந்தும், சிறைச்சாலைகளில் ஒரு கைதியை, பெயர் சொல்லி அழைப்பதில்லையாம். அங்கே வெறும் எண்கள் தான் அடையாளம். கைதி நம்பர் 115, 107, 707, 420 என்ற எண்கள். ஒரு சாமர்த்தியமான நபரை நம்பர் 1 என்றோ நம்பர் 2 என்றோ சொல்லும் நாங்கள் யாரையும் நம்பர் 9 என அழைப்பதில்லை. நம்பர் 9 என்றால், அது…. மன்னிக்க வேண்டும்…. யாரையும் புண்படுத்த மனம் வரவில்லை …

ஆங்கிலேய அரச குடும்பத்தில் பெயர்களுக்கு பற்றாக்குறை போலும். ஒரே பெயரை பல தலைமுறையினர் சூட்டிக்கொண்ட விதத்தை நீங்களே பாருங்கள், வில்லியம் I, வில்லியம் II, வில்லியம் III, வில்லியம் IV… முதலியன. மேலும் ஜார்ஜ் I, ஜார்ஜ் II, ஜார்ஜ் III, ஜார்ஜ் IV… ஆகியவை. பழைய பெயரை திரும்ப வைத்துக்கொண்டால், அவர் அடைந்த அதே வெற்றி தமக்கும் கிட்டும் என கனவு கண்டுக்கொண்டிருந்தனர் போலும். பலரை கொள்ளையடித்து, பல நாடுகளின் பூமியை அபகரித்து, தன்னை ராஜா எனவும் ராணி எனவும் வெட்கமின்றி பெயர் சூட்டிக்கொண்டனர். வருடம் 1600 -ல் வெள்ளையர்களால் நிறுவப்பட்ட ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் இன்றைய முதலாளி பம்பாயைச்சேர்ந்த சஞ்சீவ் மெஹ்தா என்ற ஒரு இந்தியர், “பாம்பே” என இருந்த தான் பிறந்த மண்ணின் பெயர் “மும்பை” என மாற்றப்பட்டாலும், 350 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு வந்த கம்பெனியை அவர் வாங்கியதால், பெயர் மாற்றினால் இது தான் அத்தனை காலம் இந்தியாவை ஆட்டிபடைத்த கம்பெனி என வருங்காலத்தில் தெரியாமல் போய் விடும் என நினைத்தாரோ என்னவோ, அதை பெயர் மாற்றாமல் வைத்திருக்கிறார், காரணம், அது இப்பொழுது ஒரு அரசியல் சாரா ப்ரான்ட் (வர்த்தக) பெயராம்.

இவ்வளவு ஆழ்ந்த சிந்தனைகளுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில், ஒரு குழந்தைக்கு வைக்கப்படும் பெயர், அது வளர்ந்ததும், தன் பெயர் தனக்கே பிடிக்காமல் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

எப்படியோ, தன் பெயரைவிட ஒருவருக்கு வேறு இனிமையான இசை கிடையாது, என்பது தான் உண்மை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *