புனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 6,018 
 

ஏசி அறை! வெயிட்டிங்க் ஹாலில் நண்பர்கள் பெருமாளும், சரவணனும், தொழிலதிபர் சிவக்கொழுந்தை காண காத்திருந்தனர்.இருவருக்கும், ஏறக்குறைய வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும், செகரட்டரி இவர்களை இன்னும் ஐந்து நிமிடத்தில் கூப்பிடுவதாக சொல்லியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இந்த அறையின் அலங்காரங்களும், தோரணையும் பெரும் பிரமிப்பை உண்டாக்கியிருந்தன.

மெல்லிய நடுக்கம் கூட உண்டாயிற்று! இங்கிருக்கும் சூழ்நிலையில், நாம் வந்த காரியம் நடக்குமா? இருவருக்கும் அதுவே யோசனையாக் இருந்தது. செகரட்டரி உள்ளே அழைத்தார்.

வெளியில் இருந்ததை விட உள் அறை மிகபிரமாதமாக இருந்தது. உட்கார்ந்திருப்பவர் சிவகொழுந்தாகத்தான் இருக்கவேண்டும், ஓரளவு இளமையுடன் காணப்பட்டார், அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலியும் மேசையும் பணக்காரத்தனமாக இருந்தது. இந்த சொகுசான அமைப்பில் மயங்கிய இருவரும் என்ன பேசுவது என மறந்து நின்று கொண்டிருந்தனர்.

க்கும்… என கனைத்தவாறு நீங்கள் எதற்காக என்னை பார்க்க வந்துள்ளீர்கள்?

மெல்லிய திணறலுடன் என் பெயர் சரவணன், இவர் என்னுடைய நண்பர் பெருமாள், நாங்கள் இந்த மாதம் 31ம் தேதி அன்னைக்கு நம்மோட ஊரான மயிலாடுதுறையில படிச்ச பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என உள்ளோம், அதாவது ஆறாம் வகுப்பிலிருந்து படித்தவர்கள் அனைவரையும் அழைத்துள்ளோம். நீங்கள் கூட அங்குதான் படித்தீர்கள்.. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை, இருந்தாலும் எங்கள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரமுடியுமா? என கேட்கத்தான் வந்தோம், ஒரு சில நிமிடங்கள் அமைதி…பின் பெருஞ்சிரிப்புடன் எழுந்தார் சிவகொழுந்து சரவணா பள்ளியில் படிக்கும் போது பெரிய பேச்சாளராக இருந்தாயே,இப்போது தடுமாறரயியே,என்று நெருங்கி வந்து அவர்களை அணைத்துகொண்டார். ஏண்டா பெருமாள் உன்னை கண்டா நாங்க எல்லாம் பயந்துக்குவோமே! நீ பெரிய ரவுடியாச்சே என்று செல்லமாக கூறினார்.

நம்ம டீமுல பாக்கி மூணு பேர் எங்க?

அவங்க நம்ம பழைய வாத்தியார்களை கூப்பிடற வேலைய பாக்குறாங்க, என்றனர்.

உங்களை உள்ளே வரும்போதே தெரிஞ்சுகிட்டேன், என்னதான் பண்றீங்கன்னு பார்த்தேன்..என்ன சாப்பிடுறீங்க?

பஸ்ஸரை அழுத்தி உள்ளே வந்த காரியதரிசியிடம், மூணு ஜூஸ் கொண்டுவர சொல்லும்படி கூறினார்.

இது நாம முதல்ல சந்திச்சதுக்கு என்னோட ட்ரிட் என்றார். சரவணனுக்கும்,பெருமாளுக்கும், கண்ணீர் வந்துவிட்டது, நீ எங்களை அடையாளம் தெரிஞ்சுக்க்றியோ அப்படீன்னு ரொம்ப கவலைப் பட்டோம்..

மூவரும் பழைய கதைகளை அளவளாவினர். ஜூஸ் வந்தது மூவரும் குடித்தபின் மீண்டும் காரியதரிசியை கூப்பிட்டு வரும் 31ம் தேதி தனக்கு என்ன புரோகிராம் என கேட்டதற்கு, நீங்கள் அன்று சிங்கப்பூர் கிளம்புகிறீர்கள்,

ம்..யோசித்தவர் சரி நீங்கள் கிளம்புங்கள் நான் முடிந்தவரை வர முயற்சிக்கிறேன், என்றவர், காரியதரிசியிடம் காதில் ஏதோ சொன்னார். அவரும் இவர்களை பணிவுடன் வெளியே அழைத்துவந்து நீங்கள் முதலில் எங்கள் காண்டீனில் சாப்பிடுங்கள், அதற்குள் உங்கள் விழாவுக்கு ரூ.10,000 தரச்சொல்லியுள்ளார் எங்கள் எம்.டி, அதை ரெடிபண்ணிவிடுகிறோம், என்றவர், ஒருவரை அழைத்து காண்டீனுக்கு அழைத்துச்செல்லும்படி கூறினார்.

31ம் தேதி..அந்த அரசுப்பள்ளி பழைய கால கட்டமென்றாலும் அன்று புதுப்பொலிவுடன் விளங்கியது, கட்டடங்கள் முழுவதும் கலர் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, இவர்கள் இங்கு படித்தவர்களா என சந்தேகிக்கும் வண்ணம் தோற்றங்கள் மாறிப்போய் பலரும் குடும்பம் குடும்பமாய் வந்தனர். பள்ளியைசுற்றி பெரும்பாலும் கிராமங்களே அதிகம் இருந்ததால், விழாவிற்கு வந்த பலரும்,சுற்று வட்டாரத்திலிருந்தே வந்தனர், வேலைக்கு செல்பவர்களும், அரசங்கத்தில் உயர்ந்த பதவியில் உள்ள ஒரு சிலர் கூட வந்திருந்தனர். அவரவர்கள் தன்னை அடையாளம் சொல்லி மற்றவர்களுடன் கூடி சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தனர். அன்றைய கால கட்டத்தில் சிவக்கொழுந்துவுடன் அறுவர் அணி என செல்லமாக அழைக்கப்பட்ட அணியில் சிவக்கொழுந்துவைத்தவிர பெருமாள், சரவணன், அல்லிமுத்து, குருசாமி, அம்சா, இவர்கள் ஐவரும், ஓடியாடிவருபவர்களை வரவேற்று, உட்கார வைத்துக்கொண்டிருந்தனர். இந்த விழாவே இந்த ஐவராலுமே நடத்தப்படுகிறது.விழா பெரிய மைதானத்தில் நடைபெறுவதால் அத்தனை கூட்டமும் அமர இடம் இருந்தது. அது போக அவ்வூர் மக்கள் அனைவரும் விழாவை வேடிக்கை பார்க்கவும் கூடி இருந்தனர்.

விழா தொடங்க இருந்த நிலையில் ஒரு கார் வந்து நின்றது, அதிலிருந்து சிவக்கொழுந்து இறங்கினார், மிக சாதாரண உடையில் இருந்தார். பெருமாளும், சரவணனும், சிவக்கொழுந்துவைப்பற்றி ஆகா..ஓகோ வென ஊர்க்காரர்களிடம் சொல்லியிருந்தனர், ஆனால் மிக சாதாரணமாக வந்த அவரைப் பார்த்து, சிறிது ஏமாற்றமுற்றாலும், மற்ற மூவரையும் அழைத்துக்கொண்டு சிவக்கொழுந்துவை வரவேற்க ஓடி வந்தனர்.

மேடைக்கு வரும்படி அழைத்த அழைப்பை பணிவுடன் மறுத்த சிவக்கொழுந்து,கீழேயே உட்கார்ந்துகொள்வதாகவும், விழா கடைசியில் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்.

அனைவரும் பேசி முடித்து, அனைத்து ஆசிரிய ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி, விழா முடிவுறும் கட்டத்தில் சிவக்கொழுந்தை பேசச்சொல்லி அவர் நண்பர்கள் ஐவர் அவரை மேடைக்கு அழைத்துச்சென்றனர், சிவக்கொழுந்து சிறிது பதட்டத்துடன், உணர்ச்சிவசப்பட்டும் இருந்தார். மைக்கிற்கு முன்னால் வந்து அமைதியாக நின்றார். கூட்டத்தில் அனைவரின் பார்வையும் அவர் மீதே இருந்தது, மிகப்பெரிய தொழிலதிபர் இந்தப்பள்ளிக்கு வந்துள்ளார் என கேள்விப்பட்டு உள்ளூர் பத்திரிக்கை நிருபர்களும் இந்த விழாவிற்கு வந்திருந்தனர்.

சிவக்கொழுந்துவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது, ஒரு நிமிடம் நிதானித்தவர், இங்கு வந்துள்ளவர்கள் இந்த பள்ளியில் படித்தவர்கள் என்ற பெருமிதத்துடன் வந்திருப்பீர்கள், ஆனால் நான் மட்டுமே இந்த பள்ளியின் குற்றவாளியாக வந்திருக்கிறேன், இந்த குற்றத்தை உங்களுக்கு வாய் திறந்து சொல்வதற்கு முன்னால், உங்களிடம் நான் செய்த குற்றத்திற்கு மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தலைகுனிந்து வணக்கம் சொன்னார்.கூடியிருந்த கூட்டம் எதற்கு மன்னிப்பு என நினைத்து நெகிழ்ந்திருந்தது.

“கமலா” டீச்சரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்,ஒரு நாள் வகுப்பில் என்னை கை நீட்டி அடித்துவிட்டார்கள் என்ற வெறியில் ஒரு நாள் ராத்திரியில் அவர்களைப்பற்றி அசிங்க அசிங்கமாய், பள்ளிக்கூட சுவர் முழுக்க எழுதி வைத்துவிட்டேன், அதுபோக அவர்களை பற்றி அவர்களுக்கு “நிச்சயம்” செய்த வீட்டுக்கு மொட்டை கடிதமும் எழுதிப்போட்டுவிட்டேன், கோபத்தில் நான் செய்ததின் பலனை மறுநாள் டீச்சர் இதே மைதானத்தில் கதறி அழுதது என் கண் முன்னால் நிற்கிறது, அவர்கள் குடும்பம் அவமானம் தாளாமல் இந்த ஊரைவிட்டே போனது, எல்லாமே என்னாலேதான், இதனால் நான் தினமும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி அந்த வருசத்துலயே படிப்பை விட்டு போய்விட்டேன், நான் இன்று பெரிய தொழிலதிபதிதான் அதை நான் மறுக்கவில்லை, ஆனால் நான் வளர்ந்த இந்த ஊருக்கும், பள்ளிக்கும் நான் குற்றவாளிதானே!.. கண்ணீர் மல்க கைகூப்பினார்.

பள்ளி வளாகமே அமைதியாக இருந்தது, பாதிப்பேருக்கு இவர் ஏன் மன்னிப்பு கேட்கிறார் என புரியவில்லை, ஆனால் பழைய தலைமையாசிரியர் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் அந்த வருடம் படித்த ஓரளவு விவரம் புரிந்த மாணவர்கள் முதல் பெரிய மாணவர்கள், அனைவருக்கும் அந்த நாள் ஞாபகம் வந்தது, அந்த டீச்சரின் நெஞ்சில் அடித்து அழுத அழுகை, டீச்சரின் பெற்றோர் வந்து தலைமையாசிரியரிடம், கதறி அழுதது, பின் ஊரை விட்டே போனது, அத்தனை ஆசிரியர்களும் மனம் கொதித்து போனது, போலீசுக்கு போகலாம் என்றால் அந்த டீச்சரின் மானத்திற்கு பயந்து, விட்டுவிட்டது, கடைசிவரை யாரென்று தெரியவேயில்லை. பின் இந்த ஐந்து மாணவர்கள்தான் பள்ளி முழுவதும் எழுத்துக்களை அழித்து, சொந்த செலவில் சுண்ணாம்பு அடித்து பள்ளியை ஒழுங்குபடுத்தினர்.

அமைதியான அரங்கத்திலிருந்து ஐவரும் ஒரு பெரியவரை கைதாங்காலாக மேடைக்கு அழைத்து வந்தனர், வந்தவர் கையில் மைக்கை சிவக்கொழுந்துவிடமிருந்து வாங்கி, என் பெயர் மாதவன் இவர் சொன்ன டீச்சரின் கணவர் நான், இந்த தம்பி அனுப்பிய மொட்டை கடுதாசி எங்களுக்கு கிடைத்தது, எங்கப்பா அதை நம்பவில்லை மேலும் எழுத்து சின்னப்பையன் கையெழுத்து போல இருந்ததால் எங்களுக்கு சந்தேகமாக இருந்தது, அப்பொழுது இந்த தம்பிகள் ஐந்து பேரும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்கப்பா காலில் விழுந்து எங்க நண்பந்தான் கோபத்தில இப்படி செஞ்சுட்டான்னும், மன்னிக்க சொல்லி கேட்டாங்க, அதே மாதிரி டீச்சர் வீட்டுக்கும் போயி நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாங்க, எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 24 வருசம் ஆச்சு, எங்க குழந்தைகளுக்கும் நல்லபடியா கல்யாணமும் முடிச்சுட்டோம். இப்ப டீச்சருக்கு உடம்பு சரியில்லாததால அவங்க வரல இவங்க கட்டாயமா எங்களை வரச்சொன்னதால டீச்சர் என்னைய மட்டும் அனுப்பி வச்சாங்க!.

முடித்தார்.சிவக்கொழுந்து பெரியவர் காலில் விழப்போனார் அதை தடுத்த அந்த பெரியவர் சிவக்கொழுந்தை அணைத்துக்கொண்டார்.

சிவக்கொழுந்து கண்ணீர் மல்க தன் நண்பர்களை பார்க்க அவர்கள் வருத்தப்படாதே நீதான் எழுதியிருக்கிறாய் என்பதை உன் கையெழுத்தை பார்த்தே புரிந்துகொண்டோம்,அந்த சூழ்நிலையில் உன்னை காட்டிக்கொடுக்க வேண்டாம் என முடிவு செய்து இந்த பிரச்னையை முடித்து விட்டு, உன்னிடம் பேசலாம் என நினைக்கும்போது நீ பள்ளியை விட்டு போய்விட்டாய், அதன் பின் உன்னைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சித்தபோது நீ பெரிய முதலாளியாகி, எங்களை விட எங்கோ போய்விட்டது தெரிந்தது, நாங்களும் விசயத்தை மனதுக்குள் பூட்டிவிட்டோம், ஆனால் நீ உண்மையிலேயே பெரிய மனிதன், இத்தனை பேர் முன்னாடி மன்னிப்பு கேட்டாய் பார், அப்பவே நீ எந்த அளவுக்கு வருத்தப்ப்ட்டிருக்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.

இப்பொழுது சிவகொழுந்து தன் பழைய ஆசிரியர்களிடம் எவ்வித தயக்கமுமின்றி ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.

விழா நிறைவு பெற்றபின் நிருபர்கள் அவரை சூழ்ந்துகொண்டு இவ்வளவு பேர் முன்னாடி உங்க தப்புக்கு மன்னிப்பு கேட்டீங்களே, இதனால உங்க இமேஜ் மாறாதா?

சிவலிங்கம் புன்சிரிப்புடன், ஆம் நான் குற்றவாளி என்று எப்போதும் என் மனதில் கேட்கும் குரல் இப்போது மாறி இல்லை நீ ‘புனிதன்” என்று மாறிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *