பெப்பரவரி- 4

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 4,295 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நமக்குச் சுதந்திர தினமாமே! சுதந்திரமோ இல்லையோ ஆனால் விரிவுரை வகுப்பு எதுவுமில்லாமல் எமக்கு விடுமுறை என்பது மட்டும் உண்மை – இனிப்பான உண்மை.

முதல் நாள் இரவே அடுத்தநாளை எப்படிக் கழிப்பது என்ற கேள்வி நம்மிடையே எழுந்து விட்டது.

“நான் கறுத்தக் கொடி கட்டப் போகிறேன்” என்றான் நண்பன் தில்லைநாதன்

“போடா மடையா! இது யாழ்ப்பாணமல்ல பேராதனைச் சர்வகலாசாலை! தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்துக்காக மாணவர்கள் ஒன்றாகப் போராடும் போது நீ கறுத்தக் கொடி கரடி விடப் பார்க்கிறாயா? அனாவசியமாக ஏன் ஆத்திரத்தைச் சம்பாதித் துக் கொள்ள வேண்டும்?” என்று சீறினான் சீவநாயகம்.

அப்போ நாளைப் பகல் முழுதும் அறையைப் பூட்டிக் கொண்டு நித்திரை கொள்ளப் போகிறேன். என் துக்கத்தைக் காட்டிக் கொள்ள” என்றான் திரும்பவும் தில்லைநாதன்.

“எந்த நாளுந்தான் நீ தூங்குகிறாயே! அதிலென்ன புதுமை யும் துக்கமும்? நாளைக்கு நீ ஏதாவது வேலை செய்தால் தான் அது புதுமையாகவும் துக்கமாகவும் இருக்கும் என்று சொல்லி விட்டுச் சிரித்தான் சீவநாயகம்.

ஆனால் எனக்குச் சிரிப்பும் வரவில்லை , துக்கமும் வர வில்லை. இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாம் அக்கறைப்படும் ஆள் நானல்ல.

சந்தர்ப்பம் எப்படி இருக்கிறதோ அப்படி நடந்து கொள்ளும் வழக்கம் என்னுடையது. திட்டமிட்டு வாழ்வது எல்லாம் வேடிக் கையான விஷயம் எனக்கு. எனவே அவர்களின் பேச்சில் நான்
கவலைப்படவில்லை. அன்று வாசிகசாலையிருந்து எடுத்து வந்த மாபாசனின் முன்நூறு பக்க வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் படித்த முதல் பத்துப் பக்கத்தின் நினைவுதான் என்மனதை முற்றுகை இட்டுக்கொண்டிருந்தது. நாளை எப்படியாகத்தான் இருந்தால் என்ன? எனக்குத்தான் படித்துச் சுவைக்க இன்னும் இருநூற்றுத் தொண்ணூறு பக்கங்கள் இருக்கின்றனவே!

நான் மௌனமாக இருந்தேன். முன்பே அவர்களின் கொள் கைகளும் கோட்பாடுகளும் எனக்கு ஒத்துவராது என்று திடமாக வும் சொல்லி விட்டிருந்தேன்.

நண்பர்கள் விடவில்லை. என்னை ஒரு துரோகி என்றனர். உலகத்து மண்ணில் வாழாமல் அந்தரத்தில் வெறும் எண்ணங் களின் வெறுமையில் வாழும் அசடு என்றார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொள்ளும ஓணான் என்றார்கள். நான் பொறுத்துக் கொண்டேன். நாளை போன பின் அவர்கள் நல்லாக வந்து விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அத்துடன் அவர் களின் நன் மதிப்பும் பாராட்டும் எனக்கு வேண்டியிருக்கவில்லை. அவர்களின் சுகதுக்கங்களில் நான் சம்பந்தப்பட விரும்பவில்லை. அவர்கள் அழுதால் என்ன? அடிபட்டால் என்ன? எனக்கேன் கவலை. நான் ஓணான் போல் என்ன, ஒட்டகம் போல் என்ன, எப்படியாவது வாழ்வேன். ஏதோ ஒரு வகையாய் வாழ்ந்து விட்டால் போதாதா? என் வேலையை நாளை நான் கவனித்துக் கொள்ளுவேன். எனக்காக வேலையில் மாபாசன் காத்துக் கிடக் கிறான். துக்கமாவது சுதந்திரமாவது ?

பெப்பரவரி – 4 விடிந்துவிட்டது காலை ஒன்பது மணி

கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் பட்டாளத்து வீரர்கள் அணுவகுத்து வந்து கொண்டிருப்பர். கவர்ணர் ஜெனரல் அவர் களின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். பாடசாலை மாணவ மாணவிகள் விளையாடி வேடிக்கை செய்வர். கும்மாளம்! கொண் டாட்டம்!

அது கொழும்பில்! ஆனால் யாழ்ப்பாணத்தில்?

கடைகள் பூட்டப்பட்டு கறுத்தக் கொடிகள் கட்டப்பட்டிருக் கும். போக்குவரத்து குறைந்து மரண அமைதி எங்கும் நிலவி நிற் கும். துக்கம் அனுட்டிப்பவர் பலர் – போலிக்காக சிலர்! என்றாலும் பொதுப்படையாகத் துக்கந்தான்.

வாழ்க்கையின் வினோதம் அது தானா? ஒருவர் இன்பத்தில் மற்றவர் துன்பம் அடைவது இயற்கையா? சீ! அதெல்லாம் எனக்கெதற்கு கையில் இருந்த புத்தக ஒற்றைகளுக்குள் கண்களை புதைத்துக்கொண்டேன் யார் என்ன பாடுபட்டாலும் எனக் கென்ன?

‘கனகே! கனகே!”

எதிர் அறை நண்பன் வீரசேகராதான் என்னை அப்படிக் கூப்பிட்டான். நாசமாய்ப்போக; பூஜை அறைக்குள் கரடி மாதிரி! மனமில்லாமல் வெளியே எட்டிப்பார்த்த வண்ணம் ”என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டேன்.

“வா பூந்தோட்டத்துக்குப் போவோம். ஒஸ்டின், பீட்டர், குலே, விக்கிரமா, திலக், குய்ண்ட ஸ் எல்லோரும் போகிறோம். நீயும் வா ‘பைலா’ப் போட்டு குஷாலாக நேரத்தைப் போக்கிவிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு வந்துவிடலாம். இன்று தான் லீவாச்சே!” என்று அவசர அவசரமாக கால் சட்டை பட்டன்களைப் போட்ட வண்ணம் அடுக்கினான் அவன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே! மாபாசன் மேசையில் போய் விழுந்தான். அவசர அவசரமாக பெட்டிக் குள்ளிருந்த உடைகளைத் தேடத் தொடங்கின என் கைகள். முஸ்பாத்தி என்றால் எனக்கு உயிர்தான் அதற்கு முன்னே மாபா சானாலும் எதிர்த்து நிற்க முடியவில்லை.

சில வினாடிகளுக்குள் தொப்பி ஒன்றைத் தலையில் வேடிக் கையாய் மாட்டிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் ஆட்டம் போட்ட வண்ணம் பூந்தோட்டத்துக்குப் புறப்பட்ட என்னை தில்லைநாதனும் சீவநாயகமும் ஆத்திரத்தோடு பார்த்துக் கொண் டார்கள். அதற்குப் பதிலாக முகத்தைக் கோணலாக்கி கையை வளைத்து உடம்பை நெளித்து ஆடிய வண்ணம், ”வாவேன் மச்சான் ‘கார்ட்ன்’ஸுக்குப் போவோம்” என்று வேண்டுமென்றே கேட்டுக் கொண்டேன். அவர்களின் கோபம் எனக்கு இன்பத்தை கொடுத்தது. வாழத்தெரியாத மடையன்கள்! கிடைப்பதை அனுபவித்து விட்டுப் போவதற்குப் பதிலாக துக்கமனுஷ்டித்தல் கொடி கட்டல் என்ற கொள்கை எல்லாம் எதற்கு. சுத்தப் பைத்தியங்கள்!

பூந்தோட்டத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது.

நீண்டு வளைந்து சாலை ஓரம் – ஓங்கி வளர்ந்திருந்த பாம் மரங்களின் பக்கத்திலே கூட்டம் போட்டு நாம் ஆடிக் கொண்டி ருக்கும் போது நான்கு ‘சாரி’யுடுத்த பெண்கள் நம்மைத் தாண்டி போனார்கள். நாம் என்ன கலாச்சாரத் தூதுவர்களா அவர்களுக்கு மரியாதை செய்து ஒதுங்கி நிற்க? வகுப்பில் விரிவுரையாளருக்கு முன்னாலேயே வம்பு செய்யும் மாணவர்களாகிய நமக்கும் பண்பாட்டுக்கும் இடையே ரொம்பத் தூரம்தான்.

“விஸ் – வீஸ்!” என்ற விசில் அடித்தான் ஒருவன்

“ரத்துப்பாட்ட, நில்பாட்ட மனிக்ககே சாரி” என்று பாடினான் இன்னொருவன்.

“ஹ்ஹ்ஹோ!” என்று கூடிச் சிரித்தனர் மற்றவர்கள். விளைவும் விளையாட்டாகவே இருந்தது. நீலச்சாரி நாணிக் கோணியது. சிவத்தச் சாரி நம்மைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தது.

பச்சை, முகத்தைப் பொத்திக்கொண்டு குப்புறக் குப்புற விழுந்தது.

வெள்ளை – ஆமாம் சுத்த வெள்ளைச் சாரி தலையைக் குனிந்து கொண்டு தார்றோட்டை அளந்தது?

அது போதாதா?

உற்சாகம் எங்களுக்குப் பொங்கிவிட்டது. அவர்களைத் தொடர வேண்டுமென்ற பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தனர் சிலர். அதில் நானும் ஒருவன். ஆனால், உற்சாகம் இருந்தாலும்

அந்த அளவுக்கு உசார் எல்லோரிடமும் இருக்கவில்லை. ஆக நான் உள்பட நான்கே நான்கே நான்கு பேர் மட்டும் தயாராய் நின்றோம். அடுத்த நிமிடம் இடதுசாரி முன்னணிக் கட்சி ஒன்றை நாம் நால்வரும் அமைத்துக் கொண்டு அந்த நான்கு பெண்களை யும் பின் தொடரத் தொடங்கினோம்.

ஆரம்பம் வழக்கம் போலத்தான்.

நால்வருக்கும் துணையாக ‘கிட்பாக்’ ஒன்றைக் கஷ்டப் பட்டுக் காவிக்கொண்டு பின்னால் இழுபட்டுக் கொண்டு சென்ற அந்தச் சின்னப்பையனுடன்தான் முதலில் கதையை ஆரம்பித் தோம். பாஷை சிங்களம் தான். பெண்கள் அழகாக உடுத்திருந் தாலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் போலத் தெரியவில்லை. ஏதோ சுயபாஷை ஆசிரியைகள் போலும்! அதற்காக நான்கூட கவலைப் படவில்லை. எனக்குத்தான் சிங்களம் பேசச் செவ்வையாகத் தெரியுமே! அது மட்டுமா? ‘சிங்களச் சட்டத்துக்கு ஜே’ பாட வேண்டியிருந்தாலும் அந்த நேரத்தில் ஆயிரம் தடவை யாரும் கேட்காமலேயே போட்டிருப்பேன். கொள்கையும் கோட்பாடும் நமக்கெதற்கு. சந்தர்ப்பம் தங்கம் போன்றது. போனால் கிட்டாது பொழுது பட்டால் வருமோ தெரியாது.

“தம்பீ! பைக்குள் ஏதாவது சாப்பிடக் கூடியதாய் இருக்குமா?” என்று நம்மில் ஒருவன் அந்தத் தம்பியிடம் மெல்லக் கதைவிட்டான்.

தம்பி மட்டும் சிரிக்கவில்லை. அக்காமாரும் சேர்ந்து சிரித்தனர்.

அடுத்தவனுக்கு அது உற்சாகத்தை ஊட்டி விட்டது. ”எங்கிருந்து வாரீர்கள்?” என்று தைரியமாக அக்காமாரையே கேட்டுக் கொண்டான்.

எல்லோரும் சிரித்தனர். ஆனால் நீலச்சாரிதான் பதில் சொல் லிற்று. ‘கம்பொளையிலிருந்து. ஆனால் உங்களுக்கேன் அதெல் லாம்?” என்று கேள்வி ஒன்றையும் கூடவே போட்டது.

அதையெல்லாம் சொல்லியா தெரிவிக்க வேண்டும் ? எங்கள் பதில் வேறொன்றாகவே இருந்தது. ”நாம் கூடக் கம்பொளை யிலிருந்து தான்” என்றான் ஒருவன். நல்ல காலமாக அவனுக்குக் கம்பளை தெரிந்திருந்தது. தொடர்ந்து கம்பொளையைப் பற்றிக் கதைத்துக் கொள்ள எங்களுக்கு அது உதவியது.

பிறகு நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். சர்வகலா சாலை என்றால் அதற்கு ஒரு மதிப்புத்தான் போங்கள்! அக்காமார் சும்மா அசந்து போனார்கள் !

நேரம் வளர்ந்தது போல் உறவும் வளர்ந்துவிட்டது. சில மணி நேரத்துக்குள் ஒரு பெரிய மரத்தின் கீழிருந்து அவர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டோம். ஏதோ வருடக்கணக்காய் பழகியவர்கள் போல் இருந்தது நாம் நடந்துகொண்ட விதம்!

சாப்பிடும்போது தான் நாம் ஒவ்வொருவரும் மனதுக்குள் ளேயே ‘செலக்ஷன்’ நடத்திக் கொண்டோம்.

சிவப்புச் சாரிதான் அதில் அழகு ராணி! விழிகளின் நோக்கும் இதழ்களின் அசைவும் ஒவ்வொரு நிமிடமும் அதைச் சொல்லிக் கொண்டன. ஆனால் அதற்கு நான் போட்டி போடவில்லை! நான் விட்டுக் கொடுத்து விட்டேன். எனக்கு ஏதோ தாராள மனப்பான்மை அப்படி ஒன்றும் இருக்கவில்லை. நான் வேண்டா ததற்கு காரணம் அவளின் வெறும் பொம்மை அழகேதான். சுவை என்னைப் பொறுத்தவரை விசித்திரமானதுதான்!

நீலச் சாரி! அது ஒரு தினுசு! கதைப்பதற்கு அதைப்போல யாராலும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அந்தச் சிவப்பு நல்லது தான். நான் இரண்டொரு சிங்களம் பேசிவிட்டால் போதும். அவள் மீதியைப் பார்த்துக் கொள்வாள். என்றாலும் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை!

பச்சைச் சாரி! அம்மாடியோவ்! நெசவுப் பள்ளிக்கூடத்தில் படிப்பதை விட்டுவிட்டு எங்கோ மருதானை முடுக்கொன்றில் வாழவேண்டியவள் அவள். மாபாசனின் றோட்டோரக் காதலி களைத் தான் அவள் எனக்கு நினைவூட்டினாள். அவளின் கன்னத் தில் படர்ந்திருந்த அந்தத் தேமல்? பார்வையும் அங்க அசைப்பும் எங்கெல்லாமோ என்னை எடுத்துச் சென்றாலும் அந்தத் தேமல் என்னைப் பயமுறுத்தவே செய்தது. விட்டுவிட்டேன்.

வெள்ளைச் சாரி! உள்ளே இருந்த உள்ளத்தின் தூய்மையை எடுத்துக் காட்டியது அந்த உடுப்பே. சாடையான கருமையான நிறம். நால்வருக்குள்ளும் குறைவாகப் பேசியவள் அவள் தான். சாந்தத்தின் சாயல் அவளின் விழிகளில் படர்ந்திருந்ததை முதல் பார்வையிலேயே கண்டு கொண்டேன். என்றாலும் அப்படியான வேளைகளில் சாந்தத்தையும் அமைதியையும் தேடக் கூடாது தான். அதுதான் பச்சைச்சாரியையே சுற்றி வந்தனர் நண்பர்களில் இருவர். ஆனால் எனக்கு ஏனோ இவளையே தான் பிடித்துக் கொண்டது.

சாப்பிடும் போதே அவளைச் சாடி உட்கார்ந்து கொண் டேன். பச்சைச்சாரிக்காரி என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டாள். ஆனால் அந்த தேமல்தான் என்னை பயமுறுத் தியது. அவளைப் பார்க்காதவன் போலவே அருகிலிருந்தவளுடன் கதையை ஆரம்பித்தேன்.

“உங்கள் பெயர் என்ன? ”

“தயாவதி” – மெல்லச் சொல்லிவிட்டு வாழைப்பழத் தோலை உரிப்பவள் போல் பாவனை செய்து கொண்டாள் அவள். அத்துடன் என் பெயரைத் திருப்பிக் கேட்குமளவிற்கு இன்னும் அவளுக்குத் தைரியமும் வரவில்லை .

“நீங்கள் எங்கு படிப்பிக்கிறீர்கள்?” நான் தொடர்ந்தேன்.

“வட்டாப்பொள நெசவுப் பாடசாலையில்”

என்றாலும் எனக்கும் அவளுக்குமிடையே ஏற்பட்ட உறவு இன்னும் நெருக்கமாக வளரவில்லை. அவள் இன்னும் வெட்கப் பட்டுக் கொண்டாள். அதற்குள் ”படம் பார்க்கப்போவோமா?” என்று நண்பன் ஒருவன் திட்டம் ஒன்றைப் போட்டான்.

ஆனால் காசு? எல்லோர் ‘பேர்சு’களும் மெலிந்தே இருந்தன.

என்றாலும் பச்சைச்சாரிக்காரி அந்தத் திட்டத்தைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளத் தவறவில்லை. அத்துடன் சிவப்புச்சாரி எங் களுக்கு டிக்கட் வாங்கித் தருவதாகவும் வாக்களித்தாள். ஆனால் அவர்களின் கஷ்டகாலத்துக்கு நேரந்தான் இல்லை, அப்போது இரண்டு மணிக்கு மேலாகிவிட்டிருந்தது. கண்டிக்குப் போகுமுன் ‘மெட்னிஷோ’ ஆரம்பித்துவிடும். அத்துடன் ஆறு மணிக்கு முன்

அவர்கள் வீடு திரும்பிவிட வேண்டியும் இருந்தது.

அந்தச் செய்தி எனக்குத்தான் சந்தோஷத்தை அளித்தது. அங்கேயே இருந்து கொண்டு அவளுடன் ஆண்டுக்கணக்காய் கதைத்துக் கொண்டிருக்க வேண்டும் போல் என் மனம் துடித்தது. மரங்களில் இருந்து உலர்ந்து விழுந்த சருகு இலைகளின் சல சலப்பு, மெல்லத்தவழந்து வந்து தயாவதியின் கன்னத்து மயிரைத் தடவிச் செல்லும் அந்தத் தென்றல் காற்றின் குளுகுளுப்பு, மத்தியான வேளையில் அமைதி, அந்த அமைதியைக் குலைக்காம லேயே அங்குமிங்கும் இருந்து மோன இசை எழுப்பிய பறவை களின் சத்தம் எல்லாம் என் இதயத்திலே இன்ப அலைகளை எழுப்பிவிட்டன. என்றாலும் இரண்டொரு மணித்தியாலங்கள் சென்று எல்லோரும் மெல்ல உலவியவண்ணம் பூங்காவின் இடது கோடியிலிருந்த அந்த மேட்டு நிலத்தின் மறைவுக்குச் சென்ற பின்புதான் அந்த இன்ப அலைகளின் கொந்தளிப்பை என்னால் உணர முடிந்தது.

ஜோடி ஜோடியாய் நாம் ஒவ்வொரு மூலையிலும் உட் கார்ந்து கொண்டோம். என்னைப்போலவே மற்றவர்களும் தங்கள் தங்கள் ஜோடிகளைத் தேடிக்கொண்டுவிட்டனர். இனி எல்லாம் இரகசியந்தான். இத்தனை நேரம் நிலவிய பொதுப்பேச்சு எப் போதோ நின்று விட்டது.

என் பக்கத்தில் இருந்த தயாவதியின் கைகளை எடுத்து நான் பிசைந்து கொண்டேன். அவள் திடீர் என்று தத்துவம் பேசத் தொடங்கிவிட்டாள்! பாசம் சிலரிடம் சோகத்தைத்தான் கிளறும் போலும்!

“வாழ்க்கையே ஒரு வேடிக்கைதான்”. என்றாள் அவள்! “ஏன்?” என்று நான் கேட்டேன்.

“நேற்று நாம் எங்கேயோ இருந்தோம். இன்று இங்கே எத்தனையோ நாட்கள் பழகியவர்கள் போல் நடந்து கொள் கிறோம். ஆனால் நாளை?”

நாளை! அது எனக்கு அவ்வளவு பிடித்துக்கொள்ளவில்லை. நான் ஒரு சந்தர்ப்பவாதி. ஒப்புக்கொள்கிறேன். நேற்று நடந்தது நேற்றோடு போகட்டும். நாளை நடப்பதை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். இன்று நடப்பது எப்படி இருக்கிறதோ அப்படியே நாமும் அமைந்து கொள்வது தான் எனக்குபிடித்தம். அதனால் தான் கொள்கை கோட்பாடு எதுவும் எனக்கு பிடிப்பதில்லை இப்போது இவன் இப்பொன்னான நேரத்தை நாளை நடக்கப் போவதைப் பற்றிய நினைவில் செலவழிக்கப் பார்க்கிறாள்! பைத்தியம்!

தயா! ஆறுமணிக்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருக்கின்றன. அதற்குள் எத்தனையோ செய்துவிடலாம் நாளை யைப் பற்றி நாமேன் கவலைப்பட வேண்டும்? என்று நான் பதில் சொல்லிக் கொண்டது அதனால் தான்.

“இன்று நல்ல நாள் ! சுதந்திர தினம். நமக்கு நல்ல தினந் தான்” என்று அடுத்து அவள் பேச்சைத் திருப்பியது தனது மனதிலே மிதந்த சோகத்தை ஆழ்த்தும் எண்ணத்தோடுதான் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எப்படியாய் இருப்பினும் எனக்கு அது சந்தேகந்தான். நாளையைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று நடப்பதைப் பார்த்துக்கொள்ளலாம் அல்லவா?

“ஆமாம். தயா! சுதந்திர தினம் என்வாழ்வில் ஓர் இன்ப தினம் தான்” என்று பதிலிறுத்துக் கொண்ட என் கண்முன்னே யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கடையடைப்பும் கறுப்புக் கொடி ஊர்வலமும் விடுதியில் துக்கம் அனுஷ்டிக்கும் தில்லை நாதனும் சீவநாயகமும் பவனி சென்றார்கள். பாவம் எல்லாம் பைத்தியங் கள்! கொள்கை ஒன்றுக்காக வாழ்ந்தால் இப்படி அருகில் ஒரு தயாவதியை வைத்துக்கொண்டு வாழ்க்கையைச் சுவைக்க முடியுமா?

எஞ்சிய நேரத்தை அவளோடு சேட்டை செய்து கழித்த நான் வாழ்க்கையின் சுவைமிக்க பகுதிகளைத் தொட்டு விட்டேன் என்று பெருமிதப்பட்டுக் கொண்டேன். ஆனால் உண்மையான வாழ் வின் அர்த்தத்தையும் சுவையையும் அறிந்தது ஆறுமணியான பின் வெளியே வந்து பேராதனைச் சந்திக் கடை ஒன்றில் தேனீர் அருந்தும் போதுதான்.

மேசைக்கடியில் நம் கால்கள் நான்கும் ஒன்றை ஒன்று தொட்டுத் தடவிப் பிசைந்து கொள்ளும் வேளையில் அவள் தழுதழுத்த குரலில் என் விலாசத்தை சோகம் கலந்த ஆவலோடு கேட்டுக் கொண்டாள். ஆனால் ”கனகரத்தினம்” என்று நான் என் பெயரை சொல்ல முன்பே வாயடைத்துப் போய் கண்ணீர்விட்டு ஏனோ அவள் அழத் தொடங்கிவிட்டாள்!

காரணம்? பிறகு தான் புரிந்தது

நான் அவளைக் காதலிக்கவில்லை. அவளைத் தவிர அங்குள்ள வேறு யாருமே காதலைப்பற்றி கனவுகூடக் காணவில்லை! மாறாக இது ஒரு வித பொழுதுபோக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவளின் உள்ளம் மட்டும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. சில மணி நேரந்தான் என்னுடன் அவள் பழகிக் கொண்டாலும் அந்தச் சில மணிநேரத்துக்குள் அவளுக்கு என் மேல் அளவில்லாத அன்பு ஏற்பட்டுவிட்டது. அந்த அன்பை அடிப்படையாக வைத்து என்னைக் காதலித்து கல்யாணம் செய்ய வும் அவள் கனவு கண்டிருக்கிறாள்! ஆனால் அந்த கனவை எல்லாம் உடைந்து விட்டது ‘கனகரத்தினம்’ என்ற என் பெயர்!

“கனகரத்தினமா? அப்போ நீங்க ஒரு தமிழனா?” என்று கண்ணீர் ஆறாகப் பெருக அவள் கேட்ட போது எனக்குத் தில்லைநாதனோ சீவநாயகமோ அல்லது கடையடைப்போ கறுத்த கொடியோ சொல்ல முடியாத கருத்தை என் இருதயத்துக்குள் ஈட்டி போல் புகுத்தி விட்டது.

சுதந்திரம் நம் நாட்டில் ஒரே ஒரு இனத்தின் சொத்தாக மட்டும் ஆகிவிடவில்லை இரண்டு இனங்களுக்கிடையே தீராத பகையையும் வெறுப்பையும் வளர்த்து ஒன்றை ஒன்று ஒதுக்கும் அளவுக்கும் அது செய்து விட்டது! அதன் காரணமாய் சாதி, சமயம், பாஷை என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லாத காதல் கோட்டைக்குள்ளேயே கையை வைக்கும் அளவுக்கு இலங்கையில் இனத் துவேஷம் வளர்ந்து விட்டது. இனி அதற்குக் கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும் குரூரமான செயலாகத் தெரியாது!

அதற்குப் பிறகு தயாவதி என்னுடன் பேசவில்லை. பேச வேண்டியதை கண்ணீராக அழுது வடித்தாள்! அதைப் பார்த்த அந்தப் பச்சைச் சாரிக்காரி சிரித்தால் “தமிழன் என்றால் அழ வேண்டுமா?” என்று அவள் ஆச்சரியப்பட்டாள். தயாவதியின் போக்கு அவளுக்குக் கொஞ்சமும் புரியவில்லை. அவளுக்கு வேண்டியிருந்தது சில மணிநேரப் பொழுது போக்குத் தான் அதற்கு சிங்களமோ தமிழோ தடையாகப் போவதில்லை. ஆனால் தயாவதி விரும்பி நீடித்த பரஸ்பர ஒற்றுமைக்கு இரு இனத்தவர் களுக்கிடையே இனி இலங்கையில் இடமுண்டா?

உண்டு திகதி மாறினால்…பெப்பரவரி -4க்குப் பின் வேறொன்று வந்தால்!

அந்த நன்னாளின் நினைவிலே என்னை மறந்து விடுதி திரும்பிய நான் கொள்கை ஒன்றைக் கொண்ட புதிய மனிதனாகவே மாறிவிட்டேன்.!

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *