பெயர் உதிர்காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 10,325 
 

பெயர் தொலைந்திருந்ததை.. அவனால் நம்ப முடியவில்லை! மறுபடி மறுபடி முன்னும் பின்னுமாக அந்த மஞ்சள் பளபளப்புத் தாளை புரட்டிப் புரட்டி வாசித்தும் பலனில்லை. நிஜமாகவே பன்னீரின் பெயர் தொலைந்துதான் போயிருந்தது. இது அடிதான்.. வலி பாய்ச்சவல்ல அடிதான்.. திட்டமிட்டே தரப்பட்ட அடியும்கூட.. எதிர்வினையாய் ‘ரணம் நிகழும், சீழ் கோர்க்கும்’ என எதிர்நோக்கியே விதைக்கப்பட்ட வினை! ஆனால் இவன் விஷயத்தில் விதைத்தவர் நோக்கம் நிறைவேற வழியில்லை. தாக்கப்பட்டவர் அடி பொறுக்கும்போது.. வலி மறுக்கும்போது.. எய்தப்படும் அம்புகள் வீரியம் இழக்கும்.. வீழவும் செய்யும். அப்படித்தான் பன்னீருக்கு அந்த அழைப்பிதழ் வலி தரவே இல்லை.

‘அமரர்.கிருஷ்ணமூர்த்தி பேத்தியும் திரு. வைத்தீஸ்வரன் மகளுமான திருநிறைச் செல்வி.ராகினிக்கும் …. எனத்துவங்கி ‘இவ்வண்ணமே கோரும் சித்தப்பா குமரேசன், மாமா வரதராஜன் எனத் தூரத்துச் சொந்தங்களைக் கூட விட்டுவிடாத பெயர்ப்பட்டியல் கொண்ட அந்த இருவீட்டார் கல்யாணப் பத்திரிகையில் எங்கேயுமே பன்னீரின் பெயர் காணப்படவில்லை. ஆனாலும் வலி இன்றி ஆனந்தமே பொங்கிற்று. விடிந்தால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால்.. அங்கே இந்தியாவில் தங்கை ராகினிக்குக் கல்யாணம்! இந்த நாளுக்கு, இந்த நிகழ்வுக்குப் பன்னீர் காத்திருந்த காலம் கொஞ்ச நஞ்சமல்லவே! வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச மகிழ்ச்சியை இந்த கல்யாணப் பத்திரிகை முறியடித்து விட்டது. கூடவே தங்கையின் கடிதமும்! ஆர்வமாய்ப் பிரித்தான்.

‘அன்பு அண்ணனுக்கு,
கடைசியில் நான் ஆசைப்பட்டபடியே அத்தானைத் திருமணம் செய்து தருகிறாயே நன்றி அண்ணா நன்றி! அதே சமயம் நீ கல்யாணத்திற்கு வரப்போவதில்லை என்று அறிந்து மிக வேதனை. விடுமுறை கிடைக்கவில்லை என்பது நிஜமான காரணம்தானா? நீ அங்கு போய் நான்கு வருடங்களாகியுமா லீவு தரமறுக்கிறார்கள்? நீ வாக்களித்தபடி கல்யாணத்துக்கு முன்னரே அத்தானுக்கு சவுதியில் வேலை வாங்கித்தர முடியாத குற்ற உணர்ச்சியால்தானே வரமறுக்கிறாய்! அதற்குப் பரிகாரமாகப் பேசிய தட்சிணைக்கும் மேலாக எண்பதாயிரம் அனுப்பியதில் மாமாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஆனாலும் கதிர் அத்தானின் ஆத்திரம் அடங்கவில்லை. உன் நல்ல மனசு புரியாமல் பத்திரிகையில் உன் பெயரே வரக்கூடாது என்று தடுத்துவிட்டார். எங்களை மன்னித்துவிடு அண்ணா. கல்யாண நாளில் மறக்காமல் என்னை ஆசிர்வதிக்கவும்’

மறப்பதா? இந்த ஜன்மத்திலா? உலகில் பாசமிகு அண்ணன்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால் பன்னீருக்கு இணையாவார்களா? அவனது மொத்த வாழ்வின் சுழற்சியே ராகினி ரோகிணியை மையப்படுத்தித்தானே!. அவனது ஐந்து வயதில் அம்மா மஞ்சள் காமாலையில் போனபின்னர் இரண்டுவருடம் கழித்து அப்பாவின் மறுமணம். அதுகூடப் பஞ்சம் தலைவிரித்தாடிய கரிசல்மண்ணில், கூட இணைந்து உழைக்க இன்னும் இரு கைகள் துணை வருமே என்றுதான்! சித்தி அடிக்கவும் இல்லை!. அணைக்கவும் இல்லை. மாறாக பன்னீர்செல்வமோ சித்திக்குப் பிறந்த இரு பெண் குழந்தைகளையும் பூமியில் பாதம் படவிடாது தாங்கு தாங்கென்று தாங்கினான்.

நாலரைக் கிலோமீட்டர் நடந்து சென்று படிக்க நேர்ந்தபோதும் அவன் படிப்பில் சோடை போனதில்லை. ஆனாலும் மேலே படிக்க வழியின்றி பட்டறைதான் துவக்க நேர்ந்தது. புஞ்சையையும் பட்டறையையும் நம்பியே வாழ்வைத் தொடர்வது அத்தனை அவநம்பிக்கைக்குரிய ஒன்றல்லதான். இருந்தாலும் திருவிழாக்கால பலூன் வர்ணங்களில் கனவுகள் காணும் தங்கைகளை மகிழ்விக்க வீடு விட்டு நாடுவிட்டு பறந்து திரவியம் தேடத்துணிந்தான். அதிலும் ராகினி, மாமாபையன் கதிரேசனை விரும்புகிறாள் என அறிந்த மாத்திரத்திலேயே பெட்டியைத் தூக்கிவிட்டான். சக்திக்கு மீறி வரதட்சிணை பேசியதோடு உபரியாகக் கதிருக்கு ஒரு வேலை விசாவும் ஏற்பாடு செய்வதாக வாக்களித்தே மும்பை வந்தான்.

பட்டறை விற்ற பணமும் அம்மாவின் பழைய நகைகளும் சீக்கிரமே ஒரு வெல்டர் விசா தந்துவிடுமென நம்பி தாராவியில் குடியேறினான். குடியேறிய பிறகுதான் தெரிந்தது அவனைப்போலவே உணர்ச்சிமயக் ‘குடும்பம்தாங்கிகள்’ ஆயிரக்கணக்கில் மும்பை முழுக்க முற்றுகையிட்டிருப்பது. நாட்கள் வாரங்களாகி மாதங்களாகிக் கலைந்ததோடு கையிருப்பையும் கரைத்து வந்தது. நம்பிக்கையானவன் என்று நம்பிக் கொடுத்த முன்பணத்தோடு மலையாளித் தரகர் கோயா காணாமல் போனதுதான் முதல் துரதிருஷ்டம்.

மூன்று மாதத்திற்குப் பிறகு டோம்பிவலி ரெயில் நிலையத்தில் கோயாவை அவனது மனைவியோடும் கைக்குழந்தையோடும் கண்டு கழுத்தைப் பிடிக்கையில் அவனது நிலைமை இன்னும் பரிதாபகரமானது என்றறிந்தான். கோயா உட்பட பலகுட்டி ஏஜண்டுகளையே ஒரு திமிங்கலம் ஏமாற்றி நாமம் போட்ட கதையை நம்பும்படிச் சொன்னான். எப்படியாவது அந்த ஏஜண்டைக் கண்டுபிடித்து பன்னீரின் பாஸ்போர்ட்டையும் பணத்தையும் திரும்பப் பெற்றுத் தருவதாகக் குழந்தை தலையில் கைவைத்துச் சொன்னவனை மன்னித்து அனுப்பினான். மன்னிக்கப்பட்டவனும் நிஜமாகவே மனிதனாக இருக்கவே மறுமாதமே விசா வுடன் கூடிய வேறொரு தலைவெட்டிப் பாஸ்போர்ட்டோடு வந்தான்.

“வேணாம் கோயா! என் பாஸ்போர்ட்டே போதும். பாவம் இதுக்குச் சொந்தக்காரர் எங்கே அலையிறாரோ.. விசா வேற அடிச்சிருக்கு”

“ஆமா நீ இருக்கிற லட்சணத்திலே அடுத்தவனுக்காக பரிதாபப் படுறியாக்கும். ஏற்கனவே இந்த பாஸ்போர்ட் ஆபரேஷன் கேஸ் தான். அதனால மறுபடி மாற்றி உன் போட்டோவை வெக்கறதுல தப்பு ஒண்ணுமில்லை. இதுக்கு மேல என்னால எதுவும் பண்ணமுடியாது. விசா ரோடு கிளீனர் விசாதான். கார்பரேஷன் வேலைன்னு வச்சுக்க. சம்பளம் ஐயாயிரம் ஆறாயிரம்தான் தேறும். இதுக்கே ஏகப்பட்ட டிமாண்ட். அங்க போனா போதும் காரை கீரை கழுவியாவது எக்ஸ்ட்ரா காசு பார்த்துரலாம்னு ஓரோர்த்தரும் தொங்குறானுங்க. நீதாம்பா யோசிக்கிறே?”

மேற்கொண்டு யோசிக்கவில்லை. பாஸ்போர்டே இல்லா நிலையில் எத்தனை நாளைக்குத்தான் வீட்டிற்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பது ‘நாளை விசா, மறுநாள் விமானம்’ என்று. கதிரேசன் சலித்துக் கொண்டால் அப்புறம் ராகினி கதி? மறுவாரமே புறப்பட்டு ரியாத் வந்தான்.

“டேய் ‘சௌபீஸ் கண்டே’ இருக்கானாப்பா?”

“பன்னீர்தானே இருக்கான் இருக்கான்.. என்ன சிடி வேணுமா?”

மாலையானால்.. அந்த கேம்பிலுள்ள சக ஊழியர்கள் பலரும் பன்னீருக்காகக் கதவு தட்டுவது வழக்கமே. காலை ஆறுமணிக்குப் புறப்பட்டு போய்… ஒரே சமயம் பனிரெண்டு வாகனங்கள் இணையாகச் செல்லத்தக்க அதிபரந்த இரு வழிச்சாலைகளை, தெருக்களை இயந்திரத்தால் கூட்டி, குப்பைகளைக் கைகளால் பொறுக்கி.. மூட்டைகளில் நிரப்பி, ராட்சஸ லாரிகளில் திணிக்கிற அசுரப்பணி.. மாலை நாலு மணிவரை தொடரும். ரயில் பெட்டிப் படுக்கை போல அடுக்கடுக்காக மூன்று தட்டுகள் கொண்ட நான்கு செட் படுக்கைகள் உடைய அந்த எட்டுக்கு எட்டு அறைக்கு அவர்கள் வந்துசேர்கையில் அவர்களே குப்பைகளாகத்தான் துவண்டிருப்பர். முறை வைத்துச் சமைத்துக் கொண்ட உணவை கடமைக்காகக் கொட்டிக் கொண்டு, அக்கடா என்று படுக்கையில் விழுமுன்னர், தேடிப்போவது பன்னீரைத்தான். அந்த தக்கனூண்டு ஸ்தலத்திலும் துணைத் தொழிலாக வீடியோ சிடி வாடகைக் கடை நடத்தி வந்தான். அதுவும் ஆறுமணி வரைதான்.

ஆறுமணியானால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய மருத்துவர் டாக்டர்.நிசாமுத்தீன் வீட்டில் வேலை. ஆரம்பத்தில் குடும்பத்தை உடன் வைத்திருந்தவர் பிள்ளைகள் படிப்புக் காரணமாக அவர்களை இந்தியா அனுப்பிவிட்டு தனித்து இருக்கிறார். வாக்குவம் கொண்டு வீடு சுத்திகரிப்பு. இரவுக்கும் மறுநாள் பகலுக்குமான சமையல், துணி துவைத்தல் அல்லது உலர்ந்ததை அயர்ன் பண்ணுதல் என தினம் இரண்டு மணிநேர பணி. அந்த டாக்டரின் உபயத்தால் மருத்துவக் குடியிருப்பு வளாகத்திலே கொசுமருந்து தெளிப்பு உத்யோகமும் அவனுக்கு ஏற்பாடாகியிருந்தது. அது முடிகையில் பத்துமணியாகிடும். அதன்பிறகு நகரின் பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் இரவு பதினொன்றுக்கு மேல் துவங்கி ஒருமணிவரை வாடிக்கையாளர்கள் கலைத்துப் போட்ட பொருட்களை அதனதன் ஸ்தலத்தில் சீராக அடுக்கி, காய்கறி பழ விற்பனைப் பகுதியில் பழையன கழித்து புதியன புகுத்தலுமாக பகுதிநேர நள்ளிரவுப் பணி!

இத்தனையும் போதாதென்று, ஊடே கிடைக்கிற கேப்பில் ஏதேனும் ஷாப்பிங்க் வளாகம் படையெடுப்பான், ‘கார் கழுவுகிறேன் பேர்வழி’ என்று. எப்படியும் தினம் மூன்று நான்கு கார்கள் பார்த்து கார் ஒன்றுக்கு பத்து ரியால் வீதம் சட்டைப்பையில் புகுத்திவிடுவான். இப்படி நாளின் இருபத்திநான்கு மணிக்குமான நிறுத்தமில்லா உழைப்புக் காரணமாக வந்த அடைமொழிதான் ‘சௌபீஸ் கண்டே வாலா!’. படுக்கையில் வந்து விழும்போது மணி ஒன்று ஆகிவிடும். ‘வெறும் மூன்று மணிநேர உறக்கத்தில் ஒரு மனிதன் திவ்யமாக உயிர்வாழமுடியும். அதுவும் சுறுசுறுப்பாக உற்சாகமாகவே உலா வரமுடியும்’ என ஒரு சாதனை நிரூபணம் போன்ற அந்த அதீத உழைப்பிற்கான உந்துசக்தி தங்கைகள் மேல்அவனுக்குண்டான அபரிமிதப் பாசமே!

“டாக்டர்! தூங்கி எழுந்தாச்சா? உங்களைக் கேட்காமலே இனிப்பு பண்ணியிருக்கிறேன். விடிஞ்சா தங்கச்சி ராகினிக்குக் கல்யாணம்”

“அடப்பாவி! சர்வ சாவகாசமாச் சொல்றியா? ஆமா! அந்த பையன் நீ விசா அனுப்பினாத்தான் தாலிகட்டுவான்னு சொன்னியே!”

“ஆமா டாக்டர்! அவங்களுக்குத் தெரியுமா நான் இங்க நிஜமாவே குப்பைதான் அள்ளிக்கிட்டிருக்கேன்னு? ராத்திரி பகல்னு பாராம எந்த வேலைன்னாலும் இழுத்துப் போட்டு செய்துதான் நாலு காசு பார்க்க முடியுது. ஆனா அங்க உள்ளவங்க என்ன நினைக்கிறாங்க! நான் மட்டும் ஏதோ பெரிய வேலையிலே இருந்து கை நிறைய காசு சம்பாதிச்சுட்டு, அவங்களுக்கு விசா ஏற்பாடு பண்ணாம காலம் கடத்துறேன்னு. உங்களுக்குத்தான் தெரியுமே! கதிரேசனுக்கு எவ்வளவு விசா தேடினேன்!. அவனுக்கு எந்த டெக்னிகல் வேலையும் தெரியாது. உடம்பு வளைச்சு வேலை செய்யுற முனைப்பும் கிடையாது. சுலபமா வந்து கல்பிலே காசை அள்ளின காலமெல்லாம் மலையேறிப்போச்சுன்னு நாம சொன்னா நம்பாமக் கோபம்தான் படறாங்க! ”

“அப்புறம் எப்படித்தான் சமாளிச்சே..”

“வேறென்ன பண்ண? அவனுக்குத் தோதான விசாவைக் காத்துக் காத்து ராகினி கல்யாணம் தள்ளிப்போனா அப்புறம் ரோகிணி கல்யாணம் என்னாறது.. அதனால மாமாவுக்கு விலாவரியா எழுதிப்போட்டேன்.. ‘இதுதான் உள்ளபடி நிலைமை. என்னை மாதிரி பலரோட பொழைப்பும் இங்க நாய் படாத பாடுதான். கதிரேசனுக்கு இதெல்லாம் ஒத்துவராது. நிச்சயதார்த்தத்துல குடுத்த நாற்பதாயிரத்தோடு இன்னும் அதிகப்படியா, எழுபது எம்பதாயிரம் அனுப்பிவைக்கிறேன். அதை வைச்சு பிஸினஸ் பார்த்து கொடுங்க.’ன்னு. அதுக்கப்புறம்தான் இந்த கல்யாணம்”

“பிரமாதம்பா, படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லேங்கறதுக்கு நீ இன்னொரு நிரூபணம். உன்னை விட பலமடங்கு சம்பாதிச்சும் எங்கப்பா என் கடைசித் தங்கை கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் கேட்டப்ப நான் என் மனைவி பேச்சை கேட்டு அனுப்பின தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் இருபதாயிரம். இப்ப உன்னைப் பார்த்து என்னையே கேவலமா உணர்றேன்.”

“விடுங்க டாக்டர் நீங்க எவ்வளவு நல்லவர்னு எனக்குல்லே தெரியும்?”

“அதே சமயம் ஒண்ணு புரிஞ்சுக்க! நீங்க பறந்து பறந்து சம்பாதிக்கிற பணத்தை, இப்படி கேட்கறதுக்கு முன்னால அள்ளி அள்ளி கொடுக்கிறதால உங்களோட உண்மையான நிலைமை உங்க சொந்தக் குடும்பத்துக்கே தெரியாமப் போகுது. இது ஒரு ஆபத்து. நீங்க அரபி கிட்டே அடியும் மிதியும் வாங்கி நாய் படாத பாடு பட்டாலும் ஊர் போகும்போது ஜீன்ஸும் கூலிங்கிளாசும், ஆளுயர சூட்கேஸுமாப் போய் இறங்கி ஜாலம் காட்டறதால உங்க கடும் உழைப்பை அவங்க உணர மறுக்கிறாங்க. அப்புறம் திடீர்னு, ஒருநாள் நீங்க முழிச்சிட்டு கணக்குக் கேட்டாலோ இல்லே இப்போ அனுப்பறதிலே துளி குறைச்சாலோ உங்க உறவையே அவங்க மறுத்திடறாங்க. ‘பாசம் பாசம்’னு அலையுற உங்களுக்கு இதெல்லாம் இப்போ புரியாது. அதுசரி! உன் பணம் நிறைய என்கிட்ட கொடுத்து வச்சிருக்கியே! கல்யாணத்துக்கு வேணாமா?”

“நல்லா சொன்னீங்க! உங்க கிட்ட சேர்த்துவர்றது ரோகிணி கல்யாணத்துக்கு. அடுத்தது அவளுக்கு முடிக்கணுமே. எனக்கு இருக்கறது இனி ஒரு வருஷம்தான். நான் தலைவெட்டி போலி பாஸ்போர்ட்ல வந்தவனாக்கும். நான் வரும்போதே பாஸ்போர்ட்ல ஒரு வருஷம் முடிஞ்சு, இப்ப மூணு வருஷம் போயாச்சு. இனி ஒரு வருஷமே பாக்கி. இதை இப்ப புதுப்பிக்க அனுப்பினா, நான் ஜெயிலுக்குத்தான் போவேன். அதனாலதான் இருக்கிற காலத்தை வீணடிக்காம முடிஞ்சமட்டும் சம்பாதிக்கிற வழியைத் தேடறேன். இந்தவாரம் கூட எலக்டிரிகல் காண்ட்ராக்ட் ஒண்ணு எடுத்திருக்கேன். பெருசா ஒண்ணுமில்லே, இருபதுமாடி புதுக்கட்டிட மொட்டைமாடி பூரா அலங்காரத் தொடர் விளக்கு மாட்டற வேலை. இன்னைக்கு ராத்திரியோட முடியும். நாளைக்கு எப்படியும் ஐநூறு அறுநூறு ரியால் ஐயா கையிலே புரளும்”

“உன்னை பாரட்டறதா அலுத்துக்கறதா தெரியலை. இப்படி தொரத்தித் தொரத்தி உழைக்கிறியேப்பா”

இருபத்தியோராம் தளத்திலிருந்து ரியாத் நகரைப் பாக்கப் பிரமிப்பாக இருந்தது. பெருமிதமாகவும்தான்! மூச்சு வாங்க ஓடிக்கொண்டே இருக்கும் பன்னீரின் வாழ்வில் ஓய்வும் சரி ரம்மிய ரசிப்பும் சரி வெகு அபூர்வமே! இதுபோல மேலே நிலவு வலம் வரும் பரந்த வானத்தையோ, கீழே ஆயிரம் நட்சத்திர விளக்குகளோடு மினுங்கும் பிரமாண்ட நகரையோ ரசித்துப்பார்க்கும் அனுபவம் அவனுக்கே புதுசு. அடங்கா வீச்சில் மனசு ஆனந்தக் கூத்தாடுவதுதான் இந்த அனுபவங்களின் ஊற்றுக்கண்ணோ! அந்தக் காலத்தில் இருபுறமுமாய் இரு பிஞ்சுகைகளை இறுக்கப் பற்றித் தங்கைகளைச் சந்தைக்கோ, டெண்ட் கொட்டகைச் சினிமாவுக்கோ, கோயில்த் திருவிழாவுக்கோ அதிபத்திரமாக அழைத்துச் சென்று வீடு திரும்புகையில் வானத்தையே தொட்ட கர்வம் தலைதூக்குமே! அதை இன்று மறுபடி அனுபவிக்கிறான். மனசு ஒரு நிலையில் இல்லை. மொட்டை மாடியில் கிட்டதட்ட முன்னூறு விளக்குகள் பூட்டியும் இன்னும் களைப்படையவில்லை. அந்த அளவு மனசுள் வெதுவெது ஆனந்த அலைகளின் ஆர்ப்பரிப்பு.

“முஸ்தபா இன்னொருதரம் எல்லா ஜாயிண்டுகளையும் செக் பண்ணிடு. எங்கேயோ ஒரு இடத்திலே கன்சீலிங் டேப் லேசா இளகி இருந்தது”

“நானும் பார்த்தேன். நாளைக்கு எனக்கு இந்த பக்கம் டெலிவரி வேலை இருக்கு. காலையிலே வெளிச்சத்திலே பார்த்து சரி பண்றேன். இப்பப் போவோம்.. மணி ஒண்ணரை ஆகுது. சோதனைப் போலீஸ் போற நேரம். இப்படி வெளிவேலை பண்றதே இங்க குற்றம். அதுல உன்னோட அடையாள அட்டையை வேற புதுப்பிக்க அனுப்பியிருக்கே. துருக்கி நண்பர் முஸ்தபா புறப்பட்டார். கூடவே அவனும் கீழிறங்கி வந்தான். முஸ்தபா சாலையின் மறுபுறம் சென்று டாக்ஸி ஏறிக்கொண்டார். பன்னீர் பின்புறமாய் வந்தான். அங்கே மலைபோல் குவிந்திருந்த கட்டிட கழிவுகளின் அருகே நின்றிருந்த சைக்கிளை அணுகி ஸ்டாண்ட் நகர்த்தினான். மெள்ள உருட்டி முன்புறம் வந்து சாலையில் நின்று காலை வீசி ஏறும் முன்னர் யதேச்சையாக மேலே அண்ணாந்து கட்டிடம் பார்க்க மூக்கு நுனியை நீர் முத்து| தாக்கியது. ஒன்று அப்புறம் இன்னொன்று! மழை! அத்தி பூத்தாற்போல ஆண்டில் ஓரிருதரம் மட்டுமே. சொல்லாமல் கொள்ளாமல்வரும் அபூர்வ விருந்தாளி! பன்னீர் மனசில் பதட்டம் பரவியது. நாளை முஸ்தபா வந்து சீர்ப்படுத்தும் முன்னர் அரபி முதலாளி மின் இணைப்பு கொடுத்தால்? ஈரச்சுவரில் மின் கசிவு நிகழ்ந்தால்? இலேசாக இளகியிருந்த டேப்பும் அதன் இணைப்பு மூலையும் சொல்லி வைத்தாற்போல நினைவுக்கு வந்தது.

மறுகணம் பாய்ந்து ஓடினான். பெரிய டார்ச் லைட்டுடன் மூச்சு வாங்க சிரமப்பட்டு ஏறி இருபது மாடிகள் கடந்து மொட்டை மாடி போய்ச் சேர்ந்தபோது மழை நன்கு வலுத்திருந்தது. லிப்ட் அறையிலிருந்த டூல்ஸ்பாக்ஸ் துழாவி டேப் எடுத்தவன் மழையில் நனைந்தவாறு பின்புற சுவர் ஓரமாக எம்பித் தேட அந்த அரைகுறை இணைப்பு பிடிபட்டது. தனது ஞாபகத்திறன் குறித்து அவனுக்கே இலேசாக கர்வம். லிப்ட் ரூமுக்கு மறுபடி சென்று ஏணி எடுக்க சோம்பல்பட்டு அருகே கிடந்த காலி பெயிண்ட் டின்னை கவிழ்த்திப் போட்டு. இடதுகால் வைத்து ஏறி, சுவரை கையால் பற்றி. முழங்கை அகல மதிலில் முழுசாய் ஏறி நின்றான். மழைக்குக் குடையாக தன் தலையை கவிழ்த்து இணைப்பு நனையாமல் பார்த்து அதிகவனமாக டேப் சுற்றி முடித்தான்.

இணைப்பை மறுபடி சரிபார்த்த பின் கீழே இறங்க ஆயத்தமானான். குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் வலது காலை கீழ் நோக்கி தள்ளி பெயிண்ட் டின்னை துழாவ முயல்கையில், பளீரென்று.மின்னல்.. தொடர்ந்து க்ஷண இடைவெளியில் அதிமுழக்கமாக இடி! மறுகணம் நிலைதடுமாறி, இடதுபுறமாய் சரிந்தான் சரிந்தவன் பதட்டமாய், பரபரப்பாய் சுவர் பற்ற முயன்று, அதில் தோற்றுப்போய், வேகமாக.. அதிவேகமாக.. அதிஅதி வேகமாக இருபதுமாடிகளை மேலே மேலே தள்ளியவாறு, கீழ்நோக்கி பயணித்துத் தரையில் முளைத்திருந்த அந்த கட்டிடக்கழிவு குவியலை அறைந்து, அடைந்து, தழுவிய மறுகணமே உயிர் பிரிந்துபோனது. வெப்பமான ரத்தம் மழை நீரோடு இழைந்து குளிரத் துவங்கிற்று. காலம்காலமான வெயிலின் உக்கிரத்தில் நா வறண்டிருந்த செங்கல், மண் குவியல்கள் மழைநீரோடு குருதியையும் சேர்த்து உறிஞ்சிப் பருகின.

மத்திய கிழக்கு நாடுகளில் விண்தொட்டு முட்டும் அழகு கட்டிடங்களை உருவாக்கும் பணிகளில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான இந்திய, பாகிஸ்தானிய, எகிப்திய, துருக்கிய தொழிலாளிகள் பலியாகும் பரிதாபம் பலராலும் அறியப்படாத துர்பாக்யம்! அம்மாதிரி விபத்துகளின் மறுநாளில், அந்நாட்டு பிரதான நாளிதழ்களின் இரண்டாம் பக்க ஓரத்தில், ‘இருபது/முப்பது தள கட்டிடப்பணியில் உயரத்திலிருந்து சரிந்து விழுந்து இந்திய/எகிப்திய வாலிபர் மரணம்’ என்கிற ரீதியாக, ஊர் பேர் விவரத்துடன் கூடிய செய்தி வெளியீடு சகஜமான நிகழ்வு. ஆனால் ஆசைத் தங்கையின் திருமண அழைப்பிலேயே தன் பெயரைத் தொலைத்திருந்த துரதிருஷ்டசாலி பன்னீர்செல்வம், விடிய விடியப் பெய்த மழையினால் ஏற்பட்ட மண்குவியல் சரிவில் மூடப்பட்டு எந்த தடயமும் இன்றிக் காணாமல் போயிருக்கவே, மறுநாள் பத்திரிகைகளிலும் தன் பெயரை முழுசாய் தொலைத்திருந்தான்.

– ஜூலை 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *